Nov 30, 2014

வைகோவுக்கு அடுத்த வழி?

வைகோவை பா.ஜ.கவின் சுனா சாமியும் எச்.ராஜாவும் ஏன் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்? 'தூக்கி வீசப்படுவதற்கு முன் வைகோ வெளியேற வேண்டும்’ என சுப்பிரமணியசாமி பேசியிருக்கிறார். ‘வைகோவுக்கு நாவடக்கம் தேவை. இல்லையென்றால் பத்திரமாக திரும்ப முடியாது’ என்று எச். ராஜா பேசியிருக்கிறார். மேலிடத்தின் கண்ணசைவு இல்லாமல் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன். வைகோவின் கொள்கைகளுக்கு நேர் எதிரான நிலையில் நிற்கும் இந்த இரண்டு பேரும் கொம்பை எடுத்து ஊத ஆரம்பித்திருக்கிறார்கள். இனி கணிசமான பா.ஜ.க தொண்டர்களும் வைகோவை அவமதிக்கத் தொடங்குவார்கள். பிற தலைவர்களும் இவர்களோடு கை கோர்த்துக் கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது. 

தமிழகத்தில் யாருமே கண்டு கொள்ளாத சுப்பிரமணிய சாமிக்கு தனது கட்சியில் ஒரு இடத்தைக் கொடுத்த போது நிறையப் பேர் ஆச்சரியப்பட்டார்கள். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அஜெண்டாவில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்து குடைச்சலை கொடுத்து வர வேண்டும் என்கிற அஜெண்டா முக்கியமான இடத்தில் ஒளிந்திருந்ததை இப்பொழுது புரிந்து கொள்ளலாம். அதிமுகவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு. திமுகவுக்கு 2ஜி. இப்பொழுது மதிமுகவுக்கு அவமானம்.

பதிலடி கொடுப்பதற்கு வைகோவுக்கும் ஓரளவுக்கு தொண்டர் படை இருக்கிறது என்றாலும்- ஓரளவுக்கு என்பதனை பா.ஜ.கவோடு ஒப்பிடும் போது பெரிய அளவுக்கு என்றே சொல்ல முடியும்-ஆனாலும் அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்றுதான் நினைக்கிறேன். ராஜாவுக்கும், சுனாசாமிக்கும் கிடைக்கும் ஊடக வெளிச்சம் மதிமுகவினருக்கு கிடைக்காது என்பதே உண்மை. டீக்கடையில் அரசியல் பேசும் ஒரு சாமானிய மனிதனிடம் வைகோ பற்றி பேசினால் ‘அவருக்கு ஏன் இந்த மானங்கெட்ட பொழப்பு? கூட்டணியை விட்டு வெளிய வர வேண்டியதுதானே?’ என்று கேட்பதற்கான எல்லாவிதமான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டால் வைகோவுக்கான போக்கிடம் என்னவாக இருக்கும்? ஜிகேவாசனை தனது கூட்டணிக்கு  இழுத்துவிட்டால் வைகோவை ‘வந்தால் வா..வராட்டி போ’ என்கிற ரீதியில்தான் திமுக வைத்திருக்கும். திமுகவை விட்டுவிட்டு அதிமுகவுக்குச் சென்றால் பா.ஜ.கவைவிடவும் அவமானப்படுத்தப்படுவார். தனித்து நிற்பது தற்கொலைக்குச் சமானம். காங்கிரஸுடன் கூட்டு சேர முடியுமா என்ன?

ஏன் இந்த திடீர் தாக்குதல்?

பாராளுமன்றத் தேர்தல் வரைக்கும் பா.ஜ.கவுக்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவையானதாக இருந்தது. இப்பொழுது அவர்களின் டார்கெட் 2016 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல். ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து தமிழர்களின் நண்பனாக தன்னை காட்டிக் கொண்டது, தருண் விஜய் என்ற ஆர்.எஸ்.எஸ்காரரை வைத்து தமிழ் உன்னதமான மொழி என்று பேச வைத்து தமிழ் மீது  ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு எந்த வெறுப்புமில்லை என்று பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது, நேற்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் அறிவிப்பான ‘இனி திருவள்ளுவர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும்’ ‘பாரதியாரின் பாடல்கள் தேசிய அளவில் பாடத்திட்டத்தில் இடம்பெறும்’ என்கிற அறிவிப்புகளை எல்லாம் ஒன்றுக்கொன்று கோர்த்துப் பார்க்கலாம். 

ஆக, தமிழகத்தில் தனக்கான இடத்தை உறுதியாக்கிக் கொள்வதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. நாற்பதாண்டு காலமாக பிற கட்சிகளில் முதுகில் சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸின் ஃபார்முலா பா.ஜ.கவுக்கு எந்தவிதத்திலும் ஏற்புடையதில்லை போலிருக்கிறது. எங்கெல்லாம் தமிழ்நாடு Vulnerable ஆக இருக்கிறதோ அங்கெல்லாம் தலையை உள்ளே விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அரசியலில் கால் பதிக்க இந்துத்துவத்தைவிடவும் தமிழ் இன உணர்வைக் காட்டிக் கொள்வது அவசியம் என்பதை பா.ஜ.க புரிந்து கொண்டிருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.

தமிழகத்தில் தமிழ் உணர்வை காட்டிக் கொண்டிருக்கும் வைகோ என்கிற அரசியல்வாதியின் பிம்பம் உடைபடுவது பா.ஜ.க நுழைவதற்கான வழியை இன்னமும் சுலபமாக்கிவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள் போலிருக்கிறது.

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் அடுத்தபடியாக தமிழகத்தில் செயல்படக் கூடிய கட்சியாக மதிமுக இருக்கிறது என்று பா.ஜ.கவினர் நினைக்கக் கூடும். திமுகவின் தொண்டர்களை கணிசமான அளவில் வைகோ ஈர்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என கணித்திருக்கக் கூடும். வைகோவின் பிம்பம் ஓரளவு வலுவானதாக இருக்கும் வரையில் பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் காலூன்றுவதற்கு சிக்கல் என்று யோசிக்கக் கூடும். இப்படி எத்தனையோ ‘கூடும்’கள்.

வைகோ தன்னை பா.ஜ.கவின் தோழனாகக் காட்டிக் கொண்டாலும் அவரது அடுத்த இலக்கு என்ன என்பதை பா.ஜ.கவின் மேலிடம் துல்லியமாக கணித்திருக்கிறது என்று நம்பலாம். இப்பொழுது அடிக்கத் தொடங்கியிருப்பதன் காரணமே வைகோவின் அந்த நம்பிக்கையில் ஒரு பெரிய ஓட்டையை போட்டுவிடலாம் என்கிற எத்தனிப்புதான். வைகோவுக்கான அத்தனை கதவுகளையும் அடைப்பதில் பா.ஜ.க வெற்றி பெற்றுவிடும் என்று தோன்றுகிறது.

இன்றைய சூழலில் பா.ஜ.கவுக்கு தேமுதிக தேவையான கட்சியாகத்தான் இருக்கும். தேர்தலில் களப்பணியாற்றுவதற்கு விஜயகாந்த்தும் அவரது தொண்டர்களும் அவசியம். ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு வேண்டுமானால் அந்தக் கட்சியை காலி செய்வதற்கான முஸ்தீபுகளில் இறங்கக் கூடும் அல்லது திமுக, அதிமுக, மதிமுக என்ற வரிசையில் அடுத்த இடத்தில் தேமுதிக இருக்கலாம்.  

தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சதுரங்க வேட்டையை நாம் பார்க்கத் துவங்கியிருக்கிறோம்.

இதில் சரி, தவறு என்றெல்லாம் நம்மால் எதையுமே சொல்ல முடியாது. வலுவுள்ளவன் ஜெயித்துக் கொண்டிருப்பான். வலுவில்லாதவன் ஒதுக்கப்படுவான். வரலாறு ஈவு இரக்கமற்றது. தோற்கிறவனை எந்தவித தயவுதாட்சண்யமுமில்லாமல் ஒரு வரியோடு கடந்து கொண்டேயிருக்கும். ஆனால் ஜெயிக்கிறவனுக்கு தனது புத்தகங்களில் பல நூறு பக்கங்களை ஒதுக்கி வைத்திருக்கும். வைகோவிற்கான இடம் என்ன என்பதை இன்னமும் சில வருடங்களில் தெரிந்து கொள்ளலாம் அல்லது சில மாதங்களில்.

பட்டையை கிளப்பிட்டாங்கய்யா

‘கீழ மட்டும் அவன் பேரு இல்லைன்னா அப்படியே X எழுத்தாளனோட எழுத்துதான்’ இப்படியொரு டயலாக்கை சர்வசாதாரணமாக கேட்க முடியும். ஒரு எழுத்தாளனை பிடிக்கவில்லையென்றால் இப்படிச் சொல்லிவிடுவார்கள். தன்னை பெரியவனாகக் காட்டிக் கொள்வதற்கும் கூட இந்த வசனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். போகிற போக்கில் தட்டிவிட்டு போய்விடலாம். மனசாட்சியே இல்லாமல் அடுத்தவனைக் காலி செய்யும் உலகம் இது. அதே போலத்தான் முருக பூபதியின் நாடகம் பெங்களூரில் நடக்கவிருக்கிறது என்று சொன்ன போது ‘அவர் ஒரே நாடகத்தைத்தானே திருப்பி திருப்பி போடுவாரு? டைட்டில் மட்டும்தான் வேற’ என்றார் ஒருவர். இதற்கு முன்பாக முருகபூபதியின் சூர்ப்பணங்கு  நாடகத்தை மட்டும் பார்த்திருக்கிறேன் என்பதால் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. அதே சந்தேகத்தோடுதான் அரங்குக்குச் சென்றிருந்தேன். குகைமரவாசிகள்  என்பது நாடகத்தின் டைட்டில்.

பிரமாதமான கூட்டம் என்று சொல்ல முடியாது. ஆனால் நல்ல கூட்டம்.  

மேடை அமைப்பு எதுவும் இல்லை. பள்ளியின் மைதானத்திலேயே தேவையானபடிக்கு மின் விளக்குகளை அமைத்திருந்தார்கள். இரவு கவியட்டும் என்று காத்திருந்தவர்கள் ஏழு மணிக்கு மேலாகத்தான் நாடகத்தை துவக்கினார்கள்.

நாடகம் முடிந்த பிறகு சிலர் புரியவில்லை என்றார்கள். ஒன்றரை மணி நேர நாடகம். ஒரே தடவையில் முழுமையாக புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லைதான். ஆனால் மொத்தமாக நாடகம் பேசுகிற விஷயத்தை அதிக சிரமமில்லாமல் புரிந்து கொள்ள முடிந்தது. குகைகளில் வாழும் மனிதக் கூட்டத்தில் ஆரம்பித்து இன்றைய நிறுவனங்களால் துரத்தியடிக்கப்படும் ஆதி குடிகள் வரையிலும் ஊடாக கார்போரேட் கலாச்சாரம், நுகர்வியல் போன்றவற்றால் சிக்கிச் சீரழியும் எளிய மனிதர்களின் கனவுகளையும், வாழ்வாதாரத்தையும் பேசுகிறது. 

நவீன நாடகத்தை புரிந்து கொள்வது என்பதும் நவீன கவிதையை புரிந்து கொள்வது என்பதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். நாடகத்தின் வழியாக நமது கற்பனைகளுக்கு சிறகு கட்டிக் கொள்ள வேண்டும். உதாரணமாக இந்த நாடகத்தில் ‘நகரத்தின் கழிப்பறையில்தான் நான் பிறந்தேன். அந்தக் கழிப்பறையில் வாழ்ந்த என் அம்மாவை புத்தன் என்பேன்’ என்று ஒரு வசனம் வருகிறது. அவனுடைய அம்மா மட்டும்தான் புத்தனா என்ன? பார்வையாளனின் அம்மாவும் புத்தன்தான். ‘நீங்க சின்னப்பசங்களா இருக்கும் போது வீட்டில் விட்டுட்டு வேலைக்கு போனா திரும்பி வர்ற வரைக்கும் உங்க மேலேயேதான் நினைப்பு இருக்கும்’ என்று அம்மா சொல்லியிருக்கிறார். அப்பொழுது எங்களைப் பார்த்துக் கொள்ள வீட்டில் பெரியவர்கள் இல்லை. நானும் தம்பியும் பொடியன்கள். அம்மா வேலைக்குச் சென்றே தீர வேண்டும். அம்மாவுக்கு எங்கள் மீதான நினைப்பு இருக்கத்தானே செய்யும்? அம்மா எப்பொழுதோ சொன்னது நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நினைவுக்கு வந்தது. என் அம்மாவும் புத்தன் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

நாடகத்தில் மதுவைப் பற்றி பேசுகிறார்கள். காமம் பற்றி பேசுகிறார்கள். காதல் பற்றி பேசுகிறார்கள். அரச பயங்கரவாதம் பற்றி பேசுகிறார்கள், நவீன வாழ்க்கை உருவாக்கியிருக்கும் நெருக்கடிகள் பற்றி பேசியிருக்கிறார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 

இந்த நாடகத்தில் நடித்தவர்களின் நடிப்பை பற்றிச் சொல்லியாக வேண்டும். எவ்வளவு வெறி? எவ்வளவு ஆக்ரோஷம்? இந்த வரியை எழுதும் போது கூட எனக்கு உடல் சிலிர்க்கிறது. அந்த அளவிற்கு உருகியிருந்தார்கள். புழுதிக்குள் படுத்து புரள்கிறார்கள். மண்ணோடு மண்ணாக நெளிகிறார்கள். அதே புழுதியை உறிஞ்சுகிறார்கள். தலை, உடல், முகம் என எல்லாம் புழுதி. அந்த புழுதியிலிருந்துதானே நாம் அத்தனை பேரும் வந்திருக்கிறோம்? அந்தப் புழுதியில்தானே நம் தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் உயிரையும் உடலையும் உருக்கிக் கிடந்தார்கள்? அந்தப் புழுதியில்தானே தங்கள் வாழ்வின் பெரும்பான்மையான நாட்களை கழித்திருக்கிறார்கள்? அவற்றையெல்லாம் இப்பொழுது மறந்துவிட்டோம். 

நிறுவனங்கள்(Institutions) உருவாக்கியிருக்கும் வலைகளுக்குள் சிக்கிக் கொண்டு நம் தாத்தனும் பாட்டியும் ஓட்டிக் கொண்டிருந்த வெள்ளாடுகளையும், மாடுகளையும் எங்கேயோ தொலைத்துவிட்டோம். புழுதியும் மண்ணும் கைகளில் பட்டால் உடனடியாக சவுக்காரம் போட்டுக் கழுவிக் கொள்கிறோம். நம்மிலிருந்து மண்ணையும் புழுதியையும் கல்லையும் வெற்றிகரமாக அந்நியப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இல்லையா? 

ஒன்றரை மணி நேரமும் என்னென்னவோ நினைவுகளைக் கீறிக் கொண்டிருந்தார்கள் அந்த நாடகக் கலைஞர்கள்.

பார்வையாளர்களுக்காக நாற்காலிகள் போட்டிருந்தார்கள். அதில் அமர விருப்பமில்லை. மண்ணில் அமர்ந்து கொண்டேன். நாடக நடிகர்களின் உடல் மொழியும், அவர்களின் வசன உச்சரிப்புகளும் இன்னமும் கண்களுக்குள்ளேயே இருக்கின்றன. நாடகம் பார்த்துக் கூட அழ முடியுமா என்று நினைத்திருக்கிறேன். ஆனால் முடியும். நேற்றைய நாடகத்தில் ஒரு இடத்தில் கண்ணீர் கசிந்துவிட்டது. அப்படியொரு நடிப்பு மொழியை அவ்வளவு அருகாமையில் பார்க்கிறேன்- முதன் முதலாக.

முருக பூபதியின் குழுவினர் உருவாக்கியிருந்த மேடைக்கான பொருட்கள், நாடகத்தின் இசையெல்லாம் தனித்துவமாகத் தெரிந்தன. நம் சடங்குகளையும், ஒலிகளையும் உடல் மொழியாக்கி நாடகத்தில் திரியவிட்ட முருக பூபதிக்கு நிச்சயம் வாழ்த்துச் சொல்ல வேண்டும். இந்த நாடகத்தை பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த மரா என்ற அமைப்பினருக்கு நாடகங்கள் புதிது இல்லை. நிறையப் பார்க்கிறார்கள். அவர்களே கூட இது மிகப் புதுமையாக இருந்தது என்று சிலாகித்தார்கள்.

