Jul 21, 2014

தம் கட்டுடா செவல தம் கட்டு

தினமலரில் ஒரு நேர்காணல் வந்திருக்கிறது. மதுரை பதிப்பின் ‘சண்டே ஸ்பெஷல்’ பகுதியில் ஒரு பக்க அளவிற்கு. நம்மை கவனிக்கிறார்கள் என்றால் சந்தோஷமாகத்தானே இருக்கும்? அதுவும் தினமலர் போன்ற வெகுஜன ஊடகம். தன்னடக்கம் இல்லாமல் சொல்ல வேண்டுமானால் வெகு உற்சாகமாக உணர்ந்தேன்.

தெரிந்தோ தெரியாமலோ நேர்காணலின் இறுதியில் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டார்கள். நான்கைந்து முறை ஃபோன் பேட்டரி காலி ஆகுமளவுக்கு அழைப்புகள். இதை சலிப்பாகச் சொல்லவில்லை. சந்தோஷமாகத்தான் சொல்கிறேன். ஆனால் ஒன்று - சினிமாவில் பாடல் எழுதுவதற்கு சான்ஸ் வாங்கித் தர முடியுமா என்று ஒருவர் கேட்டார். அவர் இந்த நேர்காணலை எப்படி புரிந்து கொண்டாரோ- உண்மையிலேயே எப்படி பதிலைச் சொல்வது என்று குழப்பமாக இருந்தது.  ‘நான் ஒரு டுபாக்கூருங்க’ என்று சொல்லி சமாளித்தேன். மதுரை பதிப்பு என்பது மூன்று மாவட்டங்களில் மட்டும்தான் கிடைக்குமாம். அதற்கே இத்தனை அழைப்புகள். 

அது இருக்கட்டும். 

இந்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கும் தலைமையாசிரியர் இனியன்.அ.கோவிந்தராஜூ 'I am really proud of you' என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். என்னைப் பொறுத்தவரையிலும் அவர் கடவுள். இதை வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை. அவர் என்னை எவ்வளவு ஊக்குவித்தார் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். எவ்வளவு குப்பையான கவிதை எழுதிக் கொண்டு போய் கொடுத்தாலும் வரிக்கு வரி திருத்துவார். எவ்வளவு கேவலமாக மேடையில் பேசினாலும் தனியாக அழைத்து பாராட்டிவிட்டு குறைகளைச் சொல்வார். அப்படியான ஆசிரியர் அமைவது ஒரு வகையில் வரம். எங்களுக்கு அந்த வரம் கிடைத்திருந்தது. பள்ளியில் நிகழ்ந்த சில பிரச்சினைகளாலும் உள்ளரசியலாலும் அவர் ராஜினாமா செய்துவிட்டு சென்றிருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரையிலும் எனக்கு தெரியாமலிருந்தது. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து குறுஞ்செய்தி. என்னையுமறியாமல் கண்ணீர் திரண்டுவிட்டது. ‘இதுவரை மட்டுமில்லை- எழுத்து வழியாக இனி எவ்வளவு பெரிய உயரங்களை அடைந்தாலும் அத்தனையும் உங்களின் பாதத்திற்கு சமர்ப்பணம் சார்’ என்று பதில் அனுப்பினேன். ஒரு மாணவனாக என்னால் இதைத்தான் அவருக்குத் திருப்பிக் கொடுக்க முடியும். அவர் நிச்சயமாக மகிழ்ந்திருப்பார்.

தலைமையாசிரியரிடமிருந்து எனக்கு பாராட்டை வாங்கிக் கொடுத்ததற்காக மட்டுமே தினமலருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நேர்காணலை என்னிடமிருந்து வாங்கிய திரு.தண்டபாணி அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி.


பெங்களூருவாசியான உங்கள் இளமைப்பருவம்...

பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திற்கு அருகில் இருக்கும் கரட்டடிபாளையம் என்ற கிராமம். 1982 ஆம் ஆண்டு பிறந்தேன். அம்மா அப்பா இருவருமே அரசுப்பணியாளர்களாக இருந்தார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு வரை கோபியில் இருக்கும் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில்தான் படித்தேன். அது தமிழ் வழிக்கல்விதான். அங்கிருந்த தமிழாசிரியர்களையும், தலைமையாசிரியர் இனியன். கோவிந்தராஜூவையும் மறக்கவே முடியாது. பிறகு பொறியியல் கல்வியை சேலத்திலும், எம்.டெக் படிப்பை வேலூரிலும் முடித்துவிட்டு சில வருடங்கள் ஹைதராபாத்தில் இருந்திருக்கிறேன். இப்பொழுது திருமணத்திற்கு பிறகு பெங்களூர்வாசி. என்றாலும் அவ்வப்போது ஊருக்குச் சென்று வருவதன் மூலமாக வேரை இழந்துவிடாமல் இருக்கிறேன்.

