Aug 31, 2014

இந்த மரம் ஏன் தனித்திருக்கிறது?

சூடாமணி என்ற பெயர் சேலத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் அறிமுகம். இது அரசியல்வாதி சூடாமணி. அப்பொழுது அந்த ஊருக்கு அவர்தான் மேயராக இருந்தார். அதனால் சூடாமணி என்ற பெயர் ஆணுக்கு மட்டுமான பெயர் என்று எப்படியோ பதிந்து விட்டது. அதன் பிறகு அவ்வப்பொழுது ஆர். சூடாமணி என்ற எழுத்தாளரின் பெயரைக் கேள்விப்படும் போதெல்லாம் ஆண் எழுத்தாளர் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் ஆர்.சூடாமணி பெண் எழுத்தாளர். எழுத்தாளர் ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டாலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. என்னதான் முயன்றாலும் பெண்ணின் உளவியலை ஆண் எழுத்தாளர்களால் அவ்வளவு துல்லியமாக எழுதிவிட முடிவதில்லை என நினைக்கிறேன். சூடாமணியிலிருந்து குட்டிரேவதி வரைக்குமான பெண் எழுத்தாளர்களின் எழுத்தை வாசிக்கும் போது இப்படித்தான் தோன்றுகிறது. பெண்ணுலகின் நுண்மையான விவரணைகளை பெண்களால் மட்டுமே எழுத்தாக்க முடிகிறது. பெண் எழுத்தாளர்களின் கவிதைகளைச் சொல்லவில்லை. சிறுகதைகளைச் சொல்கிறேன். பெண் கவிஞர்களின் பத்துக் கவிதைகளை வாசித்தால் அதில் ஒன்றுதான் பிடித்த மாதிரியானதாக இருக்கிறது. குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- எனக்கு என்னவோ அப்படித்தான். அதனால் கவிதைகளை விட்டுவிடலாம்.

இருக்கட்டும்.

சூடாமணியின் ‘பிம்பம்’ என்ற கதையில் நாயகியின் பெயர் எஸ்.மீனாட்சி. அவளுக்கு ஜான்சி ராணியாகவோ, அன்னை தெரஸாவாகவோ அல்லது மேடம் க்யூரியாகவோ புகழ்பெற்ற பெண்ணாக வேண்டும் என விருப்பம். வகுப்பில் வருகைப் பதிவின் போது கூட பல நேரங்களில் அவள் தனது பெயரை மறந்துவிடுகிறாள். அவளுடைய அம்மா சமஸ்கிருதத்தில் பண்டிட். ஆனால் திருமணத்திற்குப் பிறகு புத்தகங்களை மூட்டை கட்டி பழைய பேப்பர்க்காரனுக்கு போட்டுவிடுகிறாள். மீனாட்சியின் தந்தைக்கு பிடிப்பதில்லை என்பதுதான் காரணம். அதனால் குடும்பம் மட்டும் போதும் என ஒடுங்கிக் கொள்கிறாள். ஆனால் மீனாட்சி அப்படியில்லை. சாதனைகளைச் செய்ய வேண்டும் என நினைக்கிறாள். நிறைய வாசிக்கிறாள். அவளைத் பெண் பார்த்துச் செல்கிறார்கள். பம்பாய்க்காரன். அவனை மீனாட்சிக்கும் பிடித்திருக்கிறது. ஊருக்குச் சென்று ‘வேலையை விட்டுவிடச் சொல்லுங்கள்’ என கடிதம் வருகிறது. விட்டுவிடுகிறாள். ‘அவளை மூக்குத்தி அணிந்து கொள்ளச் சொல்லுங்கள்’ என அடுத்த கடிதம் வருகிறது. அதற்கு மீனாட்சி மறுக்கிறாள். வீட்டில் வற்புறுத்துகிறார்கள். பிறகு மீனாட்சி என்ன முடிவு எடுக்கிறாள் என்பதுதான் கதையின் முடிவு. முடிவு நாடகத்தனமாக இருக்கிறது. ஆனால் முடிவு வரைக்கும் கதையின் நகர்தலில் காட்டப்படும் மீனாட்சியின் மனம், அவளது அம்மாவின் மனவோட்டங்கள் என்பவையெல்லாம்தான் கதையின் பெரும்பலம்.

இந்தக் கதை ஒரு உதாரணம்தான். 

சூடாமணி தன் வாழ்நாளில் எழுதிக் குவித்திருக்கிறார். 1954 ஆம் ஆண்டு அவரது முதல் சிறுகதை பிரசுரமாகியிருக்கிறது. தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள், 2004 வரை பிரசுரமான கதைகள் மட்டும் 574. பிரசுரமான கதைகள் மட்டுமே அறுநூறை நெருங்கியிருக்கிறது என்றால் எழுதிய கதைகளின் எண்ணிக்கை நிச்சயமாக ஆயிரத்தைத் தாண்டியிருக்கக் கூடும். கல்கி வார இதழின் ஆசிரியர் சீதா ரவியும், கே.பாரதியும் தொகுத்திருக்கிறார்கள். 

ஆர்.சூடாமணியின் பெயரை சமீபமாக யாரும் உச்சரிப்பதாகத் தெரியவில்லை. அதுவும் இணைய எழுத்துக்கள் பரவலான பிறகு எஸ்.ரா, சாரு, ஜெயமோகன் என்று மும்மூர்த்திகள் பெரிய அணைக்கட்டுகளாகிவிட்டார்கள். அவர்களைத் தாண்டி எந்த எழுத்தாளரின் எழுத்துக்களும் இங்கு அவ்வளவாக விவாதிக்கப்படுவதில்லை. இந்த அணைக்கட்டுகளின் காரணமாக இன்றைக்கும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் எழுத்துக்களையே இங்கு பரவலாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை. அப்புறம் சூடாமணி பற்றியெல்லாம் பேசுவதில்லை என்று எதிர்பார்ப்பது மடத்தனம். எஸ்ராவையும், ஜெமோவையும், சாருவையும் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் படைப்புகள், படைப்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்தால் அது இமாலயத்திற்கு ஒப்பானது. என்ன பிரச்சினையென்றால் இந்தக் காலத்தில் அவர்கள் மூவரைத் தாண்டி நாம் விவாதிப்பது மிக மிகக் குறைவாக இருக்கிறது.

எனக்கும் கூட சூடாமணியின் புத்தகம் ஓசியில் கிடைத்தது. அதனால்தான் துள்ளுகிறேன். 

சென்ற புத்தகக் கண்காட்சியிலேயே வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம்தான் இது. ஆனால் புத்தகத்தின் விலை ஐந்நூற்று இருபத்தைந்து ரூபாய். எனக்கு ஒரு சிண்ட்ரோம் இருக்கிறது. Book Price Syndrome. ஒவ்வொரு முறை புத்தகம் வாங்கச் செல்லும் போதும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதில்லை. கை நீண்டு விடும் என்பதால் இந்த ஏற்பாடு. இரண்டாயிரம் ரூபாய்க்கு என்ன வாங்க முடியுமோ அவ்வளவுதான். எனது ஜீனிலும் கூட ஒரு பிரச்சினை இருக்கிறது. கொடுக்கிற காசுக்கு கை நிறைய இருக்க வேண்டும் என நினைப்பேன். இரண்டாயிரம் ரூபாய்க்கு நான்கு புத்தகங்களை வாங்குவதைவிடவும் தலா நூறு ரூபாய்க்கு இருபது புத்தகங்கள் வாங்கலாம் அல்லவா? அப்படித்தான் சூடாமணியின் புத்தகத்தை வாங்கவில்லை.

இந்த முறை மதுரை சென்றிருந்த போது காலச்சுவடு கருத்தரங்கில் பேச வந்திருந்தவர்களுக்கு ஒரு சிறிய பையில் இந்த புத்தகத்தை வழங்கியிருந்தார்கள். சந்தோஷம் தொற்றிக் கொண்டது. ‘தனிமைத் தளிர்’.மதுரையிலிருந்து திரும்பும் போதே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தத் தொகுப்பில் அறுபத்து மூன்று கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சேர்த்திருக்கிறார்கள். அவரது மொத்தக் கதைகளில் சுமார் பத்து சதவீதம் மட்டும்தான். எழுத்தாளர் அம்பை சூடாமணியோடு நெருங்கிப் பழகியிருக்கிறார். அவர் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் சூடாமணியின் சிறந்த கதைகளாக குறிப்பிடுவனவற்றில் ‘நான்காம் ஆசிரமம்’ மட்டும்தான் தொகுப்பில் இருக்கிறது. அப்படியிருந்தும் இது வாசகனுக்கு முழுமையான தொகுப்பாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆக மிச்சமிருக்கும் கதைகளை எல்லாம் தொகுத்தாலும் கூட இன்னமும் நான்கைந்து தொகுப்புகள் கிடைக்கும்.

இந்தத் தொகுப்பில் சூடாமணியின் வாழ்க்கை குறிப்பு இடம்பெறவில்லை என்பது ஒரு குறைதான். அடுத்த தலைமுறையினருக்கு சூடாமணி பற்றிய விவரத்தை கொடுத்திருக்கலாம். சூடாமணியை உளவியல் எழுத்தாளர் என்று தொகுப்பாசிரியர்கள் தங்களது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது சரிதான். மனித மனதின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் டார்ச் அடித்து வெளிச்சம் காட்டுகிறார். கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் வழியாக சூடாமணி என்ற அற்புதமான கதை சொல்லியின் ஐம்பதாண்டு கால எழுத்துப் பயணத்தின் உருமாற்றத்தை நீள்வெட்டாக பார்க்க முடிகிறது. 

சூடாமணிக்கு சிறுவயதிலேயே அம்மை நோய் தாக்கத்தினால் உடல் வளர்ச்சி குன்றிவிட்டது. அவரது தந்தையார் அந்தக் காலத்து ஐ.சி.எஸ் அதிகாரி. சூடாமணியின் உடல்நிலை காரணமாக பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே ஆசிரியர்களை வரவழைத்துச் சொல்லித் தந்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாத சூடாமணிக்கு எழுத்தும், வாசிப்பும்தான் உறுதுணையாகியிருக்கின்றன. நிறைய வாசித்திருக்கிறார். நிறைய எழுதியிருக்கிறார். கடைசி வரைக்கும் தனியாகவே இருந்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் வடிகாலன் என்ற ஒரு கதை இருக்கிறது. ரவி என்றொரு இளைஞனுக்கு போலியோ பாதிப்பினால் கால்கள் செயல்படுவதில்லை. அவனுக்கு வாசிப்புதான் உலகம். மற்றவர்களின் பார்வையில் அவன் யோகி. ஆளாளுக்கு தங்கள் பிரச்சினைகளை அவனிடம் கொட்டுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவன் வடிகால். நண்பன், அப்பாவின் தோழன், அம்மா என்று யாரும் பாக்கியில்லை. பக்கத்து வீட்டில் ஒரு பெண் குடி வருகிறாள். இவனது வாழ்வுக்கு ஏதோ அர்த்தம் கிடைத்தது போல நினைக்கிறான். ஆனால் அவளும் கடைசியில் தனது காதல் கதையின் பிரச்சினைகளை இவனிடம் கொட்டுகிறாள். இதுவரை யாரிடமும் காட்டாத கோபத்தை அவளிடம் காட்டி அவளை ‘எழுந்து போ’ என்று துரத்திவிட்டு அழத் துவங்குகிறான். 

ஏனோ இந்தக் கதையை வாசிக்கும் போது பின்னட்டையில் இருந்த சூடாமணியின் முகம் திரும்பத் திரும்ப வந்து போனது. ரவிக்கும் சூடாமணிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கக் கூடும் எனத் தோன்றியது.

 நோன்பின் பலம் என்ற கதையில் வரும் யமுனாவின் மனவோட்டம் வேறொரு தளம். சிறுவயதுப் பெண் தன் வீட்டில் வேலை செய்யும் தாழ்ந்த சாதிப் பையனிடம் காதல் கொள்கிறாள். அதைக் காதல் என்று சொல்ல முடியாது. அக்கறை. அவ்வளவு நேர்த்தி அந்தக் கதையில். இப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் எழுதிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.  Book Price Syndrome மட்டும் இல்லையென்றால் இந்த புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.

சூடாமணி இறக்கும் போது உயில் எழுதி வைத்திருக்கிறார். அவரது மொத்தச் சொத்துக்களையும்- கிட்டத்தட்ட பதினோரு கோடி ரூபாய்- ராமகிருஷ்ண மிஷன் உட்பட சேவை நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். புத்தகத்தை வாசித்து மூன்று நாட்களாகிவிட்டது. இன்னமும் அந்தக் கதைகள்தான் கனவில் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையிலும் சூடாமணி என்ற தனிமைத் தளிர் தவறாமல் வந்து போகிறது.

Aug 30, 2014

கோசின்ரா தெரியுமா?

ஒரு நண்பர் இருக்கிறார். கவிதையே வாசிக்காத நண்பர் அவர். ஆனால் சிறுகதை, நாவல் எல்லாம் வாசிப்பார். பேச்சுவாக்கில் ‘கோசின்ரா தெரியுமா?’ என்றார். அவரைத் தெரியுமே. கவிஞர். எப்படி இருப்பார் என்றெல்லாம் தெரியாது. நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவரது கவிதைகளை வாசித்திருக்கிறேன். இப்பொழுது வடமாநிலம் எங்கேயோ அரசு அதிகாரியாக இருக்கிறார். அவருடைய நிழற்படம் ஏதாவது கிடைக்குமா என்று தேடினால் சில படங்கள் கிடைக்கின்றன. ஆனால் அந்தப் படத்தில் இருப்பவர்தான் கோசின்ராவா என்று சந்தேகம். விட்டுவிட்டேன்.

‘எதுக்கு கேட்டீங்க?’ என்றேன். கவிதைக்குச் சம்பந்தமே இல்லாத ஆள் ஒருவர் கவிஞரைப் பற்றி பேசினால் இந்தக் கேள்வியைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்? ‘

‘ஒரு கவிதையை ஆன்லைனில் வாசித்தேன்’ என்று எனக்கு ஜெர்க் கொடுத்துவிட்டு ‘நாய் பிழைப்பு’ என்ற கவிதையை அனுப்பி வைத்திருந்தார். கவிதை என்றவுடன் தெறிக்க வேண்டியதில்லை. புரிந்து கொள்ள எந்தச் சிக்கலும் இல்லாத நேரடியான கவிதை. ஒரே வாசிப்பில் புரிந்து கொள்ளலாம்.  வாசித்துவிடுங்கள்.

எனக்கு நாயுடன் பழக்கமில்லை
நாயும் என்னோடு பழகியதில்லை. 
நாய்க்கு ஒரு கவிதையும் சொன்னதில்லை 
நாயும் என்னிடம் எதையும் சொன்னதில்லை 
நாயைக் கண்டதும் பயப்படுகிறேன். 
நாயும் என்னைக் கண்டதும் பயப்படுகிறது. 
நான் அறையில் உறங்குகிறேன். நாய் தரையில் உறங்குகிறது. 
நாய் கனவு காண்கிறது. நானும் கனவு காண்கிறேன். 
நாய் தேர்தலில் நிற்பதில்லை. நானும் தேர்தலில் நிற்பதில்லை. 
நாய் இப்போதும் நாயாக இருக்கிறது. மனிதன் நான் 
எல்லாவற்றுக்கும் நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன்.

கோசின்ராவின் முதல் தொகுப்பு ‘என் கடவுளும் என்னைப் போல் கருப்பு’ வெளிவந்து ஏழெட்டு வருடங்கள் இருக்கும். அந்தச் சமயத்தில் அந்தத் தொகுப்பை நிறையப்பேர் சிலாகித்தார்கள். அவரது அரசியல் கவிதைகள் முக்கியமானவை. நிறுத்தி வைத்து பொட்டில் அடிப்பது போல இருக்கும். அதற்கப்புறம் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு. ‘பூனையின் கடவுள்’. நன்றாக எழுதுபவர்கள் அடிக்கடி எழுதுவதில்லை. என்னைப் போன்றவர்கள்தான் தினமும் எழுதி.....சரி விடுங்கள். 

இரண்டாவது தொகுப்பில்தான் மேற்சொன்ன கவிதை இடம் பெற்றிருக்கிறது. புது எழுத்து வெளியீடு. 

கோசின்ராவின் கவிதைகளில் கவிதைக்கான எந்த சித்து வேலையுமே இருப்பதில்லை. கவிதைகளை பிரசவிக்கிறேன் என்று முக்கி மெனக்கெடுவது இல்லை. ஒரே டெம்ப்ளேட்டில் இருபது முப்பது கவிதைகள் எழுதி ‘படிச்சுக்கோ’ என்று விசிறியடிப்பதில்லை. வெண்ணையின் மீதாக இழுக்கப்படும் கூர்முனையுடைய கத்தியைப் போல சமூகத்தின் முடிச்சுகளை அறுத்துச் செல்கிறார். திருகலான மொழிநடை, புரியாத வாக்கிய அமைப்பு என்று எதையும் தனது கவிதையில் பிரஸ்தாபிப்பதில்லை. நேரடியான கவிதைகள்.

கவிதையில் எளிமை மிக அவசியம். வாசகனை திணறடிக்காத எளிமையாக இருக்க வேண்டும். அந்த எளிமை கோசின்ராவின் கவிதைகளில் இருக்கிறது. ஏகாதிபத்தியம், அரசின் அடக்குமுறைகள், துப்பாக்கிகளின் மிரட்டல்கள் என சகமனிதனுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் பயமூட்டும் சமாச்சாரங்களை தனது கவிதையில் பிசிறில்லாமல் பேசிவிடுகிறார் கோசின்ரா. அதற்காக புரட்சிகரக் கவிதைகள் என்று அர்த்தம் இல்லை. ஒரு நண்பனோடு உரையாடுவது போன்ற கவிதைகள் இவை. 