இந்த நாடகத்தில் சில குறைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை குறிப்பிடும்படியான குறைகளாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. தமிழகத்தின் தென்கோடியிலிருந்து வந்து  மணல்மகுடி குழுவினர் பட்டையைக் கிளப்பிவிட்டார்கள் என்று சொன்னால் அது மிகையான பாராட்டு இல்லை என்றுதான் நினைக்கிறேன். 

Nov 28, 2014

இப்படியே இருந்தால் என்ன அர்த்தம்?

சில நாட்களுக்கு முன்பு நண்பர் அழைத்திருந்தார். நலம் விரும்பி. மனதில் வஞ்சகம் இல்லாமல் ஆலோசனைகளைச் சொல்வார். நிறைய பேசிவிட்டு ‘சீக்கிரமா ஒரு நாவல் எழுது’ என்றார். அப்படிச் சொல்வதற்கான காரணமும் அவரிடமிருந்தது. ‘அப்போதான் உன்னை எழுத்தாளன் என்பார்கள்’. அவர் சொல்வதும் சரிதான். என்னதான் தினமும் எழுதிக் கொண்டிருந்தாலும் ‘இணையத்தில் எழுதுபவன்’ என்கிற இளக்காரப் பார்வையை தவிர்க்க முடியாது. சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.

அவ்வப்போது இப்படி யாராவது குழப்பி விட்டுவிடுகிறார்கள். இப்படியே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? உருப்படியாக எதையாவது செய்ய வேண்டாமா? எனக்கும் ஆசைதான். தடி தடியாக நாவல்களை எழுத வேண்டும். நிறைய சிறுகதைகளை எழுத வேண்டும். கவிதைகளைத் தொடர வேண்டும். இலக்கியவாதியாக காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டும். வட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இத்யாதி. இத்யாதி.

ப்ச்.

இவை அத்தனை கொடுக்கும் திருப்தியைவிடவும் வேறு சில காரியங்கள் அதிகமான சந்தோஷத்தை கொடுத்துவிடும் என மனப்பூர்வமாக நம்பலாம்.

நேற்று முகேஷ் பற்றிய பதிவை எழுதிவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டேன். பெங்களூரு வந்து சேர்ந்த போது பதினெட்டு மின்னஞ்சல்கள் வந்திருந்தன. துல்லியமாக எவ்வளவு தொகை சேரும் என்று தெரியவில்லை. ஆனால் எப்படியும் ஒரு லட்சம் ரூபாயை சர்வ சாதாரணமாகத் தாண்டிவிட முடியும் போலிருக்கிறது. பெரும்பாலானவர்கள் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டிருந்தார்கள். அனுப்பி வைத்திருக்கிறேன். 

விளிம்பில் நிற்கும் ஒரு குடும்பத்துக்கு கையை நீட்டுகிறோம் அல்லவா? அந்த சந்தோஷத்தைவிடவா ‘நான் ஒரு எழுத்தாளன்’ என்கிற நினைப்பு அதிக சந்தோஷத்தைத் தந்துவிடும்? இதைச் சொல்வதற்காக எழுத்தை உதாசீனப்படுத்துகிறேன் என்று அர்த்தம் இல்லை. எழுதுகிறவர்கள் எழுதிக் கொண்டிருக்கட்டும். ஆனால் இதைத்தான் எழுத வேண்டும் என்கிற எந்த நோக்கமும் இல்லாமலேயே எழுதிக் கொண்டிருக்க விரும்புகிறேன். 

இப்பொழுது நிறையப் பேர் வாசிக்கிறார்கள். வாசிக்கிறவர்கள் நம்புகிறார்கள். அது போதும். 

பிரபாகரன் என்றொரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘பிரதர் என் கணக்கில் இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய்தான் இருக்கிறது. ஆனால் ஆயிரம் ரூபாயைக் கொடுக்க விரும்புகிறேன்’ என்று அதில் ஒரு வரி இருந்தது. சென்ற முறை ‘எனக்கு வேலை எதுவும் இல்லை. அதனால் இவ்வளவுதான் அனுப்ப முடிந்தது’ என்று ஐந்நூறு ரூபாயை அனுப்பி வைத்த சார்லஸின் பெயர் ஞாபகம் வருகிறது. இவர்களுக்கே ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கின்றன. அத்தனை சிரமங்களையும் தாண்டி எந்த நம்பிக்கையில் உதவுகிறார்கள்? வெறும் பத்து ரூபாயை சட்டைப் பையில் இருந்து எடுக்க வைக்கக் கூட எவ்வளவு நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்று யோசிக்கிறேன. இத்தகைய நம்பிக்கையை நாவலினாலும் சிறுகதையினாலும் உருவாக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. வாசிக்கிறவர்கள் ‘இவன் நம்மில் ஒருவன்’ என்று நினைக்க வேண்டும். அப்படியான ஒரு எண்ணத்தை உருவாக்குவதைத்தான் விரும்புகிறேன். அதை நோக்கித்தான் பயணிக்க விரும்புகிறேன்.

தன்னை ஆழமான வாசகர் என்று நம்புபவர் ‘இவன் எழுத்து ஒன்றுமேயில்லை’ என்று சொல்லக் கூடும். அது பற்றி விசனப்படவில்லை. தன்னைத் தீவிரமான எழுத்தாளனாக நினைத்துக் கொண்டிருப்பவர் ‘இவனால் நம் பக்கத்தில் கூட வர முடியாது’ என்று நினைக்கக் கூடும். அதுவும் சந்தோஷம்தான். யார் பக்கத்திலும் நிற்க விரும்பவில்லை. 

புதிய நிறுவனத்தின் நேர்காணலில் கூட ஹெச்.ஆர் பெண்மணி கேட்டார். ‘எதுக்கு உன்னை நம்பி பணம் தர்றாங்க?’.இந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது? சிரித்து மட்டும் வைத்தேன். எனக்கே பதில் தெரியாது என்பதுதான் உண்மை.

அவரிடம் அறக்கட்டளை பணிகளைப் பற்றி கொஞ்சம் சொல்லி வைத்திருக்கிறேன். வேலைக்கு சேர்ந்த பிறகு அதையெல்லாம் அவர்கள் கேள்வி கேட்கக் கூடாது அல்லவா? தற்போதைய நிறுவனத்தில் அப்படித்தான் ஆகிவிட்டது. அலுவலகத்தின் மின்னஞ்சலிலிருந்து ஒரு பத்திரிக்கைக்கு நிழற்படத்தை அனுப்பி வைத்திருந்தேன். கட்டுரையை வேறொரு மின்னஞ்சலிலிருந்து முன்பே அனுப்பியிருந்தேன். பிரசுரம் செய்தவர்கள் கட்டுரையின் கீழாக ஜிமெயில் ஐடிக்கு பதிலாக அலுவலக மின்னஞ்சலை பிரசுரித்துவிட்டார்கள். சோலி சுத்தம். விடிந்தும் விடியாமலும் தலையில் குண்டு விழுந்து விட்டது. ethics, compliance என்று ஒவ்வொரு துறை டைரக்டருக்கும் பதில் சொல்ல வேண்டியதாகிவிட்டது. எதற்கு வம்பு? புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போதே ‘இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லியாகிவிட்டது. 

இதெல்லாம் இருக்கட்டும்.

முகேஷுக்கான சிகிச்சை, செலவு செய்யப்பட்ட தொகை,  நாம் எவ்வளவு தொகை சேகரித்தோம் போன்ற விவரங்களை அடுத்த வாரத்தில் விரிவாகச் சொல்கிறேன். 

அத்தனை பேருக்கும் நன்றி.

உங்களின் பெயர்கள் வழியாக தெய்வத்தினை பார்க்க முடிகிறது என்று சொன்னால் அது ஃபார்மாலிட்டிக்காகச் சொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. சத்தியம்.

Nov 27, 2014

வாய்ப்பிருக்கிறதா?

காலையில் ராஜலிங்கம் அழைத்திருந்தார். வழக்கமாக புத்தகங்கள் பற்றியோ அல்லது சினிமா பற்றியோ பேசுவார். இன்று முகேஷ் குறித்து பேச விரும்புவதாகச் சொன்னார்.

முகேஷ் மதுரைக்காரர். நாற்பது வயதைத் தொடக் கூடும். அவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மூத்தவளுக்கு ஒன்பது வயது. இளையவனுக்கு ஆறு. ஆரோக்கியமான குழந்தைகள் என்று சொல்ல முடியாது. பிறந்தவுடன் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஐ.சி.யூவில் இருந்திருக்கிறார்கள். இன்னமும் வலு குறைந்த குழந்தைகளாகவேதான் இருக்கிறார்கள். குழந்தைகளைப் பராமரிக்க நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஒரு அங்காடியில் எழுத்தராக இருக்கிறார். அந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் இதுவே கஷ்ட ஜீவனம்தான். 

முகேஷின் மனைவி நர்சரி பள்ளியொன்றி டீச்சர். மாதம் மூன்றாயிரம் ரூபாய் கிடைக்கிறது. வேறு என்ன செய்துவிட முடியும்? இருந்தாலும் இதுவரை நல்லபடியாகத்தான் நாட்கள் நகர்ந்திருக்கின்றன. கைக்கும் வாய்க்கும் சரியான ஜீவனம். சொத்தெல்லாம் எதுவும் இல்லை. இருந்தாலும் அழகான குடும்பம்தான்.

ஓடிக் கொண்டிருந்த வண்டியில் பெரிய அடி. முகேஷூக்கு இருதயத்தில் அடைப்பு. கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் அடைப்பு இருக்கும் போலிருக்கிறது. மதுரை அப்பல்லோவில் அனுமதித்திருக்கிறார்களாம். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாய் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள். மூன்றாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் முகேஷின் மனைவிக்கு மூன்று லட்சம் என்பது பெரிய தொகை. நண்பர்களிடமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் வேலை செய்யும் பள்ளியின் ஆசிரியைகள் கொஞ்சம் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நண்பர்கள் கொஞ்சம். இப்போதைக்கு மொத்தமாக ஒரு லட்சம் தேறுமா என்றே தெரியவில்லை. ராஜலிங்கம் வருத்தமாகத்தான் சொன்னார். ஏதாவது உதவ முடியுமா என்று கேட்டார்.

இதுவரை மருத்துவ செலவுக்கு என்று உதவ முயற்சி எடுத்ததேயில்லை. ராஜலிங்கம் சொல்லிக் கொண்டிருந்த போது ‘அவர் பிழைத்து வந்தால் அவர் குடும்பத்துக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்குமா?’ என்று ஒரு வினாடி யோசித்தேன். ஏன் அப்படி நினைத்தேன் என்று தெரியவில்லை. இப்படி நினைத்தேன் என்று சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதானே உண்மை? அப்படித்தானே நினைத்தேன்? எல்லாவற்றிலும் ஒரு பயன் இருக்குமா என்று பார்ப்பதற்கு மனம் பழகியிருக்கிறது. கேடுகெட்ட மனம்.

பிரயோஜனம் என்று எப்படி அளந்து பார்ப்பது? அது ஒரு உயிர். வெற்று தசையாகக் கூடக் கிடக்கட்டும். அந்தக் குழந்தைகளுக்கு தங்கள் அப்பா உயிரோடு இருக்கிறார் என்கிறார் நினைப்பைக் கொடுத்து விட முடியும் அல்லவா? காலம் முழுவதும் அசைவே இல்லாத ஜடமாகக் கூட கிடக்கட்டும். தினமும் தந்தையின் முகத்தை பார்க்கின்ற வாய்ப்பைக் கொடுத்து விடலாம். இளம் பிராயத்தில் தங்களின் தந்தையரை இழந்துவிட்ட குழந்தைகளின் முகம் ஒவ்வொன்றாக வந்து போனது. அதன் பிறகு எதையும் எதிர்மறையாக நினைக்கவில்லை.

முகேஷைக் காப்பாற்றிவிட முடியும். நம்மால் முயன்றதைச் செய்யலாம். இது வெறும் அடைப்புதான். நீக்கிவிட்டால் இன்னும் பல வருடங்கள் அவரால் உழைக்க முடியும். குழந்தைகளைக் கரையேற்றிவிடக் கூடும். 

அந்தப் பெண்மணி தனியாக திணறிக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் அழுது கொண்டிருக்கின்றன. முகேஷூக்கு உங்களால் ஏதாவது உதவ முடியுமா?

ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது. பணத்தை அப்பல்லோவின் நேரடிக் கணக்குக்கு மாற்ற முடியுமா என்கிற விவரத்தைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.  யாராவது உதவ விரும்பினால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். 

vaamanikandan@gmail.com

அறிவு இருக்கா?

ஊரில் ஒருவர் இருந்தார். நாற்பத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். தனுஷ் மாதிரி ஒரு மகன். பாசக்காரன் ஆனால் அடிக்கடி அப்பாவுக்கும் மகனுக்கு சண்டை வந்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டதால் எங்கள் பழைய வீட்டை இரண்டாகப் பிரித்து வாடகைக்கு விட்டிருந்தோம். அதில் ஒன்றில் அந்தக் குடும்பம் வாடகைக்கு இருந்தது. அந்த மனிதருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடி என்றால் முரட்டுக் குடி. மனைவி பாவப்பட்டவர். இந்த மனிதனிடம் தினமும் போராடிக் கொண்டிருப்பார்.

ஊருக்கு வரும் போதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர்கள் யாராவது புகார் வாசிப்பார்கள். அம்மாவுக்கு டென்ஷன் ஆகிவிடும். ‘காலி பண்ணி உடுங்க...அன்னாடம் சண்டை புடிச்சுட்டு..நம்முளுக்கு எதுக்கு வம்பு?’என்பார். ஆனால் பல வருடங்களாக அவர்களேதான் இருக்கிறார்கள். யாரையாவது வீட்டை காலி செய்ய வைப்பது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெங்களூரில் ஒரு மண்டையன் வீட்டில் இருந்தோம். ஏகப்பட்ட டார்ச்சர். குழந்தை கத்தக் கூடாது. சோறூட்டும் போது வாசலில் பருக்கைகள் சிந்தக் கூடாது. காலிங் பெல் அடிக்கக் கூடாது. இப்படி ஏகப்பட்ட கூடாதுகள். கொடுத்த அட்வான்ஸில் இருபதாயிரத்தை பிடித்துக் கொண்டு திருப்பிக் கொடுத்தார். காலி செய்து வரும் போது ‘இந்த மாதிரி ஒரு சைக்கோ கேரக்டரை பார்த்ததேயில்லை’ என்று சொல்லிவிட்டு வந்தேன். 

இந்தக் குடிகாரர் நல்ல மனிதர்தான். பண்பாக பேசுவார். படு சாந்தமாக இருப்பார். குடித்துவிட்டு வந்தால் யாரைப் பார்த்தாலும் ‘இல்லீங்ண்ணா...ஆமாங்ண்ணா’ என்பார். முதன்முறையாக பார்ப்பவர் கள் கலாய்க்கிறார் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அவரது குணமே அப்படித்தான். மற்றவர்களிடம் பம்முவார். வீட்டிலிருப்பவர்களிடம் எகிறுவார். இதனால் பையனுக்கும் அவருக்கும் அடிக்கடி தள்ளுமுள்ளு நடக்கும். சென்ற வாரத்திலும் ஏதோ சண்டை வந்திருக்கிறது. ‘உன்னை வெட்டிப் போடுறேன்’ என்று பையன் சொன்னானாம். ‘இந்தா வெட்டு’ என்று அரிவாளை எடுத்து வந்து கொடுத்திருக்கிறார். இப்படியே ஒரு வாரமாக இழுத்துக் கொண்டிருக்கிறது. 

பிரச்சினை என்னவென்றால் பையன் அதிகமாக செல்போன் பயன்படுத்துகிறான் என்பது அவருக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது. அதைத் திரும்பத் திரும்ப கண்டித்திருக்கிறார். பையனும் படிப்பதெல்லாம் இல்லை. பத்தாவதோ என்னவோ முடித்துவிட்டு ஒரு ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறான். ‘வேலையைப் பார்க்காமல் என்னடா செல்போன்?’ என்று பறித்து உடைத்துவிட்டார். சண்டை பெரிதாகிவிட்டது.

