காலச்சுவடு இதழும் கடவு அமைப்பும் சேர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘தமிழில் புத்தகப் பண்பாடு’ என்ற இரண்டு நாட்களுக்கான கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அடுத்த வாரம்- ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் நாட்களில்.
காலச்சுவடு அவ்வப்பொழுது எனக்கான வாய்ப்பை கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. அது கவிதை பிரசுரமாக இருந்தாலும் சரி, விமர்சன பிரசுரமாக இருந்தாலும் சரி அல்லது கவிதைப் புத்தக பதிப்பாக இருந்தாலும் சரி. அந்த வரிசையில் இந்த முறை கருத்தரங்கத்தில் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். ‘தமிழ் பதிப்புத் துறையும் தொழில்நுட்பமும்’ என்பதுதான் எனக்கான தலைப்பு. தலைப்பைக் கேட்டவுடன் புனித வெள்ளிக்கும் மாரியம்மாளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத்தான் தோன்றும். Impact of Technology on Tamil Publishing- இதில் வெறும் புத்தகப்பதிப்பை மட்டும் உள்ளடக்க முடியாது- ப்லாக்கில் எழுதுவதிலிருந்து ஃபேஸ்புக்கில் எழுதுவது வரை சகலமும் பதிப்புதானே? ஆளாளுக்கு நடமாடும் பதிப்பகங்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம்.
தொழில்நுட்பம்தான் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதைப் பற்றி பேச வேண்டும். எழுதிய பத்து நிமிடங்களுக்குள் அவற்றை பதிப்பித்துவிடுகிறோம். அது ஸாஸ்வதம் பெற்றுவிடுகிறது. ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான தமிழ் எழுத்துக்களை பிரசுரம் செய்கிறோம். மனதுக்குள் எது தோன்றுகிறதோ அது உடனடியாக பிரசுரம் ஆகிறது. முன்பு மாதிரி பதிப்பாளர்களுக்காகவும் பத்திரிக்கையாசிரியர்களுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு பிடிக்கும்படியாக நம் எழுத்தை மாற்ற வேண்டியதில்லை. பதிப்பாளர்கள் செய்யும் அரசியலில் பகடைக்காயாக வேண்டியதில்லை. பதிப்புக்கான செலவு குறைந்திருக்கிறது. இப்படி எத்தனையோ சொல்லலாம்.
எல்லாமே பாஸிட்டிவ்தானா? அப்படி எப்படிச் சொல்ல முடியும்? ஏகப்பட்ட எதிர்மறை சமாச்சாரங்களும் இருக்கின்றன. எழுதிக் கொட்டுகிறோம். இந்தக் குப்பைகளில் எத்தனையோ நல்ல எழுத்துக்கள் யாருக்குமே தெரியாமல் புதைந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் தகுதியே இல்லாத எழுத்துக்கள் கொண்டாடப்படுகின்றன. எழுத்தையும் எழுத்தாளனையும் பின்னிப் பிணைக்கிறோம். புகழ்பெற்ற எழுத்தாளன் எவ்வளவு மோசமாக எழுதினாலும் ‘ஆசம்’ என்று பாராட்டுகிறோம். புகழடையாத ஒருவன் எவ்வளவு அற்புதத்தை எழுதினாலும் அசால்ட்டாக தாண்டிச் செல்கிறோம்.
எழுத்தைப் பொறுத்த வரைக்கும் பொறுமை அவசியம். இன்றைக்குத் தோன்றுவதை இன்றைக்கே எழுதுவதைவிடவும் இரண்டு நாட்கள் கழித்து எழுதும் போது அதன் தொனியே மாறக்கூடும். ஆனால் இந்த டெக்னாலஜி நம் பொறுமையை பறித்துவிடுகிறது. எழுதுவதை எச்சில் துப்புவதைப் போல ஆக்கிக் கொண்டிருக்கிறோம். செறிவான எழுத்துக்களைவிடவும் diluted எழுத்துக்கள்தான் இங்கு அதிகம். பெரும்பாலும் வாசிப்பதைவிடவும் எழுதுவதில்தான் குறியாக இருக்கிறோம். கொஞ்ச நாட்கள் எழுதிவிட்டு ஆசை தீர்ந்தவுடன் காணாமல் போய்விடுகிறோம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அடுத்த ஐந்து வருடங்களில் இந்த பதிப்பு எப்படி இருக்கும்? பத்து வருடங்களில் என்னவாகும்? ஒவ்வொருவரும் செல்போனில் வாசிக்கவும் எழுதவும் தொடங்கும் போது காகித அச்சு எழுத்துக்களுக்கான இடம் என்னவாக இருக்கும்? பதிப்பாளர்கள் ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்? கிண்டில் போன்றவை தமிழகத்தில் சாதாரணமாகும் போது என்னவிதமான மாறுதல்கள் நிகழும்? -இப்படி இந்தத் தலைப்பில் பேசுவதற்கான எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.
தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.
நான்கு பேருக்கு முன்பாக பேசுவதுதான் அலறச் செய்கிறது. முன்பு பேசியதுண்டு. விசுவின் அரட்டை அரங்கத்தின் இறுதியில் வட்டத்தில் கூட காட்டினார்கள். ஆனால் இடையில் பத்து வருடங்களாக மேடையே ஏறவில்லை. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். நா, பழக்கத்தை மறந்துவிட்டது. சமீபமாகத்தான் மேடைகள் ஏறிக் கொண்டிருக்கிறேன். கிழக்கு பதிப்பகத்தின் பத்ரிதான் இந்த உரையாடலை ஒருங்கிணைக்கிறார். Admired professional. உடன் பேசும் கிருஷ்ணபிரபுவோடு நல்ல நட்பு இருக்கிறது. மூர்த்தி ராஜூவுடன் பழக்கம் இல்லை. உரையாடலின் போது பழகிக் கொள்ளலாம்.
என்னளவில் இது முக்கியமான கருத்தரங்கு. நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆளுமைகள் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. ஜாம்பவான்கள்.
என்னை எதற்கு அழைத்தார்கள் என்று யோசித்துப்பார்த்தால்- நானாக யோசிக்கவில்லை. அழைப்பிதழைக் காட்டியவுடன் ‘உங்களை எதுக்கு இதுக்கெல்லாம் கூப்பிடுறாங்க?’ என்று வேணி கேட்டாள். நிசப்தம்தான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. இங்கு எழுதுவதுதான் கவனிக்கச் செய்கிறது. தொடர்ந்து எழுதுவது பெரிய காரியமில்லை. அதற்கான மனநிலை அமைய வேண்டும். அந்த மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நாம் எழுதுவதை வாசித்துவிட்டு பேசுவதற்கான ஆட்கள் அமைய வேண்டும். நிசப்தம் தளத்துக்கு அமைந்திருக்கிறார்கள். தொடர்ந்து வாசித்துவிட்டு தொடர்பில் இருப்பவர்கள் என நூறு பேரையாவது இந்த வினாடியில் ஞாபகப்படுத்த முடியும். அந்த உற்சாகம்தான் எழுதச் செய்கிறது. எவ்வளவுதான் எதிர்கருத்துக்களை எழுதினாலும் அதை மட்டும் விமர்சித்துவிட்டு அடுத்த கட்டுரையிலிருக்கும் நல்ல விஷயங்களை பாராட்டுபவர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் நன்றி.
மதுரையில் சந்திப்போம். வந்துவிடுங்கள்.
8 எதிர் சப்தங்கள்:
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உடனடி எழுத்துவெளி பற்றிய கருத்துகள் முற்றிலும் உண்மை .மதுரை வரையலாத எங்களைப்போன்ற உங்க லட்சோப லட்சம் நிசப்தம் வாசகர்கள் ..சரி விடுங்க -ஆயிரத்திலாவது இருப்போம்னு நினைக்கிறேன் எங்களுக்காக விவரங்களைப் பதிவிடுங்க ..வாழ்த்துகள்
அன்(றை)னைக்கு என்னன்னா "சற்றுமுன்" இணையப்பக்கத்துல "நட்சத்திர பதிவாளர்" அறிமுகத்துல மொத ஆளா அறிமுகம்.
இன்னைக்கு என்னன்னா தமிழில் புத்தக பண்பாடு பன்னாட்டு அரங்கில் பேச அழைப்பு.
கலக்குறே மணி.
வாழ்த்துக்கள்.
//எதுக்கு இதுக்கெல்லாம் கூப்பிடுறாங்க//
"சைபர் சாத்தான்கள்" நிச்சயம் ஒரு காரணமாய் இருக்கும். அடுத்து தமிழ் எழுத்தும் பிடிபட்டிருக்க வேண்டும்.கணிணி தொழில் நுட்பமும் பிடிபட்டிருக்க வேண்டும்.வாசிப்பும் எழுத்தும் வசப்பட்டிருக்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் ஆர்வமும் வேண்டும். _ _ _ _ _. "இன்னும் நிறைய டும் டும்கள்" உங்களிடம் இருக்கிறது.
கருத்தரங்கை சிறப்பாக செய்து முடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
All the best!
All the best
Great.
Kindly register my name to attend the program
at madurai on Aug 23rd & 24th.
t.a.vijey
Ph: 9843637728
பார்வையாளர்களுக்கு முன்பதிவு எதுவும் இல்லை. நீங்கள் நேரடியாக அரங்குக்கு வந்துவிடலாம்.
Post a Comment