Aug 22, 2014

புரிஞ்சுதான் பேசுறியா?

‘யோவ் புரிஞ்சுதான் பேசுறியா?’ இந்தக் கேள்வியைத்தான் காருக்குள் இருந்தவர் கேட்டிருக்கிறார். என்ன கடுப்பானான் என்று தெரியவில்லை பைக்கில் நின்றிருந்தவன் கையில் வைத்திருந்த எதையோ ஓங்கி அடித்திருக்கிறான். கண்ணாடி சுக்கு நூறாக போய்விட்டது. ஹோண்டா சிட்டி- புது கார். காரை விட்டு கீழே இறங்குவதற்குள் பைக்காரன் பறந்துவிட்டான். என்ன இருந்தாலும் கண்ணாடியைப் பறிகொடுத்தவருக்கு அங்கலாய்ப்பாகத்தான் இருக்கும். தனக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் வண்டியை நகர்த்த மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ட்ராபிக் ஃபோலீஸ் வந்துவிட்டார்கள். முந்தின சிக்னலில் இருந்தே லடாய் செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இந்த ஆள் என்னவோ சொல்ல அவன் பதிலுக்கு என்னவோ சொல்ல, முதல் வரியில் இருக்கும் கேள்வியை இவர் கேட்க, டமார்.

பெங்களூர் கூட்லு கேட்டில் நேற்று மாலையில் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இந்தச் சம்பவம் தெரிந்திருக்கலாம். இல்லையென்றாலும் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை. 

ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் அடிக்கடி பிரசாத் ஸ்டுடியோவுக்குச் செல்வதுண்டு. அப்பொழுது தமிழ் படங்கள் பார்க்க வாய்ப்பு இல்லை. ஒரே ஒரு மாலில் திரையிடுவார்கள். டிக்கெட் விலை செமத்தியாக இருக்கும். பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த போது ஐந்நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்க எப்படி மனம் வரும்? பிரசாத் ஸ்டுடியோவில் அவ்வப்போது தமிழ் படங்களைத் திரையிடுவார்கள். பெரும்பாலும் தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து அதை விநியோகஸ்தர்களுக்குக் காட்டுவார்கள். உள்ளே நாமும் அமர்ந்திருந்தால் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படித்தான் ‘ஏய்’ படமும் பார்த்தேன். தெலுங்கில் ‘ரேய்’ என்ற பெயரில் டப்பிங் செய்திருந்தார்கள். யாராவது அந்தப்படத்தை தெலுங்கில் வாங்கித் திரையிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் அர்ஜூனா அர்ஜூனா பாடலைப் பார்த்துவிட்டு எனக்கு குளிர் ஜூரம் வந்துவிட்டது. அருவியில் அப்படி நனைந்தால் வராதா என்ன?

‘ஏய்’ என்று கத்துவது வில்லனை உருவாக்கிவிடுகிறது என்பதுதானே அந்தப்படத்தின் ஒன்லைன்? அதே கான்செப்ட்தான் நேற்றும். ‘புரிஞ்சுதான் பேசுறியா?’ என்ற கேள்வி சில ஆயிரங்களுக்கு வேட்டு வைத்துவிட்டது. கடைசி வரைக்கும் பினாத்திக் கொண்டிருந்தார். ‘கேமிராவில் பதிவாகியிருக்கும் பிடித்துக் கொள்ளலாம்’என்று போலீஸார் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் நகர்வதாகத் தெரியவில்லை. வண்டியின் வரிசை பெரிதாகிக் கொண்டேயிருந்தது. ஹார்ன் ஒலியெழுப்பத் துவங்கியிருந்தார்கள். அவருக்கும் வேறு வழியில்லை. வண்டியை ஓரமாக நகர்த்திவிட்டு போலீஸாரிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார். நான் கிளம்பிவிட்டேன்.

அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்க்குள்தான் செலவு பிடிக்கும் என்றாலும் தேவையில்லாத பிரச்சினைதான். பேசாமல் இருந்திருந்தால் தப்பித்திருக்கும். அதற்குள் ஈகோ. வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார். சாலையில் நம்மை முந்திச் செல்வார்கள்- ‘பார்த்து போக முடியாதா’ என்று வாய் வந்துவிடுகிறது. அவன் பேசாமல் சென்றுவிட்டால் ஒன்றுமில்லை. பதிலுக்கு அவனும் திரும்பி முறைத்தால் பிரச்சினைதான். சாலைகளில் நடக்கும் பிரச்சினைகளில் எண்பது சதவீதமாவது ஈகோவினால்தான் வருகிறது என்ற சர்வே ஒன்று கண்ணில்பட்டது. அது சரிதான். பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று.

வீட்டில் இருப்பவர்களையே முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நண்பர்களை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா? அவன் தான் உயிர்நண்பன் என்று நினைத்திருந்தேன். பெங்களூர் குடி வந்து எட்டு மாதங்கள் ஆகிறதாம். ‘ஏண்டா ஒரு ஃபோன், ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கலாம்ல’ என்றால் ‘பிஸியில் மறந்துவிட்டேன்’ என்கிறான். அப்புறம் என்ன ______ நண்பன்? (கோடிட்ட இடத்தில் உயிர் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவும்) ‘உன் சங்காத்தமே வேண்டாம்’ என்று பேச்சுவார்த்தையே முறிந்துவிட்டது. 

நெருங்கிப் பழகியவர்களையே புரிந்து கொள்ள முடிவதில்லை இந்த லட்சணத்தில் சாலையில் போகிற வருகிறவர்களெல்லாம் புரிந்துதான் பேச வேண்டும் என்றால் அவ்வளவுதான். அவ்வளவு ஏன்? நம்மை நாமே முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா என்ன? முரண்பாடுகளின் மொத்த உருவம் நாம்தான் அல்லது நான்தான்.

