நேற்று முன்தினம் பால நந்தகுமார் வீட்டிற்கு வந்திருந்தார். அதிமுகவின் முன்னாள் நீலகிரி மாவட்டச் செயலாளர். அரசியல்வாதி என்பதைவிடவும் இலக்கிய ஆர்வலர் என்ற முறையில் பரிச்சயம். மலைச்சொல் என்ற இலக்கிய அமைப்பை நடத்துகிறார். கூடவே நான்கு ஆட்களை வேறு அழைத்து வந்திருந்தார். அன்றைய தினம்தான் பரப்பன அக்ரஹாரா பற்றி எழுதியிருந்தேன் என்பதால் பேச்சுவாக்கில் எழுந்து ஒரு அடியைப் போட்டுவிடுவாரோ என்றுதான் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் நல்ல மனுஷன். அதையெல்லாம் செய்யவில்லை.
அவர் நேற்று ஜாமீன் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்துக்குள் செல்லவிருக்கும் வழக்கறிஞர்களில் தானும் ஒருவன் என்றார். அதுவரைக்கும் எனக்கு நீதிமன்றம் செல்லலாம் என்ற யோசனை இருக்கவில்லை. ஆனால் ஆசை காட்டிவிட்டார். உள்ளே செல்வதற்கு எனக்கு அனுமதி இருக்காது என்றாலும் வெளியிலாவது சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம் என்றிருந்தது.
நீதிமன்றத்திலிருந்து வெகுதூரத்திலேயே பாதுகாப்பை அதிகப்படுத்தியிருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டருக்கு முன்பாகவே பைக்கை நிறுத்திவிட்டேன். ஏதாவது பிரச்சினை என்றாலும் ஓடி வந்து பைக்கை எடுத்து தப்பித்துவிடலாம். வெளியில் சுற்றிக் கொண்டிருந்த கன்னட நிருபர்களிடம் எனக்குத் தெரிந்த கன்னடத்தில் மாத்தாடத் தொடங்கியிருந்தேன். அவர்களைப் பொறுத்தவரைக்கும் இதில் எந்த எமோஷனலும் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு எடியூரப்பாவை கைது செய்து அதே சிறையில்தான் அடைத்திருந்தார்கள். சுரங்க சாம்ராஜ்ஜியத்தின் மன்னர் ஜனார்த்தன ரெட்டி பல மாதங்களாக அங்கேயேதான் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார். ஆக கன்னடர்களுக்கு ஜெயலலிதாவின் கைது என்பது பெரிய விஷயமே இல்லை. ஊழல் வழக்கில் இது இன்னொரு வழக்கு. அப்படித்தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டங்களும் மொட்டையடித்தலும் ஒப்பாரிகளும் அவர்களுக்கு கார்ட்டூன்கள் வரையவும் கேலிக்கட்டுரைகளை எழுதவும் பயன்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘அம்மாவை அனுப்பவில்லை என்றால் தமிழ்நாட்டு கன்னடர்களை சிறைபிடிப்போம்’ என்ற போஸ்டர் ஃபேஸ்புக்கில் பிரபலமாவதற்கு முன்பாகவே அவர்களுக்குத் தெரிந்திருந்தது. என்னிடம் கேட்டார்கள். ‘வட்டாள் நாகராஜ் மாதிரியான ஆட்களுக்குத் தெரிவதற்குள் வீட்டுக்கு இரும்புவேலி அமைத்துவிட வேண்டும்’ என்று பதில் சொன்னேன். சிரித்தார்கள்.
கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. ஜாமீன் வழக்கை விசாரிக்கத் தாமதாகும் என்ற தகவல் வெளிவரத் துவங்கியபோது அதிமுகவினர் முகம் சுண்டத் துவங்கியிருந்தது. நீதிமன்ற வளாகத்திற்குள்ளிருந்து தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. யார் அனுப்புகிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ‘ராம்ஜெத்மலானி வாதத்தை ஆரம்பிச்சுட்டாராம்’ ‘மனுஷன் ஒன்றரை மணி நேரம் பேசியிருக்கான்யா’ ‘சசிகலா வக்கீல் ஆரம்பிச்சுட்டாராம்’ என்கிற ரீதியில் செய்திகள் வரத் துவங்கின. அந்தச் சமயத்தில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாக இருந்தார்கள். பவானி சிங் ‘ஜாமீனில் வெளிவிட ஆட்சேபணையில்லை’ என்று சொல்லிவிட்டதாகத் தகவல் வந்தவுடனேயே கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். அவர் அப்படிச் சொல்வதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு யூகங்களை பறக்கவிடத் தொடங்கினார்கள். ஆனால் அதில் எது உண்மையான காரணமாக இருக்கும் என்று தெரியவில்லை.
