Jul 23, 2014

துணைக்கு வர முடியுமா?

அதிமுக அரசு வந்ததிலிருந்து அரசுப்பேருந்துகளில் படம் போடுவதை நிறுத்திவிட்டார்கள். இருநூறு ரூபாய் மிச்சம் பிடிக்கலாம் என்று அரசாங்க வண்டிகளில் ஏறினால் அரசாங்கம் நம்மைவிட கஞ்சமாக இருக்கிறது. பேருந்துகளிலிருந்து தொலைக்காட்சிகளையே மொத்தமாக கழட்டிவிட்டார்கள். பெங்களூரிலிருந்து சேலம் செல்வதென்றால் ஐந்தரை மணி நேரம் ஆகும். இரவுப் பயணத்தில் எனக்கு தூக்கமும் வராது. விளக்கையும் அணைத்துவிடுகிறார்கள். சிறைச்சாலை மாதிரி ஆகிவிடுகிறது.

கடந்த வார இறுதியில் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. பெங்களூரிலிருந்து ஓசூர் அங்கிருந்து கிருஷ்ணகிரி அங்கு மாறி தர்மபுரி அங்கிருந்து சேலம் என்று ஒவ்வொரு பேருந்தாக மாறிக் கொண்டிருந்தேன். எட்டு மணி நேரம் ஆனது. அது பிரச்சினையில்லை. இரண்டு சண்டைகளையும் ஒரு காதலையும் பார்க்க முடிந்தது. கிருஷ்ணகிரி தாண்டிய ஒரு ஊரில் கண்டக்டர் ஒருவர் பயணியை அடித்துவிட்டதாக அரை மணி நேரம் வண்டிகளை நிறுத்திவிட்டார்கள். மணி இரவு ஒன்பதரை இருக்கும். அந்த நேரத்தில் ஸ்டிரைக். ‘மாவட்ட எஸ்.பி வந்தால்தான் வழியை விடுவோம்’ என்றார்கள். சமாதானம் செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் கெஞ்சிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பாதிக்கும் மேலானவர்கள் குடித்திருந்தார்கள். ஆனாலும் போலீஸ்காரர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இறங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். தனியாகச் சென்றால்தான் இதெல்லாம் சாத்தியம். மனைவி மகனையெல்லாம் அழைத்துச் சென்றால் கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி இறங்கும் இடம் வரைக்கும் வேறு எந்தக் கவனமும் இருக்காது. 

நிசப்தம் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் வழங்கிய புத்தகங்களை கோபிச்செட்டிபாளையம் தாய்த்தமிழ் பள்ளிக்காரர்கள் ஒரு நிகழ்வில் வைத்து பெற்றுக் கொள்கிறோம் என்ற போதே சுதாரித்துக் கொண்டேன். எப்படியும் மேடையில் பேசச் சொல்வார்கள். தனியாகச் சிக்கிக் கொண்ட மாதிரி ஆகிவிடும். எதற்கும் துணையாக இருக்கட்டுமே என்று தம்பிச்சோழனை பிடித்து வைத்திருந்தேன். தம்பிச்சோழன் நாடகக்கலைஞர். சமீபத்தில் இரண்டு மாதங்கள் பெங்களூரில் தங்கியிருந்தார். சினிமாதான் அவருக்கு மூச்சு. சினிமா பற்றி பேசிக் கொண்டிருப்பார். திசைமாற்றலாம் என்று புத்தகம் பற்றி பேசினால் அந்தப் புத்தகத்தோடு சேர்த்து நாம் வாசித்திருக்காத வேறு இரண்டு புத்தகங்களையும் சேர்த்துப் பேசுவார். அத்தனை வாசித்திருக்கிறார். அத்தனை படங்களை பார்த்திருக்கிறார். 