பெரியாரைப் பிடிக்கும்  ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவான். இந்துத்துவம் பிடிக்காது ஆனால் மோடியை ஆதரிப்பான். கம்யூனிஸம் பேசுவான் ஆனால் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பான். பைத்தியகாரன். எப்படி இதெல்லாம் சாத்தியம்? ஒரு விஷயத்தையும் முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நாய்க்கு நான்கு தட்டுக்களில் சோறு போட்டு வைத்தால் நான்கிலுமே வாய் வைத்துப் பார்க்க முயற்சிக்குமாம். டெக்னாலஜி மனிதனை அப்படித்தான் மாற்றிவிடுகிறது. கம்யூனிஸமும் சரி என்கிறது முதலாளித்துவமும் சரி என்கிறது. நாத்திகமும் சரி என்கிறது ஆன்மிகமும் சரி என்கிறது. ஷீரடி பாபாவையும் நம்பலாம் என்கிறது. பெரியாரையும் நம்பலாம் என்கிறது. எதைச் செய்வது? 

ஐடியலிஸம், கொள்கைகள் என்பதையெல்லாம் காலம் எந்தக் கருணையுமில்லாமல் சர்வசாதாரணமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரிக் கொள்கை பேசினாலும் முதலாளியை நம்பி வாழ்பவர்கள்தான் அதிகம். திராவிடம், ஆரியம், மொழி, இனம், பண்பாடு என எல்லாவற்றிலுமே ஏதாவதொருவிதத்தில் சமரசம் செய்து கொள்கிறோம். இல்லையா? மற்றவர்கள் செய்து கொள்கிறார்களோ இல்லையோ நான் செய்து கொள்கிறேன். குடும்பம் முக்கியமாகத் தெரிகிறது, மகன் முக்கியமாகத் தெரிகிறான். எல்லாவற்றையும் விட என் அரை சாண் வயிறு முக்கியம். சமரசமே செய்து கொள்ளாத- தனக்கு பிடித்த கொள்கைகளுக்குத் துளியும் மாறுபாடு இல்லாத வாழ்க்கையை மேற்கொள்ளும் எந்தவிதத்திலும் முரண்பாடு இல்லாத ஒரு மனிதர் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அவரது காலடி மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

காலடி மண் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது. எங்கள் ஊர்ப்பக்கத்தில் சூரிபாளையத்து அய்யன் கோவில் என்றொரு கோவில் இருக்கிறது. நாடார்களின் தெய்வம். இன்னமும் கோவில் கட்டுப்பாடு நாடார்களின் கைவசத்தில்தான் இருக்கிறது. அந்த அய்யன் எதனால் கடவுள் ஆனார் என்று தெரியவில்லை. பலவானாக இருந்திருக்க வேண்டும். இப்பொழுது கையில் அரிவாளாடு நிற்கிறார். குழந்தைகளாக இருந்த காலத்தில் ஆயா அழைத்துச் செல்வார். அப்பொழுதெல்லாம் பெருங்கூட்டமாக இருக்கும். சூரிபாளையத்து அய்யன் கோவில் திருநீறைக் கை கால்களில் பூசிக் கொண்டால் எந்த நோவும் வராது என்று பூசிவிடுவார். 

அந்தக் கோவிலுக்கு கடைசியாகச் சென்று இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது கோவிலை எட்டிப்பார்த்தால் ஆயா காலத்து ஆட்கள்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். இளந்தலைமுறையினர் கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ண ஜெயந்தியோடும், விநாயகர் சதுர்த்தியோடும், தீபாவளியோடும் நின்றுவிடுகிறார்கள். சூரிபாளையத்து அய்யன் கோவில் மட்டுமில்லை- வாழைத் தோட்டத்து அய்யன், தம்பிக்கலை அய்யன் என்று நிறைய அய்யன் கோவில்களிலும் கூட இதே நிலைமைதான். ஒரு காலத்தில் வருடாவருடம் கிடாவெட்டி பூசை நடத்தும் காளியாத்தா கோவிலை அந்தக்காலத்து ஆட்கள் யாராவது சுத்தம் செய்தால்தான் உண்டு. இல்லையென்றால் புதர் மண்டிக் கிடக்கிறது. மாகாளியம்மன், வேடியப்பன், கன்னிமார் சாமிகள் என ஏகப்பட்ட கடவுள்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறோம். 

பெருந்தெய்வங்களை வணங்குவதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இந்தச் சிறு தெய்வங்களை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டோம். இந்தச் சிறுதெய்வங்களில் முக்கால்வாசி தெய்வங்கள் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்கள்தான். மனிதர்கள். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அய்யன்கள் அந்த ஊரின் காவல்தெய்வங்களாகவோ, வீரர்களாகவோ வாழ்ந்து மறைந்தவர்கள். ஒவ்வொரு தெய்வத்தின் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். அவர்களை காலங்காலமாக வணங்கி கடவுளாக்கி வைத்திருக்கிறார்கள். காலம் மாற மாற கார்போரேட் சாமிகளை வணங்கத் தொடங்கி சிறுதெய்வங்களைக் கைவிட்டுவிட்டோம். வெங்கடாசலபதியும், தங்கக் கோபுரமும் ஈர்க்கும் அளவுக்கு இந்த ஏழைச் சாமிகள் ஈர்ப்பதில்லை.

இதையெல்லாம்தான் இந்துத்துவம் என்று புரிந்து கொள்வதா? எதற்கு வம்பு? கீபோர்டும் இண்டர்நெட் இணைப்பும் இருக்கிறது என்று இதையெல்லாம் தட்டினால் நம்மைத் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள்.