Jul 4, 2014

உனக்கு என்ன அருகதை?

அன்பு மணி,

WMD பூச்சாண்டிக் காட்டி அமெரிக்கா படையெடுத்த ஆரம்ப நாள்கள். என் சக உழியன் - அமெரிக்கன் - சொன்னான். “என்ன வேணாலும் பண்ணட்டும். எனக்கு gas (பெட்ரோல்) சகாய விலையில் கிடைக்கணும்” நான் அவன் முகத்தைப் பார்த்து பேச்சற்றுப் போய் நின்ற செய்தி இங்கு எதற்கு என்பதைப் பிறகு தொடர்கிறேன். 

அதற்குமுன் -

எது வெற்றியில் தென்பட்ட தங்களின் கவலையும் ஈராக்கில் சுடப்பட்டு சாவும் அப்பாவி முஸ்லிம் ஆடுகளையும் பார்த்து தாங்கள் வடிக்கும் கண்ணீரும் தங்களது பிம்பத்தைப் பெருமளவு உடைக்கின்றன.

Robert Fisk என்றொரு பத்திரிகையாளர். அறிந்திருப்பீர்கள். மத்திய கிழக்கு அரசியல்தான் அந்த ஐயாவின் ஏரியா. அந்த ஆயிலில் மூழ்கிக் கிடப்பவர். கட்டுரைகள் அருமையாக இருக்கும். அவரது If history and petropolitics... என்ற கட்டுரையில்... And has everyone forgotten – for not a soul mentioned this yesterday – that this was the scene of the most infamous US war crime in Iraq, the massacre by US marines of 24 unarmed men, women and children in November 2005, a slaughter supposedly carried out in revenge for the killing of a marine in the town என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படியான ஒரு நிகழ்வு உங்களுக்குத் தெரியுமா மணி?  இலட்ச ரூபாய்க்கு - வெறும் நூறு ஆயிரம் ரூபாய்க்கு - ஆப்கனில் உள்ள அப்பாவி முஸ்லிம் ஆடுகளுக்கு ரேட் நிர்ணயிக்கப்பட்ட கதை தெரியுமா மணி? வெளிவந்தது நூறு, வெளிவராதது ஆயிரம் என்று இத்தகைய நிகழ்வுகள் ஏராளம். அவற்றையெல்லாம் தேடித் தேடிப் படித்திருக்கிறர்களா?

போகட்டும்.

கோத்ரா 59 = குஜராத் 2000 "பழிவாங்கல்" சரியானதே என்ற வன்மம் இணையம் முழுவதும் பரவிய போதும் கருப்பையில் வளர்ந்து கொண்டிருந்த குழந்தையை வெட்டிக் கொன்று தீயிலிட்டுக் கரிக்கட்டையாக்கிய போதும் பிஸியாக இருந்தீர்களா? அவர்களெல்லாம் அப்பாவி ஆடுகளில்லையா? ஏதோ ஒரு குழந்தையின் கழுத்தில் வைக்கப்படும் துப்பாக்கியின் நுனி நம் வீட்டு குழந்தையின் கழுத்தைத் தொடுவதற்கு வெகுநாட்கள் ஆகிவிடாது. எங்கேயோ தலை சிதறிச் சாவும் பெண்ணின் நிலைமை நம் வீட்டுப் பெண்களுக்கு நிகழும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று எழுதுகிறீர்கள். காந்தி பிறந்த மண்ணில் அப்பாவி முஸ்லிம் ஆடுகள்மீது அரசாங்கம் முன்நின்று நடத்திய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட செய்திகளையெல்லாம் படித்துவிட்டு யார் வீட்டுக் குடிசையோ பற்றி எரிகிறது என்று கிடந்த தங்களுக்கு இன்று எப்படி கண்ணீரும் கவலையும்? 

நிகழ்த்தப்படுவது வன்முறையாக இருந்தால் கண்களை மூடிக் கொண்டு எதிர்க்கத் துவங்குவோம். அப்பாவிகளைக் கொன்றுதான் அந்தச் சித்தாந்தம் வெற்றியடைய வேண்டுமானால் அந்தச் சித்தாந்தம் வெற்றியடையவே தேவையில்லை என்ற மனநிலை நமக்கு வர வேண்டும். ஆனால் அவர்களை எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவர்களை ஆதரிப்பதை நிறுத்துவோம் என்றெல்லாம் எழுதுகிறீர்கள். நன்று. காந்தி பிறந்த மண்ணில் நிகழ்ந்த கொடுமைகளை நீங்கள் எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. அதை முன்நின்று நடத்தியவர்களை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்தல்லவா எழுதினீர்கள்? உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் குஜராத் முஸ்லிம் ஆடுகளுக்கு ஏற்பட்ட கதி ஏற்படாது என்ற நம்பிக்கை அந்த எழுத்துக்கெல்லாம் காரணமோ?

