இன்றைக்கு பக்ரீத் விடுமுறை. பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வரைக்கும் சென்று வரலாம் என்று தோன்றியது. சென்ற முறை இருந்த பரபரப்பு சுத்தமாக வற்றிவிட்டது. அதிமுக புள்ளிகள் இருக்கிறார்கள். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர்களைப் பார்க்கச் செல்லும் போது இருக்கும் தோரணையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது மரத்தடியில் அமர்ந்து செய்தித்தாள்களையோ வார இதழ்களையோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். புதிதாக சில பழக்கடைகள் வந்திருக்கின்றன. சைக்கிளில் வைத்து ஒருவர் டீ விற்கிறார். ஒரு பையன் பொறிகடலை விற்றுக் கொண்டிருக்கிறான்.
யாரோ ஒரு மனிதர் ‘அம்மாவை விடுதலை செய்யக் கோரி’ ஸ்ரீரங்கத்திலிருந்து கால்களால் மகிழ்வுந்தை ஓட்டி வந்திருந்தார். சில குத்துச்சண்டை வீரர்கள் அமைதி நடைப்பயணம் என்ற பதாகையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். வழக்கம் போல சில நிருபர்கள் நின்றிருந்தார்கள். இவர்கள் யாரையுமே முதல் தடுப்பைத் தாண்ட அனுமதிக்கவில்லை. இந்த தடுப்பைத் தாண்டிச் சென்றால்தான் சிறையின் நுழைவாயிலே கண்ணுக்குத் தெரியும்.
ஒரு நிருபரிடம் ‘நீங்க எந்த மேகஸின்?’ என்று கேட்டதற்கு ‘குமுதம்’ என்றார்.
‘கார்டூனிஸ்ட் பாலாவைத் தெரியுமா?’ என்றேன். அவ்வளவாகத் தெரியாது என்ற பதில் வந்தது. உடான்ஸ் அடிக்கிறார் என்று கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. சிறை வளாகத்தைச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் அநியாயத்துக்கு பம்முகிறார்கள். அது கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி தமிழ் நிருபர்களாக இருந்தாலும் சரி- பேசவே தயங்குகிறார்கள்.
சென்ற முறை சென்றிருந்தபோது எந்த ஆவணமும் எடுக்காமல் சென்றிருந்தேன். இந்த முறை கையில் பாஸ்போர்ட் இருந்தது. காவலர்கள் கேட்டால் பாஸ்போர்ட் சமாச்சாரமாக சிறை வளாகத்திற்குள் இருக்கும் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும். முதல் தடுப்பைத் தாண்டிவிட்டால் போதும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்கான தேவையே வரவில்லை. எனது இருசக்கர வாகனம் கர்நாடக பதிவு எண். எதுவுமே கேட்காமல் முதல் தடுப்பிற்குள் அனுமதித்துவிட்டார்கள். அநேகமாக உள்ளேயிருக்கும் காவலர் குடியிருப்பைச் சார்ந்தவனாக இருக்கும் என்று நம்பிவிட்டார்கள் போலிருக்கிறது.
சென்ற முறை சென்றிருந்தபோது எந்த ஆவணமும் எடுக்காமல் சென்றிருந்தேன். இந்த முறை கையில் பாஸ்போர்ட் இருந்தது. காவலர்கள் கேட்டால் பாஸ்போர்ட் சமாச்சாரமாக சிறை வளாகத்திற்குள் இருக்கும் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும். முதல் தடுப்பைத் தாண்டிவிட்டால் போதும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்கான தேவையே வரவில்லை. எனது இருசக்கர வாகனம் கர்நாடக பதிவு எண். எதுவுமே கேட்காமல் முதல் தடுப்பிற்குள் அனுமதித்துவிட்டார்கள். அநேகமாக உள்ளேயிருக்கும் காவலர் குடியிருப்பைச் சார்ந்தவனாக இருக்கும் என்று நம்பிவிட்டார்கள் போலிருக்கிறது.
உள்ளே சில வேட்டியணிந்த மனிதர்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுக்கவே தயக்கமாக இருந்தது. அவர்களுக்கும் பதில் சொல்வதற்கு சங்கடம்தான். ‘இவன் யார்? நம்மிடம் எதுக்கு பேசுகிறான்’ என்று யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் அவர்களின் ஓட்டுநர்கள் இருக்கிறார்கள் அல்லவா? தங்கம். அவர்களுக்கு நேரம் போவதற்கு யாராவது சிக்கினால் போதும். எவ்வளவு வேண்டுமானாலும் பேசத் தயாராக இருக்கிறார்கள்.