அழைத்தவுடன் எந்த மறுப்பும் சொல்லவில்லை. பள்ளியில் குழந்தைகளுக்கான படைப்பாற்றலை மேம்படுத்தும் பட்டறை ஒன்றை நடத்தித் தருவதாகச் சொல்லியிருந்தார். Creativity workshop. பட்டறையில் என்ன செய்வார் என்றெல்லாம் தெரியவில்லை. பள்ளியில் தெரிவித்தேன். அவர்களும் சரி என்று சொல்லியிருந்தார்கள். தம்பிச்சோழன் இது போன்ற நிகழ்வுகளை வேறு இடங்களிலும் நடத்தியிருக்கிறார். எதிர்பார்ப்பை பொய்ப்பிக்கவில்லை. மாணவர்களிடையே பேசும் போது  ‘நான் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன்’ என்று ஆரம்பித்தார். கிட்டத்தட்ட நூறு குழந்தைகள். அவரை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆறு மணி நேரங்களுக்கு மேலாக அவர்களைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். அதுவும் ஒற்றை ஆளாக. எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. இத்தனைக்கும் நிறைய பொருட்களும் இல்லை. வெறும் உடல் மொழியிலேயே குழந்தைகளை அசையாமல் வைத்திருந்தார். அவர் கத்தினால் குழந்தைகளும் கத்துகிறார்கள். அவர் சிரித்தால் குழந்தைகளும் சிரிக்கிறார்கள். அவர் கீழே விழுந்தால் அவர்களும் விழுகிறார்கள். ரசனையான மனிதர்.


குழந்தைகளுக்கு இது போன்ற நிகழ்வுகள் அவசியம். வெறுமனே வினா-விடையாக மட்டுமே பள்ளிக் கல்வியை மாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இதைப் போன்ற சில செயல்பாடுகள் நிச்சயமாக நல்ல பலனைத் தரும். படிப்பைத் தாண்டி மாணவர்கள் வேறொன்றைப் பற்றி யோசிக்க வாய்ப்பு கிடைக்கிறது அல்லவா? தப்பாட்டம், பரதநாட்டியம், பேச்சுப்போட்டி, கட்டுரை எழுதுதல், பறை, சிலம்பம், நாடகம், மாற்றுச் சினிமா, வாசிப்புப் பயிற்சி, ஓவியம், கராத்தே என்று ஏதேனும் ஒன்றைப் பற்றி அவர்களிடம் பேச வேண்டும். அதைப் பற்றி அவர்கள் யோசிக்கத் துவங்க வேண்டும். ஏதாவதொரு விதத்தில் அவர்களுக்கு பிற்காலத்தில் பயன்படும். பயன்படுகிறதோ இல்லையோ மனக்கண்களில் ஒன்றைத் திறந்துவிட்ட மாதிரி ஆகிவிடும். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில்- குறிப்பாக முதல் மதிப்பெண்ணைக் குறி வைக்கும் பள்ளிகளில் மனனம் செய்வதைத் தவிர வேறு எதுவுமே சொல்லித் தருவதில்லை.

சனி,ஞாயிறுகளிலும் கூட குழந்தைகளை பதினைந்து மணி நேரங்களுக்கு படிக்கச் சொல்கிறார்கள். ஒரு உறவுக்காரப் பையன் இருக்கிறான். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் ஏகப்பட்ட மதிப்பெண்கள் எடுத்திருந்தான். கல்லூரியையும் முடித்துவிட்டான். அடுத்து என்னவென்றால் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகிறேன் என்கிறான். அதைக் கூட பேயறைந்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் படித்த பள்ளிக்கூடம் அப்படி. பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் பள்ளியை விட்டால் வீடு, வீட்டில் படிப்பு, மீண்டும் பள்ளி, அங்கு படித்ததையெல்லாம் வாந்தியெடுத்தல் என்றிருந்தான். சிரிப்பு கிடையாது. விளையாட்டு கிடையாது. களிமண்ணில் செய்வது போல சீரியஸ் மனிதர்களை பள்ளிகளிலேயே Molding செய்துவிடுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வாழ்க்கையின் முதல் பதினெட்டு வருடங்கள் மிக முக்கியம். இந்தப் பருவத்தில் அவனுக்கான அத்தனை சிறகுகளும் கிடைக்கிறது. அவனுக்கான அத்தனை வர்ணங்களும் புரிகிறது. ஆனால் அவற்றைத்தான் புத்தக மூட்டையின் கீழாக போட்டு நசுக்கிவிடுகிறார்களே? அந்தப் பையன் நிச்சயமாக தேர்வில் வெற்றியடைந்துவிடுவான் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் என்ன பிரயோஜனம் என்றுதான் தெரியவில்லை.