நமக்குதான் திரும்பிய பக்கமெல்லாம் டாஸ்மாக் இருக்கிறதே? தினமும் குடித்துவிட்டு வந்து ‘சாகப் போறேன்’ என்று பினாத்திக் கொண்டிருந்தாராம். சாகப் போகிறவன் எந்தக் காலத்தில் சொல்லி விட்டு செத்திருக்கிறான்? மனைவியும் மகனும் சற்று பயப்பட்டிருந்தாலும் தைரியமாகத்தான் இருந்திருக்கிறார்கள். பையனைவிடவும் அந்தப் பெண்மணிக்கு சற்று கவலை அதிகம். இன்னமும் நாற்பதைக் கூட தொடாத வயது. இந்த மனுஷன் ‘வெள்ளைப்புடவை எடுத்து வெச்சுக்க’ என்று மிரட்டிக் கொண்டேயிருக்கிறார். குடிகாரனோ அடிகாரனோ- கல்லானாலும் கணவன் என்கிற வகையறா அந்தப் பெண்மணி. இவன் கைவிட்டுவிட்டு போய்விட்டால் என்ன செய்வது என்கிற குழப்பம்தான்.

இந்தக் குடிகார சமூகத்தில் பெண்கள்தான் உண்மையில்யே பாவப்பட்டவர்கள். அதுவும் மத்தியதர, வறுமையில் வாழும் குடும்பத்தின் பெண்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவன் எவ்வளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் குழந்தைகளுக்காகவாவது அவனுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் கொடுமைக்காரனாக இருந்தாலும் சமூகத்திற்காகவாவது அவனோடு ஒட்டியிருக்க வேண்டியிருக்கிறது. கணவன் குடிக்கிற அதே வீட்டில் மகன் குடிப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. ஏகப்பட்ட பேருக்கு குடிப்பது என்பது தினசரி வழக்கமாகிவிட்டது. ஒரு குடும்பத்தின் வருமானத்தில் கணிசமான பகுதி இப்படித்தான் தொலைகிறது. அன்றன்றே சம்பாதிப்பதை அன்றன்றே அழிக்கும் ஒரு மோசமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் இப்படியான வழக்கம் இருக்கிறதுதான். சம்பாதிப்பார்கள் அழிப்பார்கள். ஆனால் வயதான காலத்தில் அவர்களது வாழ்க்கையைக் காக்கும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. இந்தியாவில் அந்தச் சூழல் வந்துவிட்டதா என்ன? 

சென்ற ஆண்டு வரைக்கும் கண்ணில்படுபவர்களையெல்லாம் ஓ.ஏ.பி பணம் என்னும் ஆதரவற்றோர் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான பட்டியலில் சேர்த்திருந்தார்கள். எனக்குத் தெரிந்தே கூட அரசாங்க அதிகாரியின் அம்மாவெல்லாம் பணம் வாங்கிக் கொண்டிருந்தார். இப்பொழுது அந்த நிதியில் கை வைத்துவிட்டார்கள். அந்தப் பட்டியலிலிருந்து இஷ்டத்துக்கு பெயரை நீக்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்தவிதமான ஆதரவும் இல்லாதவர்கள் கூட தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் அதைப்பற்றியெல்லாம் எதுவுமே கவலைப்படுவதில்லை. நூறு மீட்டருக்கு அந்தப் பக்கம் பிராந்திக்கடையை திறந்து வைத்துவிட்டு இந்தப்பக்கமாக போலீஸ்காரர்களை நிறுத்தி காசு பிடுங்குகிறது. இவர்களே கடையையும் திறந்து வைப்பார்கள். இவர்களே குடித்துவிட்டு வருபவர்களிடம் ஃபைனும் வசூலிப்பார்கள். தொலையட்டும்.

வீட்டில் குடியிருந்த மனுஷன் பம்ப்செட் கடையொன்றில் வேலை செய்கிறார். சம்பாதிப்பதும் குடிப்பதும் சரியாக இருக்கிறது. வீட்டுக்கு காசு கொடுப்பதெல்லாம் அரிது. இந்த வாரத்தில் குடி அதிகமாகியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக சல்பேட் மாத்திரையை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். தென்னை மரத்துக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள். அதை அக்குளுக்குள் வைத்தாலே உயிர் போய்விடுமாம். சண்டை முற்றிய போது வாழைப்பழத்துக்குள் வைத்து விழுங்கியிருக்கிறார். மனைவியும் மகனும் பதறியிருக்கிறார்கள். பக்கத்து வீடுகளில் யாரும் உதவியதாகத் தெரியவில்லை. அவர்கள் இருவருமே தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் ஏதேதோ வைத்தியம் செய்திருக்கிறார்கள். ஆனால் தாக்குப்பிடிக்கவில்லை. அதிகாலை நான்கரை மணிக்கு உயிர் போய்விட்டது.

போலீஸ் விசாரணை வரக்கூடும் என்று அப்பா நினைத்தார். அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்திருந்தேன். இரண்டு நாட்களாக தண்ணீர் கூட அருந்தாமல் மகனும் மனைவியும் கிடந்தார்கள். சொந்தக்காரர்கள் என்று ஒரு மனிதர் இல்லை. அழுகையையும் பசியையும் கண்கள் காட்டிக் கொண்டிருந்தன. ஆறுதல் சொல்லத் தெரியவில்லை. ‘குடி புத்தியை மறைச்சுடுச்சு’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி அழுது கொண்டிருந்தார். வண்டியை எடுத்துச் சென்று இருவருக்கும் பார்சல் சாப்பாடு வாங்கி வந்தேன். இன்று காலை வரையிலும் அது பிரிக்கப்படாமலேயே கிடக்கிறது. இன்னும் பத்து நாட்களில் அவர்கள் தங்களின் அன்றாட நிகழ்வுகளை தொடங்கி விடக் கூடும்தான். ஆனால் தமிழகத்தின் இன்னொரு மூலையில் இன்னொரு மனிதன் தனது கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருப்பான். 

சரி விடுங்கள். புத்தாண்டு தினத்துக்கு டாஸ்மாக்கின் டார்கெட் என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள்.

Nov 25, 2014

குகைமரவாசிகள்

வெகு நாட்களுக்கு முன்பாக முருக பூபதி பெங்களூர் வந்திருந்தார். அவரது நாடகமான ‘குகைமரவாசிகள்’ அரங்கேற்றம் செய்வதற்கு தோதான இடம் தேடுவதுதான் அந்தப் பயணத்தின் நோக்கம். ஆனால் அப்பொழுது சரியான இடம் அமையவில்லை போலிருக்கிறது. எந்தத் தகவலும் இல்லை. நாடகம் நடத்துவதற்கு ஒரு மேடை மட்டும் போதாதா என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அப்படியில்லை என்பதை பூபதி மாதிரியானவர்களுடன் பேசினால் தெரிந்து கொள்ளலாம். 

முருக பூபதி நவீன தமிழ் நாடகத்தின் இன்னொரு முகம். முக்கியமான முகம்.

அவரது சூர்ப்பணங்கு நாடகத்தை பார்த்திருக்கிறேன். பெங்களூரில்தான் அரங்கேற்றம் செய்தார்கள். நல்ல கூட்டம். அந்த நாடகத்தை ஒரு முறை பார்த்ததிலேயே முழுமையாகப் புரிந்து கொண்டேன் என்று சொன்னால் அது புருடாவாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பார்க்க வேண்டியிருக்கும். மேடை அமைப்பு, பாத்திரங்களின் உருவாக்கம், காட்சியமைப்பு, மேடையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என எல்லாமே பார்வையாளனை கிறுகிறுக்க வைப்பவை. அது ஒரு க்யூரியஸான கிறுகிறுப்பு. புரியவில்லை என்றாலும் விடாப்பிடியாக புரிந்து கொள்வதற்கான ஒரு எத்தனிப்பு இருக்கும் அல்லவா? அந்த க்யூரியஸ்.

சூர்ப்பணங்கு நாடகத்தை பார்ப்பதற்கென்றே சிலர் சென்னையில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தமிழில் இத்தகைய நவீன நாடகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே மேடையேற்றப்படுகிறது. அதனால் நாடகப் பிரியர்கள் நல்ல நாடகத்தை பார்ப்பதற்காக சில நூறு மைல்கள் பயணம் செய்வதற்கும் கூட தயங்குவதில்லை. இன்னொரு முறை சூர்ப்பணங்கு நாடகத்தை பார்த்துவிட வேண்டும் என நினைத்திருந்தேன். ம்ஹூம்.

இந்தக் கால மனிதர்கள் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள விரும்பாத பிரச்சினைகளை தனது நாடகங்களின் வழியாக முருக பூபதி பேசுகிறார் என்று தோன்றும். வளர்ச்சி என்ற பெயரில் நமது வாழ்வு முறைய எப்படி மாற்றியமைக்கிறோம் என்பதையும் நகரமயமாதலும் உலகமயமாதலும் மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் கொண்டிருக்கின்றன என்பதனையும் தனது பாத்திரங்களின் ஊடாக அப்பட்டமாக்குகிறார் என்று தாராளமாகச் சொல்லலாம். 

சடங்குகள், நமது தொன்மையான கதைகள், காணாமல் போய்விட்ட நமது வாழ்வியல் என்பனவற்றையெல்லாம் காட்சிகளாக கோர்த்துவிடும் முருக பூபதியின் நாடகம் சனிக்கிழமையன்று பெங்களூரில் நிகழவிருக்கிறது.

குகைமரவாசிகள் என்ற இந்த நாடகம் மக்களை அவர்களின் சொந்த இடங்களிலிருந்து விரட்டியடித்து அகதிகளாக்கிவிடும் பிரச்சினையின் நுண்ணரசியலைப் பேசுகிறது என சில விமர்சனங்களில் வாசித்திருக்கிறேன். 

பேராசிரியர் அ.ராமசாமி இந்த நாடகம் பற்றிய விரிவான விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்றிருக்கிறேன். பார்வையாளர்களுக்கு அனுமதிக்கு கட்டணம் எதுவும் இல்லை. வாய்ப்பிருப்பவர்கள் தவற விட்டுவிட வேண்டாம். 

நாள்:
29.11.2014 சனிக்கிழமை; மாலை 6 மணி.

இடம்:
RBANMS Middle School,
Countryyard,
Dickenson Road,
Opp. RBANMS ground.
Bengaluru.

Contact Number:
+91-9535569341
+91-9880755875 

Nov 24, 2014

பயப்படுறியா கொமாரு?

சிக்மகளூரில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனை மண்டை மீது அடித்திருக்கிறான். வெறும் கையில்தான் அடித்திருக்கிறான். பின் மண்டையில் அடி வாங்கியவன் சுருண்டு விழுந்து அதே இடத்திலேயே இறந்துவிட்டான். என்ன பிரச்சினையென்று சரியாகத் தெரியவில்லை. கழிவறையில் ஏதோ தகராறு. கை நீட்டிவிட்டான். மற்ற மாணவர்களிடம் விசாரித்திருக்கிறார்கள். அடித்தவன் எப்பொழுதுமே தன்னைப் பார்த்து அடுத்தவர்கள் பயந்தபடியே இருக்க வேண்டும் என சொல்வானாம்.  இறந்து போன பையன் எதிர்த்திருப்பான் போலிருக்கிறது. வீசி விட்டான். பத்தாம் வகுப்பு மாணவனுக்கு எப்படியான ஆசை என்று பாருங்கள்.

சமீபத்தில் ஜிகிர்தண்டா படம் பார்த்தேன். படம் முழுவதுமே இதுதான் பின்னணி. தன்னைப் பார்த்து அடுத்தவர்கள் பயப்பட வேண்டும் என்று சிம்ஹா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தப் படம்தான் என்றில்லை. ரேஸ் குர்ரம் படம் படத்திலும் இதேதான் டயலாக். வில்லன் மத்தாலி சிவா ரெட்டி அதைத்தான் சொல்கிறான். ‘இந்த ஊருக்கு என்னைப் பார்த்து பயம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்’என்று. இந்த இரண்டு படங்களும் சாம்பிள்தான். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீத படங்களில் இந்த வசனம் வந்துவிடுகிறது. அதனால்தான் பத்தாம் வகுப்பு பையன் கூட இம்மிபிசகாமல் ஆசைப்படுகிறான். சினிமாக்காரர்களிடம் போய் நாம் பொங்கல் வைக்க முடியாது. ‘சமூகத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறோம்?’ என்று சொல்லிவிடுவார்கள். 

சினிமாவில் மட்டும்தானா? ஹெச்.ஆர் டைரக்டராக ஒருவர் இருந்தார். பெயரைச் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். ‘இவனுக எப்ப பாரு WFRன்னே பேசிட்டிருக்கானுக’ என்பார். அவர் சொன்னது நிறுவனத்தின் ஹெச்.ஆர் ஆட்களைத்தான். Work Force Reduction என்பதன் சுருக்கப்பட்ட வடிவம் WFR. நிறுவனம் லாபத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தலைமையிடமிருந்தும் எந்த சமிக்ஞையும் வரவில்லை. ஆனால் உள்ளூர் பெருந்தலை இதைச் செய்துவிட வேண்டுமென ஆர்வமாக இருக்கிறார்.

‘ஏன் சார்?’ என்று கேட்டால் அவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது. ஊழியர்களிடம் ஒரு மெலிதான பயம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். எதையுமே துணிந்து கேட்க வழியில்லாதபடி அந்த பயம் அவர்களை அமுக்கியே வைத்திருக்க வேண்டும். மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை பத்து தலைகளை உருட்டினால் மற்றவர்கள் பயந்து கொள்வார்கள் இல்லையா? படு கேவலமான லாஜிக்தான். ஆனால் அப்படித்தான் இருக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் இந்த பயம் என்கிற கான்செப்ட் வந்துவிட்டது. 

பள்ளிகளில் சில ஆசிரியர்கள் இருப்பார்கள். திடீரென்று எவனையாவது எழுப்பி தர்ம அடி அடித்துவிடுவார்கள். அவன் அடி வாங்குவதை பார்த்துவிட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு மற்ற மாணவவர்கள் பயந்தபடியே கிடப்பார்கள். பயம் ஓய்ந்து சற்று துளிர்விடத் தொடங்கும் போது வேறொருவனை எழுப்பி தர்ம அடி. எந்தக்காலத்திலும் அந்த ஆளைப் பார்த்து மாணவர்கள் பயந்து கொண்டேயிருப்பார்கள்.

அப்படித்தான். அதே மாதிரிதான் எல்லா இடங்களிலும். 

முதலாளியைப் பார்த்து ஊழியர்கள் பயப்பட வேண்டும். அரசியல்வாதிகளையும் தாதாக்களையும் பார்த்து சினிமாக்காரன் பயப்பட வேண்டும். பெங்களூரில் கன்னடக்காரனைப் பார்த்து தமிழ்காரன் பயப்பட வேண்டும். சென்னையில் உள்ளூர்க்காரனைப் பார்த்து வெளியூர்க்காரன் பயப்பட வேண்டும். ஒரு சாதிக்காரனைப் பார்த்து இன்னொரு சாதிக்காரன் பயப்பட வேண்டும். எதுவுமே இல்லையென்றாலும் என்னைப் பார்த்து நீ பயப்பட வேண்டும். உன்னைப் பார்த்து அடுத்தவன் பயப்பட வேண்டும். அவ்வளவுதான்.

ஆளுங்கட்சியை எதிர்த்து ஒரு செய்தியை எழுதச் சொல்லுங்கள். எழுத மாட்டார்கள். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ ஒரு பயம் இருக்கிறது அல்லவா? அதுதான் அதிகாரவர்க்கத்திற்குத் தேவை. சமீபத்தில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஏகப்பட்ட குழந்தைகள் செத்துப் போனார்கள். ஏன் பெரும்பாலான ஊடகங்களில் இந்தச் செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டது? அரசாங்கத்தின் விளம்பரம் கிடைக்காது என்கிற பயமோ அல்லது எதற்காக அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பயமா?

