Oct 14, 2014

எதையாவது விட்டு வைக்கிறோமா?

‘ரெண்டு பேர் உரையாடுற மாதிரிதானே இருக்குது? அதை எப்படி கவிதைன்னு சொல்ல முடியும்?’ இப்படி ஒரு நண்பர் கேட்டார். கவிதையே வாசிக்கமாட்டேன் என்று சொல்லியபடியே இரண்டு பேர் இந்தக் கவிதையைப் பற்றி பேசிவிட்டார்கள். சந்தோஷமாக இருந்தது. இப்படியே தினமும் ஒருவரையாவது குழிக்குள் தள்ளிவிட முடியும் போலிருக்கிறது. இரண்டு லட்சியம். ஒன்று நிச்சயம். 

அவர் குறிப்பிட்டது முகுந்த் நாகராஜனின் கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன் பற்றிய கவிதையை. அந்தக் கவிதை உரையாடல்தான். பாசாங்கு இல்லாத, தனது அறிவை வெளிப்படுத்தும்படியான தொனியில்லாத சாதாரணமான உரையாடல். ஆனால் அதை எல்லாவிதத்திலும் கவிதை என்று ஏற்றுக் கொள்ள முடியும். 

எப்படி?

ஊர் என்றால் அது வெறும் கல்லும் மண்ணும் மட்டுமில்லை அல்லவா? ஆறு, ஓடை, குளம், குட்டை தாண்டி எவ்வளவோ இருக்கின்றன. கிசுகிசுக்கள், சண்டைகள், கொண்டாட்டங்களையெல்லாம் தாண்டி என்னவோ இருக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஆழமான கதை உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நிறமிருக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசனை இருக்கிறது. இதையெல்லாம் விட ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆன்மா உண்டு. 

எவ்வளவுதான் காய்ந்து கிடந்தாலும் ஏன் நமக்கு சொந்த ஊரை மிகப் பிடித்துவிடுகிறது? ஏன் எப்பொழுதுமே ஒரு ஊர் ஸ்பெஷலாக இருக்கிறது? ஆறு மாதம்தான் வாழ்ந்திருப்போம் ஆனால் அந்த ஊரை மறக்கவே முடியாது. ஏன்? இந்தக் கேள்விகளுக்கு துல்லியமான பதிலைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிடிக்கிறது. அவ்வளவுதான். 

இப்படி காரணமேயில்லாமல் ஒரு ஊரைப் பிடித்துப் போவதற்கு என்ன காரணமாக இருக்கும்? ரயிலிலிலும் பேருந்திலும் பயணிக்கிறோம். நூற்றுக்கணக்கான ஊர்களைத் தாண்டித் தாண்டிச் செல்கிறோம். ஆனால் எத்தனை ஊர்கள் நம்மை கவனிக்கச் செய்கின்றன? ஒவ்வொரு ஊருக்குமே ஒரு வரலாறு இருக்கிறதுதான். கிட்டத்தட்ட அத்தனை ஊர்களுமே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக லட்சக்கணக்கான மனிதர்களைச் சந்தித்து வந்தவைதான். ஆனால் அவையெல்லாம் நம்மை சிலிர்க்கச் செய்வதில்லை. மாநகரங்களும், வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊர்களும் உருவாக்கவியலாத சிலிர்ப்பை நமது கிராமத்தால் உண்டாக்கிவிட முடியும். எப்படி? எந்த ஊரின் ஆன்மாவோடு நாம் பிணைந்திருக்கிறோமோ அந்த ஊர் நம்மை சிலிர்க்கச் செய்கிறது. அந்த ஊர் நம்மை மகிழ்வடையச் செய்கிறது அல்லது நெகிழ்வடையச் செய்கிறது. 

சரி..முகுந்த்தின் கவிதைக்கும் இந்த ஆன்மா விவகாரத்திற்கும் என்ன சம்பந்தம்? 

இந்தக் கவிதையை வாசித்துக் கொண்டிருந்த போது இதுதான் தோன்றியது. அதே பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்தில்தான் முதன்முதலாக புது மனைவியோடு வந்து இறங்கினேன். அங்குதான் ஒன்றரை வருடங்கள் குடியிருந்தோம். அப்பொழுதெல்லாம் யோசிக்காத கே.ஆர்.புரத்தைப் பற்றி நேற்று யோசித்துக் கொண்டிருந்தேன். கே.ஆர்.புரம் என்றில்லை கே.ஆர்.புரத்துக்கு பதிலாக நமக்குத் தெரிந்த வேறு எந்த ஊரின் பெயரையும் அந்தக் கவிதையில் இட்டும் வாசித்துப் பார்க்க முடியும். இப்படி ஏதோ ஒரு ஊரின் நினைவுகளை எந்தப் பிசிறுமில்லாமல் கிளறிவிட்டுப் போகிறது என்பதாலேயே அந்தக் கவிதை பிடித்தமானதாக இருந்தது.

