Sep 30, 2014

பரப்பன அக்ரஹாரா

பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்குச் சென்றிருந்தேன். இன்று மதியம்தான். ஏனோ காலையிலிருந்தே கடும் தலைவலி. அதனால் விடுப்பு எடுத்திருந்தேன். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மதிய உணவுக்காக கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் கடையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் சிறை வளாகம். முன்பு ஒரு முறை அங்கு சென்றிருக்கிறேன். அந்தச் சிறை வளாகத்திற்குள்ளேயே ஒரு காவல் நிலையம் இருக்கிறது. பாஸ்போர்ட் விசாரணைக்கு வரச் சொல்லியிருந்தார்கள். அப்பொழுது பெரிய கெடுபிடியெல்லாம் இல்லை. 

இன்றைக்கு அப்படியில்லை. அந்தச் சாலையே மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டு மகிழ்வுந்துகள்தான். அத்தனையும் அதிமுக கொடியோடு திரிகின்றன. பெருந்தலைகளைச் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிந்தது. ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்....’ போன்ற செல்போன் ட்யூன்கள் அலறிக் கொண்டிருக்கின்றன. கதர் வேஷ்டி கசங்காமல் தூக்கிப்பிடித்தபடி பிரமுகர்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார்கள். வளாகத்தின் முதல் தடுப்பைத் தாண்டுவதே பெரிய காரியம். அந்தத் தடுப்புக்குள் செல்வதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களை மட்டும்தான் அனுமதிக்கிறார்கள். மேயர்களுக்குக் கூட அனுமதி இல்லை என்றார்கள். ஆனால் மதுரை மேயர் ராஜன் செல்லப்பா உள்ளேயிருந்து வந்தார். ஏதாவது ஃபேக் ஐடி வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதற்கடுத்த தடுப்பைத் தாண்டுவதற்கு அம்மாவின் அனுமதி வேண்டும் போலிருக்கிறது. அவர் பார்க்க விரும்பினால் மட்டுமே உள்ளே விடுகிறார்கள். யாரையுமே அவர் பார்த்த மாதிரி தெரியவில்லை. எங்கள் பக்கத்துத் தொகுதி எம்.எல்.ஏ உள்ளேயிருந்து வந்தார். அவராகத்தான் இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. கேட்பதில் என்ன தவறு? ‘நான் கோபிதாங்க’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவருக்கு சந்தோஷம். சில கேள்விகளைக் கேட்டார். அவர் விசாரித்து முடித்த பிறகு ‘அம்மாவை பார்த்தீர்களா?’ என்றேன். ‘யாரையும் பாக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க’ என்றார். மூன்று நிமிடங்கள் பக்கத்தில் நின்றிருந்தார். இன்று வெயில் அதிகம். ‘நான் காருக்கு போகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். ஏஸிக்குள் அமர்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டார்.

முதல் தடுப்புக்கு அருகில் நின்றிருந்தவர்களை போலீஸ்காரர்கள் கன்னடத்தில் துரத்திக் கொண்டேயிருந்தார்கள். ஒரு ஐபிஎஸ் அதிகாரி யாரிடமோ கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர்தான் யாரையும் உள்ளே விடாமல் துரத்திக் கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர். ‘மேடமுக்கு வயிற்று வலி அது இதுன்னு கன்னடச் செய்திகளில் போடுகிறார்கள்..அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ்ச் செய்தித்தாள்களிலும் கூட அப்படித்தான் எழுதியிருந்தார்கள். ஜெயா டிவிக்காரர்கள் தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். தந்தி டிவி வேன் நின்று கொண்டிருந்தது. டைம்ஸ் நவ், என்.டிடிவி உட்பட பல ஆங்கிலச் சேனல்கள் முகாம் அடித்திருக்கின்றன. என்.டிடிவியின் இமாம் சித்திக் நேரடி ஒளிபரப்பில் பேசிக் கொண்டிருந்தார். நான் முகத்தை கேமராவுக்குக் காட்டிக் கொண்டிருந்தேன். டிவியில் என் முகம் வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத கருப்புச்சட்டையணிந்த அதிமுகவினர் ‘அம்மாவை விடுதலை செய்’ என்று ஓடி வந்துவிட்டார்கள். இமாம் அவர்களிடம் பேசத் தொடங்கிவிட்டார். ‘தொலைந்து போங்க’ என்று நகர்ந்துவிட்டேன். ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிக்கையாளர்களோடு ஒப்பிடும் போது கன்னடச் செய்தியாளர்கள் சொற்ப எண்ணிக்கையில்தான் இருந்தார்கள். 

நகராட்சித் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள், மேயர்கள், எம் எல் ஏக்கள், எம்பிக்கள் என்று சகலரும் வட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது கோரிக்கை மனுவைக் கொடுத்தால் வாங்குவார்களா என்று தெரியவில்லை. முதல் தடுப்பைத் தாண்டிய பிறகு அமைச்சர்கள் நிலத்தில் அமர்ந்திருந்தார்கள். மொத்த தமிழகமும் கர்நாடக சிறைவளாகத்திற்குள் புரண்டு கொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். 

பெங்களூர்- ஓசுர் சாலையின் பெரும்பாலான ஹோட்டல்களில் அதிமுகவினர்தான் இருக்கிறார்கள். ரெயின் ட்ரீ, கீஸ் என்று பல ஹோட்டல்களுக்குள்ளும் அதிமுக வண்டிகள் நிரம்பியிருக்கின்றன. இன்றிரவும் அங்கேயேதான் தங்கப்போவதாக அந்த எம்.எல்.ஏ சொல்லியிருந்தார். அவரைப் போலவேதான் மற்றவர்களும் தங்குவார்கள் என நினைக்கிறேன். ஜாமீன் மனு விசாரனையைத் தள்ளி வைத்துவிட்டார்கள். இனி எப்படியும் ஜாமீன் கிடைக்க சில நாட்கள் ஆகும் என்பதால் இந்த கேம்ப் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போலிருக்கிறது. 

போலீஸ்காரர்கள் துரத்துவது ஓவர் டார்ச்சராக இருந்தது. பக்கத்தில் அமைச்சர்களின் பி.ஏக்கள் ஒரு பெட்டிக்கடையில் பிஸ்கெட் தின்று கொண்டிருந்தார்கள். மணி மூன்று ஆகியிருந்தது. அவர்களிடம் பேச்சுக் கொடுத்த போது வெகு சிலர் பந்தா இல்லாமல் பேசினார்கள். இன்னமும் யாருமே உணவருந்தியிருக்கவில்லை. எவ்வளவு ராஜ வாழ்க்கை வாழ்பவர்கள்? இங்கே காய்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘நீங்க சாப்டீங்களா?’ என்று ஒருவர் கேட்டார். பிரியாணிக்கடை ஒன்றுக்கு வழி காட்டினேன். எனக்குத் தெரிந்து அந்த ஏரியாவில் பிரியாணிக்கடை மட்டும்தான் இருக்கிறது. சிக்கன் பிரியாணி எண்பது ரூபாய். பெப்ஸி பன்னிரெண்டு ரூபாய். அமைச்சருடன் செல்வதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். 

‘பிரியாணி சாப்பிடுவாரா?’ என்றேன்.

‘அதெல்லாம்’ என்றார்.

‘நேற்று அழுதுவிட்டு இன்று பிரியாணியா?’ என்று வாய் வரைக்கும் வார்த்தை வந்துவிட்டது. ஏற்கனவே எனக்கு சனி திசை. பைக்கை கிளப்பிக் கொண்டு வந்துவிட்டேன்.

நாகமாணிக்கக்கல் எங்கே கிடைக்கும்?

ஊர்ப்பக்கங்களில் கற்களைத் தேடுபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். கற்கள் என்றால் வெண்செங்கற்களிலிருந்து(வெங்கச்சங்கல்) நாக மாணிக்கக் கல் வரையிலும். காங்கேயேம் கரூர் பக்கங்களில் நிறையக் கற்கள் கிடைப்பதாகச் சொல்வார்கள். ‘ஒரு எட்டு போய்ப் பார்த்தால் லட்சமாவாது தேறும்’ என்கிற நினைப்பில் வண்டியை எடுத்துக் கொண்டு செல்வார்கள். அது கிடைக்கிறதோ இல்லையா என்பது வேறு பிரச்சினை. ஆனால் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எதற்காக இப்படி? ‘மான் துள்ளினாலே மாணிக்கமும் மரகதமும் குதித்து வரும்’ என்று அந்தக் காலத்து புலவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள் அல்லவா? இப்பொழுது மானும் இல்லை துள்ளுவதும் இல்லை- ஆனால் ஒரு காலத்தில் கொங்கு நாட்டில் இந்தக் கற்கள் நிறையக் கிடைத்திருக்கின்றன. இங்கிருந்து ரோம் வரைக்கும் சென்றிருக்கின்றன. ரோமாபுரிச் சீமாட்டிகளுக்கு இந்தக் கற்கள் மீது அவ்வளவு மோகம். இன்னமும் மேற்கத்திய நாடுகளில் இந்தக் கற்களுக்கு கிராக்கி அதிகம். Semi Precious stones. 

அந்தக் காலத்தில் மாணிக்கம், வைடூரியம், நீலக்கல், மரகதம் என்று விதவிதமாகக் கிடைத்திருக்கின்றன. யாரும் சுரங்கம் எதுவும் தோண்டியதில்லை. இப்பொழுது வரைக்கும் அதே நிலைமைதான். கிடைக்கும் கற்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் இன்னமும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. உழவு ஓட்டும் போதும் கிணறு வெட்டும் போதும் காடுகளில் கற்களைப் பொறுக்கி அகற்றும் போதும் கிடைக்கின்ற கற்கள் இவை. இதை விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொள்வதற்கு புரோக்கர்கள் உண்டு. ஐம்பதாயிரம் பெறுமானமுள்ள கல்லை ஆயிரத்துக்கோ ஐந்தாயிரத்துக்கோ வாங்கிக் கொள்வார்கள். விவசாயிகளுக்கு அதன் உண்மையான மதிப்பு தெரியாது. கிடைக்கிற விலைக்குக் கொடுத்துவிடுவார்கள். கொடுக்கவில்லையென்றால் ‘கவர்மெண்ட்டுக்கு தெரிஞ்சுதுன்னா காட்டை அவங்களே எடுத்துக்குவாங்க’ என்று புரளியைக் கிளப்பினால் போதும். பதறிவிடுவார்கள். கற்களின் வியாபாரம் ஒரு மிகப்பெரிய உலகம். ஒழுங்குபடுத்தப்படாத உலகம்.

இப்படியொரு உலகம் இருக்கும் போது பன்னாட்டு நிறுவனங்கள் அமைதியாக இருப்பார்களா? அரசின் அனுமதி பெறுவது குறித்தும் சுரங்கம் அமைப்பது குறித்தும் எல்லாவிதமான முஸ்தீபுகளிலும் இறங்குகிறார்கள். யாரைப் பிடித்தால் வேலை ஆகும் என்று பார்க்கிறார்கள். எந்த அரசியல்வாதியையும் அதிகாரியையும் விலை பேச முடியும் என்று பார்க்கிறார்கள்.ஆனால் இந்த நிறுவனங்கள் வந்து சுரங்கம் தோண்டிவிட்டால் இந்தக் கற்களை வைத்து வியாபாரம் நடத்தும் புரோக்கர்களின் தொழில் இருளடைந்துவிடுமே? புரோக்கர்கள் வழியாக இந்தக் கற்கள் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதியின் வருமானம் அஸ்தமித்துப் போய்விடுமே? அதனால் அரசியல்வாதி சும்மா இருப்பானா? களமிறங்குகிறான். கடத்துகிறான். மிரட்டுகிறான்.

இத்தகையதொரு முடிச்சை எடுத்துக் கொண்டு ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது. மிளிர்கல். இரா.முருகவேள் எழுதியிருக்கிறார்.

முருகவேளின் எழுத்து மீது எனக்கு அபரிமிதமான மரியாதை உண்டு. டேனியலின் ‘Red Tea' நாவலை ‘எரியும் பனிக்காடு’ என்று முருகவேளின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது பிரமித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு என்று நினைத்துவிடுவதற்கு எந்தச் சாத்தியத்தையும் விட்டு வைக்காமல் மொழிபெயர்த்திருப்பார். அப்படிப்பட்டவரின் எழுத்து என்பதால் மிளிர்கல் நாவலை எடுக்கும் போதே உற்சாகமாக இருந்தது.

முல்லை என்கிற பெண் டெல்லியிலிருந்து வருகிறாள். சிலப்பதிகாரத்தில் வரும் இடங்களை பார்த்துவிட வேண்டும் என்கிறாள். அதை ஆவணமாக்கும் எண்ணமும் அவளுக்கு இருக்கிறது. இடதுசாரி இயக்கத்தில் இருக்கும் நவீன் என்கிற இளைஞனை துணைக்குச் சேர்த்துக் கொள்கிறாள். இருவரும் பூம்புகாருக்கு பயணிக்கிறாள். அங்குதான் ப்ரொபஸர் ஸ்ரீகுமார் அறிமுகமாகிறார். அவர் ஆய்வறிஞர். மூவருமாக கோவலன் கண்ணகியின் இடங்களைத் தேடுகிறார்கள். அந்த ஊரின் பழைய இடங்களைப் பார்க்கிறார்கள். மாதவி வாழ்ந்த பகுதியில் அலைகிறார்கள். பூம்புகாரைப் பார்த்துவிட்டு காவிரியின் வடகரையில் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் நடந்த பாதையிலேயே பயணிக்கிறார்கள். இது வெறும் கோவலன் கண்ணகி சென்ற பாதையைத் தேடும் பயணமாக மட்டும் தொடங்கி பிறகு சிலப்பதிகாரத்தின் ஆன்மாவைத் தேடும் பயணமாக மாறுகிறது. ஒவ்வொரு ஊராகப் பார்த்துவிட்டு மதுரையில் ஆயர்சேரி, கோவலன் பொட்டல் ஆகியவற்றையெல்லாம் தேடிப்பார்க்கிறார்கள். கோவலன் பொட்டலில் இருக்கும் சுடுகாட்டில் இன்னமும் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல் மீது வைத்துத்தான் கோவலனை வெட்டிக் கொன்றார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். பேராசிரியர் சாந்தலிங்கன், தோழர் கண்ணன் போன்றவர்கள் உதவுகிறார்கள். கேரள-தமிழ்நாட்டின் எல்லையில் இருக்கும் கண்ணகி கோவில், கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுடன் அவர்களது பயணம் முடிவடைகிறது.

இந்தப் பயணத்தில்தான் Semi Precious stone கற்களைப் பற்றிய கதையும் இணைந்து வருகிறது. அதைத் தேடும் புரோக்கர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், உள்ளூர் தாதாக்கள் என்று பின்னுகிறது.

நாவல் முழுவதுமே முல்லையும் நவீனும் கேட்கும் கேள்விகளுக்கு ஸ்ரீகுமார் சலிக்காமல் பதில் சொல்கிறார். இந்த ஒவ்வொரு பதிலுமே வாசகருக்கான திறப்பு. யோசிக்கச் செய்கிறது. உண்மையிலேயே கோவலனும் கண்ணகியும் இருந்தார்களா? கண்ணகியை ஏன் கொங்கர் குலச் செல்வி என்கிறார்கள்? அவளுக்கும் கொங்கு நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவள் வாழ்ந்த நாடான சோழ நாட்டின் மன்னர்களையும் அவள் பழி வாங்கிய பாண்டிய நாட்டின் மன்னர்களையும் விட சேரன் மன்னன் ஏன் அவளுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான்? ஏன் இந்த மக்கள் இன்னமும் கண்ணகியைக் கொண்டாடுகிறார்கள்? இடைப்பட்ட காலத்தில் ஏன் சிலப்பதிகாரத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை? 

இப்படி ஏகப்பட்ட கேள்விகள். எல்லாவற்றுக்கும் பதிலைக் கண்டுபிடிக்கிறார் முருகவேள். சிலப்பதிகாரக் கதையில் இருக்கும் லாஜிக் சிக்கல்களைத் தொடுகிறார். கண்ணகியின் பூர்விகத்தைப் பற்றி பேசுகிறார். சிலப்பதிகாரத்தில் வரும் பெரும்பாலான பெயர்கள் பொதுவான பெயர்கள் இல்லை. மாசாத்துவன், கண்ணகி, வசந்தமாலை என்பதெல்லாம் தனிமனிதனின் பெயர்கள். ஆனால் கோவலன் என்பது பொதுப்பெயர். வள்ளுவர் என்பது போல. அதற்கான காரணத்தைப் பற்றி நாவல் பேசுகிறது. கணித அறிஞர் பிதாகரஸ் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. ரோம வணிகம் பற்றிய விவரங்கள் உண்டு. கற்கால நினைவுச்சின்னங்கள் பற்றிப் பேசுகிறது. சமணத்துறவிகளின் வாழ்முறை பற்றிய விவரங்கள் இருக்கின்றன. மறுபிறப்பு பற்றிய விவாதங்கள் இருக்கின்றன. சமணர் படுக்கைகள் ஏன் குறிப்பிட்ட வடிவத்தில் கற்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன என்கிற தகவல் உண்டு. தமிழக வரலாற்றின் இருண்டகாலம் என்று சொல்லப்படுகிற களப்பிரர்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அது ஏன் இருண்டகாலம் இல்லை என்கிற பதிலும் உண்டு. 