சமீபத்தில் ஈராக் தீவிரவாதிகள் இந்திய நர்ஸ்களை பிடித்து வைத்திருந்தார்கள். மோடி அரசாங்கம் பதவியேற்ற சமயம் அது. பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தி அவர்களை விடுவித்தார்கள். என்ன பேசினார்கள் என்ற விவரம் எந்தவிதத்திலும் கசியவில்லை. இங்கு யாருக்குமே என்ன பேரம் பேசப்பட்டது என்று தெரியாதா என்ன? ஏதேதோ விவகாரங்களை பிரித்து மேய்கிறோம். இதைப் பற்றி ஏன் யாருமே பேசவில்லை? ‘இந்திய அரசாங்கம் பணம் கொடுத்தது என்று தெரிந்தால் வேறு தீவிரவாத அமைப்புகளும் இந்தியர்களை குறி வைத்துக் கடத்தி அரசாங்கத்திடம் பேரம் பேசும்’ என்று சொல்வார்கள். இப்பொழுது மட்டும் தீவிரவாதிகளுக்குத் தெரியாதா என்ன?. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

யாரையும் குறிப்பாக குற்றம் சொல்வதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை. ஒரு நாளில் மட்டும் எவ்வளவு விவகாரங்களுக்காக நாம் பயப்படுகிறோம்? ஒரு காரியத்தைச் செய்யும் போது எதையெல்லாம் நினைத்து பயப்பட வேண்டியிருக்கிறது. பயம் ஒரு விதத்தில் நமக்கு பாதுகாப்பானதுதான். பயமே இல்லையென்றால் வரைமுறையில்லாமல் ஆடத் தொடங்கிவிடுவோம். ஆனால் பயத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா? ஜாக்கிரதையுணர்வுக்கும் பய உணர்வுக்கும் மிகப்பெரிய வித்தியாசமிருக்கிறது. 

நம்மிடம் பயம்தான் ஜாஸ்தி. பக்கத்துவீட்டில் ஏதாவது பிரச்சினையென்றால் சத்தமே வராமல் நம் ஜன்னலை மூடுவதற்கு ஜாக்கிரதை உணர்வு என்று அர்த்தமில்லை. விபத்தில் ஒருவன் அடிபட்டுக்கிடக்கிறான் என்றால் ‘நமக்கெதுக்கு வம்பு?’ என்று பம்முவதற்கு ஜாக்கிரதையுணர்வா காரணம்? 

இப்பொழுதெல்லாம் நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமேயில்லாதவனைக் கூட பார்த்து பயப்பட வேண்டியதாக இருக்கிறது. எவன் எப்படி எகிறுவான் என்றே தெரியாத ஒரு in-secured சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எவன் வேண்டுமானாலும் ஓங்கி ஒரு அறையை விட்டுவிட முடியும். எவன் வேண்டுமானாலும் நம் குடியைக் கெடுத்துவிட முடியும். எவன் வேண்டுமானாலும் நம்மைக் கீழே தள்ளி மிதித்துவிட முடியும். 

இதையெல்லாம் நம்மால் மாற்றிவிட முடியுமா என்ன? ம்ஹூம். சுத்தமாக நம்பிக்கையில்லை. என்னதான் செய்வது? ஒன்றும் செய்வதற்கில்லை. குறைந்தபட்சம் நம்மளவில் மாறலாம். இன்னொருவனை எந்தவிதத்திலும் பயமுறுத்தும் செயலில் இறங்கமாட்டேன் என்று வேண்டுமானால் உறுதியெடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது சாத்தியமா என்று தெரியவில்லை. இன்னொருவனை பயப்படச் செய்து அதில் இன்பம் துகிப்பதில் ஒரு கிக் இருக்கிறது. அந்த கிக்கை தெரிந்து கொண்டால் போதும். தெரு நாயையாவது பயமூட்டி திருப்தியடைந்து கொண்டிருப்போம்.

Nov 21, 2014

ஆழம் தெரியாமல் காலை...

நண்பர் வீடு வாங்குகிறார். அபார்ட்மெண்ட்டில் ஒரு ஃப்ளாட். கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ரூபாய் ஆகிறது. மனைவியின் நகையை விற்று இருபத்தைந்து லட்சம் தேற்றிவிட்டார். இன்னுமொரு இருபத்தைந்து லட்சத்துக்கு வங்கிக் கடன் தான். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் பில்டர்கள் ஏமாற்றிவிடக் கூடும் என்பதால் ‘அந்த அபார்ட்மெண்ட்டில் யாராவது ஸ்டேட் பேங்க் இல்லைன்னா ஹெச்.டி.எஃப்.சியில் கடன் வாங்கியிருக்கிறார்களா என்று பாருங்கள்...வாங்கியிருந்தால் கண்ணை மூடிக் கொண்டு அட்வான்ஸ் கட்டிவிடுங்கள்’ என்பார்கள். அந்த இரண்டு வங்கிகளின் மீது அவ்வளவு நம்பிக்கை. அவ்வளவு சீக்கிரம் கடன் தந்துவிட மாட்டார்கள். துருவி எடுத்து விடுவார்கள். அனைத்து ஆவணங்களும் சரியாகவும், மாநகரட்சியின் அனுமதிப்படி துல்லியமாகவும் கட்டியிருந்தால்தான் கடன் தருவார்கள். அதனால் ஏற்கனவே யாராவது கடன் வாங்கியிருந்தால் அந்த அபார்ட்மெண்ட்டில் பிரச்சினை எதுவும் இருக்காது என்று அர்த்தம். துணிந்து வாங்கலாம்.

நாங்கள் வீடு கட்டும் போது ஸ்டேட் வங்கியில் இருபத்து நான்கே கால் லட்சம் வாங்குவதற்குள் எவ்வளவு திணறினோம் என்று ஞாபமிருக்கிறது. ஆயிரத்தெட்டு கேள்விகள், நூற்றியெட்டு விசாரணைகள் என்று பிளிறினார்கள். அப்படியே கடன் தருவதாக ஒத்துக் கொண்டாலும் கட்டிட வேலை நடக்க நடக்கத்தான் பணத்தை பட்டுவாடா செய்வார்கள். நமக்கே தெரியாமல் யாரோ ஒரு மனிதர் வந்து எவ்வளவு வேலை முடிந்திருக்கிறது என்று பார்த்துச் செல்வார். அவர் பச்சைக் கொடி காட்டினால்தான் அடுத்த தொகை கைக்கு வரும். அதே சமயத்தில் வேறு சில வங்கிகளில் கடன் வாங்கியிருந்தவர்களுக்கு இந்த பிரச்சினையெல்லாம் இல்லை. ‘இன்னும் வாங்கிக்குங்க சார்’ என்று கேட்டுக் கொடுத்த வங்கிகளையெல்லாம் தெரியும்.

இப்பொழுது எதற்கு இந்த ஞாபகம்? ஒன்றுமில்லை. அதானிக்கு கிட்டத்தட்ட ஆறாயிரத்து இருநூறு கோடியை வழங்குவதாக அதே ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது. 

கெளதம் அதானிக்கு ஐம்பத்து சொச்சம் வயதுதான் ஆகிறது. குஜராத்தி ஜெயின். அதானியின் அப்பா பெரிய பிஸினஸ் புள்ளி எல்லாம் இல்லை. சாதாரணக் குடும்பம். அதானியின் கதையைப் படித்தால் அண்ணாமலை ரஜினி தொடையைத் தட்டி பணக்காரன் ஆனது போல இருக்கிறது. பதினெட்டு வயதில் பம்பாய்க்கு சில நூறு ரூபாய்களோடு வேலைக்குச் சென்றிருக்கிறார். வைரத்தை தரம் பிரிக்கும் வேலை. ஒரே வருடத்தில் தொழிலைக் கற்றுக் கொண்டு சொந்தமாகத் தொழில் ஆரம்பித்திருக்கிறார். ஒரே வருடம்தான். இருபது வயதில் பல லட்ச ரூபாய்களை கொழித்துவிட்டார். அது எப்படி சாத்தியம் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. அந்தக் கதையை வினவு தோழர்கள் விவரித்தால்தான் சரியாக வரும்.

தனது இருபத்தாறு வயதில் அதானி குழுமத்தை தொடங்கினார். அதன் பிறகு திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. சாம்ராஜ்யம்தான். முந்தாநாள் ஆஸ்திரேலியாவில் நரேந்திர மோடியுடன் கையைப் பிடித்துக் கொண்டு சுற்றும் அளவுக்கு வளர்ந்து விட்டார். இன்னமும் வளர்ந்து கொண்டேயிருக்கிறார். ஹார்லிக்ஸ், காம்ப்ளான், ஃபோர்ன்விட்டாவெல்லாம் மிக்ஸ் அடித்து குடித்த வளர்ச்சி.

இப்பொழுது ஆஸ்திரேலியாவில் ஒரு நிலக்கரிச் சுரங்கம் அமைக்கிறாராம். Carmichael Mining Project. அதற்காகத்தான் அதானிக்கு ஒரு பில்லியன் டாலரைத் தருவதாக ஸ்டேட் வங்கி உறுதியளித்திருக்கிறது. நானும் நீங்களும்தான் பத்தாயிரம் ரூபாயை வாங்கிச் சேர்ப்பதற்குள் கண்ணாமுழியைத் திருகிக் கொண்டு திரிய வேண்டும். ஆனால் அதானி அல்லவா? அதனால் ஒரு பில்லியன் டாலர். இப்படிக் கொடுத்தால் மற்றவர்கள் சும்மா இருப்பார்களா? எதிர்கட்சிகள் கதறுவார்கள். அதற்கும் ஸ்டேட் வங்கியிடம் நாசூக்கான பதில் இருக்கிறது. ‘இது சும்மா புரிந்துணர்வு ஒப்பந்தம்தான்..எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டுத்தான் தருவோம்’ என்று சொல்கிறார்கள். இதெல்லாம் உடான்ஸ் பதில். நிச்சயமாகத் தந்துவிடுவார்கள்.

அதானிக்கு கடன் தர முடியாது என்று ஏற்கனவே சில வங்கிகள் மறுத்திருக்கின்றன. ‘இந்தத் திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்’ என்று காரணம் சொன்னார்களாம். அதே கேள்வியை ஸ்டேட் வங்கியின் தலைமை அதிகாரியிடம் கேட்டிருக்கிறார்கள். ‘ச்சே..ச்சே குயின்ஸ்லேண்ட் மாகாண அரசிடம் விசாரித்துவிட்டோம். அதெல்லாம் ஒன்றுமில்லையாம்’ என்று கேள்வி கேட்டவருக்கு பெரிய பன்னாக கொடுத்திருக்கிறார். அவனவனுக்கு அவனவன் பிரச்சினை. கடந்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில் பெரிய அடி வாங்கியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். எவனாவது வந்து ‘நான் ஒரு சுரங்கம் அமைக்கிறேன்’ என்று கேட்கும் போது அரசாங்கத்திற்கு நாக்கில் எச்சில் வடியத்தானே செய்யும்? தொடங்கச் சொல்லி அனுமதி கொடுத்துவிட்டார்கள். 

அதானி குழுமத்துக்கு ஏற்கனவே கிட்டத்தட்ட எழுபதாயிரம் கோடி கடன் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது. எனவே பழைய கடன் நிலுவை மற்றும் முன் பணமாக ஐந்தாயிரம் கோடியை அதானி குழுமம் ஸ்டேட் வங்கிக்கு கொடுத்துவிட வேண்டும் என்றும் மிச்சமிருக்கும் ஆயிரத்து இருநூறு கோடிதான் புதுக்கணக்கு என்று என்ன என்னவோ சொல்கிறார்கள். பெரிய இடத்து விவகாரம்.

ஒரு பில்லியன் டாலரை ஸ்டேட் வங்கி கொடுத்தாலும் இன்னுமொரு ஆறரை பில்லியன் டாலரை வேறு பல இடங்களிலிருந்து பெறுவதற்கான முயற்சிகளில் அதானி குழுமம் இறங்கியிருக்கிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ஏழரை பில்லியன் டாலர்கள். எங்கே போவது? இல்லாதவனுக்குத்தான் அந்தப் பிரச்சினையெல்லாம். அதானிக்கு அதெல்லாம் ஜூஜூபி மேட்டர். இந்தத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட நானூறு கிலோமீட்டருக்கு ரயில்வே ட்ராக் அமைக்கும் வேலை இருக்கிறது. அதற்கு மட்டுமே கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். அந்த வேலையை கொரிய நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு அதற்கு பிரதிபலனாக இன்னொரு கொரிய கடன்காரனிடம் பல்லாயிரம் கோடியை வாங்கப் போகிறார்களாம். வேறு சில அமெரிக்க வங்கிகள் உதவும் போலிருக்கிறது. குயின்ஸ்லேண்ட் அரசாங்கமும் தன் பங்காக ஒரு தொகையைப் போடுகிறது. சமாளித்துவிடுவோம் என்று படம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியே பணத்தை புரட்டிவிட்டாலும் கூட இது ஒன்றும் சாதாரண திட்டமில்லை என்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாயிலான ப்ராஜக்ட். நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆழம் தெரியாமல் அதானி காலை விடுகிறார் என்று சில கட்டுரைகளில் வாசித்தேன். விட்டால் என்ன? தூக்கிவிடத்தான் பெரிய கையாக இருக்கிறதே! தாமரையைச் சுமந்து கொண்டிருக்கும் கை- சாட்சாத் அந்த மகாலட்சுமியின் கையைச் சொல்கிறேன். நமக்கெதுக்கு அரசியல் எல்லாம்?

ஜஸ்டின் பீய்பர் தெரியுமா?

‘ஜஸ்டின் பீய்பர் மாதிரியான ஆட்களையெல்லாம் தெரிஞ்சு வெச்சிருந்தா இப்படியெல்லாம் பேச மாட்டீங்க’ என்று அந்தப் பெண்மணி எகிறும் போது கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போனேன்.  நடுராத்திரியில் நீ ஏன் சுடுகாட்டுக்கு போகவில்லை என்று கேட்பது போல இருந்தது. யார் அந்த ஜஸ்டின் பீய்பர்? அந்தப் பெண்மணி இப்படித்தான். அவ்வப்பொழுது யாராவது ஒரு பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பார். ‘நகரத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளுக்கு நாம் அள்ளித் திணிக்க வேண்டும்’ என்கிற கட்சிக்காரர். 

‘சச்சின் டெண்டுல்கர் மும்பையில் இருந்ததாலதான் அவரை கவனிச்சாங்க...தோனி கூட ராஞ்சியில் வளர்ந்தவர். அதுவும் சிட்டிதான்....டிராவிட்? அவரும் இங்க பெங்களூர்தானே?’ இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். நமக்குத்தான் பதற்றம் தொற்றிக் கொள்ளும். 

‘லியாண்டர் பயஸ் கல்கத்தா. கங்குலியும்தான்’ ‘விஸ்வநாதன் ஆனந்த் சிட்டியில் வளர்ந்தவர்தானே?’ இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக் கொண்டேயிருப்பார். கொஞ்சம் கிறுகிறுத்து போய்விடும்.

‘என்னது உங்க பையனுக்கு ஆறு வயசு ஆகப் போகுதுங்குறீங்க...பாட்டுக் க்ளாஸில் சேர்க்கலையா?’ என்று குண்டைப் போட்டார். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 

இவனிடம் ‘பாட்டு க்ளாஸூக்கு போறயா தங்கம்?’ என்று கேட்டால் ‘பாட்டெல்லாம் வேண்டாம்’ என்கிறான். இங்கு கர்நாடக சங்கீதம்தான் சொல்லித் தருகிறார்கள். அவனுக்கு விருப்பமிருந்தால் போகட்டும். இல்லையென்றால் அதை பழக்கியே தீர வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. பாத்ரூமில் கூட பாடத் தெரியாத எனக்கு மகனாக பிறந்திருக்கிறான். பிறகு எப்படி பாட்டு பாட விரும்புவான்?

‘ஜூனியர் சிங்கர் பார்க்குறீங்களா?’ அந்தப் பெண்மணியின் கேள்விதான் இது.

‘இல்லைங்க’

‘வேஸ்டுங்க நீங்க....’ பார்த்த மூன்றாவது நாளில் இந்தச் சான்றிதழை வாங்கிக் கொண்டேன்.

‘இனிமேலாச்சும் பாருங்க..இத்தினியூண்டு பொடிசுக எல்லாம் என்ன போடு போடுறாங்க’

அவர் கோயமுத்தூர்க்காரர். பக்கத்தில் இருக்கும் டென்னிஸ் பயிற்சி வகுப்புக்கு மகனைக் கொண்டு வந்து விடும் போது அறிமுகம். பையன் டென்னிஸ் பழகுகிறான். கராத்தேவுக்குச் செல்கிறான். சனி, ஞாயிறுகளில் காலை நேரத்தில் கிதார் வகுப்பு. மாலையில் பாட்டு க்ளாஸ். ஹிந்தி, ஸ்கேட்டிங் பயிற்சிகள் எல்லாம் தனி. 