இதுவரை போரடிக்கவில்லை என்றால் இன்னும் ஒரேயொரு விஷயத்தைச் சேர்த்துக் கொள்கிறேன்.

மிளிர்கல் நாவலில் கண்ணகி கோவலன் நடந்த பாதையிலேயே பயணிக்க வேண்டும் என்று டெல்லியிலிருந்து கிளம்பி வரும் முல்லை பூம்புகாரில் தனது நண்பனோடு சுற்றுவாள். அவள் எதிர்பார்த்து வந்த எதுவுமே பூம்புகாரில் இருக்காது. கண்ணகியின் வீடும், நாளங்காடியும், படகுத்துறையும் என அவள் எதிர்பார்த்த எதுவுமே இருக்காது. சலித்துப் போய் இனி திரும்பிவிடலாம் என்று முடிவு செய்வாள். அன்றைய தினம் அவளது கனவில் ‘நீ பார்க்க வந்தது வெறும் ஊரைத்தானா? அந்த ஊருக்கான ஆன்மாவை இல்லையா?’ என்று யாரோ கேட்பார்கள். துள்ளி எழுவாள். அதிலிருந்து நாவல் தொடங்கும்.

முகுந்த்தின் கவிதையை வாசித்துவிட்டு நாவலின் இந்தப் பகுதியையும் நினைத்துக் கொண்டேன். ஆழ்ந்து வாசிக்கப்படும் ஒரு நல்ல கவிதையால் இன்னொரு படைப்பு குறித்தான யோசனையையும் கிளறிவிட முடியும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

இனி சங்கர ராம சுப்ரமணியனின் கவிதை ஒன்று-

மரத்தின் மெல்லிய
உச்சிக்கிளையில்
தியானத்தில்
உறைந்திருக்கும்
கொக்கின் சமநிலை குறித்து
சந்தேகங்கள் எழுப்பினோம்.
பறவையின் உடல் தகவமைப்பு
மற்றும் 
அவற்றின் எடைபகிர்வை
அவர்
கையை நீட்டி காற்றில் விளக்கியபோது
மரத்தின் உச்சிக்கிளைகள்
சடசடக்க
கால்கள் தடுமாறி
கொக்கோடு
மரமும் 
நடுங்குவதைப் பார்த்தபடி
நின்றோம்.

ஒரு கொக்கு, அதுபாட்டுக்கு சிவனே என்று அமர்ந்திருக்கிறது. இந்த சித்தோட்டு மைனர் தனக்குத் தெரிந்த அறிவையெல்லாம் காட்டுவதற்காக கையை வடக்கும் தெற்குமாக ஆட்டி அசைக்கிறார். கொக்கு பதறாதா? விடுங்கடா சாமிகளா என்று பறந்துவிடுகிறது. போகிற போக்கில் மரத்தையும் சேர்த்து அசைத்துவிட்டுப் போகிறது.

இதுதானே நமது இயல்பு? எதையாவது சமநிலையில் விட்டு வைக்கிறோமா? எதுவுமே அமைதியாக இருந்துவிடக் கூடாது. தஞ்சாவூர் ஜில்லா அமைதியாக இருக்கிறதா? மீத்தேன் வாயு இருக்கிறது என்போம். கிருஷ்ணகிரி அமைதியாக இருக்கிறதா? கிரானைட் இருக்கிறதென மலைகளுக்கெல்லாம் வெடி வைப்போம். எதையும் விட்டு வைப்பதில்லை. நமது அசுரப்பசிக்கு எதை வேண்டுமானாலும் அசைத்துப் பார்க்கிறோம். எங்கு வேண்டுமானாலும் சலனம் உண்டாக்குகிறோம். எத்தனை நாளைக்குத்தான் இந்த வானமும் பூமியும் கொக்குவைப் போல தியானத்தில் இருக்கும்? மொத்த மரமும் நடுங்கப் போகிறது.

இப்படியும் இந்தக் கவிதையின் தளத்தை மாற்றலாம்தான்.

இல்லை இல்லை. இவ்வளவு தூரம் அந்தக் கவிதையை நோண்ட வேண்டியதில்லை. இன்னமும் எளிமையாக- ஜென் நிலையில் கூட பார்க்கலாம் என்று யாராவது சண்டைக்கு வந்தால் ஆமாம் சாமி போட்டுவிடலாம்.