Oct 14, 2014

ஐ.டி வேலை ஈஸிங்களாண்ணா?

‘ஐ.டி. வேலை ஈஸிங்களாண்ணா?’என்று ஊரிலிருந்து ஒரு பெண் ஃபோனில் அழைத்துக் கேட்ட போது விக்கித்துவிட்டது. அந்தப் பெண் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை வாங்கிவிட்டாள். அந்த உற்சாகத்துடனும் பரபரப்புடனும் கேட்டாள். ‘குட்டைக்குள்ள குதிக்க வரைக்கும்தான் கஷ்டமா இருக்கும்..அப்புறம் ஒண்ணும் பிரச்சினை இருக்காது’ என்றேன். அதிகாலை நேரத்தில் வாய்க்கால், குளம், குட்டைக்கு முன்பாக நின்றபடி உள்ளே இறங்குவதற்குள் திணறுவோம் இல்லையா? அப்படி. மூச்சை உள்ளே இழுத்துப்பிடித்தபடி ஒரு முங்கு முங்கிவிட வேண்டும். அவ்வளவுதான். அதன்பிறகு எல்லாம் சுமூகமாக நடந்துவிடும். 

ஐடியில் வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி மேலாளரிடம் நச்சரிக்கத் தொடங்கியிருந்தேன். அவர்களால் சமாளிக்கவே முடியவில்லை. ‘மலேசியாவில் இருக்கு. போறியா?’ என்றார்கள். அமெரிக்காவுக்குத்தான் செல்வேன் என்று பிடிவாதம் பிடிப்பேன் என்று நினைத்திருக்கக் கூடும். அவர்கள் நினைப்பில் மண்ணை அள்ளிக் கொட்டிவிட்டேன். ஏரோப்ளேன் ஏறினால் போதும் என்றிருந்ததால் சரி என்றும் சொல்லியாகிவிட்டது. 

வெறும் ஒன்றரை வருட அனுபவமுடையவன் என்று சொன்னால் வாடிக்கையாளர் தரப்பில் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் அல்லவா? அப்படியே ஒத்துக் கொண்டாலும் அவர்களிடமிருந்து நிறைய காசு பறிக்க முடியாது. அதனால் ‘ஐந்து வருட அனுபவமுடையவன்’ என்று என்னைக் காட்டி ஏமாற்றியிருக்கிறார்கள். அந்த மலேசிய மடையர்களும் நம்பிக் கொண்டார்கள். இத்தனைக்கும் ஃபோனில் அழைத்துக் கேள்வி கேட்டார்கள். உனது அனுபவம் என்ன?’ என்று கேட்டிருந்தால் கூட உளறியிருப்பேன். மடையர்கள் என்றால் மடையர்கள்தான். அவர்கள் அதையெல்லாம் கேட்கவே இல்லை. எனக்கும் அவர்களை எங்கள் நிறுவனம் ஏமாற்றியிருக்கிறது என்று தெரியாது. ஊர்க்காரர்களிடமெல்லாம் ‘ஃபாரின் போறேன்’ ‘ஃபாரின் போறேன்’ என்று படம் ஓட்டிவிட்டு விமானம் ஏறிவிட்டேன். அங்கே இறங்கும் வரைக்கும் பிரச்சினை இருக்கும் என்று தெரியாது. இங்கே செய்கிற அதே வேலையைத்தான் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் மிகப்பெரிய வெடியை வைத்திருந்தார்கள்.

திங்கட்கிழமை காலை அலுவலகத்தை தேடிக் கண்டுபிடித்துச் செல்கிறேன். அலுவலகத்திற்குச் சென்ற இரண்டாவது மணியில் ஒரு மின்னஞ்சல் வந்தது. 'Mani will work on this MD050 and will complete it by two weeks' என்று. நாற்காலியிலிருந்து ஒன்றரை அடிக்கு எகிறி அமர்ந்தேன். MD050 என்ற வார்த்தையை அதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர உள்ளே என்ன இருக்கும் என்றெல்லாம் பார்த்ததில்லை. அதுவும் இரண்டு வாரத்தில் முடிக்க வேண்டும். ‘அப்படின்னா என்னன்னே தெரியாதுங்க’ என்று சொல்லிவிடலாமா என்று கூட யோசனை வந்தது. ஒருவேளை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டால் ஊருக்குச் சென்ற பிறகு ஸீட்டைக் கிழித்தாலும் கிழித்துவிடுவார்கள். யாரிடம் கேட்பது? எங்கே போவது? 

வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி மென்பொருள் வடிவமைப்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை ஆவணப்படுத்த வேண்டும். அந்த ஆவணத்திற்குத்தான் MD050 என்று பெயர். சுத்தம். இந்த மூக்கர்களிடம் பேசி அவர்களின் தேவைகளைப் புரிந்து அதையெல்லாம் ஆவணப்படுத்திவிட்டாலும்....என்னெத்த கன்னையாவாக மாறியிருந்தேன். கம்பெனி செலவில் இங்கே வந்து சூனியம் வைத்துக் கொண்டதாக நொந்து கொண்டிருந்தேன். சாட்டிங் வசதியெல்லாம் அலுவலகத்தில் தடை செய்து வைத்திருந்தார்கள். ஐஎஸ்டி செய்து யாரிடமாவது கேட்டால் இவர்கள் கொடுக்கிற காசையெல்லாம் அதற்கே கொட்ட வேண்டும். 

எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் எனக்கு கன்னி லக்னம் படு ஸ்ட்ராங்காக இருந்தது. இங்கிலாந்து பெண்ணொருத்தி அதே நிறுவனத்திற்காக லண்டனில் இருந்து வேலை செய்தாள். அவள் என்னைக் காப்பாற்றிவிடுவதாகச் சொன்னாள். கொஞ்சூண்டு தைரியம் வந்தது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவளிடமிருந்து விவரங்களை ஃபோனில்தான் வாங்க வேண்டும். இங்கிலாந்தின் மதிய நேரம் என்பது மலேசியாவில் இரவாகிவிடும். அவள் தனது வேலையெல்லாம் முடித்துவிட்டு வரும் வரையில் அலுவலகத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும். ஏழு மணி ஆனால் அலுவலகத்தில் ஈ, காக்கா இருக்காது. எட்டு மணிக்கு மேலாக அலுவலகத்தில் இருக்க வேண்டுமானால் அனுமதி வாங்க வேண்டும். இல்லையென்றால் பூட்டிவிடுவார்கள். பத்து மணிக்கு அழைப்பாள். அவளது ஆங்கிலமும் புரியாது அவள் சொல்லித் தருகிற டெக்னிக்கல் சமாச்சாரமும் புரியாது. தூக்கம் வேறு கண்களைச் சுழற்றிக் கொண்டு வரும். அவள் பேசப் பேசவே தூங்கி விழுந்திருக்கிறேன். அவளுக்கு கடமுடா என்று சத்தம் கேட்டிருக்க வேண்டும். மண்டையைக் கொண்டு போய் எங்கேயோ கோக்குமாக்காக இடித்துக் கொண்டேன். புடைத்துவிட்டது. ‘ஆர் யூ ஆல்ரைட்?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டாள். தேய்த்துக் கொண்டே ‘யேஸ்...யேஸ்..ஓ யேஸ்’ என்று படிக்காதவன் ரஜினி மாதிரி சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு தடவை சொல்லித் தருவாள். இரண்டு தடவை சொல்லித் தருவாள். அதற்கு மேல் கேட்க எனக்கே சங்கடமாக இருக்கும். புரிகிறது என்று பொய் சொல்லிவிடுவேன்.  

இரண்டு மூன்று நாட்களில் இவள் நமக்கு சரிப்பட்டுவர மாட்டாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒவ்வொரு வார இறுதியிலும் ஆவணம் எந்த நிலைமையில் இருக்கிறது என்று மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் - அந்த ப்ரான்ஸ் சீமாட்டிக்கு. அந்தச் சீமாட்டிதான் ‘இரண்டு வாரத்தில் முடித்துவிடுவான்’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். யாரைக் கேட்டு முடிவு செய்தார் என்று தெரியவில்லை. நானும் ஒவ்வொரு வாரமும் இழுத்துக் கொண்டேயிருந்தேன். முதல் இரண்டு வாரங்களுக்கு பிரச்சினையில்லை. விட்டுவிட்டார்கள். மூன்றாவது வாரத்திலிருந்து அழுத்தம் கொடுக்கத் துவங்கினார்கள். நான்காவது வாரத்தில் இந்திய நிறுவனத்தின் மேலாளரை Ccயில் வைத்து ‘உடனடியாக முடிக்க வேண்டும்’ மின்னஞ்சல் அனுப்பினார்.  ‘நீ எங்க நாட்டு பிரதமர் மன்மோகன் சிங்கை வேண்டுமானாலும் Ccயில் வைத்து அனுப்பிக்கோ’ என்று நினைத்துக் கொள்வேன். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? 

எங்களது நிறுவனமும் கண்டுகொள்ளவே இல்லை. பொடியனை அனுப்பியிருக்கிறோமே என்ன ஆனானோ என்று கூட விசாரிக்கவில்லை. பயங்கரக் கடுப்பில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு மேல் இழுக்க முடியும் என்று தெரியவில்லை. அதோடு கன்னி லக்னமும் வலுவிழந்துவிட்டதால் வேறு யாரும் உதவிக்கும் வரவில்லை. கும்பிடாத சாமியில்லை. வைக்காத வேண்டுதலில்லை. எந்தச் சாமி நல்ல சாமி என்று தெரியவில்லை. விசாவில் ஏதோ பிரச்சினை. இந்தியா வந்துதான் விசாவை புதுப்பிக்க வேண்டும் என்றார்கள். உயிர் வந்துவிட்டது. வந்து சேர்தவுடன் சில சீனியர்களிடம் சரணடைந்தேன். அவர்களுக்கு இது பெரிய பிரச்சினையாகவே தெரியவில்லை. அதுவரை நான் சேகரித்து வைத்திருந்த தகவல்களையெல்லாம் வாங்கிக் கொண்டனர். அவர்களிடம் ஒரு டெம்ப்ளேட் இருந்தது. அதில் ஏற்கனவே இருந்த விவரங்களையெல்லாம் நீக்கிவிட்டு என்னிடமிருந்த விவரங்களை ஆங்காங்கே சேர்த்தார்கள். அவ்வளவுதான். MD050 தயார். அதிகபட்சம் நான்கு மணி நேரத்தில் முடித்துக் கொடுத்துவிட்டார்கள். ‘யார் கேட்டாலும் தெரியாதுன்னு மட்டும் சொல்லிடாத..இங்க எவனுக்குமே முழுசா தெரியாது....முடிச்சுடுறேன்னு சொல்லு’என்று அவர் சொன்னது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. குட்டைக்குள் இழுத்துவிட்டார்கள். நம்மை மாதிரி லட்சக்கணக்கான மட்டைகள் உள்ளே கிடக்கின்றன என்று புரிந்து கொண்டேன்.