Aug 19, 2014

வர முடியுமா?

பெங்களூரில் ஒரு கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். தயக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் கல்லூரிகள் என்றால் தயங்க வேண்டியதில்லை. சென்ற மாதத்தில் கூட கோயமுத்தூருக்கு அருகில் இருக்கும் சசூரி பொறியியல் கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முக்கால் மணி நேரம் பேசுவதாகத்தான் திட்டம் ஆனால் ஒன்றரை மணி நேரம் இழுத்துவிட்டேன். ‘கழுத்தில் ரம்பத்தைப் போட்டு அறுக்கிறான்’என்று நினைத்தார்களோ என்னவோ- ஆனால் அமைதியாகத்தான் இருந்தார்கள்.

கல்லூரி மாணவர்களிடம் அறிவுரை சொல்லி சாவடிப்பதைவிட பாஸிட்டிவான சமாச்சாரங்களை பேசினால் கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் சொந்த அனுபவமாக இருந்தால் ஒரு படி அதிகமாகவே ஈர்த்துவிடலாம். ‘நான் பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ் மீடியம்தான்’ ‘அரசுப்பள்ளியில்தான் படித்தேன்’ ‘எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் நடந்துதான் பள்ளிக்கூடம் செல்வோம்’ என்று ஆரம்பிப்பவர்கள் எல்லாம் இந்த சூட்சுமத்தை பயன்படுத்துபவர்கள்தான். கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் மீது எப்பொழுதுமே ஒரு மரியாதை உருவாகிவிடும்.

பெங்களூர் கல்லூரியில் அதே நாள் ரமேஷ் பாபுவும் பேசுகிறார். ரமேஷ் பாபு பெங்களூரில் சலூன் கடை வைத்திருக்கிறார். முடி திருத்துநர். இப்பொழுதும் ஒரு முடி வெட்டுக்கு நூறு ரூபாய்தான் வாங்குகிறார். இதுவரை எதுவும் ஸ்பெஷல் இல்லை. ஆனால் அடுத்த வரிதான் ஸ்பெஷல்- அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கிறார். நான்கு கோடி ரூபாய் கொடுத்து  வாங்கியிருக்கிறார். 

ரமேஷ் பாபுவின் அப்பாவும் சவரத் தொழிலைச் செய்தவர்தான். சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டார். அப்பாவின் கடையை ரமேஷின் மாமா எடுத்து நடத்தியிருக்கிறார். ரமேஷூக்கும் அதே கடையில் வேலை இருந்தது. காலையில் கடையைத் திறப்பது, பெருக்கிச் சுத்தம் செய்வது என்ற வேலைகளைச் செய்துவிட்டு மாலையில் பள்ளி முடிந்து வந்தும் கடையில் வேலை செய்திருக்கிறார். ஒவ்வொரு நாளுக்கும் ஐந்து ரூபாய் கூலி. வாழ்க்கை பள்ளத்திலேயே கிடந்திருக்கிறது. 

தொண்ணூறுகளில் அம்மாவுக்கும் மாமாவுக்கும் சண்டை வந்துவிட மாமா ரமேஷின் குடும்பத்துக்கு காசு கொடுப்பதை நிறுத்திவிட்டார். வேறு வழியில்லை. ரமேஷ் பாபு தனது மாமாவை விட்டு பிரிந்து தனியாகத் தொழில் செய்யத் தொடங்கிவிட்டார். 1994 ஆம் ஆண்டு அவரது மாமா ஒரு கார் வாங்கியிருக்கிறார். மாமாவை விட பெரிய கார்- ஆனால் விலை குறைவாக வேண்டும் என்பதால் மாருதி வேனை ரமேஷ் பாபு வாங்கியிருக்கிறார். தொண்ணூறுகளில் பெங்களூரில் ஐடி கம்பெனிகள் வேர் விடத் தொடங்கியிருந்தன அல்லவா? அதனால் தனது காரை வீணாக நிறுத்தி வைக்காமல் இண்டெல் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். அப்பொழுதிருந்தே ஜெயம்தான்.

ஆனால் 2004 ஆம் ஆண்டு வரைக்கும் ஐந்தாறு கார்கள்தான் வைத்திருக்கிறார். அந்த வருடத்தில்தான் சொகுசு கார்களை வாங்கத் துவங்கியிருக்கிறார். அந்தச் சமயத்தில் நாற்பது லட்சத்தை முதலீடு செய்வது பெரிய ரிஸ்க்தான். சுற்றியிருப்பவர்கள் எல்லாம் பயப்படுத்தியிருக்கிறார்கள். துணிந்தவன்தானே ஜெயிக்கிறான்? வாங்கிப்பார்க்கலாம். வந்தால் இலாபம் இல்லையென்றால் விற்றுவிடலாம் என்று முதலீடு செய்திருக்கிறார். ஒன்றும் மோசமாகிவிடவில்லை. இன்றைய தேதிக்கு இருநூறுக்கும் அதிகமான கார்கள் ரமேஷிடம் இருக்கின்றன. பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ என்று எதுவுமே பாக்கியில்லை. அத்தனை வகையிலும் வைத்திருக்கிறார். 