இன்றைய விவசாயிகளின் பிரச்சினைகள் உண்டு. பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு பற்றிய பார்வை உண்டு. இடதுசாரி அமைப்புகள் பற்றிய விவரங்களைத் நாவல் பேசுகிறது- இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எந்தத் தகவலும் சலிப்படையச் செய்வதில்லை. ‘இந்த மனுஷன் எவ்வளவு உழைத்திருக்கிறார்?’ என்ற பிரமிப்புத்தான் உருவாகிறது. மிளிர்கல் நாவலை வாசிக்க இலக்கியம் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. சித்தாந்தங்கள் பற்றிய புரிதலும் அவசியமில்லை. வரலாற்று ஆய்வாளனாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருப்பின் - இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றை முந்நூறு பக்கங்களில் குறுக்குவெட்டாக அரிந்து காட்டிவிடுகிறது.

மிக இயல்பான மொழியில் எந்த ஜிகினா வேலையும் இல்லாமல் மடமடவென நாவல் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. நாவலை வாசிக்கும் போது நமக்குள் கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகளை பெரும்பாலும் கதாபாத்திரங்களே எழுப்பிவிடுகின்றன. அவை வெறும் சிலப்பதிகாரத்திலிருந்தும் இடதுசாரி சித்தாந்தத்திலிருந்து மட்டும் எழும் கேள்விகள் இல்லை. நற்றினை பற்றியும் புறநானூறு பற்றியும் பதிற்றுப்பத்து பற்றியும் கல்வெட்டுக்கள் பற்றியும் கற்களைத் தேடியலையும் புரோக்கர்கள் பற்றியும் நாகமாணிக்கம் பற்றியும் இன்னும் என்னனென்னவோ பற்றியும்....

நமக்குள் எழும் பெரும்பாலான கேள்விகளுக்கு நாவலில் முழுமையான பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. நாவல் வழியாகக் கிடைக்கிற பதில்தான் இறுதியானது என்றும் அர்த்தமில்லை. ஆனால் தன் போக்கில் இந்த நாவல் உருவாக்குகிற கேள்விகள் முக்கியமானவை. நாவல் திறந்து காட்டுகிற வரலாற்றின் பக்கங்கள் அதிசுவாரசியமானவை. நிற்காத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அதன் விறுவிறுப்பு புதிரானது. 

ஒரு தேடலை உருவாக்குவதைவிடவும் நாவலுக்கு வேறு என்ன பெரிய வெற்றி அமைந்துவிட முடியும்? இதுவரை நான் சிலப்பதிகாரத்தை முழுமையாக வாசித்ததில்லை. ஜெயமோகனின் கொற்றவை வாசித்ததுண்டு. அது மிகச் சிறந்த நாவல் என்றாலும் அது சிலப்பதிகாரத்தை முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் மிளிர்கல் தூண்டியிருக்கிறது. இன்னொரு முறை கொற்றவையை வாசிக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. பூம்புகார் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என ஆசை வந்திருக்கிறது. பிதாகரஸ் பற்றியத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என குறித்து வைத்திருக்கிறேன். கொடுங்கலூர் வெளிச்சப்பாடுகள் பற்றிய விவரங்களின் மீது ஆர்வம் வந்திருக்கிறது. கொங்குநாட்டின் கற்கள் பற்றிய தேடல் குறித்தான விருப்பம் உண்டாகியிருக்கிறது. Chain Reactions. இத்தகைய சங்கிலித் தொடர் ரியாக்‌ஷன்களைத்தான் ஒவ்வொரு வாசிப்பிலும் மனம் விரும்புகிறது. நாம் வாசிக்கும் எழுத்தானது ஒரு தேடலை உருவாக்குவதைத்தான் மனம் எதிர்பார்க்கிறது. ஆனால் அது அனைத்து வாசிப்பிலும் சாத்தியம் இல்லை. ஏதாவது சில புத்தகங்களே இத்தகைய சங்கிலிப்பிணைப்பைத் தூண்டிவிடுகிறது. இப்பொழுது மிளிர்கல் தூண்டியிருக்கிறது.

மொத்தம் இருநூற்றியறுபத்தைந்து பக்கங்கள். இருநூறாவது பக்கத்திற்கு மேல் அடுத்த அறுபத்தைந்து பக்கங்களில் நிறைய இடங்களில் கத்தரி போட்டிருக்க முடியும் என்று தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். அதைச் செய்திருந்தால் நாவல் இன்னமும் இறுக்கமானதாக மாறியிருக்கும்.

பொன்னுலகம் பதிப்பகம்,
4/413, பாரதி நகர், 3 வது வீதி,
பிச்சம்பாளையம் அஞ்சல்
திருப்பூர் - 641 603
# 94866 45186
gunarpf@gmail.com

ஆன்லைன் விற்பனையில் மிளிர்கல்

Sep 29, 2014

தண்டனை வேண்டுமா வாத்தியாரே?

நல்லியண்ணன் என்றொரு பையன் இருந்தான். எனக்கு இரண்டு வருடங்கள் ஜூனியர். ஒரே தனிப்பயிற்சியில் படித்தோம். மாலை நேர வகுப்புகள். நான் மாதம் முப்பத்தைந்து ரூபாய் தர வேண்டும் என்றால் என்னைவிட இரண்டு வருடம் சிறியவன் என்பதால் அவனுக்கு இருபத்தைந்து ஃபீஸ். ஒரே தனிப்பயிற்சி வகுப்பு என்றாலும் நாங்கள் வெவ்வேறு பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தோம். அவன் உள்ளூரிலேயே அரசுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அவர்கள் திருநெல்வேலி பக்கத்திலிருந்து வந்த்திருந்தார்கள். அவனது அப்பா ஒரு அடுமனையில் (பேக்கரி) ஸ்வீட் மாஸ்டர். ஜிலேபி லட்டு போன்ற பொருட்களை மாதச் சம்பளத்திற்கு செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். 

நல்லி அதிபயங்கர சேட்டைக்காரன். யாரையாவது வம்பிழுத்துக் கொண்டேயிருப்பான். அவனிடம் முடிந்தவரையில் அடங்கிப் போய்விடுவார்கள். இல்லையென்றால் அடுத்த நாள் சட்டையின் பின்னால் இங்க் அடித்துவிடுவான். அதுவும் எப்படி? ஸ்பெஷல் ஃபார்முலாவில் தயாரிக்கப்பட்ட இங்க் அது. விளக்கெண்ணெயில் காபித்தூள் டிக்காஷன் அரைப்பங்கு மஞ்சள் பொடி கால் பங்கு என்று கண்டதையெல்லாம் கலந்து எடுத்து வந்திருப்பான். எவ்வளவுதான் துவைத்தாலும் கறை இருந்து கொண்டேயிருக்கும். இதை ஆசிரியர்களிடம் சொல்லி வைத்தால் ஆசிரியர்களும் அமைதியாக இருக்கமாட்டார்கள். இவனை ஏதாவதொரு காரணத்தை முன்னிட்டு அடித்துக் கொண்டே இருப்பார்கள். இவனும் அடித்த ஆசிரியர்களை பழிவாங்க புதிது புதிதாக ஏதாவதொரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பான். Technocrat.

வாத்தியார் சைக்கிளின் முன்சக்கரத்தில் ஆணியைச் சொருகுவது, வாத்தியாருக்குத் தெரியாமல் தண்ணீர் பாட்டிலில் எச்சிலைத் துப்பி வைப்பது போன்ற தியாகராஜர் காலத்திய சேஷ்டைகள் எல்லாம் சலித்துப் போன பிறகு வேறு சில தண்டனைகளைக் கண்டுபிடிப்பதற்காக இடது மூளையையும் வலது மூளையையும் 24x7 இல் கசக்கிக் கொண்டிருந்தான். இந்த மாதிரியான விவகாரங்களில் அறிவுரை கேட்க சரியானவன் என்று என்னை நம்பிக் கொண்டிருந்தான். அதற்கு காரணமிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக வண்டியின் பெட்ரோல் டேங்கில் சர்க்கரையைப் கலந்துவிடும் உத்தியை சொல்லிக் கொடுத்திருந்தேன். எனக்கு அந்தளவுக்கு சுயமான அறிவெல்லாம் இல்லை. எங்கள் பள்ளியில் பொன்னுச்சாமி ஆசிரியரின் டிவிஎஸ் 50 வண்டியின் பெட்ரோலுக்குள் கரும்புச் சர்க்கரையை ஒரு மாணவன் கலந்த கதை தெரியும். அதனால் அந்த ஆசிரியர் நொந்து போன கதையும் தெரியும். பெட்ரோலோடு கலந்துவிடும் சர்க்கரை எஞ்சினுக்குள் அப்பிக் கொள்ளும். மொத்தமாக கழட்டி சுத்தம் செய்ய வேண்டும். இந்த நுட்பத்தை நான் நல்லிக்குச் சொல்லிக் கொடுக்கவும் அதை அவன் இம்மி பிசகாமல் தனது கணக்கு ஆசிரியரிடம் செயல்படுத்தி புளகாங்கிதம் அடைந்துவிட்டான். அதிலிருந்து அவனது Trusted partner ஆகிவிட்டேன்.

நமக்கும் இது போன்ற நண்பர்கள் தேவை. ஒரு முறை அப்துல் அஜீஸ் என்கிற மாணவன் என்னிடம் லோலாயம் செய்து கொண்டிருந்தான். அவனையெல்லாம் அடிக்கிற அளவுக்கு என்னிடம் தெம்பு இல்லை. நல்லியிடம்தான் சரணடைந்திருந்தேன். நல்லி அஜீஸை தொலைப்பதற்காக இரண்டு நாட்கள் ஸ்கெட்ச் போட்டான். அஜீஸ் எப்பொழுதுமே சைக்கிளைத் தள்ளியபடி ஓடிச்சென்று ஜம்ப் அடித்து வண்டி மீது அமர்வான். இதுதான் அவனது பலவீனமான புள்ளியாக இருந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆக்கப்பூர்வமான சதியாலோசனைக்குப் பிறகு நல்லியண்ணன் என்னிடமிருந்து காம்பஸை வாங்கி அஜீஸின் மிதிவண்டி ஸீட்டுக்கு அடியில் பொருத்திவிட்டான். அஜீஸின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று ஒன்றரை வினாடி மட்டும் நினைத்துப் பாருங்கள். திகிலாக இருக்குமே? அதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் அஜீஸூக்கு மட்டுமில்லை எங்களுக்கும் நல்ல நேரம்தான். திட்டமிடலில் நிகழ்ந்த ஏதோ ஒரு டெக்னிக்கல் பிரச்சினையினால் காம்பஸின் நுனி முழுமையாக வெளிவரவில்லை. வெளிவந்திருந்தால் எங்களை சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்திருப்பார்கள். கால் இஞ்ச்சோ அல்லது அரை இஞ்ச்சோதான் வெளி வந்திருந்தது. ஆனால் அது போதாதா? பம்ஸை பஞ்சராக்குவதற்கு? ஆகிவிட்டது. ‘அய்யோ அம்மா’ என்று கவுண்டமணி வாய்ஸில் கதறிக் கொண்டு விழுந்தான். அடுத்து வெகு நாட்களுக்கு ஒரு பக்கமாகத் தூக்கியபடியே அமர்ந்திருந்தான்.

அப்படிப்பட்ட வல்லவன் இந்த நல்லியண்ணன். ஆறுமுகம் என்றொரு வாத்தியார்தான் அவனுடைய ஹிட் லிஸ்ட்டில் முதலாவதாக இருந்தார். பெல்பாட்டம் அணிந்து வருகிற ஆசிரியர் அவர். அந்த மனுசன் நல்லியை நாற்காலி போடச் சொல்லிவிட்டார். அந்த தண்டனை தெரியும் அல்லவா? சுவரை ஒட்டியபடி நாற்காலியில் அமர்வது போன்ற தொனியில் முட்டியை மடக்கியபடி நிற்க வேண்டும். நாற்காலி இருக்காது- அது இருப்பதான பாவனையில் நிற்க வேண்டும். ஐந்து நிமிடத்தில் கால் கடுகடுக்கத் தொடங்கிவிடும். அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. நல்லி சைட் அடித்துக் கொண்டிருந்த பெண்ணை அழைத்து வந்து பக்கத்தில் நிறுத்தி வைத்துவிட்டார். நல்லி அசையும் போதெல்லாம் கொட்டு வைக்க வேண்டும் என்பதுதான் அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலை. அந்தப் பெண்ணுக்கு இவன் மீது பயங்கரக் கடுப்பு இருந்திருக்கும் போல. இதுதான் சாக்கு என்று உச்சி மண்டையில் கபடி ஆடிவிட்டாள்.

‘அவனை விடக் கூடாது’ என்று நல்லி சொல்லிக் கொண்டு திரிந்தான். அவருக்கு ஏதாவதொரு புதிய தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். என்ன யோசித்துப் பார்த்தாலும் புதிய தண்டனையை யோசிக்கவே முடியவில்லை. கும்பிபாகம், கிருமிபோஜனம் எல்லாம் எங்களுக்கு அறிமுகமாகியிராத பருவம் அது. எங்கள் ரேஞ்சுக்கு சப்பாத்திக்கள்ளி ஒரு தோதான ஐட்டமாக இருந்தது. அதன் பழங்களைப் பறிக்கும் போது முள் குத்து வாங்குவோம். எவ்வளவுதான் நேக்காக முயற்சித்தாலும் முள் குத்திவிடும். ஆனால் முள் எந்த இடத்தில் ஏறியது என்று தெரியாது- அவ்வளவு சிறியதாக இருக்கும். ஆனால் குத்திய இடத்தில் மரண வேதனையாக இருக்கும். அது ஒரு நல்ல ஆயுதம்தான். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் பெருங்குழப்பம் வந்து சேர்ந்துவிட்டது. எதிரி சம வயதை உடையவனாக இருந்தால் பேச்சுவாக்கில் தேய்த்துவிட்டுவிடலாம். ஆனால் ஆசிரியரிடம் தொட்டு பேசுவதெல்லாம் ஒத்து வராது. அதனால் வேறொரு ஆயுதத்தை எதிரி மீது பிரயோகப்படுத்த வேண்டிய நிர்பந்தம் வந்து சேர்ந்துவிடது. இன்னொரு வஸ்து மப்பூட்டான் இலைகள். அதுவும் கொடூரமான தண்டனைதான். உடலில் பட்டால் போதும். பயங்கரமான பிய்ப்பு ஆரம்பித்துவிடும். அதைத் தொடாமல் விட்டுவிட்டால் அவ்வளவாக பிரச்சினை இருக்காது. ஆனால் கை சும்மா இருக்காமல் சொறிந்துவிடும். எரிச்சல் தாங்க முடியாது. இந்த இலையிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. உடல் மீது பட வேண்டும். துணி மீது பட்டால் அவ்வளவு பெரிய விளைவு இருக்காது. அதனால் அதையும் தவிர்த்துவிட்டான்.

அந்தச் சமயத்தில்தான் எங்களுக்கு பூனை பூட்டான் அறிமுகமாகியது. வாய்க்கால் தண்ணீர் பாயும் கரும்புக்காடு ஓரமாக இருக்கும். சிறிய பந்துவடிவத்தில் காய். நல்லியும் நானும் வாய்க்காலில் துண்டை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது உடல் எரியத் தொடங்கியது. இத்தனைக்கும் நாங்கள் எந்தச் செடியையும் தொடவில்லை. முதுகு நெஞ்செல்லாம் அலறத் தொடங்கியது. ஒன்றுமே புரியவில்லை. பயந்துவிட்டோம். ஏதோ விபரீதம் என்று கிட்டத்தட்ட அழும் நிலைமை. அந்தக் கரும்புக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த அக்கா எங்களிடம் விசாரித்துவிட்டு பூனை பூட்டானைக் காட்டினார். அப்பொழுது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். ட்ரவுசர் போட்டுத் திரிந்த காலம். ‘அது ட்ரவுசர்ல கூட அப்பியிருக்கும் தம்பி’என்றார். அவ்வளவுதான். ட்ரவுசரை எல்லாம் கழட்டி வீசிவிட்டு வாய்க்காலுக்குள் குதித்ததுதான். முக்கால் மணி நேரத்திற்கு பிறகுதான் ஒரு சுமாராக இருந்தது. பூனை பூட்டானுக்கு அவ்வளவு வீரியம். காற்று வேகமாக அடித்தாலே அதன் மொளங்கு காற்றில் பறக்க ஆரம்பித்துவிடும்- பஞ்சு மாதிரி. அது உடலில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். அலற வேண்டியதுதான். அந்த மொளங்கு மிகச் சிறியதாக இருக்கும் என்பதால் சட்டை பேண்ட்டைக் கூடத் தாண்டிவிடும். இதுவல்லவா ஆயுதம்?

