Jun 20, 2014

யார் கண்டுகொள்கிறார்கள்?

நேற்று ஒரு நண்பர் பேசினார். புலம்பினார் என்பது சரியாக இருக்கும். அவரை யாருமே கண்டுகொள்வதில்லையாம். எல்லோரும் புறந்தள்ளுகிறார்களாம். செம ஃபீலிங். 

பெரும்பாலானோருக்கு இப்படியொரு எண்ணம் இருக்கிறது.  என்னைக் கேட்டால் ‘நான்தான் கடின உழைப்பாளி’ என்று சொல்லிக் கொள்வேன். இன்னொருவரைக் கேட்டால் அவரும் தன்னைத்தான் கடின உழைப்பாளி என்று சொல்லிக் கொள்வார். இப்படித்தான் பலரும். பண விவகாரத்தில் மட்டும் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு ‘அவனை விட ஏழை அல்லது பணக்காரன்’ என்று comparison study செய்யும் நாம் உழைப்பில் மட்டும் ‘நாம்தான் அப்பாடக்கர்’ என்று நினைத்துக் கொள்வதன் சிக்கல் இது. நாம்தான் கடின உழைப்பாளி என்று மட்டும் நினைத்தால் பிரச்சினையில்லை நமது உழைப்பைவிடவும் மிஞ்சிய பாராட்டும் புகழும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அங்குதான் சிக்கல்.

தாறுமாறாக அவசரப்படுகிறோம். எப்பொழுதும் நம்மைப் பற்றி நான்கு பேர் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஒரு துறையில் கால் வைத்தவுடனேயே நமக்கு பரிவட்டம் சூட்டப்பட வேண்டும் என விரும்புகிறோம். இப்படி எத்தனை ஆசைகள்? 

ஒன்று மட்டு நிச்சயம்- இப்படி ஒரு நினைப்பும் புலம்பலும் இருக்கும் வரைக்கும் எந்தத் துறையிலும் வெல்ல முடியாது. இன்னும் எத்தனை காலத்திற்கு உழன்றாலும் புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். 

இந்த உலகம் ஒன்றும் அவ்வளவு குரூரமானது இல்லை. ஒருவனிடம் திறமையும், சரியான உழைப்பும் இருந்தால் நிச்சயம் கண்டு கொள்ளும். ஒருவேளை சற்று கால தாமதம் ஆகக் கூடும் அவ்வளவுதான்.  இன்றைக்கு யாரையெல்லாம் நாம் வெற்றியாளர்கள் என்று நினைக்கிறோமோ அவர்கள் குறைந்தபட்சம் பத்து வருடங்களாவது உழைத்திருப்பார்கள். அந்த பத்து வருடங்களில் எத்தனை தோல்விகள், அவமானங்கள், பாராட்டுக்களைச் சந்தித்திருப்பார்கள்? எதுவாக இருந்தாலும் கால்களுக்கு கொஞ்சம் வேகம் கொடுத்து உந்தித் தாண்டியிருப்பார்கள். அப்படித் தாண்டி வந்தவர்கள்தான் இன்றைக்கு சாதனையாளர்கள். அப்படிக் கிடைக்கும் வெற்றிதான் நிரந்தரம். வெற்றியாளர்களின் கடந்தகால வரலாற்றைப் பற்றி யோசிக்காமல் இன்றைக்கு அவர்கள் நிற்கும் இடத்தை உடனடியாக நாமும் அடைய வேண்டுமென்றால் எப்படி சாத்தியம்? அப்படி ஆசைப்படுவதன் விளைவுதான் அத்தனை குறுக்குவழி முயற்சிகளும், அத்தனை attention seeking அட்டகாசங்களும்.

அடுத்தவர்கள் கவனிக்க வேண்டும் என்பதும் கூட ஒரு வகையில் பணத்தைத் தேடுவதைப் போலத்தான். பத்து ரூபாய் வைத்திருப்பவன் நூறு ரூபாயை அடைய நினைக்கிறான். நூறு ரூபாய் வைத்திருப்பவன் ஆயிரத்தை குறி வைக்கிறான். ஆயிரம் வைத்திருப்பவன் லட்சத்தையும் லட்சாதிபதி கோடியையும் நோக்கி ஓடுகிறார்கள். அதே போலத்தான் ஆயிரம் பேருக்குத் அறிமுகமானவன் லட்சம் பேருக்கு அறிமுகமாக விரும்புகிறான் லட்சம் பேருக்கு அறிமுகமானவன் கோடி மக்களை அடைய விரும்புகிறான். 

புதிதாக ஆரம்பிப்பவர்கள் எடுத்தவுடனே கோடிக்கணக்கானவர்களை குறி வைப்பதில்தான் இத்தனை அக்கப்போர்களும். 