ஜெயலலிதா யாரையுமே பார்க்கவில்லை என்றுதான் சொல்கிறார்கள். ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஒன்றாக இருப்பதாக ஒரு காவலர் சொன்னார். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. தொலைக்காட்சி எதுவும் அந்த அறையில் இல்லை என்றும் சொன்னார். ஜெயா டிவிக்கு இந்தச் செய்தி தெரியுமா என்று தெரியவில்லை. தெரிந்தால் சற்று எமோஷனலைக் குறைப்பார்கள் என்று நினைக்கிறேன். இருபத்து நான்கு மணிநேரமும் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறை வளாகத்தில்தான் ஆட்கள் இல்லையே தவிர எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கீஸ், ஈகா போன்ற லாட்ஜ்களின் அறைகள் பெரும்பாலும் கரைவேட்டிக்காரர்களின் வசம்தான் இருக்கிறது. திரும்பி வரும் போது ஈகாவில் விசாரித்தேன். இன்றும் நாளையும் அறை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாளை ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது என்பதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடும். ஆனால் இன்று வந்திருந்த பெரும்பாலானவர்கள் ‘இது கர்நாடக அரசின் சதி’ என்றே சொல்கிறார்கள். இவர்கள் மக்களிடம்தான் இந்தக் கருத்தைச் சொல்வார்கள் என்று நினைத்தால் அது தவறு. இவர்களே அப்படித்தான் நம்புகிறார்கள். ‘ட்யூன் ஆகிவிட்டார்கள்’. சரி என்று தலையாட்டிக் கொண்டேன்.
முதல் தடுப்பைத் தாண்டிச் சென்றுவிட்டால் பெரிய கெடுபிடிகள் இல்லை. கைதிகளை அழைத்து வரும் வாகனங்கள் நிற்கும் நுழைவாயிலின் அருகில் இருந்த திண்டில்தான் அமர்ந்திருந்தேன். தலையைக் குனிந்துதான் சிறைச்சாலைக்குள் செல்ல வேண்டும். சற்றே உயரம் குறைவான கதவு அது. அந்தக் கதவில் தலையைக் குனிந்துதான் ஜெயலலிதா சென்றிருக்க வேண்டும் என்றும் அவருக்கும் எனக்குமிடையில் ஒற்றைச் சுவர்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போது ஒரு ஜாக்குவார் காரும், பி.எம்.டபிள்யூவும் நேரடியாக கதவுக்கு முன்பாகவே வந்து நின்றன. ஒரு மீசை வைத்த இளைஞனும் இன்னொரு இளம்பெண்ணும் உள்ளே சென்றார்கள். அவர்கள் யாரென்று தெரியவில்லை. டிஜிபி க்ரேட் அதிகாரியிடமிருந்து கடிதம் வாங்கி வந்திருந்தார்களாம்.
விசாரித்த போது அந்த வளாகத்தில் இருந்த எல்லோருமே அவர்களைத் தெரியாது என்றுதான் சொன்னார்கள். ஆனால் அது பொய். அந்த மீசைக்காரர் வெளியே வந்த போது இவர்கள் பவ்யமாக வணக்கம் வைத்தார்கள். ஏதோ பெரிய இடம் போலிருந்தது. அவர்களைத் தவிர இன்று யாருமே தலையைக் குனிய வேண்டிய அந்தக் கதவைத் தாண்டியிருக்கவில்லை. உள்ளே சென்றவர்கள் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாக உள்ளேயேதான் இருந்தார்கள். நிச்சயமாக பேசியிருப்பார்கள்.
மாலை ஐந்தே முக்கால்வாக்கில் வெளியே வந்துவிட்டேன். ‘வெளியே வரப்போகிற ஜாக்குவாரில் இருப்பவர்கள் சிறைக்குள் சென்றார்கள்’என்று அந்த நிருபரிடம் சொன்னேன். கார் வந்த போது வளைத்து வளைத்து படங்களாக எடுத்துக் கொண்டார்கள். அந்த மகிழ்வுந்தின் ஓட்டுநர் ஏதோ திட்டினார். திரும்ப வந்து ‘நீங்க இண்டெலிஜெண்ஸ் என்று நினைத்துக் கொண்டேன். அதனால்தான் குமுதம் என்று பொய் சொன்னேன்’ என்றார். தனது விசிட்டிங் கார்டு ஒன்றைக் கொடுத்துவிட்டு ‘அவங்க பேர் தீபா...கார்டனுக்கு ரொம்ப க்ளோஸ்’ என்றார்.
எதற்கு என்னிடம் சொல்கிறார் என்று யோசிப்பதற்குள் ‘உள்ளே என்ன பார்த்தீங்க?’ என்றார்.
விலாவாரியாகச் சொன்னேன். ‘இனி நாங்க பில்ட் அப் செய்துக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு ‘வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்’ என்றார்.
‘ச்சே ச்சே அதெல்லாம் சொல்லமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு வந்து இதனை போஸ்ட் செய்கிறேன்.