நல்லிக்கு பயங்கர சந்தோஷம். வெடிகுண்டைக் கையாள்வது போல நான்கைந்து காய்களைப் பறித்து மழைக்காகிதத்தில் போட்டு ஒரு நூலை வைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டான். ஆறுமுகம் அவுட் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த நாள் மதியம் முதல் பீரியட் ஆறுமுகம் வாத்தியாருடையது. அதற்கு முன்பாகவே மதிய உணவுக்குக் கூட போகாமல் நல்லி காத்திருந்தானாம். எல்லோரும் போய்விட்ட பிறகு அந்தக் காய்களை அதே வெடிகுண்டு லாவகத்துடன் எடுத்து வந்து அவரது நாற்காலி கை வைக்கும் மேசை என மனப்பூர்வமாக தேய்த்துவிட்டான். சோலி சுத்தம். அந்த ஆறுமுகத்தின் அசுபவேளை வந்து சேர்ந்தது. வழக்கம் போல வகுப்பிற்குள் வந்தவர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். அவர் கண்டாரா? பாவம். அதிகபட்சம் முக்கால் நிமிடங்கள்தான்.மாணவர்களுக்கு முன்னால் கையை அந்த இடத்தில் வைத்து சொறிவதற்குச் சங்கடமாக இருக்கும் அல்லவா? ஆனால் எவ்வளவு நேரம்தான் பொறுக்க முடியும். அலறிக் கொண்டே எழுந்தவர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தேய்க்கத் தொடங்கியிருக்கிறார். அது ஒன்றும் சாதாரண எரிச்சலாக இருக்காது. மேசையில் எதுவுமே இல்லை ஆனால் எரிகிறது. அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. மாணவர்களுக்கும் காரணம் தெரியவில்லை. நல்லி பற்களைக் கடித்துக் கொண்டு சிரிப்பைக் கட்டுப்படுத்தியபடி அமர்ந்திருக்கிறான். அவசரமாக ஓடியவர் அடுத்த அரை மணி நேரத்திற்கு வரவே இல்லை. அந்தக் காலத்தில் அரசு பள்ளிகளின் கழிவறையைப் போல கேவலமான இடம் வேறு இருக்கவே முடியாது. அங்கு நுழைந்து அரை மணி நேரம் கொடுமையைப் பொறுத்துக் கொள்கிறார் என்றால் அந்த எரிச்சல் எவ்வளவு இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். அரை மணி நேரத்திற்குப் பிறகும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கண்கள் சிவக்க தலைமையாசிரியரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றவர்தான். அதன் பிறகு அந்த வருடத்தில் யாரையுமே அடிக்கவில்லை என்றார்கள்.

நல்லிக்கு அது ஒரு பெரும்சாதனை. சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான். அவனது சேட்டைகள் என்னும் கிரீடத்தில் அவனைப் பொறுத்தவரைக்கும் இதுதான் ஒரு வைரக்கல். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.  அவனுக்கு படிப்பு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. அப்பாவின் வேலையைத்தான் தானும் செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்பொழுதே அவனது அம்மாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அந்தச் சமயங்களில் வீட்டு வேலைகளையெல்லாம் செய்துவிட்டு பள்ளிக்குச் செல்லமாட்டான். அவனுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளைப் பார்த்துக் கொள்வதும் அவனது வேலையாகவே இருந்தது. அந்த ஒரே வருடத்திலேயே அவனது அம்மா காசநோய் முற்றி இறந்து போனார். அவருக்கு பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காகத்தான் எங்கள் ஊருக்கு குடி வந்திருந்தார்கள். ஆனால் அந்த சிகிச்சை தோல்வியில் முடிந்து போனது. 

அம்மாவின் இறுதிக்காரியத்திற்கு சொந்தக்காரர்கள் யாரும் வந்திருக்கவில்லை. நல்லியண்ணன் அழுது கொண்டிருந்தான். அவனது தங்கைக்கு எதுவுமே புரியவில்லை என்று எங்கள் அம்மா சொல்லியது ஞாபகமிருக்கிறது. இறுதிக்காரியம் முடிந்த பிறகு பள்ளிக்கூடத்திற்குச் செல்வதை நிறுத்திவிட்டான். அந்த வருடத்தோடு நல்லியண்ணனின் குடும்பம் திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டது. அவனது அப்பா அங்கேயே ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேரவிருப்பதாகச் சொன்னான். அதன் பிறகு ஒன்றிரண்டு கடிதங்கள் எழுதிக் கொண்டோம். பிறகு தொடர்பு அறுந்துவிட்டது. இப்பொழுது நல்லியண்ணன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. அவர்கள் குடியிருந்த இருந்த இடத்தில் இப்பொழுது மிகப்பெரிய பங்களா வந்துவிட்டது. அந்த பங்களாவை ஒரு அரசு ஊழியர் கட்டியிருக்கிறார் என்று யாரோ சொன்னார்கள். அந்த இடத்தைத் தாண்டும் போது பவழமல்லி மனம் ஆளையே மயக்குகிறது.

Sep 28, 2014

I Love Bangalore

நேற்று திண்டுக்கல்லில் இருந்தேன். கல்லூரியொன்றில் பேச வருவதாக ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி அது. முந்தின நாள் பெங்களூரிலிருந்து கிளம்பும்போதே கடும் போக்குவரத்து நெரிசல். பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் இருக்கும் ஹொசா ரோடு முழுவதும் அதிமுக தொண்டர்களால் நிரம்பிக் கொண்டிருந்தது. வண்டிகள் சாலையை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. கர்நாடக போலீஸார் அவர்களை அனுமதிக்க முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் களோபரத்தில் அந்தப் பகுதியைத் தாண்டவே வெகுநேரம் ஆகிக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் சற்று யோசனையாக இருந்தது. நாளைக்கு தீர்ப்பு குண்டக்க மண்டக்க வந்துவிட்டால் திண்டுக்கல்லிலேயே சிக்கிக் கொள்ள நேரிடக் கூடும். கல்லூரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாடிக்கொம்பு வரைக்கும் சென்று வரலாம் என்றிருந்தேன். அது நாயக்கர் காலக் கோவில். அதெல்லாம் தேவையில்லை என்று தோன்றியது. வீடு திரும்புவதற்கான சாத்தியங்களை மட்டும் பார்க்க வேண்டும்.

மதியம் ஒரு மணிக்கு தலப்பாக்கட்டியில் பிரியாணியை விழுங்கத் தொடங்கும் போதே கடைகளை மூடத் துவங்கியிருந்தார்கள். அவசர அவசரமாகக் கிளம்பினால் பேருந்து நிலையம் வெறிச்சோடத் துவங்கியிருந்தது. ‘நீ அங்கேயே இருக்கிறதுதான் நல்லது’ என்றார்கள். திண்டுக்கல்லில் தனியாக என்ன செய்வது? மதியம் இரண்டரை மணிக்கு ஒரு பாசஞ்சர் தொடரூர்தி இருப்பதாகச் சொன்னார்கள். பிடித்துக் கொண்டேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்தவர்களின் செல்போன்கள் ஒளிரத் தொடங்கின ‘கரூரில் கலவரமாம்...தஞ்சாவூரில் ஒரு கடையைக் கொளுத்திட்டாங்களாம்...வேலூரில் ஒருத்தனை கொன்னுட்டாங்களாம்’ என்ற தகவல்கள் அந்தத் தொடரூர்தியை நிரப்பிக் கொண்டிருந்தன. பயணிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து விசாரித்தார்கள். எல்லோரிடமும் ஒரு கலவர பயம். குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியாக வந்திருந்த பெண்களும், முதியவர்களும் சற்று அதிகமாக மிரண்டிருந்தார்கள். ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றிருந்த போது எதிர் திசையில் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த இன்னொரு வண்டிக்கு மாறிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரைக்கும் திரும்பவும் தங்களின் ஊருக்கே சென்றுவிடுவதுதான் நல்லது. வண்டியில் கூட்டம் குறைந்தது.

ஒவ்வொரு நிலையத்திலும் வண்டியில் ஏறியவர்களை விசாரிக்கத் தொடங்கினார்கள். பேருந்துகள் எதுவும் ஓடவில்லை; எல்லா ஊர்களிலுமே கடைகள் மூடப்பட்டுவிட்டன என்ற தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. அனைத்து ஊர்களிலுமே பேருந்துகள் எரிகின்றன என்பதெல்லாம் வதந்திதான். நம் மக்கள் வெகுவாக பயந்துவிடுகிறார்கள். இந்த செல்போன்களும் அந்த பயத்துக்குள் பெட்ரோல் ஊற்றுகின்றன. வதந்திகளுக்கு றெக்கை கட்டிவிடுவதில் செல்போன்களுக்கு நிகர் செல்போன்கள்தான். அமைச்சர் செந்தில்பாலாஜியை முதலமைச்சராக அறிவித்துவிட்டார்கள் என்று கூட இரு கரூர்காரர் சொல்லிக் கொண்டிருந்தார். அது அவரது விருப்பம் போலிருக்கிறது. வதந்திகளைத் தவிர, தாண்டி வந்த ஒவ்வொரு ஊருமே அமைதியாகத்தான் இருந்தன. மக்களின் பயம் மட்டும்தான் ஒருவித பதற்றத்தை உண்டாக்கியிருந்தது. 

வெள்ளியணை என்ற ஊரில் தொடரூர்தி நின்று கொண்டிருக்கும் போது யாரோ ஒரு குழுவினர் வண்டியை நிறுத்திவிட்டார்கள் என்றார்கள். பெட்ரோல் குண்டுகளை ஓடுகிற வண்டிக்குள் வீசுகிறார்கள் என்றார்கள். அத்தனையும் புருடா. வண்டி ஈரோடு வரும் வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அங்கிருந்துதான் ஆரம்பமானது. பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்குக் கூட பேருந்துகள் இல்லை. ஆட்டோவில் இரு மடங்காக காசு கேட்கிறார்கள். ‘இந்த வாடகைக்கு ஆசைப்பட்டு அங்க இங்க போய் யாராவது வண்டியை நொறுக்கினா என்ன சார் பண்றது?’ என்று தங்களின் அதிக வாடகைக்கு நியாயம் சேர்க்கிறார்கள். ஆனால் வண்டியில் ஏறும் வரைக்கும்தான். ஏறி அமர்ந்ததும் ‘ஈரோடு எப்படி இருக்குங்குதுங்கண்ணா?’ என்றால் அவர் சிரிக்கிறார். நாற்பது அல்லது ஐம்பது பேர்கள் சேர்ந்து ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே கடைகளையெல்லாம் அடைத்திருந்தார்கள். குறிப்பாக டாஸ்மாக்கை மூடியிருந்ததால் அவர்கள் எதிர்பார்த்த விளைவுகள் எதுவுமே நடக்கவில்லை. அதோடு சரி. ஆனால் ஆட்டோ டிரைவர் அவர் பங்குக்கு ‘பஸ்ஸ்டேண்டுலதான் ஒரு பஸ்ஸை எரிச்சுட்டாங்களாம்’ என்றார். ஆனால் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து பார்த்த போது திரும்பிய பக்கமெல்லாம் மனிதத் தலைகள்தான். வண்டி வாகன வசதி இருப்பவர்களை யாராவது வந்து அழைத்துச் செல்கிறார்கள். இல்லாதவர்கள் பாடு பெரும்பாடு. 

ஒரு பெண்மணி குழந்தையை மருத்துவரிடம் காட்டுவதற்காக ஈரோடு வந்திருக்கிறார். செல்போனில் பேட்டரி சார்ஜ் இல்லை. குழந்தைக்கு பால் அல்லது பழம் வாங்கக் கூட கடையில்லை. அந்தியூருக்குச் செல்ல வேண்டும். எப்படிச் செல்வதென்று தவித்துக் கொண்டிருந்தார். இன்னொரு வயதான பெண்மணி கையில் வெறும் பத்து ரூபாயை வைத்துக் கொண்டு திண்டல் செல்ல வேண்டும் என்று நின்று கொண்டிருந்தார். ஆட்டோவும், மினிவேனும் குறைந்தபட்சம் ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஏறுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் தயாராக இருந்தார்கள். அப்படியிருந்தும் அந்த இடத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் நின்று கொண்டிருந்தார்கள். கடைகளை மூடிவிட்டார்கள். பேருந்துகளை நிறுத்திவிட்டார்கள். தொலையட்டும் என்று விட்டுவிடலாம். ஈரோடு மாநகராட்சியில் ஏழரை மணி வரைக்கும் தெருவிளக்குகள் எரியத் தொடங்கவில்லை. அதற்கு பிறகு எரித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அது வரைக்கும் ஊரே இருளடைந்து கிடந்தது. அங்கு எவன் நினைத்தாலும் திருட முடியும். எவன் நினைத்தாலும் உரச முடியும்.  ‘அம்மா சிறைக்குச் செல்வதால் தமிழகமே இருளடைந்துவிட்டது’ என்று சிம்பாலிக்காக உணர்த்திக் கொண்டிருந்தார்கள். இங்கெல்லாம் அனைத்து செய்திச் சேனல்களையும் துண்டித்திருக்கிறார்கள். ஜெயாவில் மட்டும் தமிழகமே கண்ணீர் வடிக்கிறது என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும். அம்மாவும் அப்பாவும் கோபியில் இருந்தார்கள். அவர்கள் திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பயம் அவர்களுக்கு. முப்பத்தைந்து கிலோமீட்டருக்கு பன்னிரெண்டு இரு சக்கர வாகனங்களில் சேர்வலம்(லிஃப்ட்) கேட்டு வந்தேன். பெரும்பாலானவர்கள் வண்டியை நிறுத்துவதில்லை. தனியாகவே வந்தாலும் விரைந்துவிடுகிறார்கள். இதை மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஊரே இருளடைந்து கிடக்கிறது. சேர்வலம் கேட்கிறேன் என்று வந்து எத்தனை பேர் திருட நிற்கிறார்களோ? அவர்களவில் அவர்கள் பயப்பதும் சரிதான். ஆனால் பன்னிரெண்டு நல்லவர்கள் இருந்தார்கள். மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு முப்பத்தைந்து கிலோமீட்டரைத் தாண்டினேன். வழிநெடுகவும் மக்கள் நடந்து கொண்டிருந்தார்கள். வழியில் எந்த இடத்திலும் அசம்பாவிதங்கள் கண்ணில்படவில்லை. மக்களின் பயம்தான் அதிகமும் தெரிந்தது.

எதற்காக இவ்வளவு ரியாக்‌ஷன்? பிரான்ஸிலும் இத்தாலியிலும் அதன் தலைவர்களுக்கு தண்டனையளிக்கப்படும் போது இப்படித்தான் எதிர்வினையாற்றுகிறார்களா? நாம் மட்டும் ஏன் இப்படியாகிக் கொண்டிருக்கிறோம்? இங்கு எத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்? என்ன ஆட்டம் போட்டாலும் ஓட்டுக்கு முந்நூறு கொடுத்தால் வென்றுவிடலாம் என்கிற தெனாவெட்டுதானே இத்தனைக்கும் காரணம். அமைச்சர்களை விட்டுவிடலாம். மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கும் வேடிக்கை பார்ப்பதுதான் வேலை போலிருக்கிறது. கொடுமை.

குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் பதினெட்டு ஆண்டுகள் இழுப்புக்குப்பின். இந்த அளவிற்குக் கூட தண்டனை இருக்கக் கூடாது என்பதில் என்ன நியாயம்? இதில் காவிரி பிரச்சினைக்கு பழி வாங்கிவிட்டார்கள், கருணாநிதியின் சதிச் செயல் என்பதெல்லாம் அபத்தம். மைக்கேல் குன்ஹா மாதிரியான நீதிபதி இருந்ததால்தான் இந்த அளவிற்கேனும் நடந்திருக்கிறது. இதே வழக்கு தமிழகத்திலோ அல்லது வேறு நீதிபதியின் தலைமையிலோ நடந்திருந்தால் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க முடியாது. 2ஜியில் எப்படி தீர்ப்பு வரும்? அதற்கு எப்படி ரியாக்‌ஷன் இருக்கும் என்றெல்லாம் இப்பொழுது சம்பந்தமேயில்லாமல் கேட்க வேண்டியதில்லை. எந்த ஊழலாக இருந்தாலும் வழக்கு நடந்து தண்டனையளிக்கப்படுமானால் அதைவிட ஒரு சாமானிய மனிதனுக்கு என்ன சந்தோஷம் இருந்துவிட முடியும்? இன்னமும் நீதிமன்றங்கள் துணிச்சலாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு விதைக்கப்பட முடியுமானால் அதைவிடவும் நல்ல விஷயம் ஜனநாயகத்தில் வேறு என்ன இருக்க முடியும்? இன்று அந்தச் சந்தோஷமும் நம்பிக்கையும் வந்திருக்கிறது.

I Love Bangalore.

Sep 26, 2014

நீ சைக்கோபாத்தா?

எதிர்பாராத சமயத்தில் சைக்கோபாத் என்ற சொல் காதில் விழுந்தது. பேசிக் கொண்டிருந்த நண்பர் ‘we are all psychopath' என்றார். அந்தச் சொல்லுக்கு முழுமையான அர்த்தம் தெரியவில்லை. அவரிடம் கேட்டால் அவருக்கும் துல்லியமான அர்த்தம் தெரியவில்லை. ஆனால் ‘தனக்கிருக்கும் பிரச்சினைகளினால் சமூகத்தை ஏதாவதொரு வகையில் சீண்டுவது’ என்றார். அவர் சொன்ன அர்த்தம்தான் சைக்கோபாத் என்றால் இங்கு எல்லோருமே அப்படித்தான். 

சீண்டல்கள் என்பதெல்லாம் சிறு வயதிலேயே நமக்குள் வந்துவிடுகிறது. பள்ளியில் சைக்கிள் ஸீட் கவர்களை பிளேடினால் கீறுவதிலிருந்து கைவிடப்பட்ட கைவிடப்பட்ட கட்டடத்தின் கண்ணாடிகளை நொறுக்குவது வரை என்று ஏதாவதொருவகையில் ஒவ்வொருவருமே சைக்கோபாத்தாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ‘இதையெல்லாம் விளையாட்டுத்தனமாகச் செய்தேன்’ என்று தப்பித்துவிடவும் முடியாது. அந்த விளையாட்டுத்தனமே கூட ஒரு வித மனப்பிறழ்வின் விளைவுதானே? ஆனால் அடுத்தவனைக் கீறிவிட்டதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு சைக்கோபாத் என்பதெல்லாம் டூமச். அந்தச் சொல்லுக்கு அதைவிடவும் தீவிரமான பொருள் இருக்கிறது. 

