Jul 2, 2014

எது வெற்றி?

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால் உலகில் எந்த மூலையில் எது நிகழ்ந்தாலும் அடுத்த வினாடியே நமது பார்வைக்கு வந்துவிடுகிறது என்பதெல்லாம் ஒரு கட்டம் வரைக்கும்தான் நல்லது. இப்பொழுதெல்லாம் நல்லதெல்லாம் கண்களில் படுகிறதோ இல்லையோ- கெட்டது- அது எவ்வளவு குரூரமான நிகழ்வாக இருந்தாலும் பார்வைக்கு வந்துவிடுகிறது. யாரையோ கழுத்தை வெட்டுவதைப் பார்த்தால் ‘இனிமேல் இப்படியான கொடுமைகளை பார்க்கவே கூடாது’ என்று நினைத்துக் கொள்கிறேன். அடுத்த நாளே எவரோ ஒருவரை தூக்கிலிடும் வீடியோ வந்து சேர்கிறது. ‘இதை மட்டும் கடைசியாக பார்த்துவிடலாம்’ என்று நினைத்தாலும் அதோடு நிறுத்திக் கொள்ள முடிவதில்லை. அடுத்த நாளே யாரையாவது பின்னந்தலையில் சுட்டுக் கொல்கிறார்கள்.

சிரியா, ஈராக் போன்ற தேசங்களில் நிகழும் வன்முறைகளின் வீடியோக்களை சில இரவுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்- கூகிளில் தேடிப்பாருங்கள்- கிடைக்கின்றன. சர்வசாதாரணமாக கொன்று தள்ளுகிறார்கள். கோழிக்கடைகளில் ப்ராய்லர் கோழிகளை அப்படித்தான் கொல்வார்கள். கழுத்தை அறுத்து அறுத்து ஒருவன் வீசிக் கொண்டேயிருப்பான். இன்னொருவன் அதை எடுத்து வெந்நீரில் மூழ்க வைத்துக் கொண்டிருப்பான். இந்த கொலைக்கு எந்தவிதத்திலும் சளைக்காத வன்முறையை சக மனிதர்கள் மீதாக நிகழ்த்துகிறார்கள்- மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும்.

ஒரு வீட்டில் நுழைந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரையும் மண்டியிடச் செய்கிறார்கள். பெண்கள், சிறுவர்கள் உட்பட யாருடைய கண்களும் கட்டப்படவில்லை. ஒவ்வொருவரின் பின்னந்தலையிலும் வரிசையாக சுடுகிறார்கள். பக்கத்தில் இருப்பவன் சுடப்படும் போது ஒருவன் திரும்பிப் பார்க்கிறான். துப்பாக்கியால் அவனைத் தாக்கி குனியச் செய்து அவனையும் சுடுகிறார்கள். கீழே விழுந்தவர்களில் யாருமே துள்ளுவதில்லை. இருந்தாலும் இன்னுமொரு முறை சில தலைகளைக் குறி வைத்துச் சுடுகிறார்கள். தப்பித்துவிடுவதற்கு எந்தச் சந்தர்ப்பமும் கொடுத்துவிடக் கூடாது என்பதற்கான இரண்டாம் சுற்று சுடுதல் அது. ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறைவனின் பெயரால் வீடியோவை முடிக்கிறார்கள்.

அரசாங்கங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. ராணுவங்கள் பின் வாங்குகின்றன. மக்கள்தான் தப்பிக்க இயலாமல் உயிரை விடுகிறார்கள்.

இந்த வன்முறைகளின் பின்னால் என்ன வேண்டுமானாலும் அரசியல் பின்னணியாக இருக்கட்டும். யார் மீது வேண்டுமானாலும் தவறு இருக்கட்டும். ஆனால் குழந்தைகளும், பெண்களும் என்ன பாவம் செய்தார்கள்? மூன்று வயதுக் குழந்தையின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் உரிமையை எந்தக் கடவுள் அருளினார்? பதினான்கு வயதுச் சிறுவனை மண்டியிடச் செய்து மூளையைச் சிதறடிக்கும் வன்மத்தை எந்த வேதத்தில் எழுதியிருக்கிறார்கள்? இதயத்திற்கு பூட்டிட்டுக் கொண்டு இறைவனின் பெயரால் வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமானத்தைக் புதைத்துவிட்டு மதத்தின் பெயரால் அப்பாவிகளை கொன்று குவிக்கிறார்கள்.

