Jul 27, 2014

அடுத்தது என்ன?

நேற்று ராஜலிங்கம் அழைத்திருந்தார். அவரும் பெங்களூர்வாசிதான்.  நல்ல செய்தி இருப்பதாகச் சொன்னார். ‘என்ன சார்?’ என்றால் ‘பதிப்பகம் ஆரம்பிக்கிறேன்’ என்கிறார். அதை நல்ல செய்தி என்று இப்பொழுதே எப்படி முடிவு செய்தார் என்று தெரியவில்லை. எழுத்தாளர்களை பிடித்து, படைப்புகளை வாங்கி, வடிவைமப்பை முடித்து, அச்சடித்து, விற்று, இலாபம் எடுத்து, படைப்பாளர்கள் ராயல்டி கேட்டால் அதைக் கொடுத்து இல்லையென்றால் ‘உங்க புத்தகமே விக்கலையே’ என்று புருடா விட்டு.... மூச்சு வாங்குகிறது. இத்தனையும் ஒரே ஆளாகச் செய்யவிருக்கிறார். ஒரு வருடத்திற்குப் பிறகும் இதே மனநிலையில் இருந்தார் என்றால் தமிழுக்கு இன்னொரு பதிப்பகம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.

எழுத்தாளருக்கும் இப்படித்தான். முதல் புத்தகம் பதிப்பிக்கும் வரைக்கும் அதிதீவிர ஆசை இருக்கும். முதல் குழந்தையைப் பார்ப்பது போல. புத்தகம் வந்தவுடன் ‘இது பைசா பிரையோஜனமில்லாத வேலை’ என்று தோன்றும். அதன் பிறகு அந்த ஆசை அப்படியே வடிந்துவிடும். ஒரே புத்தகத்தோடு காணாமல் போன தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கு எடுப்பதற்கும் மக்கட்தொகையைக் கணக்கெடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. அத்தனை பேர் இருப்பார்கள். பதிப்பகமும் அப்படித்தான். இந்தத் தொழிலில் இருக்கும் சிக்கல்களை எல்லாம் பார்க்காத வரைக்கும் இது நல்ல தொழிலாகத் தெரியும். தலையை உள்ளே நீட்டினால் படார் படார் என்று அடி விழத் துவங்கும். தம் கட்டி தலையை நீட்டிக் கொண்டிருப்பவர்கள் மட்டும் பதிப்பாளர்களாக கோலோச்சுகிறார்கள். அடி பொறுக்க முடியாமல் தலையை இழுத்துக் கொள்பவர்கள் அவ்வளவுதான்.

ராஜலிங்கம் நேக்குத் தெரிந்த மனிதர். சமாளித்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. முக்கியமாக வெளிப்படையானவர். புத்தக லே-அவுட்டிலிருந்து அட்டை வடிவமைப்பு வரைக்கும் அவரே செய்கிறார். அதனால் அச்சு செலவு மட்டும்தான் செலவு. தாக்குப்பிடித்துவிட்டார் என்றால் நிறைய புத்தகங்களை கொண்டு வரும் வலுவுள்ளவர். ஒரு புதிய பதிப்பகம் வருவது வாசகர்களுக்கும் தமிழுக்கும் நல்லதுதானே? ஆனால் இங்கு தாக்குப் பிடிப்பதற்கு நேக்கும் நேர்மையும் மட்டும் போதாது. பார்க்கலாம்.