உதாரணங்களைத் தேடிய போது ஒரு பெயர் சிக்கியது. எய்லீன் கரோல் வுர்னோஸ்(Aileen Carol Wuornos). அமெரிக்கப் பெண்மணி. 1989 மற்றும் 1990 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏழு ஆண்களைக் கொன்றிருக்கிறார். அந்தச் சமயத்தில் ப்ளோரிடா மாகாணத்தில் விஸ்வரூபமெடுத்த சீரியல் கில்லர். சாலையின் ஓரமாக நின்று லிப்ட் கேட்பார். கார் சென்று கொண்டிருக்கும் போது ஆளரவமற்ற பகுதிகளில் நிறுத்தச் சொல்லி சுட்டுக் கொன்றுவிடுவார். ஒவ்வொரு கொலை நடந்த போதும் போலீஸார் மண்டை காய்ந்திருக்கிறார்கள். வரிசையாக கைப்பற்றப்பட்ட பிணங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருந்ததுதான் மிச்சம். ஏழாவது விக்கெட் விழுந்த பிறகு இன்னொரு போலீஸ்காரரை எய்லீனுடன் பழக வைத்து அவர்கள் இருவரும் மதுபானவிடுதியை விட்டு வெளியில் வரும் போது கைது செய்திருக்கிறார்கள்.

எய்லீன் பற்றிய கட்டுரைகளும் தகவல்களும் கிட்டத்தட்ட பயமூட்டுபவை. அதைவிடவும் அவள் மீது பரிதாபம் உண்டாக்குபவை. அவள் பிறக்கும் போதே அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிடுகிறார்கள். அது அமெரிக்காவில் சகஜம்தான். ஆனால் அம்மாவும் கூட சீக்கிரமே எய்லீனையும் அவளது சகோதரனையும் விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறாள். குழந்தைகளைத் தாத்தாவும் பாட்டியும் வளர்க்கிறார்கள். பாட்டி குடிகாரி. தாத்தா முரடன். எய்லீனை அடித்து நொறுக்குகிறான். அவ்வப்போது பாலியல் பலாத்காரமும் செய்கிறான். கேட்பதற்கு நாதியில்லை. எய்லீனுக்குத் நினைவு தெரியும் போது அவளது அப்பா சிறையில் தூக்கிலிட்டு இறந்து கொள்கிறான். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சைக்கோபாத் அவன். தனக்கு ஒரே ஆதரவு என சகோதரனை நினைக்கிறாள். அவனும் அவளை விட்டு வைப்பதில்லை. உறவு கொள்கிறார்கள். உலகமே குரூரமானதாகத் தெரிகிறது. புகைப்பிடித்துப் பழகுகிறாள். சிகரெட் வாங்குவதற்கு காசு இல்லை. பதினோரு வயதில் தனது உடலை விற்கத் துவங்குகிறாள். பணம் கிடைக்கிறது. பதினான்கு வயதில் எய்லீன் கர்ப்பமடைகிறாள். ஏதோ ஒரு விடுதியில் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு தன்னை முழுமையான பாலியல் தொழிலாளியாக மாற்றிக் கொள்கிறாள்.

பதினைந்து வயதுக்குள் அவளுக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள். பிஞ்சு மனம் புரண்டு போகிறது. இறுகிக் கல்லாகிறது. அன்பு, பாசம் என்ற சொற்களுக்கெல்லாம் அவளது அகராதியில் இடமே இல்லை. எல்லாமே உறைந்துவிட்ட சொற்கள். சமூகம் அவளைப் பந்தாடுகிறது. 

கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவளுக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு ஏற்படுகிறது. லெஸ்பியனாகவே இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் இருண்ட உலகத்தில் அந்த உறவு மட்டுமே சற்று வெளிச்சம் காட்டுகிறது. இருவருமே சேர்ந்து திருடுகிறார்கள். கொலைகளில் கூட இருவருக்குமே பங்கிருக்கிறது என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். ஆனால் கடைசி வரைக்கும் தான் மட்டுமேதான் கொலைகளைச் செய்ததாக எய்லீன் உறுதியாக இருக்கிறாள். அவளது தோழி மீது எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் எய்லீனின் குற்றங்கள் நிரூபிக்கப்படுகின்றன. அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

2002 ஆம் ஆண்டில் அவளுக்கு விஷ ஊசி ஏற்றி தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

எய்லீன் பற்றிய டாக்குமெண்டரிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிக் ப்ரூம்பீல்ட் என்ற இயக்குநர் அவருடனான உரையாடல்களைப் பதிவு செய்திருக்கிறார். அவரோடு எய்லீன் மிகத் தெளிவாகப் பேசுகிறார். ‘ஆமாம் கொலைளைச் செய்தேன். ஆனால் அவர்கள் என்னைத் துன்புறுத்தினார்கள். பாலியல் அத்துமீறல்களைச் செய்தார்கள்..ஆனால் இங்கு அதையெல்லாம் மறைத்துவிட்டார்கள்’ என்கிறார். தண்டனை நிறைவேற்றுவதற்கு முந்தின நாள் கூட நிக் அவரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என்று பேசுபவர் டென்ஷனாகிறார். ‘வன்புணரப்பட்ட பெண் கொலை செய்யப்படவிருக்கிறாள். புத்தங்களுக்கும் சினிமாவுக்கும் பயன்படுவாள்’ என்கிற ரீதியில் முடித்துவிட்டு எழுந்து செல்லும் வீடியோவைப் பார்க்கும் போது உள்ளங்கை உறைந்து போயிற்று. முதலிலேயே இதைப் பார்த்திருந்தால் இவ்வளவு பதற்றம் உண்டாகியிருக்காது. ஒரு கொலைகாரியின் பேச்சை கேட்கிறோம் என்கிற நினைப்புதான் வந்திருக்கும். ஆனால் எய்லீனின் வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு அதைப் பார்க்கும் போதுதான் அந்தப் பேச்சில் இருக்கும் வலி, வஞ்சிக்கப்பட்டதன் துக்கம் என சகலமும் தெரிகிறது.

அவள் குற்றவாளிதான். இல்லையென்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் எதனால் அவள் சைக்கோபாத் ஆகிறாள்? ஐந்து வயதிலும் பத்து வயதிலும் விளையாட்டுச் சாமான்களையும் பந்துகளையும் வைத்துக் கொண்டு விளையாட வேண்டிய வயதில் குடிகாரனிடமும் காமுகனிடமும் சிக்கிக் கொள்கிறாள். மூச்சுவிடக் கூட இடைவெளியில்லாமல் இந்த உலகம் அவளை எல்லாத்திசைகளிலிருந்தும் நசுக்கிறது. பிஞ்சுப்பருவத்திலேயே மனதுக்குள் நஞ்சு ஏறுகிறது. அவள் தனது வன்மத்தையெல்லாம் எங்காவது இறக்கி வைத்துவிட சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். மனம் ஒரு வேட்டைக்காடு இல்லையா? எந்த இரை வந்து சிக்கும் என்றும் காத்துக் கொண்டிருக்கிறது. எய்லீனின் வேட்டைக்கு ஆண்கள் சிக்குகிறார்கள். சுட்டுப் பொசுக்கிறாள். தன்னை வஞ்சித்த உலகத்தை பழி வாங்கிக் கொண்டிருப்பதாக அவளது மனம் நம்பத் தொடங்குகிறது. அவளது பழிவாங்கலுக்கு இந்தச் சமூகம் இன்னொரு பெயரை வைக்கிறது. ‘சைக்கோபாத்’.

குழந்தைகள் மீதான ஒவ்வொரு வன்முறையுமே அவர்களை கரடுமுரடான பாதைகளுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடுகிறது. சில குழந்தைகள் வெளியில் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் பல குழந்தைகள் மனதுக்குள் புதைத்துக் கொள்கிறார்கள். சொல்வதற்கான சூழல் அமைவதில்லை. ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள், பக்கத்து வீட்டுக்காரனின் கிள்ளுகள், எதிர்வீட்டுக்காரனின் சேட்டைகள் என எதிர்க்க முடியாத வக்கிரங்கள் குழந்தைகளை சைக்கோபாத்களாக மாற்றி விடுகின்றன. வயது கூடக் கூட அவர்களது மனம் வேட்டையாட விரும்புகிறது. பழி வாங்கத் துடிக்கிறார்கள். எல்லோரும் எய்லீனாக மாறுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் எய்லீனின் சாராம்சங்களை ஏதாவதொரு விதத்தில் பெற்றுவிடுகிறார்கள்.

மரண தண்டனைக்கு முந்தின நாள் அளித்த எய்லீனின் நேர்காணல்.

Sep 25, 2014

ஊருக்கு ஒண்ணு வைக்க முடியாதா?

என் பெயர் குணசீலன், முன்னாள் விகடன் உதவி ஆசிரியர்.

சூரிய மின்சாரம் ஏன் நடைமுறைக்கு ஒத்துவராது என்பதைக்குறித்த தங்களுடைய கட்டுரையை வாசித்தேன். நடைமுறைக்கு எப்படி அதனை ஒத்துவரவைக்கலாம் என்பதற்கு என்னுடைய சில யோசனைகள்.

தங்கள் கூற்றுப்படி ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு ஆறு  ஏக்கர் இடம் தேவை. தமிழகத்தில் உள்ள மொத்த ஊராட்சி மன்றங்களின் எண்ணிக்கை பதின்மூன்றாயிரத்து சில்லறை. தமிழகத்தின் மொத்த மின்சார தேவையும் ஏறத்தாழ பதின்மூன்றாயிரம் மெகாவாட்தான். எனவே, ஒவ்வொரு ஊராட்சியும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து வெறும் ஆறே ஆறு ஏக்கர் நிலத்தை இதற்காக ஒதுக்கினால் போதுமே? ஒட்டுமொத்தமாக பார்த்தால்தான் பெரிய அளவில் இடம் தேவை. மாறாக, இந்த மாதிரி ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு மெகாவாட் என்று பிரித்துக்கொண்டால் பெரிய அளவில் இடம் தேவை என்ற கேள்விக்கே இடமில்லை.

நீண்ட அகண்ட இடத்தைப் பராமரிப்பது மிகப்பெரிய வேலை என்பதை குறித்தும் கவலையில்லை. விவசாயம் எல்லாம் பாதிக்காது. நான் தஞ்சாவூர்க்காரன். தோண்டினால் முப்பது நாப்பது அடியில் ஊற்று இருந்தாலும் எங்க ஊரில் இன்னமும் தரிசாக சில நூறு ஏக்கர்கள் கிடக்கின்றன. இதனைவிடவும் மிகப்பெரிய ஒரு ப்ளஸ் இந்த முறையில் ஒன்று உண்டு. அதாவது, ஊராட்சிக்கு ஒரு மெகாவாட் வீதம் சோலார் முறையில் உற்பத்தி செய்யப்படுவதால் மின்சார கடத்துதலில் ஆகும் விரயம் அப்படியே மிச்சப்படுத்தலாம். எங்கோ மேட்டூரில் அல்லது நெய்வேலியில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை தூத்துக்குடிக்கோ சென்னைக்கோ கொண்டு செல்வதில் 30% அளவிற்கு மின்விரயம் ஏற்படுவதாக படித்திருக்கிறேன். ஆக, எந்த இடத்தில் எல்லாம் தேவை இருக்கிறதோ அந்தந்த இடங்களில் ஆறு ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் மின்விரயம் தடுக்கப்படும். ஆக, 13000 மெகாவாட் தேவை எனில், மின்கடத்தலின்போது ஏற்படும் விரயத்தில் 30% அதாவது கிட்டத்தட்ட 3000 மெகாவாட் மின்சார உற்பத்தியே தேவைப்படாதே? மேலும், ஒரு ஊராட்சிக்கென்று ஒரு ஊழியரை நியமித்து இந்த சோலார் பேனல்களை சுத்தப்படுத்துவதும் அரசாங்கத்துக்கு பெரிய செலவாக இராது. 

ஊராட்சிகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பதற்கு ஓர் ஆளை நியமிப்பது எல்லாம் ஊராட்சி மன்ற தலைவர்தான். பெரிய சம்பளம் எல்லாம் இல்லை, ரெண்டாயிரம்தான். எங்க ஊர்ல எங்க சொந்தக்கார பையன் அந்த வேலை செய்கிறான். காலை மாலை இரண்டு நேரமும் தண்ணீர் திறந்து பிறகு நிறுத்துவதும், மாதம் ஒருமுறை தண்ணீர் தொட்டியை கழுவுவதும்தான் அவர் வேலை.

சூரிய சக்திமூலம் ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 8 கோடி செலவு ஆகும் என கேள்வி.  தமிழ்கத்தில் தற்போதைய பற்றாக்குறையான 2000 மெகாவாட் உற்பத்திக்கு சூரிய சக்திமூலம் பெற விரும்பினால் கேவலம் 16000 கோடி மட்டுமே செலவு. சென்னையில் இருக்கும் மக்களுக்கு என மெட்ரோ செலவுக்காக 14500 கோடி செலவு செய்ய முடியும் அரசாங்கத்தால் தமிழகம் முழுமைக்கும் பயன்படும் ஒரு திட்டத்திற்காக இந்தத் தொகையை செலவு செய்ய நினைத்தால் முடியும். ஆனால், காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான கமிஷனுக்காகவும், இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிமூலம் தயாரிக்கபடும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷனும் பாதிக்கப்படும் என்ற காரணத்தாலேயே அரசாங்கம் இதனை செயல்படுத்த மறுக்கிறது. இடப்பற்றாக்குறை மாதிரியான சிறிய காரணங்களைச் சொல்லி திட்டத்தை முடக்கும் அதிகாரிகளுக்கும் இந்த கமிஷனில் மிகப்பெரிய பங்குண்டு. சோலார் மின்சாரம் குறித்து நீங்கள் கருத்துக்கேட்ட அந்த 'வல்லுந‌ரும்' மேற்படி நிறுவனங்களிடம் சந்தாதாரராக இருக்க வாய்ப்பு அதிகமுண்டு.

எத்தனை செலவானாலும் சோலார் திட்டம் வேண்டும் என்ற என்னுடைய கருத்துக்கு வலு சேர்க்க நான் மேலும் முன்வைப்பவை கீழே.

1. எடுக்க எடுக்க வருவதற்கு நிலக்கரி அமுதசுரபி இல்லை. கர்நாடகக்காரனையும் நம்பமுடியாது.

2. அனல், புனல், அணு மின் திட்டங்களுக்கும் செலவுதான் ஆகிறது. அவற்றுக்கு ஆகும் பராமரிப்புக்கும், அவற்றினால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேட்டுக்கு கொடுக்கும் விலையை சூரியபகவானுக்கு காணிக்கையாக‌ படைப்பது விரயமாகாது.

3. சென்னையில் இடப்பற்றாக்குறை என்ற கேள்விக்கும் பதிலுண்டு. சென்னையில் சிந்தாரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரைக்கும் உயர்த்தப்பட்ட மின்வண்டி பாதை  இருக்கிறதே. உயர்த்தப்பட்ட தண்டவாளங்களுக்குமேல் இன்னொரு 20 அடி உயரத்துக்கு இருபுறமும் இரும்பு தூண்கள் அமைத்து அதன்மேல் பேனல்கள் வைக்கலாம். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கும் 15 கி.மீட்டர்கள் இருக்கும். 15 கி.மீ. தூரத்தில் எத்தனையோ ஏக்கர் நிலம் கிடைக்கும். பெரிய அளவில் நிலம் தேவை என்றால் தரையில் இருந்துதான் தேவையா என்ன? இந்தமாதிரி வேறு ஒரு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிற இடத்தை மீள்பயன்பாட்டுக்கு உட்படுத்துவது அறிவுசார் செயலாகும்.

4. நூறு கிலோவாட்டுக்கு மேல் மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது என்பது தங்கள் கூற்று. இந்தியாவின் ஒவ்வொரு சந்துபொந்தையும் மூலைமுடுக்கையும் வார்டுவாரியாக பிரித்துவைத்து அரசு ஆளுமையின் உச்சத்தை தொட்டுவிட்டுச் சென்றிருக்கிறான் வெள்ளைக்காரன். நாம் இன்னும் அதனை முறையாக பயன்படுத்தாமலேயே காலத்தை கழிக்கிறோம். ஒரு நூறு கிலோவாட் மின்சாரத்தை சேமிப்பதற்கு வார்டு ரீதியாக திட்டம் வகுக்கலாம்.

முடியும்னு நினைச்சதாலதான் ஜே.சி.பி., பொக்லைன், கிரேன் எதுவுமே இல்லாம கரிகாலன் கல்லணையை கட்டினான், ஷாஜஹான் தாஜ்மகாலை கட்டினான், ராஜராஜன் பெரியகோயிலை கட்டினான். முடியாதுன்னு நினைச்சதாலதான் நாம குஷ்புவுக்கு கோயில் கட்டுவதோடு நிறுத்திக்கிட்டோம்.

அன்பன்
குணசீலன்

                                                           ***

படிக்கப் படிக்க அண்ணாமலை சினிமா பார்ப்பது போலவே இருந்தது. சாத்தியமே இல்லை என்றும் சொல்ல முடியாது- இதெல்லாம் பாஸிபிளா என்று கேள்வி எழாமலும் இருக்காது. குணசீலன் விகடனில் பணியாற்றியிருக்கிறார். அந்த நுட்பங்கள் ரத்தத்தில் ஊறியிருக்கும் அல்லவா? கற்றுக் கொண்ட மொத்த வித்தையில் துளியை இறக்கி வைத்திருக்கிறார்.  இன்னும் நாம் ட்யூன் ஆக வேண்டியதுதான் பாக்கி.