‘ஆறு வயது பையனுக்கு இது ஓவர் டோஸ் இல்லீங்களா?’ என்று கேட்டால் அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார். ‘அப்படியெல்லாம் இல்லைங்க...எதையெல்லாம் அறிமுகப்படுத்தணுமோ அதை நாம செஞ்சுடணும்...அவனுக்கு எது விருப்பமோ அதை எடுத்துக்கட்டும்’- இந்த பதில் சரியானதாகத்தான் தெரிகிறது. நகரக் குழந்தைகள் வீட்டில் இருந்து எதைச் செய்கிறார்கள்? கார்ட்டூன் சானல்கள்தான் கதி. 

கிராமக் குழந்தைகளும் கூட இப்பொழுது அப்படித்தான் ஆகிவிட்டார்கள். மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் உரிமை என்பார்கள். உரிமையாவது வெங்காயமாவது. எந்த கிராமத்தில் மண்ணில் விளையாட அனுமதிக்கிறார்கள். மூன்றாம் வகுப்பிலேயே தடி தடியாக கண்ணாடி அணிந்து கொள்கிறார்கள். ‘எப்போ பாரு செல்போனை வெச்சு விளையாடிட்டே இருக்குது கண்ணு’ என்று புகார் வாசிக்கிறார்கள். தெல்லு, கில்லி, கபடி, ஐஸ் நெம்பர் போன்ற விளையாட்டுகளையெல்லாம் எந்தக் குழந்தையும் விளையாடுவதாகத் தெரியவில்லை.  போதாகுறைக்கு ‘கையில் மில்லியன் கிருமிகள் இருக்கு’என்று சோப் கம்பெனிக்காரன் விளம்பரம் செய்கிறான். ‘வீட்டிற்குள்ளேயே விளையாடுங்கள்’ என்று அம்மாக்கள் சொல்லிவிடுகிறார்கள். குழந்தைகளும் என்னதான் செய்வார்கள்? சோட்டா பீமும் கால்யாவும்தான் ஒரே ஆறுதல். 

இந்த கோயமுத்தூர் அம்மிணியின் குழந்தைக்கு அந்த பிரச்சினையெல்லாம் இல்லை. வீட்டிலேயே இருப்பதில்லை. பிறகு எப்படி டிவி பார்ப்பது?

குழந்தைகளுக்கு exposure கொடுப்பதுதான் அவசியம். இப்படியெல்லாம் சாத்தியங்கள் இருக்கின்றன என்ற அடையாளத்தைக் காட்டிவிட்டால் போதும். பிறகு அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரும் போதுதான் ஸ்நூக்கர் என்கிற விளையாட்டின் பெயரையே கேள்விப்பட்டிருப்போம். பங்கஜ் அத்வானி மாதிரியான ஆட்கள் பத்து வயதிலேயே நுணுக்கங்களைக் கற்றிருப்பார்கள். அந்த வித்தியாசம்தான் சாம்பியன்களை உருவாக்குகிறது.

கிராமக் குழந்தைகளுக்கே கூட நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியும். நாம் செய்வதில்லை.

‘இதெல்லாம் சரிதான். படிப்பில் கவனம் சிதறிடாதா?’ என்ற கேள்வியைக் கேட்ட போதுதான் ஜஸ்டின் பீய்பர் பற்றி பேச்சை எடுத்தார். எனக்குத் தெரியாது. பிறகுதான் கூகிளில் தேடினேன். பீய்பர் தொண்ணூற்று நான்காம் ஆண்டுதான் பிறந்திருக்கிறார். அம்மாவும் அப்பாவும் திருமணமே செய்து கொள்ளவில்லை. அம்மாதான் வளர்த்திருக்கிறார். வறுமையான சூழல். மகன் பாடுவதை வீடியோவாக எடுத்து சிலவற்றை யூடியூப்பில் போட்டிருக்கிறார். அதை யதேச்சையாக பார்த்த பீய்பரின் தற்போதைய மேலாளர் பீய்பரை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்து கொடி நட்ட வைத்துவிட்டார். முதல் ஆல்பம் வெளியே வந்த போது பீய்பரின் வயது பதினைந்து. 

இன்றைக்கும் யூடியூப்பில் அவரது ‘Baby’ என்ற பாடல்தான் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோக்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட நூற்றுப்பத்து கோடி ஹிட்ஸ். பீய்பரை படிப்பா கை தூக்கிவிட்டது?  குழந்தைகளுக்கு படிப்பு அவசியம்தான். ஆனால் வெறும் படிப்பை மட்டுமே கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டியதில்லை. உலகின் வண்ணங்களையும் வாய்ப்புகளையும் காட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப அவர்கள் தங்களின் பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும். 

Nov 20, 2014

நான் யார் தெர்மா?

இப்பொழுதெல்லாம் க்ரீன் வியூ என்ற மருத்துவமனை வழியாகத்தான் அலுவலகத்திற்கு பயணிக்கிறேன். ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் இருக்கிறது. பொது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டுமென்றால் முந்நூறு ரூபாய். சிறப்பு நிபுணர்களிடமென்றால் ஐந்நூறு ரூபாய். இப்பொழுது அந்த மருத்துவமனை பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அந்த அந்த மருத்துவமனைக்கு முன்பாக ஒரு காட்சி. 

ஒருவன் கையில் பூங்கொத்தோடு நடு சாலையில் மண்டியிட்டு நிற்கிறான். சடாரென ப்ரேக் அடித்து நின்ற வண்டிகள் தாறுமாறாக ஒலியெழுப்புகின்றன. ஒரு கணம்தான். சுதாரித்துக் கொண்ட பெரும்பாலான ஓட்டுநர்கள் புன்னைகைத்தபடியே பொறுமை காக்கிறார்கள். சாலையின் இந்த முனையில் பெண்ணொருத்தி நிற்கிறாள். அவளுக்கு முகம் சிவந்துவிட்டது. இவளைக் காட்டிலும் அவன் அழகாக இருந்தான். கருப்புச் சட்டை. நீல ஜீன்ஸ். சிவந்த முகம். அளவான தாடி. ஒரு கூலிங் க்ளாஸ். அந்தப் பெண் எப்படியிருந்தாள் வர்ணிக்க ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அது ரிஸ்க். இப்பொழுதெல்லாம் நான் எழுதுவதை மனைவி வாசிக்கிறாளோ இல்லையோ- அவளது நண்பர்கள் வாசித்துவிட்டு போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். அனுஷ்காவோ, ஷ்ரியாவோ- உங்களுக்கு பிடித்த அழகியை கற்பனை செய்து கொள்ளுங்கள். 

சில வினாடிகள் தயங்கிக் கொண்டிருந்தாள். எல்லோரும் அவளைப் பார்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டவள் ஓடிச் சென்று பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள். காதல் பூத்துவிட்டது. சில பைக்காரர்கள் இறங்கி வந்து அவனுக்கு கை கொடுத்தார்கள். அவன் மிகப் பெரிய சாதனையைச் செய்துவிட்ட பூரிப்புடன் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தான். இப்பொழுது அவளது கரங்கள் அவனுக்குள் இருந்தன. கிளம்பி வந்துவிட்டேன். 

நேற்றிரவே வேலையை ராஜினாமா செய்திருந்தேன். Notice period. இன்று அலுவலத்தில் அவ்வளவாக வேலை  இல்லை. அதனால் இந்தக் காட்சிதான் மூளையின் பின்னணியில் ஓடிக் கொண்டேயிருந்தது. எட்டாம் வகுப்பிலிருந்து காதலிக்கிறேன். ஆனால் ஒருத்திக்குக் கூட நான் அவளைக் காதலித்தேன் என்ற விஷயம் தெரியாது என்பது எவ்வளவு துக்ககரமான விஷயம்? பள்ளி, கல்லூரிகளில்தான் தைரியம் இல்லை. தொலையட்டும். குறைந்தபட்சம் ஹைதராபாத்தில் வேலையில் இருந்த போதாவது ஆசைப்பட்டவளிடம் சொல்லியிருக்கலாம். அதே நிறுவனத்தில்தான் பணியில் இருந்தாள். இருந்தார்கள் என்றால்தான் சரியாக வரும். இரண்டு மூன்று பேர். ஆளாளுக்கு ஒருவன் தயாராக இருந்தான். ஒருத்திக்கு மட்டும் ஆள் இல்லை. தனியள். ரெட்டி வகையறா. சிக்கினால் ரொட்டியாக்கிவிடுவார்கள் என்று உடனிருந்தவர்கள் பயமூட்டிக் கொண்டிருந்தார்கள். நமக்கு நாமே திட்டத்தில் உலை வைத்துக் கொள்ளக் கூடாது என்று பம்மிக் கொண்டிருந்தேன். 2008 ஆம் ஆண்டின் டிசம்பர் மூன்றாம் தேதி சீக்கிரமாக வந்து சேர்ந்துவிட்டது. அதோடு சரி. இப்பொழுது வரைக்கும் அனுஷ்கா, ஷ்ரியா என்று சாடை பேசுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

அது போகட்டும்.

ஒவ்வொரு பருவத்திலும் நாம் அடைந்துவிட வேண்டும் என விரும்பும் கனவு ஒன்று இருந்து கொண்டேயிருக்கிறது. இல்லையா? ஒரு மாதமே ஆன குழந்தை தனக்கு முன்பாகத் தொங்கும் எதையாவது எட்டிப்பிடிக்கத் தொடங்குவதிலிருந்து கடைசியாக கண்களை மூடும் வரைக்கும் ஏதாவதொன்றை மனம் நாடிக் கொண்டேயிருக்கிறது. ஏதோ ஒரு தேடல். ஏதோ ஒரு பிடிப்பு. இந்தப் பிடிப்பு மட்டும் இல்லையென்றால் நம் வாழ்க்கையில் என்ன சுவாரஸியமிருக்கிறது? 

மதிப்பெண் வாங்கிவிட வேண்டும். நல்ல வேலையாக பிடித்து விட வேண்டும். சம்பாதித்துவிட வேண்டும். காதல், கல்யாணம், குழந்தைகள், அவர்களின் படிப்பு, எதிர்காலம் இத்யாதி இத்யாதி- இப்படி ஏதேனும் ஒன்றுதான் நம்மை சுற்றிச் சுழலச் செய்கிறது. வெறியெடுத்து அலையச் செய்கிறது. இதெல்லாம் ஒரு சாமானிய மனிதனின் இயல்புதானே? விட்டுவிடலாம்.

ஆனால் எழுத்தாளர் என்றொரு ஜாதி இருக்கிறது பாருங்கள். புகழுக்காகவும் பரபரப்புக்காவும் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்.

“சுஜாதாவெல்லாம் எழுத்தாளரா?”  “ஆனந்தவிகடனில் இந்த வாரம் ஒரு கதை படித்தேன். அதெல்லாம் ஒரு கதையா?” “தமிழின் உரைநடையை புரட்டிப் போடுவதே நானல்லவா?” “என்னைவிட இங்கு வேறு யாருக்கேனும் இவ்வளவு வாசகத் திரள் இருக்கிறதா?”

எத்தனை அலட்டல்கள்; எத்தனை பீற்றல்கள்?  

சுஜாதாதான் தமிழின் ஒரே சிறந்த எழுத்தாளர் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இப்பொழுது இணையத்தில் எழுதி/பீற்றிக் கொண்டிருக்கும் எந்த எழுத்தாளராலும் சீக்கிரமாகத் தொட முடியாத சாதனைகளைச் செய்தவர் என்று தயக்கமில்லாமல் சொல்ல முடியும். அவரது எழுத்திலும் தற்பெருமை இருந்ததுதான். ஆனால் இன்றைய எழுத்தாளர்களின் பீற்றலோடு ஒப்பிட்டால் அதெல்லாம் தூசி. தன்னைத் தவிர இங்கு எவனுமே இல்லை என்கிற திமிர் வரும் போதே அந்த எழுத்தாளன் தேங்கிவிடுகிறான். saturated. இங்கு பாதிப்பேர் அப்படித்தானே திரிகிறார்கள்?

இன்றைக்கும் சுவாரசியமான எழுத்தை வாசிக்கும் போது ‘சுஜாதா ஸ்டைல்’ என்று சொல்கிறார்கள். அடுத்த தலைமுறையிலும் ‘சுஜாதா ஸ்டைல்’ என்று சொல்வதற்கான ஆட்கள் இருப்பார்களே தவிர இன்றைக்கு இணையத்தில் பீச்சிக் கொண்டிருப்பவர்களின் ஸ்டைல் என்று யாரேனும் சொல்வார்கள் என்ற நம்பிக்கையில்லை. சுஜாதாவைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று இதை எழுதவில்லை. ஆனால் நம் தலைமுறையில் மட்டும் ஏன் இப்படி வெட்கமேயில்லாமல் சுயபுராணம் பாடுகிறார்கள் என்ற குழப்பத்தைத் தெளிந்து கொள்ள விரும்புகிறேன்.

தனக்கென ஒரு குழாம். சில ஜால்ராக்கள். சில அல்லக்கைகள். சில துதிபாடிகள். ‘நான் யார் தெர்மா?’ என்கிற வெற்றுப் புலம்பல்கள். எவ்வளவு பெரிய ரவுடியைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் இவர்களிடம் தோற்றுவிடுவார்கள். ரவுடியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஏன் சுஜாதாவை மிதித்துவிட்டு மேலே ஏறி நிற்க விரும்புகிறீர்கள்?

Nov 19, 2014

இண்டர்வியூக்கு போகிறேன்

நேற்று ஒரு நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். வேலை மாறிவிடலாம் என்ற எண்ணம் வெகு நாட்களாகவே மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. இந்த நிறுவனத்தில் சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகப் போகிறது. ஒரே இடத்தில் வெகுநாட்களுக்கு இருப்பது நமக்கும் நல்லதில்லை அவர்களுக்கும் நல்லதில்லை. அப்படித்தான் நம்புகிறேன். எந்த வேலையைக் கொடுத்தாலும் எப்படி ஏய்ப்பது என்று அத்துப்படியாகிவிட்டது. இப்படியே எத்தனை நாட்களுக்குத்தான் காலத்தை ஓட்டுவது? ஒருவேளை எனது தில்லாலங்கடியை அவர்கள் கண்டுபிடித்து வெளியில் அனுப்பினால் புதிதாக வேலையைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம். கிளம்பிவிடலாம்.

பல வருடங்களுக்குப் பிறகான நேர்காணல் என்பதால் சற்று நடுக்கமாகத்தான் இருந்தது. இதுவரைக்கும் செய்த வேலையில் இருந்துதான் கேள்வி கேட்பார்கள் என்றாலும் இப்பொழுது செய்கிற வேலைக்கும் அவர்களின் தேவைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் ஒரு வாரமாகவே முரட்டுத்தனமாக படித்துக் கொண்டிருந்தேன். அதிகாலை இரண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து படிப்பது, வார இறுதி நாட்களில் இடைவிடாமல் படிப்பது என்று பித்து ஏறிக் கொண்டிருந்தது. எதுவுமே படிக்காமல் பன்னிரெண்டாம் வகுப்பின் கணக்குத் தேர்வுக்கு செல்வது போன்றெல்லாம் கனவுகள் வரத் துவங்கியிருந்தன. இப்படியே போனால் விவகாரம் ஆகிவிடக் கூடும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு படிப்பதை நிறுத்திக் கொண்டேன். செவ்வாய்க்கிழமையன்று நேர்காணல்.

முதல் இரண்டு சுற்றுக்களில் நிறைய கேள்விகளைக் கேட்டார்கள். சமாளித்துவிட்டேன். அது கூட சிரமமாக இருக்கவில்லை. ஹெச்.ஆர் சுற்றில்தான் அந்தப் பெண்மணி தாளித்துவிட்டார். ஆரம்பத்தில் சுமூகமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ‘நீ ஏன் மற்றவர்களைவிட பெஸ்ட்?’ என்ற போதுதான் சற்று பிசகிவிட்டேன். ‘அப்படி நான் சொல்லவேயில்லையே?’ என்று கேட்டுவிட்டேன். ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு ‘அப்படி நிரூபிக்க வேண்டிய அவசியம் வந்தால் எப்படி நிரூபிப்பாய்?’ என்றார். இப்படியான கேள்விகளை எதிர்பார்க்கவில்லை. ஹெச்.ஆர் சுற்றில் எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று மட்டும்தான் கேட்பார்கள் என நினைத்திருந்தேன். 