இங்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. திறமையாளர்களும் நிறைந்திருக்கிறார்கள். கேமரா வைத்திருப்பவனெல்லாம் ஃபோட்டாகிராபர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஃபேஸ்புக்கில் ஐம்பது லைக் வாங்குபவர்கள் பிரபலங்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள், ட்விட்டரில் எழுதுபவர்கள் அறிவாளிகள், ப்லாக் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள்- சொல்லிக் கொண்டே போகலாம். இப்படித்தான் நிலைமை இருக்கிறது. இதைத் தவறு என்று சொல்லவில்லை. எல்லோராலும் எதையாவது செய்துவிட முடிகிறது. எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் வெற்றியாளர்களா? consistency அவசியம். எதைச் செய்தாலும் ஒரு தொடர்ச்சி வேண்டும். மூன்று மாதம் இடைவெளி விட்டு வந்தால் பாதிப் பேர் மறந்துவிடுவார்கள். ஆறு மாதம் கழித்து வந்தால் அத்தனை பேரும் மறந்திருப்பார்கள். ஆரம்பத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். உலகம் அத்தனை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆத்மாநாமின் மொத்தத் தொகுப்பும் இருநூற்றைம்பது பக்கங்கள்தான், மகேந்திரனும், பாலு மகேந்திராவும் வருடம் நான்கு படங்களாக எடுத்துத் தள்ளவில்லை, பசுவய்யா மொத்தமாகவே 107 கவிதைகள்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அவர்கள் மட்டும் நிலைத்துவிட்டார்களே என்று கேட்கலாம்தான். அவர்களின் காலம் வேறு நம் காலம் வேறு. முன்பெல்லாம் டிவியில் முகம் காட்டினால் பிரபலம் ஆகிவிட முடியும். இன்றைக்கு சூப்பர் சிங்கரில் சாம்பியனே ஆனாலும் கூட ஏதாவது இசையமைப்பாளரின் வீட்டுக்கு முன்னால் வாய்ப்புக் கேட்டுத்தான் ஆக வேண்டும். முன்பெல்லாம் பாடகர்கள் என்றால் அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருப்பார்கள். இன்றைக்கு எத்தனை பாடகர்கள் இருக்கிறார்கள்? எத்தனை பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள்? அனைத்து இடங்களிலுமே ‘நீ இல்லைன்னா இன்னொருவன்’ என்பதுதான் சூழல். இதில் எழுத்து மட்டும் விதிவிலக்கா? நம்மை நிரூபிக்கவும், நமது அடையாளத்தை தொடர்ந்து புதுப்பிக்கவும் கடும் உழைப்பைக் கொட்டினால்தான் சாத்தியம்.

இங்கு எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்கிற தொண்ணூறு சதவீதம் பேரிடம் அதற்கான உழைப்பு இல்லை. ‘வெளிக்கி போவது போல எதையாவது எழுதிக் கொண்டேயிருக்க வேண்டுமா?’ என்று சரக்கடித்துவிட்டு நக்கலடிப்பவர்கள்தான் அதிகம். ஒரு கவிதைத் தொகுப்பையோ அல்லது ஒரு சிறுகதைத் தொகுப்பையோ எழுதிவிட்டு இலக்கிய வரலாற்றில் தனக்கான இடத்தை அழுந்தப் பதியுங்கள் என்று கோரினால் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான புத்தகங்கள் வந்து நிரம்புகின்றன. ஆயிரக்கணக்கான எழுத்தாளர் உருவாகிறார்கள். எத்தனை பேர் நிலைக்கிறார்கள்? இது எழுத்தில் மட்டும் இல்லை. வேறு எந்தத் துறையாக இருந்தாலும் இதுதான் நிலைமை. 

சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்- இருப்பதிலேயே மிக எளிதான காரியம் என்பது தமிழில் டப்பா கவிதைகளை எழுதுவதுதான். தமிழ்க்கவிதைகளுக்கென நேர்ந்துவிடப்பட்ட சொற்கள் மொத்தமாக முந்நூற்று சொச்சம் தேறும். அந்த முந்நூற்று சொச்சம் வார்த்தைகளை வைத்தே வளைத்து வளைத்து டப்பா கவிதைகளை எழுதிவிடலாம். பெரிய உழைப்பெல்லாம் தேவையில்லை- எழுதிவிடலாம். இதனால்தான் எந்தவிதமான அனுபவமும், ரசனையுமற்ற தட்டையான கவிதைகள் குவிக்கப்படுகின்றன. இத்தனை டப்பா கவிதைகள் பெருகிப் போனதாலேயே கவிதை என்றால் காத தூரம் ஓடும் வாசகர்கள் பெருகிவிட்டார்கள். அறுபது கவிதைகள் சேர்ந்தால் யாராவது தொகுப்பாக கொண்டு வந்துவிடுகிறார்கள். பிறகு கவிதைத் தொகுப்பே விற்பதில்லை என்றால் எப்படி விற்கும்? வெளியில் நானும் கவிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். யாரையாவது கண்டித்து அறிக்கைவிட்டால் கீழே கையொப்பமிடுவதற்கு வேண்டுமானால் அந்த அடையாளம் உதவலாம். அவ்வளவுதான்.

இது அறிவுரை எல்லாம் இல்லை. இதையெல்லாம் எழுதுவதால் நான் யோக்கியசிகாமணி என்றும் அர்த்தம் இல்லை. இதுதான் நிதர்சனம் என நினைக்கிறேன்.

கலை என்பது பயிற்சி. எழுத்தும் அதில் அடக்கம். தொடர்ந்து பயிற்சி செய்வோம். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் இடைவெளியில்லாமல் உழைப்போம். பிறகு திரும்பிப் பார்க்கும் போது யாரும் கண்டுகொள்ளவில்லையென்றால் வேண்டுமானால் புலம்பலாம். அதைவிடுத்து எழுத ஆரம்பித்து ஒன்றரை வருடங்களில் ‘எழுத்தில் ஒரு துயரம் என்பது வளர்ந்து வருபவர்கள்/புதியவர்கள்/வளர்ந்து வர நினைப்பவர்கள் யாவரும் புறந்தள்ளப்படுவதே’ என்றெல்லாம் புலம்புவது அவசியமில்லாதது. பிரையோஜனமில்லாதது. பீடாதிபதிகளால் கைதூக்கிவிட்டு முகத்தில் டார்ச் அடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் வென்றுவிடுவதில்லை. யாருமே கண்டுகொள்ளாமல் விடப்படுபவர்கள் தோற்றுவிடுவதில்லை. Let us do our work boss. Everything will fall in its place.