கருத்துக்கேட்ட வல்லுநர் கமிஷன் வாங்கியிருக்கக்கூடும் என்று சொல்வதற்கு மட்டும் பதில் சொல்லிவிட வேண்டும். அவரைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கல்லூரியில் சீனியர். அப்பொழுதெல்லாம் சுமாராகத்தான் படிப்பார். முதல் வருடத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவர் அழைப்பதாகச் சொன்னாலே எங்களுக்கு கிலி பிடித்துக் கொள்ளும். கட்டுக்கட்டாக அசைன்மெண்ட், ரெக்கார்ட் ஏடுகளை எல்லாம் தலையில் கட்டிவிடுவார். அதுவும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவெல்லாம் தர மாட்டார். நாளைக்கு வேண்டுமென்றால் முந்தின இரவில் கொடுப்பார். விடிய விடிய எழுதிக் கிழிக்க வேண்டும். ‘இவர்கள் எல்லாம் தேறவே மாட்டார்கள்’ என்று சிலரைப் பார்த்து நினைப்போம் இல்லையா? அப்படி நினைத்துக் கொண்டிருந்தோம். அவர்கள் விஸ்வரூபம் எடுத்து முன்னால் நிற்கும் போது வாயடைத்துப் போவோம். அப்படித்தான் நடந்தது.  எம்.ஈ முடித்தார் பிறகு ஒரு சோலார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் பிறகு இன்னொருவருடன் பார்ட்னராகச் சேர்ந்து சொந்தமாகவே சோலார் தொழிலில் இறங்கிவிட்டார். இந்தியாவில் அந்த நிறுவனத்தின் மொத்த இயக்கத்தையும் அவர்தான் பார்த்துக் கொள்கிறார். 

சோலார் விற்றால்தான் அவருக்கு இலாபம். அதனால் அவர் கமிஷன் வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த மின்னஞ்சல் உண்மையிலேயே மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல இதெல்லாம் ரியாலிட்டியில் சாத்தியமா என்று சந்தேகம் எழாமல் இல்லை. அவர் சொல்லியிருப்பது போல அது நம் தனிக்குணம்.

மணிகண்டன்.

Sep 24, 2014

போண்டாமணி வித் அணு

போண்டாமணி என்ற பெயரில் ஒரு நண்பர் அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்புவார். அணு உலைகள் பற்றி அவர் எழுதியிருந்த சுவாரசியமான மின்னஞ்சல்.

                                                                        ***
நம்ம government ஈசியா கிடைக்குதேன்னு அணு உலையை வாங்குது. Maintenance குறைவு. ஒரு 100 பேரைப் போட்டு வேலை வாங்கிட்டா 1000 மெகா வாட் தயாரிச்சு தள்ளிடலாம்.

லாபங்கள் என்ன ?
 1. சின்ன இடத்திலேயே பெரிய லெவல்ல மின்சாரம் - பிளஸ் 
 2. நம்ம கிட்ட அணு கிடைக்கிறது ; நோ பிச்சை - பிளஸ் 
 3. அணு ஆயுதம் தயாரிக்கலாம் ; பாகிஸ்தான் கிட்டேந்து பாதுகாப்பு  - பிளஸ் 
 4. உலக அரங்கில் ஒரு status கிடைக்கும் . நானும் இவ்ளோ மின்சாரம் தயாரிச்சேன் பாத்தியா - பிளஸ் 
அந்த ஏழுமலையான் புண்ணியத்துல எல்லாம்  நல்ல படியா போய் கிட்டு இருந்தா பிரச்சனை இல்லை. ஒரு tube-ஓ, motor-ஓ, generator-ஓ, meter-ஓ, செந்தில் வடக்குபட்டி ராமசாமிக்கு சொன்ன மாதிரி "ஊ ஊ" ன்னு சொல்லிட்டா "கோவிந்தா கோவிந்தா" தான்.

பிரச்சனைகள் என்ன என்ன ?
 • ஒருவேளை நம்ம கூடங்குளத்துலேயே அணு ஆபத்து அபாயம் இருக்குன்னு வெச்சுக்குவோம். மொதல் பிரச்சனை நம்ம government. என்னடா இத்தனை நாளா ‘ஒன்னும் பிரச்சனை வராது. ஒன்னும் பிரச்சனை வராது’ ன்னு சொல்லிக்கிட்டு இருந்தோமே, இப்புடி ஆயிடிச்சேன்னு , thief க்கு scorpion bite கிடைச்ச மாதிரி தேமேன்னு  உம்முன்னு இருப்பாங்க.
 • ரெண்டு மூணு நாள்ல அணுவீச்சு  நம்ம மக்கள் உடம்புல நல்லா உடுருவி உக்காந்துக்கும். அப்புறம் காலம் பூரா கஷ்டம் தான். அவங்களுக்கு தானே? நமக்கு இல்லையே.
 • அணு பாதிப்பு உள்ள இடத்தில் (reactor கிட்ட) மனிதனால் அதிக நேரம் வேலை செய்ய முடியாது. ஆனா செஞ்சா தான் மேற்கொண்டு ஏதும் பதிப்பு இல்லாமல் தடுக்கலாம்; ஒன்னு ரெண்டு உயிர் இழப்பு தானே பரவாயில்லை. போய்ட்டு போகுது.
 •  ஒருவேளை பிரச்சனை உள்ள reactor வெடிச்சிட்டா? சிம்பிள் வேலை. சுத்தி இருக்குற 18 பட்டி ஜனங்களையும் வண்டி ஏத்தி சொந்த நாட்டுலேயே வேற இடத்துக்கு அகதிகளா அனுப்பி வெச்சுடலாம். இனிமே அவங்க சொந்த ஊருக்கு வரக்கூடாது; அதெல்லாம் அரசாங்கத்தோட கட்டுபாட்டுக்கு வந்துட்ட இடம் ஆகிடும்.
 • மக்கள்: நாங்க எப்ப எங்க ஊருக்கு போகலாம் ? அரசாங்கம் : கொஞ்சம் பொறுத்து கிட்டேங்கன்னா ஒரு 1000 இல்லேன்னா 2000 வருசத்துல கண்டிப்பா போகலாம்.
 • மக்கள்: நஷ்டஈடு எதாவது ?  அரசாங்கம் : அணு உலையை சரி பண்ணவே ரொம்ப காசு தேவைப்படுது. இதுல இவங்க வேற போம்மா இங்கேந்து. போபால் விஷ வாயுல அடி பட்டவங்களுக்கே 30 வருசமாகியும் இன்னும் நஷ்டஈடு கொடுத்து முடியல. நேத்து வந்த உங்களுக்கு என்ன அவசரம். போய் queue ல நில்லுமா.
 • மக்கள்: சரிங்க நாங்க தான் கஷ்ட படுறோம் புள்ளை குட்டிகளாவது நல்ல படியா இருக்குமா ?   Doctors : உறுதியா சொல்ல முடியாதும்மா. அணு கதிரால உங்க genes மாறுபாடு ஆகி ஊனமுற்ற குழந்தைகள் கூட பிறக்கலாம். ஆண்டவன் மேல நம்பிக்கை வையுங்க.
 • வெடிச்ச அணு உலை யை என்ன பண்ணுறது? மூடி போட்டு மூடணும். எவ்ளோ செலவானாலும். அங்க தான் ஆள் யாரும் போக முடியாதே? போக முடியாது தான் ஆனாலும் மூடணும். இல்லேன்னா என்ன ஆகும் .? அணு வீச்சு மேகத்துல போய் உக்காந்துக்கும். அப்புறம் மழையா வந்து மொத்த தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ரொம்ப முக்கியமா ஸ்ரீலங்கா .. பொழியும். எல்லா நீர்நிலையும் அணு ஆபத்து உள்ளதாக மாறும். அணு வீச்சு இல்லாத பாட்டில் வாட்டர் 10,000 ரூபாய் க்கு கூட விற்பார்கள் நம்ம ஆளுங்களை பத்திதான் தெரியுமே.
 • திரும்பவும், சாக துணிஞ்ச தமிழ் ஹீரோஸ் மாதிரியான ஆளுங்களை வேலைக்கு வெச்சு மூடி போட்டுட்டோம்ன்னு வெச்சுகங்க பிரச்சனை தீர்ந்துதா ன்னா ? இல்லை. அப்ப போய்ட்டு, ஒரு 50தோ 100 ஓ வருசத்துக்கு அப்புறம் வந்து அதவிட பெருசா மூடி போடணும். அப்புடி மூடி மேல மூடி போட்டு கிட்டே இருக்கோம் ஒரு 2000 வருசத்துக்கு.. 
 • இதுக்கு ஷங்கர் படத்தை விட budget பெருசா இருக்கும் போலையே.. ஆமா .. இவுங்களுக்கு சல்லிசா கரண்ட் வேணுமாம் .. அதனால வர பிரச்சனைய ஸ்டாப் பண்ண காசு இருக்காதாம்.. ஓகே ஓகே UNO கிட்டேந்து பிச்சை கேளுங்கயா..
 • வெடிச்சாதானே இவ்வளோ பிரச்சனையும்? வெடிக்கவே இல்லேன்னா ? அங்கயும் ஒரு ட்விஸ்ட் வெச்சு இருக்கோம். அணுக் கழிவு அதான் உபயோகிச்சு முடிச்ச அணு கூச்சி அத பத்திரப்படுத்தனும். concrete குப்பி ரெடி பண்ணி, உள்ள போட்டு மூடனும். அது எஸ்கேப் ஆனாலும் பிரச்சனை தான். அதையும் 1000 வருசத்துக்கு பத்திரமா வைக்கணும்.
 • அணுவை சாந்த படுத்த உபயோக படுத்தப்பட்ட தண்ணி (Heavy Water), அதுவும் பிரச்சனை தான். அதுவும் சுத்திகரிக்காமல் நிர்நிலைகளில் கலந்தா ஆபத்து தான்.
அணு உலையை கட்டி பராமரிப்பது என்பது நூலின் மேல் நடக்கும் விஷயம். அணுவின் அரக்க பசிக்கு மனித உயிர்களை தீனியாக போட்டு விட கூடாது. கரண்ட் இல்லாமல் கஷ்டபட்டாலும் பரவாயில்லை, அணு உலை வேண்டாம். 

புகுஷிமாக்கு பிறகு ஜப்பான் அணு மின்சாரம் தயாரிக்கவில்லை; ஜெர்மனி எல்லா(9) அணு உலைகளையும் மூட போகிறார்கள்; சுவிட்சர்லாந்து எல்லா (5) அணு உலைகளையும் மூடப் போகிறார்கள். நாம் தான் புதிதாக திறக்கின்றோம்.

நீ என்ன கிழிச்சே ? என்று கேட்குறீங்களா .. http://pmindia.gov.in/en/login/ போய் நரேந்திர மோடி ஐயாவுக்கு ஒரு லெட்டர் போட்டேன். இணையத்தில் உழன்று உளறும் என்னை போன்ற தமிழன் வேறு எந்த மலையை புரட்டி விட முடியும்.

எழுத்தாளன் என்றால்?

வணக்கம்.

தங்களை முகநூல் மூலம் அறிந்து,அப்புறம் உங்களின் இணைய பக்கங்களை படிக்கத் தொடங்கினேன்.வாழ்த்துக்கள்!!

நீ அறிவாளியா?  என்கிற கட்டுரையில், “இந்த எழுத்தை வாசிக்க ‘நீ அறிவாளியாக இருக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று ஒருவரி கண்ணில்பட்டது. இத்தகைய வரிகள் உண்மையிலேயே disturb செய்கின்றன. சங்கடமாகவும் இருக்கிறது. தஸ்தாயோவ்ஸ்கியை வாசிக்கவில்லை என்றால் அவன் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. மாக்ஸிம் கார்க்கியை புரிந்து கொள்ளாதவன் மடையன் என்று அர்த்தம் இல்லை. இதையெல்லாம் வாசிக்கத் தெரிந்தவன் தான் அறிவாளி என்று ஸ்டேட்மெண்ட் விடுவதை எப்படி புரிந்து கொள்வது? இது ஒருவிதமான மிரட்டல். இதை புரிந்து கொண்டால்தான் நீ அறிவுஜீவி என்பது ஒருவிதமான ப்ளாக்மெயில்” என்று எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதியது யார் என்பது உங்களுக்கும் தெரியும் - எனக்கும் தெரியும்.

ஒரு புரிதலுக்காக கேட்கிறேன். நீங்கள் பொறியியல் பட்டதாரி. எனக்கு அது சம்மந்தமாக ஒன்றும் தெரியாது.இருந்தாலும் தெரிந்த மாதிரியே நான் உங்களிடம் பேசுகிறேன். என் பேச்சு சுத்த முட்டாள் தனமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் நான் வேறு ஒரு துறையில் ஜாம்பவான். அதற்காக நீங்கள் சகித்துக்கொண்டு தலையாட்டிக்கொண்டிருபீர்களா? இல்லை, “உங்களுக்கெல்லாம் இது தெரியாதுண்ணே, போய் உங்களுக்கு தெரிந்ததை செய்யுங்கண்ணே” என்பீர்களா?

தனக்கு பரிச்சியம் இல்லாத அல்லது பாண்டித்யம் இல்லாத துறையில் ஒருவர் மூக்கை நுழைத்து தடாலடியாக பேசும் போது எரிச்சல் தானே வரும்?
நீங்கள் குறிப்பிடும் அந்த லாரி டிரைவர், உங்களிடம் வந்து, “என்ன செயகாந்தனும்,செயமோகனும் எலுதி கிலிச்சிட்டானுங்க தம்பி....நா(ன்) சின்னப்புள்ளையா இருக்கச்சே பி.டி.சாமியோட கதைய படிப்பேன் பாரு அத அடிச்சிக்க இன்னொருத்தன் பொறந்து வறனும்...”னு பேசினா அவரின் தொழில் திறமையை பாராட்டிய நீங்கள், அவரின் இலக்கிய அறிவையும் பாராட்டுவீர்களா அல்லது “நமக்கெதுக்குங்கண்ணே அதெல்லாம், போய் லாரிய ஓட்டுங்க..” என்பீங்களா?

எம்.எஸ்.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

அன்புள்ள ராஜேந்திரன்,

வணக்கம்.

எழுத்து என்பதை ஒரு புரிதலுக்கான திறவுகோலாக மட்டும்தான் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு வேண்டுமானாலும் ஆழமான சரக்கும் இருக்கலாம் சாக்குப்பையும் இருக்கலாம். அவையெல்லாம் இரண்டாம்பட்சம். அடிப்படையில் அது ஒரு தகவல் தொடர்புக்கான வழி. அவ்வளவுதான். எழுத்தாளனுக்கு நம்மிடம் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது. அதை கட்டுரையாகவோ, கவிதையாகவோ, கதையாகவோ அல்லது நாவலாகவோ அவன் தனக்குத் தெரிந்த வழியில் எழுதுகிறான். அதை வாசகனால் புரிந்து கொள்ள முடியலாம் அல்லது இயலாமலும் போகலாம். ஆனால் அதற்காக எழுதுகிறவன் பிஸ்தா என்கிற பில்ட் அப் சமாச்சாரங்களில்தான் சங்கடமாக இருக்கிறது.

இங்கு எல்லோரிடமுமே எழுதுவதற்கான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு கிழவியிடம் பேசினால் அவளிடம் ஆயிரம் கதைகளாவது தேறும். ஒரு குழந்தையிடம் கூட சொல்வதற்கான கதைகள் இருக்கின்றன. யாரிடம்தான் கதைகள் இல்லை? இருக்கிற கதைகளை எழுதுகிறவன் எழுத்தில் கொண்டு வந்துவிடுகிறான் மற்றவர்களால் அதைச் செய்ய முடிவதில்லை. அது மட்டும்தான் வித்தியாசம். அவனால் தனது கதைகளை எழுத்தாக்க முடிகிறது என்கிற அளவில் மரியாதையைக் கொடுக்கலாம். 

ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது? எழுத்தாளன் என்றால் கண்களுக்குத் தெரியாத இரண்டு கொம்புகள் இருப்பதாகத்தானே கருதிக் கொள்கிறார்கள். இது இன்று நேற்று வந்ததில்லை. பாரம்பரியம். காலங்காலமாக அப்படித்தான் இருக்கிறது.

கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். கம்பனைத் தெரிகிறது, வள்ளுவனைத் தெரிகிறது, பள்ளு இலக்கியத்தை எழுதியவனின் பெயரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் இருக்கும் நந்தி சிலையை வடித்தவனின் பெயரைத் தெரிந்து வைத்திருகிறோமா என்ன? என்று. குகை ஓவியங்கள் வேண்டாம்- சமீபத்தில்-முந்நூறு அல்லது நானூறு வருடங்களுக்கு முன்பாக மதுரை மீனாட்சியம்மன் போன்ற கோவில்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை வரைந்தவனின் பெயரைத் தெரிந்து வைத்திருக்கிறோமோ? மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை எழுதிய குமரகுருபரை நமக்குத் தெரியும் ஆனால் அதே பிள்ளைத்தமிழை சிற்பங்கள் ஆக்கியவன் யாரென்று தெரியாது. சிற்பம், ஓவியம் போன்ற  பிற கலைகளுக்கு இன்று வரையிலும் அதே நிலைமைதான். எத்தனை தற்கால ஓவியர்களின் பெயர்கள் நமக்குத் தெரியும்? எத்தனை சிற்பிகளின் பெயர்களைத் தெரியும்? சொற்பம்தான்.

ஆனால் கவிஞர்களை லிஸ்ட் எடுங்கள். கதை எழுதுபவர்களை லிஸ்ட் எடுங்கள். பல பக்கங்கள் வேண்டும். 

