Jun 18, 2014

நாம்தானே வரலாற்றின் குஞ்சுகள்?

ஒலிவியே ரிச் என்ற பிரெஞ்ச் நண்பர் இருக்கிறார். நண்பர் என்றால் ஒத்த வயதெல்லாம் இல்லை- அவரது மகளுக்கே இருபத்தைந்து வயது ஆகிவிட்டது. இன்னமும் ஆல்ப்ஸ் மலையேற்றத்துக்கும், வானிலிருந்து குதிக்கும் சாகசத்திற்கும் அவ்வப்போது மூட்டை கட்டிச் சென்றுவிடுவார். வந்து அளப்பார். மைக்கேல் ஷூமேக்கர் விழுந்து மண்டையை உடைத்துக் கொண்ட ஃப்ரெஞ்ச் ஆல்ப்ஸில் கூட கடைசியாக எட்டிக் குதித்ததாகச் சொன்னார். இப்பொழுது அவரது சாகசத்தைச் சொல்வது நோக்கம் இல்லை. அவருக்கு தனது குடும்ப வரலாறு துல்லியமாகத் தெரியும். அவரது ஊருக்குச் சென்ற போது தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். பதினாறாம் நூற்றாண்டு வீடு அது. முன்னோர்கள் கட்டியது. இன்னமும் அதிலேயேதான் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது சிறிய மாற்றங்களைச் செய்து கொள்கிறார்கள். ஆனால் சிதைக்காமல் வைத்திருக்கிறார்கள். தனது எள்ளுத்தாத்தாவின் எள்ளுத்தாத்தா வரைக்குமான தகவல்களை வைத்திருக்கிறார். 

அவரோடு பேசும் போதுதான் தெரிந்தது. 

‘எங்களிடம் செறிவான வரலாறு இருக்கிறது’ என்று வாய் நிறைய சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நம் குடும்பத்தைப் பற்றி என்ன விவரங்கள் நமக்குத் தெரியும்? எனக்கு அப்பாவின் தாத்தா பெயர் வரைக்கும்தான் தெரியும். அதுவும் பெயர் மட்டும்தான். மற்ற எந்த விவரமும் தெரியாது.  அம்மாவின் அப்பிச்சி நிறைய ஓலைச்சுவடிகள் எழுதி வைத்திருந்தாராம்- கத்தை கத்தையாக. அத்தனையையும் கோடங்கிகளுக்கு அள்ளிக் கொடுத்தார்களாம். மிச்சமிருந்த அத்தனை சுவடிகளையும் குப்பையாகக் கிடக்கிறது என்று எரித்துவிட்டார்களாம். பொக்கை வாய் தெரிய அமத்தா கை விரிக்கிறார். 

கோபிச்செட்டிபாளையத்தின் வரலாறை எழுதிவிடலாம் என்று முயற்சித்தேன். சில நண்பர்கள் உதவினார்கள். அந்த ஊருக்கு அதிகபட்சமாக இருநூற்றைம்பது ஆண்டுகால வரலாறுதான் இருக்கும். பக்கத்தில் இருக்கும் சத்தியமங்கலம் அப்படியில்லை- நெடுங்கால வரலாறு உடைய ஊர். கோபியின் வெறும் இருநூற்றைம்பது ஆண்டுகால வரலாற்றைத் துல்லியமாக எழுதுவதற்கான தரவுகள் கிடைக்கவில்லை. துல்லியம் கிடக்கட்டும். எங்கே தொடங்குவது என்று கூடத் தெரியவில்லை. கொஞ்சநஞ்சம் தெரிந்து வைத்திருந்த முன்னோர்களும் ஒவ்வொருவருவராகப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியே மனிதர்கள் இருந்தாலும் அவர்களுக்கு எத்தனை ஆண்டு கால வரலாறு தெரியும்? அதிகபட்சம் நூறு ஆண்டுகள் தெரியுமா? அவ்வளவுதான். அதற்கு முந்தைய வரலாறு? 

கட்டடங்களை அழித்துவிட்டோம். பெரும்பாலான ஊர்கள் தங்கள் அமைப்பை இழந்துவிட்டன. கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்த பழமை கூட இப்பொழுது இல்லை. தெருக்கள் மாறிவிட்டன. ஓட்டு வீடுகள் காணாமல் போய்விட்டன. சேந்தி கிணறுகளை மண்ணள்ளிப் போட்டு மூடிவிட்டார்கள். கோயில்களை மராமத்துப் பணிகள் என்ற பெயரில் கான்க்ரீட் கட்டடங்களாக மாற்றிவிட்டார்கள். ஒன்றிரண்டு கல்வெட்டுகள் மீது சுண்ணாம்போ அல்லது பெய்ண்ட்டோ அடித்து மறைத்துவிட்டார்கள். சதிகற்கள், நடுகற்கள் என்று எந்தத் தடயமும் இல்லாமல் சிதைத்துவிட்டோம். எங்கே போய் வரலாற்றை எழுதுவது?