‘உங்க புத்தகத்தைக் கொண்டுவரலாமா?’ என்றார். உண்மையில் இந்த வருடம் புத்தகம் கொண்டு வருவதற்கான எந்த ஐடியாவும் இல்லாமல் இருந்தேன். ஒரு நாவல்தான் முயற்சியாக இருந்தது. முக்கால்வாசி முடித்து வைத்திருக்கிறேன். ஏனோ இறுதிப்பகுதி திருப்தியாகவே வரவில்லை. அப்படியே கிடக்கிறது. இப்போதைக்கு அந்த நாவலை முடிக்க முடியாது. யாவரும்.காம் பதிப்பகத்தின் நண்பர் ஜீவ கரிகாலனிடம் மட்டும் அடுத்த புத்தகம் பற்றி பேசியிருந்தேன். அவர்தானே முந்தைய புத்தகத்தின் பதிப்பாளர். அவர்கள் இந்த வருடத்திற்கான செயல்திட்டத்தை இன்னும் முடிவு செய்யவில்லை. அதனால் இந்த வருடம் எந்தப் புத்தகமும் வராது என்றுதான் நினைத்திருந்தேன். ராஜலிங்கம் கேட்டவுடன் மண்டைக்குள் பல்ப் எரியத் துவங்கியது. முப்பது கட்டுரைகள் இருக்கின்றன. ‘சாம்பிள் அனுப்பறேன்....பிடிச்சிருந்தா சொல்லுங்க’ என்று பன்னிரெண்டு கட்டுரைகளை அனுப்பியிருந்தேன். ‘சூப்பரா இருக்கு’ என்று பதில் அனுப்பியிருந்தார். 

கிட்டத்தட்ட அடுத்த புத்தகத்திற்கான பதிப்பகம் அந்த பதிலிலேயே முடிவாகிவிட்டது. பதிப்பகத்தின் பெயரே ‘புத்தகம்’தான். 

இன்று காலையில் ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் சந்தித்துக் கொண்டோம். அடையார் ஆனந்தபவனில் காபி வாங்கிக் கொடுத்தார். அங்கு ஆனந்தபவன் இருப்பது தெரியும். ஆனால் பர்ஸை இளைக்க வைத்துவிடுவார்கள் என்பதால் பஜ்ஜி காயும் எண்ணெய் வாசத்தை பிடிப்பதோடு சரி. உள்ளே சென்றதில்லை. ஊருக்கு போகும் வழியில் சூளகிரியில் ஒரு ஆனந்தபவன் இருக்கிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பாக தெரியாத்தனமாக உள்ளே போய்விட்டோம். காபி முப்பத்தாறு ரூபாய். இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ஒரு நாளைக்கு முப்பத்தியிரண்டு ரூபாய் செலவு செய்தாலே பணக்காரராம். திட்டக்கமிஷன் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஆனந்தபவனில் காபி குடித்தால் நம்மை கோடீஸ்வரர் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள் என்று பயந்தபடியே இப்பொழுதெல்லாம் எட்டிப்பார்ப்பது கூட இல்லை.

நேற்று அனுப்பியிருந்த கட்டுரைகளில் சிலவற்றின் லே-அவுட் முடித்து பிரிண்ட்-அவுட் எடுத்து வந்திருந்தார். காபி குடிக்கும் போது நீட்டினார். வாயைப் பிளந்துவிட்டேன். நேற்றிரவு அனுப்பியதை இன்று அச்சில் பார்க்கிறேன். சூப்பர் வேகம். அவர் திட்டமிட்டிருக்கும் புத்தகங்கள் பற்றியெல்லாம் பேசினார். தனது விற்பனை முறைகளையெல்லாம் விவரித்தார். அவற்றையெல்லாம் இம்மிபிசகாமல் அவரால் அமுல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. அப்படி செயல்படுத்த முடிந்தால் பிரமாதமாக இருக்கும் என நம்புகிறேன். 

அவரோடு இன்னும் கொஞ்சம் நேரம் பேசியிருக்கலாம். ஆனால் ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டில் உணவு உண்டு வெகுநாட்கள் ஆகிவிட்டது. இன்றைக்குத்தான் அதிசயமாக தங்கியிருக்கிறேன். இன்றும் பப்ளிஷரை பார்க்கச் செல்கிறேன் என்று சொன்னால் சனீஸ்வரரை பார்க்கச் செல்கிறேன் என்று வீட்டில் இருப்பவர்களின் காதில் விழுகிறது. எதற்கு வம்பு என்று சீக்கிரமாகக் கிளம்பி வந்துவிட்டேன். 

வந்த பிறகு ஃபோனில் அழைத்தார். ‘உங்க பதிப்பகத்தலிருந்து என்னுடைய அடுத்த புத்தகம் வருது என்று வெளியில் சொல்லட்டுமா?’ என்றேன். துளி கூட யோசிக்காமல் ‘தாராளமாக..இதென்ன கேள்வி’ என்றார். 