தனக்கு வந்தால்தான் தெரியும் தலை வலியும் திருகு வலியும் என்பது வெறும் பழமொழி மட்டுமன்று மணி. ‘இப்போ ஆதரிக்கிறேன். வந்த பிறகு தப்பு செஞ்சா என்ன செய்வேன்? திட்டி எழுதுவேன்’ என்று அன்று எழுதினீர்கள். இப்பொழுது after all உங்களது கார், பைக் டேங்கிற்கும் கிச்சன் சிலிண்டருக்கும் ஆப்பு வந்ததுமே ‘வாயில் சாணி கரைச்சு ஊத்தப்போறானோ இந்த மனுசன்’ என்று வாயில் அடித்துக்கொள்ளாத குறைாக எழுதுகிறீர்கள்.

இப்பொழுது முதல் பத்திக்கு வருகிறேன். அந்த அமெரிக்கனுக்கும் உங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை மணி. இதுவரை பொறுமையுடன் இந்த மடலைத் தாங்கள் படித்திருந்தால் நன்றி.

அன்புடன்,
-நூருத்தீன்

                                                   ***

அன்பு நூருத்தீன், 

முட்டாள்களையும், முரடர்களையும் மிக எளிதில் எதிர்கொண்டுவிடலாம். எதையாவது பேசுவார்கள். அமைதியாக இருந்தால் போய்விடுவார்கள். மீறிப்போனால் கன்னத்தில் ஒரு அறை கொடுப்பார்கள். வாங்கிக் கொண்டால் அவர்களது வெறி அடங்கிவிடும். ஆனால் படித்து செட்டிலாகிவிட்டு மதத்தைத் தாண்டி வராமல் யோசிக்கும் உங்களைப் போன்றவர்களை சமாளிப்பதுதான் சிரமம் நூருத்தீன். 

அன்பு மணி என்று ஆரம்பித்து கத்தியைத் தொண்டைக்குழியில் இறக்கும் கடிதங்கள்தான் பதறச் செய்பவை. உங்களைக் குறை சொல்லவில்லை. ஆனால் மொத்தக் கடிதத்திலும் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரிகிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுவதை வெளிப்படையாக ஆதரிக்கிறீர்கள். இல்லையா? இந்தச் சம்பவத்தைப் பற்றி பேசுவதற்கு உனக்கு எந்த அருகதையும் இல்லை என்று சொல்வதற்காக இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள்.

அருகதையில்லாதவானகவே இருந்து கொள்கிறேன். சாலையில் போகும் பிச்சைக்காரனைப் பற்றியும், சென்னை பேருந்தில் தொலைந்து போன பையைப் பற்றியும் எழுதியபடியே கூட காலத்தை ஓட்டிவிடுவேன். எழுதாவிட்டாலும் கூட யார் குடியும் மூழ்கிவிடப் போவதில்லை. அதனால் இந்த விவகாரத்தைப் பற்றி பொதுவெளியில் பேசாமல் இருப்பதில் எனக்கு நட்டமில்லை. அடங்கிக் கொள்கிறேன். ஆனால் இவர்களுக்கு போராளிகள் என்று பெயர் சூட்டி ஆதரிக்கிறீர்கள் பார்த்தீர்களா? இந்த ஆதரவுதான் நடுக்கமூட்டுகிறது. 

ஈராக்கிலும், சிரியாவிலும் வேட்டையாடுபவர்கள் போராளிகளாகவே இருந்து கொள்ளட்டும். மொத்த பூமியிலும் தங்களுக்கு விருப்பமான கொடியை ஏற்றட்டும். எதிர்படும் ஒவ்வொரு மனிதனையும் மதம் மாற்றட்டும். எதிரி ராணுவத்தினரைக் கொல்லட்டும். அரசாங்கங்களைச் சாய்க்கட்டும். அதைப் போராட்டம் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஏன் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள்? குழந்தைகளைக் கொல்கிறார்கள். பெண்களைச் சுடுகிறார்கள். 

தயவு செய்து அவர்கள் அப்பாவிகளைக் கொல்லவில்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். Live Leak இணையத்தளத்தில் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களே படம்பிடித்த வீடியோக்கள்.

ஒரு வீடியோவைக் கூட முழுமையாகப் பார்க்க முடிவதில்லை. நள்ளிரவு தாண்டிய நேரங்களில் பார்த்துவிட்டால் தூக்கமே வருவதில்லை. எப்படி வரும்? கழுத்தை துண்டாக வெட்டியெடுத்து வெற்றிச் சின்னத்தைக் காட்டுகிறார்கள். புறமண்டையில் சுடும் போது ரத்தத் துளிகள் தெறிக்கின்றன. குண்டு பாய்ந்தவுடன் துளி சப்தமில்லாமல் ஒருவன் சரிவதை படுக்கையில் அமர்ந்து பார்த்துவிட்டு எப்படித் தூங்க முடியும்? 