ஒரு ஐ.டி. இன்ஜினியருக்குள் ஒரு கவிஞர் உருவானது எப்படி?

எம்.டெக் ப்ராஜக்ட் செய்வதற்காக சென்னையில் ஒரு வருடம் இருந்த போதுதான் இலக்கியம் அறிமுகமானது. முதலில் சினிமாக்கவிஞர்களைத் தேடிச் சென்று பார்த்து வருவேன். எப்படியும் சினிமாவில் பாட்டு எழுதிவிட வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் இந்த பயணம் இருக்கும். நிறைய பாடலாசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். அலைந்து திரிந்தேன் என்றும் சொல்லலாம். ஒரு கோடை காலத்தின் மதியத்தில் அப்படித் திரிந்து கொண்டிருந்த போது எதேச்சையாக கவிஞர். தமிழச்சி தங்கபாண்டியனின் புத்தக விழா ஒன்றில் கவிஞர். மனுஷ்ய புத்திரனைச் சந்தித்தேன். அவர்தான் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். அவர் வழியாகத்தான் நல்ல கவிதைகள் அறிமுகமாயின. இலக்கிய ஆர்வம் வந்த பிறகு சினிமா ஆசை அடங்கி விட்டது. இதனால் சினிமாக்கனவை விட்டுவிட்டு கவிதைகள் எழுதுவதோடு நிறுத்திக் கொண்டேன். ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ தொகுப்புதான் எனது முதல் கவிதைத் தொகுப்பு. எழுத்தாளர் சுஜாதா தனது வாழ்நாளில் கடைசியாக வெளியிட்ட புத்தகமும் அதுதான். சமீபமாக கவிதைகள் எழுதுவதில்லை. உரைநடை எழுதுவதுதான் விருப்பமானதாக இருக்கிறது.

தமிழ் இலக்கிய உலகில், இளம் எழுத்தாளர்கள் குறைந்து வருகின்றனரே...

தமிழில் இப்பொழுது நிறையப் பேர் எழுதுகிறார்கள். கவிதை, சிறுகதை, நாவல் என்று எல்லாவற்றிலுமே இளைஞர்கள் மிகத் தீவிரமாக எழுதுகிறார்கள். ஆனால் வெகுஜன ஊடகங்களில் அவர்களை அதிகமாகத் தெரிவதில்லை. இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்கள் சென்றால் அவர்களின் பெயர்கள் பரவலாகத் தெரிய ஆரம்பிக்கும் என நம்புகிறேன். 

பணிப்பளுவுக்கு இடையே எப்படி எழுத முடிகிறது... 

ஐடியில் பணிபுரிவதால் வேலைப்பளு அதிகம்தான். எப்படியும் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணிநேரங்களுக்கு குறைவில்லாமல் அலுவலகத்திற்காக செலவிட வேண்டியிருக்கிறது. இருப்பினும் மிச்சம் பன்னிரெண்டு மணி நேரங்கள் இருக்கிறதே. அதில் இரண்டு மணிநேரங்களையாவது மகனுக்காக ஒதுக்கிவிடுகிறேன். அவனுக்கு ஐந்து வயதாகிறது. அவனுக்கு நிறைய கதைகள் சொல்கிறேன். இப்பொழுது அவனும் கதை சொல்லப் பழகியிருக்கிறான். அவனுக்கு ஒதுக்கியது போக இரண்டு மணி நேரங்கள் வாசிப்புக்கு- தேர்ந்தெடுத்த புத்தகங்களாக வாசிக்கிறேன். பிறகு கொஞ்சமாகத் தூங்குகிறேன். அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு மணி நேரத் தூக்கம்தான். இவற்றிற்கிடையே கிடைக்கும் இடைவெளியில் எழுதுகிறேன். இப்பொழுது இரண்டு மூன்று வருடங்களாக தினமும் எழுதுகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு பக்கங்களாவது எழுதாவிட்டால் தூக்கம் வருவதில்லை. எழுத்தும் வாசிப்பும் ஒருவித போதையாகிவிட்டது. வீட்டில் இருப்பவர்கள் நான் எழுதுவதற்கான எல்லாச் சூழலையும் உருவாக்கித் தருகிறார்கள். அதனால் சந்தோஷமாக இருக்கிறது.

வாசிக்கும் பழக்கம் தமிழில் குறைந்து வருகிறதா? "ஆம்' என்றால் ஏன்?