உறுதியாகிவிட்டது. 

முதன் முதலாக இங்குதா சொல்கிறேன். தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. ஆனால் புத்தகம் முடிவாகிவிட்டது. அடுத்த புத்தகம்- கட்டுரைகளின் தொகுப்பு ‘புத்தகம்’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருகிறது. வாழ்த்துங்கள். வாழ்த்துகளில்தான் துளித் துளியாக வளர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி. 

23 எதிர் சப்தங்கள்:

Naga Chokkanathan said...

வாழ்த்துகள் இருவருக்கும் :)

பதிப்பகத்துறையில் அவருக்கு சீனியர் (அதுவும் எட்ட்ட்ட்ட்டு மாத சீனியர்:) என்ற முறையில் நான் தடுமாறிக் கற்றுக்கொண்ட சில விஷயங்களை அவருக்குச் சொல்லவும், கேட்டுக்கொள்ளவும் ஆசை. இயன்றால் என் ஈமெயில் முகவரி / தொலைபேசி எண்ணை அவருக்குத் தாருங்கள் (or vice versa) நன்றி.

என். சொக்கன்,
பெங்களூரு.

Aliar bILAL said...

வாழ்த்துக்கள் மணி.....திரு.ராஜலிங்கம் அவர்களின் முயற்சியும், செயல்பாடுகளும் வெற்றி அடைய வாழ்த்த்துக்கள்......

”தளிர் சுரேஷ்” said...

எழுத்தாளனும் பதிப்பகமும் இதயத்துடிப்பும் இரத்த ஓட்டமும் மாதிரி! இணைந்து கலக்குங்கள்! வாழ்த்துக்கள்!

Balakumar Vijayaraman said...

வாழ்த்துகள் பதிப்பாளருக்கும், எழுத்தாளருக்கும்.

Anonymous said...

Congrats............

வரதராஜலு .பூ said...

எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்

Yarlpavanan said...

முயற்சி வெற்றி தரும்
வாழ்த்துகள்!

பால கணேஷ் said...

அவ்வ்வ்வ்..... உங்களின் அடுத்த புத்தகத்தை வடிவமைத்து படிக்கும் வாய்ப்பு பணாலா எனக்கு...? ரைட்டு. பதிப்பகத் தொழிலில் குன்றாத ஆர்வமுடன் இறங்கியிருக்கும் அந்த நல்லவரை மனம் நிறைய வாழ்த்துகிறேன். அடுத்த புத்தகம் வெளிக்கொணர இருக்கும் உங்களுக்கும் மகிழ்வான நல்வாழ்த்துகள்.

Unknown said...

வாழ்த்துக்கள் மணிகண்டன், பதிப்பாளருக்கும்தான்!

தருமி said...

வாழ்க ... வளர்க.... வாழ்த்துகள்

Unknown said...

வாழ்த்துக்கள்

harish sangameshwaran said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் மணி. அடுத்த புத்தகமும் ( நாவல் ) அதி விரைவில் வெளி வர வேணும்

த. சீனிவாசன் said...

மகிழ்ச்சியான செய்தி. எனக்கு ஒரு காப்பி பார்சேல்...

செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

கார்த்திக் சரவணன் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... உங்களுக்கும் திரு. ராஜலிங்கம் அவர்களுக்கும்....

krish said...

அன்பு வாழ்த்துக்கள்.

ராமுடு said...

அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு,

தங்களின் புதிய புத்தகம் - 'புத்தகம் மூலம்' சிறப்பான முறையில் வெளி வர மனமார்ந்த வாழ்த்துக்கள்

பாலராஜன்கீதா said...

இருவருக்கும் (இல்லத்தினருக்கும்) வாழ்த்துகள்

சேக்காளி said...

வாவாவாவாவாவாவாவாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்த்த்த்த்த்த்த்துதுதுதுதுதுதுதுக்க்க்க்க்க்க்க்ககககககககள்ள்ள்ள்ள்ள்ள்ள் மணி

Anonymous said...

Nice

Anonymous said...

வாழ்த்துக்கள்

Krishna said...

வாழ்க...வளர்க...

Unknown said...

இருவருக்கும் வாழ்த்துகள் !