குழந்தைகளை மனிதர்களாக மாற்றுவதற்கு படிப்பைத் தவிர நிறைய விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதைச் சில பள்ளிகள் மட்டும்தான் செய்கின்றன என்பதுதான் அவலம். படிப்பு அவசியமில்லை என்று சொல்லவில்லை. அவசியம்தான். ஆனால் இவ்வளவு உழைப்பு தேவையில்லை. நானூற்றி தொண்ணூற்றொன்பது மதிப்பெண்களை வாங்கும் மாணவன் கடைசி ஆறு மாதங்கள் அமர்ந்து படித்தாலும் அதே மதிப்பெண்களை வாங்கிவிடுவான். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நெட்டுரு போட வைக்கிறார்கள். அதுதான் பிரச்சினை. ஒவ்வொரு நாளும் தேர்வு எழுதுகிறார்கள். அதற்காக முந்தின நாள் முழுவதும் படிக்கிறார்கள். மதிப்பெண் குறைந்தால் வீட்டில் திட்டுகிறார்கள். ஆசிரியர்கள் தண்டிக்கிறார்கள். அந்த மாணவன் வேறு எதைச் சிந்திக்க முடியும்? படிப்பே வரவில்லையென்றாலும் வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவன் ஜெயித்துவிடுவான் என்பதுதான் நிதர்சனம். வெறும் படிப்பு படிப்பு என மாணவனின் மொத்த ரசனையையும் பூட்ஸ் காலால் நசுக்குவது பாவமில்லையா? 

தம்பிச்சோழன் அந்த நாளின் இறுதி வரைக்கும் அதே உற்சாகத்தோடு இருந்தார். கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் கூட சளைக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது அவரிடம் ஆட்டோகிராப்பாக வாங்கித் தள்ளினார்கள். Pied Piper of Hamelin இல் வருவது போல குழந்தைகள் அத்தனை பேரையும் இழுத்துச் சென்றுவிடுவார் போலிருந்தது. Hamelin என்ற ஊரில் எலிகளின் அட்டகாசம் அதிகமாகியிருந்த போது அவற்றைப் பிடிக்க ஒருவனை அழைத்து வருவார்கள். அவன் தனது புல்லாங்குழலை வாசித்து எலிகளை அழைத்துச் சென்று கடலுக்குள் விட்டுவிடுவான். அப்பொழுது ஒரு எலி மட்டும் தப்பித்துவிடும். தப்பித்த ஒரு எலியைக் காரணம் காட்டி பேசியபடி பணத்தைத் தர மாட்டார்கள். அடுத்த நாள் ஊரில் இருக்கும் பெரியவர்கள் சர்ச்சுக்குச் சென்ற நேரமாக வந்தவன் தனது புல்லாங்குழலை வாசித்து ஊரில் இருக்கும் குழந்தைகளையெல்லாம் அழைத்துச் சென்றுவிடுவான். பயிற்சி பட்டறையின் முடிவில் இறுதியில் தம்பிச் சோழன் அப்படித்தான் தெரிந்தார். மெஸ்மரிசம் செய்திருந்தார்.

வீட்டிற்கு வந்த பிறகு தாளாளரிடம் பேசினேன். அவரது மகள் அதே பள்ளியில்தான் படிக்கிறாள். பத்தாம் வகுப்பு. ‘இவ்வளவு நாளில் இன்னைக்குத்தான் இவ்வளவு ரிலாக்ஸ்டாக இருந்தோம்’ என்றாளாம். ரிலாக்ஸ் ஆவது பெரிய காரியமில்லை. அவர்களுக்கே தெரியாமல் நாடகக்கலை என்ற பெருங்கடலின் ‘அ’வை அந்த நூறு குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்திருந்தார். அதுதான் திருப்தியான விஷயம்.