கோசின்ராவின் தொகுப்புகளின் தலைப்பில் மட்டும் இல்லை- கவிதைகளிலும் கடவுளுக்கு இடம் அதிகம். 

‘இந்த பூமிக்கு அம்பேத்கர் வருவதற்கு முன்னும் 
ராமர் இருந்தார்.
இந்த பூமிக்கு பெரியார் வருவதற்கு முன்னும் 
இயேசு இருந்தார்
இந்த பூமிக்கு ஃபூலே வருவதற்கு முன்னும்
முகமது நபிகளிருந்தார்.
எல்லாக் கடவுள்களும் வந்து போனார்கள்.
மலம் அள்ளுகிறவன் அப்படியே தானிருந்தான்
பிணம் தூக்கிகள் அப்படியே தானிருந்தார்கள்’ என்று தொகுப்பு முழுவதுமாகவே கடவுள்களுக்கு  கேள்விகளும் சாட்டையடிகளும் உண்டு. 

‘செவ்வாய் கிரகத்தில் கடவுள் இல்லை’ ‘கடவுள் அமெரிக்கனாகப் பிறக்கமாட்டார்’ ‘கடவுளால் கொல்லப்பட்டவன்’ ‘கடவுளின் பிரேத பரிசோதனை அறிக்கை’ என்று தொகுப்பு முழுவதுமாக கடவுள் கோசின்ராவிடம் சிக்கிக் கொண்டு சீட்டியடிக்கிறார். கடவுளை தவிர்த்துவிட்டு இவரால் கவிதை எழுத இயலுமா என்று சந்தேகமாக இருக்கிறது. 

எப்பொழுதுமே தமிழ்க் கவிதைகளில் வெறும் அழகியல் மட்டுமே கோலோச்சுவதில்லை. அதேபோல தனிமனித துக்கங்களை பேசும் கவிதைகள் மட்டும் வெற்றியடைவதில்லை. கோசின்ரா போன்றவர்களின் அரசியல் மற்றும் சமூகக் கவிதைகள் திடீரென்று ஒரு வெளிச்சத்தை பாய்ச்சிவிட்டுச் செல்கின்றன. சலனமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் கவிதையின் போக்கில் ஒரு ஆழமான கீறலைப் போட்டுப் பார்க்கின்றன. ஆனால் இத்தகைய கவிதைகளுக்கு எந்த மாதிரியான கவனம் கிடைக்கிறது என்று தெரியவில்லை. பொதுவாகவே தமிழில் கவிதைகளுக்கு பெரிய கவனம் இருப்பதில்லை. 

அதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். கவிதைகள் என்பவை புனிதமானவை, புதிரானவை, புரியாதவை என்றெல்லாம் பேசிப் பேசியே முந்நூறு பேர்களைத் தாண்டி வராத வஸ்தாக கவிதையை மாற்றிவிட்டார்கள். சாமானியர்களுக்கு கவிதை புரியாது என்று சொல்லிச் சொல்லியே அவற்றை அந்நியமானதாக்கிவிட்டார்கள். தமிழ்க் கவிதைகள் உண்மையில் வெகுஜன தளத்தில் மிகப்பெரிய உரையாடலாக மாறியிருக்க வேண்டும். ஆனால் நாம் அதைச் செய்யவில்லை. கவிதைத் தொகுப்பு வெளியிடுவதும் ஒரு பாழுங்கிணற்றில் பெருங்கல்லைத் தூக்கிப் போடுவதும் ஒன்றுதான்.

இந்தத் தொகுப்பின் கவிதைகளில் குறைகளும் இருக்கின்றன. உதாரணமாக சில கவிதைகள் அறிவுரை சொல்வதைப் போல அமைந்திருக்கின்றன அல்லது கடைசியில் ஒரு ஸ்டேட்மெண்ட்டோடு முடிகின்றன. ஒரு கவிதையை உதாரணமாகக் காட்டலாம். இந்தக் கவிதையும் சுலபமானதுதான். 

ஒரு பிச்சைக்காரரோ அல்லது யாரோ ஒரு அநாதையோ இறந்து கிடக்கிறார். அதைப் பற்றி பேசுகிறது. 

அவர் இறப்பது இது முதல்  தடவையல்ல
இறப்பை யாரும் நம்பவில்லையென்பதால்
மீண்டும் மீண்டும் இறந்திருக்கிறார்
இப்பொழுது அவரை முழுவதும்  நம்பிவிட்டார்கள்
அதற்கு அடையாளமாக அவரை
அன்றைய செய்திதாள்களால் மூடியிருக்கிறார்கள்
சாவதற்கு சில மணி நேரம்  முன்புவரை
இருமிக்கொண்டிருந்தாராம்
அவருக்கென்று சொத்துக்கள்  ஏதுமில்லை
வாழ்ந்து வந்த நடைப்பாதை
நகராட்சிக்கு சொந்தமானது
அவர் மரணத்திற்கு அழ யாருமில்லை
தடவியல் நிபுணனுக்கு
எவ்வித சிரமும் கொடுக்காமல் செத்துவிட்டார்
நெடு நாளாக பசி உருண்டைகளை விழுங்கியிருக்கிறார்
பசி மனிதனை கொல்லக்கூடிய மிருகம்தான்
திரைப்படப் சுவரொட்டிகள்தான்
படுக்கைவிரிப்புகளாக இருந்திருக்கிறது
அதை யாருக்கும் உயில் எழுதவில்லை
இறந்தபிறகு செய்திதாள் போர்வை கிடைத்திருக்கிறது
அவருக்காக அமரர் ஊர்தி வரப்போவதில்லை
மாநகராட்சி வண்டிக்காக காத்துக் கிடக்கிறார்
வைகுண்டஏகாதேசி தினத்தில் இறந்திருப்பதால்
சொர்க்கம் போவாரென பேசிக்கொண்டார்கள்
போனவாரத்தில் இறந்து கிடந்த நாயை
மாநகராட்சி வண்டிதான்  தூக்கிக்கொண்டு போனது
மாநகராட்சி வண்டிகளுக்கு ஏழைகளும் குப்பைதான்.

நல்ல கவிதை. ஆனால் கடைசி மூன்று வரிகளைத்தான் ஸ்டேட்மெண்ட் என்கிறேன். சொர்க்கம் போவாரென பேசிக் கொண்டார்கள்- என்ற வரியோடு நிறுத்திக் கொள்ளும் போது வாசகனுக்குகென ஒரு இடம் கிடைக்கிறது. யோசிக்கத் துவங்குகிறோம். அந்த மனிதனைப் பற்றிய சித்திரம், அந்தச் சாவைப் பற்றிய காட்சிகள், சாவுக்கு முன்பான அவனுடைய வாழ்வு என எதையெதையோ பின்னிப்பின்னி ஒரு சித்திரத்தை நம் மனதுக்குள் உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால் கடைசி மூன்று வரிகள் கவிதையின் மொத்த குரலையும் ‘மாநகராட்சி வண்டிகளுக்கு ஏழைகளும் குப்பைதான்’ என்கிற ஒரு அரசியல் ஸ்டேட்மெண்ட்டாக முடிக்கிறது. நமது மொத்த சிந்தனையும் இந்த வரியில் தேங்குகிறது. இத்தகைய ஸ்டேட்மெண்ட் கவிதைக்கு அவசியமில்லை என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

ஆனால் இவை போன்ற சில குறைகள் ஒரு தொகுப்பில் தவிர்க்கவே முடியாதவை. குறைகளே இல்லாத தொகுப்பு என்று ஒன்றை யாராவது சுட்டிக்காட்டினால் ஒன்று அந்தக் கவிஞனின் முகதாட்சண்யத்துக்காக பொய் சொல்கிறார் என்று அர்த்தம் அல்லது அந்தத் தொகுப்பை அவர் வாசித்திருக்கவே இல்லை என்று அர்த்தம். 

‘பூனையின் கடவுள்’ தொகுப்பு பற்றி ஒற்றை வரியில் சொன்னால் ‘இந்தத் தொகுப்பு என மிகப் பிடித்திருக்கிறது’.

தமிழில் ஒரு கவிதைத் தொகுப்பை அதிகபட்சமாக எத்தனை பேர் வாசிக்கிறார்கள்? இருநூறு என்றால அது மிகப்பெரிய எண்ணிக்கை. அந்தக் கவிதையைப் பற்றி எத்தனை பேர் பேசுகிறார்கள்? முகம் தெரியாத மூன்று பேர் பேசினால் அது மிக மிகப் பெரிய எண்ணிக்கை. அவ்வளவுதான் தமிழில் கவிதைக் கலாச்சாரம். வாசகர்களும் ‘கவிதை புரிவதில்லை’ என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிடுகிறார்கள். கவிஞர்களும் ‘நீ வாசிச்சா வாசி இல்லைன்னா போ’ என்று விட்டுவிடுகிறார்கள். கவிதைக்குள் ஒரு காலை வைத்துப் பார்க்கலாம் என்று இறங்குபவர்கள் அரிது. அப்படி இறங்குபவர்கள் கோசின்ரா போன்றவர்களின் நேரடிக் கவிதைகளில் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

தொகுப்பை ஆன்லைனில் வாங்க முடியும்.

விநாயகர்- கடிதம்

இன்றைய விவாதப் பொருளான விநாயகனுக்கு வருவோம். விநாயகன் தமிழ் கடவுளா இல்லையா என்பது தானே பிரச்சனை. பொதுவாக திராவிட இயக்கங்களின் அல்லது பெரியாரிஸ்டுகளின் வாதம் விநாயாகர் என்ற கடவுளே தமிழர் வரலாற்றில் கிடையாது என்பது. சங்க இலக்கியங்கள் எதிலும் அதற்கான குறிப்புகள் இல்லை. விநாயகனும், இந்த விநாயக சதுர்த்தி பண்டிகைகளும் வடக்கிலிருந்து இங்கு திணிக்கப்பட்டவை. இன்னும் சொல்லப் போனால் இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சதிவேலை. கிட்டதட்ட உங்கள் கட்டுரையும் இதை ஆமோதிக்கும் தொனியில் இருப்பதாக எனக்கு படுகிறது. ஒருவேளை விநாயகர் தமிழர் கடவுளாக இல்லாமல் இருந்தாலும் இது இந்துத்துவ திணிப்பு!, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது போன்ற கூற்றுகளில் எனக்கு உடன்பாடில்லை.

1.      பொதுவாக இதுதான் தமிழர் வரலாறு என்று ஒன்றை வரையறுத்து கூறுவது சரியாகுமா? கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிள்ளையார் இல்லையென்றே நம்பி கொள்கிறேன். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அதன்பிறகாவது இருந்திருக்கிறார் அல்லவா. அதாவது ஏழாம் நூற்றாண்டு முதல் இருபத்தோராம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட பதினாலு நூற்றாண்டுகள் இருந்திருக்கிறார் அல்லவா. அந்த காலம் தமிழர் வரலாற்றில் சேர்த்தி கிடையாதா. ஏன் எப்போதும் தமிழ், தமிழர் வரலாறு என்றாலே சங்க காலத்தயே மேற்கோள் காட்டுகிறார்கள்? அப்போது இருந்த வாழ்க்கை முறையில் பத்து சதவீதம் கூட தற்போது இருக்குமா என்பது சந்தேகமே. அப்படியிருக்கையில் ஒரு சமூக நிகழ்வின் நம்பகத்தன்மையை
சரிபார்ப்பதற்கு மட்டும் வ்ரலாற்றை புரட்டி பார்ப்பது எப்படி சரியாகும். வரலாற்றை தெரிந்து கொள்வதும் அதுகுறித்த பிரக்ஞையோடு இருப்பதும் அவசியம்தான். ஆனால், அதற்காக வரலாறு காலாகாலத்துக்கும் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும் என்று அடம்பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. இப்படி யோசிக்கையில் வரலாறு என்பதே தினமும் update ஆவதுதான் எனத் தோன்றுகிறது

2.      இரண்டு வருடங்களுக்கு முன்பென்றால் பிள்ளையார் இந்துத்துவ திணிப்பு என்பதை நூறு சதவீதம் ஒப்புக் கொண்டிருப்பேன். இன்னும் சொல்ல போனால் சின்ன வயதிலிருந்து எனது அபிமான கடவுளாக இருந்த பிள்ளையார் இளவயதில் ஏற்பட்ட பெரியாரிய சிந்தனை மாற்றங்களுக்கு பிறகு ஒழிக்கப்படவேண்டிய கடவுளரின் வரிசையில் முதலிடத்தில் வைத்திருந்தேன். பின்னர் ஜெமோவை வாசிக்க ஆரம்பித்த பிறகு எனது அனைத்து தர்கங்களும் உடைய ஆரம்பித்தது. அதன் பிறகே வரலாறு என்பது நம் கண்ணுக்கு தெரிந்த/தெரியாத பல நூறு காரணிகள் மூலம் உருவாவது என்றும் அதை எளிய ஒற்றைபடை கூற்றுகளால் வரையறுப்பது அபத்தம் என்ற தர்க்கம் உருவானது. எனவே இப்படி பிள்ளையாரை திட்டமிட்டு ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்வியலின் மீது திணிப்பது சாத்தியம் தானா என்ற கேள்வி எழுகிறது. அப்படியே திணிக்கப்பட்டாலும் அந்த நிகழ்விற்கான வரலாற்று தேவைகள் இல்லாமல் அந்த நிகழ்வு தொடர்வது சாத்தியம் தானா போன்ற கேள்விகள்..

3.      இந்த விவாதம் குறித்து தங்களுக்கு கடிதம் எழுத தூண்டியதே இன்று நுங்கம்பாக்கம் வீதிகளில் நான் கண்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்தான். கிட்டதட்ட அனைத்து வீதிகளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொரு சந்திலும் ஒரு பிள்ளையார் முளைத்திருந்தார். சிறுவர்கள் ஊர்வலத்தின் முன்பாக பட்டாசு வெடிக்க போட்டி போட்டுகொண்டிருந்தனர். ஆண்களும் பெண்களும் கையில் பூஜை சாமான்களுடன் அவரவர் வீட்டின் முன் முகத்தில் பரவசத்துடன் நின்று கொண்டிருந்தனர். அந்த பரவசத்தை நான் அறிவேன். முதன் முதலாக அதிகம் அறிந்திராத சுற்றத்தாரோடு சேர்ந்து ஒரு பண்டிகையை கொண்டாடும்போது ஏற்படும் பரவசம் அது. சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இது பரவசங்களும் சமூக கொண்டாட்டங்களும் அவசியம் தேவை. தமிழர் பண்டிகைகளில் சமூகமாக ஒன்றுசேர்ந்து கொண்டாடப்படுவது பொங்கல் மட்டும் தான். அது அநேகமாக நகரங்களில் கொண்டாட படுவதேயில்லை. கிராமங்களை போன்ற ஊர்த் திருவிழாக்களும் கிடையாது. இந்நிலையில் பெருநகரங்களில் இம்மாதிரி சமூகமாக சேர்ந்து எதையாவது கொண்டாடுவது நல்லது
என்றே படுகிறது.

இதையெல்லாம் எதிர்வாதமாகவோ, கேள்வியாகவோ உங்கள்முன் வைக்கவில்லை. தோன்றியதை உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என நினைத்தேன். அவ்வளவு தான். ஆமாம் நீங்கள் என்ன சொன்னீர்கள்? எதையாவது செய்துவிட்டு போங்கள், நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் இருந்தால் சரி என்று தானே சொன்னீர்கள். உங்களிடம் ஏன் இத்தனை தர்க்கம் புரிகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. நீர்நிலைகள் மாசுபடாமல் இருப்பதற்கு வேண்டுமானால் ஒரு வழி இருக்கிறது. பிள்ளையார் சிலையின் ஒரு ஓரத்தில் ‘இந்த சிலையை கரைப்பதால் மாசுபடும் நீரை ஈடுகட்ட பத்து மரங்களை எங்கள் வீதியில் நட்டு வளர்த்துள்ளோம்!‘ என்ற குறிப்பை சேர்த்துவிடலாம். விநாயகர் கார்ப்பரேட் சாமி. அவருக்கு மட்டும் social responsibility இல்லாமல் போய்விடுமா என்ன.

இப்படிக்கு,
தே.அ.பாரி.

                                         ***
வணக்கம் பாரி.

பிள்ளையாரை இந்துத்துவத் திணிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. பல நூற்றாண்டுகளாக தமிழ்ர்களின் வாழ்வியலோடு பிள்ளையார் கலந்திருக்கிறார். பெரிய புராணத்திற்கு பிறகு எழுதப்பட்ட பெரும்பாலான இலக்கியங்களில் கணபதிக்கு இடமுண்டு- காப்பு என்ற வடிவிலாவது. முச்சந்திக்கு முச்சந்தி பிள்ளையார்தான் இருக்கிறார். கிட்டத்தட்ட பெரும்பாலான பூசைகளில் அவருக்கு இடம் உண்டு. இன்று நேற்று வந்திருந்தால் திணிப்பு எனலாம். ஆனால் பிள்ளையார் வழிபாடு என்பது நமது பண்பாடாகியிருக்கிறது. எப்படிச் சொல்ல முடியும்? 

கணபதியை நிராகரிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் நாம் ஏன் வரலாற்றினை வரலாறாக மட்டும் பார்ப்பதில்லை? எல்லாவற்றிலும் ஏதாவதொரு கண்ணாடியை அணிந்து கொள்கிறோம். மாலிக் காஃபூர் தமிழகத்தைச் சூறையாடினார் என்று யாராவது வாயெடுத்தால் ஒரு சாரார் இல்லையென்று மறுப்பார்கள். கணபதியை சிறுத்தொண்டர் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார் என்றால் இன்னொரு சாரார் மறுக்கிறார்கள். நம் பண்பாடு என்று சொல்லிக் கொள்ளும் எல்லாவற்றுக்குமே ஒரு வரலாறு உண்டு. ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாவிட்டாலும் புராணக்கதைகளாகவேனும் ஒரு பின்னணி இருக்கிறதல்லவா? மாரியம்மன், கருப்பராயன், காளியம்மன், அண்ணமார் சாமிகள் என்று எந்தக் கடவுளாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அல்லது ஆடிப் பெருக்கு போன்ற பண்டிகைகளாக இருக்கட்டும். எல்லாவற்றுக்கும் ஒரு பின்னணி உண்டு. அப்படித்தானே பிள்ளையாருக்கும் இருக்க வேண்டும்? அதை ஏன் பேசத் தயங்குகிறோம் அல்லது முரட்டுவாக்கில் மறுக்கிறோம்?