வாதங்கள் எல்லாம் முடிந்த பிறகு நீதிபதி ‘ஸ்யூரிட்டி வழங்கத் தயாரா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அதிமுக தரப்பினர் ‘தயார்’ என்று சொல்லிவிட்டார்கள் என்ற விஷயம் தெரிந்தவுடன் இனிப்பு வழங்கத் தொடங்கிவிட்டார்கள். இதைக் கேட்டுவிட்டு நீதிபதி தனது அறைக்குள் சென்றுவிட்டார். இந்த இடைவெளியில்தான் தமிழக ஊடகங்கள் அனைத்தும் ‘ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது’ என்கிற செய்தியைச் சொல்லவும் அதிமுகவினர் உற்சாகத்தில் பட்டாசு வெடிக்கவும் லட்டு வழங்கவும் தொடங்கிவிட்டார்கள். அப்பொழுது அலுவலகத்துக்கு தாமதமாகிக் கொண்டிருந்தது. கிளம்பிவிட்டேன்.
அலுவலகத்துக்கு வந்து சேரவும் ‘என்ன ஜாமீன் கிடைக்கவில்லையாமா?’ என்று எங்கள் ஊர் திமுகக்காரர் அழைத்துக் கேட்கவும்தான் விவரம் புரிந்தது. ரிவர்ஸ் கியர் விழுந்திருக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் அறிமுகமாகியிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்தபோது செய்தியை உறுதிப்படுத்தினார். ‘இடைப்பட்ட பத்து நிமிஷத்துல என்னவோ நடந்திருக்கு’ என்று Conspiracy Theoryயின் முதல் அத்தியாயத்தை எழுதினார். அது அதிமுக தரப்பின் வாதம் என்றே எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார்கள். அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் தமிழிசை செளந்தரராஜன் கடந்தவாரத்தில் ரஜினியைச் சந்தித்து பேசியதன் பின்னணி குறித்தான கேள்வியை அவர் எழுப்பினார். ‘அங்கு கொலுவைப் பார்க்க போனேன்’ என்று பேசியிருக்கிறார். நீங்கள் நம்புகிறீர்களா? என்றார். என்னிடம் பதில் இல்லை. ‘இருங்க திரும்ப அழைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு பால நந்தகுமாரைத் தொடர்பு கொண்டேன். அவரும் இதே கருத்துக்களை வேறொரு தொனியில் சொன்னார். ‘திமுக வலுவிழந்து நிற்கும் இந்தச் சமயத்தில் தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலை ஊன்ற வேண்டுமானால் அதிமுகவின் கையையும் முறித்தாக வேண்டும். அதற்கான முதல்படியாக இதைப் பார்க்கிறேன்’ என்றார்.
பதவியேற்ற நாளிலிருந்து வாயைத் திறக்காத தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாகவும், அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பதறியடித்து அறிக்கை விட வேண்டிய அவசியம் என்ன? இதுவரை விதவிதமான போராட்டங்களின் வழியாக தங்களின் விசுவாசத்தை ஜெயலலிதாவுக்கு காட்டிக் கொண்டிருந்த அதிமுகவினரை இப்பொழுது மட்டும் அமைதியாக இருக்கச் சொல்ல வேண்டிய காரணம் என்ன? சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி மாநில அரசின் மீது கை வைப்பதற்கான சூழலை உருவாக்கித் தந்துவிடக் கூடாது என்ற பயம் இப்பொழுது மட்டும் எதனால் வந்திருக்கிறது? தமிழக உளவுத்துறை ஏதோ சில சமிக்ஞைகளை மாநில அரசுக்குக் காட்டியிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம் என்று இன்னொரு நண்பர் சொல்கிறார். அவர் பா.ஜ.க விசுவாசி.
குழப்பமாகத்தான் இருந்தது.
இதுவரையிலும் கர்நாடக அரசுதான் இந்தப் பிரச்சினையைச் சிக்கலாக்குகிறது என்றார்கள். ஆனால் எனக்கு அதில் துளி கூட நம்பிக்கையில்லை. காவிரி பிரச்சினைக்காக ஜெயலலிதாவை பழி வாங்குகிறார்கள் என்பதெல்லாம் அபத்தமான வாதம். ஜெயலலிதாவை சிறையில் அடைத்துவிட்டால் கெஜட்டில் சேர்க்கப்பட்ட வாக்கியங்கள் நீக்கப்படப் போவதில்லை. பிறகு எதற்காக இதைச் செய்ய வேண்டும்?
