Jun 26, 2014

ஹிந்தி படித்தே தீர வேண்டுமா?

நேற்று இன்று நாளை- மூன்று நாட்களையும் என் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கீழே தள்ளி கழுத்து மீது காலை வைத்து அறுக்கிறார்கள். ட்ரெயினிங். காலையில் பத்து மணிக்கு ஆரம்பித்து ஏழு மணிக்கு விடுகிறார். இதைக் கூட சமாளித்துவிடலாம். கோரமங்களா வந்து சேரும் போது ஏழரை ஆகிறது. உண்மையான ஏழரை. வாகன ஓட்டிகள் நெருக்கித் தள்ளுகிறார்கள். அது வீடுகள் நிறைந்திருக்கும் பகுதிதான். நடுவில் சாலைப் பகுப்பு கூட இருக்காது. நேற்று சிக்கிக் கொண்டேன். மகிழ்வுந்துகள் வரிசையாக நின்று கொண்டிருக்க பைக்காரர்கள் அவர்களை முந்திச் சென்று கொண்டிருந்தார்கள். முன்னேர் எப்படியோ அதே வழிதானே பின்னேரும் செல்லும்? முன்னால் சென்று கொண்டிருந்த பைக்காரர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். முதல் அரை கிலோமீட்டருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாற்பதுக்கும் மேலான கார்களைத் தாண்டிவிட்டேன். அதன்பிறகுதான் சனி ஹோண்டா சிட்டியில் வந்து கொண்டிருந்தது. கறுப்பு நிற வண்டி. பளிச்சென்று வைத்திருந்தான்.

எதிரில் வருபவன் மீது தவறு இருக்கிறது என்று தெரிந்தால் ஒரு கெத்து இருக்குமல்லவா? அந்த கெத்தில் வந்து கொண்டிருந்தான். எனக்கு இடது பக்கம் கார் நிற்கிறது. துளி சந்து இருந்தாலும் கூட உள்ளே நுழைத்துக் கொள்வேன்- அதற்கும் வழியில்லாமல் முன்னால் நிற்பவனை மோப்பம் பிடித்தபடியே நிற்கிறான் அந்தக் கார்க்காரன். எதிரில் வரும் இந்த சனிபகவானும் மேலேயே இடித்துவிடுவது போல வருகிறான். தவறு என் பக்கம்தான். ஆனால் அதற்காக இப்படி ஏறினால் என்ன செய்ய முடியும்? வேறு வழியில்லை. ஒதுங்க முடிகிற அளவுக்கு ஒதுங்கிக் கொள்ளலாம் இடது பக்கத்தில் இருக்கும் காரை ஒட்டியபடி ஓரங்கட்டிக் கொண்டேன். இதெல்லாம் மொத்தமாக நான்கைந்து நொடிகள்தான். முகத்தை பயந்தபடிதான் வைத்திருந்தேன். உண்மையிலேயே பயம்தான். தப்பு அவர்களுடையதாகவே இருந்தாலும் கண்டபடி திட்டுவார்கள். இப்பொழுது தவறு என்னுடையது. திட்டாமல் விடுவார்களா? அதுவும் கன்னடத்தில் திட்டினால் திருப்பி பதில் சொல்லக் கூட முடியாது. தமிழ்க்காரன் என்று தெரிந்தால் இன்னமும் இளக்காரமாகப் போய்விடும்.

கடந்த முறை சண்டையில் அப்படித்தான் பெரிய பல்பாக வாங்கினேன்- ஹெல்மெட்டைத் தலைக்கு அணியாமல் இடது கையில் பிடித்தபடி வண்டி ஓட்டி வந்த நல்ல மனிதனிடம். அவன் பாட்டுக்கு சென்றிருந்தால்தான் விவகாரம் இல்லையே. ஆனால் அந்த ஹெல்மெட்டைக் கொண்டு வந்து எனது கைப்பிடியில் சிக்க வைத்துவிட்டான். விழத் திரிந்தேன். அவனை முறைப்பதற்குள் ‘ஏனாயித்து குரு’ என்று கேட்டுவிட்டான். அடங்காமல் ‘பார்த்து வர மாட்டியா?’ என்று வாயைக் கொடுத்துவிட்டேன். அவனுக்கு அது கேட்டுவிட்டது. விடுவானா? தமிழன் சிக்கினால் குருவிக்குஞ்சு சிக்கின மாதிரிதான். தப்பித்து வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு புலம்பிக் கொண்டிருந்தேன்.

