மோடி வந்த பிறகு இந்த தேசம் காவிமயமாக்கப்படும் என்று எழுதியவர்கள் பெரும்பாலும் அமைதியாகிவிட்டார்கள் அல்லது மோடி செய்து கொண்டிருப்பதெல்லாம் விளம்பரம் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அத்தனையும் வாய்ஜாலம் என்கிறார்கள். அவர்கள் பேசிவிட்டுப் போகட்டும். வாய்ஜாலமோ என்னவோ ஒருவகையில் துடிப்பான பிரதமராக இருக்கிறார். நேபாளத்திலும், ஜப்பானிலும் தனது பேச்சினால் கவனத்தை ஈர்த்தவர் நேற்று அமெரிக்காவிலும் ஈர்த்திருக்கிறார். ‘அதெல்லாம் இல்லை மன்மோகன்சிங்குக்கு மிகப்பெரிய ரத்தினக் கம்பளம் விரித்தார்கள் ஆனால் மோடிக்கு முக்கால் அடியில் ஒரு சிவப்புத் துண்டைத்தான் விரித்தார்கள்’ என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். சிரிப்பு வந்துவிட்டது. மன்மோகன் சிங்கைவிடவும் மோடி உருவாக்கிய Impression முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஜான் கெர்ரி உள்ளிட்டோர் பேசியதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். இதேதான் ஜப்பானிலும் நிகழ்ந்தது, நேபாளத்திலும் நிகழ்ந்தது. மோடி தனது பேச்சினாலும் நடவடிக்கையினாலும் பிறரை கவனிக்கச் செய்கிறார். அவர் பேசுவதற்கு காது கொடுக்கிறார்கள். ஒரு தேசத்தின் தலைவன் தன்னை கவனிக்கச் செய்யும் போது அவனோடு சேர்த்து தனது நாட்டையும் பிறரால் கவனிக்கச் செய்கிறான். மோடி அதைத் திறம்பட செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதை ‘மீடியா ஹைப்’என்பார்கள். நம்மவர்கள் எப்பொழுதுமே இப்படித்தான். முன்னால் போனால் கடிப்பார்கள் பின்னால் வந்தால் உதைப்பார்கள் என்பதால் விட்டுவிட வேண்டியதுதான்.
உண்மையிலேயே மோடியின் சில நடவடிக்கைகள் உற்சாகமளிக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பாகிஸ்தானுடன் பூச்சி பூச்சி என்று தாஜா செய்து கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தையைத் தவிர்த்து இறுக்கத்தைக் காட்டியது, சீனாவுடனான எல்லைத் தகராறை இரண்டு வாரகாலத்தில் சத்தமில்லாமல் முடித்தது போன்றவற்றை வெளியுறவு சார்ந்த பிரச்சினைகளில் முக்கியமானவையாகக் கருத வேண்டும்- நேற்று இரண்டு படைகளும் தத்தமது பழைய நிலைக்கே திரும்பியிருக்கின்றன. இதையெல்லாம் சுஷ்மா சுவராஜின் திறமையால்தான் நிகழ்ந்தது என்று சொல்லி மோடிக்கு எந்தவித கிரெடிட்டும் சேர்ந்துவிடக் கூடாது என்று சிலர் இருக்கிறார்கள். அதையும் விட்டுவிடலாம்.
கங்கையைச் சுத்தம் செய்வதை இந்துத்துவ அரசியல் என்று விமர்சித்தார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே- அந்தவிதத்திலாவது ஒரு மாபெரும் நதி சுத்தம் செய்யப்படுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை வரவேற்கத்தான் வேண்டும். லட்சக்கணக்கானவர்களுக்கு வாழ்வளிக்கும் ஜீவாதாரமான நதி அது. காலங்காலமாக பிணத்தை வீசுவதற்கான மரண நதியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை. நாளை அல்லது நாளை மறுநாள் சுத்தம் செய்துவிட முடியாது என்றாலும் அதைச் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துகிறார்கள் என்பதே முக்கியத்துவமானதுதான்.