ஓவியன், சிற்பி உள்ளிட்ட கலைஞனையெல்லாம் விட எழுத்தாளன் எந்தவிதத்தில் உயர்ந்தவனாக இருக்கிறான்? பிரச்சினை நம் பாடத்திட்டங்களிலும் நம் புரிதலிலும் இருக்கிறது. இன்றைக்கு செய்யுளை படிக்கிறோம். கவிதைகளைப் படிக்கிறோம். ஆனால் சிற்பக்கலையின் அடிப்படையை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறோமா? மாணவர்களை விடுங்கள். நாமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா? ஓவியம் பற்றிய நம் புரிதல் என்ன? ஒன்றுமில்லை.

இதே பாரம்பரியத்தில் வந்தவன் தானே இன்றைய எழுத்தாளன்? அதனால்தான் கம்பனுக்கும், பாரதிக்கும் கொடுத்த புகழை எனக்கும் கொடுங்கள் என்கிறான். சக காலத்தில் வாழும் ஓவியனையும் சிற்பியைவிடவும் நாம் எந்தவிதத்திலும் உயர்ந்தவனில்லை என்கிற மனநிலையே எழுத்தாளனுக்கு உருவாவதில்லை. அதுதான் சிக்கல். வெளிப்படையாகச் சொன்னால் மற்ற எந்தக் கலையைவிடவும் மிகச் சுலபமானது எழுத்துக்கலை. ஆனால் இங்கு எழுத்தாளர்கள்தான் பிதற்றுகிறார்கள். ‘நான்தான் அறிவாளி’ என்று கூக்குரலிடுகிறார்கள். ‘எங்களை அங்கீகரியுங்கள்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். ஓவியர்களும், சிற்பிகளும் எங்கேயாவது எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எழுத்தாளனைப் போல கதறுவதைப் பார்க்கிறோமா? 

இணையம் ஏகப்பட்ட வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். கொஞ்சம் பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் எழுத்தில் முத்திரை பதித்துவிட முடியும். மற்றவர்களை கவனிக்க வைத்துவிடவும் முடியும். நானும் எழுதுகிறேன். நீங்களும் எழுதுங்கள். எழுதிவிட்டு போகலாம். எவ்வளவுதான் திணறினாலும் ஜெயமோகனின் எழுத்தை யாரேனும் அழித்துவிட முடியுமா என்ன? சாருவின் இடத்தை இன்னொருவன் பிடித்துவிட முடியுமா என்ன? சுஜாதா எப்பொழுதும் சுஜாதாதான். ஜெயகாந்தன் எப்பொழுதும் ஜெயகாந்தன் தான். பிறகு எதற்கு இவ்வளவு பதற்றம்? ஏன் எந்நேரமும் எழுத்தாளன் பீடத்தின் மீதே இருக்க வேண்டும் என நாமும் எதிர்பார்க்கிறோம்? அவனும் விரும்புகிறான்.

இதையெல்லாம் உடைத்துவிட வேண்டும். இது சரியான தருணம். இந்த மாயை அவசியமே இல்லாதது. எழுத்தாளன் எந்தவிதத்திலும் பீடாதிபதி இல்லை. சாதாரண எளிய மனிதனாக இருக்கும் வரை அவன் ஒரு ஊற்று. எழுத்துக்களால் வாசகனை கட்டிப்போடுகிறான். ஆனால் பீடத்தின் மீதேறி அருள்பாலிக்கத் தொடங்குவதிலிருந்து அவன் அடங்கத் தொடங்குகிறான். பதற்றம் அவனது கைகளைப் பற்றிக் கொள்கிறேது. 

உங்களின் கேள்விக்கு என்னிடம் இருக்கும் பதில் இதுதான் - என்னிடம் வந்து ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்கிற ரீதியில் தப்பும் தவறுமாகப் பேசினால் விவரிக்க முயற்சிப்பேன். ஆனால் எதிரில் பேசிக் கொண்டிருப்பவர் கண்களையும் காதுகளையும் மூடியிருந்தால் நான் தலையைக் குனிந்து அடுத்த வேலையைப் பார்ப்பேனே தவிர ஓங்கி அறைந்து ‘உனக்கு அறிவில்லை’ என்று ஆயா மீது சத்தியமாகச் சொல்லமாட்டேன். அதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தெரியும்.

அவ்வளவுதானா?

ஒரு பயிற்சி வகுப்பு.

காசு கொடுக்க வேண்டியிருந்தது. கொடுத்துவிடலாம் என்று தோன்றுகிற மாதிரியான தலைப்பு அது. சில மனிதர்கள் பேசுவதைக் கேட்பது என்பது புத்தகம் வாசிப்பது போலத்தான். ஒரு புத்தகத்தை வாசிக்கிறோம்.  ‘என்னை ரொம்பவும் பாதிச்ச புஸ்தகம்’ என்கிறோம். அந்தப் புத்தகம் உடனடியாக நம்மைப் புரட்டி போட்டுவிடுகிறதா என்ன? அதெல்லாம் இல்லை. ஆனால் அந்தப் புத்தகத்தின் சில வாக்கியங்களோ, கதாபாத்திரமோ அல்லது சில பக்கங்களோ நமக்குள் ஆழப் பதிந்துவிடுகிறது. அப்படி பதிந்து போகும் விஷயம்தான் நமது ஆளுமை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். Personality Building. நம்மையுமறியாமல் Tune ஆகத் தொடங்குவோம். அப்படித்தான் சில மனிதர்களுடன் பேசும் போதும்- பேசிக் கொண்டேயிருப்பார்கள். நமக்குள் சில வாக்கியங்கள் பதிந்துவிடும் அது நமக்கே தெரியாமல் நம்மை உருமாற்றிக் கொண்டிருக்கும்.

இப்படி நம் ஒவ்வொருவருக்குமே நம்மை பாதித்த மனிதர்கள் இருப்பார்கள். தாத்தாவோ, பாட்டியோ, மறக்க முடியாத ஆசிரியரோ, பக்கத்து வீட்டு அக்காவோ, எதிர் வீட்டு மாமாவோ என ஏதாவதொரு விதத்தில். இந்த மனிதர்களின் வார்த்தைகளையும் அவர்கள் கொடுத்த ஐடியாக்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் நாம் முழுமையடையாமல்தான் நின்று கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன்.

அப்படித்தான் இந்த பயிற்சி வகுப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்து வைத்திருந்தேன். ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. பிரேசிலிலிருந்து ஒரு பேராசிரியர் வந்திருந்தார். காலையில் ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரைக்கும் வகுப்பு. வகுப்பில் வெறும் பதினான்கு பேர்கள்தான். காசும் அவ்வளவு அதிகம் இல்லை. மூன்றாயிரத்து எழுநூற்றைம்பது ரூபாய். அந்தத் தொகைக்கே மதியச் சாப்பாடும் காலையிலும் மாலையிலும் தேநீரும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். பெங்களூருக்கு வேறு வேலையாக வந்திருக்கிறார். இடையில் ஒரு நாள் கிடைத்ததும் அதை ஒரு பயிற்சி வகுப்பாக மாற்றிவிட்டார். 

காலை முழுவதும் தனது சொந்த அனுபவங்களாகப் பேசிக் கொண்டிருந்தார், பேராசிரியர். பெரும்பாலும் Case studies. அத்தனையுமே பாஸிடிவ் திங்கிங் என்பது பற்றித்தான் இருந்தது. இத்தகைய அனுபவங்களை இணையத்தில் தேடினால் நூற்றுக் கணக்கில் தேடி எடுத்துவிடலாம். ஆனால் அதைச் சொல்லுகிற நேர்த்தி இருக்கிறதல்லவா? அது அந்தப் பேராசிரியருக்கு இருந்தது. 

முழுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவனின் கதை பிரமாதமானதாக இருந்தது. அவனுக்கு அம்மாவும் அப்பாவும் இல்லை. சிறு வயதிலேயே விடுதியொன்றில் தங்கியிருந்து படித்திருக்கிறான். படிப்பு நன்றாக வந்திருக்கிறது. தத்துவவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக வந்த போது அந்தக் கல்லூரிக்கு வந்திருக்கிறான். அந்த தேசத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் உண்டு என்பதால் மாணவனுக்கும் ஆரம்பத்திலிருந்தே அந்தப் பழக்கம் உண்டு. 

மன அழுத்தம், போதைப் பழக்கம் என சேர்ந்து அவனைச் சீரழித்திருக்கிறது. பேராசிரியர் பேசும் போதெல்லாம் போதையை தத்துவவியலோடு பொருத்திப் பேசுவானாம். அவனுக்கு காதலி என்றெல்லாம் யாரும் இல்லை. இருபத்து நான்கு மணி நேரமும் கண்கள் சொக்கிக் கிடப்பவனுக்கு யார் சிக்குவார்கள்? ஏதோ ஒரு வேகத்தில் கல்லூரியின் கட்டடத்தின் மீது ஏறி எட்டிக் குதித்திருக்கிறான். தலை கீழாக விழுந்தவனின் மண்டை பிளந்திருக்கிறது. ஆனால் உயிர் போகவில்லை. தப்பித்துவிட்டான். மரணத்தைப் பார்த்துவிட்டு வந்தவனுக்கு வாழ்க்கையில் இதையெல்லாம் தாண்டி என்னனென்னவோ இருக்கின்றன என்று கடவுள் ட்யூப்லைட் அடித்திருக்கிறார். அதன் பிறகு முழு நேர தத்துவியல் ஆராய்ச்சியாளன் ஆகிவிட்டான் என்று தலையைக் குனிந்து நடு மண்டையின் முடியை விலக்கிக் காட்டினார். பிளந்த தழும்பு இன்னமும் இருக்கிறது. இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனிக்கட்டையாக உலகம் முழுவதுமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

‘இதுக்கு மேல இழக்கிறதுக்கு ஒன்னுமில்லைன்னு நினைக்க ஆரம்பிக்கிறோம் இல்லையா? அந்தப் புள்ளிதான் பாஸிடிவ் திங்கிங்’ என்று நிறுத்தினார். துளி குழப்பமாகத்தான் இருந்தது. அவரே விளக்கினார். ஒரு கேள்வி பதில் மூலம். ‘இருப்பதிலேயெ மிகப்பெரிய இழப்பு என்ன?’என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட எல்லோரும் ஏற்றுக் கொண்ட பதில் ஒன்றுதான்.‘உயிர்’. உயிரைத் தவிர வேறு எது போனாலும் மீட்டெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் போதும் எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடலாம் என்பதுதான் அவர் சொல்ல வந்தது. அவர் சொல்வதும் சரிதான். சொத்து போனால் போகட்டும். வேலை போனால் போகட்டும். உறவுகள் போனால் போகட்டும். உடலில் உயிர் போகவில்லை அல்லவா? அப்புறம் என்ன? தம் கட்டு என்றார்.

நிஜமாகவே பல பிரச்சினைகளைச் சந்திக்கும் போது ‘இதோடு செத்துத் தொலைந்துவிடலாமா’ என்கிற எல்லைவரைக்கும் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால் தாண்டி வந்துவிட்டால் அவ்வளவுதான். ‘நான் எல்லாம் அந்தப் பிரச்சினையையே பார்த்தவன் தெரியுமா?’ என்று ஹீரோவாகிவிட முடிகிறது. அவர் சொன்ன அதே விஷயம்தான்- எவ்வளவுதான் பெரிய பிரச்சினை என்றாலும் தம் கட்டிவிட வேண்டும். 

பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வரும் போது கை கால் முடியெல்லாம் சிலிர்த்துக் கொண்டு நின்றன. 

சொல்ல மறந்துவிட்டேன். வகுப்புக்கு வரும் போது நமக்குப் பிடித்த மூன்று புத்தகங்களை எடுத்து வரச் சொல்லியிருந்தார்கள். 

ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ மனுஷ்ய புத்திரனின் ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ மற்றும் சுகுமாரனின் ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ ஆகிய தொகுப்புகளை எடுத்துச் சென்றிருந்தேன். இவர்கள் மூவருமே இரண்டாவது பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் மனிதர்கள்தான். தனியாக அவர்களோடு அமர்ந்து அரை மணி நேரம் பேசினால் கூட எனர்ஜி டானிக்கை நேரடியாக நரம்பில் ஏற்றிவிடுவார்கள். அதனாலேயே அவர்களின் புத்தகங்களை எடுத்துச் சென்றிருந்தேன்.

கேள்வி கேட்க்கப்படும் என்பதால் புத்தகங்களை மறுவாசிப்பு செய்துவிட்டு வாருங்கள் என்றும் சொல்லியிருந்தார்கள். ஏதாவது கேள்வி கேட்டுவிடுவார்களோ என்று பயமாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி வரைக்கும் அவர் அந்தப் புத்தகம் பற்றி வாயைத் திறக்கவேயில்லை. கடைசியில் ‘இந்த செமினாரினால் ஒன்றுமே பயன் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். குறைந்தபட்சம் உங்களுக்குப் பிடித்த மூன்று புத்தகங்களைத் திரும்ப வாசிக்க வைத்திருக்கிறேன்’ என்றார்.

அட, இது கூட பாஸிடிவ் திங்கிங்தான்.

பார்வையற்ற குழந்தை

பார்வையற்ற குழந்தை
மரப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருக்கிறாள்
அவளுக்கு 
அது ஒரு பிரச்சினையே இல்லை

அவளாகக் கற்பித்துக்கொண்ட
இந்த உலகின் ஒழுங்கில்
ஏழாவது படிக்குப் பிறகு 
ஒன்பதாவது படி
வராதவரை

பார்வையற்ற குழந்தை
நிதானமாகவே படிகளில் இறங்கிக் கொண்டிருக்கிறாள்.

- மனுஷ்ய புத்திரன்

Sep 22, 2014

நீ என்ன கல்ச்சுரல் போலீஸா?

வார இறுதியில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். எனக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கியிருந்தார்கள். ஒன்றரை மணி நேரம் தாளித்துவிட்டேன். ‘மொக்கை போடுகிறேனா? மொக்கை போடுகிறேனா?’ என்று கேட்டுக் கேட்டே மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் பாக்யராஜ் ஸ்டைலில் பேசிச் சமாளித்துவிடுகிறேன். ஆங்கிலத்தில் பேசுவதென்றாலும் கூட பிரச்சினையில்லை. கொங்குத் தமிழ் மாதிரி கொங்கு ஆங்கிலம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன். சமாளித்துவிட முடிகிறது என்பதால் அடுத்த சனிக்கிழமை ஒரு கல்லூரி அதற்கடுத்த சனிக்கிழமை இன்னொரு கல்லூரி என்று சமோசாவுக்கும் டீக்கும் ஆசைப்பட்டு படிப் படியாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த உலகம் எந்த அடிப்படையில் என்னையெல்லாம் நம்புகிறது என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. தன்னடக்கத்திற்காகச் சொல்லவில்லை. உண்மையாகவேதான். 

ஜோ டி குரூஸ் மாதிரியானவர்கள் கூட எந்தவித பந்தாவுமில்லாமல் பேசுகிறார்கள். சமீபத்தில் தமிழ் இந்துவில் அவரது நேர்காணலை வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். காலச்சுவடு மதுரையில் நடத்திய கூட்டத்தில்தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேடையில் சிறப்பாக பேசினார் என்று சொல்ல முடியாது. ஆனால் எளிமையாகப் பேசினார். ‘இவ்வளவுதான் நான்’ எந்தவித பாசாங்குமில்லாமல் சொல்வது ஒரு கலை. துளி பகட்டோடு  பேசினாலும் கூட அடுத்தவர்களுக்குத் தெரிந்துவிடும்- இவன் அடக்கமானவன் போல நடிக்கிறான் என்று. அடுத்த வாரம் பெங்களூரில் இலக்கியத் திருவிழா நடக்கிறது. குரூஸ்ஸூம் வருகிறார். வாய்ப்பிருப்பவர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஹேராம் பார்த்ததிலிருந்தே ராணி முகர்ஜியின் ரசிகன் என்று தட்டச்சினால் இந்த கைக்கு போஜனம் கிடைக்காது. ‘அந்த’ ஸீனை யூடியூப்பில் பார்த்ததிலிருந்தே ராணியின் ரசிகன். அவரும் வருகிறார். அவரைப் பார்ப்பதற்காகவேனும் கலந்து கொள்ளவிருக்கிறேன்.

சென்ற வருடம் 69 shades of grey என்று ஒரு கிளுகிளுப்பான அரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள். Erotic எழுத்து பற்றிய உரையாடல் அது. ஆளாளுக்கு தங்களின் எரோடிக் கதைகளைப் படித்துக் காட்டினார்கள். நான்கு நாட்களுக்குக் காய்ச்சல் வந்து கிடந்தேன் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் இந்த வருடம் அப்படி எதுவும் இல்லை என்பது வருத்தம்தான். இருந்தாலும் நட்வர்சிங் வருகிறார். க்ரிஷ் கர்னாட் வருகிறார். இன்னும் பெயர் கேள்விப்படாத அழகான எழுத்தாளர்கள் வருகிறார்கள். அடுத்த முறை தீபிகா படுகோனை அழைத்து வாருங்கள் என்று நேயர் விருப்பத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு வர வேண்டும்.

