Jul 30, 2014

ஐ லவ் யூ

கேசவனும், ப்ரணீதாவும் கல்லூரியில் சேர்ந்த பிறகும் வெகு நாட்களுக்கு பேசிக் கொள்ளவே இல்லை. ராஜேஸ்வரி மேடம் கேசவனைக் கலாய்க்கும் போது மட்டும் ப்ரணீதாவை பார்ப்பான். மற்ற பெண்களைப் போலவே அவளும் சிரித்துக் கொண்டிருப்பாள். அவளைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்து கொள்வான்.

ஓரிரண்டு மாதங்களுக்குப் பிறகு ராகிங்கின் போதுதான் கேசவன் ப்ரணீதாவுடன் முதன் முதலாக பேசினான். அதுவும் அவனாகப் பேசவில்லை. பேச வைத்தார்கள். சீனியர் பாலகுமாரனும் இன்னும் சிலரும் கேசவனை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தார்கள். காலேஜில் ராகிங் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் முரட்டுத்தனமாக எதுவும் செய்தால் பிரச்சினை ஆகிவிடும். சிக்கினால் டிஸ்மிஸ்தான் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தார்கள் என்பதால் சீனியர்களும் கூட பயந்து கொண்டுதான் ராகிங் செய்தார்கள். 

கேசவனை அழைத்து ‘அதோ தூரமா போறா இல்ல...பச்சை சுடிதார் அவகிட்ட போய் மணி என்னன்னு கேட்டுட்டு வா’ என்றார்கள். அது ப்ரணீதாதான். விடுதிக்குச் சென்று கொண்டிருந்தாள்.

‘எங்க க்ளாஸ்தாண்ணா...ஆனா பேசினதில்லையே’ என்று கேசவன் பதறினான். 

‘இதுதாண்டா சான்ஸ்...பேசி அப்படியே பிக்கப் ஆகிக்கலாம்...போ’ என்றான். கேசவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அவளை நோக்கி வேகமாக ஓடிவிட்டான். ஆனால் பேசுவதற்கு தயக்கமாக இருந்தது.

‘ஏங்க...’என்றான். அவளுக்கு காது கேட்டிருக்கவில்லை. ஆனால் யாரோ வந்திருப்பதன் அசைவை வைத்துத் திரும்பினாள்.

‘டைம் என்னங்க?’ என்றான்.

ப்ரணீதா தயங்கக் கூடியவள் இல்லை. ‘அதைக் கேட்வா இவ்வளவு தூரம் ஓடி வந்தீங்க பாஸ்?’ என்றாள்.

‘இல்லைங்க ராகிங்...சீனியர் கேட்க சொன்னாங்க’ 

‘ஓ....உங்க பேரு என்ன?’ தெரியாதவள் போலக் கேட்டாள்.

‘கேசவன்’

‘உங்க கேர்ள் ப்ரெண்ட் பேர் என்ன?’அவள் கேட்டவுடன் அருகில் இருந்தவர்கள் சிரித்தார்கள். சிரித்தார்கள் என்றால் சினிமாவைப் போல கெக்கபிக்கே என்றில்லை. ப்ரணீதாதான் வாயாடி. மற்றவர்கள் சாதாரண ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ். அதற்கேற்ப அளவாக சிரித்தார்கள்.

‘அப்படியெல்லாம் யாரும் இல்லைங்க’

‘பாஸ்..சும்மா சொல்லாதீங்க...உங்க ஸ்டைலுக்கும் அழகுக்கும்....’ ப்ரணீதா இழுத்தாள். மீண்டும் சிரித்தார்கள். 

‘என்னங்க நீங்க ராகிங் பண்ணுறீங்க?’ கேசவன் பதறினான்.

‘சும்மா இருடி’ பக்கத்தில் இருந்தவள் ப்ரணீதாவிடம் காதைக் கடித்தாள்.

‘சரி..அஞ்சு ஆகுது’  அதே வேகத்தில் திரும்ப ஓடினான்
                                         
இந்த ஒன்றரை நிமிட பேச்சை வைத்துக் கொண்டே வெகுநாட்களுக்கு ஹாஸ்டலில் பேசித் திரிந்தான். ஆனால் ப்ரணீதாவுடன் எதுவும் பேசவில்லை.
                                            
                                                         ***
அன்றைய கணித வகுப்பு வித்தியாசமானதாக இருந்தது. ராஜேஸ்வரி மேடம் அன்று அழகு சற்று தூக்கலாகத் தெரிந்தார். விகாரமாக இல்லை- அழகாக. ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்  ‘கேசவன்....நீங்க வந்து க்ளாஸ் எடுங்க’ என்றார்.

கேசவன் அதைத் துளி கூட எதிர்பார்க்கவில்லை. ‘சும்மா எடுங்க...’ என்று சாக்பீஸை கையில் கொடுத்துவிட்டார்.

‘எதுவுமே ப்ரிப்பேர் பண்ணலை மேடம்’

‘ப்ரிப்பேர் பண்ணியிருந்தீங்கன்னா கலக்கிடுவீங்களா?’ அதில் ஒரு நக்கல் தொனி இருந்தது. 

‘சரி க்ளாஸ் எடுக்க வேண்டாம்....பாட்டு பாடுங்க’- அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

‘என்ன கேசவன் எதுவுமே செய்ய மாட்டேங்குறீங்க’

‘மேடம் அவனோட கேர்ள் ப்ரெண்ட் சொன்னா செய்வான்’ யாரோ கடைசி வரிசையில் இருந்து கத்தினார்கள்.

‘யாருப்பா அது?’

‘ப்ரணீதா’ இதுவும் கடைசி வரிசையில் இருந்து வந்தது.

ராஜேஸ்வரி மேடம் ப்ரணீதாவை பார்த்தார். அவள் சிரித்தபடியே ‘தலையும் ட்ரெஸ்ஸும்’ என்றாள். கேசவன் உடைவதற்கு அது போதுமானதாக இருந்தது.

                                         ***

அடுத்த நாள் ப்ரணீதாவின் முகத்தையே இவன் பார்க்கவில்லை. விலகிக் கொண்டான். அதற்கடுத்த நான்கைந்து நாட்களும் இப்படித்தான். ராஜேஸ்வரி மேடம் கலாய்த்த போது எதிர்த்து பேசிவிட்டு ப்ரணீதாவை பார்த்தான். அவள் தனது புருவங்களை மேலே உயர்த்தி என்ன வேண்டும் என்பது போல பாவித்தாள். இவன் தலையைக் குனிந்து கொண்டான்.

அன்று மதியம் அவளாகவே பேசினாள். ‘எனக்கு ரூட் போடுறியா?’ கேசவனுக்கு தொண்டைத் தண்ணீர் வறண்டு போனது. இப்படியெல்லாம் எந்தப் பெண்ணும் அவனிடம் பேசியதில்லை.

‘இல்லைங்க அவங்கதான்..’

‘அப்போ என்னை உனக்கு பிடிக்காது..அப்படித்தானே?’

‘என்னங்க இப்படி சொல்லுறீங்க?’

‘அப்போ புடிக்குமா?’

‘ஆமாங்க..செமயா புடிக்கும்’

‘அப்படீன்னா ஐ லவ் யூ சொல்லிடுவியா?’

‘ச்சே..ச்சே...அதெல்லாம் இல்லைங்க..’

‘அப்போ வேற எந்தப் பொண்ணுக்கு சொல்லுவ?’

‘நீங்க ஓவரா கலாய்க்குறீங்க’ கேசவன் சிரித்தான். அன்றிலிருந்து கேசவனும் ப்ரணீதாவும் நெருக்கம் ஆகிவிட்டார்கள்.

                                                  *****
‘உன் கூட க்ளோஸா பழகுறதால லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டுத் திரியறியா?’ பேருந்தில் போய்க் கொண்டிருக்கும் போது ப்ரணீதா கேட்டாள். அப்பொழுது கடை வீதியிலிருந்து கல்லூரி விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். 

‘இல்லையே’

‘ஆனா க்ளாஸ்ல அப்படித்தானே பேசிக்குறாங்க’

‘ஆமா..ஆனா அவங்களை கண்டுக்காத’

‘அப்போ உனக்கு என் மேல லவ் இல்லையா?’

..............

‘சொல்லுடா’

‘ப்ளீஸ் ப்ரணீதா...சும்மா இரு’

‘பதில் சொல்லுடா’

‘சரி..நீ சொல்லு..என்னை நீ லவ் பண்ணுறியா?’ கேசவன் திருப்பிக் கேட்டான்.

‘இல்ல’

‘அப்போ நானும் இல்ல’

‘நிஜமா?’

‘நீயும் நிஜமா?’ 

அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

                                                          ****

இரவில் ஃபோனில் அழைத்தான். 

‘உன்கிட்ட பேசணும்’

‘ம்ம்ம்..சொல்லு’

‘ஹாஸ்டலிலிருந்து வெளிய வா’

‘இந்த நேரத்துலயா’

‘ஆமாம்’

‘ப்ரோபோஸ் பண்ண போறியாடா?’

‘எப்போ பாரு இதேதான் கேட்பியா...வெளிய வா ப்ரணி’

சில நிமிடங்களில் வந்தாள்.

‘நாளைக்கு ரெக்கார்ட் நோட் முடிச்சுத் தருவியா?’

‘இதுக்குத்தான் கூப்பிட்டியா?’

‘ஆமாம்..’

‘ச்சீ..போடா’

சிரித்தான். அவளுக்கு எரிச்சலாக இருந்தது. நோட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.

‘குட்டி....’

‘என்னன்னு கூப்பிட்ட?’

‘குட்டின்னு’

‘அதிசயமா இருக்கு...’

‘உனக்கு எல்லாமே explicit ஆ சொல்லணுமா...குட்டின்னு சொன்னேன்’

‘எதுக்கு?’

‘ம்ம்ம்...லவ் யூ.....’

அவள் நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கேசவன் அன்று ப்ரணீதாவைவிட அழகாகத் தெரிந்தான். மார்கழி நிலவு காய்ந்து கொண்டிருந்தது. 

[‘சூது கவ்வும்’  பதிவுடன் தொடர்புடையது]

அனுபவம் இருக்கா?

இந்தத் தலைமுறையில் எத்தனை பேருக்கு முதல் வேலை திருப்தியானதாக இருந்தது என்று தெரியவில்லை. எனக்கு திருப்தியாக இருக்கவில்லை. வேறு என்ன? சம்பளம்தான். நம்மோடு படித்தவனெல்லாம் நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் போது நமக்கும் மட்டும் கிள்ளிக் கொடுக்கிறார்களே என்ற அங்கலாய்ப்புதான். வாய்ப்பு கிடைத்தால் எட்டிக் குதித்துவிடலாம் என்று பற்களை கடித்துக் கொண்டு காத்திருந்தேன். ஐடி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் எனக்குத் தெரிந்து டிசிஎஸ்ஸில் சேர்ந்தவர்கள் மட்டும் பத்து பன்னிரெண்டு வருடங்களாக அங்கேயே ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். பத்து வருடங்களில் ஆறேழு வருடங்களாவது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சுவிட்சர்லாந்திலும் காலம் ஓட்டிவிடுகிறார்கள். வேலையை விட்டு துரத்துவதும் இல்லை என்கிறார்கள். அரசாங்க உத்தியோகம் மாதிரிதான். 

மற்ற  நிறுவனங்களில் சேர்ந்தவர்களும் கூட வெகுகாலமாக அங்கேயே காலம் ஓட்டிக் கொண்டிருக்கக் கூடும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் இந்த நிறுவனத்தில் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் அங்கேயே இருக்கிறார்கள். மற்றபடி பெரும்பாலானோர் ஜம்ப்தான். 

முப்பது சதவீதம் சம்பள உயர்வு ஐம்பது சதவீதம் உயர்வு என்பதெல்லாம் வெகுவாக குறைந்துவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்கேல் வைத்திருக்கிறார்கள். ஒரு வருட அனுபவத்திற்கு ஒன்றரை லட்சம் சம்பளம். பத்து வருட அனுபவமிருந்தால் வருடச் சம்பளம் பதினைந்து லட்சம். அதுவும் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. மூக்கால் அழ வேண்டியிருக்கிறது. கிடைத்தவன் அதிர்ஷ்டசாலி.

வருடத்திற்கு ஒன்றரை லட்சம் என்கிற இந்தக் கணக்கு கூட குறிப்பிட்ட புள்ளி வரைக்கும் தான். பத்து பன்னிரெண்டு வருடங்கள் வரைக்கும் அனுபவம் இருந்தால் இந்த விகிதத்தில் கொடுக்கிறார்கள். அதற்கு மேல் போய்விட்டால் ‘ஓவர் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பதினைந்து வருடங்கள் அனுபவம் இருப்பவரை வேலைக்கு எடுத்தால் மேனேஜர் ஆக்க வேண்டும். வேறு வழியே இல்லையென்றால்தான் மேல்மட்ட ஆட்களை நிறுவனங்கள் வெளியிலிருந்து எடுக்கின்றன. முடிந்தவரை தங்கள் பணியாளர்களுக்குத்தான் பதவி உயர்வு கொடுக்க விரும்புகிறார்கள், அதனால்தான் நாற்பது வயதை நெருங்க நெருங்க விழிப்பான ஆட்கள் வேறு வகையில் வருமானத்திற்கு வழி செய்து கொள்கிறார்கள். நாற்பதைத் தாண்டிய பிறகு நிறுவனம் நம்மை வெளியே போகச் சொன்னால் என்ன செய்வது? எனது முன்னாள் மேனஜர் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாக பிரியாணிக்கடையில் ஐந்து சதவீதம் முதலீடு செய்தார். ஐந்து சதவீதம் முதலீடு செய்தால் என்ன வருமானம் என்று யோசித்தால் மாத வருமானம் லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறதாம். அந்த பிரியாணிக்கடை இப்பொழுது பெங்களூரில் ஏரியாவுக்கு ஏரியா கிளை விரிக்கிறது. அப்புறம் வருமானம் வராமல் என்ன? 

அது இருக்கட்டும்.

மென்பொருள் துறையில்தான் இப்படி. உற்பத்தி துறையில் இப்படி இல்லை. மீசை நரைக்க நரைக்க மதிப்பு ஏறிக் கொண்டே போகிறது. முதலில் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். வருடம் இரண்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வு கொடுக்கிறார்கள். முப்பத்தைந்து வயது வரையிலும் கொஞ்சம் சிரமம்தான். ஆனால் முப்பத்தைந்து வாக்கில் தங்களது துறையில் கைதேர்ந்தவர்களாகிவிடுகிறார்கள். கிட்டத்தட்ட பதினைந்து வருட அனுபவங்கள். எந்த ஸ்க்ரூ லூஸ் ஆனால் எந்திரத்தின் சப்தம் மாறும் என்பது வரைக்கும் தெரிந்து கொள்கிறார்கள். பிறகு அவர்களது மதிப்பே தனிதான். வேலையே இல்லையென்றாலும் நாற்பது வயதில் ஆலோசகர்களாக கொடிகட்டுபவர்கள் அதிகம். நாற்பத்தைந்து வயதில் மொதுமேலாளர் அளவுக்கு ஆகிவிடுகிறார்கள்.

பி.ஈ முடித்துவிட்டு ஐடியிலேயே வேலை வேண்டும் என்று விரும்பும் விட்டில் பூச்சிகளிடம் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். வளாக நேர்முகத் தேர்வுகளிலோ அல்லது சுலபமாகவோ மென்பொருள் துறையில் வேலை கிடைத்துவிட்டால் பரவாயில்லை. ஆனால் வேலையே கிடைக்காமல் இருக்கும் போது ‘எனக்கு ஐடியில்தான் வேலை வேண்டும்’ என்று தவமிருக்க வேண்டியதில்லை. ஒருவேளை விபத்து போல வேறு துறைகளில் வேலைக்குச் சேர நேரிட்டால் உடனடி சம்பளத்தைப் பற்றி கவலைப்படாமல் அனுபவத்தை பெற்றுக் கொள்வதுதான் நல்லது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒருவர் அழைத்திருந்தார். பெங்களூரில்தான் இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பாக மென்பொருளில் வேலை தேடித்தான் இங்கே வந்திருக்கிறார். வந்தவருக்கு ஊடகத்துறையில் வேலை கிடைத்துவிட்டது. இணைய ஊடகம். அந்தத் தளத்திற்கு ஒரு பிரிவின் செய்திகளை எழுதித்தருவதுதான் வேலை. வேலை பிடித்திருக்கிறதாம். ஆனால் சம்பளம்தான் பிடிக்கவில்லை என்றார். அவரது அம்மா அப்பாவுக்கெல்லாம் ஒரே வருத்தம். பொறியியல் முடித்துவிட்டு இவ்வளவு குறைவாகச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான் என்று புலம்புகிறார்களாம். அவர்களுக்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும்? மகன் ப்ளைட் ஏற வேண்டும். லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஏகப்பட்ட கோட்டைகளை கட்டியிருப்பார்கள். இப்பொழுது சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தால் வருந்தத்தானே செய்வார்கள்? தங்களது கோட்டையிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு செங்கல்லை பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.

