Jul 7, 2014

ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும்

அலுவலகத்தில் ஒரு மேனேஜர் இருக்கிறார். வடக்கத்திக்காரர். தமிழ் தெரியும். திருச்சியில் கல்லூரிப்படிப்பை படித்த எஃபெக்ட். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேறொரு நிறுவனத்தில் ஒன்றரை வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். பிறகு நிறுவனம் மாறியவர் படபடவென மேலேறி இப்பொழுது முதுநிலை மேலாளர் ஆகிவிட்டார். சொம்படித்து ஆனார், பின்வாசல் வழியாக வந்தார் என்றெல்லாம் சிறுமைப்படுத்தி விட முடியாது. சின்சியர் சிந்தாமணி. பொழுது விடிந்ததும் அலுவலகம் வந்தார் என்றால் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் மூட்டையைக் கட்டுவார். இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமில்லை வேறு எந்த இணையத்தளத்தையும் திறந்து வைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் என்ன வேலை செய்கிறார் என்பதை மோப்பம் பிடிக்கவே அடிக்கடி அருகில் செல்வேன். ஏமாந்ததுதான் மிச்சம். எப்பொழுதும் வேலை வேலை என்று கம்யூட்டரைத்தான் வைப்பாட்டியாக வைத்திருக்கிறார்.

Hard working மட்டும் இல்லை- ஸ்மார்ட் வொர்க்கிங்கும் கூட. இப்படியான ஆட்களைத்தான் நிறுவனங்களுக்கு பிடித்துப் போகும். கையைப் பிடித்து மேலே இழுத்துவிட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்படித்தான் இழுத்துவிட்டார்கள். ஆனால் ஒன்று- வெறும் வேலை மட்டும் ஆட்களை தூக்கிவிடுவதில்லை. பேசத் தெரிய வேண்டும். வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றி யானை வாய்க்குள் கொடுக்கத் தெரிய வேண்டும். அது தொண்டையில் சிக்கித் திணறும் போது நேக்காக வாய்க்குள் கையை விட்டு வெளியே எடுக்கவும் தெரிய வேண்டும். இந்த மொத்தக் காரியத்தையும் மேனேஜர் பேச்சிலேயே செய்து முடிப்பார். அது முக்கியம்.

எந்தப் பிரச்சினை என்றாலும் அதைத் தீர்ப்பவர் மட்டும் இல்லை- பிரச்சினையே இல்லையென்றாலும் கூட ஒரு பிரச்சினையை உருவாக்கி அதைத் தீர்த்து வைப்பார். உலகம் தன்னை மையப்புள்ளியாக வைத்துக் கொண்டு சுழல வேண்டும் என்பதில் அத்தனை சிரத்தை அவருக்கு. ஏதாவது சிக்கலான விவகாரம் என்றால் அவரைத்தான் பேசவிடுவார்கள். அவர் பேச ஆரம்பித்தால் மற்றவர்கள் பாட்டுக் கேட்கத் துவங்கலாம். அவரே சமாளித்துக் கொள்வார். இதையெல்லாம்தான் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பேன். ஆனால் அவரளவுக்கு 'focussed' ஆக என்னால் இருக்க முடியும் என்று தோன்றவில்லை.  கவனச்சிதறலுக்கு நமக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆயிரம் வழிகள் இருக்கின்றன. 

இத்தனை பலவானான அந்த மனிதருக்கு வயது ஐம்பதைத் தொட்டிருக்கும் என்று யோசிக்க வேண்டாம். வெறும் முப்பத்தி மூன்றுதான். என்னைவிடவும் ஒரு வருடம்தான் மூத்தவர். அவர் 2002 ஆம் ஆண்டு பொறியியல் முடித்தார். நான் அடுத்த வருடம். ஒரு வயதுதான் வித்தியாசம் என்றாலும் எனக்கும் அவருக்கும் ஏணி என்ன எஸ்கலேட்டரே வைத்தாலும் எட்டாது. அவர் ஆளும் சரி; பேச்சுவார்த்தையும் சரி- யாராலும் கணிக்க முடியாது. 

ஓவர் பில்ட் அப்பாக இருக்கிறதா? இதுதான் நிஜம். மனிதர் பட்டையைக் கிளப்புகிறார். இந்த குணமெல்லாம் பிறப்பிலேயே இருக்கும் என்று விட்டுவிட முடியாது. பயிற்சிதான். ஒவ்வொரு நடவடிக்கையிலும் பயிற்சி. ஒரு மின்னஞ்சல் அனுப்புவதாக இருந்தாலும் கூட நான்கு முறை திருத்தி அனுப்புவார். அவருடைய அணியில் ஒரு வருடம் இருந்தேன். அருகில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமா என்று பார்க்கும் மனிதர் அவர். 

கார்பொரேட் தலைவர்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். ஹார்வார்ட் பல்கலைக்கழகமும், ஐ.ஐ.எம்களும் பயிற்சி கொடுத்து தலைவர்களை உருவாக்குகிறார்கள். இந்த மேனஜரைப் போன்றவர்கள் தாங்களே கற்று தலைவராக பரிணமிக்கிறார்கள். 