ஒருவேளை இந்த வரலாறு தவறென்றால் அதைப் பற்றி விவாதிக்கலாம். ஆனால் கண்களை மூடிக் கொண்டு ‘ஒட்டுமொத்தமாக இது புரட்டுவாதம்’ என்று பேசுவது எந்தவிதத்தில் சரி? பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டம் அவரவர் உரிமை. ஆனால் பிள்ளையார் எந்தவிதத்தில் தமிழ் மண்ணோடு தொடர்புடையவர் என்று தெரிந்து கொண்டு கொண்டாடுவதில் என்ன தவறு? 

கொண்டாடலாம்தான். எனக்கு அதில் எல்லாம் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல ஊர்வலங்கள், ப்ளாஸ்டர் சிலைகள், கூத்து, கும்மாளம் என்று  இதை கார்போரேட் மயமாக்குகிறார்கள். தெருவுக்கு தெரு வசூல் நடத்துகிறார்கள். சில இந்து அமைப்புகளும் நிதியுதவி செய்கின்றன. இதைத்தான் திணிப்பு என எடுத்துக் கொள்ள வேண்டும். இந்து அமைப்புகளிடம் பேசினால் ‘மிஷனரிகள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறார்கள். நாங்கள் கொடுத்தால் என்ன தவறு’ என்கிறார்கள். இதுதான் சிக்கல். இவன் காசு கொடுப்பதும் அதைத் தடுக்க அவன் காசு கொடுப்பதுமாக மிகப்பெரிய மத அரசியலை முன்னெடுக்கிறார்கள். 

சிலை ஊர்வலங்கள் போன்ற அர்த்தமற்ற கொண்டாட்டங்களின் வழியாக இங்கு உருவாக்கப்படுவது பக்தி இயக்கம் அன்று. தெளிவான புரிதல் இல்லாத மொன்னையான அரசியல் குழுக்கள்தான் உருவாக்கப்படுகின்றன. இது போன்ற நிகழ்வுகள் பாரம்பரியமான பண்டிகைகளின் மீதான கவனத்தை இழக்கச் செய்து தீபாவளி, விநாயகர் ஊர்வலங்கள் போன்ற பெரும் பண்டிகைகள் மீது கவனத்தைத் திருப்புகின்றன. இதுதான் திணிப்பு. இன்னும் மூன்று தலைமுறை தாண்டிய பிறகு பார்த்தால் ஆடிப் பெருக்கு என்பது என்னவென்றே தெரியாது. ஆனால் சதுர்த்தி ஊர்வலங்களைத் தெரியும். 

ஆனால் இதையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. ஆடிப்பட்டம் தேடி விதை என்று சென்ற தலைமுறை வரையில் இருந்தார்கள் அதனால் அவர்களுக்கு ஆடிப்பெருக்கு முக்கியமானதாக இருந்தது. இப்பொழுது ஆடிப்பட்டம் பார்த்து எத்தனை விவசாயிகள் விதைக்கிறார்கள்? மழை தப்புகிறது. பருவம் தவறுகிறது. அதனால் அதோடு ஒட்டிய பண்டிகையும் மதிப்பிழந்து போகிறது. அப்படித்தான் பொங்கல் விழாவும் கூட சிறுகச் சிறுக நம்மைவிட்டு விலகிக் கொண்டிருக்கிறது. 

கார்போரேட் வாழ்வு முறைக்கு ஏற்ப அட்சய திருதி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்று நமது கொண்டாட்டங்களும் கூட கார்போரேட் பண்டிகைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் போகிற போக்கில் விட வேண்டியதுதான். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இது போன்ற பல நூறு காரணிகள் சேர்ந்துதான் வரலாற்றின் போக்கை தொடர்ந்து திசைமாற்றிக் கொண்டிருக்கின்றன. திசை மாறுவது காலத்தின் கட்டாயம். ஆனால் எந்த இடத்தில் திசை மாறியது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம் அல்லவா? அப்படித்தான் தமிழர்களோடு விநாயகர் எப்படி ஒட்டினார் என்றும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அன்புடன்,
மணிகண்டன்

Aug 29, 2014

ஏன் பின்னூட்டங்கள் இல்லை?

உங்களின் வலைப்பதிவு மூலமாக உங்களை எனக்குத் தெரியும் உங்களின் புத்தகங்களை இனிமேல்தான் வாசிக்க வேண்டும். வலைப்பதிவில் தொடர்ந்து வாசிக்கிறேன்.

பின்னூட்டங்கள் இல்லாமல் வாசிப்பது வருத்தமாக இருக்கிறது. பொதுவாக நான் பின்னூட்டங்கள் எழுதுவதில்லை, ஆனால் பல பெரும்பாலும் பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கின்றன அதே சமயம் ஒரே விஷயத்தை பல்வேறு பரிமாணங்களில் பார்க்கவும் உதவுகிறது. உங்கள் எழுத்தின் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறது.

பின்னூட்டங்களை அனுமதிக்காததற்கு உங்களுக்கு 101 காரணங்கள் இருக்கும் என புரிந்து கொள்கிறேன். ஆனால் வளரும் எழுத்தாளராக உங்களின் பார்வையை ஒழுங்கமைத்துக் கொள்ள இவை உதவும். தமிழ் எழுத்தாளர்கள் ஏன் மெதுவாக இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்று புரியவில்லை. உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளராக வருவதற்கு இது ஒரு பரிணாம வளர்ச்சியா?

ராஜ கணேஷ்.

அன்புள்ள ராஜ கணேஷ்,

எழுத்தாளன், உலகத்தரம் என்றெல்லாம் எதுவும் இல்லை. எனது இடம், எனது தகுதி எனக்கு நன்றாகவே தெரியும். எழுத்தாளன் என்று கூட என்னைச் சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை. உரையாடுகிறேன். அவ்வளவுதான். அதனால் பிறர் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துச் செய்யவில்லை.

பின்னூட்டங்கள் நல்ல விஷயம்தான். இல்லையென்று சொல்லவில்லை. நாம் சரி என்று நினைத்துக் கொண்டிருப்பதை தவறு என்று அவ்வப்போது புரிய வைத்துவிடும். உதாரணமாக வவ்வால் போன்றவர்கள் கட்டுரையில் இருப்பதற்கு நேர் எதிரான விமர்சனத்தை முன் வைப்பார்கள். படித்த உடனே சுள்ளென்றிருக்கும்தான். ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து வாசிக்கும் போது இந்த மனுஷன் சொல்வதும் சரிதான் என்று தோன்றும். அது ஆரோக்கியமான விஷயம். ஆனால் பிரச்சினை விமர்சனத்தில் இல்லை- வசைகளில்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து இணையத்தைத் திறப்பேன். ஏதாவது ஆபாசமாகத் திட்டி வந்திருக்கும் அல்லது சாபமாக இருக்கும். குறைந்தபட்சம் அதை நிராகரிப்பதற்காகவேனும் ஒரு முறை படிக்க வேண்டியிருக்கிறது அல்லவா? காலையிலேயே இப்படியா? என்றிருக்கும். யாரென்றே தெரியாத அனானிமஸிடம் எதற்காக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ‘இதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது’ என்று நினைத்தாலும் சிறு சலனமாவது ஏற்படத்தானே செய்யும்? சலனப்படுகிறேன். அதனால்தான் பின்னூட்டங்களே வேண்டாம் என்று நினைத்தேன்.

எழுதுவதை எழுதிக் கொண்டே இருக்கலாம். மின்னஞ்சல் ஐடி இருக்கிறது. எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் சொல்லிவிடுவார்கள். அப்படியே சொல்லாவிட்டாலும் எழுத்தைப் பற்றி விவாதிக்க வேறு வழிகளும் இருக்கின்றன. மற்றபடி, பின்னூட்டங்களை அனுமபதிப்பதால் எழுத்தின் நம்பகத்தன்மை கூடிவிடும் என்று அர்த்தம் இல்லை. அது எழுதுகிற எழுத்தையும் நமது செயல்பாட்டையும் பொறுத்தது. அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

நன்றி.

அன்புடன்,
மணிகண்டன்
                                                              ***

மணி,

உங்களைப் பேர் சொல்லி அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே உங்கள் சமீபத்திய பதிவுகளில் நான் சொல்லி இருந்தது போல் கொஞ்ச நாட்களாகத் தான் உங்களைப் பின் தொடர்ந்து வருகிறேன். இந்த வயதில் இத்தனை எழுத்தும் புத்தகங்கள் வெளியிடுவதும் என நீங்கள் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம் தான். இணையத்தில் எழுதுவது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தீர்கள், அதில் பின்னூட்டம் போட்டிருந்தேன். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தால் பின்னூட்டம் இடும் வசதியை நீக்கியதற்கான உங்கள் விளக்கம்.

நீங்கள் சொல்ல வந்தது நன்றாகப் புரிகிறது. வன்மம் செய்பவர்கள் எந்த ரூபத்திலும் செய்வார்கள்.

ஒரே ஒரு சிறு சந்தேகம். என்னைப் பொறுத்த வரை மேலே சொன்ன மாதிரி ஒருத்தரைக் கரம் வைத்து விட்டால் எப்படி இருந்தாலும் அடிப்பார்கள். அந்த மாதிரி ஆசாமிகள் உங்கள் மின்னஞ்சலையும் விட்டு வைக்கப் போவதில்லை நிச்சயம். எப்படி அவர்களை எதிர் கொள்ளப் போகிறீர்கள்? இதே யோசனை தான் எனக்கு உங்கள் விளக்கத்தைப் படித்ததிலிருந்து.
இன்னொன்றும் சொல்ல ஆசைப் படுகிறேன். நான் உங்களைப் பின் தொடர ஆரம்பித்து கொஞ்ச நாட்களிலேயே இப்படியாகி விட்டதே என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான்.
ஒரு கட்டுரையைப் படித்து முடித்ததும் தோன்றும் கருத்தை சட்டென்று தெரியப் படுத்த பின்னூட்டம் சிறந்தது. மின்னஞ்சல் எந்த அளவுக்கு இதில் உதவும் என்று தெரியவில்லை.

எனக்கே கூட அப்படித் தான். நிச்சயம் உங்கள் எல்லாக் கட்டுரைகளையும் ( இனிமேல் வருபனவற்றை ) படித்து விடுவேன். ஆனால் உடனே மின்னஞ்சலைத் திறந்து அதற்கு எதிர் வினை கூற முடியுமா என்பதெல்லாம் தெரியாது. Of Course, என்னுடைய எதிர் வினைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிசப்தத்துக்கோ உங்களுக்கோ பெரிதாக இழப்பொன்றும் இருக்கப் போவதில்லை. இருந்தாலும் ஒரு வாசகனின் குரலாக இதைப் பதிவு செய்ய நினைத்தேன். செய்து விட்டேன். 

ஜி.ஹரீஷ்.

அன்புள்ள ஹரீஷ்,

உடனடியாக எதிர்வினை புரியாமல் இருப்பதும் நல்லதுதான். கோபம், சிரிப்பு, நெகிழ்ச்சி என்று எதுவாக இருந்தாலும் இணையத்தில் காட்டிவிட முடிகிறது-அதுவும் உடனடியாக. அரை மணி நேரம் கழித்து வாசித்தால் ‘இது ஒன்றுமே இல்லை’ என்று தோன்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. நமக்கு பிடித்த விஷயங்களையே ஒருவன் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறோம் அல்லது நமக்கு பிடித்த தலைப்புகளையே தேடித்தேடி வாசிக்கிறோம். அதிலிருந்து சிறிது பிசகியிருந்தாலும் எரிச்சலைக் காட்டிவிடுகிறோம். இவையெல்லாம் அவசியமில்லை என்று நினைக்கிறேன். எழுத்தின் தாக்கம் அதிகமானதாக இருந்தால் மட்டுமே எதிர்வினை இருந்தால் போதும். அதை மின்னஞ்சலில் செய்துவிடலாம்.

மின்னஞ்சலில் வசைகள் வரும் போது அதைத் தடுப்பதற்கான ஒரு வசதி இருக்கிறது. ஒரு முறை அல்லது இரண்டு முறை பார்க்கலாம். தொடர்ச்சியாக எரிச்சல் வரும்படி இருந்தால் அந்த மின்னஞ்சல் முகவரியை ஒரு முறை ‘ஸ்பாம்’ என்று குறிப்பிட்டுவிட்டால் அடுத்த முறை அதுவாகவே நேரடியாக Spam folder க்குச் சென்றுவிடும். அவ்வளவுதான். அதன்பிறகு அந்த மனிதன் அந்த மின்னஞ்சலிலிருந்து குறுக்கிடவே முடியாது. வசைகளும் சாபங்களும் ஓரளவுக்கேனும் நமது கட்டுப்பாட்டில் இருக்கும்.

பின்னூட்டங்களை அனுமதிக்காதது சிலருக்கு வருத்தத்தைத் தரக் கூடும். மேலே குறிப்பிட்டதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. 

தங்களின் அன்புக்கு நன்றி.

அன்புடன்,
மணிகண்டன்.

விநாயகர் தமிழ்நாட்டுக்காரரா?

ஊரே களை கட்டியிருக்கிறது. தொந்தி வயிறும் தும்பிக்கையுமாக திரும்பிய பக்கமெல்லாம் விநாயகர்தான். ஹைதராபாத்தில் அறுபது அடியில் சிலை வைத்திருக்கிறார்கள். பெங்களூரில் அந்த அளவுக்கு உயரமான சிலைகள் இல்லையென்றாலும் வீதிக்கு வீதி வைத்திருக்கிறார்கள். காலையிலேயே தலைக்கு குளித்துவிட்டேன். ஏதாவதொரு விநாயகர் கோவிலுக்குச் சென்று வரலாம் என்றால் ஒவ்வொரு கோவிலிலும் பெருங்கூட்டம். வீட்டிற்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு விநாயகருக்கு சல்யூட் வைத்தால் போதுமல்லவா? முடிந்தது. ஹேப்பி பர்த்டே விநாயகா.

கணபதியார் தமிழ்நாட்டுக்கடவுளே இல்லை என்றால் சண்டைக்கு வந்துவிடுவார்கள். ‘இல்லையென்று சொல்லிவிட்டால் போதுமா?’ உருப்படியான தரவுகள் வேண்டாமா என்பார்கள். கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும். விநாயகர் தமிழ்நாட்டுக்கான கடவுளாக எந்தக் காலத்தில் மாற்றப்பட்டார் என்று வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் மா.இராசமாணிக்கனார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சதாசிவ பண்டாரத்தார் போன்ற வரலாற்று பெருந்தலைகளுக்கு ஒரே கருத்துத்தான் - கணபதி வடநாட்டில் இருந்து வந்தவர். 

பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் சாளுக்கிய நாட்டின் மீது போர் தொடுத்த போது அவனது படைத்தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இன்றைய நாகை மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்காட்டங்குடிக்காரர். சாளுக்கிய நாட்டின் மீதான போரில் பரஞ்சோதியார் வெற்றி பெறுகிறார். இன்றைய கர்நாடகத்தின் பாகல்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் வாதாபி நகரில் கணபதியின் யானை முகச் சிலை வித்தியாசமாக இருக்கிறது. அந்தக் கடவுளைத்தான் வெற்றிக்கடவுளாக அந்த ஊரில் வணங்குகிறார்கள். பரஞ்சோதியார் அந்தக் கடவுளை தனது ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறார். தமிழ்நாட்டுக்கு எடுத்து வருகிறார். தனது சொந்த ஊரான செங்காட்டங்குடியில் ஏற்கனவே இருக்கும் சிவன் கோவிலில் இந்த விநாயகரை வைத்து வழிபடத் தொடங்குகிறார். இது நடந்தது கி.பி.642 ஆம் ஆண்டு. அதிலிருந்துதான் கணபதி தமிழகக் கடவுள் ஆகிறார்.

மற்ற இடங்களில் எப்படியென்று தெரியவில்லை. இப்பொழுதும் எங்கள் ஊரில் பிள்ளையார் சிலையை செய்வதைவிடவும் வேறொரு இடத்தில் இருந்து எடுத்து வந்து வைத்தால் சிறப்பு என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை வாதாபி பிள்ளையாரோடு இணைத்துப் பார்க்கலாம்.

இந்த பரஞ்சோதி வேறு யாரும் இல்லை. சிறுத்தொண்டர்தான். இறைவன் மாறுவேடத்தில் வந்து ‘உனது மகனின் கறி வேண்டும்’ என்று கேட்ட போது சமைத்துக் கொடுத்தார் அல்லவா? அதே சிறுத்தொண்டர். சிறுத்தொண்டர்தான் தமிழகத்துக்கு விநாயகரை எடுத்துவந்தார் என்று நம்பினால் கணபதி தமிழர்களின் கடவுள் இல்லை என்பது உறுதியாகிவிடும். ஆனால் எல்லோரும் நம்புவார்களா?

அப்படியெல்லாம் இல்லை. கணபதியார் தமிழகப் பண்பாட்டில் காலங்காலமாக இருக்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அதற்கான உறுதியான தரவுகள் இல்லை இல்லை. சங்க இலக்கியங்கள், பதினெட்டு கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை என எந்த இலக்கியத்திலும் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் இல்லை. அவ்வளவு ஏன்? பெரிய புராணத்தில் கூட அப்பர் எந்த இடத்திலும் விநாயகரைப் பற்றி பாடுவதில்லை. கணபதீச்சரம் என்றும் குறிப்பிடுவதில்லை. ஆனால் அவருக்குப் பின்னர் வந்த சம்பந்தர் கணபதீச்சரம் என்று பாடுகிறார்.