எனக்கு என்னவோ அவர் சரியான துறையில் இருப்பதாகத்தான் தெரிகிறது. பொறியியல் முடித்துவிட்ட ஒரே காரணத்திற்காக எல்லோரும் விழும் குழியிலேயே அவரும் விழ வேண்டும் என்றில்லை. இணைய ஊடகம் என்பது மிகப்பெரிய பூதமாக வளரப் போகிறது. இன்று கூட பிலிப்கார்ட் நிறுவனர் ‘சீனாவில் ஒன்பது வருடங்களுக்கு முன்பாக எப்படி இணையப்பயன்பாடு இருந்தததோ அப்படித்தான் இந்தியாவில் இன்று இருக்கிறது’என்று பேசியிருந்தார். ஆக இந்த ஊடகத்திற்கான எதிர்காலம் என்பது மிகப் பிரகாசமானது. இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் பன்மடங்கு வளரப் போகிறது. அப்பொழுது இந்தத் துறையில் வல்லுனர்களுக்கான தேவை என்பது வதவதவென இருக்கும். வெறும் வெப்சைட் டெவலப்மெண்ட் மட்டும் வேலை இல்லை- இணையதளங்களின் உள்ளடக்கம் எழுதுபவர்களுக்கான தேவையைச் சொல்கிறேன்.

இந்த வேலையைச் செய்வதற்கு ஒரு அடிப்படைத் தகுதி இருக்கிறது. வாசகர்களின் நாடி பார்த்துப் பழக வேண்டும். எதை எழுதினால் வாசிப்பார்கள். எப்படி எழுதினால் மனதுக்குள் கைதட்டுவார்கள் என்று தெரிய வேண்டும். அதை அறிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அனுபவத்தில்தான் வரும். கட்டுரைகளுக்கான தலைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் கூட சூட்சமம் இருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொள்ள சிலருக்கு ஐந்து ஆண்டுகள் ஆகலாம் சிலருக்கு பத்து ஆண்டுகள் ஆகலாம். ஆனால் இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பவருக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன். பெரும்பாலான வியாபாரங்களும் விளம்பரங்களும் இணையதளம் வழியாகவே நடக்கத் தொடங்கும் போது இந்தத் துறையில் அனுபவமுள்ளவர்களுக்கும் வாசகர்களுக்கு ஏற்ப கட்டுரைகளை எழுதத் தெரிந்தவர்களுக்கும் வாய்ப்புகள் நிரம்பத் துவங்கும்.

ஒரேயொரு எச்சரிக்கையை மட்டும் அவருக்குச் சொல்ல வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் இணைய ஊடகத்தில் தமிழ் எப்படி இருக்கும் என்று சரியாகக் கணிக்க முடியவில்லை. அதனால் தமிழில் மட்டும் புலமையை வளர்த்துக் கொள்வது சிக்கலாகிவிடக் கூடும். தமிழில் கலக்கலாம்தான். ஆனால் பிழைப்பு நோக்கில் யோசிக்கும் போது ஆங்கிலத்திலும் கட்டுரைகளை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்னதான் தமிழின் சில சேனல்களிலும் புதிதாகத் தொடங்கப்பட்ட செய்தித்தாள்களிலும் சம்பளத்தை அள்ளிக் கொடுத்தாலும் ஆங்கில ஊடகங்களோடு ஒப்பிடும் போது இது குறைவுதான்.

சூது கவ்வும்

மூன்று மாதங்களுக்கு முன்பு கேசவன் இந்த வீட்டை தனதாக்கிக் கொள்வான் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. கல்யாணம் கூட செய்துவிடலாம் போலிருக்கிறது ஆனால் வீடு கட்டி குடியேறுவது இருக்கிறதே- எத்தனை பிரச்சினைகள்? எத்தனை வில்லன்கள்? எத்தனை தாதாக்கள்? எத்தனை அழிச்சாட்டியங்கள்? இதோ அத்தனை எதிரிகளையும் முடித்துவிட்டு நடு ஹாலில் அமர்ந்து அனுஷ்காவின் பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இந்த இடத்தில் ஒரு ப்ளாஷ்பேக் இருக்கிறது.

பதினேழு வயதில் காலில் ரப்பர் செருப்போடு அவன் பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்த போது மற்றவர்கள் மார்க்கமாகத்தான் பார்த்தார்கள். கான்வெண்ட் முடித்து வந்திருந்த சிட்டுகளுகளும் ஜெண்டில்பையன்களும் சிறகடித்த அந்த வளாகத்தில் தேங்காய் எண்ணெய் பூசிய தலையும் எடுத்து தைத்த முழுக்கை சட்டையுமாக நான்கைந்து பையன்கள்தான் வித்தியாசமாகத் திரிந்தார்கள். அதில் கேசவன் ஒரு படி மேல். டக் இன் செய்த பேண்ட்டுக்குள் மேல் அரைஞாண் கயிறு தெரிந்து கொண்டிருக்கும். பெண்கள் கமுக்கமாக சிரித்துக் கொள்வார்கள். ஆனால் ராஜேஸ்வரி மேடம் வெளிப்படையாகவே கலாய்ப்பார். அவர் ஒரு அல்ட்டாப்பான மேடம். தொப்புள் தெரிந்தும் தெரியாமலும் புடவை கட்டி வரும் அவர் வகுப்பில் கேசவனை எழுந்து நிற்கச் சொல்லி கலாய்ப்பார். அப்படிச் செய்யவில்லை என்றால் அவருக்குத் தூக்கமே வராது. காலி பெய்ண்ட் டப்பாவிற்குள் அடைக்கப்பட்ட ஈயை தோற்கடித்துவிடுவார். அத்தனை தொண தொண. அவர் பேசப் பேச கேசவன் தலையைக் குத்தி நின்று கொள்வான். 

ஆனால் எத்தனை நாளைக்குத்தான் தலையைக் குத்துவான்? அவனும் ஹாஸ்டல் மோரில் உப்பு போட்டுக் குடிப்பவன்தானே? ஆறேழு மாதங்கள் ஓடியிருக்கும். சொரணை வந்துவிட்டது. ஒருநாள் ராஜி வழக்கம் போல ஓட்டிக் கொண்டிருந்தார். உள்ளுக்குள்ளிருந்து மாரியாத்தா எழுந்த மாதிரி கவுண்ட்டர்-அட்டாக் கொடுத்தான் கேசவன். அதுவும் எப்படி? ‘மேம் இதோட நிறுத்திக்குங்க..இல்லைன்னா அத்தனை பேர் முன்னாடி ப்ரோபோஸ் பண்ணிடுவேன்’ என்றான். அவ்வளவுதான். அதன்பிறகு திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி ராஜேஸ்வரி இவன் பக்கம் திரும்பியே பார்ப்பதில்லை. புடவை வேண்டுமானால் கால் இஞ்ச் கீழே இறங்கியது.

குனிய வரைக்கும்தான் கொட்டுவார்கள் என்று கேசவன் புரிந்து கொண்ட தருணம் அது. அதன் பிறகு கண்ணில்படுவர்களையெல்லாம் கலாய்க்கத் தொடங்கிவிட்டான். கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அடுத்தவர்களை கலாய்த்துக் கொண்டிருப்பவர்களின் மனதுக்குள் தன்னம்பிக்கை தானாகவே நீல்கமல் சேர் போட்டு அமர்ந்து கொள்ளும். ‘எவனா இருந்தாலும் வெட்டுவேன்’ என்பது மாதிரிதான். பிறகு கல்லூரியில் கேசவனும் கெத்துக் காட்டத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஆளே மாறிவிட்டான். ட்ரெஸ்ஸிங்கும், ஸ்டைலும் குறிப்பாக - கடலையும். கண்கொள்ளாக்காட்சிதான். ஆளும் வாயும் துறுதுறுப்பாகவே இருப்பதால் பெண்களின் இதயத்தில் கால் செண்ட் இடத்தைப் பிடித்துவிட்டான். அப்பொழுது பிக்கப் ஆனவள்தான் ப்ரணீதா. இனி கதை முழுவதும் கேசவனுக்கு காதலியாக இருக்கப் போகிறாள். காதல் பெருகிக் பொங்கி பிரவாகமெடுத்த கதையை இன்னொரு நாள் சொல்கிறேன். இப்பொழுது வீடுகட்டிய கதைதான் முக்கியம்.

ப்ரணீதா தெலுங்குப் பெண். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்ட ரெட்டியார் குடும்பத்திலிருந்து வந்திருக்கிறாள். அவளது அப்பா வாத்தியார்- கணக்கு வாத்தியார். அம்மா இல்லை-பள்ளியில் படிக்கும் போதே ஏதோ ஒரு பெயர் தெரியாத நோய் வாரி எடுத்துக் கொண்டுவிட்டது. அதற்காக அவள் அம்மாவை இழந்துவிட்ட சினிமா நாயகிகளைப் போல அமைதியாக, குடும்ப குத்துவிளக்காக்கவெல்லாம் இருந்ததில்லை. எனர்ஜெடிக்கான பெண் அவள். கேசவன் சொதப்பும் போதெல்லாம் அது அசைன்மெண்ட்டாக இருந்தாலும் சரி; செமஸ்டர் படிப்பாக இருந்தாலும் சரி அவள் கை கொடுத்து தூக்கிவிட்டுவிடுவாள். அப்படித்தான் அவள் கொடுத்த கையை இவனும் இறுகப்பிடித்து காதலியாக்கிக் கொண்டான்.

ஹீரோவின் பூர்விகக் கதையைச் சொல்லாமல் விட்டுவிட்டேன் பாருங்கள்.

அப்பா விவசாயம். வானம் பார்த்த பூமி. மூணே முக்கால் ஏக்கரை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணுக்கு திருமணமும் முடித்து அனுப்பியது போக இவனை பொறியியல் படிப்பு வரை கொண்டு வந்து சேர்த்துவிட்டார். இன்னும் இரண்டு வருடங்கள் ஓட்டிவிட்டால் பையன் சம்பாதியத்துக்கு வந்துவிடுவான். இந்த விவசாயத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்- அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தார். இவன் இங்கு கடலை போட்டு காலத்தை ஓட்டித் திரிகிறான்.

ப்ரணீதா கொஞ்சம் சூட்டிப்பு அல்லவா? படிப்பை முடிக்கும் போதே டிசிஎஸ் நிறுவனம் நடத்திய கேம்பஸ் இண்டர்வியூவில் வேலையை வாங்கிக் கொண்டாள். கேசவன் முக்கி முக்கிப் பார்த்தான். ஒன்றும் வேலைக்காகவில்லை. பெரும்பாலும் எழுத்துத் தேர்விலேயே கோட்டைவிட்டுவிடுவான். மிஞ்சி நேர்முகத் தேர்வுக்குப் போனாலும் பெரிதாக சோபிக்க முடியவில்லை. என்னதான் ஆள் தோற்றத்தில் மாறியிருந்தாலும் நாக்கு காட்டிக் கொடுத்துவிடுமல்லவா? சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் ஃப்ளோவில் வரவில்லை. இப்படியே ஒவ்வொரு நிறுவனமாக நிராகரித்துக் கொண்டே வந்தார்கள். இவன் தேறவில்லை.

படிப்பு முடிந்துவிட்டது. அடுத்து?

டிசிஎஸ் நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் சேர வரச்சொல்லி ப்ரணீதாவுக்கு கடிதம் வந்துவிட்டது. ஒரு மாதத்தில் கேசவனையும் பெங்களூருக்குச் வரச்சொல்லி அழைத்துக் கொண்டாள். வேலை தேடுகிறேன் என்று சொல்லிக் கிளம்பியவன் பெங்களூரில் இன்னும் இரண்டு உதவாக்கரைகளுடன் சேர்ந்து கொண்டான். அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு ஒரே ஆட்டம்தான். அவ்வப்போது செலவுக்கு ப்ரணீதாவிடம் வாங்கிக் கொள்வான். கேசவனின் அப்பாவும் நொந்து போனார். ‘இவனை பெத்ததுக்கு பதிலா ஒரு அம்மிக்கல்லை பெத்திருக்கலாம்’ என்று கேசவனின் அம்மாவும் சலித்துப் போனார். ஆனால் இப்படியான வெட்டிப்பயல்களுக்கும் வாழ்க்கை நிறையக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. கேசவன்+உதவாக்கரை க்ரூப்பும் அப்படித்தான் வேலையை வாங்கினார்கள். 

Fake எக்ஸ்பீரியன்ஸ்.

தாங்கள் வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு வருடங்களும் வேறொரு நிறுவனத்தில் வேலை பார்த்ததாகச் பொய்யைச் சொல்லி ஒவ்வொருவராக உள்ளே முட்டிவிட்டார்கள். ஐடியைப் பொறுத்தவரைக்கும் உள்ளே நுழைவதுதான் கஷ்டம். நுழைந்துவிட்டால் சமாளித்துவிடலாம். இரண்டு வருட அனுபவம் இருக்கிறது என்று வேலை வாங்கியதால் ப்ரணீதாவை விட கேசவனுக்கு சம்பளம் அதிகம். அதற்காகவே அலட்டிக் கொண்டு திரிந்தான். ப்ரணீதா தெத்துப்பல் தெரியாமல் தனக்குள் சிரித்துக் கொள்வாள். அவளுக்கும் சந்தோஷம்தான்.

வேலைக்குச் சேர்ந்தவுடனே முதல் வேலையாக வீடு வாங்குவதற்கான வழியைத் தேடச் சொல்லி பிரணீதாதான் சொன்னாள். அவள் சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கும். அவளது அப்பாவிடம் இவனைப் பற்றிச் சொல்வதற்கான ப்ளஸ் பாய்ண்ட்டாக இருக்கும் அல்லவா? முதலில் ஒரு அபார்ட்மெண்டில் ப்ளாட் வாங்கலாம் என்றுதான் யோசித்தார்கள். விசாரிக்கவும் தொடங்கிவிட்டான். ப்ளாட் என்றால் வங்கியில் கடன் வாங்குவதும் எளிது. ஆனால் பொம்மனஹள்ளியில் ஒரு காலி இடம் இருப்பதாகச் சொன்னார்கள். இடம் வாங்கிக் கட்டினால் நம் விருப்பப்படி கட்டலாம் என்று ப்ரணீதா சொன்னாள். அதுவும் சரிதான்.

எப்படி வாங்குவது? அப்பாவிடம்தான் பேசினான். முப்பது வருடங்களாக சோறு போட்ட மூணே முக்கால் ஏக்கரை விற்று மூணேகால் செண்ட் இடத்தை வாங்கினார்கள். இடம் வாங்குவதுதான் சிரமம். இடத்தை வாங்கிவிட்டால் கட்டுவதற்கு வங்கியில் கடன் வாங்கிவிடலாம். வாங்கிவிட்டார்கள். மடமடவென்று வீடு தயாரானது. ப்ரணீதா தான் ஆல் இன் ஆல் அழகு ராணி. அக்னிமூலை, வாயு மூலை என்று ஒவ்வொரு மூலையும் அவளது விருப்பப்படியே அமைந்தது.

ஏழே மாதங்களில் கிரஹப்பிரவேசம். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சனி ஸ்கார்ப்பியோவில் வந்து இறங்கியது. உள்ளூர் தாதா. ‘வீடு இருக்கும் இந்த இடம் என்னுடையது’ என்றான். கேசவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. கூடவே ப்ரணீதாவும் ஜெர்க் ஆகி விழுந்தாள். அது எப்படி அவனுக்குச் சொந்தம் ஆகும்? எப்படியென்றால் என்னவென்று சொல்வது. தாதா என்றால் அப்படித்தான். என்ன பேசினாலும் தாதா வழிக்கு வருவதாக இல்லை. ஐம்பது லட்சம் தந்தால் மட்டும் கேசவனுக்கே திருப்பிக் கொடுத்துவிடுவதாகச் சொன்னான். அதுதான் கடைசி டீல். அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டான். அவனது நான்கு ஆட்கள் வீட்டுக்குள் வந்து அமர்ந்து கொண்டார்கள். இதுதான் மற்றவர்களை வழக்கமாக அவன் மிரட்டும் ஸ்டைல். எப்படித் துரத்துவது என்று தெரியாமல் மண்டை காய்ந்தார்கள். வீடு கட்டுவதற்குள்ளேயே கண்ணாமுழி திருகிவிட்டது. இனி ஐம்பது லட்சத்துக்கு எங்கே போவது? கிட்னியை விற்றால் கூட காசு தேறாது. கவுன்சிலரைப் பார்த்தாலும் வேலைக்கு ஆகவில்லை; வக்கீலைப் பார்த்தாலும் வேலைக்கு ஆகவில்லை, போலீஸைப் பார்த்தாலும் வேலைக்கு ஆகவில்லை. ஆளாளுக்கு சமாதானமாக போய்விடச் சொன்னார்கள்.  சமாதனமா? ஒன்று ஐம்பது லட்சம் கொடுக்க வேண்டும் அல்லது கட்டிய வீட்டைக் கொடுக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் சமாதானமா? அநியாயம். கேசவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை?