ஒரு பெரிய பிரச்சினையைத் தீர்த்து முடிப்பவர்தான் தலைவராக முடியும் என்பதில்லை. ஒரு பெரிய பிரச்சினையை சிறு சிறு பிரச்சினைகளாக உடைக்கத் தெரிந்தால் போதும். பாதி வெற்றியை அடைந்த மாதிரிதான். உடைக்கப்பட்ட சிறு சிறு பிரச்சினைகளை தகுதியான ஆட்களிடம் கொடுத்தால் அவர்கள் தீர்த்துவிடுவார்கள். தீர்க்கப்பட்ட எல்லாத் தீர்வுகளையும் சேர்த்தால் பெரிய பிரச்சினைக்கான தீர்வு கிடைத்திருக்கும். இந்த மேனேஜர் அப்படியானவர்தான். இப்படியான ஆட்களிடம் வேலை செய்கிறோமோ இல்லையோ சற்று கவனித்துக் கொண்டிருந்தாலே கூட நாமும் கற்றுக் கொள்ள முடியும்.

வெயிட்டீஸ். எதற்கு இந்த மேனேஜர் புராணம்? காரணம் இருக்கிறது.

ஏற்கனவே இங்கு டைரக்டராக இருந்தவர் வேறொரு பக்கம் சென்றுவிட்டார். இப்பொழுது இடம் காலியாக இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஒரு வெள்ளையர்தான் நிர்வகித்து வருகிறார். டைரக்டர் என்றால் சற்று குடைச்சலான வேலைதான். என்ன பிரச்சினை என்றாலும் அவர் தலையில்தான் விழும். அதனால் இங்கேயே ஒரு ஆள் இருந்து நிர்வகிப்பதுதான் சாலச் சிறந்தது. அமெரிக்க டைரக்டர் சென்ற வாரம் வந்திருந்தார். இங்கேயே ஆள் பிடிக்க முடியுமா என்பதுதான் அவரது வருகையின் நோக்கம். வெளியாட்கள் கூட நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். நிறுவனத்திலேயே பணியாற்றுபவர்களும் கூட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த மேனேஜரும் பட்டியலில் அடக்கம்.

ஒன்றரை மணி நேர நேர்காணல் அது. ஆறேழு பேர்கள் அமர்ந்து கேள்விகளை வீசியிருக்கிறார்கள். இவர் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அந்த வெள்ளையர் அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் அனுப்பினாராம் ‘I've never seen such an organized man' என்று. கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. வாழ்த்துச் சொன்னேன்.  தம் அடிக்கச் செல்லும் போது அழைத்துச் சென்றார். வழக்கமான பேச்சுத்தான். தம்மை உறிஞ்சிவிட்டு திரும்ப வரும் போது நேர்காணல் பற்றி சொன்னார். பெரும்பாலும் நிறைய சூழல்களைச் சொல்லி அதில் எப்படி செயல்படுவாய் என்றுதான் கேட்டிருக்கிறார்கள். ‘நாற்பது பேர் இருக்கும் டீமில் இரண்டு பேர் மட்டும் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வாய்?’ ‘ஒரு மேனஜரைப் பற்றி புகார் கடிதங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. எப்படி சமாளிப்பாய்?’ என்கிற ரீதியிலான கேள்விகள்.

அத்தனை கேள்விகளுக்கும் ஒரே டெக்னிக்கைத்தான் பயன்படுத்தினாராம். win-win. அவனை தண்டிப்பேன்; இவனை பழி வாங்குவேன் என்கிற ரீதியில் எந்த பதிலுமே இல்லை. எதுவாக இருந்தாலும் அவனும் வெல்ல வேண்டும்; நானும் வெல்ல வேண்டும் என்கிற மனநிலையிலேயே பதில்களைச் சொல்லியிருக்கிறார். ஒரு இடத்திலும் கூட நெகட்டிவிட்டியைக் காட்டாததுதான் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன் என்றார். உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. நான்கு பத்திகளில் ஒரு கதையைச் சொன்னால் ஒரு எதிர்மறையான விஷயம் வந்துவிடுகிறது. ஒன்றரை மணி நேர நேர்காணலில் துளி நெகட்டிவிட்டி கூட இல்லாமல் பேசுவது சாதாரணமாக வந்துவிடாது. ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். காதுக்குள் வாங்கிக் கொண்டேன்.

இடத்துக்கு வரும் போது சொன்னார். ‘Always be positive. it will give whatever you want'. சிரித்துக் கொண்டேன். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவனவன் நாற்பத்தைந்து வயதில் முக்கிக் கொண்டிருக்கிறான். இவர் முப்பத்து மூன்று வயதில் டைரக்டர் ஆகிறார்- அதுவும் சொந்த முயற்சியில். அவரிடம் பேசிவிட்டு வந்து கணினித்திரையைப் பார்த்தேன். முதன் முதலாக பார்ப்பது போல இருந்தது. அவ்வளவு Fresh.