அப்பரும்(கிபி 575-656) சம்பந்தரும்(கிபி 638-654) கணபதியைத் தமிழகத்திற்கு எடுத்து வந்த சிறுத்தொண்டரும்(கிபி 600-649) கிட்டத்தட்ட ஒரே காலத்தைச் சார்ந்தவர்கள். அப்பர் திருச்செங்காட்டங்குடிக்குச் சென்று பாடியிருக்கிறார். ஆனால் கணபதீச்சரம் என்று எந்த இடத்திலும் பாடியதில்லை. அந்த ஊர்க் கோவிலில் இருக்கும் சிவனைப் பற்றி மட்டும்தான் பாடியிருக்கிறார். அவருக்குப் பின் வந்த சம்பந்தரும் கூட முதல் இரண்டு முறை திருச்செங்காட்டங்குடிக்குச் சென்ற போது கணபதீச்சரம் பற்றி பாடியதில்லை. அங்கு இருக்கும் சீராளத்தேவர் என்ற சிவனைத்தான் பாடுகிறார். சிறுத்தொண்டரின் அழைப்பை ஏற்று மூன்றாவது முறையாக அந்த ஊருக்குச் செல்லும் போதுதான் ‘கணபதியீச்சரம்’ என்று எழுதுகிறார். இந்த மூன்றாவது சந்திப்பு கி.பி. 642க்குப் பிறகு நடைபெறுகிறது. அப்பொழுது நரசிம்மவர்மன் படையிலிருந்து ஓய்வு பெற்ற பரஞ்சோதியார் திருத்தொண்டராக மாறி திருச்செங்காட்டங்குடிக்கு வந்துவிடுகிறார். ஆக இந்தச் சமயத்தில்தான் கணபதி தமிழ்நாட்டில் குடியேறியிருக்கிறார்.

இதற்கு பிறகுதான் கணபதியை வெற்றிக்கடவுள் என்றும் முதற்கடவுள் என்றும் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. தொல்காப்பியத்திலும் கூட குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன், முல்லைக்கு திருமால், மருதத்துக்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்கு கொற்றவைதான். விநாயகருக்கு இடம் இல்லை. பெரிய புராணத்துக்கு பிறகான காலத்தில் எழுதப்பட்ட நூல்களில்தான் கணபதி காப்பு இடம் பெறத் தொடங்கியது.

திருமூலரின் திருமந்திரத்தில் ‘ஐந்து கரத்தினை யானை முகத்தினை’ என்று கணபதி காப்பு இருக்கிறது. திருமூலரின் காலம் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஒருவேளை அவர் சிறுத்தொண்டர் காலத்துக்கு முன்பானவர் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் சிறுத்தொண்டருக்கு முன்பே யானை முகத்தான் இங்கு இருந்திருக்கிறானா? இந்தக் கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க மறைமலையடிகளாரை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். திருமூலரின் பாடல்களுக்குள் சிவனுக்கு இடம் உண்டு. ஆறுமுகனுக்கு இடம் உண்டு. ஆனால் பிள்ளையாருக்கு இடம் இல்லை. ஏன் விநாயருக்கு இடம் இல்லை? ஏனென்றால் திருமூலர் கணபதி பற்றி அறிந்திருக்கவே இல்லை. அதனால்தான் அவரது பாடல்களில் கணபதி பற்றி எதுவும் எழுதவில்லை. அந்தக்காலத்தில் திருமந்திரத்தை சுவடிகளில் எழுதும் போது யாரோ ஒருவர் கணபதி காப்பை இடையில் சேர்த்திருக்கிறார். மிகைப்பாடல். ஆக, திருமூலர் காலத்திலும் கணபதி இருந்திருக்கவில்லை.

இப்படியெல்லாம் இலக்கியத்தைச் சான்றாக வைத்து கணபதி பிற்காலத்தில்தான் தமிழகத்திற்கு வந்திருக்கிறார் என்று சொல்லும் போதெல்லாம் ஏதாவதொரு தமிழாசிரியர் ‘பிள்ளையார்பட்டி தொன்மையானது’ என்று சொல்வார். ஆனால் பிள்ளையார்பட்டி கணேசனும் கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்வன்தான் என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. நரசிம்மவர்மன் சாளுக்கியரை வென்ற பிறகு வடக்கே படையெடுக்கவில்லை. தெற்கு நோக்கி பார்வையைத் திருப்பினான். பாண்டியர்களோடு போரை ஆரம்பித்து வெற்றியும் கொண்டான். வாதாபி போருக்குப் பிறகு கணபதியை வெற்றித் தெய்வமாக போற்றத் துவங்கிய நரசிம்மன் மருதங்குடி என்னும் பிள்ளையார்ப்பட்டியிலும் விநாயகரைக் கொண்டு வந்திருக்கலாம் என்கிறார்கள். பிள்ளையார்பட்டி விநாயகர் வலபுரி, செங்காட்டங்குடி பிள்ளையார் இடம்புரி என்றாலும் வாதாபி பிள்ளையாருக்கும், பிள்ளையார்ப்பட்டி பிள்ளையாருக்கும் உருவ அமைப்பில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. ரா.பி.சேதுப்பிள்ளையும் இதையேதான் சொல்கிறார். பிள்ளையார்ப்பட்டியின் குடவரைக் கோவில் மூலவர் சிவபெருமான் தான். பிற்காலத்தில் அருகில் ஒரு பாறையில் பிள்ளையாரின் வடிவத்தை உருவாக்கினார்கள். அந்த கற்பகப் பிள்ளையாரின் பெயரே ஊருக்கும் பெயராக அமைந்துவிட்டது. ஆக, பிள்ளையார்பட்டி விநாயகனும் வாதாபிக்கு பிறகான விநாயகன்தான்.

இன்றைக்கு இந்துத்துவ அமைப்புகள் தங்களின் சித்தாந்தங்களை கிராமங்கள் வரைக்கு ஊடுருவச் செய்யவும் இந்துக்கள் என்ற பெருங்குடையின் கீழ் சாமானியர்களைக் கொண்டுவரவும் விநாயகரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது அவர்களின் உரிமை. தவறு என்று சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு சிற்றூரிலும் நான்கைந்து ப்ளாஸ்டர் விநாயர்களை வைத்து குதூகலித்து பின்னர் எடுத்து நீர் நிலைகளை நாசமாக்குவதுதான் சங்கடமாக இருக்கிறது. தீபாவளிக்காக காற்றை சீரழிக்கிறோம். விநாயகனுக்காக நீரைச் சீரழிக்கிறோம். சாணத்திலோ, மஞ்சளிலோ பிடித்து வைத்து அருகம்புல்லைச் செருகி பூசையை முடித்து நீரில் கரைத்தால் பிள்ளையார் வேண்டாம் என்று சொல்வாரா என்ன?

Aug 27, 2014

அடுத்த வாரம் வர முடியுமா?

வெகுநாட்களாக எதிர்பார்த்து வந்ததுதான். கப்பன் பார்க்கில் கொசு கடிக்கிறது, லால்பாக்கில் ஆட்களின் தொந்தரவு அதிகம், வீட்டு மொட்டை மாடியில் மழை சீஸன் என்று ஏதாவதொரு காரணத்தினால் தள்ளிக் கொண்டே போய்விட்டது. இப்பொழுது ஒரு வடிவத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இனி பெங்களூரில் தொடர்ச்சியாக உரையாடல்களை ஒழுங்கு செய்துவிடலாம். 

செம்ப்டம்பர் ஏழாம் தேதியிலிருந்து தொடங்கிவிடலாம். அன்றுதான் முதல் உரையாடல். புத்தகங்கள் மட்டும் என்றில்லாமல் குறும்படங்கள் திரையிடல், சினிமா,  சமூகம் என பலவாறான தளங்களில் இந்த உரையாடல் இருக்கும். மேடையில் இரண்டு பேர் அமர்ந்து கொண்டு முன்னால் இருப்பவர்களை பார்த்து பேசும் படியான பந்தா தோரணை இல்லாமல் பெரும்பாலான கூட்டங்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்து அனைவரும் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். அவ்வப்போது பெங்களூருக்கு வருகை தரும் ஆளுமைகளை அழைத்து வரும் போது மட்டும் அவர்களுக்கு மரியாதை தரும் விதமாக மேடை-பார்வையாளர் என்ற வகையில் நடத்தலாம்.

பொதுவாக இரண்டு மணி நேரம் நடக்கும். மதிய நேரத்தில்- மூன்று மணிவாக்கில் வைத்துக் கொள்ளலாம். முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசிவிட்டு பதினைந்து நிமிட இடைவெளி. டீ, காபி குடித்துவிட்டு வந்து பிறகு மீண்டும் நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசலாம். கடைசி கால் மணி நேரம் ஏதாவது வெட்டிப்பேச்சு. அவ்வளவுதான். ஐந்து மணிக்கு வண்டியை கிளப்பிவிடலாம்.

ஜனநாயகப்பூர்வமான கூட்டங்களாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் எந்த மாற்றுக் கருத்துமில்லை. யார் வேண்டுமானாலும் பேசலாம். எத்தகைய விமர்சனங்களையும் முன் வைக்கலாம். புத்தகங்களை அறிமுக செய்து பேசலாம். கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை வாசித்து விவாதிக்கலாம். அடுத்தவர்களின் மூக்கு நுனி வரைக்கும் நமக்கு சுதந்திரம் உண்டு. இப்போதைக்கு மாதத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை சந்திக்கலாம். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிறுகளில் சந்திக்கலாம். ஒருவேளை அது மூன்று அல்லது நான்கு நாட்கள் விடுமுறையுடனான நீண்ட வாரக்கடைசியாக இருந்தால் வேறொரு நாளை முடிவு செய்து கொள்ளலாம்.

அடுத்த கூட்டத்தில் எதைப் பற்றி பேசலாம் என்பது மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுவிடும் அல்லது முந்தைய கூட்டத்திலேயே முடிவு செய்துவிடலாம். இடையில் ஒரு முறை நினைவூட்டல் செய்தியையும் அனுப்பிவிடலாம். உதாரணமாக ‘மிளிர்கல்’ நாவல் பற்றி பேசலாம் என்றால் ஆளாளுக்கு கட்டுரைகள் அல்லது குறிப்புகளோடு வந்துவிட வேண்டும். நாவலை வாசிக்காதவர்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. கவனிக்கலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. யாருமே நாவலை வாசிக்கவில்லை என்று வந்து அமர்ந்துவிட்டால் இரண்டு மணி நேரம் என்ன செய்வது? மொக்கையாகிவிடும். அதனால் ஆரம்பத்தில் பொதுவாக  ‘நாவல்கள்’ ‘சிறுகதைகள்’ என்ற தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். போகப் போக குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகள் என்று சுருக்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு ஆறு மாதங்களாவது தேவை. கலந்து கொள்பவர்களின் வாசிப்பு ஆர்வம், கூட்டம் நகர்கிற போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்தக் நிகழ்வை ஒழுங்கு செய்வதற்கு ஒரே காரணம்தான் - புத்தகங்கள், வாசிப்பு போன்றவற்றில் ஆர்வம் உடையவர்கள் பங்கேற்பதற்கும் உரையாடுவதற்கும் பெங்களூரில் ஒரு களம் உருவாகிறது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதியதாக எழுதத் தொடங்குபவர்களின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் போது எழுதுபவர்களுக்கு தங்களின் எழுத்து குறித்தான சுய விமர்சனம் உருவாகும். இப்படி ஏதாவது ஒரு விதத்தில் உருப்படியாக அமைத்துக் கொள்ளலாம்.

ஏற்கனவே சொன்னதுதான். எந்த ஃபார்மாலிட்டியும் கிடையாது. ஃபார்மாலிட்டி வந்து சேர்ந்தால் ஒரு வறட்சி வந்துவிடும். ஜிகினா வேலையெல்லாம் இருக்கக் கூடாது. யாருக்கும் பட்டர் பூசும் அவசியமும் இல்லை. கூட்டம் நடக்கும் இரண்டு மணி நேரமும் சலிப்பே வரக் கூடாது. திறந்த மனதுடனான உரையாடலால் மட்டுமே இது சாத்தியம். ஆரம்பத்தில் கொஞ்சம் தடைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இரண்டு மூன்று கூட்டங்களுக்குப் பிறகு கலந்து கொள்பவர்களைப் பற்றிய பரிச்சயம் கிடைத்தவுடன் அந்தத் தடைகள் நீங்கிவிடும்.

இப்போதைக்கு இந்த வடிவம்தான் மனதில் இருக்கிறது. போகப் போக இன்னும் tune செய்து கொள்ளலாம். கூட்டம் நடத்துவதற்கான அரங்கு ஒன்றை புத்தகம் பதிப்பகத்தினர் ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியே அவர்களை மயக்கி அமுக்கி டீ, காபி, பிஸ்கட்டுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்லிவிட வேண்டும். அடுத்த வாரத்தில் இடத்தை தெரிவித்துவிடுகிறேன். கலந்து கொள்ளத் தயாராகிக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் கட்டுரை ஒன்றைத் தயாரித்துக் கொள்ளுங்கள். கட்டுரை இல்லையென்றாலும் சங்கடம் இல்லை. நீங்கள் வாசித்த எந்த நாவல் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.

வேறு ஏதேனும் தகவல் வேண்டுமானால் மின்னஞ்சல் அல்லது செல்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

vaamanikandan@gmail.com / +91 9663303156

நிகழ்வில் சந்திக்கிறோம். பட்டையைக் கிளப்புகிறோம். ஆங்!

வரமா? சாபமா?

இன்றைக்கு தமிழில் தினமும் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதைவிட பன்மடங்கு கவிதைகள் எழுதப்படுகின்றன. இவை தவிர சிறுகதைகள், மனப்பதிவுகள் என இந்தக் காலத்தில் பேசுவதைவிடவும் எழுதுவதுதான் அதிகமாகியிருக்கிறது. எழுதப்படுவது மட்டுமில்லை- உடனடியாக மற்றவர்களின் பார்வைக்கும் வந்துவிடுகிறது- Publishing. இருபது வருடங்களுக்கு முன்பு வந்த கட்டுரைகளை வாசிக்கும் போது பத்தில் ஒரு கட்டுரையாவது எழுத்தாளன் தனது புத்தக பதிப்புக்காக அலைந்ததையும் பதிப்பித்த புத்தகத்தை வைத்துக் கொண்டு விற்க முடியாமல் அல்லாடியதைப் பற்றியும் புலம்புவதாக இருக்கும். ஆனால் இப்பொழுது அதற்கான அவசியம் குறைந்து போய்விட்டது. காரணம் டெக்னாலஜி. பெரும்பாலானவர்களின் பிரசுர ஆர்வத்துக்கு மிகப்பெரிய வடிகால் தொழில்நுட்பம்தான்.

எழுதுகிறோம். அதைத் திருத்துகிறோமோ இல்லையோ உடனடியாக ஃபேஸ்புக், ப்லாக் என்று ஏதாவதொரு வடிவத்தில் வெளி கொண்டு வந்துவிடுகிறோம். நல்ல விஷயம்தானே? பத்திரிக்கைக்காக எழுதினால் அது வெளிவரவே இரண்டு மூன்று மாதங்கள் வரை ஆகிவிடும். அப்படியே தாமதம் ஆனாலும் வெளிவந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஒருவேளை பிரசுரமானாலும் கூட எதிர்வினைகளையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. வந்தால் உண்டு வராவிட்டாலும் இல்லை. ஆனால் இணையத்தில் அப்படியில்லை அல்லவா? உடனடி அடிதான்.

இவையெல்லாம் எல்லோருக்குமே தெரிந்த செய்திகள்தான். ஆனால் அடுத்த ஐந்து அல்லது பத்து வருடங்களில் தமிழில் தொழில்நுட்பத்திற்கான இடம் என்ன என்பது முக்கியமான கேள்வி?

நாம் இன்னமும் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களில் பத்து சதவீதத்தைக் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இன்னமும் தமிழில் E-Book பரவலாகவில்லை. இணைய வழி விற்பனை என்பது மிகக் குறைவானதாக இருக்கிறது. கிண்டில் போன்ற கையடக்கக் கருவிகள் அதிகக் கவனம் பெறவில்லை. இப்படி இருக்கிற சாத்தியங்களைக் கூட நாம் இன்னமும் முழுமையாக பயன்படுத்துவதில்லை. 

ஒரு சிறிய புள்ளிவிவரம்- தமிழின் மிகப்பரவலாக கவனம் பெற்றிருக்கும் செய்தி இணையதளம்- செய்தித்தாளின் இணையதளம் இல்லை- செய்தி இணையதளம் கூட அதிகபட்சமாக ஒரு நாளைக்கு அறுபதாயிரம் பேர்களைத்தான் ஈர்க்கிறது. பக்கப் பார்வை (Page views) மூன்று அல்லது ஐந்து லட்சங்களைத் தொடக் கூடும். ஆனால் பயனாளர்களின்(Users) எண்ணிக்கை அறுபதாயிரம் பேர்தான். இதுவே தினமலர் போன்ற பிரபலமான தினசரிகளின் இணையதளத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொடக் கூடும். ஆனால் கோடிகளில் இருக்க வாய்ப்பே இல்லை. எதற்காக இந்தப் புள்ளிவிவரத்தைச் சொல்கிறேன் என்றால் கிட்டத்தட்ட எட்டு கோடி தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களில் தமிழில் வாசிக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஐந்து கோடியாவது இருக்கும். ஐந்து கோடியில் அறுபதாயிரம் அல்லது ஒரு லட்சம் என்பது மிகச் சொற்பம். இன்னமும் இணையம், செல்ஃபோன் ஆகியன பரவலாகும்பட்சத்தில்- பெரும்பாலானவர்கள் கையடக்க கருவிகளில் வாசிக்கத் தொடங்கும் போது இணையத்தின் வழியாக வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகிவிடும்.