எல்லோருக்கும் ஒரு ஐடியா மணி வாய்ப்பது போலவே கேசவன் அண்ட் கோவுக்கும் ஒரு வாய்தா வக்கீல் மாட்டினார். அவர்தான் வழியைச் சொன்னார். இந்த தாதாவுக்குத் தெரியாமல் வேறொரு தாதாவுக்கு விற்றுவிடுவதுதான் ஐடியா. அது சாத்தியமா என்று புரியவில்லை. ஆனால் வக்கீல்தான் உசுப்பேற்றினார். இந்த தாதா இடத்தை பிடித்து வைத்திருக்கும் செய்தி வெளியே கசிவதற்குள் விற்றுவிடலாம் என்றார். இப்போதைக்கு அது ஒன்றுதான் வழி. ஒத்துக் கொண்டார்கள்.

முதல் வேலையாக தாதாவிடம் கெஞ்சினார்கள். ‘பத்து நாள் கொடுத்தால் தனது தந்தைக்கு வீட்டைக் காட்டிவிடுவதாகவும் அவருக்கு இதுதான் கனவு’ என்றெல்லாம் செண்டிமெண்டலாக கவிழ்த்தார்கள். தாதா ஒரு முட்டைக் கோஸ் மண்டையன். நம்பிக் கொண்டான். ‘பத்தே நாள்தான். சரியா?’ என்றான். பயங்கரமாகத் தலையை ஆட்டிவிட்டு வந்தார்கள். அடுத்த வினாடியிலிருந்து பரபரப்பாகிவிட்டார்கள். யாரிடம் விற்பது என்பதற்கு ஸ்கெட்ச் போட்டார்கள். ஒவ்வொருவராக கழித்துக் கொண்டே வந்தார்கள். கடைசியில் இன்னொரு இனாவானா தாதா மாட்டிக் கொண்டான். ரியல் எஸ்டேட்காரன். முதலில் எழுபத்தைந்து லட்சம் சொன்னார்கள். அவன் நாற்பது லட்சம் என்றான். இவர்கள் அறுபத்தைந்து லட்சத்திற்கு இறங்கினார்கள். அவன் நாற்பத்தியொரு லட்சத்துக்கு ஏறினான். இப்படியே ஏறுவதும் இறங்குவதுமாக கடைசியில் ஐம்பதுக்கு மேல் ஒரு பைசா இல்லயென்று பல்லைக் காட்டிவிட்டான். வந்தது லாபம் என்று சம்மதித்துவிட்டார்கள்.

விதி வலியது இல்லையா? சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து பணத்தை வாங்கிய அடுத்த நிமிடம் முதல் தாதா வந்தான். யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்கள். சிக்கிக் கொண்டார்கள் சின்னப்பையன்கள். நல்லவேளையாக பணம் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது. பணத்தை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டம். நகரத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் ஓடினார்கள். நாயும் பேயும் துரத்துவது போல இரண்டு தாதாக்களும் துரத்துகிறார்கள். வெகுநேரம் ஓடி ஓடி குருட்டுவாக்கில் தப்பித்து எங்கேயோ பதுங்கிக் கொண்டார்கள். மூச்சு வாங்குகிறது. இனி எப்படி தப்பிப்பது?

க்ளைமேக்ஸ் ஐடியாவையும் ப்ரணீதாதான் கொடுத்தாள்- முதல் தாதாவைக் கொன்றுவிடலாம். 

அது அவ்வளவு சுலபமா? அவனது அரசியல் தொடர்புகள், கூடவே திரியும் அல்லைக்கைகள்- இதையெல்லாம் எப்படித் தாண்டுவது? அவனைக் கொல்லுவதற்கான காய்களை நகர்த்தும் போதே இவனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் இன்னொரு தாதா க்ரூப்பையும் சமாளித்தாக வேண்டும். எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் யானையைக் கட்டி இமயமலையை இழுப்பது போலத்தான். 

ஆனாலும் கொன்றாக வேண்டும். தாதாவின் சோற்றில் விஷம் வைத்துப் பார்த்தார்கள், ப்ரணீதாவின் தோழி மூலம் அவனை தனி இடத்துக்கு இழுத்துப் பார்த்தார்கள். seduction. ம்ஹூம். எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. தப்பித்துக் கொண்டேயிருந்தான். ஊரிலிருந்து அப்பா வேறு ‘எப்போ குடி போற?’ என்று ப்ரஷர் ஏற்றிக் கொண்டிருந்தார். லீவ் முடியப் போகிறது என்று மேனேஜர் தலைக்கு மேல் கல்லைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். பத்தாவது நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கேசவனும், ப்ரணீதாவும், உருப்படாத கேசுகளும் ‘இனி செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்று நினைக்கத் தொடங்கியிருந்தார்கள். 

ப்ரணீதா அழைத்தாள்.  ‘என்ன மச்சி தாதாவை போட்டுட்டயா? செத்துட்டதா லோக்கல் நியூஸ் ஸ்க்ரோல் ஓடுது...ஒண்ணும் பிரச்சினை இல்லல....எனக்கு பயமா இருக்குடா’

கேசவன் போனைக் கட் செய்துவிட்டு தாதாவின் வீட்டுக்கு ஓடினான்.

சொன்னால் நம்பமாட்டீர்கள்- ஆனால் அது நடந்துவிட்டது. அவர்கள் அவகாசமாக கேட்டிருந்த பத்து நாட்களில் கடைசி நாளில் நடந்தது. தாதாவின் கட்டிலுக்கடியில் ஒளிந்திருந்தவன் எவனோ கொன்றிருக்கிறான்- தலையணையை மூக்கின் மீது வைத்து அமுக்கியதில் தாதா செத்துப் போனான். கால் மட்டும் துள்ளி அடங்கியதாம். யாருமே சந்தேகப்படவில்லை. துளி சத்தமில்லாமல் காரியத்தை சுத்தமாக முடித்துவிட்டு போயிருக்கிறான் அந்தப் புண்ணியவான். கைரேகை இல்லை, தலைமுடி இல்லை. போலீஸ் விசாரணை இல்லை; பிரேத பரிசோதனையில் சந்தேகம் இல்லை. அல்லக்கைகளாலும், ப்ரணீதாவினாலும் கூட நம்பவில்லை. அவ்வளவு ஏன் கேசவனே நம்பவில்லை. எப்படி நம்புவான்? அவனா கொன்றான்? ம்ஹூம். ஏதோ உள்ளரசியலில் தாதாவை வேறு எவனோ போட்டுத்தள்ளிவிட்டான்.

கிரெடிட்டை கேசவன் எடுத்துக் கொண்டு அல்லக்கைகளிடமும், ப்ரணீதாவிடமும் ஹீரோ ஆகிவிட்டான். இதோ ஐம்பது லட்சத்தைத் இரண்டாவது தாதாவுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டு முதல் பத்தியில் சொன்னது போல நடு ஹாலில் அமர்ந்து அனுஷ்காவின் பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

[சூது கவ்வும், மூடர் கூடம் போன்ற ஏழெட்டு படங்களை கடந்த சில நாட்களில் பார்த்ததன் பக்க விளைவு]

Jul 29, 2014

வீட்டிலேயே இருக்க முடியாதா?

வீட்டுக்கு பக்கத்தில் ஒரு மின்சாதனக் கடை இருக்கிறது. கடையை நடத்துவது வழக்கம்போல சேட்டு பையன்தான். பையன் இல்லை - ஆண். கைலாஷ். திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது. ஹொசா ரோட்டில் இருக்கும் இந்தக் கடையை பதினைந்து வருடங்களுக்கு முன்பாகவே இன்னொரு சேட் ஆரம்பித்திருக்கிறார். பிறகு கைலாஷின் குடும்பம் விலைக்கு வாங்கிக் கொண்டது. முதலில் நான்கைந்து வருடங்களுக்கு இவரது தம்பிதான் நடத்தியிருக்கிறார். ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்தாயிரம் வரைக்கும் வியாபாரம் ஓடிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் கைலாஷ் ஒரு வங்கிப் பணியாளர். தனியார் வங்கிதான். ஆனால் நல்ல சம்பளம் கொடுத்தார்களாம்.

கடந்த இரண்டு வருடங்களாக கைலாஷூடன் எனக்கு பழக்கம். மற்ற கடைகளை விட இவரிடம் இரண்டு ரூபாயாவது குறைவாக இருக்கும். அதைவிட முக்கியம் அவரது பேச்சுதான். நாக்கில் தேன் தடவி பேசுவார். ஏமாற்றுகிறாரோ இல்லையோ அந்த பேச்சுக்காகவே அவர் கடையில் வாங்கிவிடுவேன். நேற்று LED விளக்கு வாங்க வேண்டியிருந்தது. அதை வாங்கச் சென்ற போது கடையை மூடும் நேரம். மழை தூறிக் கொண்டிருந்தது. உடனடியாக வீடு திரும்பாமல் பேசிக் கொண்டிருந்தோம். 

சில வருடங்களுக்கு முன்பாக கடையைப் பார்த்துக் கொண்டிருந்த தம்பி தும்கூர் சென்றுவிட கடையின் பொறுப்பை கைலாஷ் ஏற்றுக் கொண்டார். அவர் வங்கியில் சம்பாதித்ததைவிடவும் கடையில் அதிகமாகச் சம்பாதிக்கிறாராம். இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு நாற்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வியாபாரம் ஆகிறது. மூன்று சதவீதம் இலாபமாக நின்றால் கூட போதும். பல நாட்களில் ஐந்து சதவீதமே நிற்கிறது. அதனால் பணம் பிரச்சினையில்லை. பிரச்சினையெல்லாம் வீடுதான். மாதத்தில் அமாவாசை மட்டும்தான் விடுமுறை. அன்றும் கூட ஆடிட்டரை பார்க்க வேண்டும்; வசூலுக்குச் செல்ல வேண்டும் என்று நிற்க நேரம் இருப்பதில்லை. மற்ற நாட்களில் எல்லாம் காலையில் எட்டு மணிக்கு கடையைத் திறந்தால் இரவு பத்து மணி ஆகிறது. இரவில் வீட்டுக்குச் செல்லும் போது குழந்தைகள் உறங்கிவிடுகிறார்கள். நீங்கள் வீட்டை கவனிப்பதேயில்லை என்று மனைவிக்கு வருத்தம். அப்பா வீட்டிலேயே இருப்பதில்லை என்று குழந்தைகளுக்கும் வருத்தம். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கைலாஷ் அலைந்து கொண்டிருக்கிறார். 

இதே பிரச்சினையைச் சொன்ன வேறொரு மனிதரைத் தெரியும். அவர் ஐடி நிறுவனத்தில்தான் பணிபுரிகிறார். சூழல் சார்ந்த நடவடிக்கைகளுக்காக ஒரு என்.ஜி.ஓ நடத்துகிறார். என்.ஜி.ஓ என்றால் உண்மையிலேயே என்.ஜி.ஓதான். சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டிராத ஒரு அமைப்பு. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நான்காயிரம் மரங்களை பெங்களூரில் நட்டிருக்கிறார்கள் என்றால் முடிவு செய்து கொள்ளலாம். மழைக் காலத்தில் செடிகளை நட்டால் உயிர் பிடித்துக் கொள்ளும். அதற்காகத்தான் வெறித்தனமாக களமிறங்கியிருக்கிறார்கள். ஊருக்கு சேவகம் செய்கிறார். ஆனால் மனைவிக்கு புருஷனாக இல்லை; குழந்தைக்கு அப்பனாக இல்லை. சனி, ஞாயிறு ஆனால் மண்வெட்டியைத் தூக்கி தோளில் போட்டபடி கிளம்பிவிடுகிறார். மற்ற நாட்களில் வேலைக்கு ஆட்களைத் திரட்டுவதும், நாற்றுகளை வாங்குவதுமாக இதே வேலையாக அழுகிறார். மனைவியும் குழந்தையும் தகராறு செய்கிறார்கள். ஆனால் விட்டுவிட முடியவில்லை. 

இதில் யாரைக் குற்றம் சொல்வது? வாரத்தில் ஒரு நாளைத்தான் மனைவியும் குழந்தைகளும் தங்களுக்காகக் கேட்கிறார்கள். அதைக் கூட ஆண்களால் ஒதுக்க முடிவதில்லை. கிட்டத்தட்ட பல வீடுகளில் இதே பிரச்சினை உண்டு. ஆண்களால் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி தங்களை குடும்பத்திலிருந்து தற்காலிகமாக அந்நியப்படுத்திக் கொள்ள முடிகிறது. தொழிலைக் காரணம் காட்டலாம். தங்களது லட்சியத்தைக் காரணம் காட்டலாம். நண்பர்களைக் கை நீட்டலாம். உறவுகளைப் பார்க்கச் செல்லலாம்- இப்படி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டைவிட்டு வெளியே செல்கிறார்கள். ஆண்கள் நினைத்தால் நான்கு பேராகச் சேர்ந்து மலைவாசஸ்தலத்திற்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம். சனிக்கிழமை இரவில் நண்பர்களின் வீடுகளில் தங்கலாம். வேலையிருந்தால் அலுவலகத்திலேயே படுத்துக் கொள்ளலாம். இதெல்லாம் எத்தனை பெண்களுக்கு இது சாத்தியம்? அதுவும் திருமணமான பெண்களுக்கு. 

கணவனையும், குழந்தையையும் விட்டுவிட்டு சமூகசேவகம் செய்கிறேன் என்றும் வேலைக்குச் செல்கிறேன் என்றும் ஒரு நாள் கூட வீட்டில் தங்காமல் மனைவி கிளம்பிச் சென்றால் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எத்தனை ஆண்களுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு இல்லை. வெளியில் வேண்டுமானால் பெண்ணுரிமை, சுதந்திரம் என்று தேங்காய் உருட்டலாம். அலுவலகம் முடித்து வரும் மனைவி வீட்டிற்கு வந்து கணினியைத் திறந்தால் கோபம் வந்து தொலைக்கிறது.

யோசித்துப் பார்த்தால் அடிப்படையில் நம் சமூக அமைப்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. நமது மனநிலையும் அதே போலத்தான் இருக்கிறது. வெளியில்தான் இதெல்லாம் மாறிவிட்டது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

பெண்கள் மது அருந்துவதையும், சிகரெட் பிடிப்பதையும்தான் நக்கலடிக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.  ஆனால் ஆண்களுக்கு எப்பொழுதும் டாஸ்மாக்கும், மதுபாட்டிலும் ஒரு வீரச்சின்னம்தானே? ‘எங்க ஆபிஸ்ல பெண்கள் குடிக்கிறாங்க’ என்று யாராவது சொல்லும் போது ஏற்படும் கிளுகிளுப்பு ஏன் எந்தக்காலத்திலும் குறைவதில்லை என்று தெரியவில்லை. பாலியல் பற்றி பெண்கள் ஓரிரு வரிகள் எழுதினால் ஏன் மனம் அத்தனை குதூகலப்படுகிறது? இதையெல்லாம் அடுத்த வீட்டுப் பெண்கள் செய்தால்தான் கிளுகிளுப்பும் குதூகலமும். நம் வீட்டுப் பெண்கள் சிகரெட் பிடிப்பதையோ, மது அருந்துவதையோ, பாலியல் பற்றி பேசுவதையோ எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ள முடியும்? விரல் விட்டு எண்ணும் அளவுக்குக் கூட தேறாது.

குடிப்பது, புகைப்பதையெல்லாம் சுதந்திரம் என்று சொல்லவில்லை. ஆனால் இதிலெல்லாம்தான் நமது லட்சணம் ‘சுருக்’ என்று குத்துகிறது. இதையெல்லாம் ஆண்கள் செய்யலாம். இதையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது என்று எந்தக் காலத்திலோ வரையறை செய்யப்பட்ட அத்தனை கோடுகளும் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கின்றன. அவ்வப்போது அவற்றைத் துளி அழித்து மீண்டும் வரைந்து கொள்கிறோம். உலகம் மாறிக் கொண்டிருக்கும் வேகத்தோடு ஒப்பிடும் போது இந்த அழித்து வரையும் வேகம் மிகக் குறைவு. ஆண்களும் சரி பெண்களும் சரி- இந்த வரையறைகளைப் பற்றிய அதீதமான conscious உடனேயே இருக்கிறோம். அதுதான் அடிப்படையான சிக்கல். வரையறைகளின் எல்லைகள் flexible ஆகும் போது எதிர்பார்ப்புகளின் அழுத்தம் குறையக் கூடும். ஆனால் எல்லைகளை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன?

ஆண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்கள் என்பதன் அட்வாண்டேஜ்களை ஆண்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

கைலாஷூக்கும், சூழலியலாளருக்கும், மிச்சமிருக்கும் ஆண்களுக்கும் இருப்பது ஒரே பிரச்சினைதான். அதே போலத்தான் கைலாஷின் மனைவிக்கும், சூழலியலாளரின் மனைவிக்கும், மிச்சமிருக்கும் மனைவியருக்கும் இருப்பதும் ஒரே பிரச்சினைதான். ஆனால் அதுதான் இப்போதைக்கு தீர்க்கவே முடியாத- நம் ஜீனிலேயே ஊறிய பிரச்சினை.

Jul 27, 2014

அடுத்தது என்ன?