ஊரின் வரலாறை விடுங்கள். ‘வடிவேலர் சதகம்’ என்றொரு புத்தகம் கிடைத்தது. எந்தப் புண்ணியவான் அச்சிட்டாரோ தெரியவில்லை. ஐம்பது பக்கங்களுடைய புத்தகம் அது. ஓலைச்சுவடியிலிருந்து புத்தகமாக மாற்றியிருக்கிறார்கள். யார் எழுதியது என்று பார்த்தால் - புலவர் காளியண்ண கவுண்டர். கரட்டடிபாளையம். வேறு எந்த விவரங்களும் இல்லை. பொருளாசை, பெண்ணாசை, பரத்தையர், கும்பம் போன்ற கொங்கைகள் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். மருந்து உண்ணுவதற்கு ஏற்ற நாள், பயிர் செய்வதற்கு ஏற்ற நாள் குறித்தெல்லாம் பாடி வைத்திருக்கிறார். அத்தனையும் ஐம்பது பக்கங்களுக்குள். நான் பிறந்த அதே ஊரில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு புலவர் வாழ்ந்திருக்கிறார். இப்படியொருவர் வாழ்ந்திருக்கிறார் என்பதற்காக சந்தோஷப்படுவதா அல்லது அவரைப் பற்றி வேறு எந்த விவரங்களும் பெற முடியவில்லை என்று துக்கப்படுவதா? அவரது வாரிசுகள் யாராக இருக்கும் என்று கூட கணிக்க முடியவில்லை. அவ்வளவுதான் நம் வரலாறு.

வடிவேலர் சதகமாவது புத்தகம். பெரியசாமித் தூரன் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்போம். பள்ளிக்காலத்தில் அவரது பாடல்களைக் படித்திருப்போம். சிறுகதைகள், நாடகங்கள், இசைக் கீர்த்தனைகள், தமிழ் களஞ்சியம் என்று அவரது செயல் மிகப்பெரியது. ஏதேதோ அரசியல் பின்னணிகளால் அவரது செயல்பாடுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. தூரன் அவர்கள் இரண்டாண்டுகள் கோபிச்செட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். 1931லிருந்து 33 வரை. அவர் பணியாற்றிய அதே பள்ளியில்தான் இருபதாண்டுகளுக்கு பிறகு அப்பா படித்திருக்கிறார். அறுபதாண்டுகள் கழித்து நான் படித்தேன். ம்ஹூம். அவரைப் பற்றி மிகச் சமீபத்தில்தான் தெரியும். அவரது சிறுகதைகளில் கரட்டடிபாளையம், புதுப்பாளையம், வேட்டைகாரன்புதூர் எல்லாம் களங்களாம். கரட்டடிபாளையத்தை வைத்து ஒற்றைக் கதை கிடைத்தாலும் உச்சபட்ச சந்தோஷமடைந்துவிடுவேன். மூக்கை ஒழுக்கிக் கொண்டு நாம் சுற்றிய ஊரின் வீதிகள் எழுபதாண்டுகளுக்கு முன்பாக எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஒரு கிளர்ச்சி இருக்கும் அல்லவா? அந்த கிளர்ச்சிக்காகத்தான் தேடிப் பார்க்கிறேன். அவரது எந்தப் புத்தகமும் அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை. நூலகப்பிரதியாவது எங்கேனும் கிடைக்குமா என்று தேடிப்பார்க்க வேண்டும்.

தூரனை விடுங்கள். அவரது வகுப்புத் தோழர் கே.எம்.ராமசாமிக்கவுண்டரின் வீடு இருக்கும் அதே வீதியில்தான் எங்கள் வீடு இருக்கிறது. வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராக முயன்று தோற்றுப் போயிருக்கிறார். அவர் எத்தனையோ புலவர்களை ஆதரித்த புரவலர் என்கிறார்கள். அவரைப் பற்றிய ஏதாவது தகவல் கிடைக்குமா என்று முயன்று பார்த்து சலித்ததுதான் மிச்சம். வாய்வழித் தகவல்களாக சிலவற்றை சேகரிக்க முடிந்தது. ஆனால் சரியான தரவுகளா என்று உறுதிப்படுத்திக் கொள்ள ஆதாரங்கள் ஏதுமில்லை. உறுதிப்படுத்த முடியாத தகவல்களை வைத்து வரலாறு எப்படி எழுத முடியும்? குருட்டுவாக்கில் எழுதி வைத்துவிட்டுப் போனால் அடுத்த தலைமுறை அதுதான் சரி என்று ஏற்றுக் கொள்வார்கள். 

உண்மையில் நம் தலைமுறையினரிடம் வரலாறு என்று சேகரிக்க எதுவுமேயில்லை.  நம்மிடம் இருப்பவையெல்லாம் முந்தைய தலைமுறையினர் சேர்த்துக் கொடுத்ததுதான். நாம் பெரும்பாலானவற்றை சிதைத்துவிட்டோம். மிச்சமிருப்பனவற்றை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறோம். கொஞ்சநஞ்ச தகவல்கள் கிடைத்தால் அவற்றையெல்லாம் நிராகரித்து விட்டு பிழைப்பை பார்த்தபடி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாய் கூசாமல் சொல்லிக் கொள்வோம்- ‘நாங்கள் வரலாற்றின் குஞ்சுகள் என்று’.

தகவலுக்காக: ஓசூரில் வருகிற 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடுகற்கள் பற்றிய தேசியக் கருத்தரங்கு K.A.P திருமண மண்டபத்தில் நடக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.