நேர்காணல்களை எதிர்கொள்வது ஒரு கலை. முன்னதாகவே சில தயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அதில் முக்கியமான விஷயம்- நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருக்கும் ‘இண்டர்வியூக்கு போறேன்; இண்டர்வியூக்கு போறேன்’ எனத் தெரியப்படுத்த வேண்டியதில்லை. ரிசல்ட் என்ன ஆனது என்பது குறித்து நம்மைவிட அவர்கள்தான் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடும். இந்தத் தேவையில்லாத அழுத்தத்தை நாமாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. 

அதே போல இந்த வேலையை வாங்கியே தீர வேண்டும் என்ற வெறியோடு் நேர்காணலுக்கு போகவே கூடாது. திருப்தியான அளவுக்கு தயாரிப்புகளை முடித்துவிட்டு ‘வந்தால் மலை போனால் இன்னொன்றை பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற மனநிலையோடு இருப்பதுதான் மிக முக்கியம். இதை விட்டால் வேறு கதியே இல்லை என்ற நினைப்பிருந்தால் நேர்காணல் முழுவதும் பதறிக் கொண்டே இருப்போம். ஒரு நிறுவனத்திற்கு நம்மைவிட்டால் இன்னமும் ஆயிரம் ஆட்கள் கிடைப்பார்கள் என்பதைப் போலவே நமக்கும் அந்த நிறுவனத்தைவிட்டால் இன்னமும் நூறு நிறுவனங்கள் கிடைக்கும். அவ்வளவுதான்.

நேர்காணலின் போதும் சில தகிடுதத்தங்களைச் செய்யச் சொல்வார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்பாக கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன். கல்வி ஆலோசகர் ஒருவரும் பேசினார். இறுதியாண்டு மாணவர்கள்தான் பார்வையாளர்கள். நேர்காணல்களை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். எளிமையான கான்செப்ட்தான். ‘மோட்டார் எப்படிச் சுற்றுகிறது?’ என்ற கேள்வியைக் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு பதில் தெரியாது. ஆனால் ஜெனரேட்டரைப் பற்றித் தெரியும். கமுக்கமாக ஜெனரேட்டர் என்ற சொல்லை உள்ளே கொண்டு வந்துவிட வேண்டும். அடுத்த கேள்வி நிச்சயமாக ஜெனரேட்டரைப் பற்றித்தான் இருக்கும். எதிராளியை நம் கட்டத்துக்குள் கொண்டு வந்து கபடி ஆட வேண்டும். இந்த சூட்சமம் அனுபவஸ்தர்களுக்கும் ஓரளவுக்கு பயன்படும் என்றாலும் Freshersக்கு நிச்சயமாக பயன்படும். இந்த சூட்சமத்தை பயன்படுத்த பயிற்சி முக்கியம். பயிற்சி எதுவும் இல்லாமல் அவன் கேட்கும் கேள்விக்கு முரட்டு அடியாக சம்பந்தமேயில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தினால் கண்டுபிடித்துவிடுவான். 

‘நீதான் பெஸ்ட் என எப்படி நிரூபிப்பாய்?’ என்று கேட்டதற்கு என்ன பதில் சொன்னேன் என்று சொல்லவில்லை பாருங்கள். ‘If you are looking only for a skilled person then I may not be the right candidate but if you are looking for someone with humanity, I can say that I am the right choice' என்று ஒரு பிட்டைப் போட்டேன். சூழல் தலைகீழாக மாறிவிட்டது. ‘எப்படிச் சொல்லுறீங்க?’ என்றார். என் பதிலை இங்கு எழுதினால் சுய தம்பட்டம் அடிப்பது போல ஆகிவிடும். அவ்வளவு பேசினேன். 

வெளியில் வந்து யோசித்த போதுதான் எனக்கே வெட்கமாக இருந்தது. இந்தப் பேச்சுக்கு வேலை தருவார்களா என்றெல்லாம் தெரியவில்லை. வந்தால் வரட்டும். வேலை, குடும்பம் எல்லாம் தனித் தனி ட்ராக். ஓடிக் கொண்டிருக்கட்டும்.

நாம் இன்னொரு ட்ராக் பற்றி பேசலாம். 

கடந்த சில நாட்களாக நிசப்தம் அறக்கட்டளையின் அடுத்த செயல் பற்றி மின்னஞ்சலில் சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள். எல்லோருக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை. இரண்டு திட்டங்கள் இருந்தன.

1) ஏதேனும் ஊரைத் தேர்ந்தெடுத்து மரங்களை நடுவது
2) தகுதியான பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது

இப்பொழுது சிறு மாற்றம். 

இரண்டு திட்டங்களையும் இணைத்துவிடலாம். கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் ரூபாய் வரைக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். ஒரு லட்சம் ரூபாய்க்கு பத்து பள்ளிகளுக்கு விளையாட்டு சாமான்களை வழங்க முடியும். ஒரு பள்ளிக்கு பத்தாயிரம் ரூபாய். ஆனால் அந்தப் பள்ளிகள் ஒரு பிரதியுபகாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் ஐம்பது மரங்களை வளர்ப்பதற்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும். நூறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இரண்டு பேருக்கு ஒரு செடியை ஒதுக்கிவிடலாம். செடிகளையும் நாமே வாங்கித் தந்துவிடலாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட செடிகளுக்கு மாணவர்கள் நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் தண்ணீர் போதும். அடுத்த வருடம் செடிகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் மாணவர்களுக்கு சான்றிதழையும் பரிசையும் நாமே வழங்கிவிடலாம். மரம் வளர்த்த மாதிரியும் ஆகிவிடும். மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்கிய மாதிரியும் ஆகிவிடும். 

இந்தத் திட்டம் எப்படியிருக்கிறது?

Nov 17, 2014

முத்தப் போராட்டம்

ஊர் ஊருக்கு முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தங்களை அறிவுஜீவி சமூகம் என்று நம்பிக் கொள்பவர்கள் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் போராட்டத்தின் ஒரு வடிவம் என்றும் தங்களின் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் இன்னொரு வழிமுறை என்று அறிவிக்கிறார்கள்.

வருத்தமாகத்தான் இருக்கிறது. 

இந்த நாட்டின் எண்பது சதவீத மக்களின் மனநிலை ஒரே மாதிரியாகத்தானிருக்கிறது. என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளைகள் என்கிற பொதுப்புத்தி அது. அந்த பொதுப்புத்தி ஒரே மாதிரிதான் சிந்திக்கும். ஒரே மாதிரிதான் செயல்படும். மகளுக்கு என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் இருட்டாவதற்குள் அவள் வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று விரும்பும். மகனுக்கு எவ்வளவுதான் செலவுக்கு காசு கொடுத்திருந்தாலும் அதை அவன் ஏதாவதொரு பெண்ணுக்காக செலவு செய்து திரியக் கூடாது என நினைக்கும். அந்த புத்திதான் மனைவிக்கென்று ஒரு வரையறையை உருவாக்குகிறது. கணவனுக்கென்று எல்லையிருக்கிறது என்ற முடிவினை உருவாக்குகிறது. இப்படியிருக்கையில் கணவனும், மனைவியும், மகனும், மகளும் சுதந்திரம் என்ற பெயரில் தெருவில் உதட்டை நனைப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளாத பொதுப்புத்தி அது. 

அந்தப் பொதுப்புத்தியிலிருந்து இம்மியளவும் பிசகாதவனாகத்தான் நானும் இருக்கிறேன். இதைச் சொல்லிக் கொள்வதில் வெட்கம் எதுவும் இல்லை. முற்போக்கு என்பதற்கும் ஒரு எல்லையிருக்கிறது. சுதந்திரம் என்பதற்கும் ஒரு வடிவமிருக்கிறது. நூற்றியிருபத்தாறு கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் நூற்றிப்பத்து கோடி மக்கள் எப்படி நினைக்கிறார்களோ எப்படி வாழ்கிறார்களோ அப்படித்தான் வாழ விரும்புகிறேன். ‘அப்படியானால் உனக்கு ஆசாபாசங்கள் இல்லையா?’ என்று யாராவது குரல் எழுப்பினால் ‘இருக்கிறது’ என்றுதான் பதில் வரும். ஆனால் அதை நான்கு சுவர்களுக்குள் வெளிப்படுத்திக் கொள்ளவே மனம் விரும்புகிறது.

அம்மாவும் அப்பாவும் கொஞ்சிக் கொள்வதைக் கூட பார்த்திராத தலைமுறை நாம். தங்களின் எந்த ரொமாண்டிசத்தையும் நம் முன்னால் காட்டியிருக்க மாட்டார்கள். நம்மில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் வளர்ந்திருப்போம். அவர்களை விட ஒரு படி நகர்ந்திருக்கிறோம் என்பதே போதுமானதாக இருக்கிறது. மகனுக்கு முன்னால் மனைவியை செல்லப்பெயர் வைத்து அழைக்குமளவுக்கு முன்னேறியிருந்தால் அதுவே பெரிய விஷயம் என்கிற மனநிலைதான் எனக்கு வாய்க்கப்பெற்றிருக்கிறது. நிம்மதியாகத்தானே இருக்கிறேன்?

விரும்பினால் முத்தமிட்டுக் கொள்வோம் என்று சொல்பவர்களைத் தடுக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் மகனின் கண்களை மூடும் கடமையாவது எனக்கிருப்பதாக உணர்கிறேன். அதற்கு கலாச்சாரக்காவல் என்ற பெயர் சூட்டி மட்டம் தட்டினால் அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லை.

தனது முப்பத்தைந்து வயது வரைக்கும் எதிர் பாலினத்தின் வாசமே படாத மனிதர்களால் இந்தச் சமூகம் நிரம்பியிருக்கிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் விருப்பமில்லாமல் வாசம் படாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. வாய்ப்பில்லாமல் அப்படியிருக்கிறார்கள். அவர்களைச் சலனப்படுத்தும் அநியாயத்தையும் பாவத்தையும் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே ஊடகங்களும் சினிமாக்களும் நம்மை சைக்கலாஜிக்கலாக கொத்து புரோட்டா போட்டுக் கொண்டிருக்கின்றன. பாலியல் வறட்சி என்பதன் விளைவுகளை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எதிர்கொள்கிறோம். இதில் இவர்கள் வேறு கூட்டணி சேர்ந்து கொள்கிறார்கள்.

எல்லாவற்றிலும் நம்மால் மேற்கத்திய சமூகத்தோடு ஒத்துப் போய்விட முடியாது என்பதுதான் நிதர்சனம். பதினாறு வயதில் மகனை வீட்டை விட்டு துரத்திவிடுகிற தைரியம் இல்லை. பதினான்கு வயதில் மகள் இன்னொருவனுடன் காதல் என்று அறிவிப்பதை புரிந்து கொள்கிற பக்குவம் இல்லை. இந்த தைரியமின்மையும் பக்குவமின்மையும் நம்மை எந்தவிதத்திலும் சிறுமைப்படுத்திவிடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. தாத்தா இப்படித்தான் இருந்தார். அப்பா கொஞ்சம் முன்னேறியிருந்தார். அவரைவிட துளி மட்டும் முன்னால் நகர்ந்தால் போதாதா என்ன?

சமூகத்தின் அடிப்படையான மனநிலையில் மாறுதல் உருவாக வேண்டும். ஆனால் அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மாற்றிவிட முடியாது என உறுதியாக நம்ப வேண்டியிருக்கிறது. இங்கு எல்லாவற்றிலும் ‘Cultural Shift' நடந்து கொண்டுதானிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். தடுக்க நினைத்தாலும் தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்காக இதுதான் சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் ஒரே நாளில் அடித்து நொறுக்குவது சாத்தியமேயில்லாதது. காலங்காலமாக மண்டைக்குள் ஊறிக்கிடக்கும் விஷயங்களை ஒரே ராத்திரியில் அரை ட்ரவுசரைப் போட்டுத் திரிந்து நம்மால் மாற்றிவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய சுதந்திரங்களை குடும்ப அமைப்பின் சிதைவுக்கான முதல்படியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் அங்கு போய்த்தான் இது நிற்கும். ஏற்கனவே நாம் அந்தப் பாதையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான போராட்டங்கள் அந்தச் சிதைவின் வேகத்திற்கு பெட்ரோல் ஊற்றக் கூடும். 

குடும்பம் என்ற அமைப்பின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவுதான் சிக்கல்கள், பிரச்சினைகள், சச்சரவுகள் இருந்தாலும் உள்ளூர அதன் மீது இருக்கும் பிடிப்பே எனக்கான வரையறைகளை உருவாக்குகிறது. எங்கு சுற்றினாலும் இரவில் மனைவியும் மகனும் நமக்காக காத்திருப்பார்கள் என்கிற பத்தாம்பசலித்தனமான எண்ணமும் ஒருவிதத்தில் நிம்மதியானதாகவே இருக்கிறது. இதே நம்பிக்கையையும் நிம்மதியையும் என் மகனுக்கும் கடத்த விரும்புகிறேன். அவன் அதைச் சிதைக்கிறேன் என்று கிளம்பினால் என்னால் எதுவும் செய்ய முடியாதுதான். ஆனால் 'நீ சுதந்திரம் என்ற பெயரில் தேடிச் செல்வது உண்மையான சுதந்திரம் இல்லை' என்று அவனுக்காக உள்ளூர வருத்தப்படுவேன்.

Nov 14, 2014

கலக்குங்க பசங்களா

சில அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடமும் ஆசிரியர்களிடமும் பேச முடிந்தது. நம்பிக்கையான ஆசிரியர்கள். புத்தகங்களுக்கு இணையாக அவர்கள் எதிர்பார்க்கும் உதவி பள்ளிக் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்கள். கேரம், செஸ் போன்ற உள் அரங்க விளையாட்டுகளாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் டென்னிஸ் போன்ற மைதான விளையாட்டுகளாக இருந்தாலும் சரி - அவர்களிடம் எதுவும் இருப்பதில்லை. குறிப்பாக வெகு சொற்பமான கிராமப்புற குழந்தைகளுக்குத்தான் செஸ், கேரம் என்பதெல்லாம் தெரிந்திருக்கிறது.

பாடத்திட்டத்தில் விளையாட்டுக்கென தனியான பிரிவேளை(Period) இருந்தாலும் பெரும்பாலும் கபடி, கோ-கோ போன்ற உபகரணங்கள் தேவையில்லாத விளையாட்டுகளைத்தான் விளையாடச் சொல்கிறார்கள் அல்லது குழுவாக அமர்ந்து கதை பேச விட்டுவிடுகிறார்கள்.

இந்தவகையில் ஏதாவதொரு உதவியைச் செய்ய முடியும் எனத் தோன்றுகிறது.  தேர்ந்தெடுத்த பள்ளிகளுக்கு விளையாட்டு உபரகணங்கள் ஒரு செட் வாங்கித் தந்துவிடலாம். 

செஸ் - 3 செட்,
கேரம் - 1 செட்
கிரிக்கெட் - இரண்டு மட்டைகள், நான்கு பந்துகள், ஸ்டெம்ப் இரண்டு செட்
டென்னிஸ் - நான்கு மட்டைகள், இரண்டு பந்து, ஒரு வலை
ஷட்டில் - நான்கு மட்டைகள், இரண்டு பந்து, ஒரு வலை
கால்பந்து - இரண்டு பந்துகள்

ஆகிய ஆறு விளையாட்டுக்களுக்கான உபகரணங்கள் இப்போதைக்கு திட்டத்தில் இருக்கிறது. 

ஒரு பள்ளிக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரியவில்லை. அமெரிக்காவிலிருந்து மஞ்சு என்பவர் 500 டாலர்கள் தரவிருக்கிறார்.  திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பக்கம் அய்யம்பாளையத்துக்காரர். இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார். அங்கு நண்பர்களுக்கிடையே ஆளாளுக்கு ஒரு தொகையை போட்டு சீட்டு நடத்துகிறார்கள்.  சுழற்சி முறையில் ஒவ்வொருவருக்கும் ஐந்நூறு டாலர்கள் கிடைக்கிறது. இந்தத் தொகையை அப்படியே நற்செயல்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த முறை மஞ்சுவுக்கு முதிர்வுத் தொகை கிடைத்திருக்கிறது. அவர் நிசப்தம் அறக்கட்டளைக்கு வழங்குகிறார். அவர் வழங்கும் தொகையை இந்த திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த விளையாட்டுச் சாமான்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று விசாரிக்க வேண்டும். ஐந்தாயிரம் ரூபாய் ஆகும் என்றால் ஐந்து பள்ளிகளுக்கு கொடுக்கலாம். பத்தாயிரம் ரூபாய் தேவைப்படும் என்றால் இரண்டு பள்ளிகளுக்கு கொடுக்கலாம். 