நேற்று ராஜலிங்கம் அழைத்திருந்தார். அவரும் பெங்களூர்வாசிதான்.  நல்ல செய்தி இருப்பதாகச் சொன்னார். ‘என்ன சார்?’ என்றால் ‘பதிப்பகம் ஆரம்பிக்கிறேன்’ என்கிறார். அதை நல்ல செய்தி என்று இப்பொழுதே எப்படி முடிவு செய்தார் என்று தெரியவில்லை. எழுத்தாளர்களை பிடித்து, படைப்புகளை வாங்கி, வடிவைமப்பை முடித்து, அச்சடித்து, விற்று, இலாபம் எடுத்து, படைப்பாளர்கள் ராயல்டி கேட்டால் அதைக் கொடுத்து இல்லையென்றால் ‘உங்க புத்தகமே விக்கலையே’ என்று புருடா விட்டு.... மூச்சு வாங்குகிறது. இத்தனையும் ஒரே ஆளாகச் செய்யவிருக்கிறார். ஒரு வருடத்திற்குப் பிறகும் இதே மனநிலையில் இருந்தார் என்றால் தமிழுக்கு இன்னொரு பதிப்பகம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.

எழுத்தாளருக்கும் இப்படித்தான். முதல் புத்தகம் பதிப்பிக்கும் வரைக்கும் அதிதீவிர ஆசை இருக்கும். முதல் குழந்தையைப் பார்ப்பது போல. புத்தகம் வந்தவுடன் ‘இது பைசா பிரையோஜனமில்லாத வேலை’ என்று தோன்றும். அதன் பிறகு அந்த ஆசை அப்படியே வடிந்துவிடும். ஒரே புத்தகத்தோடு காணாமல் போன தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கு எடுப்பதற்கும் மக்கட்தொகையைக் கணக்கெடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. அத்தனை பேர் இருப்பார்கள். பதிப்பகமும் அப்படித்தான். இந்தத் தொழிலில் இருக்கும் சிக்கல்களை எல்லாம் பார்க்காத வரைக்கும் இது நல்ல தொழிலாகத் தெரியும். தலையை உள்ளே நீட்டினால் படார் படார் என்று அடி விழத் துவங்கும். தம் கட்டி தலையை நீட்டிக் கொண்டிருப்பவர்கள் மட்டும் பதிப்பாளர்களாக கோலோச்சுகிறார்கள். அடி பொறுக்க முடியாமல் தலையை இழுத்துக் கொள்பவர்கள் அவ்வளவுதான்.

ராஜலிங்கம் நேக்குத் தெரிந்த மனிதர். சமாளித்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. முக்கியமாக வெளிப்படையானவர். புத்தக லே-அவுட்டிலிருந்து அட்டை வடிவமைப்பு வரைக்கும் அவரே செய்கிறார். அதனால் அச்சு செலவு மட்டும்தான் செலவு. தாக்குப்பிடித்துவிட்டார் என்றால் நிறைய புத்தகங்களை கொண்டு வரும் வலுவுள்ளவர். ஒரு புதிய பதிப்பகம் வருவது வாசகர்களுக்கும் தமிழுக்கும் நல்லதுதானே? ஆனால் இங்கு தாக்குப் பிடிப்பதற்கு நேக்கும் நேர்மையும் மட்டும் போதாது. பார்க்கலாம்.

‘உங்க புத்தகத்தைக் கொண்டுவரலாமா?’ என்றார். உண்மையில் இந்த வருடம் புத்தகம் கொண்டு வருவதற்கான எந்த ஐடியாவும் இல்லாமல் இருந்தேன். ஒரு நாவல்தான் முயற்சியாக இருந்தது. முக்கால்வாசி முடித்து வைத்திருக்கிறேன். ஏனோ இறுதிப்பகுதி திருப்தியாகவே வரவில்லை. அப்படியே கிடக்கிறது. இப்போதைக்கு அந்த நாவலை முடிக்க முடியாது. யாவரும்.காம் பதிப்பகத்தின் நண்பர் ஜீவ கரிகாலனிடம் மட்டும் அடுத்த புத்தகம் பற்றி பேசியிருந்தேன். அவர்தானே முந்தைய புத்தகத்தின் பதிப்பாளர். அவர்கள் இந்த வருடத்திற்கான செயல்திட்டத்தை இன்னும் முடிவு செய்யவில்லை. அதனால் இந்த வருடம் எந்தப் புத்தகமும் வராது என்றுதான் நினைத்திருந்தேன். ராஜலிங்கம் கேட்டவுடன் மண்டைக்குள் பல்ப் எரியத் துவங்கியது. முப்பது கட்டுரைகள் இருக்கின்றன. ‘சாம்பிள் அனுப்பறேன்....பிடிச்சிருந்தா சொல்லுங்க’ என்று பன்னிரெண்டு கட்டுரைகளை அனுப்பியிருந்தேன். ‘சூப்பரா இருக்கு’ என்று பதில் அனுப்பியிருந்தார். 

கிட்டத்தட்ட அடுத்த புத்தகத்திற்கான பதிப்பகம் அந்த பதிலிலேயே முடிவாகிவிட்டது. பதிப்பகத்தின் பெயரே ‘புத்தகம்’தான். 

இன்று காலையில் ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் சந்தித்துக் கொண்டோம். அடையார் ஆனந்தபவனில் காபி வாங்கிக் கொடுத்தார். அங்கு ஆனந்தபவன் இருப்பது தெரியும். ஆனால் பர்ஸை இளைக்க வைத்துவிடுவார்கள் என்பதால் பஜ்ஜி காயும் எண்ணெய் வாசத்தை பிடிப்பதோடு சரி. உள்ளே சென்றதில்லை. ஊருக்கு போகும் வழியில் சூளகிரியில் ஒரு ஆனந்தபவன் இருக்கிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பாக தெரியாத்தனமாக உள்ளே போய்விட்டோம். காபி முப்பத்தாறு ரூபாய். இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ஒரு நாளைக்கு முப்பத்தியிரண்டு ரூபாய் செலவு செய்தாலே பணக்காரராம். திட்டக்கமிஷன் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஆனந்தபவனில் காபி குடித்தால் நம்மை கோடீஸ்வரர் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள் என்று பயந்தபடியே இப்பொழுதெல்லாம் எட்டிப்பார்ப்பது கூட இல்லை.

நேற்று அனுப்பியிருந்த கட்டுரைகளில் சிலவற்றின் லே-அவுட் முடித்து பிரிண்ட்-அவுட் எடுத்து வந்திருந்தார். காபி குடிக்கும் போது நீட்டினார். வாயைப் பிளந்துவிட்டேன். நேற்றிரவு அனுப்பியதை இன்று அச்சில் பார்க்கிறேன். சூப்பர் வேகம். அவர் திட்டமிட்டிருக்கும் புத்தகங்கள் பற்றியெல்லாம் பேசினார். தனது விற்பனை முறைகளையெல்லாம் விவரித்தார். அவற்றையெல்லாம் இம்மிபிசகாமல் அவரால் அமுல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. அப்படி செயல்படுத்த முடிந்தால் பிரமாதமாக இருக்கும் என நம்புகிறேன். 

அவரோடு இன்னும் கொஞ்சம் நேரம் பேசியிருக்கலாம். ஆனால் ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டில் உணவு உண்டு வெகுநாட்கள் ஆகிவிட்டது. இன்றைக்குத்தான் அதிசயமாக தங்கியிருக்கிறேன். இன்றும் பப்ளிஷரை பார்க்கச் செல்கிறேன் என்று சொன்னால் சனீஸ்வரரை பார்க்கச் செல்கிறேன் என்று வீட்டில் இருப்பவர்களின் காதில் விழுகிறது. எதற்கு வம்பு என்று சீக்கிரமாகக் கிளம்பி வந்துவிட்டேன். 

வந்த பிறகு ஃபோனில் அழைத்தார். ‘உங்க பதிப்பகத்தலிருந்து என்னுடைய அடுத்த புத்தகம் வருது என்று வெளியில் சொல்லட்டுமா?’ என்றேன். துளி கூட யோசிக்காமல் ‘தாராளமாக..இதென்ன கேள்வி’ என்றார். 

உறுதியாகிவிட்டது. 

முதன் முதலாக இங்குதா சொல்கிறேன். தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. ஆனால் புத்தகம் முடிவாகிவிட்டது. அடுத்த புத்தகம்- கட்டுரைகளின் தொகுப்பு ‘புத்தகம்’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருகிறது. வாழ்த்துங்கள். வாழ்த்துகளில்தான் துளித் துளியாக வளர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி. 

Jul 25, 2014

முடியுமா? முடியாதா?

ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு கல்லூரியிலிருந்து அழைத்திருந்தார்கள். மாணவர்களிடம் பேச வேண்டும் என்றார்கள். டெக்னிக்கல் சமாச்சாரம்தான். வாரத்தில் நடுவில் ஒரு நாள் வரச் சொல்லியிருந்தார்கள். அலுவலகத்தில் விடுப்பு கேட்க வேண்டும். வீட்டில் அனுமதி கேட்க வேண்டும் போன்ற சிக்கல்கள் இருந்ததால் ‘நாளை உறுதி செய்கிறேன்’ என்று அழைத்தவரிடம் சொல்லியிருந்தேன். அலுவலகத்தில் விடுப்பு வாங்குவதில் சிரமம் இருக்காது. இன்னொரு இலாகாதான் சிக்கல். இருந்தாலும் எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தயாரிப்புகளை ஆரம்பித்துவிட்டேன். ஐந்தாறு பவர்பாய்ண்ட் சறுக்குகளை முடித்திருந்தேன். அன்றிரவே இன்னும் பதினைந்து சறுக்குகள்(Slide). வேலை முடிந்துவிட்டது. இன்னும் சில விவரங்களை சேர்த்தால் அவர்கள் சொல்லியபடி இருபத்தைந்திலிருந்து நாற்பது நிமிடங்கள் வரை பேசிவிடலாம். அதே சமயத்தில் இரண்டு பக்கமும் அனுமதி வாங்கியாகிவிட்டது. இனி கல்லூரியிலிருந்து அழைத்தால் உறுதிப்படுத்திவிடலாம். அடுத்த நாள் அழைப்பு வரும் என்று காத்திருந்ததுதான் மிச்சம். ம்ஹூம்.

நாமாகவே அழைத்தால் நன்றாக இருக்காது அல்லவா? ரொட்டித்துண்டுக்கு அலைகிறான் என்று நினைத்துவிடுவார்களே என பம்மிக் கொண்டிருந்தேன். இருந்தாலும் மாலை வரை பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் அழைத்தேன். தொலைபேசி சிணுங்கிக் கொண்டேயிருக்கிறது ஆனால் பதிலைக் காணவில்லை. சரி என்று கொஞ்ச நேரம் விட்டு ஏழு மணிக்கு அழைத்தால் அப்பொழுதும் பதிலைக் காணவில்லை. எட்டு மணிக்கு அழைத்தால் காத்திருப்புக்குச் செல்கிறது- அப்படியானால் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திரும்ப அழைக்கவில்லை. இனி நாமாகவே அழைப்பது மரியாதையாக இருக்காது என்று விட்டுவிட்டேன். 

அவ்வளவுதான்.

பிரச்சினை என்னவென்றால் ‘நாளை சொல்கிறேன்’ என்று சொன்னதை நம்பாமல் உடனடியாக வேறு ஒருவரை அழைத்துக் கொண்டார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் வேறொருவரை அழைத்துக் கொண்டதைச் சொல்லியிருக்கலாம் அல்லவா? சொல்லவில்லை. ‘நீங்க வேண்டாம்’ என்பதை எப்படி முகத்தில் அறையாமல் சொல்வது என்று பெரும்பாலானோரைப் போலவே அவர்களுக்கும் தெரியவில்லை.

இன்னொரு சம்பவம். 

நிசப்தம் அறக்கட்டளைக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்க விண்ணப்பங்களை வங்கியில் கொடுத்திருந்தேன். ஆக்ஸிஸ் வங்கியில். நான்கு நாட்களில் கணக்கு எண் கிடைத்துவிடும் என்றார்கள். ஆறு நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. எட்டு நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. நானாக அழைத்த போது ‘பத்து நிமிடத்தில் நிலவரம் சொல்கிறேன் சார்’ என்றார். அவ்வளவுதான். இன்னும் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆளை தொலைபேசியில் கூட பிடிக்க முடியவில்லை. இந்த வாரம் சனிக்கிழமை நேரடியாகச் செல்ல வேண்டும். ‘வேலையை முடிக்க முடியவில்லை’ என்பதை எப்படிச் சொல்வது என்று எல்லோரையும் போலவே அவருக்கும் தெரியவில்லை. அதுதான் பிரச்சினை.

இதே அறக்கட்டளை விவகாரம்தான். முன்பொரு பட்டயக்கணக்கரிடம் விசாரித்திருந்தேன். எவ்வளவு செலவு ஆகும் என்ற போது ‘பத்தாயிரம் ரூபாய்’என்றார். அது சற்று பெரிய தொகையாகத் தெரிந்தது. அதனால் வேறொரு கணக்கரிடம் விசாரிக்கத் தொடங்கியிருந்தேன். அந்தச் சமயத்தில் ‘பணம் பற்றி பிரச்சினையில்லை நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று முதல் கணக்கர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு என்ன பதிலை அனுப்புவது என்று தெரியவில்லை. அமைதியாக இருந்துவிட்டேன். ‘வேறொரு ஆடிட்டரிடம் செல்கிறேன்’ என்பதை எனக்கு நாசூக்காகச் சொல்லத் தெரியவில்லை.

பெரும்பாலானோருக்கு இந்தப் பிரச்சினை உண்டு. ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் தெரியுமே. அடுத்த முறை நம் ஃபோனையே எடுக்க மாட்டார்கள். அதே போல யாரிடமாவது ஒரு உதவி கேட்கிறோம் என்று வையுங்கள். அவரால் செய்ய முடியவில்லை என்றால் அடுத்த முறை ஆன்லைனிலேயே இருப்பார். என்ன கேள்வி கேட்டாலும் பதிலே வராது. ‘இல்லை’ என்பதை எப்படிச் சொல்வது என்ற குழப்பம்தான். 

மேற்சொன்ன பிரச்சினைகள் எல்லாமும் ஒரே வகையறாதான். எதிர்மறையான பதில்களை எப்படிச் சொல்வது என்ற வகையறா.

‘செய்ய முடியாது’ என்று சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அடுத்தவர்களின் முகம் கோணாமல் இதைச் சொல்வது ஒரு கலை. 'Firm but polite NO' என்பார்கள். உறுதியாக அதே சமயம் சிரித்துக் கொண்டே ‘இல்லை’ என்பது. ஆனால் அதன் அடிப்படை கூட நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

நம்மைக் குறை சொல்லி என்ன செய்வது? நம் வளர்ப்பு முறை அப்படி. பெரியவர்கள் சொன்னால் தட்டக் கூடாது என்று சிறுவயதிலிருந்தே பழக்கி வைத்துவிடுகிறார்கள். வாசுகி அம்மையார் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாராம். திருவள்ளுவர் ‘வாசுகி’ என்று அழைத்திருக்கிறார். கி’ என்று முடிப்பதற்குள்ளேயே வாசுகி அம்மையார் வள்ளுவப்பெருந்தகையின் முன்பாக நின்றாராம். குடத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை. கயிற்றைப் பற்றியும் கவலைப்படவில்லை. இதைத்தான் நீதி போதனையாகச் சொல்லி நம்மை வளர்த்திருக்கிறார்கள். பெரியவர்கள் என்ன சொன்னாலும் மறுக்காமல் செய்து முடிக்க வேண்டும். நாம் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்கிற வளர்ப்பு.

இதே மனநிலையோடு வளர்ந்து பிறகு யார் எதைச் சொன்னாலும் எப்படி மறுப்பது என்பதே தெரியாமல் விழி பிதுங்குகிறோம். அப்படியேதான் வேலைக்குச் சேர்கிறோம். முதலாளியோ, மேனேஜரோ என்ன வேலை கொடுத்தாலும் ‘செய்யறேன் சார்’ என்று வாங்கி வைத்துக் கொள்வோம். ஏற்கனவே என்ன வேலை இருக்கிறது என்பது பற்றியெல்லாம் கவலை இல்லை. வாங்கி குவித்துக் கொள்வோம். பிறகு என்ன கெட்டபெயர் வந்தாலும் தலையைக் குனிந்து கொண்டு நிற்க வேண்டியதுதான்.

தெரிந்தவர்களும் நண்பர்களும் ஒரு உதவி கேட்டால் அது நம்மால் முடியாது என்றாலும் கூட ‘முயற்சிக்கிறேன்’ என்று வாங்கிக் வைத்துக் கொள்வதுதான் கெட்ட பெயர் வாங்குவதற்கு முதற்காரணம். அடுத்த முறை நம்மால் செய்ய முடியக் கூடிய உதவிக்குக் கூட நம்மை அணுகமாட்டார்கள். ‘அவன் செய்ய மாட்டான்ப்பா’ என்று பத்து பேரிடம் சொல்லியும் வைப்பார்கள்.

அதே போலத்தான் யாராவது பணம் கேட்கும் போது இல்லை என்றால் இல்லை என்பதனை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அதோடு போய்விடும். ‘நாளைக்குச் சொல்லுறேன்’ என்று சொல்லிவிட்டு அவருக்கு பணமும் தராமல் அவரது ஃபோனையும் எடுக்காமல் இழுத்தடித்தால் மொத்த நட்பும் நாசமாகிவிடும்.

இதெல்லாம் எல்லோருக்குமே தெரிந்த பிரச்சினைகள்தான். தீர்வு என்ன?

