Jul 25, 2014

முடியுமா? முடியாதா?

ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு கல்லூரியிலிருந்து அழைத்திருந்தார்கள். மாணவர்களிடம் பேச வேண்டும் என்றார்கள். டெக்னிக்கல் சமாச்சாரம்தான். வாரத்தில் நடுவில் ஒரு நாள் வரச் சொல்லியிருந்தார்கள். அலுவலகத்தில் விடுப்பு கேட்க வேண்டும். வீட்டில் அனுமதி கேட்க வேண்டும் போன்ற சிக்கல்கள் இருந்ததால் ‘நாளை உறுதி செய்கிறேன்’ என்று அழைத்தவரிடம் சொல்லியிருந்தேன். அலுவலகத்தில் விடுப்பு வாங்குவதில் சிரமம் இருக்காது. இன்னொரு இலாகாதான் சிக்கல். இருந்தாலும் எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தயாரிப்புகளை ஆரம்பித்துவிட்டேன். ஐந்தாறு பவர்பாய்ண்ட் சறுக்குகளை முடித்திருந்தேன். அன்றிரவே இன்னும் பதினைந்து சறுக்குகள்(Slide). வேலை முடிந்துவிட்டது. இன்னும் சில விவரங்களை சேர்த்தால் அவர்கள் சொல்லியபடி இருபத்தைந்திலிருந்து நாற்பது நிமிடங்கள் வரை பேசிவிடலாம். அதே சமயத்தில் இரண்டு பக்கமும் அனுமதி வாங்கியாகிவிட்டது. இனி கல்லூரியிலிருந்து அழைத்தால் உறுதிப்படுத்திவிடலாம். அடுத்த நாள் அழைப்பு வரும் என்று காத்திருந்ததுதான் மிச்சம். ம்ஹூம்.

நாமாகவே அழைத்தால் நன்றாக இருக்காது அல்லவா? ரொட்டித்துண்டுக்கு அலைகிறான் என்று நினைத்துவிடுவார்களே என பம்மிக் கொண்டிருந்தேன். இருந்தாலும் மாலை வரை பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் அழைத்தேன். தொலைபேசி சிணுங்கிக் கொண்டேயிருக்கிறது ஆனால் பதிலைக் காணவில்லை. சரி என்று கொஞ்ச நேரம் விட்டு ஏழு மணிக்கு அழைத்தால் அப்பொழுதும் பதிலைக் காணவில்லை. எட்டு மணிக்கு அழைத்தால் காத்திருப்புக்குச் செல்கிறது- அப்படியானால் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திரும்ப அழைக்கவில்லை. இனி நாமாகவே அழைப்பது மரியாதையாக இருக்காது என்று விட்டுவிட்டேன். 

அவ்வளவுதான்.

பிரச்சினை என்னவென்றால் ‘நாளை சொல்கிறேன்’ என்று சொன்னதை நம்பாமல் உடனடியாக வேறு ஒருவரை அழைத்துக் கொண்டார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் வேறொருவரை அழைத்துக் கொண்டதைச் சொல்லியிருக்கலாம் அல்லவா? சொல்லவில்லை. ‘நீங்க வேண்டாம்’ என்பதை எப்படி முகத்தில் அறையாமல் சொல்வது என்று பெரும்பாலானோரைப் போலவே அவர்களுக்கும் தெரியவில்லை.

இன்னொரு சம்பவம். 

நிசப்தம் அறக்கட்டளைக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்க விண்ணப்பங்களை வங்கியில் கொடுத்திருந்தேன். ஆக்ஸிஸ் வங்கியில். நான்கு நாட்களில் கணக்கு எண் கிடைத்துவிடும் என்றார்கள். ஆறு நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. எட்டு நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. நானாக அழைத்த போது ‘பத்து நிமிடத்தில் நிலவரம் சொல்கிறேன் சார்’ என்றார். அவ்வளவுதான். இன்னும் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆளை தொலைபேசியில் கூட பிடிக்க முடியவில்லை. இந்த வாரம் சனிக்கிழமை நேரடியாகச் செல்ல வேண்டும். ‘வேலையை முடிக்க முடியவில்லை’ என்பதை எப்படிச் சொல்வது என்று எல்லோரையும் போலவே அவருக்கும் தெரியவில்லை. அதுதான் பிரச்சினை.

