Oct 16, 2014

மனுஷ்ய புத்திரனுக்கு கட்டைவிரல் வேண்டும் போலிருக்கிறது

மனுஷ்ய புத்திரனுக்கு என்ன பிரச்சினையென்று தெரியவில்லை. ‘மணிகண்டன் காட்டிய விசுவாசத்தை நினைத்து தனிமையில் புன்னகைக்கிறேன்’ என்று எழுதியிருக்கிறார். அவருக்கும் ஜெயமோகனுக்கும் லடாய். இதில் என்னை எதற்கு இழுக்க வேண்டும் என்று புரியவில்லை. 

என்ன விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறார்?

இன்னமும் அவரை குரு என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனது முதல் கவிதையை உயிர்மைதான் பிரசுரித்தது. முதல் புத்தகத்தை என்னிடம் ஒரு பைசா வாங்காமல் உயிர்மை வெளியிட்டது. இலக்கியத்தை மனுஷ்ய புத்திரன் தான் அறிமுகப்படுத்தினார். இப்படியெல்லாம்தான் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறேன். இதைத் தாண்டி வேறு எந்தவிதமான விசுவாசம்? உண்மையிலேயே புரியவில்லை. 

பிரச்சினையெல்லாம் எனது கவிதைகள் காலச்சுவடு இதழில் பிரசுரமானதிலிருந்து தொடங்கியது. உயிர்மையில் எழுதிக் கொண்டே காலச்சுவடில் எப்படி எழுதலாம் என்கிற சர்வாதிகாரம். அப்பொழுதுதான் முளைத்துக் கொண்டிருக்கிறேன். பரவலான கவனத்தைப் பெற வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தானே செய்யும்? காலச்சுவடு, உயிரெழுத்து, புது எழுத்து என்று எனக்குத் தெரிந்த இதழ்களுக்கெல்லாம் கவிதை அனுப்பிக் கொண்டிருந்தேன்.  மற்ற இதழ்களில் பிரசுரமான போதெல்லாம் பிரச்சினையில்லை. ‘காலச்சுவடு இதழில் கவிதை வந்திருக்கிறது’ என்று அவரிடம் சொன்ன போது குரூரமான புன்னகையுடன் ‘ம்ம்ம்’ என்றார். பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்ட ஆரம்பித்தார். 

வேலை கிடைத்து ஹைதராபாத் சென்றுவிட்டேன். வெகுநாட்களுப் பிறகு ஹைதராபாத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அது சுகிர்தராணியைப் பற்றிய அவரது விமர்சனத்துக்கான எதிர்வினை. சுகிர்தராணியின் கவிதைகள் ‘ப்ளாட்பாரத்தில் பின் அடித்து விற்கும் புத்தகம்’ என்கிற மாதிரியான வாக்கியத்துடன் விமர்சித்திருந்தார். ‘இது சரியான விமர்சனமா?’ என்று கேட்டிருந்தேன். அப்பொழுதும் கூட அவர் இதனால் கோபமடைந்துவிடக் கூடாது என்கிற பயத்துடன் தான் கேட்டிருந்தேன். ஆனால் அதற்கு பதில் அனுப்பவேயில்லை. பிறகு ஃபோனில் அழைத்து ‘கோபமா சார்?’ என்று கேட்டேன். ‘அதெல்லாம் இல்லை’ என்றார். 

அப்பொழுதிருந்து இருவருக்குமிடையிலான தொடர்புகள் குறைந்து கொண்டே வந்தன. அவர் அதை வேறுவிதமாக புரிந்து கொண்டார். ‘கவிதையை பிரசுரம் செய்வதற்காக மட்டுமே தன்னிடம் பழகியிருக்கிறான்’ என்கிற வகையில் யோசிக்க ஆரம்பித்தவுடன் கவிதைகள் அனுப்புவதையும் வெகுவாகக் குறைத்துக் கொண்டேன். உண்மையில் என் intention அதுவாகவே இல்லை. சினிமாவில் பாடல் எழுதலாம் என்றுதான் சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தேன். தமிழச்சி தங்கப்பாண்டியனின் புத்தக விமர்சனக் கூட்டம் பற்றிய போஸ்டரைப் பார்த்துவிட்டு கூட்டத்திற்குச் சென்றுவிட்டேன். அங்குதான் மனுஷ்ய புத்திரனுடனான அறிமுகம் நிகழ்ந்தது. அப்பொழுதுதான் உயிர்மை தொடங்கப்பட்டிருந்தது. அங்கு புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன். அதுவரைக்கும் கவிதை எழுதி பிரசுரம் செய்ய வேண்டும் என்பது என் நோக்கமாகவே இல்லை. எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல்தான் அவருடன் பழகிக் கொண்டிருந்தேன் என்பதுதான் நிஜம். 

அவரிடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்ட பிறகும் கூட அவரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களையோ அல்லது அவரைப் பற்றிய தவறான கருத்துக்களையோ வெகுகாலத்திற்கு பேசியதில்லை. ஆனால் இப்பொழுது யாராவது வாயைக் கிளறினால் உளறிவிடுகிறேன்.  ‘எத்தனை புக் வித்துச்சுன்னு கூட சொல்ல மாட்டேங்கிறாருங்க’ என்றுதான் ஆரம்பிக்கிறேன் அல்லது அவரைப் பற்றி பேசுவதையே கூட தவிர்த்துவிடுகிறேன்.