‘I have a breast, I have a clevage...whats your problem?' என்று அவர் கேட்டதிலிருந்து அவரைப் பெண்ணியவாதி ஆக்கிவிட்டார்கள். அதில் பெண்ணியமும் இல்லை ஆனியனும் இல்லை என்று நாம் சொன்னால் சண்டைக்கு வந்துவிடுவார்கள். உடலைக் காட்டினால் பத்திரிக்கைகளில் பிரதானப்படுத்தத்தான் செய்வார்கள். ஒன்றரை இஞ்ச்சுக்கு ஜட்டியைக் கீழே இறக்கிக் காட்டிய போது ஜான் ஆபிரஹாமும்தான் ஹிட் ஆனார். வெறும் துண்டோடு ஒரு நடிகன் உடலைக் காட்டிய போது மீடியாவில் ப்ளாஷ் அடித்தார்கள். எட்டுப்பேக்கையும் பத்து பேக்கையும் காட்டும் போது ஷாருக்கானும்தான் அட்டைகளில் இடம் பிடிக்கிறார். ஆண் பெண் என்ற பேதமெல்லாம் எதுவும் இல்லை. சினிமாக்காரன் உடலைக் காட்டினால் ஊடகத்தில் இருப்பவன் பயன்படுத்தத்தான் செய்வான். இவர்கள் இரண்டு பேரும் வியாபாரத்திற்காக மாற்றி மாற்றி அடித்துக் கொள்வார்கள். அட்டைப்படத்தில் எவ்வளவு வேண்டுமானாலும ஆடையை நெகிழ்த்திக் கொள்வார்கள். சினிமாவில் எவ்வளவு வேண்டுமானாலும் தளர்த்திக் கொள்வார்கள். அங்கெல்லாம் காசு கிடைக்கிறது. ஆனால் எவனாவது ‘தீபிகாவைப் பாரு’ என்று எழுதினால் பொங்கிவிடுவார்கள். ‘ஆஹா இதுவல்லவா பெண்ணியம்’ என்று இங்கே நான்கு பேர் குதிக்கிறார்கள். என்ன பெண்ணியம்? மாதம் ஒரு பெண் மீது ஆசிட் அடிக்கிறார்கள். கணக்கு வழக்கே இல்லாமல் வன்புணர்கிறார்கள். பாலியல் அத்துமீறல்களில் கொடி பறக்கவிடுகிறோம். அதைப் பற்றியெல்லாம் எவ்வளவு நாட்களுக்கு பேசுகிறோம்? சினிமாக்காரனும் சினிமாக்காரியும் பேசினால் மட்டும் மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டிருப்போம். ‘அவள் உடல் அவள் உடை அவள் உரிமை’ என்று யாராவது ஆசிட் அடிக்க வருவதற்குள் இதை நிறுத்திக் கொள்ள  வேண்டும்.

ஹைதராபாத்தில் மெஹதிப்பட்டணம் என்ற இடத்தில் தங்கியிருந்தேன். அது ஒன்றும் அவ்வளவாக வளர்ச்சியடைந்த பகுதி இல்லை. ஒரு பெரிய குப்பை மேடு இருக்கும். அதற்கு பக்கத்திலேயேதான் பேருந்து நிறுத்தம். பேருந்துகளை விட ஷேர் ஆட்டோக்கள் நிறைய வரும்.  ஏறிக் கொள்ளலாம். நிறையக் கல்லூரி செல்லும் பெண்களும் நிற்பார்கள். பத்து மணிக்கு மேலாகவும் பெண்கள் நிற்பார்கள். அங்கு ஒரு பைத்தியகாரன் இருப்பான். தனக்குத்தானே சிரித்துக் கொண்டு கன்னங்கரேல் என இருப்பான். சட்டையெல்லாம் அணிந்திருக்க மாட்டான். கிழிந்த லுங்கி ஒன்றை இடுப்பில் சுற்றியிருப்பான். நாற்பது வயதுக்குள்ளாகத்தான் இருக்கும். அவன் உயரம் அவனது கண்கள் அவனது உடற்கட்டையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும். சரியான இடத்தில் இருந்திருந்தால் சினிமா நாயகன் ஆகியிருப்பான். அப்பொழுது குப்பை மேட்டில் உருண்டு கிடந்தான்.

அவ்வப்பொழுது ஆட்டோக்காரர்கள் சிலர் அவனைத் துரத்திவிடுவார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவ்வப்பொழுது தனது துணியை விலக்கிக் காட்டுவான். அதையும் பைத்தியத்தின் காரணமாகத்தான் செய்கிறான் என்று நினைத்திருந்தேன். ஆனால் பெண்களிடம்தான் இந்தச் சேட்டையைச் செய்திருக்கிறான். ஆரம்பத்தில் மிரட்டியவர்கள் ஒரு நாள் பட்டையைக் கிளப்பிவிட்டார்கள். முகம் கை கால் எல்லாம் ரத்தம் வழியக் கிடந்தான். அப்பொழுதும் தனக்குத்தானாகவே சிரித்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் அந்த இடத்தைவிட்டு நகர்வது போலத் தெரியவில்லை. நான்கு பேர் அவனுக்கு ஆதரவாகப் பேசினால் நாற்பது பேர் அவனுக்கு எதிராக கற்களைப் பொறுக்கினார்கள். வெகு நேரத்திற்குப் பிறகு ஒரு மீட்பு வாகனம் வந்து தூக்கிச் சென்றது. அதன் பிறகு என்ன ஆனான் என்று தெரியவில்லை. ‘அவன் உடல் அவன் உடை அவன் உரிமை’ என்ற வாதம் அவனுக்கும்தானே பொருந்தும்? அவனை ஏன் அடித்தார்கள்? 

எல்லாவற்றிலும் சுதந்திரம் என்பது ஒரு எல்லை வரைக்கும்தான். பணம் வருகிறது என்பதற்காக மீறிவிட்டு ‘Whats your problem' என்று கேட்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் தெரியவில்லை. இதைச் சொன்னால் ‘வந்துட்டாம்பாரு கல்ச்சுரல் போலீஸ்’ என்பார்கள். சில்க்கூர் பாலாஜி அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும். 

Sep 19, 2014

ஹலோ மிஸ்டர் அப்பாடக்கர்

ஒரு சந்தேகம்.  தமிழ்மொழி பற்றி. 

முதலில் மொழிதான் உண்டானது, இலக்கணம் என்பது அதன் பிறகுதான் எழுதப்பட்டது என்பது என் எண்ணம்.  அது எந்த மொழியாக இருந்தாலும் முதலில் இலக்கணத்தை வகுத்துவிட்டு, பிறகு மொழி புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்க முடியாது. மாறாக, புழக்கத்திலிருக்கும் ஒரு மொழியின் அனாடமி தான் இலக்கணமாகியிருக்க முடியும். சரிதானே?

அப்படியென்றால், இன்று உள்ள எழுத்துவழக்கு, ஒரு காலத்தில் பேச்சு வழக்காக இருந்ததா? பின்னர் பிறண்டதா? இல்லை, இப்படியொரு பேச்சு வழக்கே இல்லையென்றால், பிறகேன் இல்லாதவொன்றுக்கு இலக்கணம் கண்டார்கள்?

அல்லது, ஒரு காலத்தில் பேச்சுவழக்கும் எழுத்துவழக்கும் ஒன்றாக இருந்து, பின்னர் பிறண்டிருக்கிறது என்று கொண்டால், இலக்கணப்படி இயல்பாகப் பேசமுடியாத அளவிற்குத் தமிழ் அவ்வளவு கடினமா? அப்படியும் கடினமில்லையே. புரியவில்லை.

வடமொழி காற்றை அடிவயிற்றிலிருந்து கொண்டுவரும், அதனால் கடினமானது. தமிழுக்குக் காற்றைக் கழுத்துக்கு மேலிருந்து கொண்டுவந்தால் போதுமானது, அதனால் இயல்பாகவே எளிய ஒலிவடிவம் - என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால், அவ்வாறு எளிமையாயிருப்பதானால், இலக்கணத்திலிருந்து பிறண்டு பேசுவது என்பது முரணாயிருக்கிறதே?

தங்களுக்கு இதைப்பற்றிய கருத்திருந்தால் பகிரவும்.

அன்புடன்,
வி.நாராயணசாமி


இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் என்ன செய்வது? அதிர்ச்சியில் நேற்றிரவு தூக்கமே இல்லை. ஒருவேளை பெரியவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை எனக்கு மாற்றி அனுப்பி வைத்துவிட்டாரோ என்று கூட சந்தேகமாக இருந்தது. ஆனால் தெளிவாக பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு பதில் எழுதுவது கூடச் சிரமம் இல்லை. ‘பாருங்கய்யா எனக்கு சகல டிபார்ட்மெண்ட்டும் தெரியுமாக்கும்’ என்று ஸீன் போடுவதற்காக அதை ஒரு பதிவாகவும் போட்டுவிடுவேன். ஆனால் அந்தப்பக்கமாக நான்கு பேர் குலுங்கிக் குலுங்கி சிரிப்பார்கள். நான்கு பேர் என்பது damage control க்கான எண்ணிக்கை. நானாக சொல்லிக் கொள்வது. நூற்றுக்கணக்கானவர்கள் சிரிப்பார்கள். 

இப்பொழுது முகத்தை சீரியஸாக  மாற்றிக் கொண்டு வசனம் பேச வேண்டும். பேசுகிறேன்.

அன்புள்ள நாராயணசாமி,

உண்மையிலேயே இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுமளவிற்கு எனக்கு புலமை இல்லை. அப்படியே மீறிச் சொன்னாலும் அது எவ்வளவு தூரம் துல்லியமாக இருக்கும் என்றெல்லாம் தெரியாது. 

என் சுண்டைக்காய் அறிவுக்குத் தெரிந்து தமிழில் வெகுகாலம் வரையில் உரைநடை இல்லை. எழுதப்பட்டவை யாவும் செய்யுள்களும் பாடல்களும்தான். செய்யுள்களை இஷ்டப்படி எழுதிவிட முடியாதல்லவா? அதனால்தான் ‘எழுதறதுன்னா இப்படி எழுது’ என்கிற இலக்கண வரையறையை வகுத்திருக்கிறார்கள். அதைப் பின்வந்த புலவர்களும் பின்பற்றி எதையும் எழுத்தாக்கும் போது அதை ஒரு இலக்கண வரையறைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். 

ஆனால் எழுதப்படும் போது மட்டும்தான் இந்த வரையறை எல்லாம். காலங்காலமாக பாடப்படும் நாட்டுப்புற பாடல்கள், வாய்வழியாக பாடப்படும் பாரம்பரியப்பாடல்கள் எல்லாம் இலக்கண வரையறை இல்லாதவைதானே? ஆக சுவடி ஏறும் போது மட்டும் ‘நாங்க இலக்கணத்தில் ஸ்ட்ராங்’ என்று சொல்லிவிடுகிறார்கள். இதே பார்முலாவை சமீபத்தில் உரைநடை எழுத ஆரம்பிக்கப்படும் போதும் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். ‘பேச்சு வழக்கு என்பது கொச்சையானது அதை எழுத்தாக்கக் கூடாது’ எனவும் எழுத்து என்றால் அது இலக்கண வரையறையுடன்தான் இருக்க வேண்டும் என்றும் நம்பியிருக்கிறார்கள். 

அதனால்தான் 1971 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையில் கூட அசோகமித்திரன் யதார்த்த வகை எழுத்தை எள்ளலாக பார்க்கிறார்கள் என்றும் அதைக் கொச்சை என்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். ஆக கடந்த நாற்பதாண்டு முன்பு வரையிலும் கூட பேச்சு வழக்கை எழுத்தாக்காமல்தான் இருந்திருக்கிறார்கள். இலக்கண விதிகளுக்குட்பட்ட எழுத்து வழக்கு வேறு; பேச்சு வழக்கு வேறு.

பேச்சு வழக்கு வேறாகவும் எழுத்து வழக்கு வேறாகவும் இருக்கும் மொழிகளைப் பட்டியலிடுமளவுக்கு எனக்கு பன்மொழிப் புலமை இல்லையென்றாலும் அப்படியான மொழிகள் நிறைய இருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் இது இயல்புக்கு முரணானதாகத் தெரியவில்லை.

பேச்சு வழக்கு என்பதுதான் இயல்பானது. அதுதான் இயற்கை. திருநெல்வேலிக்காரருக்கும் கோயமுத்தூர்காரருக்கும் மதுரைக்காரருக்கும் அவர்களது பேச்சுவழக்குத்தான் அடையாளம். அது கம்பீரமானது கூட. அதற்கு இலக்கண வரையறையெல்லாம் அவசியமே இல்லை. அவர்களது பேச்சில் இலக்கணத்தை எதிர்பார்க்கத் தேவையில்லை.

மொழியைப் பொறுத்தவரையில் எனக்கு ஒரு கருத்து உண்டு. இலக்கணம் என்பது அவசியமானது. அதுதான் மொழி சிதைக்கப் படாமல் காப்பாற்றும். ஆளாளுக்கு மொழியை கந்தரகோலம் ஆக்காமல் தடுக்கும். இந்த ஒரு காரணத்திற்காகத்தான் ‘எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் ஆனால் எழுதும் போது ஒரு வரையறைக்குட்பட்டு எழுத வேண்டும்’ என்கிற விதியை முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கக் கூடும். ஆனால் இப்பொழுது அந்தக் கட்டுப்பாடுகளை உடைத்துவிட்டோம். எப்படி வேண்டுமானாலும் எழுதுகிறோம். அரை மண்டையன் எல்லாம் தினம் ஒரு பதிவு எழுதுகிறான். இது ஒருவிதத்தில் சிதைவை மொழிக்குள் அனுமதிக்கும் செயல்தான்.

ஏற்கனவே சொன்னது போல இதையெல்லாம் என் சுண்டைக்காய் சைஸ் அறிவிலிருந்து எழுதியிருக்கிறேன். ‘நீ சொல்வது டுபாக்கூர்’ என்றாலும் தலையைக் குனிந்து ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. btw, அடுத்த கேள்வி அனுப்புவர்கள் சித்த வைத்தியத்திலிருந்து கேட்கவும். சிறுமணவூர் முனிசாமி முதலியாரவர்களால் பன் நூற்கிணங்க இயற்றப்பட்டு ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட எட்டணா விலையுடைய மூலிகைமர்மம் என்ற 1899 ஆம் ஆண்டு புத்தகம் ஒன்று சிக்கியிருக்கிறது. அதிலிருந்து சில வரிகளை எடுத்துப் போட்டு பதில் எழுதி படம் காட்டிவிடலாம். 

சூரிய மின் சக்தி

சூரிய மின்சக்திதான் நமக்கான ஒரே வழி. அதை ஏன் உங்களால் உரத்துச் சொல்ல முடியவில்லை?
 -நித்யானந்தன்.


அன்புள்ள நித்யானந்தன்,

இப்படித்தான் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேசுவதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நம் தேவைக்கான மின்சாரத்தின் பெரும்பகுதியை சூரிய சக்தியில் தயாரிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ஒரே ஒரு புள்ளிவிவரம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 2030 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த மின் தேவை 9,50,000 மெகாவாட் ஆக இருக்கும் என்கிறார்கள். இதில் எத்தனை சதவீதம் சூரிய சக்தியால் தயாரிக்க முடியும் என நினைக்கிறீர்கள்?  

ஒரு மெகாவாட்- வெறும் ஒரு மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளியால் தயாரிக்க தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட நான்கிலிருந்து ஆறு ஏக்கர் நிலம் தேவை. அது என்ன தென்னிந்தியா? அப்படியானால் வட இந்தியாவில் இன்னமும் அதிக இடம் தேவையா? ஆமாம். தேவைப்படும் நிலத்தின் பரப்பு பகுதிக்கு பகுதி மாறுபடும். அதாவது பூமத்திய ரேகையில் நமது நாடு இருந்தால் சோலார் தகடுகளை படுகிடையாக வைக்கலாம் (ஜீரோ டிகிரியில்) அதுவே பூமத்திய ரேகைக்கு மேலே செல்லச் செல்ல அதன் கோணமும் மாறும். தென்னிந்தியாவில் பதினைந்து டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். அதுவே வட இந்தியாவில் இருபத்து மூன்று டிகிரி வரையிலும் கூட மாறுபடலாம். இப்படி கோணத்தை அதிகரிக்க அதிகரிக்க ஒரு பிரச்சினை உண்டாகும். ஒரு தகட்டின் நிழல் இன்னொரு தகட்டின் மீது விழத் துவங்கும். அதனால் ஆறு ஏக்கர் போதாது. இன்னமும் அதிக பரப்பளவு தேவை. இதெல்லாம் வெறும் ஒரு மெகாவாட் மின்சாரத் தயாரிப்புக்குத்தான்.  முதல் பத்தியில் இந்தியாவின் தேவை எவ்வளவு என்று ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். இதில் பத்து சதவீத உற்பத்திக்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.

தார் பாலைவனம் முழுவதும்- கிட்டத்தட்ட 35000 சதுரகிலோமீட்டர் பரப்புக்கு சோலார் தகடுகளை அமைத்து- திறமையாக பராமரிக்க முடிந்தால் கிட்டத்தட்ட இருபது லட்சம் மெகாவாட் தயாரிக்கலாம் என்கிற திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. ஆனால் அவ்வளவு பெரிய இடத்தை எப்படி பராமரிப்பது என்பதிலிருந்து அதற்கான முதலீடு என்பது வரையிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன.  

தார் பாலைவனம் இல்லாவிட்டால் என்ன? நம்மிடம்தான் ஏகப்பட்ட இடம் இருக்கிறதே என்பார்கள். சாதாரண மைல்கல்லைக் கூட ஏமாந்தால் பிடுங்கி வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தேசத்தில் கண்காணாத இடத்தில் எல்லாம் இந்தத் தகடுகளை பதிக்க முடியுமா என்ன? பாதுகாப்பான இடம் வேண்டும். விவசாய நிலங்களைப் பயன்படுத்த முடியாது. நிழல் விழுந்தால் விவசாயம் பாதிக்கும். அதுவுமில்லாமல் இந்தத் தகடுகள் மீது தூசி படிய படிய மின் உற்பத்தி குறையும். சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். பராமரிப்பு அதிகம். அதற்காக சில ஆட்டோமேடிக் பம்புகள் வந்திருக்கின்றன. தினமும் ஒரு முறை கழுவி விடும். ஆனால் அது அவ்வளவு சிறப்பு இல்லை. 