நேற்றும் அப்படியொரு சூழல்தான். பயந்த மாதிரி முகத்தை வைத்திருந்ததற்காகவாவது சனிபகவான் விட்டுத் தொலைத்திருக்கலாம். ம்ஹூம். இன்னமும் நெருக்கியபடி வந்தான். இனி ஆண்டவன் விட்ட வழி. வலது காலை foot rest இல் இருந்து தூக்கிக் கொண்டேன். அவனும் மேலே இருந்து பார்த்திருப்பான் போலிருக்கிறது- ஆண்டவனைத்தான் சொல்கிறேன். ‘டொக்’ என்று அடித்தது. அவன் வண்டி என்னுடைய பம்பரில் இடித்திருந்தது. அப்பாடா. அத்தனை படபடப்பிலும் கொஞ்சம் சிரித்துக் கொண்டேன். அடித்துவிடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை போலிருக்கிறது. மிக அருகில் ஓட்டி வந்து மிரட்டுவதுதான் அவனது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். கை மீறிவிட்டது. இடித்த வேகத்தில் சற்று தடுமாறினேன். ஆனால் இடதுகாலுக்கு மொத்த பலத்தையும் கொடுத்து ஊன்றி நின்று கொண்டேன். அவனும் பதறிவிட்டான். துளி நகர்த்தித்தான் வண்டியை நிறுத்தினான். அதற்குள் அடங்கப்பிடாரி foot rest ம் கோடு போட்டுவிட்டது. ஒரு தமிழ்ப்படம் வந்ததே- இரு கோடுகள், அதுதான். பம்பர் ஒரு கோடு, ஃபுட் ரெஸ்ட் ஒரு கோடு. சுத்தம். 

அத்தனை நெரிசலிலும் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டான். பின்னால் நிற்பவர்கள் தாறுமாறாக ஒலி எழுப்பினார்கள். அவனது அத்தனை கடுப்பும் நான் தான். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம்- கன்னடம்தான் பயத்தை அதிகமாக்கியிருந்தது. ஆனால் பயந்தது போல நடக்கவில்லை. ஹிந்தியில் பேசினான். எடுத்தவுடனேயே ஒரு வசை. அது ஒரு மட்டமான ஆபாசச் சொல் என்று தெரியும். ஆனால் இப்போது பேசுவது நல்லதில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு பம்ம வேண்டியதாக இருந்தது.

பெங்களூரில் இது போன்ற விவகாரங்களில் ஆட்டோக்காரர்கள் களமிறங்கிவிடுவார்கள். நேற்றும் அப்படித்தான். விஜய் படம் ஒட்டியிருந்த  ஆட்டோவிலிருந்து ஒருத்தர் இறங்கினார். கன்னடத்தில்தான் ஆரம்பித்தார். ‘என்னோட தப்புதாங்கண்ணா ஆனா வேணும்ன்னே கொண்டு வந்து இடிச்சுட்டானுங்கண்ணா’ என்றேன். அண்ணாவில் அவர் கொஞ்சம் அவர் உருகியிருக்கக் கூடும். அதுவும் விஜய் ஸ்லாங்கில் பேசியிருந்தேன். 

கார்க்காரன் ‘ஹிந்திமே போல்..ஹிந்திமே போல்...சாலா மதராஸி’ என்றான். 

‘தெரிந்தால்தாண்டா போல்றது’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். 