‘எத்தனை புத்தகம் விற்றது என்று மட்டும் சொல்லுங்கள்’ என்று கேட்டது கூட கட்டக்கடைசியாகத்தான். செந்தில்குமார் என்ற காவல்துறை அதிகாரி சைபர் சாத்தான்கள் புத்தகத்தை தமிழ்நாடு சைபர் போலீஸாரின் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும், துறையின் பிற அதிகாரிகளுக்கும் அதை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னபோதுதான் அந்தப் புத்தகத்தை யாரோ கவனிக்கிறார்கள் என்றே புரிந்து கொண்டேன். ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ தொகுப்புக்கு நூலக ஆணை கிடைத்திருக்கிறது என்றார்கள். குறைந்தபட்சம் முந்நூறாவது வெளியில் சென்றிருக்கும் அல்லவா? அதைத்தான் கேட்டேன். பணம் பிரதானமேயில்லை. மீறிப் போனால் ஐந்நூறு ரூபாய் ராயல்டியாகத் தருவார்கள். அதை எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு புத்தகம் விற்றிருக்கிறது என்ற விவரம் மட்டும் போதும் என்றுதான் கேட்டிருந்தேன். ஒரு ஆர்வம் இருக்கும் அல்லவா? நமது முதல் புத்தகத்துக்கு என்ன வரவேற்பு இருந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம். அதற்கு எந்த பதிலுமே வரவில்லை. திரும்பத் திரும்ப கேட்டு சலித்துப் போய்விட்டது. இப்படியான ஒரு அடிப்படை ethics கூட இல்லாத மனிதனிடம் என்ன விசுவாசத்தைக் காட்டுவது?

சிலர் ‘மனுஷ்யபுத்திரனுக்கே துரோகம் செய்துவிட்டான்’ என்றார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். இவருக்கு துரோகம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கப் போகிறேனா அல்லது லட்சக்கணக்கான வாசகர்களைத் திரட்டப்போகிறேனா? எழுத்தைப் பொறுத்தவரையில் சரக்கு இருந்தால் சமாளிக்கலாம். இல்லையென்றால் எந்த அரசியலும் வேலைக்கு உதவாது என்பதைத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறேன். பிறகு ஏன் துரோகம் செய்யப் போகிறேன்?

இந்தக் கேள்விக்கும் அவரிடம் ரெடிமேட் பதில் இருக்கும். எனக்கு துரோகம் செய்தால்தான் காலச்சுவடில் குப்பை கொட்ட முடியும் என்று சொல்லியிருக்கிறார். மகா மட்டமான நினைப்பு அது. காலச்சுவடில் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறது. அதைத் தவிர காலச்சுவடிலிருந்து வேறு என்ன ஆதாயம் பெற்றிருக்கிறேன்? மொத்தமாக பதினைந்து கவிதைகள் காலச்சுவடில் பிரசுரமாகியிருக்கிறது. அவ்வளவுதான். அதைத்தவிர ஒரு கட்டுரை கூட காலச்சுவடில் எழுதியதில்லை. 

இது ஒரு குறுக்குப் புத்தி. தன்னை யாராவது விமர்சனம் செய்தால் அவன் மீது ஒரு முத்திரை குத்திவிடுவது. ஒரு பிரச்சினையின் போது  ‘என்னை விமர்சினம் செய்யறியே? கனிமொழியை துதிபாடி ஆதாயம் சம்பாதித்த காலச்சுவடு கண்ணனைப் பற்றி எழுதுவியா? சல்மாவுக்கு எப்படி ஒவ்வொரு நாடு செல்வதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று எழுதுவியா? உன் தார்மீக ஆண்குறி எனக்கு எதிராக மட்டும்தான் விறைக்குமா?’ என்றார். இந்த மனிதனிடம் அதற்குமேல் என்ன பேசுவது? கண்ணன் கனிமொழியிடமிருந்து ஆதாயம் பெற்றார் என்று இவர் சொல்லித்தான் தெரியும். ஆனால் மனுஷ்ய புத்திரன் கனிமொழியின் கணவரின் பணத்திலிருந்துதான் உயிர்மையே ஆரம்பித்தார் என்று பேசுகிறார்கள் அல்லவா? அதையும்தானே விமர்சனம் செய்ய வேண்டும்? 

யாரை விமர்சனம் செய்வது குறித்தும் எனக்கு பிரச்சினையில்லை. தயக்கமும் இல்லை. ஆனால் இவரை விமர்சனம் செய்யும் போது அதற்கு பதில் அளிக்காமல் தனது எதிரிகளின் மீது கத்தியைச் சொருகிவிட்டு வரச் சொல்லும் அற்பமான மனிதராக இருந்துவிட்டு என்னை ‘நீ துரோகி, அற்பன்’ என்கிறார். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். எனக்கு எது பற்றியும் பிரச்சினையில்லலை. 

நீங்கள் எதிர்பார்க்கும் விசுவாசம் என்பது வாலை ஆட்டுவது. நாக்கைச் சுழற்றுவது. தினமலர் உயிர்மையில் விளம்பரம் கொடுக்கிறார்கள் என்பதற்காக அதைப் பற்றி எந்தவிதத்திலும் விமர்சனம் செய்துவிடாமல் அமைதி காக்கும் நீங்கள்தான் மிகச் சிறந்த விசுவாசி. திமுக தலைமையையும் அதன் அடுத்த தலைவரையும் எப்படியெல்லாம் விமர்சித்தீர்கள் என்று உங்கள் மனசாட்சிக்கே தெரியும். இன்றைக்கு காரியம் ஆகும் என்று கூழைக் கும்பிடு போடும் நீங்கள் ஆகச்சிறந்த விசுவாசி. 

இப்படியான விசுவாசத்தை என்னிடம் நீங்கள் எதிர்பார்க்க வேண்டியதில்லை. உங்களுக்கு யாரிடமேனும் பிரச்சினையிருந்தால் தயவு செய்து அவர்களிடம் சண்டையிடுங்கள். என்னை விட்டுவிடுங்கள். கட்டைவிரலை கொடுக்க முடியாது.