இந்த விவகாரத்தைத்தான் பேசுகிறேன். இதையெல்லாம் எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை ஆதரிக்காமல் இருப்போம் என்கிறேன். நீங்கள் என்னைப் பார்த்து ‘உனக்குத் தகுதியே இல்லை’ என்கிறீர்கள். 

இருக்கட்டும்.

உங்களின் கடிதத்தை இரண்டே வரிகளில் சுருக்க முடியுமானால்-

1) அமெரிக்காக்காரன் கொல்லும் போது விட்டுவிட்டு இன்று இசுலாமியன் இன்னொரு இசுலாமியனைக் கொல்லும் போது ஏன் துள்ளுகிறாய்?

2) மோடியை ஆதரித்த நீ இன்று முஸ்லீம் கொல்லப்படும் போது பேசுவதற்கு என்ன யோக்கிதை இருக்கிறது?

சரி. 

‘நீ இதைப் பற்றி பேசாதே’ என்று அடக்கிவிட்டு நீங்கள் இவர்களை ஆதரிப்பதற்கான காரணங்களைச் சொல்ல முடியுமா? அவர்களை ஆதரிப்பதைக் கூட தவறு என்று சொல்லவில்லை. அவர்களின் செயல்களை ஆதரிக்கிறீர்கள் அல்லவா? என்ன காரணம்? தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். எனக்கு ஒரே காரணம்தான் தெரிகிறது- மதம்.

ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்- மோடியை நான் ஆதரித்ததற்கு மதம் துளி கூட காரணம் இல்லை. இந்த தேசம் முழுவதும் காவிக் கொடி பறக்கட்டும் என்பதற்காகவோ இந்த நாட்டில் இசுலாமியர்களும், கிறித்துவர்களும் துன்பப்படட்டும் என்பதற்காகவோ மோடிக்கு ஆதரவாக இருக்கவில்லை. இசுலாமியர்களுக்கு உலகின் பிற எந்த நாட்டைவிடவும் இந்தியா பாதுகாப்பானது என முழுமையாக நம்புகிறேன். மோடியைவிட மும்மடங்கு மதவாதி வந்தாலும் இங்கு இசுலாமியர்கள் நன்றாக வாழ்வார்கள் என நீங்களும் என்னைப் போலவே நம்பலாம்.

ராகுலைவிடவும், மம்தாவைவிடவும், ஜெயலலிதாவைவிடவும், முலாயமைவிடவும், மம்தாவைவிடவும் மோடியின் தலைமை நன்றாக இருக்கும் லட்சக்கணக்கானவர்களைப் போலவே நானும் நம்பினேன். மாஸ் சைக்காலஜி. ஆதரித்து எழுதினேன்.

வேறு எந்த விவகாரத்தைப் பேசினாலும் ‘நீ மோடியை ஆதரித்தாயே’ என்று கோர்த்துவிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள் நூருத்தீன். மோடிக்கும் எனக்கும் எந்தவித கொடுக்கல் வாங்கலும் இல்லை. அப்பொழுது நம்பினேன். ஆதரித்தேன். பிரதமர் ஆனார். இப்பொழுது விமர்சிக்க காரணங்கள் இருக்கின்றன. விமர்சிக்கிறேன். தேர்தலுக்கு முன்பாக ஆதரித்த காரணத்திற்காக இப்பொழுது அவர் என்ன செய்தாலும் ஆதரிக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? என்னளவில் ஹானஸ்டாகத்தான் இருக்கிறேன் நூருத்தீன். மதம், சாதி போன்ற எந்தச் சிக்கலும் எனக்கு இல்லை. முடிந்தவரை நேர்மையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறேன்.

உங்கள் கடிதத்தை தாண்டிவிட்டு போயிருக்க முடியும். தாருல் இஸ்லாம் குடும்பத்தின் மீதான மரியாதையின் காரணமாக இந்த விளக்கத்தை எழுதியிருக்கிறேன்.

தயவு செய்து கண்ணாடியை கழற்றிவிடுங்கள். 

மற்றபடி, கண்ணீர் வடிப்பதற்கும், நடிப்பதற்கும் எனக்கு எந்த அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. மோடியை ஆதரித்ததற்கும், சிரியாவிலும், ஈராக்கிலும் வேட்டையாடும் தீவிரவாதிகளை எதிர்ப்பதற்கும் எந்த தனிப்பட்ட காரணங்களும் இல்லை. மனதில் பட்டதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது பிம்பம் உடைகிறது என்பதற்காகவெல்லாம் என்னை Restrict செய்து கொள்ளப் போவதில்லை. எல்லாவற்றிலும் வழவழா கொழகொழாவாக இருந்து எதைச் சாதிக்கப் போகிறோம்? இது போன்ற சிக்கலான விவகாரங்களை வெளியில் பேசும் போது மூன்று பேர் பாராட்டினால் பன்னிரெண்டு பேர் அடிக்க வரத்தான் செய்வார்கள். 

நன்றி.