அந்நிய நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதும் இந்தியத் தொழிலதிபர்களை குஷிப்படுத்துவதும் முதலீட்டாளர்களை உற்சாகமூட்டி பங்குவணிகத்தைத் தூக்கி நிறுத்துவதும் மட்டுமே அரசாங்கத்தின் வேலைகள் இல்லை. இதையெல்லாம் மோடியின் அரசாங்கம் செய்து வருகிறது என்றாலும் மக்களிடையே சில விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று ‘பாரதத்தை சுத்தப்படுத்துவோம்’ என்கிற திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். எவ்வளவு தூரம் இதைத் திறம்படச் செயல்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வீதிகளைச் சுத்தம் செய்வதும் எச்சில் துப்பாமல் இருப்பது மட்டுமே சுத்தம் இல்லை. நகரங்களில் சேரும் கோடிக்கணக்கான டன் குப்பைகளை என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான செயல்வடிவங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. சாக்கடை நீரை ஏரிகளிலும் ஆறுகளிலும் கடலிலும் இணைத்துவிடுவதைப் பற்றிய யோசனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இது போன்ற செயல்வடிவங்கள் இல்லாமல் குப்பையைக் கூட்டி வழிப்பது பெரிய பலனை அளிக்காது என்றாலும் இப்படியானதொரு தொடக்கத்தை மிக முக்கியமான செயல்பாடாக கருத வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் மக்களிடையே- குறிப்பாகச் சொல்லப்போனால் பள்ளி குழந்தைகளிடம் இது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கக் கூடும். அடுத்த தலைமுறையாவது குப்பை என்பது பற்றிய அடிப்படையான புரிந்துணர்வோடு இருப்பார்கள்.
இந்த தேசத்தில் குப்பை மிகப்பெரிய பிரச்சினை. தேசிய நெடுஞ்சாலைகளில் பகல் நேரத்தில் பயணிக்கும் போது கவனித்தால் புரிந்து கொள்ள முடியும். குப்பைகளால் இந்த தேசம் மூடப்பட்டிருக்கிறது. இது பற்றிய எந்த உணர்வுமே நம்மிடம் இல்லை. சுத்தம் பற்றிய நியாபகமே இருப்பதில்லை. போகிற போக்கில் நம்மால் காகிதத்தைச் சுருட்டி வீச முடியும். எச்சிலை எந்த இடத்தில் வேண்டுமானாலும் துப்ப முடிகிறது. எந்த இடத்திலும் சிறுநீர் கழிக்க சங்கடம் இருப்பதில்லை. இதையெல்லாம் பற்றி யோசிக்கச் செய்யவாவது தேசிய அளவிலான ஒரு திட்டம் தேவை. அதை இன்று மோடி முன்னெடுத்திருக்கிறார். பொறுத்திருந்து பார்க்கலாம்.
திட்டக்கமிஷன் தேவையில்லை போன்ற மோடியின் முடிவுகளை கடுமையாக விமர்சித்த சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. ‘இத்தனை ஆண்டுகாலம் இருந்த ஒரு அமைப்பை எப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று காலி செய்யலாம்’ என்று கேட்டிருந்தார்கள். அப்படி கேள்வி கேட்டவர்களுக்கு அந்த அமைப்பு பற்றிய புரிதல் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு முழுமையான புரிதல் இல்லை. கார்போரேட் அரசாங்கத்தை நிறுவ முயலும் போது இப்படியான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். சில அமைப்புகளை நீக்க வேண்டும்; சில அமைப்புகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்; சில பாலிசிகளையும் வழிமுறைகளையும் நீக்கிவிட்டு வேறு சிலவற்றை உட்புகுத்த வேண்டியிருக்கும். ஆனால் இவையெல்லாம் சரியான முடிவுகள் அல்லது தவறான முடிவுகள் என்று அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லிவிட முடியாது என்றுதான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் ஐந்திலிருந்து பத்தாண்டுகள் வரைக்கும் தேவைப்படும்.
