Oct 5, 2014

பாதை

வணக்கம்
   
தாங்கள் எமது வேண்டுகோளை ஏற்று எங்கள் பள்ளிக்கு 2 கணினிகள் கிடைக்க ஏற்பாடு செய்தீர்கள். நாங்கள் கடந்த 10/07/2014 அன்று கணினிகளை பவானி திரு.பார்த்திபன் அவர்களுடைய வீட்டில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தபோது தங்களுக்கு தகவல் தெரிவித்ததோம். நீங்கள் ஒரு நற்பணியை செய்ததற்காக மனநிறைவு அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன் அதன் பிறகு நாங்கள் தங்களை தொடர்பு கொள்ளவேயில்லை.கணினியை எடுத்துக்கொண்டு வந்து சுமார் 3 மாதங்கள் ஆகிவிட்டது.அதனை நாங்கள் பயன்படுத்துகிறோமா? என்ற ஐயப்பாடு தங்களுக்கு இருக்கிறதோ, இல்லையோ எங்களுக்கு ஒரு உறுத்தல் உள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னால் எம் பள்ளி ஆசிரியைக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக விடுப்பில் இருந்ததாலும், எங்களிடம் புகைப்பட கருவி இல்லாததாலும் தங்களுக்கு புகைப்படங்களை அனுப்ப முடியவில்லை. பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த அலுவலர் ஒருவரின் உதவியால் புகைபடங்களை எடுத்து இத்துடன் அனுப்பியுள்ளேன். பார்த்துவிட்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
                                                            
கற்ப்போர்,கற்பிப்போர்,
ஊ.ஓ.ஆரம்பப்பள்ளி, சேடர்பாளையம், திருப்பூர் மாவட்டம்.






அன்புள்ள தலைமையாசிரியருக்கு, 

வணக்கம்.

தங்களிடமிருந்து இந்த நிழற்படங்களை எதிர்பார்க்கவேயில்லை. உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருந்தது. மிகச் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். கிராமப்பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்துடன் கணினிகளை கவனிப்பதை நிழற்படங்களின் வழியாக பார்ப்பதற்கு திருப்தியாக இருக்கிறது. இத்தகைய பள்ளிகளால்தான் அரசுப்பள்ளிகள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்கின்றன.

தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி சொல்லித் தருவதற்கு ஏதேனும் நிபுணர்கள் தேவைப்படுமாயின் தெரியப்படுத்தவும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட முடியும் எனத் தோன்றுகிறது. சில நண்பர்களிடம் பேசி வார இறுதியில் ஒரு முழுநாள் பயிற்சி வகுப்பை நடத்துவதற்கான வழிவகைகளை ஆராயலாம். அடுத்து இந்த வகையில் தங்களுக்கு உதவ இயலும் என நினைக்கிறேன்.

இந்த நிழற்படங்களை தங்களின் அனுமதியுடன் நிசப்தம் தளத்தில் பதிவிடுகிறேன். ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கான மென்பொருட்கள் குறித்தோ அல்லது இத்தகைய பள்ளிகளில் இன்னமும் சிறப்பாக கணினிக்கல்வியை முன்னெடுப்பது குறித்தோ அல்லது பொதுவான ஆலோசனைகளை வேறு யாரேனும் தரக் கூடும். செயல்படுத்தத்தக்க ஆலோசனைகள் வருமாயின் அவற்றை வேறு பள்ளிகளுக்கும் பரவலாக்குவது குறித்து பரிசீலிக்கலாம்.

நிறைய பள்ளிகளில் பயிற்றுநர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை என்பதை அரசு பள்ளிகளின் குறைபாடாக நினைக்கிறேன். பல ஆசிரியர்கள் மின்னஞ்சல் வசதியைக் கூட பயன்படுத்துவதில்லை. பெரும்பாலானவர்களுக்கு கணினி பற்றிய அக்கறை எதுவும் இருப்பதில்லை. ஆனால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியானது போற்றுதலுக்குரியது. 

தலை வணங்குகிறேன். தங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்கள் ஆசிரியர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

தங்கள் பள்ளிக்கு வேறு ஏதேனும் உதவிகள் தேவையென்றால் தெரியப்படுத்தவும். தகுதி வாய்ந்த பிற பள்ளிகள் இருப்பினும் அறியத் தாருங்கள். அவர்களுக்கும் உதவுவோம்.  

உங்கள் பள்ளிக்கு மிக விரைவில் ஒரு சிறிய அளவிலான நூலகம் ஒன்றை ஏற்பாடு செய்து தர இயலும் என நம்புகிறேன். தங்களைப் போன்ற செயலூக்கம் மிக்க தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகளைச் செய்ய விரும்புகிறேன்.

ஞாபகம் வைத்து தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி. தடுமாறும் சமயங்களில் இது போன்ற சில மின்னஞ்சல்கள்தான் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டிய பாதையை துலக்கப்படுத்துகின்றன.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்