இந்த உதவியில் யாரேனும் கலந்து கொள்வதாக இருந்தால் இரட்டைச் சந்தோஷம். இன்னமும் நிறைய பள்ளிகளுக்கு விரிவுபடுத்திவிடலாம்.

அரசு ஆரம்பப்பள்ளிகளுக்கு மட்டும்தான் வழங்க வேண்டும் என்றிருக்கிறேன். அவர்களுக்குத்தான் இதெல்லாம் கிடைப்பதில்லை.

அரசு பள்ளிகளுக்கு உதவி செய்வது வீண் வேலை என்றுதான் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. பட்டையைக் கிளப்புகிறார்கள். சென்னை மடுமாநகரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு சென்ற முறை புத்தகங்கள் வழங்கியிருந்தோம். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அவ்வப்போது அழைத்து பேசுவார். சமீபத்தில் பேசிய போது ‘எங்க ப்லாக் பார்த்தீங்களா?’ என்றார். ஏதாவது மொக்கையாக இருக்கும் என நினைத்துக் கொண்டு பார்த்தேன். பள்ளி மாணவர்களே குறும்படங்களை தயாரித்திருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு வரைதான் அந்தப் பள்ளியில் இருக்கிறது. நடுநிலைப்பள்ளி. அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

நீங்களே பார்த்துவிடுங்கள்.  தலைமையாசிரியரை மனதார பாராட்ட வேண்டும். மிகுந்த முயற்சிகளை எடுக்கிறார் போலிருக்கிறது.

வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் போதும். அரசுப் பள்ளி மாணவர்கள் கலக்கிவிடுவார்கள். அவர்களுக்காக அடுத்த மாதத்திற்குள் ஒரு பட்டறை(Workshop) ஏற்பாடு செய்வதாக தலைமையாசிரியரிடம் உறுதியளித்திருக்கிறேன். செய்துவிடலாம். அதே சமயத்திலேயே இந்த உபகரணங்களையும் அவர்களுக்கு வழங்கிவிட வேண்டும்.

இந்த மாதிரியான பள்ளிகளுக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப் போகிறோம்? 

Nov 13, 2014

நிசப்தம் பராக்..பராக்...

நிசப்தம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டுவிட்டது. PAN எண்ணும் வந்துவிட்டது. வங்கிக் கணக்கு எண்ணும் கிடைத்தாயிற்று.

இனி அடுத்ததாக வருமான வரித்துறையின் வழியாக வரிவிலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உதவுவதற்கு அந்தத் துறையிலேயே நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதுவரையிலும் செய்த காரியங்களை நிரூபிப்பதற்காக நிழற்படங்கள் வேண்டும் என்கிறார்கள். இதுவரை எந்தப் படமும் எடுத்துக் கொள்ளாததால் இன்னும் மூன்று நான்கு காரியங்களைச் செய்துவிட்டுத்தான் அவர்களை அணுக முடியும் போலிருக்கிறது. 

நிசப்தம் தளத்தை தொடராதவர்களுக்காக இதுவரையிலும் செய்த காரியங்கள் பற்றி சிறு அறிமுகம் செய்துவிடலாம்.

1. பாலாஜி என்கிற மாணவருக்கு ஜப்பான் செல்வதற்கான வாய்ப்பு வந்திருந்தது. ரோபோடிக்ஸ் துறையில் சிறந்த மாணவர் அவர். ஆனால் அவருக்கு செலவு செய்யும் வசதி வாய்ப்பு இல்லை. அவருக்கு உதவ இயலுமா என்று முயற்சித்த போது மிகக் குறைந்த நேரத்திலேயே தேவையான பணத்தை புரட்டிவிட முடிந்தது. அந்த நம்பிக்கையில்தான் அடுத்தடுத்த காரியங்களை செய்வதற்கான தெம்பு வந்தது.

2. ஜெர்மனியில் பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருக்கும் மணிகண்டன் என்ற மாணவருக்கு சில காரணங்களால் ஸ்காலர்ஷிப் தடைபட்டுவிட்டது. படிப்பை கைவிடுவதான சூழலில் அவருக்கு கிட்டத்தட்ட மூன்றரை லட்சங்கள் வரை ஏற்பாடு செய்து தர முடிந்தது.

3. அனிதா என்கிற மாணவி பொறியியல் கட் ஆஃப்பாக 199.25 மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். அவளது அப்பா கிராமத்து சலவைத் தொழிலாளி. ஏற்கனவே இரண்டு பெண்களை பொறியியல் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது பெண்ணான அனிதாவையும் படிக்க வைக்க அவருக்கு உதவி தேவைப்பட்டது. அவருக்கான உதவி கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டது.

இவை அனைத்துமே முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக முகம் தெரியாத பல நூறு பேர் செய்த உதவிகள்.

இவை தவிர,

4. லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் என்ற சிறுகதைத் தொகுப்பின் விற்பனையில் கிடைத்த பணத்துடன் என் பங்களிப்பாக ஒரு தொகையைச் சேர்த்து அதோடு இன்னமும் பல நண்பர்கள் கொடுத்த மொத்த தொகை எழுபதாயிரம் ரூபாய்க்கு ஏழு கிராமப்புற பள்ளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி சிறு நூலகம் அமைத்து தரப்பட்டது.

5. வேமாண்டம்பாளையம் என்ற கிராமப்பள்ளி ஒன்றில் கணினிப்பிரிவு இருக்கிறது. ஆனால் ஆசிரியர் இல்லை. அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் வலுவானதாக இல்லை. அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்து தற்காலிக ஆசிரியரை தலைமையாசிரியரே நியமித்துக் கொண்டார். 

அது போக சில கிராமப்பள்ளிகளுக்கு நண்பர்களின் வாயிலாக கணினிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. யாராவது தங்களிடமிருக்கும் கணினிகள் பற்றிய தகவலை தெரிவிக்கும் போது அவை தகுதியான பள்ளிகளுக்கு செல்லும்படியாக ஒருங்கிணைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.

இதெல்லாம் ஒழுங்காகத்தானே நடந்து கொண்டிருக்கிறது. பிறகு எதற்காக அறக்கட்டளை?

இதுவரை உதவி தேவைப்படுபவர்களின் கணக்கு எண்ணைக் கொடுத்து அதில் பணத்தை அளிக்கும்படி கோருவதுதான் வழக்கமாக இருந்தது. இதில் சிறு பிரச்சினையிருக்கிறது. ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய்தான் தேவைப்படும். ஆனால் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் அளிக்கப்பட்டிருக்கும். தேவையைவிட அதிகமான பணம். ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுபவருக்கு அந்தத் தொகையை மட்டும் கொடுத்தால் போதும். உபரியாகக் கிடைக்கும் தொகையை இன்னும் இரண்டு தகுதியானவர்களுக்கு கொடுக்கலாம். தவிர, உதவியளித்தவரிடம் உதவி பெற்றுக் கொண்டவர் மீண்டும் அணுகுவதும் நடந்திருக்கிறது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் எனத் தோன்றியது.

உதவுவதற்கு நிறையப்பேர் தயாராக இருக்கிறார்கள். அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள ஒரு அறக்கட்டளை தேவையானதாக இருந்தது. ஆனால் அவசரப்பட வேண்டாம் என கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் எடுத்துக் கொண்டேன். 

நிறைய யோசிக்க வேண்டியிருந்தது.

அறக்கட்டளை தொடங்குவது பெரிய காரியமில்லை. அதை எவ்வாறு செயல்படுத்த போகிறோம் என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருந்தது. வேலை, குடும்பத்தைத் தாண்டி இதற்காக ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். உதவி கேட்பவர்கள் தகுதியானவர்கள்தானா என்பதை விசாரிப்பதற்காக கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். பணத்தை ஒழுங்குபடுத்துவது, கணக்கை பராமரிப்பது என்றெல்லாம் நேரம் போய்விடும். எல்லாவற்றையும்விட இதெல்லாம் நமக்கு ஏற்புடைய வேலைதானா என்கிற குழப்பமும் இருந்து கொண்டிருந்தது.

அறக்கட்டளை எவ்வாறு செயல்படும்?

1) விரும்புகிறவர்கள் பணத்தை வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைக்கலாம். பிறந்தநாள், திருமண நாள் என ஏதாவது நிகழ்வைக் கொண்டாடும் விதமாக அனுப்பி வைத்தாலும் சரி அல்லது உதவ வேண்டும் என நினைத்து அனுப்பி வைத்தாலும் சரி. ஏதோ ஒரு காரணம். பணத்தை அனுப்பிவிட்டு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்தால் ரசீது ஸ்கேன் செய்து அனுப்பி வைத்துவிடுகிறேன் அல்லது இந்திய முகவரியைக் கொடுத்தால் தபாலிலும் அனுப்பி வைத்துவிட முடியும்.

2) ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்கிற தகவலை நிசப்தத்தில் தெரிவித்துவிடுகிறேன். யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுவிடும். பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் மட்டும் பெயரை மறைத்துவிடலாம்.

3) குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் அந்தத் தொகைக்கு ஏற்ப ஒரு செயலைச் செய்து முடித்துவிடலாம். அது பள்ளிக்கான நூலகம் அமைப்பதாக இருக்கலாம். குழந்தைக்கான படிப்புச் செலவாக இருக்கலாம் அல்லது சுற்றுச்சூழல் சார்ந்த ஏதாவது செயல்பாடாக இருக்கலாம். இப்படி ஏதாவதொரு காரியம்.

4) ஒவ்வொரு வருடமும் ஆடிட்டர் மூலமாக கணக்கு தணிக்கை செய்யப்பட்டு அந்த விவரத்தையும் வெளியிட்டுவிடலாம்.

5) அறக்கட்டளை வேறு; என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் வேறு - இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.

இன்னமும் கூட சற்று தயக்கமாகத்தான் இருக்கிறது. பயம் என்று கூடச் சொல்லலாம். நல்ல பெயர் எடுப்பதும் அடுத்தவர்களின் நம்பிக்கையை பெறுவதும் மிகச் சிரமமான காரியம். ஆனால் அதை உடைத்து நொறுக்க ஒரேயொரு காரியம் போதும். எந்தக் காலத்திலும் தலையைத் தூக்கவே முடியாது. அந்த பயமிருந்தாலும் நம்பிக்கையாகவும் இருக்கிறேன். இந்த விஷயத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பலமானவராக இருப்போம். அப்படி என்னால் இருந்து விட முடியும் என்ற நம்பிக்கைதான்.

தயங்கிக் கொண்டேயிருந்தால் ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாது. செய்து பார்த்துவிடலாம். நாம் செய்கிற காரியம் சரியானவர்களை அடைகிறது என்கிற நம்பிக்கை வந்துவிட்டால் திருப்தி தானாகக் கிடைத்துவிடும்.  சேரும் பணத்தில் ஒரு ரூபாய் கூட வீணாகப் போய்விடாது என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

வங்கிக் கணக்கு விவரம்:
Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur 
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur

Nov 12, 2014

இவர்கள் இப்படித்தான்

இங்கெல்லாம் பத்து மாத வாடகையை வீட்டுக்கு அட்வான்ஸாக தர வேண்டும். இங்கு என்றால் பெங்களூரைச் சொல்கிறேன். சென்னையிலும் அப்படித்தானே?. ஹைதராபாத் இந்த விஷயத்தில் பரவாயில்லை. இரண்டு மாதங்களுக்கான வாடகையைக் கொடுத்தால் போதும். இந்த மூன்று ஊர்களையும் ஒப்பிட்டால் ஹைதராபாத் நல்ல ஊர். இந்த அட்வான்ஸ் விஷயத்தில் மட்டுமில்லை. பொதுவாகவே நல்ல மனிதர்கள். பெங்களூர் ஒரு காலத்தில் நன்றாகத்தான் இருந்திருக்கும் போலிருக்கிறது. இப்பொழுது நாசக்கேடாகிவிட்டது. ரெட்டிகள் ஒரு பக்கம் அழிச்சாட்டியம் செய்தால் நம்மவர்களும் சளைத்தவர்களில்லை. அதேபோல கன்னடக்காரர்களையும் லேசில் விட்டுவிட முடியாது. ரெட்டிகளுக்கு தாங்கள் காசுக்காரர்கள் என்ற பந்தா என்றால் கன்னடக்காரர்களுக்கு ‘ இது எங்க ஊர்’ என்கிற கெத்து உண்டு. ‘இவனுக பிழைக்க வந்தவனுகதானே?’ என்ற இளக்காரமும் உண்டு. தமிழர்களைப் பற்றித்தான் தெரியுமே. ஈகோ. முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். ஆனால் பொதுவாக பார்த்தால் தெலுங்குக்காரர்களையும், தமிழர்களையும் விட கன்னடக்காரர்கள் ஒரு படி உசத்திதான். இப்படி எல்லாவற்றையும் பொதுப்படையாக  சொல்லிக் கொண்டே போக முடியாதுதான். ஆனால் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

லே-அவுட்டில் செடிகளை நட்டிருந்தார்கள். ஒரு ஆட்டுக்காரர் வந்து கொக்கியில் வளைத்து தனது ஆட்டுக்குட்டிகளுக்கு தின்னக் கொடுத்தார். ‘என்னங்க இப்படி செய்யறீங்க?’ என்று ஒருவர் கேட்டதுதான் மிச்சம். வாட்டி எடுத்துவிட்டார். ‘நீ எங்க வேணும்ன்னாலும் சொல்லிக்க...நான் அப்படித்தான் கொடுப்பேன்’ என்று கட்டுக்கு நிற்கிறார். எங்கள் ஊரில் இந்த உரிமை கூட இல்லையா? என்கிற ரீதியில் கத்தத் துவங்க கேட்டவர் அடங்கிக் கொண்டார். அடுத்த முறை குடியிருப்புவாசிகளின் கூட்டத்தில் இந்தச் சண்டையைப் பற்றி பேச்சை எடுத்தார். உள்ளூர்வாசிகளிடம் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று அமுக்கிவிட்டார்கள். அவ்வளவுதான். முக்கால்வாசி செடிகள் மக்கி மண்ணோடு போய்விட்டன.

ஆட்டுக்காரன் மாட்டுக்காரன் என்றுதான் இல்லை. எல்லோருமே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு ஐடிக்காரனை எதிர்வீட்டில் குடி வைத்திருந்தார்கள். வீட்டின் உரிமையாளர் தமிழ்நாட்டுக்காரர். ஓனருக்கு ஒற்றை மாட்டு வண்டி குடித்தனம். அவர் மட்டும்தான் சம்பாதிக்கிறார். நகையெல்லாம் விற்று கடனை வாங்கி வீட்டை கட்டி முடித்திருக்கிறார். வாடகை பதினான்காயிரம் ரூபாய். சம்பளத்தை கடனுக்கு கொடுத்துவிட்டு இந்த பதினான்காயிரத்தில் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. உரிமையாளருக்கு இரண்டு குழந்தைகள். ஐந்தாவது வரைக்கும் சுமாரான பள்ளியில் படிக்கட்டும் என்று விட்டிருக்கிறார். சமாளிக்க வேண்டுமல்லவா? கஷ்ட ஜீவனம்தான்.

குடி வந்தவர் கன்னடக்காரர். பெங்களூரின் வேறொரு ஏரியாவில் சொந்த வீடு இருக்கிறது. அங்கு பக்கத்திலேயே சரக்குக் கடையைத் திறந்துவிட்டார்கள். குடி வந்தவருக்கு அவருக்கு வயது வந்த பெண்கள் மூன்று பேர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் கணக்கு தவறாகிவிட்டது. அந்த மூன்று பேரில் ஒருவர் மற்ற இரண்டு பெண்களுக்கு அம்மாவாம். ஆக மூன்று இளம் பெண்கள் இருக்கிறார்கள் என்பதால் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு இங்கே வந்துவிட்டார்கள். அவர்கள் குடிவந்ததிலிருந்தே எனக்கு பக்தி அதிகமாகிவிட்டது. இனி எதிர் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் வயது பெண்கள் குடி வரக் கூடாது என்று வெகுநாட்களாக வேண்டிக் கொண்டிருக்கிறேன். ஜீன்ஸூம் டீ சர்ட்டும் அணிந்திருக்கிறார்களே என்று செய்தித்தாள் படிக்கிற பாவ்லாவுடன் கூட வெளியே வர முடிவதில்லை. மனசாட்சியே இல்லாமல் அங்கிள் என்று அழைத்துவிடுகிறார்கள். ஆண்டவனும் கருணையே இல்லாதவன் தான். இருக்கிற முடியையெல்லாம் பெருமொத்தமாக பறித்துக் கொண்டிருக்கிறான் படுபாவிப்பயல்.