முடியவில்லை என்றால் முடியாது என்பதை முதலிலேயே நாசூக்காகச் சொல்லிப் பழக வேண்டும். கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால் பழகிவிடலாம். 

இத்தனை நாட்கள் அலுவலகத்தில் நாயாக உழைத்துவிட்டு திடீரென்று முடியாது என்றால் தவறாக எடுத்துக் கொள்வார்கள். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அமுல்படுத்த வேண்டும்.  இவ்வளவு நாட்களாக கேட்பதற்கெல்லாம் ‘சரி’ என்று சொல்லிவிட்டு இப்பொழுது ‘கஷ்டம்’ என்றால் நண்பர்களும் தவறாக புரிந்து கொள்வார்கள். முடியாது என்பதை நேரடியாகச் சொல்லாமல் நமக்கு வேறு என்னென்ன சிக்கல்களும் வேலைப்பளுவும் இருக்கின்றன என்பதனை புரிய வைக்க வேண்டும். 

முதலில் ‘முடியாது’ என்பதை நேக்காக மின்னஞ்சலில் சொல்லிப் பார்க்கலாம். குறுஞ்செய்தியிலும் பழகலாம். பிறகு தொலைபேசியில் இதை பயிற்சி செய்யலாம். இதில் எல்லாம் வெற்றி பெற்ற பிறகு கடைசியில் முகத்துக்கு நேராக சிரித்துக் கொண்டே சொல்லலாம். 

சம்பள உயர்வு கேட்கும் போது மேனேஜர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் இந்த சூட்சமம் பிடிபட்டுவிடும். பல்லை இளித்துக் கொண்டே இல்லை என்பார்கள். நம்மால் எந்தக் கேள்வியும் எதிர்த்துக் கேட்க முடியாதபடிக்கான இளிப்பாக இருக்கும். 

ஆனால் ஒன்று- இதெல்லாம் பயிற்சியில்தான் வரும். எடுத்த உடனே ரிசல்ட் எதிர்பார்க்க முடியாது. 

என்னதான் பயிற்சி இருந்தாலும் வெளியிலும் அலுவலகத்திலும் வென்றுவிடலாம். அதுவே வீட்டிலிருந்து ‘பப்பாளி வாங்கிட்டு வாங்க’ என்று வரும் உத்தரவுக்கு முடியாது என்று சொல்ல முயற்சித்து நீங்கள் மண்டையை உடைத்துக் கொண்டால் கம்பெனி நிர்வாகம் பொறுப்பாகாது.

வக்கிரத்தின் வெவ்வேறு நிறங்களும் சாயம் போன கலர்ஃபுல் கல்வியும்

வெப்துனியா தளத்தில் ஒரு தொடர் எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. வெப்துனியாவுக்கு நல்ல ரீச் உண்டு. அச்சு ஊடகத்தில் எழுதுவதற்கு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள் சொல்வார்கள். அதனாலேயே அச்சு ஊடகத்தில் எழுதுவதில் பெரிய சிரமம் இருக்கிறது. அவர்கள் சொன்ன ஃபார்முலாவில் எழுதிவிட்டு பார்த்தால் நமக்கும் பிடிக்காது அவர்களுக்கும் பிடிக்காது. ஆனால் வெப்துனியாவில் அதெல்லாம் சொல்லவில்லை. ‘நான் பார்த்தேன்; நான் கேட்டேன்’ என்று உங்கள் பார்வையில் இருந்து எழுதாமல் பொதுவாக எழுதித் தந்தால் போதும் என்றார்கள். வெப்துனியாவுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களில் சில நூறு பேர்களையாவது நம் பக்கமாக திருப்ப முடியும் என்ற நம்பிக்கையில் ஒத்துக் கொண்டேன்- சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

முதல் கட்டுரையை அனுப்பியாகிவிட்டது. பிரசுரமும் செய்துவிட்டார்கள். 
                                           
                                                       ***

VIBGYOR- வானவில்லின் இந்த ஏழு வர்ணங்களைத்தான் ஒரு வாரத்திற்கும் மேலாக பெங்களூர் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. இது வெறும் வானவில்லின் நிறங்கள் மட்டுமில்ல- பெங்களூரில் பள்ளியின் பெயரும் கூட. இந்தப் பள்ளியைத்தான் திட்டுகிறார்கள். அதன் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்துகிறார்கள். சாபம் விடுகிறார்கள். இது சாதாரணப் பள்ளி இல்லை. இந்தியா முழுவதும் மும்பை, லக்னோ உட்பட ஏழு நகரங்களில் இந்தப் பள்ளி செயல்படுகிறது. பெங்களூரில் மட்டுமே எட்டு இடங்களில். Chain of Schools. இந்தப் பள்ளியின் ஒரு வளாகத்தில்தான் ஆறு வயது பெண் குழந்தையைச் சீரழித்திருக்கிறார்கள். ஜூலை 2 ஆம் தேதியே சம்பவம் நிகழ்ந்துவிட்டது. ஸ்கேட்டிங் சொல்லித் தரும் பயிற்சியாளன் குழந்தையை பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்திருக்கிறான். நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி அனுப்பிவிட்டான். குழந்தை பயந்துவிட்டது. யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் பிஞ்சு உடல் தாங்கவில்லை. சீர் குலையத் துவங்கியிருக்கிறது. என்னமோ ஏதோவென்று பெற்றோர்கள் மருத்துவர்களிடம் தூக்கிச் செல்ல அங்குதான் எவனோ கசக்கியிருக்கிறான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இதைக் கண்டுபிடிக்கும் போது சம்பவம் நிகழ்ந்து பன்னிரெண்டு நாட்கள் ஆகிவிட்டது.

பதறிய பெற்றோர் பள்ளியை அணுகியிருக்கிறார்கள். சரியான பதில் இல்லை. பிறகு காவல்துறையை அணுகி பிரச்சினை பெரிதாக்கப்பட்ட பிறகும் வெகுநாட்களுக்கு பெரிய நடவடிக்கைகள் இல்லை. பள்ளி நிறுவனர் பெரும்புள்ளி. ஏற்கனவே மிகப்பெரிய தொழிலதிபர்- ருஸ்டோம் கெரவாலா என்ற அந்த மனிதர் மும்பையில் ஏகப்பட்ட ஹோட்டல்களை நடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். தனது கார்போரேட் மூளையை வேறு எங்கு பயன்படுத்தினால் அள்ளியெடுக்கலாம் என யோசித்த போது கண்ணில் சிக்கிய தொழில்தான் கல்வி. எவ்வளவுதான் முட்டாளாக இருந்தாலும் ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம். கார்பொரேட் மனநிலையுடன் ஆரம்பித்தால்? ஒரு மாணவருக்கு கிட்டத்தட்ட லட்சத்தில் ஃபீஸ். பெங்களூர் முழுவதும் பள்ளி கொடிகட்டிய போதுதான் இந்தப் பிரச்சினை வெடித்துவிட்டது.

விடுவார்களா நிர்வாகத்தினர்? எங்கள் பள்ளியில் நடக்கவே இல்லை என்றார்கள். யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. அவசர அவசரமாக தரவுகளை அழிப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்கள். இந்த விவகாரம் கசிந்து பள்ளிக்கு ஏதேனும் பாதிப்பென்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் உண்டாகும் அல்லவா? அப்பொழுதும் பள்ளி உரிமையாளர் மீது நடவடிக்கை இல்லை. பணம் பாதாளத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு பெங்களூர்வாசிகள் களத்தில் இறங்க ஊர் முழுவதும் பதாகைகளும் கொடிகளும் உயர்ந்தன. போராட்டங்களும் கிளம்பின. ‘இதைத் தவிர உங்களுக்கு வேறு செய்தியே இல்லையா?’ என்று முதலமைச்சர் சித்தராமையா வெறுப்படைந்தார். மாநகர கமிஷனராக இருந்த ராகவேந்திரா அவுராத்கர் மீது சந்தேகம் திரும்பியது. அவரால்தான் விசாரணை சுணங்குகிறது என பேச்சு எழ அவரைத் தூக்கியடித்தார்கள். இப்பொழுது புது கமிஷனர் வந்திருக்கிறார். அதன் பிறகுதான் பள்ளி நிறுவனர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒரே நாள்தான். காலையில் கம்பி எண்ணச் சென்றவர் மாலையில் வீடு திரும்பிவிட்டார். ஜாமீன் கொடுத்துவிட்டார்கள். இனி தரவுகளை அழிக்கமாட்டாரா? 

இது ஒரு சாம்பிள் சம்பவம்தான். கல்வியை வியாபாரமயமாக்கிவிட்டு வெறும் பொருளீட்டுவதற்கான தொழிலாக மாற்றினால் இப்படித்தான் நடக்கும். அரசியல்வாதிகள் ஓய்வு பெறும் காலத்தில் சம்பாதிப்பதற்கு வாகான தொழிலாக கல்வி மாறிவிட்டது. திருடர்களும், ரவுடிகளும் தங்களின் சம்பாத்யத்தை முதலீடு செய்வதற்காக கல்விச்சாலைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். முன்பெல்லாம் கல்வித்தந்தை என்றால் மரியாதை இருக்கும். நேர்மையாளர்கள், கல்வியாளர்கள், பண்பாளர்களைத்தான் அப்படி அழைத்தார்கள். இப்பொழுது கவனித்தால் தெரியுமே- அயோக்கியனும் பணமுதலைகளும்தான் கல்வித்தந்தைகள். எப்படி விளங்கும்?

இத்தகைய சம்பவங்களை முற்றாகத் தடுப்பது என்பது சுலபமில்லைதான். நம்மைச் சுற்றிலும் மிருகங்கள்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த மிருகங்களுக்கு குழந்தைகளும் தெரியாது கிழவிகளும் தெரியாது. காமம் கண்களை மறைக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆறு வயது குழந்தையென்றாலும் சீரழிக்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவி என்றாலும் சீரழிக்கிறார்கள். ஆனால் பள்ளி வளாகத்திலேயே சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் பதினோரு மணிக்கு. அப்படியிருந்தும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக் கழிக்கிறார்கள் பாருங்கள். அதற்காகத்தான் இவர்களை அடித்து நொறுக்க வேண்டும். ஆறு வயதுக் குழந்தையை ஒரு வக்கிர மனிதன் கசக்கியிருக்கிறான் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் தனது தொழில் பாதிக்கப்படும் என்று ஆதாரங்களை அழிக்கிறார்கள் அல்லவா? அதற்காகவே என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். 

கல்வியை பணம் கொழிக்கும் தொழிலாக பார்ப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மூடி மறைக்க பார்க்கிறார்கள். எங்கள் பள்ளியில் நடக்கவில்லை என்று புரட்டுகிறார்கள். அப்படியே வெளியில் தெரிந்தால் காசை வீசி ஆதாரங்களை அழிக்கிறார்கள். எவ்வளவு குரூர மனநிலையாக இருக்க வேண்டும்? 

ஒரு குழந்தைக்கு ஒரு லட்சம் ஃபீஸ் என்றாலும் கணக்கு போட்டுக் கொள்ளலாம். இந்த வளாகத்தில் மட்டும் மூவாயிரத்து ஐந்நூறு குழந்தைகள் படிக்கிறார்கள். இந்த கார்போரேட் கல்வி வியாபாரிகளுக்கு குழந்தைகள் ரத்தமும் சதையுமான உயிர்கள் இல்லை. வெறும் பணம். அவ்வளவுதான். சென்னையிலும் பெங்களூரிலும் என்றில்லை. எந்தச் சிறு நகரத்திலும் தனியார் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கில் வசூலிக்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் கல்வி தரமில்லை என்கிறார்கள். ஆசிரியர்கள் சரி இல்லை என்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு பணம் போனால் போகட்டும் என்று பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஓடுகிறார்கள். அவர்கள் வேட்டை நடத்துகிறார்கள். வெறும் மதிப்பெண் வாங்கும் ப்ராய்லர் கோழிகளாக தங்கள் குழந்தைகளை மாற்றிக் கொடுங்கள் போதும் என்று பெற்றவர்கள் விரும்புகிறார்கள். தேதி தவறாமல் மாமூல் கொடுத்தால் போதும் என்பதோடு அரசும் அதிகாரவர்க்கமும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இதைப் பயன்படுத்தி கல்வித் தந்தைகள் சம்பாதித்துக் குவிக்கிறார்கள். பெற்றோர்களின் சட்டையில் மட்டுமில்லை இதயத்திலும் ஓட்டையைப் போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். 

பள்ளிக்கல்வி என்பது வெறும் பணத்தையும் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியின் வணிகமயமாக்கலை தடுத்தால் மட்டுமே இது போன்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும். அரசாங்கங்கங்கள் தொலைநோக்கோடு யோசித்தால் கூடிய சீக்கிரம் கல்வியை அரசுமயமாக்கிவிடலாம். இது சாதாரணக் காரியமில்லைதான் ஆனால் சாதிக்க முடியாத விஷயமில்லை. கல்லூரிகளை விட்டுவிடலாம். குறைந்தபட்சம் பள்ளிக் கல்வியை மட்டுமாவது தனியார்களிடமிருந்து பறிக்க வேண்டும். கல்வி என்பது பணம் காய்ச்சி மரம் இல்லை என்ற நிலைமையை அரசாங்கம்தான் உருவாக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம் என்ற சூழலை உருவாக்கி. பள்ளிக் கல்வியில் அனைத்து குழந்தைகளும் சமம் என்கிற நிலைமை வர வேண்டும். ஒரு நல்ல அரசாங்கம் வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதுவரை நாம் கனவு கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

Jul 23, 2014

துணைக்கு வர முடியுமா?

அதிமுக அரசு வந்ததிலிருந்து அரசுப்பேருந்துகளில் படம் போடுவதை நிறுத்திவிட்டார்கள். இருநூறு ரூபாய் மிச்சம் பிடிக்கலாம் என்று அரசாங்க வண்டிகளில் ஏறினால் அரசாங்கம் நம்மைவிட கஞ்சமாக இருக்கிறது. பேருந்துகளிலிருந்து தொலைக்காட்சிகளையே மொத்தமாக கழட்டிவிட்டார்கள். பெங்களூரிலிருந்து சேலம் செல்வதென்றால் ஐந்தரை மணி நேரம் ஆகும். இரவுப் பயணத்தில் எனக்கு தூக்கமும் வராது. விளக்கையும் அணைத்துவிடுகிறார்கள். சிறைச்சாலை மாதிரி ஆகிவிடுகிறது.

கடந்த வார இறுதியில் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. பெங்களூரிலிருந்து ஓசூர் அங்கிருந்து கிருஷ்ணகிரி அங்கு மாறி தர்மபுரி அங்கிருந்து சேலம் என்று ஒவ்வொரு பேருந்தாக மாறிக் கொண்டிருந்தேன். எட்டு மணி நேரம் ஆனது. அது பிரச்சினையில்லை. இரண்டு சண்டைகளையும் ஒரு காதலையும் பார்க்க முடிந்தது. கிருஷ்ணகிரி தாண்டிய ஒரு ஊரில் கண்டக்டர் ஒருவர் பயணியை அடித்துவிட்டதாக அரை மணி நேரம் வண்டிகளை நிறுத்திவிட்டார்கள். மணி இரவு ஒன்பதரை இருக்கும். அந்த நேரத்தில் ஸ்டிரைக். ‘மாவட்ட எஸ்.பி வந்தால்தான் வழியை விடுவோம்’ என்றார்கள். சமாதானம் செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் கெஞ்சிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பாதிக்கும் மேலானவர்கள் குடித்திருந்தார்கள். ஆனாலும் போலீஸ்காரர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இறங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். தனியாகச் சென்றால்தான் இதெல்லாம் சாத்தியம். மனைவி மகனையெல்லாம் அழைத்துச் சென்றால் கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி இறங்கும் இடம் வரைக்கும் வேறு எந்தக் கவனமும் இருக்காது. 

நிசப்தம் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் வழங்கிய புத்தகங்களை கோபிச்செட்டிபாளையம் தாய்த்தமிழ் பள்ளிக்காரர்கள் ஒரு நிகழ்வில் வைத்து பெற்றுக் கொள்கிறோம் என்ற போதே சுதாரித்துக் கொண்டேன். எப்படியும் மேடையில் பேசச் சொல்வார்கள். தனியாகச் சிக்கிக் கொண்ட மாதிரி ஆகிவிடும். எதற்கும் துணையாக இருக்கட்டுமே என்று தம்பிச்சோழனை பிடித்து வைத்திருந்தேன். தம்பிச்சோழன் நாடகக்கலைஞர். சமீபத்தில் இரண்டு மாதங்கள் பெங்களூரில் தங்கியிருந்தார். சினிமாதான் அவருக்கு மூச்சு. சினிமா பற்றி பேசிக் கொண்டிருப்பார். திசைமாற்றலாம் என்று புத்தகம் பற்றி பேசினால் அந்தப் புத்தகத்தோடு சேர்த்து நாம் வாசித்திருக்காத வேறு இரண்டு புத்தகங்களையும் சேர்த்துப் பேசுவார். அத்தனை வாசித்திருக்கிறார். அத்தனை படங்களை பார்த்திருக்கிறார். 