சரியாகத் தெரியவில்லை. புத்தகங்களின் விற்பனையைப் பார்க்கும் போது வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதாகத்தான் தெரிகிறது. புத்தகக்கண்காட்சிகளில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வியாபாரம் நடக்கிறது. இணையம் வழியாக வாசிப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் எழுதப்படிக்கத் தெரிந்த மக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பார்த்தால் புத்தகங்கள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.

நீங்கள் பெற்ற விருதுகள்..

நிசப்தம் தளத்திற்காக சென்ற வருடம் சுஜாதா இணைய விருது கொடுத்தார்கள். அதுதான் விருது. மற்றபடி வாசகர்களும், ஊடகங்களும் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே. என்னளவில் அதுவே பெரிய விருதுதான். முழுமையான ஈடுபாட்டோடு எழுதிக் கொண்டிருந்தால் போதும். சரியான நேரத்தில் சரியான அங்கீகாரங்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள்..

இரண்டு கவிதைத் தொகுப்புகள் ‘கண்ணாடியில் நகரும் வெயில்’, ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ வெளிவந்திருக்கின்றன. ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது ‘சைபர் சாத்தான்கள்’. சைபர் க்ரைம் பற்றி சாமானிய மனிதர்களுக்கு புரியும்படியான எளிய கட்டுரைகள் அடங்கியத் தொகுப்பு இது. இந்த வருடம் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்தது. ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ என்ற தலைப்பில்.

20 எதிர் சப்தங்கள்:

Yarlpavanan Kasirajalingam said...

தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

Jaikumar said...

All the best!

Avargal Unmaigal said...

நீங்கள் மேலும் சந்தோஷமடைய வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

Packirisamy N said...

மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் !

ராஜி said...

வாழ்த்துக்கள் சகோ!

Jegadeesh said...

வாழ்த்துக்கள் வா.ம.

bullsstreet said...

Great.all the best.
http://bullsstreetdotcom.blogspot.in

ரூபன் said...

வணக்கம்
மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையாக வந்திருக்கிறது நேர்காணல்! அந்த முகம் தெரியா ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

Paramasivam said...

எழுத்தாளருக்கும் அவர் தனயனுக்கும் வாழ்த்துக்கள்

periyasamy advocate said...

All the best

அமர பாரதி said...

Congratulations and I wish you all the best Mani Kandan.

RS said...

Now you will be known all over Tamilnadu. Wish you all success

Abilash Chandran said...

வாழ்த்துக்கள் மணி

harish sangameshwaran said...

வாழ்த்துக்கள். உங்க ப்ளாக்கை சமீபமாத் தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். பேஸ்புக்ல ரிக்வெஸ்ட் அனுப்பினேன். நீங்க எல்லை மீறிட்டீங்க போல ;-) இப்போ உங்களை பாலோ பண்ணிட்டு இருக்கேன் :-)

Krishna moorthy said...

நல்ல மனிதர்கள் எப்போதும் வெளிச்சத்திர்க்கு வந்தேதான் சார் தீரவேண்டும் .நீங்கள் இன்னும் உயரம் போவீர்கள் .

Anonymous said...

நல்ல விஷயம் மணிகண்டன். வாழ்த்துக்கள். மேலும் சற்று ஆராய்ச்சிப் பூர்வமான பதிவுகள் எழுதிட வேண்டுகிறேன். தமிழ்ச் சமுதாயத்தில் மேம்போக்காகவும், சிலேடையாகவும், பல நேரங்களில் லேசாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் எழுத்துக்களே வெகுஜன ஊடகங்களில் வருகின்றன என்பது பொதுவான கருத்து. அத்துடன் தமிழர்கள் என்றாலே லேசானவர்கள், உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், ஆனால் எதிலும் ஆழமான ஆராய்ச்சியோ அறிவோ இல்லாதவர்கள் என்னும் கருத்து பல இன சமூகங்கள் வசிக்கும் இடங்களில் தென்படுகிறது. இது பெருமளவு உண்மையே என்பது போலவே எழுத்துக்களும் வருகின்றன ( ஜெயமோகன் ஒரு விதிவிலக்கு ).
அந்த இடத்தை நிரப்ப நீங்கள் முயல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நன்றி
ஆமருவி
www.amaruvi.com

Myvizhiselvi Subramani said...

Kalakkunga Anna

கிருத்திகாதரன் said...

அருமை, வாழ்த்துக்கள் ..

Abarajithan Gnaneswaran said...

வாழ்த்துக்கள் சார். இன்னும் மேலே போங்க...