அது தொலையட்டும்.

குடி வந்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. காலி செய்வதாகச் சொல்லிவிட்டார்கள். வீட்டு உரிமையாளரை விட எனக்கு வருத்தம்தான். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. என்னவோ காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் புருடா காரணங்கள். எங்கள் பகுதியில் யாருமே வாடகைக்கு வருவதில்லை. ஆனாலும் தயங்காமல் புதுப்புது வீடுகளாகக் கட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். அதுவும் எப்படி? மூன்றரை செண்ட் இடத்தில் எட்டு வீடுகள். கிட்டத்தட்ட அத்தனை வீடுகளிலும் ‘டு லெட்’ பலகை தொங்குகிறது. பத்தாயிரம் ரூபாய் வாடகை சொல்லிக் கொண்டிருந்த வீடுகள் இப்பொழுது எட்டாயிரத்துக்கே கிடைக்கும் போலிருக்கிறது. இருந்தாலும் யாரும் சீண்டுவார் இல்லை. இத்தனை வீடுகள் இருப்பதால் இந்தக் கன்னடக்காரர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு இன்னொரு வீட்டை பிடித்துவிட்டார்கள். புது வீட்டின் உரிமையாளரும் கன்னடக்காரர். கூட்டு சேர்ந்து கொண்டார்கள்.

இனி எதிர் வீட்டுக்காரருக்கு பெரும் சிரமம் ஆகிவிடும். இவர்கள் கொடுக்கும் வாடகையில்தான் வீட்டுச் செலவுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுதெல்லாம் யாருமே வீடு கேட்டு வருவதில்லை. என்ன செய்வது? பெரும் குழப்பம். இப்படியெல்லாம் பாதியில் போனால் இரண்டு மாத வாடகையாவது பிடித்துக் கொண்டுதான் தருவார்கள். இவர் பயந்தாங்கொள்ளி. ‘ஒரு மாத வாடகையை பிடித்துக் கொள்கிறேன்...பெய்ண்ட் செய்யணும்’ என்று கேட்டிருக்கிறார். அவ்வளவுதான். அந்த கல்லூரி சிட்டுகளின் அம்மா குதித்துவிட்டார். அவர் எகிறிக் கொண்டிருக்கிறார் என்று அம்மா சொன்ன போது நம்பவேயில்லை. அது எகிறிக் குதிக்கும் முகமேயில்லை. அவசர அவசரமாக ஓடிப் பார்க்கிறேன். அது சாதாரண எகிறல் இல்லை. கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருந்தது. ‘பத்து பைசாவை எடுத்தா கூட நடக்கிறதே வேற’ என்று சொல்லிவிட்டு தான் குடியிருந்த வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு சாவியை எடுத்து கையில் வைத்துக் கொண்டார். சினிமாவாக இருந்தால் இந்த ஸீனில் சாவியை இடுப்பில்தான் செருகியிருக்க வேண்டும். ஆனால் இது ரியல். சுடிதார் அணிந்திருந்தார். இடுப்பில் சொருகுவது சிரமம் என்பதால் கைகளில் சுழன்று கொண்டிருந்தது. 

‘அக்ரிமெண்ட் இருக்குல்ல?’ என்று எதிர்வீட்டுக்காரரிடம் யாரோ ஒருவர் கேட்டார். கேட்டவர் சிக்கிக் கொண்டார். 

‘கேஸ் போடுவீங்களா? போடுங்க...அதுவரைக்கும் சாவி என்கிட்டதான் இருக்கும்’ என்கிறார். 

‘கவுன்சிலர்கிட்ட போறீங்களா? எம்.எல்.ஏகிட்ட போறீங்களா?...போங்க நான் மினிஸ்டர்கிட்ட போறேன்’ என்கிறார். இந்த பதினான்காயிரத்துக்கெல்லாம் அனந்தகுமார் பஞ்சாயத்துக்கு வருவாரா என்று தெரியவில்லை. அவர்தான் எங்கள் தொகுதி எம்.பி. நம் அஞ்சாநெஞ்சனின் துறையை இப்பொழுது அவர்தான் வைத்திருக்கிறார். வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்கிறார் என்று அர்த்தம்.

ஆயிரம் தலைவாங்கிய அந்த அபூர்வ சிந்தாமணி ‘இது கன்னட தேசம்தானே?’ என்று துணைக்கேள்வி வேறு கேட்கிறார். இந்தக் கேள்வி போதாதா? 

எதிர்வீட்டு உரிமையாளர் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்துக் கொண்டார். ஓசூரிலிருந்து இருபது கிலோமீட்டர்தான். இருந்தாலும் வேறு மாநிலம் வேறு மாநிலம்தானே? யாரும் எதுவுமே பேசவில்லை. அவர் கேட்டது போலவே பத்து பைசா குறைவில்லாமல் எடுத்து வந்து கொடுத்துவிட்டார். 

எதிர் வீட்டில் இரண்டு மூன்று வாரங்களாக ‘டு லெட்’ பலகை கண்ணில்படுகிறது. காகம் குருவி கூட எட்டிப்பார்ப்பதில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரோ வந்து வீடு கேட்டார்களாம். கொடுக்க முடியாது என்று நாசூக்காகச் சொல்லிவிட்டு எங்களிடம் ‘இனிமேல் கன்னடக்காரர்களுக்கு தரவே மாட்டேன்’ என்று சொல்கிறார். வாடகை வரவில்லையென்றால் வெகு சிரமம்தான். ஆனாலும் அதற்காக அவமானப்பட முடியாதல்லவா? முதல் பத்தியில் சொன்னது போல இப்படி பெருமொத்தமாக எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே போக முடியாதுதான். ஆனால் இப்படியும் இருக்கிறார்கள்.

நேற்று அந்த அம்மாவையும் மகளையும் பார்த்தேன். எந்தச் சங்கடமும் இல்லாமல் அதே சாலையில் ஜர்ர்ர்ரென்று வண்டியில் போகிறார்கள். ஆமாம் ஜர்ர்ர்ரென்றுதான்.

Nov 11, 2014

போடா Beggar

ரிலையன்ஸூக்கும் எனக்கும் வெகுநாள் கொடுக்கல் வாங்கல் பந்தம் இருக்கிறது. அவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டும்.  இழுத்தடித்து வருகிறேன். அவர்களிடம் எனது வீட்டு முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் என எல்லாமும் இருக்கிறது. அவர்களும் சளைக்காமல் கேட்கிறார்கள். நானும் டபாய்த்துக் கொண்டேயிருக்கிறேன். இரண்டாயிரம் ரூபாய்தான். தந்துவிடலாம். ஆனால் ஒரு முறை அவர்களின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்குச் சென்றிருந்த போது ஒரு பெண் கடித்துவிட்டாள். இது அந்தக் கடி இல்லை. வேறு கடி. ‘டேட்டா கார்டை திருப்பியெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது. இது ஒரு பேஸிக் விதி. இது கூடத் தெரியாமல் எதுக்கு வாங்குனீங்க?’ என்ற ரீதியில் எகிறினாள். ‘இந்தப் பொடிசுக்கெல்லாம் வந்த மவுசை பாரு’ என்று அவளது மேலதிகாரியிடம் பேசினேன். பெரிய பலன் இல்லை. ‘சரி எப்படி இரண்டாயிரத்தை வாங்குவீங்கன்னு பார்த்துடுறேன்’ என்று தெனாவெட்டாக பேசிவிட்டு வந்துவிட்டேன். அவர்களிடம்தான் அத்தனை விவரங்களும் இருக்கின்றதல்லவா? இரண்டு நாட்களில் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்கள். ‘வக்கீல் நோட்டீஸ் அனுப்புவோம்’ என்று அதில் மிரட்டியிருந்தார்கள்.

வக்கீல் நோட்டீஸூக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அனுப்புவேன் என்று யாராவது மிரட்டுவார்கள். எப்படியும் ரவுடி ஆகிவிடலாம் என்று வாயைத் திறந்தபடி பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு மண்ணும் வராது. அப்படியொரு ராசி. இப்படியே மாதாமாதம் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் ஒரு முறை ஃபோனில் அழைத்தார்கள். காரணத்தைச் சொன்னேன். எங்கள் மேனேஜரை பேசச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு துண்டித்தார். அதன் பிறகு அழைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பணம் கட்டாதவர்கள் இத்தனை பேரிடம் விசாரித்தேன் என்று கணக்கு காட்ட வேண்டும் போலிருக்கிறது. அழைப்பார்கள். சொல்லும் காரணத்தை பதிவு செய்து கொள்வார்கள். அதன் பிறகு எந்தச் சத்தமும் இருக்காது. மீண்டும் வெகு நாள் கழித்து அதே ராகம். அதே தாளம். என்னிடமிருந்து அதே பல்லவி.

நேற்று வந்த அழைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பிரியங்கா என்ற பெண் அழைத்திருந்தார். ‘நான் சிட்டி சிவில் கோர்ட்டிலிருந்து பேசுகிறேன்’ என்றார். கொஞ்சம் பதறிவிட்டேன். அப்புறம் பேச பேசத் தெரிந்துவிட்டது- சும்மா லுலுலாயிக்கு என்று. எப்படியெல்லாம் கேட்க முடியுமோ அப்படியெல்லாம் கேட்டுப் பார்த்தார். ‘அவர்கள் ஏன் அப்படி எரிஞ்சு விழுந்தார்கள்’ என்று கேட்டதற்கு 'Past is past...இப்போ கட்ட முடியுமா முடியாதா?’ என்றார். முடியாது என்று சொல்லிவிட்டேன்.  ‘அதெல்லாம் முடியாது இன்னைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு கூப்பிடுவேன். ரெசிப்ட் நெம்பர் கொடுக்கணும்..இல்லைன்னா உங்க ஹெச்.ஆர் கிட்ட சொல்லிடுவேன்’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. 

‘நான் இப்போதான் எட்டாவது படிக்கிறேன். எங்க டீச்சர் கிட்ட வந்து சொல்லுங்க’ என்றேன். சொல்லிவிட்டு ‘புதன்கிழமை கட்டிவிடுகிறேன்’ என்று சொன்னேன்.பயன்படுத்தியதற்கு காசு கொடுக்க வேண்டும் அல்லவா? அதனால் உண்மையாகவே கட்டிவிடுவதாகத்தான் முடிவு செய்திருந்தேன். இந்த விவகாரம் இழுத்துக் கொண்டேயிருக்கிறது.

ஆனால் அவளுக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லை. நாம்தான் எல்லாவற்றையும் எண்களாகவே பார்க்கிறோமே. ‘உனக்கு என்ன வயசு?’ ‘எவ்வளவு சம்பளம்?’ ‘எவ்வளவு பவுன் போடுறாங்க?’ ‘எவ்வளவு வசூல் ஆச்சு?’ ‘எவ்வளவு சார் லோன் வேணும்’ என்று ஒரு நாளில் எவ்வளவு முறை எண்களைப் பயன்படுத்துகிறோம்? எண்கள் மட்டும் இல்லையென்றால் நமக்கு கைகள் உடைந்த மாதிரி ஆகிவிடும். 

‘எவ்வளவு நாள்தான் இப்படியே சொல்லிட்டு இருப்ப?’ என்றார். உண்மையிலேயே என்னிடம் பணம் இல்லை. இன்றைய தேதிக்கு என் கணக்கில் வெறும் இரண்டாயிரத்து தொள்ளாயிரம்தான் இருக்கிறது. அதில் இரண்டாயிரத்தைக் கொடுத்துவிட்டால் இன்னும் இருபது நாட்களுக்கு பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்கு கூட சிரமமாகிவிடும். ஆறாம் தேதி வாக்கில் கையில் முப்பத்து மூன்றாயிரம் இருந்தது. ஆனால் அதற்கு ஒரு தேவை வந்துவிட்டது. வேறொருவருக்கு கை மாற்றிவிட்டேன். பணத்தை வாங்கியவர் எங்கள் ஏரியாவில் பழைய பேப்பர் வாங்க வருவார். அவரது வீடும் எங்கள் ஏரியாவில்தான் இருக்கிறது. காலி இடத்தில் டெண்ட் அடித்து குடியிருக்கிறார்கள். அவரது பெண் குழந்தைக்கு கிட்னியில் பிரச்சினை. ஆரம்பத்தில் ஏதோ ஒரு மருத்துவமனையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விவகாரம் தெரிந்து ஆனந்த் என்ற மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். ஆனந்த் நல்ல நண்பர். தமிழ் மருத்துவர்தான். நிசப்தம் வழியாகத்தான் அறிமுகம். சோதனைகளை எல்லாம் தன் செலவிலேயே செய்துவிட்டு ‘அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது...எனக்கு எந்த பணமும் வேண்டாம்...ஆனால் மருத்துவமனை செலவுக்கு மட்டும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்’ என்றார். அவர் சம்பளத்துக்கு வேலை செய்கிறார். அதனால் மருத்துவமனைக்கான தொகையைக் கொடுத்துதான் தீர வேண்டும். கர்நாடக அரசின் மருத்துவ உதவித்திட்டத்தில் ஒரு தொகை கிடைத்தது. ஆனால் அப்பொழுதும் கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாய் வரைக்கும் போதாமல் இருந்தது. அதற்காகத்தான் முப்பதாயிரத்தை அந்த பேப்பர்காரருக்கு கொடுத்துவிட்டேன். அவர் ஊரிலிருந்து முப்பதாயிரத்தை புரட்டிக் கொண்டு வந்திருந்தார். அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. ‘இனி பிரச்சினை இருக்காது’  என்று நேற்றிரவு ஆனந்த் அழைத்துச் சொன்னார். 

பேப்பர்காரருக்கு பணம் கொடுத்தது இதுவரை எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. தெரிந்தால் கோபப்படக் கூடும். இதை விளம்பரத்திற்காகச் சொல்கிறேன் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். வெளிப்படையாகச் சொல்லிவிடும் போது ஒரு திருப்தி கிடைக்கிறது அல்லவா? சொல்லிவிட்டேன். 

இதுதான் உண்மை நிலவரம். அதனால்தான் புதன்கிழமை வரைக்கும் இழுத்தேன். தம்பியிடம் வாங்கிக் கட்டிவிடலாம் என்று யோசித்திருந்தேன். அந்தப் பெண்ணிடம் ‘பணம் இல்லை’ என்று சொன்னால் நம்புவாளா? பண விஷயத்தில் இந்த உலகம் யாரையுமே நம்புவதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பெங்களூரில் ஒரு கொலை நடந்திருக்கிறது. பிரஜித் என்கிற மலையாளி பெங்களூரில் மென்பொருளாளர். கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அவ்வப்போது நண்பர்களுக்கு கைமாற்றாக பணம் கொடுப்பதும் வாடிக்கை. வட்டி எல்லாம் வாங்குவதில்லை. தேவைப்படும் போது கொடுத்துவிட்டு பிறகு திரும்ப வாங்கிக் கொள்வாராம். அப்படித்தான் மூன்று நண்பர்கள் தலா ஒரு லட்சம் வாங்கிக் கொண்டு தராமல் ஏய்த்திருக்கிறார்கள். இது தொடர்பாக அவ்வப்போது தகராறு கூட வந்திருக்கும் போலிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக ‘ஹூடி க்ராஸ் வந்துவிடு...தருகிறோம்’ என்று அழைத்திருக்கிறார்கள். நம்பிச் சென்ற பிரஜித்தை அடித்துக் கொன்றுவிட்டார்கள். ஒரே ஊர்க்காரர்கள். வெகு நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தவர்கள். காரியத்தை முடித்துவிட்டார்கள். 

பணம் என்றால் நண்பர்கள், சொந்தக்காரர்களே நம்புவதில்லை. அந்த ரிலையன்ஸ் பெண் எப்படி நம்புவாள்? ‘போடா பெக்கர்’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாள். ஒரு வினாடிதான். குப்பென்று வியர்த்துவிட்டது.