அழைத்தவுடன் எந்த மறுப்பும் சொல்லவில்லை. பள்ளியில் குழந்தைகளுக்கான படைப்பாற்றலை மேம்படுத்தும் பட்டறை ஒன்றை நடத்தித் தருவதாகச் சொல்லியிருந்தார். Creativity workshop. பட்டறையில் என்ன செய்வார் என்றெல்லாம் தெரியவில்லை. பள்ளியில் தெரிவித்தேன். அவர்களும் சரி என்று சொல்லியிருந்தார்கள். தம்பிச்சோழன் இது போன்ற நிகழ்வுகளை வேறு இடங்களிலும் நடத்தியிருக்கிறார். எதிர்பார்ப்பை பொய்ப்பிக்கவில்லை. மாணவர்களிடையே பேசும் போது  ‘நான் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன்’ என்று ஆரம்பித்தார். கிட்டத்தட்ட நூறு குழந்தைகள். அவரை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆறு மணி நேரங்களுக்கு மேலாக அவர்களைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். அதுவும் ஒற்றை ஆளாக. எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. இத்தனைக்கும் நிறைய பொருட்களும் இல்லை. வெறும் உடல் மொழியிலேயே குழந்தைகளை அசையாமல் வைத்திருந்தார். அவர் கத்தினால் குழந்தைகளும் கத்துகிறார்கள். அவர் சிரித்தால் குழந்தைகளும் சிரிக்கிறார்கள். அவர் கீழே விழுந்தால் அவர்களும் விழுகிறார்கள். ரசனையான மனிதர்.


குழந்தைகளுக்கு இது போன்ற நிகழ்வுகள் அவசியம். வெறுமனே வினா-விடையாக மட்டுமே பள்ளிக் கல்வியை மாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இதைப் போன்ற சில செயல்பாடுகள் நிச்சயமாக நல்ல பலனைத் தரும். படிப்பைத் தாண்டி மாணவர்கள் வேறொன்றைப் பற்றி யோசிக்க வாய்ப்பு கிடைக்கிறது அல்லவா? தப்பாட்டம், பரதநாட்டியம், பேச்சுப்போட்டி, கட்டுரை எழுதுதல், பறை, சிலம்பம், நாடகம், மாற்றுச் சினிமா, வாசிப்புப் பயிற்சி, ஓவியம், கராத்தே என்று ஏதேனும் ஒன்றைப் பற்றி அவர்களிடம் பேச வேண்டும். அதைப் பற்றி அவர்கள் யோசிக்கத் துவங்க வேண்டும். ஏதாவதொரு விதத்தில் அவர்களுக்கு பிற்காலத்தில் பயன்படும். பயன்படுகிறதோ இல்லையோ மனக்கண்களில் ஒன்றைத் திறந்துவிட்ட மாதிரி ஆகிவிடும். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில்- குறிப்பாக முதல் மதிப்பெண்ணைக் குறி வைக்கும் பள்ளிகளில் மனனம் செய்வதைத் தவிர வேறு எதுவுமே சொல்லித் தருவதில்லை.

சனி,ஞாயிறுகளிலும் கூட குழந்தைகளை பதினைந்து மணி நேரங்களுக்கு படிக்கச் சொல்கிறார்கள். ஒரு உறவுக்காரப் பையன் இருக்கிறான். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் ஏகப்பட்ட மதிப்பெண்கள் எடுத்திருந்தான். கல்லூரியையும் முடித்துவிட்டான். அடுத்து என்னவென்றால் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகிறேன் என்கிறான். அதைக் கூட பேயறைந்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் படித்த பள்ளிக்கூடம் அப்படி. பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் பள்ளியை விட்டால் வீடு, வீட்டில் படிப்பு, மீண்டும் பள்ளி, அங்கு படித்ததையெல்லாம் வாந்தியெடுத்தல் என்றிருந்தான். சிரிப்பு கிடையாது. விளையாட்டு கிடையாது. களிமண்ணில் செய்வது போல சீரியஸ் மனிதர்களை பள்ளிகளிலேயே Molding செய்துவிடுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வாழ்க்கையின் முதல் பதினெட்டு வருடங்கள் மிக முக்கியம். இந்தப் பருவத்தில் அவனுக்கான அத்தனை சிறகுகளும் கிடைக்கிறது. அவனுக்கான அத்தனை வர்ணங்களும் புரிகிறது. ஆனால் அவற்றைத்தான் புத்தக மூட்டையின் கீழாக போட்டு நசுக்கிவிடுகிறார்களே? அந்தப் பையன் நிச்சயமாக தேர்வில் வெற்றியடைந்துவிடுவான் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் என்ன பிரயோஜனம் என்றுதான் தெரியவில்லை.

குழந்தைகளை மனிதர்களாக மாற்றுவதற்கு படிப்பைத் தவிர நிறைய விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதைச் சில பள்ளிகள் மட்டும்தான் செய்கின்றன என்பதுதான் அவலம். படிப்பு அவசியமில்லை என்று சொல்லவில்லை. அவசியம்தான். ஆனால் இவ்வளவு உழைப்பு தேவையில்லை. நானூற்றி தொண்ணூற்றொன்பது மதிப்பெண்களை வாங்கும் மாணவன் கடைசி ஆறு மாதங்கள் அமர்ந்து படித்தாலும் அதே மதிப்பெண்களை வாங்கிவிடுவான். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நெட்டுரு போட வைக்கிறார்கள். அதுதான் பிரச்சினை. ஒவ்வொரு நாளும் தேர்வு எழுதுகிறார்கள். அதற்காக முந்தின நாள் முழுவதும் படிக்கிறார்கள். மதிப்பெண் குறைந்தால் வீட்டில் திட்டுகிறார்கள். ஆசிரியர்கள் தண்டிக்கிறார்கள். அந்த மாணவன் வேறு எதைச் சிந்திக்க முடியும்? படிப்பே வரவில்லையென்றாலும் வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவன் ஜெயித்துவிடுவான் என்பதுதான் நிதர்சனம். வெறும் படிப்பு படிப்பு என மாணவனின் மொத்த ரசனையையும் பூட்ஸ் காலால் நசுக்குவது பாவமில்லையா? 

தம்பிச்சோழன் அந்த நாளின் இறுதி வரைக்கும் அதே உற்சாகத்தோடு இருந்தார். கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் கூட சளைக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது அவரிடம் ஆட்டோகிராப்பாக வாங்கித் தள்ளினார்கள். Pied Piper of Hamelin இல் வருவது போல குழந்தைகள் அத்தனை பேரையும் இழுத்துச் சென்றுவிடுவார் போலிருந்தது. Hamelin என்ற ஊரில் எலிகளின் அட்டகாசம் அதிகமாகியிருந்த போது அவற்றைப் பிடிக்க ஒருவனை அழைத்து வருவார்கள். அவன் தனது புல்லாங்குழலை வாசித்து எலிகளை அழைத்துச் சென்று கடலுக்குள் விட்டுவிடுவான். அப்பொழுது ஒரு எலி மட்டும் தப்பித்துவிடும். தப்பித்த ஒரு எலியைக் காரணம் காட்டி பேசியபடி பணத்தைத் தர மாட்டார்கள். அடுத்த நாள் ஊரில் இருக்கும் பெரியவர்கள் சர்ச்சுக்குச் சென்ற நேரமாக வந்தவன் தனது புல்லாங்குழலை வாசித்து ஊரில் இருக்கும் குழந்தைகளையெல்லாம் அழைத்துச் சென்றுவிடுவான். பயிற்சி பட்டறையின் முடிவில் இறுதியில் தம்பிச் சோழன் அப்படித்தான் தெரிந்தார். மெஸ்மரிசம் செய்திருந்தார்.

வீட்டிற்கு வந்த பிறகு தாளாளரிடம் பேசினேன். அவரது மகள் அதே பள்ளியில்தான் படிக்கிறாள். பத்தாம் வகுப்பு. ‘இவ்வளவு நாளில் இன்னைக்குத்தான் இவ்வளவு ரிலாக்ஸ்டாக இருந்தோம்’ என்றாளாம். ரிலாக்ஸ் ஆவது பெரிய காரியமில்லை. அவர்களுக்கே தெரியாமல் நாடகக்கலை என்ற பெருங்கடலின் ‘அ’வை அந்த நூறு குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்திருந்தார். அதுதான் திருப்தியான விஷயம். 


Jul 22, 2014

அவ்வளவு எளிதான காரியமா?

இன்னமும் பெங்களூர் அடங்கியபாடில்லை. ஒன்றாம் வகுப்பு குழந்தையை பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்த சம்பவத்தை வைத்து தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மாநகர போலீஸ் கமிஷனரை நேற்று தூக்கிவிட்டார்கள். அவர் மீது ஏற்கனவே நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு. இதைச் சாக்காக வைத்து இடத்தை காலி செய்துவிட்டார்கள். இனி ஒரு ரெட்டிகாருதான் கமிஷனர். 

VIBGYOR- வானவில்லின் ஏழு வர்ணங்களைப் போல குழந்தைகளுக்கு வாழ்க்கையின் நிறங்களை கற்றுத் தருகிறோம் என்றுதான் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். மகியை பள்ளியில் சேர்பதற்கு முன்பாக இங்கும் விசாரித்தேன். எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமாக கேட்டார்கள்- எல்கேஜிக்கு. கட்டுபடியாகாது என்று பின் வாங்கிக் கொண்டேன். ஆனால் பள்ளியைப் பற்றி எல்லோருமே நல்ல அபிப்பிராயம்தான் சொன்னார்கள். நல்ல கட்டிடடங்கள், சொல்லித் தருகிறார்கள், நல்ல வசதிகள்- ஸ்கேட்டிங் கூடச் சொல்லித் தருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஸ்கேட்டிங் சொல்லித் தரும் பீஹாரிதான் இந்தக் குழந்தையை சீரழித்திருக்கிறான். 

பள்ளி நிர்வாகம் பதறிப் போயிருக்கிறது. குழந்தையின் வாழ்க்கை சீரழிந்துவிட்டது என்பதற்காக பதறியது என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். பிஸினஸ் அடிபடுகிறது. அடுத்த வருடம் சேர்க்கை அதலபாதாளத்தில் விழக் கூடும். ஒரு குழந்தையின் சேர்க்கை தடைபட்டாலும் கூட கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம். அதனால் முடிந்தவரை விவகாரம் வெளியில் வராமல் இருக்க திணறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் ‘இந்தச் சம்பவம் பள்ளி வளாகத்திலேயே நடக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது பொய். பள்ளியின் வளாகத்தில் மதியம் பதினொன்றரை மணிக்கு நடந்திருக்கிறது. விவகாரம் கை மீறி போய்விட்டது. பல பள்ளிகள் பெற்றோர்களை அழைத்து ‘பள்ளியில் குழந்தைகளுக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பில்லை’ என்று எழுதி கையெழுத்துக் கேட்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் பொங்கிவிட்டார்கள். எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்- ஒரு பகலின் பெரும்பாலான நேரம் குழந்தைகள் பள்ளியில்தான் இருக்கிறார்கள். ஆனால் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாதாம்.

இன்னொரு நிகழ்வு. அதுவும் பெங்களூரில்தான். இருபது நாட்கள் ஆகியிருக்கும். ஒன்பதாம் வகுப்பு பையன் ஒருவன் மீது இன்னொரு மாணவன் கல்லை எடுத்து வீசியிருக்கிறான். அது மாணவனின் கண்ணில் பட்டு விழித்திரை கிழிந்துவிட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க முடியும். ஆனால் பள்ளி நிர்வாகம் ஒரு கர்சீப்பை கையில் கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. போகிற வழியில் வலி தாளாமல் மயங்கி விழுந்திருக்கிறான். சாலையில் போனவர்கள் 108 ஐ அழைத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது அவனது அடிபட்ட கண்ணில் முற்றிலுமாக பார்வை போய்விட்டது. முதல் நாள் செய்தி வந்தது. அதன் follow up ஏதாவது வரும் என்று அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தேடியதுதான் மிச்சம். அமுக்கிவிட்டார்கள் போலிருக்கிறது. பள்ளிகளின் பொறுப்புணர் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

இந்த VIBGYOR விவகாரத்தையும் அமுக்கிவிடுவார்கள் என்றுதான் நினைத்தேன். எப்படியோ தப்பித்துவிட்டது. இது போன்ற நிகழ்வுகள் இப்பொழுது சாதாரணமாகிவிட்டன. ஏதாவதொரு செய்தி கண்களில் பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் ஐந்து சதவீத விவகாரங்கள் மட்டுமே வெளியில் தெரிகின்றன என்று சொல்கிறார்கள். குழந்தைகள் மீதான விவகாரங்கள் வெளியில் வராமல் போவதற்கு மிரட்டல் முதற்காரணம் என்றால் குழந்தைகளோடு நாம் உருவாக்கிக் கொள்ளும் இடைவெளி இரண்டாவது காரணம். காரியத்தைச் செய்பவன் ‘வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டுகிறான். அம்மா அப்பாவிடம் சொன்னால் அவர்கள் திட்டுவார்களோ என்று நம்மிடம் சொல்லவும் பயப்படுகிறது. குழந்தை என்ன செய்யும்?

இந்தக் குழந்தையையும் மிரட்டியிருக்கிறார்கள். வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவோம் என்று பயமூட்டியிருக்கிறான். பாவம். பிஞ்சுக் குழந்தை தனக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டது. அந்தக் குழந்தையின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மருத்துவமனையில்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜூலை இரண்டாம் நாள் நடந்த நிகழ்ச்சி பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகுதான் வெளியில் தெரிந்திருக்கிறது.

எப்பொழுதுமே நகரங்களில் நடைபெறும் வன்முறைகள்தான் ஊடக வெளிச்சம் பெறுகிறது. டெல்லியில் நடந்த வன்புணர்வுக்கு மாதக்கணக்கில் கவனம் செலுத்திய ஊடகங்கள் உத்தரபிரதேச வன்புணர்வுகளுக்கு என்ன செய்தார்கள்? குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பெங்களூரில் மட்டும்தான் நடக்கிறதா என்ன? பாலியல் பலாத்காரங்கள் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நகரத்தில் நிகழ்ந்தால் மட்டும்தான் Flash அடிக்கிறார்கள். குற்றச்சம்பவங்கள் நகரங்களில் நடந்தால் மட்டும்தான் கவனிக்கிறார்கள். இந்தியா முழுவதும் நடக்கும் விவகாரங்கள் வெளியில் வரத் துவங்கினால் நமது சமூகத்தின் நோய்க்கூறு தெளிவாகத் தெரியும்.

நோய் பீடித்த சமூகம் இது. 

பகைமை, வெறி, கோபம், பணத்தாசை, காமம் என எல்லாமும் கட்டுக்கடங்காமல் பாய்ந்து கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பள்ளி வளாகத்திலேயே வைத்து இவர்கள் சூறையாடிய நேரத்தில் அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. முந்தைய தலைமுறை வரைக்கும் பாவம், புண்ணியம் என்பன குறித்து ஒரு நம்பிக்கை இருந்தது. கொடுத்த வாக்கை மீறாதவர்கள் சுற்றிலும் இருந்தார்கள். நியாயமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பிடிப்போடு இருந்தார்கள். நமது பாவம் வாரிசுகளைச் சூழும் என்று பயந்தார்கள். அவமானம் வந்து சேர்ந்தால் கூனிக் குறுகினார்கள். இப்பொழுதெல்லாம் யார் பயப்படுகிறார்கள்? யாரை வேண்டுமானாலும் காமத்தோடு பார்க்கலாம். எதற்காக வேண்டுமானாலும் பொய் சொல்லலாம். பணம் கிடைக்குமானால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். தலைகீழாக மாறிவிட்டது.

எல்லாவற்றிற்கும் கடும் தண்டனைகள் தீர்ப்பாக முடியாதுதான். வன்புணர்வுக்கு மரண தண்டனை என்று சட்டத்திருத்தம் என்று முடிவு செய்கிறார்கள் என்றால் என்ன நடக்கும்? அமைச்சரின் மகனோ, அதிகாரியின் புதல்வனோ செய்யும் வன்புணர்வுகளுக்கு ஏதோ ஒரு வடக்கத்திக்காரனை குற்றவாளியாக்கி தூக்கில் தொங்கவிடுவார்கள். இங்கு எத்தனை மரண தண்டனை குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் பேச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது? அனுமதிக்கமாட்டார்கள். நமக்கு எதுவுமே தெரியாது. வழக்கு நடக்கும். குற்றவாளி என்று முடிவு செய்து தூக்கில் தொங்கவிடுவார்கள். ‘இவனுக்கெல்லாம் வேணும்’ என்று நாமும் திருப்தியடைவோம். இது இந்தியாவில் சாத்தியமானதுதான். ஆனால் வேறு என்ன தீர்வு இருக்கிறது?

என்னதான் உணர்ச்சிவசப்படாமல் யோசித்தாலும் இது போன்ற பிரச்சினைகளுக்கு கடும் தண்டனைகளைத் தவிர வேறு தீர்வுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே பிரச்சினை தண்டனை வழங்கப்படுகிறதா என்பதுதான். இதே பெங்களூரில் சென்ற வாரத்தில் சாலையில் நின்ற பெண்ணை காரில் தூக்கிப் போட்டுச் சென்று கசக்கியிருக்கிறார்கள். செய்தவன் கட்சிக்காரனின் மகனாம். இதை நிறைய முறை செய்திருக்கிறானாம். பந்தாவாகச் சொன்னால் Hobby. அதற்கு பிறகு அந்தச் செய்தியைக் காணவில்லை. அவன் கண்டிப்பாகத் தப்பித்துவிடுவான்.