தமிழ் பதிப்புத் துறையில் தொழில்நுட்பத்தின் தாக்கம் என்பதனை வெறும் ப்லாக், ஃபேஸ்புக், ட்விட்டர் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதில்லை. காகித அச்சுப்பதிப்பிலும் தொழில்நுட்பத்தின் உதவி மிக அதிகம். அட்டை வடிவைப்பிலிருந்து அச்சுக் கோர்ப்பு வரையிலும் மிக வேகமாக செய்து முடிக்கிறார்கள். புத்தக வடிவமைப்பு என்பது இரண்டாம்பட்சம். எழுதுவதே கூட எவ்வளவு விரைவாக நடைபெறுகிறது? மனதில் தோன்றுவதை தொடர்ந்து தட்டச்சு செய்து கொண்டே போக முடிகிறது. பிழை திருத்தமும் அப்படித்தான். எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தி எழுதலாம். எந்தவித பாதிப்பும் இல்லாம நாள்கணக்கில் சேமித்து வைக்க முடிகிறது. ஒரு புத்தகத்தில் பத்து பக்கங்களை முன்னால் கொண்டு வருவதும் நான்கு பக்கங்களை நடுவில் மாற்றுவதும் எவ்வளவு எளிதாகிவிட்டது

தொழில்நுட்பம் எழுத்துலகில் இன்னொரு முக்கியமான தாக்கத்தையும் நிகழ்த்துகிறது. எழுத்து என்பது புனிதம், எழுத்தாளன் என்பவன் புனிதன் என்ற பிம்பம் எல்லாம் அடித்து நொறுக்கப்படுவது இணையத்தில்தான். எழுத்து என்பது கருத்து பரிமாற்றத்தின் இன்னொரு வடிவம். அதற்கு மேல் எதுவும் இல்லை. ஆனால் இங்கு அப்படியா சொல்கிறார்கள்? எழுத்தாளன் என்பவனை பேனாவைப் பிடித்துக் கொண்டு வானத்திலிருந்து நேரடியாக குதித்தவன் போல நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. சிலர் பேசுகிறார்கள். அதைப் போல சிலர் எழுதுகிறார்கள். அதைத் தாண்டி ஒன்றுமில்லை. ஆனால் காலங்காலமாக எழுத்தாளன் என்பவன் ரட்சிக்க வந்தவன் என்கிற ரீதியில் பிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அபத்தம். பெரும்பாலான எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களது வாழ்க்கைக்கும் துளி கூட சம்பந்தமே இருக்காது. எழுதுவது ஒன்றாக இருக்கும் வாழ்க்கை முறை வேறொன்றாக இருக்கும். எழுத்தில் சொக்கத்தங்கமாக தங்களைப் பற்றிய இமேஜை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆனால் படு சில்லரையாக இருப்பார்கள். பழகிப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த ஜிகினா வேலையை அச்சு ஊடகத்தில் காட்டலாம். எங்கேயோ அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் எளிய வாசகன் நம்பிக் கொண்டிருப்பான். ஆனால் இணையத்தில் வெகுகாலம் ஏமாற்ற முடியாது. பல்லிளித்துவிடும். நாறடித்துவிடுவார்கள். 

எழுத்தாளன், வாசகன் என்ற எல்லைகள் அழிவதெல்லாம் சரிதான். ஆனால் அதே சமயத்தில் இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட வேண்டும். எழுத்தின் நம்பகத்தன்மை பற்றிய மிகப்பெரிய கேள்விக்குறி நம் முன்னால் இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பாக ‘ஸ்பானிஷ் படம் ஒன்றை பார்த்தேன்’ என்று பத்திரிக்கையில் எழுதுவதாக இருந்தால் அந்தப் படத்தை பார்த்திருக்க வேண்டும். இல்லையென்றால் எழுதுவதற்கு சாத்தியம் இல்லை. இப்பொழுது அப்படியில்லை. அதைப் பார்த்திருக்கவே அவசியமில்லை. இணையத்தில் இருந்து தகவல்களைத் உருவி அச்சு அசலாக படம் பார்த்ததைப் போலவே ஏமாற்றலாம். மற்றவர்களை ஏன் சுட்டிக் காட்ட வேண்டும்? நானும்தான் அந்தத் தில்லாலங்கடி வேலைகளைச் செய்திருக்கிறேன். ஹெரால்ட் பிண்டர் என்றொருவர். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்கினார். அதுவரையிலும் எனக்கு அவரை யாரென்றே தெரியாது.ஆனால் இரவோடு இரவாக அவரைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். கூகிள் இருக்கிறதே? அந்தக் கட்டுரை ஒரு பத்திரிக்கையில் பிரசுரமானது. ஆர்வக் கோளாறு.

மொழியை ஓரளவுக்கு புரிந்து கொண்டவர்களால் தங்களது எழுத்தை பிரசுரிக்க முடிகிறது, பதிப்பாளர்களுக்கு காத்திருக்க வேண்டியதில்லை, எழுத்தாளனாக இருப்பதற்கு எந்தக் கோஷ்டியிலும் சேர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, வாசிப்பவர்கள் தங்களுக்குத் தேவையான எழுத்துக்களை மிகச் சுலபமாக தேடிக் கொள்ள முடிகிறது, பதிப்பாளர்கள் விற்பனையை உயர்த்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் என பாஸிட்டிவான விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே சென்றாலும் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை பாஸிட்டிவான தாக்கம் என்று மட்டும் சொல்ல முடியாது. 

எல்லோராலும் எழுத முடிவதும் எப்பொழுது வேண்டுமானாலும் பதிப்பிப்பதும் நல்ல விஷயம்தான். ஆனால் நிறைய எதிர்மறையான தாக்கங்களும் இருக்கின்றன. உதாரணமாக வளரும் எழுத்தாளன் அல்லது எழுத ஆரம்பிக்கும் எழுத்தாளன் தனது எழுத்தை மெருகேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. முன்பு பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார்கள் அவை நிராகரிக்கப்படும் போது நிராகரிப்பிற்கான காரணங்கள் குறித்து நண்பர்களோடு விவாதிப்பார்கள். எழுத்து உருமாறிக் கொண்டேயிருக்கும். இப்பொழுது அப்படியில்லை. நேற்று தோன்றியதை இன்று எழுதுகிறார்கள். காலையில் எழுதியதை மதியத்திற்குள்ளாக பதிப்பித்துவிடுகிறார்கள். பெரும்பாலான விமர்சனங்களை ஆக்கப்பூர்வமானவை என்று சொல்ல முடியாது. அவை வெறுமனே விமர்சனங்கள். அவ்வளவுதான். அதன் பின்னணியில் எழுத்து சாராத அரசியலும் உண்டு. அரசியல், சமூகம் போன்ற விஷயங்களில் வேண்டுமானால் இணையத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கலை, இலக்கியம் சார்ந்த விவாதங்கள் எதுவுமே கண்ணில்படுவதில்லை. அரசியல், சமூகம் சார்ந்த விவாதங்களும் கூட வெறுமனே உள்ளடக்கம் சார்ந்த விவாதங்களேயொழிய எழுத்து நடை, படைப்பாளனின் திறன் சார்ந்த விவாதங்கள் இல்லை. இவை எழுத்தின் மெருகேற்றலுக்கு எவ்விதத்திலும் உதவாத விவாதங்களாகவே முடிந்து போகின்றன. இது ஒருவிதத்தில் படைப்புக்கும் படைப்பாளனுக்கும் எதிரான நிகழ்வுகள்தான். தமிழில் மட்டும் இல்லை- இது எல்லா மொழிகளுக்குமே பொருந்தும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

* மதுரையில் காலச்சுவடு- கடவு நடத்திய  ‘தமிழில் புத்தகப்பண்பாடு’ என்ற கருத்தரங்குக்காக தயார் செய்து வைத்திருந்த கட்டுரையின் முதல் பகுதி. கருத்தரங்கில் கட்டுரையெல்லாம் வாசிக்கவில்லை. பேச்சுத் தமிழில் உரையாடலாகத்தான் இருந்தது.

Aug 26, 2014

யோவ்..வாழ்த்துக்கள்

அபிலாஷ் இந்த வருடம் சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதை வாங்குகிறார். எழுத்தில் தடம் பதிக்கும் முப்பத்தைந்து வயதுக்குள்ளான இளைஞர்களுக்கு வழங்கப்படும் விருது இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விருதுக்கு அபிலாஷ் எல்லாவிதத்திலும் தகுதியானவர்தான். எடுத்துக் கொண்ட விஷயத்தில்- அது கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, இலக்கியமாக இருந்தாலும் சரி அல்லது அரசியல் செய்தியாக இருந்தாலும் சரி- அபிலாஷ் அளவுக்கு நுண் பரிமாணங்களோடு எழுதும் இளைஞர்கள் தமிழில் அரிது. விவரணைகளாலும் துல்லியத் தன்மைகளாலும் தனது எழுத்தை நீட்டிச் செல்லும் அபிலாஷுக்கு இருக்கும் மிக ஆழமான வாசிப்பும் எழுத்தை புரிந்து கொள்ளும் திறனும் எனக்கு எப்பொழுதுமே ஆச்சரியமளிப்பவை. 

அபிலாஷால் எழுதவும் வாசிக்கவும் முடியாமலும் இருக்க இயலுமா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பாக அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. சில நாட்கள் நினைவு தடுமாறியிருந்ததாகச் சொன்னார்கள். அழைக்கும் போதெல்லாம் அவரது மனைவிதான் பேசுவார். ஐசியூவில் இருப்பதாகவும் தேறி வருவதாகவும் சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு அவர் தேறியவுடன் அபிலாஷூடன் பேச முடிந்தது. ‘எப்படி இருக்கீங்க?’ என்றேன். ‘நல்லா இருக்கேன்..என்ன வாசிச்சீங்க’ என்றார். மருத்துவமனையில் இருக்கிறார். நினைவு தடுமாறி திரும்பியிருக்கிறது. ஆனால் பேச்சின் இரண்டாவது வரி ‘என்ன வாசிச்சீங்க’. அந்த ஆர்வம்தான் அபிலாஷ் மீது ஈர்ப்பை உருவாக்குகிறது.

படைப்பாளிகளிடமிருக்கும் நிறைய கிறுக்குத்தனங்கள் அவரிடமும் உண்டு. சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பார். திடீரென்று ‘அந்த நாவல் சரியில்லைங்க’ என்று ஜம்ப் அடிப்பார். எதற்காக திசை மாறினார் என்று தெரியாது. ஆனாலும் சுவாரசியமானதாகத்தான் இருக்கும். எனக்குத் தெரிந்து கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நான்கைந்து வேலைகளாவது மாறியிருப்பார். ஆனால் இந்த நிலையின்மை கூட அவருக்கான அனுபவங்களாகத்தான் பார்க்கிறேன். தனக்கான சந்தோஷங்களையும், கசப்புகளையும் தொடர்ந்து அனுபவங்களாக சேகரித்துக் கொண்டேயிருக்கிறார். 

அபிலாஷ் நிறைய எழுதுகிறார். நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், கவிதை என அனைத்து தளங்களிலும் இயங்குகிறார். மொழிபெயர்ப்பு செய்கிறார். கிரிக்கெட் பற்றி எழுதுகிறார். மனோவியல் கட்டுரைகள் எழுதுகிறார். அரசியல் பற்றி எழுதுகிறார். இலக்கியம் பற்றி பேசுகிறார். முனைவர் பட்ட ஆராய்ச்சியைச் செய்து வருகிறார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழ் எழுத்து வெளியில் அபிலாஷின் தீவிரத் தன்மை உண்மையிலேயே பிரமிப்பூட்டக் கூடியது. அவரது அறிவும், சலிப்படையாமல் அவர் எழுதுவதும் ஆச்சரியமளிக்கக் கூடியது.

விருதுக்கு நாஞ்சில் நாடனும், பிரபஞ்சனும் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 

இந்த விருதை ‘கால்கள்’ நாவலுக்கான விருது என்று கொடுத்திருக்கிறார்கள் என்றாலும் அபிலாஷ் என்ற இளைஞனின் எழுத்துக்கும் உழைப்புக்குமான அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையிலும் எழுத்தாளனுக்கு விருதுகள் மிக அவசியமானவை. அவை அவனை கவனப்படுத்துகின்றன. அவனது எழுத்துக்கு வெளிச்சத்தை கொடுக்கிறது. அவனுக்கான புதிய வாசக பரப்பை கொண்டு வந்து சேர்க்கிறது. இந்த உற்சாகம் எழுதுபவனை இன்னமும் கூடுதலான உற்சாகத்துடன் எழுதத் தூண்டுகிறது. அதுவும் முப்பத்தைந்து வயதுக்குள்ளாக அவன் இத்தகைய கவனத்தை பெறுவது மிக அவசியமும் கூட. 

அடுத்த பத்தாண்டுகளில் அபிலாஷ், லக்ஷ்மி சரவணக்குமார் போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தின் நிகழ்கால முகங்களாக கொடிபறக்கச் செய்யக் கூடும். இவர்களிடம் அத்தகைய வேகத்தையும் தனித்துவமான உழைப்பையும் அதே சமயம் தீவிரத்தையும் பார்க்க முடிகிறது. 

இந்த விருது அறிவிக்கப்பட்டவுடன் சில நண்பர்கள் ஃபேஸ்புக்கில் விமர்சித்திருந்தார்கள். ஒரு விருது அறிவிக்கப்படும் போது இத்தகைய விமர்சனங்கள் இயல்பானதுதான். ஆனால் இந்த விமர்சனங்கள் இப்போது தேவையில்லை என்று நினைக்கிறேன். எனக்கும் அபிலாஷ் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், அதே சமயம் இந்த விருதைப் பெற்றுக் கொள்ளும் அனைத்து தகுதிகளும் அபிலாஷூக்கு இருக்கின்றன. 

அபிலாஷ் திருட்டுசாவி என்ற தனது வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுகிறார். இன்மை என்றொரு இலக்கிய இதழை நண்பர்களோடு சேர்ந்து நடத்துகிறார். இவை தவிர அம்ருதா, உயிர்மை போன்ற இதழ்களில் தனது தொடர்ச்சியான பங்களிப்பின் மூலம் தமிழ் எழுத்துலகில் தனக்கான இடத்தை அழுத்தமாக  பதிவு செய்து வருகிறார்.

அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 

எப்போ படம் எடுப்பீங்க?

அவனை எனக்கு பதினைந்து வருடங்களுக்கும் மேலாகத் தெரியும். எனது நண்பர்களுக்கு இன்னும் ஐந்து வருடங்களுக்கு முன்பாகவிருந்தே அறிமுகம். எங்கள் பள்ளிக்கு பக்கத்திலேயே ஒரு கூரியர் சென்டர் இருந்தது-ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் படிக்கட்டுக்கு கீழான அறையில். அந்த இரண்டேமுக்கால் அடி அகலமுடைய அறைக்கு ஒரு கதவு பொருத்தி வாடகைக்கு விட்டிருந்தார்கள். அவன் அங்குதான் தங்கியிருப்பான். 7x24. பகலில் கூரியர் அறையாகச் செயல்படும். இரவில் அவனுக்கான தங்கும் அறை அது. அவன் இவன் என்று சொல்லக் கூடாது. என்னைவிட குறைந்தது பத்து வருடங்களாவது மூத்தவனாக இருப்பான். ஆனாலும் பெயர் சொல்லி அழைத்துக் கொள்வோம். அப்பொழுதெல்லாம் பன்னிரெண்டாம் வகுப்பில் நைட் ஸ்டடி உண்டு. வீட்டில் இரவு உணவை முடித்துக் கொண்டு எட்டரை மணிக்கு பள்ளிக்குச் சென்றுவிட வேண்டும். பிறகு படிக்க வேண்டும். இரண்டு ஆசிரியர்கள் கண்காணிப்புக்கு இருப்பார்கள். அவர்கள் பன்னிரெண்டு மணி வரைக்கும் விழித்திருப்பார்கள். பிறகு தூங்கிவிடுவார்கள். நாங்கள் எப்படியும் இரண்டு மணி வரைக்காவது அலைந்து கொண்டிருப்போம். பிறகு தூங்கி எழுந்து காலையில் ஐந்து மணிக்கு திரும்பவும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். ஏழரை மணி வரையில் படித்துவிட்டு பிறகு வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு வந்துவிடுவோம். அரசு உதவி பெறும் பள்ளிதான். ஆனால் தலைமையாசிரியர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 

கண்காணிப்பு ஆசிரியர்கள் தூங்கச் சென்ற பிறகும் சிலர் படிப்பார்கள். சிலர் வெளியே செல்வதற்கான முஸ்தீபுகளைச் செய்வார்கள். வெளியே செல்வது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. பெரிய கேட் அது. பூட்டி வைத்திருப்பார்கள். அதன் மேற்புறம் ஈட்டி வடிவிலான கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கும். கொஞ்சம் ஏமாந்தாலும் தொடையைக் கிழித்துவிடும். பள்ளியின் பின்புறமாகச் சென்று அங்கு இருக்கும் தோட்டத்தின் வழியாக வெளியேற வேண்டும். அப்படியே தோட்டத்திற்குச் செல்லும் போது தூங்கிக் கொண்டிருக்கும் வாட்ச்மேன் கண்களில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். சிக்க வைத்துவிடுவார். அதுவுமில்லாமல் இரவில் அந்தப்பகுதிகளில் பாம்புகள் உலாத்திக் கொண்டிருப்பதாகச் சொல்வார்கள். என்றாலும் இளங்கன்றுகள் அல்லவா? பயமறியவில்லை.

