Jun 23, 2014

நட்டு வைத்த கல் எங்கே இருக்கிறது?

ஓசூரில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது- நடுகற்களைப் பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கம். நடுகற்கள் என்றால் நட்டு வைக்கப்பட்ட கற்கள் என்ற அளவில்தான் எனது அறிவு இருந்தது. தெரிந்து கொள்வோம் என்று சென்றிருந்தேன். கல்யாண மண்டபத்தில்தான் நிகழ்வு. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் அறிஞர்கள். அந்தக்காலத்தில் வீர மரணம் அடைந்தவர்களின்- போர், ஊரைக்காக்க விலங்குகளோடு நடந்த சண்டை என்று எப்படி நிகழ்ந்த மரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம்- அப்படிப்பட்ட வீரர்களின் நினைவாக நடப்பட்ட கற்கள்தான் நடுகற்கள். அந்தக் காலத்தில் வீரர்களின் மனைவிகளும் வீரர்களுடன் சேர்ந்து இறந்து போனார்கள் அல்லவா? அவர்களுக்காக எழுப்பட்ட நினைவுச் சின்னங்கள் சதிகற்கள்.

நடுகற்கள், சதிகற்கள்- அவற்றின் தொடக்கம், ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எப்படி மாறியிருக்கின்றன போன்றவற்றையும் அந்த சிற்பங்களில் இருக்கும் iconographic அடிப்படை, நடுகற்களின் காலகட்டத்தை நிர்ணயிக்கும் முறை போன்றவற்றின் அடிப்படை அம்சங்களையாவது தெரிந்து கொண்டதாகத்தான் சொல்ல வேண்டும்.

கேரளாவிலிருந்து வந்திருந்த ஒரு பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் குஜராத்தில் ஹரப்பா நாகரீகத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பவர். அவ்வப்போது கேரளாவுக்கும் குஜராத்துக்குமிடையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த நாகரீகம் பற்றிய அத்தனை தகவல்களைக் கொட்டுகிறார். எட்டாம் வகுப்பு வரலாற்றில் படித்ததோடு சரி. இப்பொழுதுதான் ஞாபகபப்படுத்திக் கொள்கிறேன். தேவர கொண்டா ரெட்டி என்றொரு கர்நாடக ஆய்வாளரிடம் பேசினால் ஒற்றைச் சிற்பத்தை வைத்துக் கொண்டு ஓராயிரம் தகவல்களைச் சொல்கிறார். பெங்களூரில்தான் இருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரைப் பார்த்து வாயைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

இந்த நடுகற்களை கர்நாடகாவில் வீரக்கல் என்கிறார்கள். பெங்களூரில் இப்ளூர் என்ற இடத்தில் சாலையின் நடுவிலேயே இருக்கிறது. எனக்கு இத்தனை நாட்கள் இது நடுகல் என்று தெரியாது. நாய்கள் ஒன்றுக்கடிக்க தோதாக அந்தக்கால நன்மக்கள் நட்டு வைத்திருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த அசமஞ்சம் நான். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு- முப்பத்தி சொச்சம் வயதாகிவிட்டது.  

அமத்தா ஊரிலும் ஒரு நடுகல் இருக்கிறது. அதில் ஏதாவது எழுதியிருக்கிறதா என்று ஞாபகம் இல்லை. இவர்கள் பேசிய பிறகுதான் அது நடுகல் என்றே உறைக்கிறது. இந்த முறை பார்த்துவிட்டு வர வேண்டும்.


கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை போகும் வழியில் இருந்த Dolmen என்று எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தார்கள். முட்டுச்சந்தில் சிக்கிக் கொண்ட டால்மேஷன் நாயைப் போல முழித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த மாதிரி இடங்களில் வெட்கப்படவே கூடாது. கூச்சமே இல்லாமல் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டுவிட வேண்டும். அப்படி நான் கேட்கப் போக பதில் சொன்னவர் பூங்குன்றன். அழுக்கடைந்த வேட்டியும், ஒடிசலான தேகமுமாக அமர்ந்திருந்த அவரைக் கிட்டத்தட்ட தொல்லியலின் authority என்கிறார்கள். அவனவன் தன்னை அத்தாரிட்டியாக காட்டிக் கொள்ளவே என்னெனென்னவோ பினாத்திக் கொண்டிருக்கிறான். இவரை அத்தாரிட்டி என்கிறார்கள் ஆனாலும் இவ்வளவு எளிமையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான்.

இந்த கற்திட்டைகளை பெயர்த்தெடுத்தால் புதையல் கிடைக்கும் என்று யாரோ கிளப்பிவிட்டதை நம்பி வெடி வைத்துத் தகர்த்துவிட்டார்களாம். இப்பொழுது அந்த இடத்தில் எந்த அடையாளமும் இல்லையாம். சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் விநாயக முருகன் ‘ஏன் எல்லோரும் வரலாற்றை எழுத ஆசைப்படுகிறீர்கள்?’ என்று கேட்டிருந்தார். வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. குறைந்தபட்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வரலாறு பற்றிய அடிப்படையான விழிப்புணர்வுவாவது நம்மிடையே இருக்க வேண்டும்.