இதே அறக்கட்டளை விவகாரம்தான். முன்பொரு பட்டயக்கணக்கரிடம் விசாரித்திருந்தேன். எவ்வளவு செலவு ஆகும் என்ற போது ‘பத்தாயிரம் ரூபாய்’என்றார். அது சற்று பெரிய தொகையாகத் தெரிந்தது. அதனால் வேறொரு கணக்கரிடம் விசாரிக்கத் தொடங்கியிருந்தேன். அந்தச் சமயத்தில் ‘பணம் பற்றி பிரச்சினையில்லை நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று முதல் கணக்கர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு என்ன பதிலை அனுப்புவது என்று தெரியவில்லை. அமைதியாக இருந்துவிட்டேன். ‘வேறொரு ஆடிட்டரிடம் செல்கிறேன்’ என்பதை எனக்கு நாசூக்காகச் சொல்லத் தெரியவில்லை.

பெரும்பாலானோருக்கு இந்தப் பிரச்சினை உண்டு. ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் தெரியுமே. அடுத்த முறை நம் ஃபோனையே எடுக்க மாட்டார்கள். அதே போல யாரிடமாவது ஒரு உதவி கேட்கிறோம் என்று வையுங்கள். அவரால் செய்ய முடியவில்லை என்றால் அடுத்த முறை ஆன்லைனிலேயே இருப்பார். என்ன கேள்வி கேட்டாலும் பதிலே வராது. ‘இல்லை’ என்பதை எப்படிச் சொல்வது என்ற குழப்பம்தான். 

மேற்சொன்ன பிரச்சினைகள் எல்லாமும் ஒரே வகையறாதான். எதிர்மறையான பதில்களை எப்படிச் சொல்வது என்ற வகையறா.

‘செய்ய முடியாது’ என்று சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அடுத்தவர்களின் முகம் கோணாமல் இதைச் சொல்வது ஒரு கலை. 'Firm but polite NO' என்பார்கள். உறுதியாக அதே சமயம் சிரித்துக் கொண்டே ‘இல்லை’ என்பது. ஆனால் அதன் அடிப்படை கூட நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

நம்மைக் குறை சொல்லி என்ன செய்வது? நம் வளர்ப்பு முறை அப்படி. பெரியவர்கள் சொன்னால் தட்டக் கூடாது என்று சிறுவயதிலிருந்தே பழக்கி வைத்துவிடுகிறார்கள். வாசுகி அம்மையார் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாராம். திருவள்ளுவர் ‘வாசுகி’ என்று அழைத்திருக்கிறார். கி’ என்று முடிப்பதற்குள்ளேயே வாசுகி அம்மையார் வள்ளுவப்பெருந்தகையின் முன்பாக நின்றாராம். குடத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை. கயிற்றைப் பற்றியும் கவலைப்படவில்லை. இதைத்தான் நீதி போதனையாகச் சொல்லி நம்மை வளர்த்திருக்கிறார்கள். பெரியவர்கள் என்ன சொன்னாலும் மறுக்காமல் செய்து முடிக்க வேண்டும். நாம் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்கிற வளர்ப்பு.

இதே மனநிலையோடு வளர்ந்து பிறகு யார் எதைச் சொன்னாலும் எப்படி மறுப்பது என்பதே தெரியாமல் விழி பிதுங்குகிறோம். அப்படியேதான் வேலைக்குச் சேர்கிறோம். முதலாளியோ, மேனேஜரோ என்ன வேலை கொடுத்தாலும் ‘செய்யறேன் சார்’ என்று வாங்கி வைத்துக் கொள்வோம். ஏற்கனவே என்ன வேலை இருக்கிறது என்பது பற்றியெல்லாம் கவலை இல்லை. வாங்கி குவித்துக் கொள்வோம். பிறகு என்ன கெட்டபெயர் வந்தாலும் தலையைக் குனிந்து கொண்டு நிற்க வேண்டியதுதான்.