வெகுகாலம் நான் சொம்பாகத்தான் இருந்தேன். சொம்பு என்றால் வீட்டுக்கும் ஆசிரியர்களுக்கும் பயந்த, அடக்க ஒடுக்கமானவன். ஆனால் கதிர்வேலும், கெளரிசங்கரும் உசுப்பேற்றுவார்கள். இரவுகள்தான் உண்மையிலேயே சுவாரசியமானது என்பார்கள். யாருமே இல்லாத மயான அமைதியில் ஒரு முறை பேருந்து நிலையத்தை பார்ப்பது பற்றியும், கச்சேரிமேட்டின் சாலையில் நடுவில் சம்மணம் போட்டு அமர்வது பற்றியுமெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் இரவில் ஊரைச் சுற்றிவிட்டு வந்து அவர்கள் பேசும் கதைகள் அலாதியானவை. பகல் முழுவதும் இன்ச் இன்ச்சாக எட்டு வைத்து நடந்து கொண்டிருக்கும் பைத்தியம் இரவில் ஏதோ நோட்டுப்புத்தகத்தை எடுத்து வைத்து எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்வார்கள். அந்தப் பைத்தியத்தின் கதையை ஒரு நாவலின் கதாபாத்திரமாக வைக்கலாம். அவ்வளவு த்ரில் அது. இப்படியாக அவர்கள் தூண்டிக் கொண்டிருக்கவே ஒரு நாள் நானும் தோட்டத்தைத் தாண்டினேன். இரவுகள் அதிசுவாரசியமானவைதான். யாருமே தீர்க்க முடியாத புதிர்களை தங்களுக்குள் புதைத்து வைத்திருக்கும் மந்திரவாதிகள் அவை. பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள் அழைத்துச் சென்ற இடம் கூரியர் சென்டர். பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு தனது பெட்டியைத் திறந்து பொக்கிஷங்களை வெளியில் எடுத்தான். மூச்சடைத்துப் போனது. அந்தப் பருவத்தில் அவை உண்மையிலேயே பொக்கிஷங்கள்தான். வழுவழு காகிதங்களில் அத்தனையும் நடிகைகளின் படங்கள். அவ்வளவு துல்லியமான வண்ணப் படங்களை அதுவரை பார்த்ததில்லை. குமுதத்தின் நடுப்பக்க படம்தான் அதிகபட்சம். 

எனக்கு உதடுகள் உலர்ந்து போயின. அவற்றை மற்றவர்களிடமிருந்து மறைப்பதற்கு நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது. வண்ணத்திரை போன்ற சினிமா இதழ்களால் அந்தப் பெட்டி நிரம்பியிருந்தது. வெகுநேரம் படங்களைப் புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இரவில் தூக்கமே வரவில்லை என்பதுதான் உண்மை. ருசி காட்டிவிட்டான் அல்லவா? பிறகு அடிக்கடி அவனைப் பார்க்கச் செல்லத் தொடங்கியிருந்தேன். அவனை என்று சொன்னால் அது பொய். அந்த நடிகைகளைப் பார்க்கச் சென்றிருந்தேன் என்பதுதான் உண்மை. அவை சலிக்கவே சலிக்காத படங்களாக இருந்தன. அதே சமயம் நிறைய பேசிக் கொள்வோம். அவனது கையெழுத்து அற்புதமாக இருக்கும். ஓவியனின் சித்திரங்களைப் போல இருக்கும் அந்த எழுத்துக்களில் ஏகப்பட்ட கதைகளாக எழுதி வைத்திருந்தான். ஆனால் எந்தப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பாத கதைகள். அவனுடைய நோக்கமெல்லாம் சினிமாவாக இருந்தது. அந்தக் கதைகள் யாவும் சினிமாவுக்கான கதைகள். ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய பிறகு சென்னை சென்று வருவான். கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்ததாகவும், சுரேஷ் கிருஷ்ணா அடுத்த மாதம் வரச் சொன்னதாகவும் சொல்லிக் கொண்டிருப்பான். எங்களுக்கு வாயெல்லாம் பற்களாக இருக்கும்.

அவன் இயக்குநரான பிறகு எங்களுக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தோம். உறுதியளித்திருந்தான். பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்த பிறகு அவனுடனான தொடர்பு அறுந்துவிட்டது. அந்த கூரியர் கடையிலும் வேறு ஏதோ கடை வந்துவிட்டது. பிறகு வருடத்திற்கு ஒரு முறையாவது அவனை ஊர்ப்பக்கம் பார்த்துவிடுவேன். நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எப்படி இருந்தானோ அப்படியே இருக்கிறான். அதே ஒல்லி. அதே சிரிப்பு. அதே தலைமுடி. ஏதாவது ஒரு இயக்குநரின் பெயரைச் சொல்லி அவரோடு இருப்பதாகச் சொல்வான். முதலில் எப்படியும் அவன் இயக்குநராகிவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் இன்னமும் சினிமாவை வெறித்தனமாக நேசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடியும். எங்களுக்கெல்லாம் திருமணமாகிவிட்டது. அவன் அப்படியேதான் இருக்கிறான்.

கடந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது ஹைதர் காலம் கேசட் கடைக்குச் சென்றிருந்தேன். அது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த கடை. விரிவாக இன்னொரு நாளைக்குச் செல்கிறேன். இப்போதைக்கு ‘ஹைதர் காலம் கோபி’ என்று கூகிளில் தேடிப்பார்க்கலாம். அண்ணா மற்றும் பெரியாரின் பேச்சுக்களை வாங்கச் சென்றிருந்தேன். எனக்குத் தெரிந்து ஹைதர் காலத்தில் இருப்பது போன்ற ஆடியோக்களின் டேட்டா பேஸ் தமிழகத்தில் வேறு எந்தக் கடையிலும் இருக்குமா என்று தெரியவில்லை. அவனும் அங்கு வந்திருந்தான். சிரித்துக் கொண்டே கை நீட்டினான். பேசிக் கொண்டிருந்தோம். எந்த உற்சாகக் குறைவும் இல்லாமல் இருந்தான். வயது நாற்பதைத் தொட்டிருக்கும். ‘என்ன செஞ்சுட்டு இருக்கே?’ என்றேன். ஒரு டைரக்டரின் பெயரைச் சொல்லி அவரிடம் அசிஸ்டெண்டாக அடுத்த வாரம் சேர்வதாகவும் சென்னை செல்வதற்கு நூறு ரூபாய் பணம் கிடைக்குமா என்றும் கேட்டான். வேறு ஏதாவது கேட்டாலும் சிரித்துக் கொண்டேதான் பதில் சொல்வான். அவனது அத்தனை ஆசைகளையும் வேதனைகளையும் அந்தச் சிரிப்பு மறைத்துக் கொண்டிருக்கும். ஆனால் அவனை விட்டு விலகி வந்த பிறகு அந்தச் சிரிப்பு வடிந்து போய்விடும் என்று எனக்குத் தெரியாதா என்ன?

Aug 25, 2014

ஏன் தினமும் எழுதுகிறாய்?

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் புரிதலே இல்லாமல் ஒரு பதிவு எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். இருந்துவிட்டு போகட்டும். எனக்கு அந்த விவகாரத்தில் தெரிந்த கண்ணுக்குத் தெரிந்த ஒரே விவகாரம் ‘இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனிய குழந்தைகளை ஏன் கொல்கிறார்கள்’ என்பது மட்டும்தான். உடனே  ‘ஏன்? இஸ்ரேல் குழந்தைகளை மட்டும் பாலஸ்தீனிய ஹமாஸ் பிரிவினர் கொல்லவில்லையா’ என்றார்கள். யார் இல்லை என்று சொன்னது? கொல்கிறார்கள்தான். அவர்கள் தீவிரவாதிகள். உயிர்களைப் பற்றிய எந்த யோசனையும் அற்றவர்கள். இஸ்ரேலும் இன்னபிற ராணுவத்தினரும் Civilised சமூகத்தின் அங்கம்தானே? அவன் இஸ்ரேலிய குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்றால் இவர்களும் பாலஸ்தீனிய மக்களை ஏன் கொல்கிறார்கள்? அந்தத் தீவிரவாதிகளைத்தானே கொல்ல வேண்டும்? ‘அவர்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் மக்களுக்குள் மக்களாக ஒளிந்து கொள்கிறார்கள்’ என்று நூறு காரணங்கள் இருக்கட்டும். ‘அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள். பல்லுக்குப் பல் ரத்தத்துக்கு ரத்தம் என்ற கணக்கில் இவர்களும் குழந்தைகளைக் கொல்கிறார்கள்’ ஆசியாவின் மேற்குப் பகுதியில் பிறந்ததைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத பிஞ்சுக் குழந்தைகள். அவர்கள் எந்த தேசத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் என்ன? பூக்களையல்லவா வெடி வைத்துத் தகர்க்கிறார்கள்?

இதுதான் அந்தக் கட்டுரையின் சாராம்சம். இதைத்தான் சொல்ல விரும்பியிருந்தேன். ஒருவேளை நான் சொல்ல விரும்பியதை துல்லியமாகச் சொல்ல முடியாமல் போயிருக்கலாம்.

இருக்கட்டும். 

கட்டுரையில் பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால் எனக்கு ஏற்றுக் கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. நான் என்ன ஆல்-இன்-ஆல் அழகுராஜாவா? இல்லை எழுதுகிற அத்தனை விஷயத்திலேயும் பாண்டித்யம் பெற்றிருக்கிறேனா? அது இல்லை. அறிவுஜீவி என்று சொல்லிக் கொள்வதிலோ, வானத்திற்குக் கீழாக இருக்கும் அத்தனை விவகாரங்களுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது என்றோ எந்தக் காலத்திலும் நம்பியதில்லை. தினசரி மனதை பாதிக்கும் அல்லது எதிர்கொள்ளும் விஷயங்களை பிடித்த மொழிநடையில் எழுதிப் பார்க்கிறேன். அதை பின் தொடர்பவர்களும் இருக்கிறார்கள் அல்லது ஒதுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள். அதுவரையில் சரிதான். ஆனால் தினமும் எழுதுகிறேன் அல்லவா? அதுதான் பிரச்சினை. அதுவும் எனக்கு இல்லை- மற்றவர்களுக்கு. 

‘நீ நிர்பந்தத்துக்காக தினமும் எழுதுகிறாய்’ என்று யாராவது சொல்லும் போதுதான் அலர்ஜியாகிவிடுகிறது. நிர்பந்தம் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன தவறு? ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டியிருக்கிறது. ஐந்து மணி நேரமாவது தூங்க வேண்டியிருக்கிறது.  நான்கு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் என்னென்னவோ. வேலைக்குச் செல்வது நிர்பந்தம் இல்லையா? மேலாளருக்கு அடிபணிவது இல்லையா? இப்படி நிர்பந்தங்களால் ஆனதுதான் நம் வாழ்க்கை. இதில் எழுதுவதையும் வாசிப்பதையும் நிர்பந்தமாக்கிக் கொள்வதில் என்ன தவறு? இது பலருக்கும் optional ஆக இருக்கிறது. முடிந்தால் செய்வோம் இல்லையென்றால் விட்டுவிடலாம் என்கிற ஒரு சுதந்திரம் இருக்கிறது. எனக்கு அந்தச் சுதந்திரம் வேண்டியதில்லை என நினைக்கிறேன். எழுதுவது என்பதனை விருப்பமான நிர்பந்தமாக்கி வைத்திருக்கிறேன். இது என்னுடைய பிரச்சினை மட்டும்தானே? இதில் மற்றவர்கள் ஏன் டிஸ்டர்ப் ஆக வேண்டும் என்றுதான் புரியவில்லை.

நிசப்தத்தில் எழுதுவது ஒருவிதத்தில் வடிகால். அது ஒரு உரையாடல். ஒருவிதமான திருப்தி. சந்தோஷம். வேறு ஏதாவதும் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாசகர்கள் எண்ணிக்கை பற்றி எந்தக் கவலையும் இல்லை. நிஜமாகவேதான் சொல்கிறேன். மதுரை சென்றிருந்தேன் அல்லவா? நான்கு பேர்கள் சந்திக்க வந்திருந்தார்கள். நான்கு பேருமே ஓய்வு பெற்றிருந்தவர்கள். இந்தப் பொடியன் எழுதுவதை நம்புகிறார்கள். உரையாடுகிறார்கள். விமர்சிக்கிறாரக்ள். வாழ்த்துகிறார்கள். இவற்றைத்தான் எதிர்பார்க்கிறேன்.

மதுரை கருத்தரங்கில் பேசும் போது என்னையும் அறியாமல் சில உண்மைகளைச் சொல்லிவிட்டேன். தினமும் எழுதுவது என்பது எழுத்தை மெருகேற்றுகிறதுதான். அது நல்லவிதமான மெருகேற்றலா என்று தெரியவில்லை. எப்படிச் சொல்கிறேன் என்றால்- இன்று எழுதுவதைவிடவும் நாளை எழுதுவது சுவாரஸியமாக இருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. ஆனால் அந்த விருப்பத்தில் ஆழம் குறைந்துவிடுகிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரே கட்டுரையை சுந்தர ராமசாமி எழுதுவதற்கும் சுஜாதா எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? சு.ரா ஆழமாக எழுதியிருப்பார். ஆனால் சுவாரசியம் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதுவே சுஜாதா சுவாரசியமாக்கியிருப்பார். புரிந்து கொள்வது எளிது. ஆனால் ஆழம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இணையத்தில் தினமும் எழுதுவது என்பது சுவாரசியத்தை நோக்கிச் செல்கிறது. ஆனால் ஆழத்தை நோக்கிச் செல்கிறதா என்று கருத்தரங்கில் பேசிவிட்டு வந்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கவிஞர்கள் சுகுமாரனும், யுவன் சந்திரசேகரும் தனியாக அழைத்துப் பேசினார்கள். நெய்தல் கிருஷ்ணனும் அழைத்துப் பேசினார். அவர்களுக்கு என் மீது மிகுந்த பிரியம் உண்டு. அவர்களின் ஆதங்கமெல்லாம் ‘contemporary writing ஐ தான் உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறோம்’என்பதுதான். சுவாரசியமாக எழுதுவதும் அதே சமயம் contemporary ஆக இருப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இன்னமும் காலம் இருக்கிறது. என்னிடம் அனுபவமும் இல்லை பயிற்சியும் இல்லை.

சீனி.விசுவநாதன் என்றொரு ஆராய்ச்சியாளர். கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுமையையும் பாரதியாருக்கு மட்டுமே செலவு செய்து இறுதியில் பாரதியின் அனைத்து எழுத்துக்களையும் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பக்கங்களில் தொகுத்திருக்கிறார். இப்படி ஒரேயொரு துறையை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்நாளை செலவழித்தால் வேண்டுமானால் அந்தப் பிரச்சினையை முழுமையாக அணுகலாம். என்னைப் போன்ற சாமானிய நடுத்தரனுக்கு அத்தகைய ஆராய்ச்சிகள் பற்றி யோசிப்பது கூட சாத்தியமா என்று தெரியவில்லை. 

தினமும் எத்தனையோ செய்திகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு செய்தியிலும் நமக்கு ஒரு பார்வை உருவாகிறது. ஒரு புரிதல் ஏற்படுகிறது. அதைப் பற்றி எழுதுவதற்கு மற்றவர்களைவிடவும் ஐந்து சதவீதம் கூடுதலாக தகவல்களைத் தேட வேண்டியிருக்கிறது. தேடியதை முடிந்தவரை சுவாரசியத்தைக் கூட்டி, போரடிக்காமலும் ஜல்லியடிக்காமலும் எழுதிவிட எத்தனிக்கிறேன். அவ்வளவுதான். ஒவ்வொரு தடவையும் வெற்றியடைய முடியும் என்று நம்பவில்லை. ஆனால் எப்பவாவது வெற்றியடைந்துவிடலாம் அல்லவா?

என்னளவில் நேர்மையாக இருக்கிறேன். எந்தப் பீடமும் இல்லாமல், சுய பெருமைத் தம்பட்டமும் இல்லாமல், சாதாரணனாக, பிரச்சினைகளின் பரிமாணங்களை என் பார்வையிலிருந்து எந்தத் திணிப்பும் இல்லாமல் எழுதிக் கொண்டிருக்க விரும்புகிறேன். இதுதான் என் நிலைப்பாடு. இப்போதைக்கு இதுதான் பாதையும் கூட. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? 

தினமும் கோடிக்கணக்கான எழுத்துக்களால் இணையம் நிரம்புகிறது. இதில் நிசப்தம் தளத்தின் ஐயாயிரம் எழுத்துக்கள்தான் இவர்களுக்கு பிரச்சினை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. தாண்டிச் செல்ல முடியவில்லையா என்ன? அப்படித் தாண்டிச்செல்ல முடியாமல் பொருட்படுத்தத்தக்கவன் ஆகியிருந்தால் கூட சந்தோஷம்தான்.

‘இவன் எழுதுவது அபத்தம்’ என்றும் ‘இவன் பைத்தியகாரன்’ என்றும் சொன்னால் அதை தலை வணங்கி ஏற்றுக் கொள்வேன். முந்தாநாள் மழை பெய்திருந்தது. அதனால் மூன்று இலைகளை வெளியில் தள்ளியிருக்கிறேன். அபத்தங்களைச் செய்வது சாத்தியம்தானே? சுட்டிக் காட்டும் போது அந்தக் குறைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் ‘இவன் தினமும் எழுதுவதால்தான் அபத்தமாக இருக்கிறது’ என்று சொன்னால் அதன் நோக்கத்தை வேறு மாதிரியாகத்தான் புரிந்து கொள்வேன். இன்னொரு முறை இப்படிச் சொன்னால் என்னிடமிருந்து இந்த பதிலும் கூட இருக்காது. எந்தச் சண்டையும் எனக்கு அவசியமில்லை. பிறரின் கவனத்தை ஈர்க்க எந்த controversy ம் தேவைப்படுவதில்லை.