காற்று என் பக்கம் வீசத் தொடங்கியது. ஆட்டோக்காரர் எனக்கு சாதகமாக பேசத் தொடங்கினார். அப்பொழுதுதான் கவனித்தேன். அந்தக் கார் உத்தரப்பிரதேச பதிவு எண். பாதி வெற்றி நம் பக்கம்தான். ஆனால் கார்க்காரன் விடுவதாகத் தெரியவில்லை. காவல்துறைக்குச் செல்ல வேண்டும் என்றான். கூட்டம் சேரச் சேர அவரே வந்துவிட்டார்- போக்குவரத்துத் துறை காவலர். எனக்கு தமிழில் பதில் சொல்கிறார். அவனுக்கு ஹிந்தியில் பதில் சொல்கிறார். ‘இந்த வெளியூர்க்காரனுக வந்துதான் நம்ம ஊரை நாசக்கேடு பண்ணுறானுக’ என்று ஆட்டோக்காரரிடம் கன்னடத்திலும் சொன்னார். பன்மொழி வித்தகர். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். பிரச்சினையை முடித்துக் கொடுத்தால் சரி. அவருக்கும் அவசரம்தான் ட்ராபிக் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சரி செய்தாக வேண்டும். அவர் முன்பாகவே கார்க்காரன் என்னைத் திட்டினான். ஆட்டோக்காரர் நம் ஆள் அல்லவா? ஒரு ஏறு ஏறினார். அடங்கிக் கொண்டான்.

ஆட்டோக்காரர்  அருகில் இருக்கும் தைரியத்தில் ‘என் தப்புதான் சார். ஆனா அவர்தான் வேணும்ன்னு இடிச்சாரு..ராங் சைடுக்கு ஃபைன் போடுங்க...இடிச்சதை இங்க யார்கிட்ட வேணும்ன்னாலும் கேளுங்க’ என்று போலீஸ்காரரிடம் சொன்னேன். அவர் கொஞ்சம் சமாதானம் ஆகிவிட்டார். அவனிடம் திரும்பி ‘வேற எதுவும் செய்ய முடியாது’ என்றார்.  அவன் இன்னமும் கடுப்பாகிவிட்டான். ‘கோர்ட்டுக்கு போகலாம்’ என்றான். பேசிக் கொண்டே காவலர் எனக்கு முந்நூறு ரூபாய் தண்டம் விதித்தார். அபயாகரமாக வண்டி ஓட்டிய பிரிவு அது. பர்ஸில் முந்நூற்றைம்பது ரூபாய்தான் இருந்தது. எடுத்துக் கொடுத்தேன். சிரித்துக் கொண்டு உள்ளே வைத்தார்.  ஆட்டோக்காரர் எனக்கு சிக்னல் கொடுத்தார்.

‘கிளம்பட்டுமா சார்?’ என்றேன். 

போலீஸ்காரர் ‘அவன் கோர்ட்டுக்கு போலாம்ன்னு சொல்லுறான்’ என்றார்.

‘நோட்டீஸ் அனுப்புங்க சார்...வந்துடுறேன்’ என்ற போது அவர் பெரியதாக மறுப்புச் சொல்லவில்லை. ஹிந்திக்காரன் தான் பொங்கினான். மீண்டும் திட்டினான். வண்டியை எடுத்துவிட்டேன். அவன் ஓடி வந்து பிடித்தால் பிடிக்கலாம். ஆனால் அவன் வரவில்லை. ‘வண்டியை ஓரமாக நிறுத்துங்க’ என்று அவனிடம் போலீஸ்காரர் சொல்லிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக ஹெல்மெட் அணிந்துகொண்டு அவனைப் பார்த்தேன். மீண்டும் அதே கெட்டவார்த்தையில் திட்டினான். அதைவிட ஆபாசமான வார்த்தை தெரியும் என்று சொன்னேன் அல்லவா? அதைச் சொல்லிவிட்டு நடுவிரலைக் காட்டிவிட்டு வந்தேன். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.