பாருங்கள்- இந்த கற்திட்டைகளுக்கு குறைந்தபட்சம் நான்காயிரம் வருட ஆயுள் இருந்திருக்கும். இத்தனை ஆயிரம் வருடங்கள் தம் கட்டி நின்றிருந்த அடையாளத்தை கடந்த முப்பது வருடங்களுக்குள்ளாக வெடித்துச் சிதறடித்துவிட்டோம். அவ்வளவுதான் நம் சொரணை. சில மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி அருகே ஒரு தமிழ் ஆசிரியரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். அவர் ஊருக்குச் செல்வதற்கு பதிலாக வழி மாறிச் சென்றுவிட்டோம். போய்ச் சேர்ந்த இடம் ஐகுந்தம். அதுவும் நல்லதாகப் போய்விட்டது. சாலையோரத்திலேயே ஏதோ கல்வெட்டு இருந்தது. இறங்கி விசாரித்தால் லுங்கி கட்டிய புண்ணியவான் அழைத்துச் சென்று சில குகை ஓவியங்களைக் காட்டினார். எந்தக் காலத்திலோ ஆடு மேய்க்கச் சென்றிருந்த குரும்பன் வரைந்து வைத்திருந்த ஓவியம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கும். வேறு எங்கேயாவது இன்னமும் இருக்கா? என்று கேட்டால் சில கிலோமீட்டர் தாண்டிச் சென்றால் நிறைய இருந்ததாம் ஆனால் கிரானைட் குவாரிகளுக்காக அந்த மலைகளைப் பெயர்த்தெடுத்துவிட்டதாகச் சொன்னார். அவ்வளவுதான். 

எனக்குத் தெரிந்து புது எழுத்து மனோன்மணி, சதானந்த கிருஷ்ணகுமார் போன்றவர்கள் இத்தகைய அடையாளங்களை இன்னமும் தேடிக் கண்டறிந்து கொண்டிருக்கிறார்கள். புது எழுத்து மனோன்மணிதான் இந்த இரண்டு நாள் கருத்தரங்கின் முதுகெலும்பு. உறுதுணையாக திரு.கே.ஏ.மனோகரன் இருந்திருக்கிறார். இவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர். அவரது தந்தை அப்பாவு பிள்ளை முப்பது ஆண்டுகள் ஓசுர் டவுன்பஞ்சாயத்தின் தலைவராக இருந்தவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஊரில் செல்வாக்கான மனிதர்கள். அவர்களது திருமண மண்டபத்தில்தான் நிகழ்வு நடைபெற்றது. இந்த மாதிரி கருத்தரங்குகளில் தக்காளி சாதமும் தயிர்சாதமும்தான் போடுவார்கள் என்று குதர்க்கமாக நினைத்திருந்தேன். ஓங்கி தலையில் அடித்து தலைவாழை இலையில் விருந்து படைத்தார்கள். அவர்களே பேருந்து ஏற்பாடு செய்து மாலையில் குடிசெட்லு என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பிற்கால நடுகற்கள் நிரம்பியிருந்த கோயில் அது. ஓசூரிலிருந்து இருபது கிலோமீட்டர்தான். யாராவது ஓசூர் வருவதாக இருந்தால் சொல்லுங்கள். இன்னொரு முறை ரவுண்ட் கட்டி வரலாம்.

கருத்தரங்கில் சனிக்கிழமை கலந்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமையும் கலந்து கொள்ளத்தான் நினைத்திருந்தேன். ஆனால் வீட்டில் கருத்தரங்கை ஆரம்பித்துவிட்டார்கள். ‘போனா சீக்கிரம் வரத் தெரியாதா’ என்று அப்பா கேட்டால் ‘வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க?’ என்று அம்மா கேட்கிறார். ‘எங்க கூட இருக்க முடியாதா?’ என்று வேணி கேட்க ‘நாளைக்கு பார்க் கூட்டிட்டு போங்கப்பா’ என்று மகி கேட்கிறான். இந்தக் கருத்தரங்கை மீறி இரண்டாம் நாள் செல்ல முடியவில்லை. ஆனால் முதல் நாளில் கற்றுக் கொண்டதை விரிவாக்கம் செய்யவே ஒரு வருடமாவது தேவைப்படும் என நினைக்கிறேன்.

சொல்ல மறந்துவிட்டேன். முதல் நாள் இரவில் திருபத்தூர் தூய நெஞ்சுக் கல்லூரியின் மாற்று நாடகக் குழுவினர் பறை இசையையும், செண்ட மேளமும் வாசித்துக் காட்டினார்கள். ஒரே குழுவினர்தான். பட்டையைக் கிளப்பினார்கள். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள். கி.பார்த்திப ராஜாவின் மாணவர்கள். குழுவில் பாலசுப்பிரமணியம் என்ற தமிழ் விரிவுரையாளரும் உண்டு. முதல் அரை மணி நேரம் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறிக் கொண்டது. பக்கத்தில் யாராவது இருந்தால் குத்திவிடுவேன் என்பதால் எழுந்து வந்து பின்புறமாக நின்று கொண்டேன். இசைக்கும் போது ‘ஹே...ஹே’ என்று அவர்கள் கத்தியது வீடு போகும் வரைக்கும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அத்தனை எனர்ஜி அவர்களிடம். இன்னொரு முறை கல்லூரியில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் பார்த்திபராஜாவிடம் மாணவனாகச் சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன்.