பிடித்தால் படியுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று சொல்லுமளவுக்கு எனக்குத் தகுதிகள் வளர்ந்துவிட்டதாக நம்பவில்லை. எல்லோரும் படிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தொடர்ந்து வாசியுங்கள். கருத்துக்களில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளை ஒத்துக் கொள்வதிலும் அவற்றை மேம்படுத்திக் கொள்வதிலும் எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் அந்தத் தவறுகளுக்குகு என்ன காரணம் என்று கண்டுபிடிக்கும் வேலையை தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டியதில்லை. அது என் பொறுப்பு. 

Aug 22, 2014

புரிஞ்சுதான் பேசுறியா?

‘யோவ் புரிஞ்சுதான் பேசுறியா?’ இந்தக் கேள்வியைத்தான் காருக்குள் இருந்தவர் கேட்டிருக்கிறார். என்ன கடுப்பானான் என்று தெரியவில்லை பைக்கில் நின்றிருந்தவன் கையில் வைத்திருந்த எதையோ ஓங்கி அடித்திருக்கிறான். கண்ணாடி சுக்கு நூறாக போய்விட்டது. ஹோண்டா சிட்டி- புது கார். காரை விட்டு கீழே இறங்குவதற்குள் பைக்காரன் பறந்துவிட்டான். என்ன இருந்தாலும் கண்ணாடியைப் பறிகொடுத்தவருக்கு அங்கலாய்ப்பாகத்தான் இருக்கும். தனக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் வண்டியை நகர்த்த மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ட்ராபிக் ஃபோலீஸ் வந்துவிட்டார்கள். முந்தின சிக்னலில் இருந்தே லடாய் செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இந்த ஆள் என்னவோ சொல்ல அவன் பதிலுக்கு என்னவோ சொல்ல, முதல் வரியில் இருக்கும் கேள்வியை இவர் கேட்க, டமார்.

பெங்களூர் கூட்லு கேட்டில் நேற்று மாலையில் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இந்தச் சம்பவம் தெரிந்திருக்கலாம். இல்லையென்றாலும் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை. 

ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் அடிக்கடி பிரசாத் ஸ்டுடியோவுக்குச் செல்வதுண்டு. அப்பொழுது தமிழ் படங்கள் பார்க்க வாய்ப்பு இல்லை. ஒரே ஒரு மாலில் திரையிடுவார்கள். டிக்கெட் விலை செமத்தியாக இருக்கும். பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த போது ஐந்நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்க எப்படி மனம் வரும்? பிரசாத் ஸ்டுடியோவில் அவ்வப்போது தமிழ் படங்களைத் திரையிடுவார்கள். பெரும்பாலும் தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து அதை விநியோகஸ்தர்களுக்குக் காட்டுவார்கள். உள்ளே நாமும் அமர்ந்திருந்தால் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படித்தான் ‘ஏய்’ படமும் பார்த்தேன். தெலுங்கில் ‘ரேய்’ என்ற பெயரில் டப்பிங் செய்திருந்தார்கள். யாராவது அந்தப்படத்தை தெலுங்கில் வாங்கித் திரையிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் அர்ஜூனா அர்ஜூனா பாடலைப் பார்த்துவிட்டு எனக்கு குளிர் ஜூரம் வந்துவிட்டது. அருவியில் அப்படி நனைந்தால் வராதா என்ன?

‘ஏய்’ என்று கத்துவது வில்லனை உருவாக்கிவிடுகிறது என்பதுதானே அந்தப்படத்தின் ஒன்லைன்? அதே கான்செப்ட்தான் நேற்றும். ‘புரிஞ்சுதான் பேசுறியா?’ என்ற கேள்வி சில ஆயிரங்களுக்கு வேட்டு வைத்துவிட்டது. கடைசி வரைக்கும் பினாத்திக் கொண்டிருந்தார். ‘கேமிராவில் பதிவாகியிருக்கும் பிடித்துக் கொள்ளலாம்’என்று போலீஸார் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் நகர்வதாகத் தெரியவில்லை. வண்டியின் வரிசை பெரிதாகிக் கொண்டேயிருந்தது. ஹார்ன் ஒலியெழுப்பத் துவங்கியிருந்தார்கள். அவருக்கும் வேறு வழியில்லை. வண்டியை ஓரமாக நகர்த்திவிட்டு போலீஸாரிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார். நான் கிளம்பிவிட்டேன்.

அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்க்குள்தான் செலவு பிடிக்கும் என்றாலும் தேவையில்லாத பிரச்சினைதான். பேசாமல் இருந்திருந்தால் தப்பித்திருக்கும். அதற்குள் ஈகோ. வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார். சாலையில் நம்மை முந்திச் செல்வார்கள்- ‘பார்த்து போக முடியாதா’ என்று வாய் வந்துவிடுகிறது. அவன் பேசாமல் சென்றுவிட்டால் ஒன்றுமில்லை. பதிலுக்கு அவனும் திரும்பி முறைத்தால் பிரச்சினைதான். சாலைகளில் நடக்கும் பிரச்சினைகளில் எண்பது சதவீதமாவது ஈகோவினால்தான் வருகிறது என்ற சர்வே ஒன்று கண்ணில்பட்டது. அது சரிதான். பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று.

வீட்டில் இருப்பவர்களையே முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நண்பர்களை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா? அவன் தான் உயிர்நண்பன் என்று நினைத்திருந்தேன். பெங்களூர் குடி வந்து எட்டு மாதங்கள் ஆகிறதாம். ‘ஏண்டா ஒரு ஃபோன், ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கலாம்ல’ என்றால் ‘பிஸியில் மறந்துவிட்டேன்’ என்கிறான். அப்புறம் என்ன ______ நண்பன்? (கோடிட்ட இடத்தில் உயிர் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவும்) ‘உன் சங்காத்தமே வேண்டாம்’ என்று பேச்சுவார்த்தையே முறிந்துவிட்டது. 

நெருங்கிப் பழகியவர்களையே புரிந்து கொள்ள முடிவதில்லை இந்த லட்சணத்தில் சாலையில் போகிற வருகிறவர்களெல்லாம் புரிந்துதான் பேச வேண்டும் என்றால் அவ்வளவுதான். அவ்வளவு ஏன்? நம்மை நாமே முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா என்ன? முரண்பாடுகளின் மொத்த உருவம் நாம்தான் அல்லது நான்தான்.

பெரியாரைப் பிடிக்கும்  ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவான். இந்துத்துவம் பிடிக்காது ஆனால் மோடியை ஆதரிப்பான். கம்யூனிஸம் பேசுவான் ஆனால் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பான். பைத்தியகாரன். எப்படி இதெல்லாம் சாத்தியம்? ஒரு விஷயத்தையும் முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நாய்க்கு நான்கு தட்டுக்களில் சோறு போட்டு வைத்தால் நான்கிலுமே வாய் வைத்துப் பார்க்க முயற்சிக்குமாம். டெக்னாலஜி மனிதனை அப்படித்தான் மாற்றிவிடுகிறது. கம்யூனிஸமும் சரி என்கிறது முதலாளித்துவமும் சரி என்கிறது. நாத்திகமும் சரி என்கிறது ஆன்மிகமும் சரி என்கிறது. ஷீரடி பாபாவையும் நம்பலாம் என்கிறது. பெரியாரையும் நம்பலாம் என்கிறது. எதைச் செய்வது? 

ஐடியலிஸம், கொள்கைகள் என்பதையெல்லாம் காலம் எந்தக் கருணையுமில்லாமல் சர்வசாதாரணமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரிக் கொள்கை பேசினாலும் முதலாளியை நம்பி வாழ்பவர்கள்தான் அதிகம். திராவிடம், ஆரியம், மொழி, இனம், பண்பாடு என எல்லாவற்றிலுமே ஏதாவதொருவிதத்தில் சமரசம் செய்து கொள்கிறோம். இல்லையா? மற்றவர்கள் செய்து கொள்கிறார்களோ இல்லையோ நான் செய்து கொள்கிறேன். குடும்பம் முக்கியமாகத் தெரிகிறது, மகன் முக்கியமாகத் தெரிகிறான். எல்லாவற்றையும் விட என் அரை சாண் வயிறு முக்கியம். சமரசமே செய்து கொள்ளாத- தனக்கு பிடித்த கொள்கைகளுக்குத் துளியும் மாறுபாடு இல்லாத வாழ்க்கையை மேற்கொள்ளும் எந்தவிதத்திலும் முரண்பாடு இல்லாத ஒரு மனிதர் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அவரது காலடி மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

காலடி மண் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது. எங்கள் ஊர்ப்பக்கத்தில் சூரிபாளையத்து அய்யன் கோவில் என்றொரு கோவில் இருக்கிறது. நாடார்களின் தெய்வம். இன்னமும் கோவில் கட்டுப்பாடு நாடார்களின் கைவசத்தில்தான் இருக்கிறது. அந்த அய்யன் எதனால் கடவுள் ஆனார் என்று தெரியவில்லை. பலவானாக இருந்திருக்க வேண்டும். இப்பொழுது கையில் அரிவாளாடு நிற்கிறார். குழந்தைகளாக இருந்த காலத்தில் ஆயா அழைத்துச் செல்வார். அப்பொழுதெல்லாம் பெருங்கூட்டமாக இருக்கும். சூரிபாளையத்து அய்யன் கோவில் திருநீறைக் கை கால்களில் பூசிக் கொண்டால் எந்த நோவும் வராது என்று பூசிவிடுவார். 

அந்தக் கோவிலுக்கு கடைசியாகச் சென்று இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது கோவிலை எட்டிப்பார்த்தால் ஆயா காலத்து ஆட்கள்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். இளந்தலைமுறையினர் கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ண ஜெயந்தியோடும், விநாயகர் சதுர்த்தியோடும், தீபாவளியோடும் நின்றுவிடுகிறார்கள். சூரிபாளையத்து அய்யன் கோவில் மட்டுமில்லை- வாழைத் தோட்டத்து அய்யன், தம்பிக்கலை அய்யன் என்று நிறைய அய்யன் கோவில்களிலும் கூட இதே நிலைமைதான். ஒரு காலத்தில் வருடாவருடம் கிடாவெட்டி பூசை நடத்தும் காளியாத்தா கோவிலை அந்தக்காலத்து ஆட்கள் யாராவது சுத்தம் செய்தால்தான் உண்டு. இல்லையென்றால் புதர் மண்டிக் கிடக்கிறது. மாகாளியம்மன், வேடியப்பன், கன்னிமார் சாமிகள் என ஏகப்பட்ட கடவுள்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறோம். 

பெருந்தெய்வங்களை வணங்குவதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இந்தச் சிறு தெய்வங்களை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டோம். இந்தச் சிறுதெய்வங்களில் முக்கால்வாசி தெய்வங்கள் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்கள்தான். மனிதர்கள். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அய்யன்கள் அந்த ஊரின் காவல்தெய்வங்களாகவோ, வீரர்களாகவோ வாழ்ந்து மறைந்தவர்கள். ஒவ்வொரு தெய்வத்தின் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். அவர்களை காலங்காலமாக வணங்கி கடவுளாக்கி வைத்திருக்கிறார்கள். காலம் மாற மாற கார்போரேட் சாமிகளை வணங்கத் தொடங்கி சிறுதெய்வங்களைக் கைவிட்டுவிட்டோம். வெங்கடாசலபதியும், தங்கக் கோபுரமும் ஈர்க்கும் அளவுக்கு இந்த ஏழைச் சாமிகள் ஈர்ப்பதில்லை.

இதையெல்லாம்தான் இந்துத்துவம் என்று புரிந்து கொள்வதா? எதற்கு வம்பு? கீபோர்டும் இண்டர்நெட் இணைப்பும் இருக்கிறது என்று இதையெல்லாம் தட்டினால் நம்மைத் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள்.

Aug 21, 2014

விளம்பரம் செய்யறீங்களா?

நண்பர் ஒரு தொழில் தொடங்கியிருக்கிறார். சொந்த ஊர் திண்டுக்கல். முதலில் ஐடியில்தான் இருந்தார். சில வருடங்களுப் பிறகு படிக்கச் செல்கிறேன் என்று ஆஸ்திரேலியா சென்றார். அப்பொழுதே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து வந்து மறுபடியும் அதே நிறுவனத்தில் சேர்ந்தார். இப்பவும் ஐடியில்தான் இருக்கிறார். அவரை பாஸிட்டிவான மனிதர் என்றும் சொல்ல முடியாது; நெகடிவ்வான மனிதர் என்றும் சொல்ல முடியாது. ஒழுங்காகத்தான் பேசிக் கொண்டிருப்பார். திடீரென்று ‘இந்த வேலை இல்லையென்றால் என்ன செய்வீங்க?’என்பார். ஜெர்க் அடித்தாலும் அந்த வினாடியில் சமாளித்துவிடுவேன். ஆனால் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு வயிறு கலங்கும். எனக்கு என்ன தெரியும் என்று யோசித்துப் பார்த்தால் எதுவுமே தெரியாது என்பதுதான் பதில். களை பறிக்கத் தெரியுமா? நாற்று நடத் தெரியுமா? ட்ராக்டர் எடுத்து உழவு ஓட்டத் தெரியுமா? துணி தைக்கத் தெரியுமா? மிக்ஸி, க்ரைண்டர் ரிப்பேர் செய்யத் தெரியுமா? ஷேர் மார்கெட் பற்றிய அடிப்படையாவது தெரியுமா? அல்லது மளிகைக் கடையில் பொட்டலம் கட்டவாவது தெரியுமா? சுத்தம். ஒரு மண்ணும் தெரியாது.

உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே ‘உங்களுக்கு என்னங்க? எழுதுறீங்க’ என்பார். உசுப்பேற்றுகிறாராம். அப்பொழுது வரும் பாருங்கள் கோபம். ஒரு குண்டாந்தடியெடுத்து பொடனி அடியாக அடித்துவிடலாம் என்றிருக்கும். வருடம் முழுவதும் சேர்த்தாலும் கூட பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியதில்லை. அதுவே கூட சுஜாதா விருது வாங்கிய வருடத்தில் பத்தாயிரத்தை தாண்டியது. அவ்வளவுதான் எழுத்துச் சம்பாத்தியம். வருடம் பத்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்வது? 

கஷ்டம்தான். அது போகட்டும்.

இந்த மனிதர் ஒரு ஐஸ்க்ரீம் கடை ஆரம்பித்திருக்கிறார். பார்ட் டைம் வேலை. பகல் முழுவதும் மனைவி பார்த்துக் கொள்கிறார். மாலையிலிருந்து இரவு வரை இவர் பார்த்துக் கொள்கிறார். வியாபாரம் பரவாயில்லை என்கிறார். நல்ல வருமானம் வந்தவுடன் ஐடியை விட்டுவிட்டு அதற்கே போய்விடப் போகிறார். மனிதர் விவரமானவர்தான். வெறும் ஐஸ்கிரீம் கடை மட்டும் போதாது என்று மினி டெம்போ ஒன்றும் வாங்கி அதில் விளம்பர டிஸ்ப்ளே பலகை ஒன்றையும் பொருத்தியிருக்கிறார். அதில் பெரிய வேலை இல்லை. கடைக்காரர்கள், வியாபாரிகள் என்று மாதக்கணக்கில் அந்த வண்டியை புக் செய்து கொள்கிறார்கள். அவர்களது விளம்பர ப்ளக்ஸை வண்டியில் பொருத்தி ஒரு நாளைக்கு நாற்பது கிலோமீட்டர் தூரத்துக்கு வண்டி சுற்றி வரும். அந்த வியாபாரி மாதம் அறுபதாயிரம் ரூபாயை நண்பருக்குக் கொடுத்துவிட வேண்டும். டீசல் செலவு, டிரைவர் சம்பளம், பேட்டா அனைத்தும் நண்பரே பார்த்துக் கொள்வார். ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று லிட்டர் டீசல் செலவாகும். ஒரு லிட்டர் டீசல் 62 ரூபாய். டிரைவர் சம்பளம் பத்தாயிரம் ரூபாய். அது போக தினப்படி நூற்றைம்பது ரூபாய் பேட்டா. ட்ராபிக் போலீஸ், கார்போரேஷன்காரர்கள் மாமூல் போக எப்படியும் ஒரு வண்டிக்கு முப்பதாயிரத்துக்கு குறைவில்லாமல் நிற்கும். படு உற்சாகமாகத் திரிகிறார். 

இவர்களையெல்லாம் பார்த்தால் நமக்கும் ஆசை வந்துவிடுகிறது. இந்த வேலையையே நம்பிக் கொண்டு என்ன செய்வது? நகரத்தில் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். செருப்புக்கடை வைத்திருப்பவர் தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். பேக்கரிக்காரர் ஒரு நாளைக்கு எண்பதாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் ஆகிறது என்கிறார். வெளியிலிருந்து பார்த்தால் வெறும் பீடாக்கடையாகத்தான் தெரியும்- நன்றாக அறிமுகமான பீடாக்கடைக்காரரிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று கேட்டுப்பாருங்கள். ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை வேண்டுமானால் தயங்காமல் பீடாகடைக்கு போகலாம். அதுவும் பத்து ஆயிரம் ரூபாய் தாள்களுக்குக் கூட சில்லரை தருவார்கள்.