கட்டடங்கள் மீது வைக்கலாம் என்பார்கள். வைக்கலாம்தான். ஒன்றரை சதுர மீட்டர் கட்டிடத்தின் மீது சோலார் தகடை வைத்தால் அதிகபட்சம் 300 வாட்ஸ் தயாரிக்கலாம். அதுவும் பக்கத்துக் கட்டடத்தின் நிழல் தகடுகள் மீது விழாமல் இருந்தால். முந்நூறு வாட்ஸ் என்பது ஐந்து ட்யூப்லைட் எரிக்கும் கணக்கு. அவ்வளவுதான். அதற்கு மேல்? ஹீட்டர் வேண்டும் என்றால்? வாஷிங் மெஷின் ஓட்ட வேண்டுமென்றால்? அதற்கெல்லாம் மின்சார வாரியத்தைத்தான் தொங்க வேண்டும்.

மேகமூட்டம் இல்லாமல் நல்ல வெளிச்சம் இருந்தால் சோலார் தகடுகள் ஐந்தரை மணி நேரத்துக்கு தன் மொத்த உற்பத்தித் திறனில் மின் உற்பத்தி செய்யும். மற்ற நேரங்களில் இருபது சதவீதமோ முப்பது சதவீமோதான். இரவில் சுத்தமாகவே கிடையாது. இந்த நேரங்களில் எல்லாம் மின்சாரத்திற்கு எங்கே போவது? அதுதான் பேட்டரியில் சேமித்து பயன்படுத்திக் கொள்ளலாமே? பயன்படுத்திக் கொள்ளலாம்தான் 100 கிலோவாட்டுக்கு மேலாக பேட்டரி வேலைக்கு ஆகாது. அதுவும் இல்லாமல் ஒரு சாதாரண செல்போனில் பேட்டரி என்ன லட்சணத்தில் இருக்கிறது என்று தெரியும் அல்லவா? உங்கள் வீட்டில் யுபிஎஸ் இருந்தால் எவ்வளவு நாட்களுக்கு மின்தேக்கி(பேட்டரி) வேலை செய்கிறது? ஒரு வருடத்திற்குள் ஏதாவதொரு செலவு வைத்துவிடும். ஒவ்வொரு வருடமும் சோலார் தகட்டின் விலை குறைந்து கொண்டே போகிறது ஆனால் பேட்டரியின் விலை பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டே போகிறது.

சூரிய மின்சாரம் என்பது நம் மேலதிகத் தேவைக்கும் மற்ற மின் பயன்பாட்டைக் குறைக்கவும் வேண்டுமானால் பயன்படுமேயொழிய அதுதான் அடுத்த தலைமுறை மின் உற்பத்திக்கான ஒரே வழி என்பதெல்லாம் அடிப்படை தெரியாமல் பேசுபவர்களின் பேச்சாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன். நமது ஆசை என்பது வேறு Practicality என்பது வேறு. அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில் நமது மொத்த மின் பயன்பாட்டில் ஐந்து சதவீதமாவது சூரிய மின்சாரம் என்ற நிலையை எட்டினாலே அது மிகப்பெரிய சாதனையாகத்தான் கருத வேண்டும்.

நான் சொல்வதில் நம்பிக்கையில்லை என்றால் சூரிய மின் சக்தித் துறையில் யாராவது வல்லுநர் இருந்தால் கேட்டுப்பாருங்கள். நான் கேட்டுப்பார்த்துவிட்டேன்.

Sep 18, 2014

என்னதான் வழி?

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் உதயகுமாரை நேபாளம் செல்லவிடாமல் தடுத்தார்கள் என்ற செய்தி கண்ணில்பட்டது. இந்த அணு உலை எதிர்ப்பு விவகாரத்தில் கிறித்துவ மிஷனரிகள் உள்ளே புகுந்து விளையாடுகிறார்கள் என்றும் உதயகுமார் வெளிநாடுகளின் கைக்கூலி என்றெல்லாம் செய்திகள் இருக்கின்றன. ‘உளவுத்துறையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? அரசுக்கு ஆகாதவர்கள் என்றால் அவர்கள் மீது எப்படி வேண்டுமானாலும் மண்ணைக் கரைத்து ஊற்றுவார்கள்..உதயகுமார் நல்லவர்தாங்க’என்று ஒரு தரப்பு சொல்கிறது. இரண்டுக்கும் நடுவில் நிற்பவர்களுக்குத்தான் பெருங்குழப்பம். 

எதை நம்புவது? இப்பொழுதெல்லாம் நமது மனநிலை ஊடகத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. வலதுசாரியாக இருந்தால் ‘உதயகுமார் ஒரு கடைந்தெடுத்த ஃப்ராடு’ என்று சொல்லி நம்மைத் திருப்திப்படுத்த நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இருக்கின்றன. அணு உலை எதிர்பாளாராக இருந்தால் ‘அரசாங்கம் மிகப்பெரிய சதி செய்கிறது’ என்று நம்மை நம்ப வைக்க வேறு  நூறு கட்டுரைகள் இருக்கின்றன. இரண்டு வகைக் கட்டுரைகளிலும் தலா ஐந்து கட்டுரைகளை வாசித்தவன் செத்தான். பைத்தியம் பிடிப்பதுதான் மிச்சம். குழப்பமாக இருக்கிறது என்று வெளியே சொன்னால் ‘இரண்டு தரப்பில் எது சரியானது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீ எல்லாம் என்னத்தை படிச்சு கிழிச்ச’ என்று இரண்டு தரப்புமே துணி துவைப்பதற்கு நம் முதுகை சலவைக்கல்லாகக் கொடுத்த மாதிரி ஆகிவிடும். 

அணு ஆற்றல் பற்றி வாசிக்க ஆரம்பித்தால் அது தேவையா இல்லையா என்று தொடர்ந்து சிந்தனை மாறிக் கொண்டேதான் இருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பிறகு தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் ஏகப்பட்ட நிறுவனங்கள் கால் பதித்திருக்கின்றன. இருபத்தி நான்கு மணி நேரங்களும் இயந்திரங்கள் உறுமிக் கொண்டேயிருக்கின்றன. கம்யூட்டர்கள் மின்னிக் கொண்டேயிருக்கின்றன. நகரங்கள் மின்சாரத்தை கடும்பசி கொண்டு குடித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஏரியாவிலும் மால்களைத் திறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு சாலையிலும் சூப்பர் மார்கெட்டுகள் இருக்கின்றன. கோடிக்கணக்கான மின்விளக்குகள் இருபத்தி நான்கு மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு சாலையின் இருபுறங்களும் சோடியம் விளக்குகளை பொருத்தி வைத்திருக்கிறோம். ஏ.சி என்பது சாதாரணமாகிவிட்டது. ப்ரிட்ஜ், ஹீட்டர் என்பன வீடுகளின் அத்தியாவசியத் தேவைகளாகிக் கொண்டிருக்கின்றன. மின்சாரத்தின் தேவை தாறுமாறாக எகிறிக் கொண்டிருக்கிறது. 

ஆனால் இப்பொழுது நாம் உறிஞ்சும் மின்சாரத்தின் அளவு என்பது ஜூஜூபி. இந்த மின் தேவை பன்மடங்கு பெருகப் போகிறது. ஒவ்வொரு நாடும் ஐந்தாயிரம் கோடி கொடுக்கிறேன் பத்தாயிரம் கோடி கொடுக்கிறேன் என்பதெல்லாம் இந்த நாட்டை புரட்டப் போகிறோம் என்பதன் சூசகமான வெளிப்பாடு. நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள். புதிய ப்ராஜக்ட்களால் இந்த தேசத்தை திணறடிப்பார்கள். ஆற்றலின் தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். கிராமங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி வெறும் நாற்பத்தாறு சதவீத கிராமப்புற வீடுகளில்தான் மின்சார வசதி இருக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் துல்லியமானதாக இருக்காது என்றாலும் கூட இன்னமும் மின்சார வசதி பெறாதவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்று நம்பலாம். இவர்கள் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுக்கும் போது இன்னும் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்? இன்னும் நூறு புதிய நகரங்களை உருவாக்குகிறார்கள். அந்த நகரங்களின் ஆற்றல் தேவை எவ்வளவு இருக்கும்? பெட்ரோல் விலையும் டீசல் விலையும் எகிறும் போது மின்சாரத்தின் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்பிஜி வாயுவின் விலை அதிகரிக்கும் போதும், தட்டுப்பாடு வரும் போதும் மின்சார அடுப்புகளை பயன்படுத்துவது அதிகரிக்கும்.

இப்படி யோசித்துக் கொண்டே போகலாம். எந்தக் காலத்திலும் மின் தேவைக்கான தேவை குறையப் போகப் போவதில்லை என்பதுதான் நிஜம்.

இன்றைக்கு இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு உலகத்தின் சராசரியோடு ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை. ஆக நமது மின்சார உபயோகம் அதிகரிக்கத் துவங்கும் போது- உலக மக்களின் சராசரியை நெருங்கும் போது இந்தியாவின் மொத்த மின் தேவையைக் கணக்கிட்டால் ‘கிர்ர்ர்’ என்றாகிவிடும். இப்பொழுதே கூட உலகிலேயே மின்சாரத்தை அதிகம் உறிஞ்சும் நாடுகளின் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கிறோம். இன்னும் போகப் போக நிலைமை என்னவாகப் போகிறது?

சில வகைகளில் மின்சாரத்தை மிச்சம் பிடிக்கலாம். உதாரணமாக மின் விநியோகத்தில் கிட்டத்தட்ட முப்பது சதவீதம் இழப்பு ஏற்படுகிறது (Distribution and Transmission Loss) அதில் கொஞ்சம் குறைக்கலாம் என்று வையுங்கள். பிறகு? மக்களை மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்தச் சொல்லிக் கேட்கலாம். அதுவும் நல்ல யோசனை. அப்புறம்? சோலார் பதிக்கலாம். சரி. இதையெல்லாம் செய்துவிட்டால் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா? யானையின் பசிக்கு மன்ச் சாக்லேட் கொடுப்பது போலத்தான்.

வேறு என்ன வழி? நீர் மின்சாரம் எல்லாக்காலத்திலும் கிடைப்பதில்லை. காற்று மின்சாரமும் அப்படித்தான். குப்பையில் மின்சாரம் தயாரிக்கலாம். கரும்புச்சக்கையிலும் மின்சாரம் தயாரிக்கலாம். டீசல், நிலக்கரி என கிடைப்பதை எல்லாம் பயன்படுத்தித் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாவற்றையும் சேர்த்தாலும் கூட இந்தியாவின் மின்சாரப் பசிக்கு கட்டுபடியாகாது என்றுதான் புள்ளிவிவரங்கள் பேசுகின்றன.

ஒருவகையில் அணு மின்சாரத்திற்கு நான் ஆதரவாளன். வளர்ச்சி வேண்டும், கார் வேண்டும், ஏசி வேண்டும், கம்யூட்டர் வேண்டும் எல்லாவற்றிற்கும் மின்சாரம் வேண்டும் என்று கேட்டுவிட்டு அணு உலை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது? ஆனால் அதற்காக ஒரேயடியாக அணு மின் உலைதான் சரணம் என்று அதன் காலில் விழவும் முடியாது. ரேடியோஐசோடோப்புகள்தான் பெரும்பிரச்சினை- கதிரியக்கம். ஐசோடோப்புகள் உமிழும் கதிர்கள் புவியை நாசமாக்கும் மனிதர்களை நாசாமாக்கும் மற்ற உயிர்களையும் தொலைக்கும். இப்படி எந்தவகையில் பார்த்தாலும் அபாயம்தான். ஒரு பாலித்தீன் கவரை வீசினாலே பூமியை வன்புணர்ச்சி செய்கிறார்கள் என்கிறோம். இந்தக் கழிவுகளையெல்லாம் நிலத்தில் புதைத்தால் வன்புணர்ச்சியும் செய்து ஆசிட்டும் அடிப்பது போல.

ஐசோடோப்புகள் எல்லாக்காலத்திலும் கதிர்களை உமிழ்ந்து கொண்டிருப்பதில்லைதான். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அடங்கிவிடும். ஆனால் அது எந்தக் காலம் என்பதுதான் சிக்கல். சில ஐசோடோப்புகள் அடங்க பல்லாயிரம் ஆண்டுகள் வரை ஆகும். மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் அடங்காத ஐசோடோப்புகளும் கூட இருக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி ஒழிக்கப் போகிறார்கள்?

லேசர் டெக்னாலஜி கண்டுபிடித்திருக்கிறோம். லேசரை பாய்ச்சி அந்தக் கழிவை செயலிழக்கச் செய்ய முடியும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இதெல்லாம் கேட்பதற்குத்தான் சர்க்கரைத் தண்ணீர். இப்போதைக்கு சாத்தியமில்லை. இப்படி அணுக்கழிவை ஒழிக்க ஒவ்வொரு காலத்திலும் ஏதாவது ஒன்றைச் சொல்கிறார்கள். விண்வெளியில் கொண்டு போய் எறிந்துவிட்டு வந்துவிடலாம், பாறைகளுக்குள் ஊற்றி மேலே மூடிவிடலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் எதுவுமே சாத்தியப்பட்ட மாதிரி தெரியவில்லை. இப்பொழுது எல்லா நாடுகளும் ஒரேயொரு தில்லாலங்கடி வேலையைத்தான் செய்கின்றன. கடலுக்குள் கொட்டிக் கொண்டிருக்கின்றன. திமிங்கலங்களும் மீன்களும் சண்டைக்கு வரவா போகின்றன என்ற தெனாவெட்டுதான்.

அப்போ என்னதான் வழி? எனக்கு எப்படிங்க தெரியும்!

குடி அரசு இதழ்களின் தொகுப்பு

குடி அரசு இதழ்களின் தொகுப்பு வேண்டும் என இத்தனை பேர் கேட்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. பத்து அல்லது இருபது பேர் கேட்டால் அனைவருக்கும் அனுப்பி வைத்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். இப்பொழுது வரைக்கும் மட்டுமே நூற்றுக்கணக்கானவர்கள் கேட்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தொகுப்பை மின்னஞ்சலில் அனுப்புவது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். 

தொகுப்பை ஒரு பொதுவான இடத்தில் வைத்துவிட்டால் தேவைப்படுபவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லவா?  

இதை நேற்றே செய்திருக்கலாம்தான். ஆனால் எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. தொண்ணூறு வருடங்களுக்கு முன்பாக வந்த புத்தகங்களைத் தொகுப்பாக்குவது என்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை. ஏகப்பட்ட பேர் உழைத்திருக்கிறார்கள். நிறைய பணச் செலவும் ஆகியிருக்கிறது. வெறும் தரவுகளைத் திரட்ட மட்டுமே லட்சக்கணக்கில் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அந்தக்கால எழுத்துக்களை வாசிப்பது, தொகுப்பது, விடுபட்ட தகவல்களைத் தேடுவது, கணினியாக்கம் செய்தல், பிழை திருத்தல் என புத்தகமாக்கத்திற்கான வேலைகளை மொத்தமாக நினைத்துப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. 

ஆக ஒரு பெரும் குழுவின் பல்லாண்டுகால உழைப்பில் இந்தத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. ஊரான் வீட்டு நெய்யே என்று அதை பொதுவெளியில் அவர்களது அனுமதியில்லாமல் எப்படி வெளியிட முடியும் என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. அதனால்தான் கேட்பவர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பிவிடலாம் என்றிருந்தேன்.

இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதால் இதை பொதுவெளியில் வைத்துவிடலாம் என்று தோன்றியது. முன்பு குறிப்பிட்டது போல 1925-26 ஆம் ஆண்டுகளின் தொகுப்பு மட்டும் இல்லை. 1925லிருந்து 1938 வரையிலான அனைத்து இதழ்களின் தொகுப்பு. நான்கு வருடங்களுக்கு முன்பாக பெரியார் பாசறை என்ற மின்னஞ்சலில் யாரோ அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த மின்னஞ்சலில் இருந்த வாசகங்களை வாசிக்கும் போது இந்தத் தொகுப்பை உருவாக்கியவர்களேதான் அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. பகிரச் சொல்லிக் கோரியிருந்தார்கள். ஆனால் அந்த மின்னஞ்சலின் பிற வாசகங்களை இப்பொழுது வெளியிட்டு அரசியல் ஆக்க விரும்பவில்லை.

இது போன்ற விவகாரங்களில் சந்தேகம் வந்தால் கோபி குமணன் அவர்களிடம் கேட்டுவிடுவேன். ‘மணியண்ணன்கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்’ என்றார். அவர் மணியண்ணன் என்று சொன்னது கொளத்தூர் மணி அவர்களை. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர். அவரது அணியால் உருவாக்கப்பட்ட பிடிஎஃப்தான் என்னிடம் இருக்கிறது. அனுமதித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் குறிப்பை தட்டச்சு செய்து வைத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே அனுமதித்துவிட்டார்கள். கொளத்தூர் மணி உட்பட அவரது அணிக்கு மனப்பூர்வமான நன்றி. குமணன் அவர்களுக்கும் நன்றி.

இந்த பிடிஎஃப் தொகுப்பு வேறு ஏதாவது இணையதளத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கி.வீரமணி தலைவராக இருக்கும் திராவிடர் கழகமும் இதே போன்றதொரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறது என்கிறார்கள். யாராவது authorized person அழைத்து பொதுவெளியில் பகிர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நீக்கிவிட வேண்டியிருக்கும். ஆனால் அதற்கு அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

தொகுப்பு முழுமையும் இந்த இணைப்பில் இருக்கிறது. நன்றி.