உண்மையான குற்றவாளிகளை கைது செய்து வெளிப்படையான விசாரணையை நடத்தி கடும் தண்டனைகளைக் கொடுத்தால் சற்றேனும் கட்டுப்படுத்தலாம். ஒன்றரைப் பத்தியில் தீர்வு சொல்லிவிட்டேன். அவ்வளவு எளிதான காரியமா என்ன? மொத்த காவல்துறையும் மாற வேண்டும். நீதித்துறை சீர்படுத்தப்பட வேண்டும். நடக்கவா போகிறது? ம்ஹூம். இதெல்லாம் நம் அன்றாடச் செய்திகளில் ஒன்றாகிவிடும். ‘ஊர் உலகத்துல நடக்கிறதுதானே?’ என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம். அவ்வளவுதான்.

கட்டுக்கு போகலாமா?

சாவக்கட்டுபாளையம் என்ற ஒரு ஊர் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர்தான் இருக்கும். அந்தக் காலத்தில் சேவல்கட்டு நடந்திருக்க வேண்டும். இப்பொழுது கட்டு நடப்பதாகத் தெரியவில்லை. அந்த ஊரில்தான் நடப்பதில்லையே தவிர இப்பொழுதும் ஆங்காங்கே கட்டு வைக்கிறார்கள். ஊருக்குச் சென்றிருந்த போது தெரிந்த பையன் ஒருவன் தனது கட்டுச்சேவலைக் காட்டினான். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் வீட்டுக்குத் தெரியாமல் ஒரு தோட்டத்தில் வைத்து வளர்க்கிறான். ‘ஈரல் போட்டு வளர்க்கிறேண்ணா’ என்றான். விட்டால் கொத்திவிடும் போலிருந்தது. முரட்டுத்தனமாக இருந்தது. முட்டையிலிருந்து வந்தவுடனே குஞ்சை தனியாக பிரித்துவிடுவார்களாம். தாய்க்கோழியோடு சேர்ந்து சுற்றினால் பந்தபாசத்துக்கு கட்டுப்பட்டு சண்டையில் சுணங்கிவிடும் என்றான். இதை இவன் என்ன சொல்வது? ‘சேவல்கட்டு’ நாவலில் தவசியே சொல்லியிருப்பார்- ம.தவசி. இந்த நாவலுக்காக சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது வாங்கியவர்.

நாவல் நூற்றிப்பத்து பக்கம்தான். சேவுக பாண்டியன் என்ற ஜமீன் வெள்ளைக்கார துரைமார்களுக்கு வரி வசூல் செய்து கொடுக்கிறவர். துரைமார்களோடு வசூலுக்குச் செல்லுமிடத்தில் சேவல்கட்டு நடக்கிறது. ஜமீனுக்கு இதில் எல்லாம் அனுபவம் இல்லை. ஜமீனுக்கு இது கூடத் தெரியவில்லை என்று ஊரே நக்கலடிக்கிறது. இதில் அவமானப்பட்டவர் இனி எப்படியும் பழகிவிடுவது என கட்டு பழகுகிறார். குடி முழ்குகிறது. அடுத்த தலைமுறையில் அவரது மகன் போத்தையாவும் இதிலேயே கிடக்கிறார். தனது தந்தையின் தோல்விகளுக்கு தனது வெற்றிதான் ஆறுதலாக இருக்கும் என வெறிகொண்டு அலைகிறார். இரண்டு தலைமுறைக் கதைதான் இந்த நாவல். 

எளிமையாகச் சொல்லிவிட்டேன். ஆனால் சேவல்கட்டின் நுட்பங்கள், அதன் வரலாறு, அதிலேயே கிடக்கும் மனிதர்கள் என தவசி தூள் கிளப்பியிருப்பார்.

கதையின் வேகத்துக்கு முசுவாக அமர்ந்தால் மூன்று மணி நேரத்தில் வாசித்து விடலாம். இடையிடையே விவரணைகள், புனைவுகள் என ஸ்பீட் ப்ரேக்கர்கள் உண்டு. ‘ஜம்ப் பண்ணியது’ போன்ற சலிப்பூட்டும் வார்த்தைப் பிரயோகங்களும் உண்டு. ஜம்ப் பண்ணியது என்பது மட்டுமே நாவலில் மூன்று இடங்களில் வருகிறது. அது என்ன ஜம்ப் பண்ணியது? பண்ணியது போன்ற சொற்களை பேசும் போது உபயோகப்படுத்தினால் வித்தியாசமாகத் தெரியாது. ஆனால் எழுத்தில் வாசிக்கும் போது நம்மையுமறியாமல் ஒரு சலிப்பு வரும். தவசி இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். ஆனால் சேவல்கட்டு நாவலில் இதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை. உள்ளே இருக்கும் சரக்கு அப்படி. 

இரண்டு சேவல்களுக்கான சண்டை என்பது அவற்றைப் பொறுத்தவரையிலும் உயிர் பிரச்சினை. முட்டையிலிருந்து வெளியில் வந்ததிலிருந்தே தனிமைப்படுத்தி வன்மத்தை உருவேற்றி வளர்க்கிறார்கள். ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுவெளியில் கட்டி வைத்துவிடுவார்கள். அப்பொழுதுதான் சேவலின் பயம் போகுமாம். இறக்கைகள் உறுதியாக வேண்டும் என்பதற்காக கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் போட்டுவிடுவார்கள். நீச்சலடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். பயமும் போகும், இறக்கைகளும் உறுதியாகும். பெட்டைக் கோழிகளை கண்ணிலேயே காட்டமாட்டார்கள். அப்படித்தான் வெறியேறும். இப்படியெல்லாம்தான் கட்டுக்குத் தயாராக்குவார்கள். அந்த ஜீவனை வெறுப்பேற்றி வெறுப்பேற்றியே முரடனாக்கி கட்டில் இறக்குகிறார்கள். காலில் கூரிய கத்தி. தோற்கவே கூடாது. தோற்றால் வென்றவனின் வீட்டில் சூப்பு வைத்து குடித்துவிடுவார்கள்.

நல்லவேளையாக மனிதர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. தோற்றாலும் கூட மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஜல்லிக்கட்டிலும் கூட தோற்றுப் போனவுடனே அந்தக் காளையை கறி போட்டுவிடுவதில்லை. ஆனால் கட்டுச்சேவலுக்கு அப்படியில்லை. ஒவ்வொரு முறையும் நாக்-அவுட்தான். வெறித்தனமாக வென்றே தீர வேண்டும்.

அமத்தா ஒரு சேவல்கட்டு கதையைச் சொல்லியிருக்கிறார். பக்கத்து ஊரில் ஒரு பண்ணையார் இருந்தாராம். அவரது தோட்டத்தில் எந்தக் காலத்திலும் பத்துக்கும் குறையாத கட்டுச்சேவல்கள் இருக்கும். அக்கம்பக்கம் எங்கு கட்டு நடந்தாலும் ரேக்ளா வண்டியில் ஏறிக் கொண்டு கூடவே ஒருவனை துணைக்கு அழைத்துச் சென்று வருவாராம். கிட்டத்தட்ட எல்லாமே வெற்றிதான். வெற்றியென்றால் எதிராளியின் முண்டமாக்கப்பட்ட சேவல் மட்டுமில்லை- தோற்றவனின் தோட்டம், காடு என வென்று வருவார். இதெல்லாம் நாற்பது வருடங்களுக்கு முன்புதான் நடந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது அவரது வாரிசுகள் யாரும் வசதியாக இல்லை. குடும்பமே சீரழிந்து போய்விட்டது. ஜெயித்த தோட்டங்காட்டையெல்லாம் என்ன செய்தார் என்று கேட்டிருக்கிறேன். அமத்தா மழுப்பிவிட்டார். சமீபத்தில்தான் வேறொருவர் சொன்னார். அத்தனை சொத்தையும் விற்று பணமாக்கி சினிமா எடுக்கிறேன் என்று சென்னை செல்வாராம். அந்தக் கால நடிகை ஒருவரோடு தொடுப்பு இருந்திருக்கிறது. சூப்பர் ஸ்டாரிணிதான். அந்த நடிகைக்கு ஒட்டியாணமும், வைரத் தோடுமாகவும் கொடுத்துக் கொடுத்தே நாசமாகப் போனாராம். தனது ஒட்டியாணமும், வைரத் தோடுகளும் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சேவல்களின் ரத்தமும் சதையும் என்று அந்த சூப்பர் ஸ்டாரிணிக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. காலாகாலமும் ஆண்கள் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டாவது வீர விளையாட்டு. ஏற்றுக் கொள்ளலாம். காளையை எதிர்த்துப் போராட உடற்திறமும் வேண்டும்; மதி நுட்பமும் வேண்டும். ஆனால் இந்த சேவல்கட்டிலிருந்து மனிதன் எதைக் கற்றுக் கொண்டிருப்பான்? 

சேவலுக்கு இந்த கட்டு உயிர்ப்பிரச்சினை என்றால் மனிதனுக்கு மானப்பிரச்சினை. தனது சேவல் தோற்றுவிடக் கூடாது என்று பைத்தியமாகத் திரிந்திருக்கிறார்கள். சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். குடும்பத்தைச் சிதைத்திருக்கிறார்கள். உயிரை மாய்த்திருக்கிறார்கள். எதிரிகளைக் கொன்றிருக்கிறார்கள். 

என்னென்னவோ கேள்விகளை எழுப்புகிறது இந்த நாவல்.

நாவலை எழுதிய தவசி இப்பொழுது உயிரோடு இல்லை. இப்பொழுது இருந்திருந்தாலும் அவருக்கு நாற்பது வயதுக்குள்ளாகத்தான் இருக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பாகத்தான் இறந்து போனார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டும் என்றெல்லாம் படித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது எங்கு தேடியும் அவரைப் பற்றிய குறிப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கும் இந்த நாவலில் கூட தவசி பற்றிய குறிப்புகள் இல்லை. 

இதுதான் எழுத்தின் பலம். எப்பொழுதோ ஒரு நல்ல நாவலையோ, சிறுகதையையோ எழுதிவிட்டு போய்விடுகிறார்கள். பிறகு யாரோ வந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

எழுத்துக்கு ஒரு பலவீனமும் உண்டு- சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளர்கள் வாசிப்பு எழுத்து என்று வாழ்வை இழந்து நல்ல படைப்புகளை உருவாக்கி வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். அவர்களது வாரிசுகள் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.

சேவல்கட்டு நாவலை ஆன்லைனில் வாங்கலாம்.

Jul 21, 2014

தம் கட்டுடா செவல தம் கட்டு

தினமலரில் ஒரு நேர்காணல் வந்திருக்கிறது. மதுரை பதிப்பின் ‘சண்டே ஸ்பெஷல்’ பகுதியில் ஒரு பக்க அளவிற்கு. நம்மை கவனிக்கிறார்கள் என்றால் சந்தோஷமாகத்தானே இருக்கும்? அதுவும் தினமலர் போன்ற வெகுஜன ஊடகம். தன்னடக்கம் இல்லாமல் சொல்ல வேண்டுமானால் வெகு உற்சாகமாக உணர்ந்தேன்.

தெரிந்தோ தெரியாமலோ நேர்காணலின் இறுதியில் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டார்கள். நான்கைந்து முறை ஃபோன் பேட்டரி காலி ஆகுமளவுக்கு அழைப்புகள். இதை சலிப்பாகச் சொல்லவில்லை. சந்தோஷமாகத்தான் சொல்கிறேன். ஆனால் ஒன்று - சினிமாவில் பாடல் எழுதுவதற்கு சான்ஸ் வாங்கித் தர முடியுமா என்று ஒருவர் கேட்டார். அவர் இந்த நேர்காணலை எப்படி புரிந்து கொண்டாரோ- உண்மையிலேயே எப்படி பதிலைச் சொல்வது என்று குழப்பமாக இருந்தது.  ‘நான் ஒரு டுபாக்கூருங்க’ என்று சொல்லி சமாளித்தேன். மதுரை பதிப்பு என்பது மூன்று மாவட்டங்களில் மட்டும்தான் கிடைக்குமாம். அதற்கே இத்தனை அழைப்புகள். 

அது இருக்கட்டும். 

இந்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கும் தலைமையாசிரியர் இனியன்.அ.கோவிந்தராஜூ 'I am really proud of you' என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். என்னைப் பொறுத்தவரையிலும் அவர் கடவுள். இதை வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை. அவர் என்னை எவ்வளவு ஊக்குவித்தார் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். எவ்வளவு குப்பையான கவிதை எழுதிக் கொண்டு போய் கொடுத்தாலும் வரிக்கு வரி திருத்துவார். எவ்வளவு கேவலமாக மேடையில் பேசினாலும் தனியாக அழைத்து பாராட்டிவிட்டு குறைகளைச் சொல்வார். அப்படியான ஆசிரியர் அமைவது ஒரு வகையில் வரம். எங்களுக்கு அந்த வரம் கிடைத்திருந்தது. பள்ளியில் நிகழ்ந்த சில பிரச்சினைகளாலும் உள்ளரசியலாலும் அவர் ராஜினாமா செய்துவிட்டு சென்றிருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரையிலும் எனக்கு தெரியாமலிருந்தது. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து குறுஞ்செய்தி. என்னையுமறியாமல் கண்ணீர் திரண்டுவிட்டது. ‘இதுவரை மட்டுமில்லை- எழுத்து வழியாக இனி எவ்வளவு பெரிய உயரங்களை அடைந்தாலும் அத்தனையும் உங்களின் பாதத்திற்கு சமர்ப்பணம் சார்’ என்று பதில் அனுப்பினேன். ஒரு மாணவனாக என்னால் இதைத்தான் அவருக்குத் திருப்பிக் கொடுக்க முடியும். அவர் நிச்சயமாக மகிழ்ந்திருப்பார்.

தலைமையாசிரியரிடமிருந்து எனக்கு பாராட்டை வாங்கிக் கொடுத்ததற்காக மட்டுமே தினமலருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நேர்காணலை என்னிடமிருந்து வாங்கிய திரு.தண்டபாணி அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி.


பெங்களூருவாசியான உங்கள் இளமைப்பருவம்...

பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திற்கு அருகில் இருக்கும் கரட்டடிபாளையம் என்ற கிராமம். 1982 ஆம் ஆண்டு பிறந்தேன். அம்மா அப்பா இருவருமே அரசுப்பணியாளர்களாக இருந்தார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு வரை கோபியில் இருக்கும் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில்தான் படித்தேன். அது தமிழ் வழிக்கல்விதான். அங்கிருந்த தமிழாசிரியர்களையும், தலைமையாசிரியர் இனியன். கோவிந்தராஜூவையும் மறக்கவே முடியாது. பிறகு பொறியியல் கல்வியை சேலத்திலும், எம்.டெக் படிப்பை வேலூரிலும் முடித்துவிட்டு சில வருடங்கள் ஹைதராபாத்தில் இருந்திருக்கிறேன். இப்பொழுது திருமணத்திற்கு பிறகு பெங்களூர்வாசி. என்றாலும் அவ்வப்போது ஊருக்குச் சென்று வருவதன் மூலமாக வேரை இழந்துவிடாமல் இருக்கிறேன்.

ஒரு ஐ.டி. இன்ஜினியருக்குள் ஒரு கவிஞர் உருவானது எப்படி?

எம்.டெக் ப்ராஜக்ட் செய்வதற்காக சென்னையில் ஒரு வருடம் இருந்த போதுதான் இலக்கியம் அறிமுகமானது. முதலில் சினிமாக்கவிஞர்களைத் தேடிச் சென்று பார்த்து வருவேன். எப்படியும் சினிமாவில் பாட்டு எழுதிவிட வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் இந்த பயணம் இருக்கும். நிறைய பாடலாசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். அலைந்து திரிந்தேன் என்றும் சொல்லலாம். ஒரு கோடை காலத்தின் மதியத்தில் அப்படித் திரிந்து கொண்டிருந்த போது எதேச்சையாக கவிஞர். தமிழச்சி தங்கபாண்டியனின் புத்தக விழா ஒன்றில் கவிஞர். மனுஷ்ய புத்திரனைச் சந்தித்தேன். அவர்தான் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். அவர் வழியாகத்தான் நல்ல கவிதைகள் அறிமுகமாயின. இலக்கிய ஆர்வம் வந்த பிறகு சினிமா ஆசை அடங்கி விட்டது. இதனால் சினிமாக்கனவை விட்டுவிட்டு கவிதைகள் எழுதுவதோடு நிறுத்திக் கொண்டேன். ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ தொகுப்புதான் எனது முதல் கவிதைத் தொகுப்பு. எழுத்தாளர் சுஜாதா தனது வாழ்நாளில் கடைசியாக வெளியிட்ட புத்தகமும் அதுதான். சமீபமாக கவிதைகள் எழுதுவதில்லை. உரைநடை எழுதுவதுதான் விருப்பமானதாக இருக்கிறது.

தமிழ் இலக்கிய உலகில், இளம் எழுத்தாளர்கள் குறைந்து வருகின்றனரே...