இப்பொழுதெல்லாம் பத்திரிக்கைகளுக்கும் சேனல்களுக்கும் நேர்காணல்களாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கல்லூரி கல்லூரியாகச் சென்று கொண்டிருக்கிறார். TED இணையத்தளத்தில் அவரது பேச்சை சேர்த்திருக்கிறார்கள். மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். ஆனால் இன்னமும் கத்தரியைக் கைவிடவில்லை. தனது வெற்றியின் உச்சமாக ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். நான்கு கோடி ரூபாய் முதலீடு. வழக்கம்போலவே சுற்றியிருந்தவர்கள் தடுத்திருக்கிறார்கள். துணிந்திருக்கிறார். வாங்கிவிட்டார். வருகிற டிசம்பரில் இ.எம்.ஐ முடிந்துவிடுமாம். நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

எல்லோரிடமும் ஒரு தொழில் இருக்கிறது. வருமானமும் இருக்கிறது. ஆனால் நாம் மிகப்பெரிய உச்சத்தை அடைவதற்கான ஒரு தொழில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறது. அந்தத் தொழிலைக் கண்டுபிடிக்க ஒரு ஐடியா கிடைக்க வேண்டும். ரமேஷுக்கும் அப்படித்தான். 1994 ஆம் ஆண்டில் மாருதி வேனை வாங்கி நிறுத்தியிருந்த போது அவரது அம்மா ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தாராம். அந்த வீட்டு ஓனர் நந்தினிதான் ஐடியா கொடுத்திருக்கிறார். ‘சும்மா நிறுத்தி வைக்காம வாடகைக்கு விடலாம்ல’ என்று. நந்தினியின் வாயிலிருந்து வந்த ஒரு வரிதான் தொடக்கப்புள்ளி. இன்றைக்கு ரமேஷ் பாபு ஒரு சாம்ராஜ்யம்.

பேசுவதற்காக அழைத்த கல்லூரியின் நிகழ்ச்சி அமைப்பாளரிடம் ‘பெங்களூர்ன்னா தயக்கமா இருக்கு’ என்றேன். தயக்கத்திற்கு காரணம் இருக்கிறது. இங்கு ஐந்தாம் வகுப்பு குழந்தைகளே ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். எட்டாம் வகுப்பு குழந்தைகள் மிகச் சரளமாக பேசுகிறார்கள். பத்தாம் வகுப்பு மாணவன் என்றால் ஒரு அடி பின்னால் வைத்துவிடுவேன். அதுவும் மாணவி என்றால் இரண்டு அடிகள் உத்தமம். இவர்கள் அழைத்திருக்கும் நிகழ்வில் எம்.சி.ஏ, எம்.எஸ்.ஸி(ஐடி) என பல வகுப்பு மாணவர்களும் கலந்து கொள்ளும் அரங்கில் பேச வேண்டும் என்கிறார்கள். மேடையில் ஏறி தத்தக்காபித்தகா ஆங்கிலத்தில் எப்படி பேசுவது என்ற குழப்பம்தான்.

அழைத்தவர்தான் சொன்னார். ‘ரமேஷ் பாபு வருகிறார். அவருடைய பேச்சு யூடியூப்பில் இருக்கும். மிகச்சாதாரணமான ஆங்கிலம்தான். அவரே பேசும் போது உங்களால் பேசிவிட முடியும்’ என்றார். அப்பொழுதுதான் ரமேஷ் பாபு பற்றித் தேடத் துவங்கினேன். மேலே இருக்கும் விவரங்கள் அனைத்தும் இணையத்தில் தேடியதுதான். வாயைப் பிளந்து கொண்டிருந்தேன். ரமேஷ் பாபுவும் நானும் ஒன்றா? எந்த அர்த்தத்தில் ‘அவரே பேசுகிறார் நீங்கள் பேசிவிட முடியும்’என்று சொன்னார் என்று தெரியவில்லை. ரமேஷின் சாதனை என்பது உண்மையிலேயே இமாலயச் சாதனை. அவர் மேடையில் பேசவே வேண்டியதில்லை. அவர் மேடையில் அமர்ந்திருக்கும் போது அவரது சாதனைகளைப் பற்றி இன்னொருவர் பேசினாலே போதும். மாணவர்களுக்குள் தீப்பற்றிக் கொள்ளும். 

எந்தப் பின்னணியும் இல்லை. ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்பட்ட குடும்பம். அம்மா வீட்டு வேலை செய்து காப்பாற்றியிருக்கிறார். பியூசி கூட முடிக்கவில்லை. இன்னமும் ஒரு கட்டிங்குக்கு நூறு ரூபாய் வாங்கும் பார்பர். ஆனால் அவரது உயரம் மிகப்பெரியது. திருடவில்லை, கொள்ளையடிக்கவில்லை, ஏமாற்றவில்லை. ஆனால் கோடிகளில் சம்பாதித்திருக்கிறார். மிகப்பெரிய மேலாண்மைக் கல்லூரிகள் அவரை அழைத்து பேசச் சொல்கிறார்கள். 

ஒரு நாள் யோசித்துவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அவர் பேசும் தினத்தில் நானும் பேசுவது எந்தவிதத்திலும் சரியில்லை. மேடை கிடைக்கிறதே என்பதற்காக தலையாட்ட வேண்டியதில்லை அல்லவா?. அடுத்த நாள் நிகழ்ச்சி அமைப்பாளரை அழைத்து அந்த அரங்கில் பார்வையாளாராக கலந்து கொள்கிறேன் என்று அனுமதி கேட்டபோது சரி என்று சொல்லிவிட்டார்கள். ‘நீங்கள் எப்பொழுது பேசுவீர்கள்?’ என்றார்கள். அது பற்றி பிறகு முடிவு செய்து கொள்வோம் என்று சொல்லியிருக்கிறேன். இப்போதைக்கு தப்பித்தால் போதும்.