வீட்டில் பழைய பேப்பர் எடுக்க வரும் மனிதர் தர்மபுரிக்காரர். பெங்களூரில் குடும்பத்தோடுதான் வசிக்கிறார். ஒரு கிலோ பேப்பரை ஏழு ரூபாயிலிருந்து எட்டு ரூபாய்க்கு எடுக்கிறார். எப்படியும் கிலோவுக்கு ஒன்றரை ரூபாய் நிற்குமாம். ஒரு நாளைக்கு ஐந்நூறு கிலோவுக்கும் குறைவில்லாமல் சம்பாதிப்பதாகச் சொல்கிறார். இது வீடுகளில் வாங்கும் பேப்பர் மட்டும். இவை போக மாலை ஆறு மணிக்கு மேலாக மீன்பாடி வண்டியொன்றை எடுத்துச் சென்று இரவு பன்னிரெண்டு மணி வரைக்கும் குப்பை பொறுக்குகிறார். பிராந்தி பாட்டில்கள், பழைய இரும்பு, ப்ளாஸ்டிக் பாட்டில்கள் என எப்படியும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் கிடைக்கிறது. கணக்குப் போட்டு பார்த்தால்- மழை இல்லாமல் இருந்தால்- ஐம்பதாயிரத்திற்கு குறைவில்லாமல் சம்பாதிக்கிறார்.

‘என்ன சார் செலவு? வீட்டு வாடகை இரண்டாயிரம். அது மட்டும்தான் செலவு. எப்படியும் மாசம் நாற்பதாச்சும் மிச்சம் ஆகிடும்...நாலு வருஷத்துல ஊர்ல தோட்டம் வாங்கிடுவேன்’ நம்பிக்கையாகப் பேசுகிறார். இந்த நகரம் எத்தனை ஆயிரம் பேர்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது? இரவில் ஒவ்வொரு ஏரியாவிலும் நான்கைந்து பேர்களாவது குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். மாலை நேரங்களில் ஒவ்வொரு வீதியிலும் நான்கைந்து தள்ளுவண்டிக்கடைகளாவது இருக்கின்றன. உழைப்பவர்களுக்கு எப்படியும் வாய்ப்பிருக்கிறது.

தள்ளுவண்டிக்கடை அல்லது குப்பை பொறுக்குவது பற்றிச் சொல்லவில்லை. இந்த உலகம் கைவிட்டுவிடாது என்பதற்காகச் சொல்கிறேன்.

இந்த அலுவலக நண்பர் செய்வது போல எதையாவது கண்டுபிடிக்க வேண்டும். இன்னொரு நண்பர்- ஈரோட்டுக்காரர் சொந்தமாக ட்ராவல் ஏஜென்ஸி ஆரம்பித்திருக்கிறார். இன்னொருவர் திருப்பூரிலிருந்து பனியன் ஆர்டர்கள் வாங்கி இங்கேயிருக்கும் சிறு கடைகளுக்கு கொடுக்கிறார். அவர் ஐடி வேலையை விட்டுவிட்டார். இப்படி நுணுக்கமான ஆட்கள் எதையாவது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

ஐடியும் மென்பொருளும் எந்தக் காலத்திலும் அழியப்போவதில்லை. இருந்து கொண்டுதான் இருக்கும். ஆட்கள் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நமக்கு வேலை இருக்குமா என்பதுதான் சந்தேகம். பதினைந்து வருட அனுபவமுள்ளவனை வேலைக்கு வைத்து ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதற்கு பதிலாக ஐந்து வருட அனுபவமுள்ளவனே போதும் என்று நிறுவனங்கள் யோசிக்கத் துவங்கும் போது ‘போடா எனக்கு இன்னொரு தொழில் இருக்கு’ என்று கெளரவமாக வந்து அமர்ந்து கொள்ளலாம். இது ஐடிக்கு மட்டுமில்லை பிற வேலைகளில் இருந்தாலும் நம் தலைமுறையினருக்கும் இதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.

இதையெல்லாம் யோசித்திருக்கவே மாட்டேன். நேற்று அந்த நண்பர் அழைத்து ‘நிசப்தம்.காம் தளத்துக்கு ஒரு மாதம் விளம்பரம் செய்யறீங்களா? டிஸ்கவுண்ட் தருகிறேன்’ என்றார். ஒரு மாதத்திற்கு நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமாம். ‘என்னைப் பார்த்து ஏய்யா அந்தக் கேள்வியைக் கேட்ட?’ என்று நினைத்துக் கொண்டே இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். 

Aug 20, 2014

மருத்துவர்கள் எல்லோருமே கெட்டவர்களா?

எல்லோரும் மருத்துவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது நானும் ரவுடிதான் என்று ஜீப்பில் ஏற வேண்டியதில்லைதான். ஆனால் செந்தில்பாலன் என்ற டாக்டர் ‘என்ன நினைக்கிறீர்கள்?’ என்றார். மிகச் சமீபமாக தொடர்பில் இருக்கும் சிவகங்கைக்காரர் அவர். எலும்பு முறிவு மருத்துவர். ‘அப்படியெல்லாம் ஒண்ணும் நினைக்கலை டாக்டர்’ என்று சொன்னால் ‘பரவால்ல சொல்லுங்க’ என்கிறார். விட்டால் எலும்பை முறித்துவிட்டு கட்டும் போடுவார் போலிருந்தது.

எதற்கு வம்பு? 

மருத்துவர்கள் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கலாம்- இருக்கிறது. ஆனால் அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே சங்கடமாகத்தான் இருக்கிறது. எத்தனையோ நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. எபோலா பற்றி ஆறு மாதங்களுக்கு முன்பாக நமக்குத் தெரியுமா? ஸ்வைன் ஃப்ளூ பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்பாக ஐடியாவே இல்லை. ஹெச்.ஐவி பற்றி பதினைந்து வருடங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரிந்திருந்தது? நோய்களை விடுங்கள். எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன? கொத்துக் கொத்தாகச் சாகிறார்கள். மிச்சம் மீதி பிழைத்தவர்களையெல்லாம் அள்ளியெடுத்துச் சென்று மருத்துவமனையில் போடுகிறார்கள். மருத்துவர்கள் பிழைக்க வைத்துவிடுகிறார்களா இல்லையா? யோசித்துப்பார்த்தால் உண்மையிலேயே மருத்துவர்கள் கடவுள்கள்தான்.

மாமாவுக்கு திடீரென்று நெஞ்சு வலி. அம்மாவின் தம்பி. அவர் பதினாறு வயதிலிருந்தே பாட்டாளி.  அவரது மகன் இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறான். மகளுக்கு அவனை விடவும் சிறிய வயது. விவசாயம்தான் தொழில். ஆம்புலன்ஸில் தூக்கிப் போட்டுச் சென்றார்கள். ‘Massive attack’ என்றார்கள். நெஞ்சை அறுத்தார்கள். பிழைக்க வைத்துவிட்டார்கள். இயல்புக்கு வந்துவிட்டார். இன்னமும் அவர்தான் விடிந்தும் விடியாமலும் தோட்டத்தில் பறித்த பூவை பைக்கில் கட்டி மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்கிறார். குடும்பத்தை தோளில் சுமக்க வேண்டுமல்லவா? சுமந்து கொண்டிருக்கிறார்.

வேணியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ‘பொதுவா பலருக்கு பத்து மாசம்...அய்யா தொட்டுப்புட்டா எட்டு மாசம்’ என்று சினிமாவில் பாட்டுக் கேட்க வேண்டுமானால் கெத்தாக இருக்கலாம். ஆனால் எட்டு மாதத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் போது எவ்வளவு சிக்கல்கள் என்று கூட இருந்து பார்க்கும் போதுதான் தெரிந்தது. ஏதேதோ பிரச்சினைகள். ‘தாய்க்கு அல்லது குழந்தைக்குச் சிரமம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்கள். நான்கு மணி நேரம் பிரசவ அறைக்கு வெளியே நின்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். மாமனார், மாமியார் உட்பட எல்லோரும் நிற்கிறார்கள். அவர்கள் முன்பாக கண்கலங்கிவிடக் கூடாது என்று வைராக்கியம். ஆனாலும் முடியவில்லை. கண்ணீர் கசிந்து கொண்டேயிருக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு குழந்தையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கழுவக் கூட இல்லை. அவனது நெற்றியில் முத்தமிட்டேன். அவனுக்கு முதன் முதலாக முத்தமிட்டவன் நானாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஆசை அது. அந்த சந்தோஷத்தையும் தாண்டி அந்த டாக்டர் முகம்தான் தெரிந்தது. கடவுள் அவர்.

இன்னொரு சம்பவம்- நிகழ்ந்து நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. அப்பா காரை ஓட்டிச் சென்று மரத்தில் அடித்துவிட்டார். கால் முறிந்துவிட்டது. நெஞ்சிலும் இரண்டு எலும்புகளில் முறிவு. நிறைய ரத்தச் சேதம். தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள். பதறிக் கொண்டே சென்றேன். உடனடியாக அறுவைசிகிச்சை அரங்குக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்கு அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொருவராக பெயரைச் சொல்லி அழைக்கிறார். சப்தமே வெளியில் வரவில்லை. அதற்கு மேல் பேச முடியவில்லை. கண்களில் தாரை தாரையாக தண்ணீர் கொட்டுகிறது. ஏழெட்டு மணி நேரங்கள் அறுவை சிகிச்சை நடத்தி வெளியே கொண்டு வந்தார்கள். ‘இனி ஒன்றும் பிரச்சினையில்லை’ என்று அந்த மருத்துவர் சொன்னது வேதவாக்கு.

சொல்லிக் கொண்டே போகலாம். 

ஏதாவதொரு பெரிய மருத்துவமனையின் ஐ.சி.யூவிற்கு முன்பாக மூன்று மணி நேரம் நின்றிருந்தால் போதும். ஒரு உயிரின் மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம். குழந்தையை உள்ளே படுக்க வைத்துக் கொண்டு வெளியில் கதறிக் கொண்டிருக்கும் தாய், லாரிச் சக்கரத்தின் அடியிலிருந்து மீட்கப்பட்ட கணவனுக்காக தனது குழந்தைகளோடு வெளியில் அழுது கொண்டிருக்கும் மனைவி என ஒவ்வொருவருக்குமே அந்த அறை கோவில். உள்ளே சென்று வெளியே வந்து கொண்டிருக்கும் மருத்துவர்கள் தெய்வங்கள்.

இங்கு யாருக்குத்தான் மருத்துவர்களோடு மறக்க முடியாத அனுபவம் இல்லை? ஏதாவதொரு சமயத்தில் மிகப்பெரிய இக்கட்டிலிருந்து மருத்துவர்கள்தான் நம்மை காப்பாற்றியிருப்பார்கள்.

நானும்தான் மருத்துவர்களை விமர்சித்திருக்கிறேன். இல்லயென்று சொல்லவில்லை. சில மருத்துவர்கள் நம்மை ஏதோ விறகுக் கட்டையைப் பார்ப்பது போல பார்க்கும் போதும், ‘ஐடியில் வேலை செய்யறீங்களா?’என்று வேலையைத் தெரிந்து கொண்டும் நூறு ரூபாயைச் சேர்த்து வாங்கும் போதும் எரிச்சல் வரத்தான் செய்யும். காலங்காலமாக இருக்கும் வாய்ப்புண்ணுக்கு ‘இது ஹெர்ப்பிஸ் என்கிற பால்வினை நோய்’ என்று சொல்லி  பரிசோதனை செய்யச் சொன்னார்கள். ரிசல்ட் வரும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது ஹெர்ப்பிஸ் இல்லை என்று தெரிந்த பிறகு ‘என்னைத் தேவையில்லாமல் பரிசோதனை எடுக்கச் சொல்லிவிட்டார்கள்’ என்று திட்டினேன். எப்பொழுதுமே ரிசல்ட் நெகடிவ்வாக இருந்தால் நமக்கு அசட்டுத் தைரியம் வந்துவிடும் ‘அந்த நோயெல்லாம் எனக்கு வராதுன்னு தெரியும்...கமிஷனுக்கு வேண்டி டெஸ்ட் செய்யச் சொல்லிட்டான்’ என்று திட்டுவோம். ஒருவேளை ரிஸல்ட் பாஸிட்டிவாக இருந்துவிட்டால் நம்முடைய தொனி ஒட்டுமொத்தமாக மாறியிருக்கும்.

அதற்காக அனைத்து மருத்துவர்களுமே நல்லவர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஸ்கேன் எடுப்பதற்கு நோயாளியை அனுப்பிவிட்டு ஸ்கேன் செண்டரில் கமிஷன் வாங்காத மருத்துவர்களே இல்லை என்று சொல்ல முடியுமா? மருந்துக்கடையில் தனக்கான பங்கை வாங்காத மருத்துவர்களே இல்லையென்று நிரூபிக்க முடியுமா? நகரங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேலாக குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரை ஃபோனில் பிடித்துவிடுங்கள் பார்க்கலாம். ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக தம்பியின் மகன் கட்டிலிலிருந்து விழுந்துவிட்டான். மூக்கில் ரத்தம் கொட்டுகிறது. வண்டியை எடுத்துக் கொண்டு சுற்றுகிறோம் ஒரு மருத்துவரைப் பிடிக்க முடியவில்லை. வழக்கமாகச் செல்லும் குழந்தைகள் நல மருத்துவர் ஃபோனையே எடுக்கவில்லை. வீட்டுக்கு முன்பாக நின்று அழைப்பு மணியை அடித்தால் கதவு திறக்கப்படவே இல்லை. 

அடுத்த முறை சென்ற போது அவரிடம் ‘அது எமர்ஜென்ஸி’ என்றேன். ‘ஆமாம்..ஆனால் எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்ல’ என்றார். அவர் சொல்வதும் சரிதான். ஆனால் ரத்தம் நின்றுவிட்டதால் பிரச்சினையில்லை. ஒருவேளை விபரீதம் ஆகியிருந்தால்? பத்து மணிக்கு யாரோ அழைக்கிறார்கள் என்றால் அது அவசரமாகத்தானே இருக்கும்? அதைக் கூடவா அந்த மருத்துவரால் புரிந்து கொள்ள முடியாது?  ‘அவர் ஒருவர்தான் மருத்துவரா? பெங்களூரில் வேறு மருத்துவமனைகளே இல்லையா? ஏன் அவரிடம் சென்றீர்கள்’ என்று கேட்கலாம்தான். ஆனால் அவர்தான் ரெகுலர் மருத்துவர். சளி காய்ச்சலுக்கெல்லாம் அவரிடமே செல்கிறோம். அதனால் இது போன்றதொரு அவசரத்திற்கு நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கையில்தான் ஓடினோம். காலை வாரிவிட்டார். 

இப்படியும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான மருத்துவர்களிடம் ஒரு நாளைக்கு நாற்பது டோக்கன்கள்தான். அதற்கு மேலாக யாரையும் பார்க்க முடியாது என்றால் பார்க்க முடியாதுதான். இதுதான் நிதர்சனம். ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதை விட்டுவிட்டு இருக்கிற அத்தனை மருத்துவர்களுமே சேவை மனப்பான்மையோடு இருபத்து நான்கு மணி நேரமும் நோயாளிகளுக்காகவே வாழ்கிறார்கள் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம்.

ஒரு முறை பைக்கை எடுத்துக் கொண்டு போன போது எதிரில் வந்த குடிகாரரின் மீது மோதிவிட்டேன். கீழே விழுந்து முன்மண்டை கிழிந்து ரத்தம் ஒழுகுகிறது. மணி எட்டரை இருக்கும். மூன்று மருத்துவர்கள் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். ஒருவர் கிளம்பிக் கொண்டிருந்தார். இன்னொருவர் விபத்து என்றால் பார்க்க முடியாது என்றார். இன்னொருவர் வேறொரு காரணம் சொன்னார். கடைசியில் ஒரு மருத்துவர் கட்டுப்போட்டு உதவினார். அவர் நான்காவது மருத்துவர். ஒருவராவது உதவும் மனநிலையில் இருந்தார். இதுதான் உண்மை.

எந்தத் தொழிலில்தான் அத்தனை பேரும் புனிதமானவர்கள்? அத்தனை ஆசிரியர்களுமே சமூகத்துக்காக தங்களை அர்பணிக்கிறார்களா? ஒவ்வொரு பொறியாளனுமே சமரசம் செய்து கொள்ளாமல் திட்டமிடுகிறானா? எத்தனை வழக்கறிஞர்கள் நேர்மையானவர்கள்? மக்கள் குறித்த சிந்தனையோடு எத்தனை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்? பத்திரிக்கையாளர்கள் அத்தனை பேருமே உணமையிலேயே தூண்களாக இருக்கிறார்களா என்ன?

இங்கு கிட்டத்தட்ட அத்தனை பேருமே பிழைப்புவாதிகள்தான். நமது மொத்தச் சமூகமும் கறையேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் அசிங்கம் நிரம்பிக் கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் திருடர்கள்தான். பரஸ்பர நம்பிக்கை சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. பணமே பிரதானம். இந்த லட்சணத்தில் மருத்துவர்கள் மட்டும் புனிதமானவர்களாக இருக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம்? எம்.டி படிக்க மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு இரண்டரைக் கோடி கொடுக்கிறார்கள். படித்து முடித்து வந்த பிறகு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரத்தானே செய்யும்?

வளர்ச்சி, வருமானம் என்ற ஓட்டத்தில் சமூகம் புரண்டு கொண்டிருக்கும் போது இதெல்லாம்தான் மனித இயல்பு. எவன் எப்படிப் போனால் எனக்கென்ன? நமக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? என்ற சிந்தனைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு மனிதனிடமும் குடி கொள்ளும் மனித பண்புகளாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி மனிதாபிமானத்தோடும் மனிதர்கள் இருக்கிறார்கள். அதில் சில மருத்துவர்களும் இருக்கிறார்கள். இந்த அளவில் நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். அதையெல்லாம் விட்டுவிட்டு ‘தொண்ணூற்றொன்பது சதவீத மருத்துவர்கள் புனிதர்கள்’ என்று மருத்துவர்கள் சொல்வதிலும் உண்மையில்லை. கோட் சூட் போட்டுக் கொண்டு ‘மருத்துவர்கள் என்றாலே கொள்ளையர்கள்’ என்று யோக்கியபுத்திரன் போல பேசுவதற்கு நமக்கும் தகுதியில்லை.

ஃபுல் ஸ்டாப்.