தமிழில் இப்பொழுது நிறையப் பேர் எழுதுகிறார்கள். கவிதை, சிறுகதை, நாவல் என்று எல்லாவற்றிலுமே இளைஞர்கள் மிகத் தீவிரமாக எழுதுகிறார்கள். ஆனால் வெகுஜன ஊடகங்களில் அவர்களை அதிகமாகத் தெரிவதில்லை. இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்கள் சென்றால் அவர்களின் பெயர்கள் பரவலாகத் தெரிய ஆரம்பிக்கும் என நம்புகிறேன். 

பணிப்பளுவுக்கு இடையே எப்படி எழுத முடிகிறது... 

ஐடியில் பணிபுரிவதால் வேலைப்பளு அதிகம்தான். எப்படியும் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணிநேரங்களுக்கு குறைவில்லாமல் அலுவலகத்திற்காக செலவிட வேண்டியிருக்கிறது. இருப்பினும் மிச்சம் பன்னிரெண்டு மணி நேரங்கள் இருக்கிறதே. அதில் இரண்டு மணிநேரங்களையாவது மகனுக்காக ஒதுக்கிவிடுகிறேன். அவனுக்கு ஐந்து வயதாகிறது. அவனுக்கு நிறைய கதைகள் சொல்கிறேன். இப்பொழுது அவனும் கதை சொல்லப் பழகியிருக்கிறான். அவனுக்கு ஒதுக்கியது போக இரண்டு மணி நேரங்கள் வாசிப்புக்கு- தேர்ந்தெடுத்த புத்தகங்களாக வாசிக்கிறேன். பிறகு கொஞ்சமாகத் தூங்குகிறேன். அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு மணி நேரத் தூக்கம்தான். இவற்றிற்கிடையே கிடைக்கும் இடைவெளியில் எழுதுகிறேன். இப்பொழுது இரண்டு மூன்று வருடங்களாக தினமும் எழுதுகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு பக்கங்களாவது எழுதாவிட்டால் தூக்கம் வருவதில்லை. எழுத்தும் வாசிப்பும் ஒருவித போதையாகிவிட்டது. வீட்டில் இருப்பவர்கள் நான் எழுதுவதற்கான எல்லாச் சூழலையும் உருவாக்கித் தருகிறார்கள். அதனால் சந்தோஷமாக இருக்கிறது.

வாசிக்கும் பழக்கம் தமிழில் குறைந்து வருகிறதா? "ஆம்' என்றால் ஏன்?

சரியாகத் தெரியவில்லை. புத்தகங்களின் விற்பனையைப் பார்க்கும் போது வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதாகத்தான் தெரிகிறது. புத்தகக்கண்காட்சிகளில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வியாபாரம் நடக்கிறது. இணையம் வழியாக வாசிப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் எழுதப்படிக்கத் தெரிந்த மக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பார்த்தால் புத்தகங்கள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.

நீங்கள் பெற்ற விருதுகள்..

நிசப்தம் தளத்திற்காக சென்ற வருடம் சுஜாதா இணைய விருது கொடுத்தார்கள். அதுதான் விருது. மற்றபடி வாசகர்களும், ஊடகங்களும் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே. என்னளவில் அதுவே பெரிய விருதுதான். முழுமையான ஈடுபாட்டோடு எழுதிக் கொண்டிருந்தால் போதும். சரியான நேரத்தில் சரியான அங்கீகாரங்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள்..

இரண்டு கவிதைத் தொகுப்புகள் ‘கண்ணாடியில் நகரும் வெயில்’, ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ வெளிவந்திருக்கின்றன. ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது ‘சைபர் சாத்தான்கள்’. சைபர் க்ரைம் பற்றி சாமானிய மனிதர்களுக்கு புரியும்படியான எளிய கட்டுரைகள் அடங்கியத் தொகுப்பு இது. இந்த வருடம் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்தது. ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ என்ற தலைப்பில்.

Jul 18, 2014

பூட்டிட்டுத்தான் தூங்குவியா?

வேலூரில் எம்.டெக் சேர்ந்த போது இரண்டு பேர் தங்கும் அறை ஒன்றை விடுதியில் ஒதுக்கினார்கள். எனக்கு வாய்த்தவன் சென்னைக்காரன். அங்கேயே பி.ஈ முடித்துவிட்டு முதுநிலை படிப்புக்காக இங்கு வந்திருக்கிறான். தென்னை ஓலையின் ஈர்க்குச்சி போல இருந்தான். உயரமும் ஜாஸ்தி. அவனை நல்லவன் என்று நினைப்பதா கெட்டவன் என்று ஒதுக்குவதா என்று தெரியாத மாதிரியான முகவாகு. அம்மா அப்பாவோடு நன்றாகத்தான் பேசினான். என்ன இருந்தாலும் நான்கு வருடம் பி.ஈ படித்திருக்கிறான் அல்லவா? எப்படியும் பக்குவம் இருக்கும் என்று நம்பிக்கையிருந்தது.

அம்மா அப்பாவை தொடரூர்தியில் ஏற்றிவிட்டு வந்த போது அறையில் தனக்கு தோதான இடத்தை ஆக்கிரமத்திருந்தான். அவன் பிடித்து வைத்திருந்த இடத்தில்தான் ஜன்னல் இருந்தது. திறந்து வைத்தால் வெகுதூரம் வரைக்கும் தெரியும். எனக்கு பக்கத்தில் சுவர்தான் இருந்தது. ஜன்னல் போனது கூட பிரச்சினை இல்லை. முதல் நாள் ராத்திரியில்- முதல் ராத்திரி இல்லை- முதல் நாள் ராத்திரியில் சாப்பாடு எல்லாம் முடித்துவிட்டு வந்த போது அறைக்கதவை பூட்டினான். முகம் தெரியாதவனோடு இரவில் தங்குவது சற்று பயமாகத்தான் இருந்தது. ஏதாவது செய்தால் எந்த இடத்தில் உதை விட வேண்டும் என்றெல்லாம் கற்பனையை ஓட்டி வைத்திருந்தேன். அவன் பூட்டுவதற்கான ஆயத்தங்களைச் செய்த போது இன்னமும் பயமாக இருந்தது. பூட்டுவது என்றால் எப்படி? விடுதியின் உட்பக்கமாக ஒரு கம்பி மாதிரியான தாழ்ப்பாள்தானே இருக்கும்? அது போதாதென்று இரும்புக்கம்பியை அதன் மீது முறுக்கி ஒரு அதில் ஒரு பூட்டை கோர்த்து பூட்டி சாவியை என்னிடம் கொடுத்தான். திகிலடைந்துவிட்டேன். அவசரமாக பாத்ரூம் போகலாம் என்றால் கூட திறக்க முடியாத முறுக்கு அது.

என்னவோ நடக்கப்போகிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. எதற்கு இப்படியெல்லாம் பூட்டுகிறாய் என்று நாமாகவே கேட்கலாமா அல்லது கேட்கக் கூடாதா என்று குழப்பமாக இருந்தது. அவனது கட்டிலில் அமர்ந்து ஹி ஹி என்றான். அது வழிவதைப் போலவே இருந்தது. பக்கத்திலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் மெதுவாக எட்டிப்பார்த்தேன். நல்லவேளையாக மீசை அடர்த்தியாக இருந்தது. அப்படியிருந்தும் ஹிஹி என்கிறான். இந்தச் சிரிப்புக்கு எப்படி பதில் சிரிப்பைக் கொடுப்பது என்று தெரியவில்லை. பற்கள் வெளியில் தெரியாமல் உதடுகளை மட்டும் இரண்டு பக்கமாக இழுத்தேன். அது அருகம்புல் கோடு மாதிரியாக ஒரு சிரிப்பைக் காட்டியது. இவனுக்கெல்லாம் இது போதும். 

இனி தப்பிப்பதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட வேண்டும். ஒரு முழு இரவையும் அந்த அறையில்தான் கழித்தாக வேண்டும். வேறு யாரையும் அங்கு தெரியாது. எப்படியும் தன்கையேதான் தனக்குதவி. அவன் முரட்டு ஆளாக இல்லை என்பதால் பெரிய பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கை இருந்தது. மண்டைக்குள் குறுக்கும்நெடுக்குமாக யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன.

இரண்டு தலையணைகள் இருந்தன. முதலில் அவற்றில் ஒன்று தலைக்கு இன்னொன்று கால்மேட்டுக்கு என்று யோசித்திருந்தேன். இப்பொழுது திட்டம் மாறிவிட்டது. கால்மேட்டுக்கு பதிலாக கால்களுக்கிடையில் இறுக்கமாக வைத்து மேலே போர்வையை போர்த்திக் கொள்ள வேண்டும். தலைமேட்டிலேயே ஒரு ப்ளேடு ஒன்றையும் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று பெட்டியைத் திறந்து தேடிக் கொண்டிருந்தேன். ஏதாவது பிரச்சினையென்றால் அவனது கையை அறுப்பது. என்னுடல் மீதாக அவனது கைகள் நகரத் தொடங்கும் போதே இந்த அறுப்பை நிகழ்த்திவிட வேண்டும். ஒருவேளை கட்டுப்படுத்தமுடியவில்லையென்றால் கையில் சிக்கும் வேறு எதையாவது அறுத்துவிடலாம்- அறுக்கிற அறுப்பில் துண்டாகிவிட வேண்டும். அவனுக்கு கண்ணில்படும்படியாகவே தலையணைக்குக் கீழாக ப்ளேடை வைத்தேன். 

அப்பொழுதுதான் அவனே பேச ஆரம்பித்தான். நான் சந்தேகப்படுகிறேன் என்று அவனுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ‘தூக்கத்திலேயே நடப்பேன். அதுவும் புது இடமாக இருந்தால் இன்னமும் பிரச்சினை. நம்ம ரூம் வேற ஐந்தாவது மாடியில் இருக்கிறது. அதனாலதான் பயமா இருக்கு’ என்றான். நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. ‘இரவில் எதற்காவது எழுப்பினால் கூடவே வாங்க’ என்றான். பாத்ரூம் செல்வதாக இருந்தாலும் கூடவே வர வேண்டுமாம். விதி யாரை விட்டது? சரி என்று படுத்துக் கொண்டேன். 

புது இடம் என்பதனால் தூக்கமே வரவில்லை. போதாததுக்கு இவன் வேறு அழிச்சாட்டியம் செய்கிறான். அரை மணி நேரத்தில் தூங்கிவிட்டான். தூங்குகிறானோ? நடிக்கிறானோ? யார் கண்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி தலையணையை கால்களுக்கிடையில் இறுக்கமாக வைத்து- இந்த இறுக்கத்துக்கு ஒரேயொரு காரணம்தான் - போர்வையை தலை வரைக்கும் இழுத்து படுத்துக் கொண்டேன். தூக்கத்தில் நடப்பவர்கள் கண்களைத் திறந்து கொண்டு நடப்பார்களா? கண்களைத் திறந்து கொண்டே தூங்கினால் பார்ப்பதற்கு பேய் மாதிரி இருக்காதா? பேய்மாதிரியே எழுப்பினால் எப்படி சமாளிப்பது என்று ஏகப்பட்ட கேள்விகள். குழப்பத்திலேயே கிடந்தேன். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஏதேதோ கனவுகள் வந்து கொண்டிருந்தன. 

திடீரென்று கண்களில் வெளிச்சம் அடிக்கிறது. விழித்துப் பார்த்தால் கதவு திறந்திருக்கிறது. அவனைக் காணவில்லை. கால்களுக்கிடையிலிருந்த தலையணை கீழே கிடந்தது. ஏதாவது செய்துவிட்டானா என்று பெருங்குழப்பம். எதுவும் நடக்கவில்லை போலிருந்தது. இருந்தாலும் இன்னமும் சந்தேகம்தான். சாவியை எப்படி எடுத்தான் என்றும் புரியவில்லை. இவையெல்லாவற்றையும் விட அவன் தூக்கத்திலேயே ஐந்தாவது தளத்திலிருந்து எட்டிக் குதித்திருந்தால் நம் கதை கந்தல். நாளை விசாரணை என்ற பெயரில் போலீஸ் ஸ்டேஷனில் ஜட்டியோடு அமர வைத்து முட்டியை பெயர்த்துவிடுவார்கள். பதறியபடியே எழுந்து போனால் பாத்ரூமிலிருந்து வந்து கொண்டிருந்தான். அவன் தூக்கத்தில் நடக்கிறான் என்றுதான் தோன்றியது. ஆனால் தெளிவாக பேசினான். ‘உங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று நானே சாவியை எடுத்துக் கொண்டேன்’ என்றான். அதன் பிறகு எப்படித் தூக்கம் வரும்? தூங்கவேயில்லை.

நான்கைந்து நாட்களில் அவன் நான் நினைத்த மாதிரியானவன் இல்லை என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் பூட்டுகிற வைபவம் மட்டும் நிற்கவில்லை. விடுதியில் மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தான். அதில் என்னவோ தாழ்வுணர்ச்சி அவனுக்கு. ஒவ்வொரு நாளும் பூட்டி சாவியை எடுத்து அவனால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைத்துவிடுவேன். எதற்காக இருந்தாலும் என்னை எழுப்புவான். சில நாட்களில் எரிச்சலாக இருக்கும். ஆனால் பல சமயங்களில் பரிதாபமாகத்தான் இருக்கும். எழுந்து என்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டு படுக்கையிலேயே அமர்ந்திருப்பான். சில சமயங்களில் நள்ளிரவில் அழுது கொண்டிருப்பான். எப்படி சமாதானம் சொல்வது என்றே தெரியாது. இப்படியே ஒரு மாதிரியாக நண்பர்களாகிவிட்டோம்.

தேர்வு சமயங்களில் வராண்டாவில் மற்ற மாணவர்கள் அமர்ந்து படிப்பார்கள். அப்படியே தூங்கியும் விடுவார்கள். இவனுக்காக நான் அறையைவிட்டு வெளியே போவதில்லை. அப்படியான ஒரு சுபயோக சுபதினத்தில் பையன்கள் வெளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அது இரண்டாவது செமஸ்டர். இவன் அறைக்குள்ளேயே படித்துக் கொண்டிருந்தான். எனக்கு அசதி. தூங்கிவிட்டேன். தூங்கும் போது கதவை பூட்டிக் கொள்வதாகவும் என்னை எழுப்பி சாவியைத் தருவதாகவும் சொல்லியிருந்தான். ஆனால் பூட்டாமலேயே தூங்கிவிட்டான் போலிருக்கிறது. மூன்றரை மணி இருக்கும். வெளியில் ஒரே சத்தம். இவன் அறைக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறான். எழுந்து போனால் பையன்கள் பயங்கரமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேறொன்றுமில்லை.

ஹிந்திக்காரப் பையன் ஒருவன் வராண்டாவில் படுத்திருந்திருக்கிறான். தூங்கிக் கொண்டிருந்த அவன் வாயில் எவனோ சிறுநீர் கழித்துவிட்டான். வெகுநேரம் படித்துவிட்டு அப்பொழுதுதான் தூங்கியதாலோ என்னவோ அசந்து தூங்கியிருக்கிறான். மோட்டார் ஓட ஆரம்பித்து சில வினாடிகளுக்குப் பிறகு லபோதிபோ என்று கத்தியிருக்கிறான். ஆனால் விழித்துப் பார்க்கும் போது யாரையும் காணவில்லை. அவனது அலறல் கேட்டு கூட்டம் சேர்ந்துவிட்டது. ஆனால் யாரென்று கண்டுபிடிக்கமுடியவில்லை. நான் கூட்டத்தில் ஐக்கியமான போது ஹிந்திக்காரன் பாத்ரூமில் எக்கி எக்கி வாந்தியெடுத்துக் கொண்டிருந்தான். சிரித்துவிட்டு அறைக்குத் திரும்பிய போது ‘பிரச்சினை முடிஞ்சுடுச்சா?’ என்றான். இவன் தான் அந்த கொடூரன். அப்பவே துளி சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் தூங்கிக் கொண்டிருக்கிறான் என நினைத்தேன்.

‘வேணும்ன்னு பண்ணலை...தூக்கத்துலதான்...அடிச்சுட்டு இருக்கும் போது திடீரென்று விழிப்பு வந்துவிட்டது. பார்த்தால் அவன் வாயில் அடித்துக் கொண்டிருக்கிறேன். அவன் கத்தவும் நான் ஓடிவரவும் சரியாக இருந்தது’ என்றான். சிரிப்பதா வருந்துவதா என்று தெரியவில்லை. அடுத்தநாள் ஹிந்திக்காரன் வார்டனிடம் புகார் செய்தான். ஆனால் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படி கண்டுபிடிப்பார்கள்? 

செமஸ்டர் தேர்வுகள் முடிந்தவுடன் அவனோடான தொடர்பு அறுந்துவிட்டது. அடுத்த வருடமே அவன் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றுவிட்டதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். ஒன்றிரண்டு மின்னஞ்சல்களுக்குப் பிறது அந்தத் தொடர்பும் இல்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு, இரண்டு நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக் வழியாக கண்டுபிடித்திருந்தேன். இப்பொழுது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறான். ஃபோனில் பேசினான். கடைசியாக ஒரு கேள்வி கேட்டேன். எதிர்பார்த்த பதில்தான் - இன்னமும் பூட்டிக் கொண்டுதான் படுக்கிறானாம்.