தெரிந்தவர்களும் நண்பர்களும் ஒரு உதவி கேட்டால் அது நம்மால் முடியாது என்றாலும் கூட ‘முயற்சிக்கிறேன்’ என்று வாங்கிக் வைத்துக் கொள்வதுதான் கெட்ட பெயர் வாங்குவதற்கு முதற்காரணம். அடுத்த முறை நம்மால் செய்ய முடியக் கூடிய உதவிக்குக் கூட நம்மை அணுகமாட்டார்கள். ‘அவன் செய்ய மாட்டான்ப்பா’ என்று பத்து பேரிடம் சொல்லியும் வைப்பார்கள்.

அதே போலத்தான் யாராவது பணம் கேட்கும் போது இல்லை என்றால் இல்லை என்பதனை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அதோடு போய்விடும். ‘நாளைக்குச் சொல்லுறேன்’ என்று சொல்லிவிட்டு அவருக்கு பணமும் தராமல் அவரது ஃபோனையும் எடுக்காமல் இழுத்தடித்தால் மொத்த நட்பும் நாசமாகிவிடும்.

இதெல்லாம் எல்லோருக்குமே தெரிந்த பிரச்சினைகள்தான். தீர்வு என்ன?

முடியவில்லை என்றால் முடியாது என்பதை முதலிலேயே நாசூக்காகச் சொல்லிப் பழக வேண்டும். கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால் பழகிவிடலாம். 

இத்தனை நாட்கள் அலுவலகத்தில் நாயாக உழைத்துவிட்டு திடீரென்று முடியாது என்றால் தவறாக எடுத்துக் கொள்வார்கள். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அமுல்படுத்த வேண்டும்.  இவ்வளவு நாட்களாக கேட்பதற்கெல்லாம் ‘சரி’ என்று சொல்லிவிட்டு இப்பொழுது ‘கஷ்டம்’ என்றால் நண்பர்களும் தவறாக புரிந்து கொள்வார்கள். முடியாது என்பதை நேரடியாகச் சொல்லாமல் நமக்கு வேறு என்னென்ன சிக்கல்களும் வேலைப்பளுவும் இருக்கின்றன என்பதனை புரிய வைக்க வேண்டும். 

முதலில் ‘முடியாது’ என்பதை நேக்காக மின்னஞ்சலில் சொல்லிப் பார்க்கலாம். குறுஞ்செய்தியிலும் பழகலாம். பிறகு தொலைபேசியில் இதை பயிற்சி செய்யலாம். இதில் எல்லாம் வெற்றி பெற்ற பிறகு கடைசியில் முகத்துக்கு நேராக சிரித்துக் கொண்டே சொல்லலாம். 

சம்பள உயர்வு கேட்கும் போது மேனேஜர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் இந்த சூட்சமம் பிடிபட்டுவிடும். பல்லை இளித்துக் கொண்டே இல்லை என்பார்கள். நம்மால் எந்தக் கேள்வியும் எதிர்த்துக் கேட்க முடியாதபடிக்கான இளிப்பாக இருக்கும். 

ஆனால் ஒன்று- இதெல்லாம் பயிற்சியில்தான் வரும். எடுத்த உடனே ரிசல்ட் எதிர்பார்க்க முடியாது. 

என்னதான் பயிற்சி இருந்தாலும் வெளியிலும் அலுவலகத்திலும் வென்றுவிடலாம். அதுவே வீட்டிலிருந்து ‘பப்பாளி வாங்கிட்டு வாங்க’ என்று வரும் உத்தரவுக்கு முடியாது என்று சொல்ல முயற்சித்து நீங்கள் மண்டையை உடைத்துக் கொண்டால் கம்பெனி நிர்வாகம் பொறுப்பாகாது.