வல்லரசுகளுக்கு பெட்ரோலும், டீசலும் குறி. மதவாதிகளுக்கு நிலமும், கடவுளும் குறி. அரசியல்வாதிகளுக்கு பதவியும் அதிகாரமும் குறி. தீவிரவாதிகளுக்கு எதிர்படும் ஒவ்வொரு உயிரும் குறி. இப்படி ஒவ்வொருவரும் தாக்குகிறார்கள். மக்கள்தான் சிதறிச் சின்னாபின்னமாகிறார்கள். இதையெல்லாம் கூட விட்டுவிடலாம். எங்கேயோ நடக்கும் இந்த வன்முறைகளையும் கொலைகளையும் இங்கே அமர்ந்து கொண்டு ஆதரிக்கிறார்கள். அதுதான் அயற்சியாக இருக்கிறது. ‘அங்கேயே பிரச்சினைன்னு தெரியும்ல..அங்க எதுக்கு போனான்?’ என்று பேசுபவர்களைக் கூட மன்னித்துவிடலாம். அவர்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். ஆனால் ‘கறுப்புக் கொடியேந்தியவன் இந்த உலகையே பிடிக்கப் போகிறான்’ என்று வெற்றி முழக்கமிடுகிறார்கள். அவர்களைத்தான் என்ன செய்வது என்று புரியவில்லை. இந்த வன்முறைகளை வெளிப்படையாக ஆதரிக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் அவர்களின் பக்கங்களைத் தேடித் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஸ்டேட்டஸ்களில் எத்தனை வன்மம்? எத்தனை வெற்றிக் கொக்கரிப்புகள்?

எதை வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு எதிர்படுபவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்துவதுதா? அடுத்தவன் கழுத்து அறுபடுவதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவதா? குழந்தைகள், பெண்கள் என அத்தனை பேரின் பிணங்களையும் நாய்க்கும் நரிக்கும் எறிவது போல அலட்சியமாக அப்புறப்படுத்துவதா? இவர்கள் மதத்தின் பெயரால் செய்து கொண்டிருப்பது பச்சையான வன்முறை. இறைவனின் பெயரால் செய்து கொண்டிருப்பது கடுமையான மனித உரிமை மீறல்.

இந்த உலகம் மிகக் குரூரமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. சில ஆயிரங்களைத் திருடுவதற்காகக் கொலை செய்கிறார்கள். காதில் இருக்கும் கடுக்கனை அறுப்பதற்காக மூதாட்டிகளைக் கொல்கிறார்கள். அப்பனைப் பழி வாங்குவதற்காக பச்சிளம் குழந்தையின் கழுத்தை நசுக்கிறார்கள். அடுத்த உயிரை எடுப்பதுதான் இங்கே பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வாக மாறிக் கொண்டிருக்கிறது. கள்ளக்காதலுக்காகவும், கந்து வட்டிக்காகவும், நிலப்பிரச்சினைக்காகவும், ஒரு தலைக்காதலுக்காகவும் என எல்லாவற்றிலும் கொலைதான் பிரதான பாத்திரம் ஏற்றுக் கொள்கிறது. மதம் மட்டும் விதிவிலக்கா? மதத்துக்காகவும், அதிகாரத்திற்காகவும் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கிறார்கள். 

ஆயுதமில்லாத நிராயுதபாணிகளைக் கொன்று அதன் மீது நட்டப்படும் எந்த வெற்றிக் கொடியும் நிரந்தரமானதில்லை. நிகழ்த்தப்படுவது வன்முறையாக இருந்தால் கண்களை மூடிக் கொண்டு எதிர்க்கத் துவங்குவோம். அவர்களின் சித்தாந்தம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். மதத்திற்காகவோ, சாதிக்காகவோ, இனத்துக்காகவோ என எதற்காக வேண்டுமானாலும் போராடட்டும்- அப்பாவிகளைக் கொன்றுதான் அந்தச் சித்தாந்தம் வெற்றியடைய வேண்டுமானால் அந்தச் சித்தாந்தம் வெற்றியடையவே தேவையில்லை என்ற மனநிலை நமக்கு வர வேண்டும். 

இந்தியனாகவும், இந்துவாகவும் இதை எழுதவில்லை. அடிப்படையான மனிதாபிமானம் மட்டும்தான். அங்கே வேட்டையாடுபவர்கள் எப்படியோ போகட்டும். அவர்களை திருத்துவது நமக்கு ஏலாது. ஆனால் அவர்களை எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவர்களை ஆதரிப்பதை நிறுத்துவோம். ஏதோ ஒரு குழந்தையின் கழுத்தில் வைக்கப்படும் துப்பாக்கியின் நுனி நம் வீட்டு குழந்தையின் கழுத்தைத் தொடுவதற்கு வெகுநாட்கள் ஆகிவிடாது. எங்கேயோ தலை சிதறிச் சாவும் பெண்ணின் நிலைமை நம் வீட்டுப் பெண்களுக்கு நிகழும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எங்கேயோ ஒருவன் துப்பாக்கிக்கு முன்னால் மண்டியிடுவதைப் போலவே நாமும் மண்டியிடும் துக்கமான தருணத்தை மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம். 

அவ்வளவுதான்.