இந்த விவகாரத்தின் வழியாக பா.ஜ தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது என்கிற வாதத்திலும் சில கேள்விகள் இருக்கின்றன. ஜெயலலிதாவைவிடவும் பா.ஜ.கவை தீவிரமாக எதிர்த்தவர் மம்தா பானர்ஜி. அவருக்கு இவ்வளவு பெரிய தலைவலி எதுவும் இல்லை. பிறகு ஏன் ஜெயலலிதாவுக்கு மட்டும் பிரச்சினையைக் கொடுக்க வேண்டும்? உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா செய்த சேட்டைகள் காரணமாக இருக்குமா? அப்படியே திமுகவையும் அதிமுகவையும் முறித்துவிட்டால் ஆட்சியமைக்கும் அளவுக்கு தமிழகத்தில் பா.ஜ.விடம் ஆற்றல் இருக்கிறதா என்றால் ‘இப்போதைக்கு இல்லை’ என்றுதான் பதில் வரும். ஒருவேளை முப்பது அல்லது நாற்பது இடங்களை பிடிக்க முடியுமானால் அதுவே கூட அவர்களைப் பொறுத்தவரையிலும் மிகப்பெரிய வெற்றிதான். இல்லையா? இதுபோன்ற குழப்பமான குட்டை இனி எந்தக் காலத்தில் வரும் என்று தெரியாது. அதனால் அவர்கள்தான் இதில் தீவிரமாக இருக்கிறார்கள் என்று பெங்களூர் வந்திருந்த அதிமுகவினர் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவரை காவிரி பிரச்சினைக்காக சிறையில் தள்ளியிருக்கிறார்கள் என்றும் கருணாநிதியின் சதி என்றும் சொல்லி அனுதாபத்தை அள்ள முயற்சித்துக் கொண்டிருந்த அதிமுகவினரின் நாடகத்தில் இது மிகப்பெரிய ட்விஸ்ட்.
தனிப்பட்ட முறையில் அதிமுகவும் திமுகவும் இல்லாத மூன்றாவது ஒரு மாற்று சக்தி வர வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். வைகோ, மூப்பனார், விஜயகாந்த என ஒவ்வொருவரும் தலையெடுப்பதும் பிறகு நொறுங்கிப்போவதாகவும் இருந்தார்கள். அவர்களாக நொறுங்கவில்லை ‘ஒன்னா நீ இரு..இல்லைன்னா நான் இருக்கிறேன்...மூணாவதா எவனும் வரக்கூடாது’ என அதிமுகவும் திமுகவும் சேர்ந்து செய்யும் கூட்டுச் சதி என்றார்கள். எது எப்படியோ கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளாக இவர்கள் இருவரையும் விட்டால் வேறு வழியே இல்லை என்றாகியிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன விவகாரம் மட்டும் உண்மையாக இருக்குமானால் அது இவர்கள் இரண்டு பேரையுமே அடித்து நொறுக்கக் கூடிய வல்லமை பொருந்திய சக்தி என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.
தனிப்பட்ட முறையில் அதிமுகவும் திமுகவும் இல்லாத மூன்றாவது ஒரு மாற்று சக்தி வர வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். வைகோ, மூப்பனார், விஜயகாந்த என ஒவ்வொருவரும் தலையெடுப்பதும் பிறகு நொறுங்கிப்போவதாகவும் இருந்தார்கள். அவர்களாக நொறுங்கவில்லை ‘ஒன்னா நீ இரு..இல்லைன்னா நான் இருக்கிறேன்...மூணாவதா எவனும் வரக்கூடாது’ என அதிமுகவும் திமுகவும் சேர்ந்து செய்யும் கூட்டுச் சதி என்றார்கள். எது எப்படியோ கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளாக இவர்கள் இருவரையும் விட்டால் வேறு வழியே இல்லை என்றாகியிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன விவகாரம் மட்டும் உண்மையாக இருக்குமானால் அது இவர்கள் இரண்டு பேரையுமே அடித்து நொறுக்கக் கூடிய வல்லமை பொருந்திய சக்தி என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.
அரசியலைப் பொறுத்தவரையிலும் எல்லாமே சாத்தியம்தான். திறமை இருக்கிறவனால் மட்டுமே அதிகாரத்தின் ருசியை நாக்கினால் தீண்ட முடியும். நல்லவனாக இருப்பதைவிடவும் வல்லவனாக இருக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தில் வெற்றியாளனாக இருப்பதற்கான நியதியாகியிருக்கிறது.
இந்த வழக்கைப் பொறுத்தவரையிலும் இவையெல்லாம் வெறும் யூகங்களாகவும் வதந்திகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அரசியல் தலையீடு இல்லாத நீதித்துறையின் பரிபாலனம் என்று இதைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தண்டனையை அனுபவிக்கிறார்கள். இதில் அனுதாபத்திற்கும் பரிதாபத்திற்கும் அவசியம் என்ன வந்தது? எவ்வளவு பெரிய அதிகார மையமாக இருந்தாலும் நீதித்துறையால் தண்டிக்க இயலும் என்கிற நம்பிக்கையை சாமானியனுக்கு உருவாக்கும் பாடமாக இது இருக்கும் என தீர்ப்பு வந்த நாளிலிருந்து நம்பத் துவங்கியிருந்தேன். என்னதான் நம்பினாலும் ஆசைப்பட்டாலும் இது இந்தியா அல்லவா? வேடிக்கை பார்க்கலாம். இவர்கள் எல்லாம் பேசுவதைப் பார்த்தால் இன்னமும் திருப்பங்களும் த்ரில்களும் சுவாரஸியத்தை கூட்டும் போலத்தான் தெரிகிறது.