நரசிம்மராவின் அரசாங்கம் உலகமயமாக்கலை அனுமதித்த போது எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றை நூலகத்தில் வாசித்த போது காமெடியாக இருந்தது. கண்களை மூடிக் கொண்டு இந்த தேசமே சொர்க்கம் ஆகிவிடும் என்று சிலர் எழுதியிருந்தால் இன்னும் சிலர் மொத்த தேசமும் நாசமாகிவிடும் என்று எழுதியிருந்தார்கள். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு நிலைமை எப்படி இருக்கிறது என்று நமக்குத்தான் தெரிகிறதே. பத்து நன்மைகளைப் பட்டியலிட முடிந்தால் பத்து தீமைகளைப் பட்டியலிட முடியும். நடுத்தர வர்க்கம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறது என்றால் ஏழை வர்க்கம் இன்னமும் அதிகமாகத் திணறுகிறது. மக்கள் வெறியெடுத்துத் திரிகிறார்கள். ஆனால் வசதிகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வசதிகளை அடைவதற்காக எந்தவொரு காரியத்தையும் செய்ய மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அரசாங்கத்தின் பெரும்பாலான திட்டங்களும் செயல்பாடுகளும் இப்படியான நீண்டகால விளைவினை உருவாக்குவனதான். குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாவது தேவை. அப்படித்தான் கங்கை சுத்திகரிப்பு, திட்டகமிஷனின் நீக்கம் எனபனவற்றை பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அரசாங்கத்தில் ஊழலே இல்லை என்று சொல்வதற்கு இது சரியான தருணம் இல்லை. இன்னும் ஓரிரு வருடங்கள் போக வேண்டும். அப்படி ஏதேனும் பூதங்கள் இருப்பின் வெளிப்படத் தொடங்கும்.
மோடியின் அரசாங்கம் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளித்த போதும், ஹிந்தித் திணிப்பை கட்டாயமாக்கிய போதும் வருத்தமாகத்தான் இருந்தது. அரசாங்கம் ஒரு மொழியை ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஹிந்தியை புறக்கணிக்க வேண்டும் என்று யாராவது பேசினாலும் எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. ஆனால் அதைக் கட்டாயமாக்க வேண்டியதில்லை. விரும்புகிறவர்கள் பழகட்டும். விரும்பாதவர்கள் அவர்கள் விரும்பும் மொழியை புழக்கத்தில் வைத்திருக்கட்டும். ஸ்மிரிதி இரானி போன்றவர்களின் செயல்பாடுகளால் திணிப்பைச் செய்கிறார்களோ என்று பயமாக இருந்தது. எழுந்த எதிர்ப்பினால் சற்று அமைதியாக இருக்கிறார்கள். இலங்கை பற்றிய மத்திய அரசாங்கத்தின் மெளனம், நதிகள் இணைப்பு மற்றும் அவற்றை தேசியமயமாக்கல் என்பனவற்றில் பெரிய அக்கறையின்மை, பெண்கள் பாதுகாப்பு பற்றிய பெரிய கவனமின்மை, தேர்தலுக்கு முன்பாக துள்ளிக் குதித்த கருப்பு பண விவகாரத்தில் காட்டும் கமுக்கம் போன்ற எரிச்சல் உண்டாக்கும் விவகாரங்களும் இல்லாமல் இல்லை.
ஆனால் மேற்சொன்ன எல்லா அம்சங்களுமே ஒரு சாமானியனின் பார்வையில் இருந்து பார்க்கும் போது தெரிவது. ஒரு அரசாங்கத்தை சாமானியனின் பார்வையிலிருந்து விமர்சிப்பது சரியான அணுகுமுறை இல்லை. அதை நுணுக்கமாகச் செய்ய வேண்டும். ஏனென்றால் அரசாங்கங்களின் செயல்பாடுகள் எல்லாவற்றிலுமே நுண்ணரசியல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இங்கு எதில்தான் நுண்ணரசியல் இல்லை? ஜெயலலிதா கருணாநிதியின் நடவடிக்கையிலிருந்து நீங்களும் நானும் செய்கிற காரியம் வரைக்கும் எல்லாவற்றிலும் நுண்ணரசியல் இருக்கத்தான் செய்யும். மோடியின் செயல்களிலும் அது இருக்கும்தான். இருந்துவிட்டுப் போகட்டும். அவை ஏதாவதொருவிதத்தில் இந்த தேசத்துக்கும் மக்களுக்கும் நன்மை விளைவிக்குமானால் சரி என்று ஆதரித்துவிட்டுப் போகலாம்.