வணக்கம்.
தங்களை முகநூல் மூலம் அறிந்து,அப்புறம் உங்களின் இணைய பக்கங்களை படிக்கத் தொடங்கினேன்.வாழ்த்துக்கள்!!
நீ அறிவாளியா? என்கிற கட்டுரையில், “இந்த எழுத்தை வாசிக்க ‘நீ அறிவாளியாக இருக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று ஒருவரி கண்ணில்பட்டது. இத்தகைய வரிகள் உண்மையிலேயே disturb செய்கின்றன. சங்கடமாகவும் இருக்கிறது. தஸ்தாயோவ்ஸ்கியை வாசிக்கவில்லை என்றால் அவன் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. மாக்ஸிம் கார்க்கியை புரிந்து கொள்ளாதவன் மடையன் என்று அர்த்தம் இல்லை. இதையெல்லாம் வாசிக்கத் தெரிந்தவன் தான் அறிவாளி என்று ஸ்டேட்மெண்ட் விடுவதை எப்படி புரிந்து கொள்வது? இது ஒருவிதமான மிரட்டல். இதை புரிந்து கொண்டால்தான் நீ அறிவுஜீவி என்பது ஒருவிதமான ப்ளாக்மெயில்” என்று எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதியது யார் என்பது உங்களுக்கும் தெரியும் - எனக்கும் தெரியும்.
ஒரு புரிதலுக்காக கேட்கிறேன். நீங்கள் பொறியியல் பட்டதாரி. எனக்கு அது சம்மந்தமாக ஒன்றும் தெரியாது.இருந்தாலும் தெரிந்த மாதிரியே நான் உங்களிடம் பேசுகிறேன். என் பேச்சு சுத்த முட்டாள் தனமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் நான் வேறு ஒரு துறையில் ஜாம்பவான். அதற்காக நீங்கள் சகித்துக்கொண்டு தலையாட்டிக்கொண்டிருபீர்களா? இல்லை, “உங்களுக்கெல்லாம் இது தெரியாதுண்ணே, போய் உங்களுக்கு தெரிந்ததை செய்யுங்கண்ணே” என்பீர்களா?
தனக்கு பரிச்சியம் இல்லாத அல்லது பாண்டித்யம் இல்லாத துறையில் ஒருவர் மூக்கை நுழைத்து தடாலடியாக பேசும் போது எரிச்சல் தானே வரும்?
நீங்கள் குறிப்பிடும் அந்த லாரி டிரைவர், உங்களிடம் வந்து, “என்ன செயகாந்தனும்,செயமோகனும் எலுதி கிலிச்சிட்டானுங்க தம்பி....நா(ன்) சின்னப்புள்ளையா இருக்கச்சே பி.டி.சாமியோட கதைய படிப்பேன் பாரு அத அடிச்சிக்க இன்னொருத்தன் பொறந்து வறனும்...”னு பேசினா அவரின் தொழில் திறமையை பாராட்டிய நீங்கள், அவரின் இலக்கிய அறிவையும் பாராட்டுவீர்களா அல்லது “நமக்கெதுக்குங்கண்ணே அதெல்லாம், போய் லாரிய ஓட்டுங்க..” என்பீங்களா?
எம்.எஸ்.ராஜேந்திரன், திருவண்ணாமலை.
அன்புள்ள ராஜேந்திரன்,
வணக்கம்.
எழுத்து என்பதை ஒரு புரிதலுக்கான திறவுகோலாக மட்டும்தான் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு வேண்டுமானாலும் ஆழமான சரக்கும் இருக்கலாம் சாக்குப்பையும் இருக்கலாம். அவையெல்லாம் இரண்டாம்பட்சம். அடிப்படையில் அது ஒரு தகவல் தொடர்புக்கான வழி. அவ்வளவுதான். எழுத்தாளனுக்கு நம்மிடம் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது. அதை கட்டுரையாகவோ, கவிதையாகவோ, கதையாகவோ அல்லது நாவலாகவோ அவன் தனக்குத் தெரிந்த வழியில் எழுதுகிறான். அதை வாசகனால் புரிந்து கொள்ள முடியலாம் அல்லது இயலாமலும் போகலாம். ஆனால் அதற்காக எழுதுகிறவன் பிஸ்தா என்கிற பில்ட் அப் சமாச்சாரங்களில்தான் சங்கடமாக இருக்கிறது.
இங்கு எல்லோரிடமுமே எழுதுவதற்கான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு கிழவியிடம் பேசினால் அவளிடம் ஆயிரம் கதைகளாவது தேறும். ஒரு குழந்தையிடம் கூட சொல்வதற்கான கதைகள் இருக்கின்றன. யாரிடம்தான் கதைகள் இல்லை? இருக்கிற கதைகளை எழுதுகிறவன் எழுத்தில் கொண்டு வந்துவிடுகிறான் மற்றவர்களால் அதைச் செய்ய முடிவதில்லை. அது மட்டும்தான் வித்தியாசம். அவனால் தனது கதைகளை எழுத்தாக்க முடிகிறது என்கிற அளவில் மரியாதையைக் கொடுக்கலாம்.
ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது? எழுத்தாளன் என்றால் கண்களுக்குத் தெரியாத இரண்டு கொம்புகள் இருப்பதாகத்தானே கருதிக் கொள்கிறார்கள். இது இன்று நேற்று வந்ததில்லை. பாரம்பரியம். காலங்காலமாக அப்படித்தான் இருக்கிறது.
கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். கம்பனைத் தெரிகிறது, வள்ளுவனைத் தெரிகிறது, பள்ளு இலக்கியத்தை எழுதியவனின் பெயரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் இருக்கும் நந்தி சிலையை வடித்தவனின் பெயரைத் தெரிந்து வைத்திருகிறோமா என்ன? என்று. குகை ஓவியங்கள் வேண்டாம்- சமீபத்தில்-முந்நூறு அல்லது நானூறு வருடங்களுக்கு முன்பாக மதுரை மீனாட்சியம்மன் போன்ற கோவில்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை வரைந்தவனின் பெயரைத் தெரிந்து வைத்திருக்கிறோமோ? மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை எழுதிய குமரகுருபரை நமக்குத் தெரியும் ஆனால் அதே பிள்ளைத்தமிழை சிற்பங்கள் ஆக்கியவன் யாரென்று தெரியாது. சிற்பம், ஓவியம் போன்ற பிற கலைகளுக்கு இன்று வரையிலும் அதே நிலைமைதான். எத்தனை தற்கால ஓவியர்களின் பெயர்கள் நமக்குத் தெரியும்? எத்தனை சிற்பிகளின் பெயர்களைத் தெரியும்? சொற்பம்தான்.
ஆனால் கவிஞர்களை லிஸ்ட் எடுங்கள். கதை எழுதுபவர்களை லிஸ்ட் எடுங்கள். பல பக்கங்கள் வேண்டும்.
ஓவியன், சிற்பி உள்ளிட்ட கலைஞனையெல்லாம் விட எழுத்தாளன் எந்தவிதத்தில் உயர்ந்தவனாக இருக்கிறான்? பிரச்சினை நம் பாடத்திட்டங்களிலும் நம் புரிதலிலும் இருக்கிறது. இன்றைக்கு செய்யுளை படிக்கிறோம். கவிதைகளைப் படிக்கிறோம். ஆனால் சிற்பக்கலையின் அடிப்படையை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறோமா? மாணவர்களை விடுங்கள். நாமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா? ஓவியம் பற்றிய நம் புரிதல் என்ன? ஒன்றுமில்லை.
இதே பாரம்பரியத்தில் வந்தவன் தானே இன்றைய எழுத்தாளன்? அதனால்தான் கம்பனுக்கும், பாரதிக்கும் கொடுத்த புகழை எனக்கும் கொடுங்கள் என்கிறான். சக காலத்தில் வாழும் ஓவியனையும் சிற்பியைவிடவும் நாம் எந்தவிதத்திலும் உயர்ந்தவனில்லை என்கிற மனநிலையே எழுத்தாளனுக்கு உருவாவதில்லை. அதுதான் சிக்கல். வெளிப்படையாகச் சொன்னால் மற்ற எந்தக் கலையைவிடவும் மிகச் சுலபமானது எழுத்துக்கலை. ஆனால் இங்கு எழுத்தாளர்கள்தான் பிதற்றுகிறார்கள். ‘நான்தான் அறிவாளி’ என்று கூக்குரலிடுகிறார்கள். ‘எங்களை அங்கீகரியுங்கள்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். ஓவியர்களும், சிற்பிகளும் எங்கேயாவது எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எழுத்தாளனைப் போல கதறுவதைப் பார்க்கிறோமா?
இணையம் ஏகப்பட்ட வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். கொஞ்சம் பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் எழுத்தில் முத்திரை பதித்துவிட முடியும். மற்றவர்களை கவனிக்க வைத்துவிடவும் முடியும். நானும் எழுதுகிறேன். நீங்களும் எழுதுங்கள். எழுதிவிட்டு போகலாம். எவ்வளவுதான் திணறினாலும் ஜெயமோகனின் எழுத்தை யாரேனும் அழித்துவிட முடியுமா என்ன? சாருவின் இடத்தை இன்னொருவன் பிடித்துவிட முடியுமா என்ன? சுஜாதா எப்பொழுதும் சுஜாதாதான். ஜெயகாந்தன் எப்பொழுதும் ஜெயகாந்தன் தான். பிறகு எதற்கு இவ்வளவு பதற்றம்? ஏன் எந்நேரமும் எழுத்தாளன் பீடத்தின் மீதே இருக்க வேண்டும் என நாமும் எதிர்பார்க்கிறோம்? அவனும் விரும்புகிறான்.
இதையெல்லாம் உடைத்துவிட வேண்டும். இது சரியான தருணம். இந்த மாயை அவசியமே இல்லாதது. எழுத்தாளன் எந்தவிதத்திலும் பீடாதிபதி இல்லை. சாதாரண எளிய மனிதனாக இருக்கும் வரை அவன் ஒரு ஊற்று. எழுத்துக்களால் வாசகனை கட்டிப்போடுகிறான். ஆனால் பீடத்தின் மீதேறி அருள்பாலிக்கத் தொடங்குவதிலிருந்து அவன் அடங்கத் தொடங்குகிறான். பதற்றம் அவனது கைகளைப் பற்றிக் கொள்கிறேது.
உங்களின் கேள்விக்கு என்னிடம் இருக்கும் பதில் இதுதான் - என்னிடம் வந்து ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்கிற ரீதியில் தப்பும் தவறுமாகப் பேசினால் விவரிக்க முயற்சிப்பேன். ஆனால் எதிரில் பேசிக் கொண்டிருப்பவர் கண்களையும் காதுகளையும் மூடியிருந்தால் நான் தலையைக் குனிந்து அடுத்த வேலையைப் பார்ப்பேனே தவிர ஓங்கி அறைந்து ‘உனக்கு அறிவில்லை’ என்று ஆயா மீது சத்தியமாகச் சொல்லமாட்டேன். அதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தெரியும்.