Jun 17, 2014

பேயைப் பார்த்திருக்கிறீர்களா?

அமெரிக்காவில் இருந்து பெரியண்ணன் ஒருவர் வந்திருந்தார். நிறுவனத்தில் பெருந்தலை. பத்து நிமிடங்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று நேரம் கேட்டிருந்தேன். அவருக்கு ஒரு பி.ஏ. அந்தப் பெண்மணி ஏகப்பட்ட அல்டாப்புகளுக்குப் பிறகு நேரம் ஒதுக்கித் தந்திருந்தாள். அலுவலகம் முடிந்து அவர் கிளம்புவதற்கு முன்பாக பத்து நிமிடங்கள். அதுதான் எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த நேரம். அவரைப் பார்த்தே தீர வேண்டும் என்று அலுவல் ரீதியிலான எந்த அவசியமும் இல்லை. ஆனாலும் அவரைப் பார்க்க விரும்பியதற்கு காரணமிருக்கிறது. பக்கத்து ஊர்க்காரர். நான் அரைக்கால் ட்ரவுசர் போட்டுச் சுற்றிய காலத்திலேயே எங்கள் ஊர் கல்லூரியில் எம்.சி.ஏ முடித்திருக்கிறார். 

ஒரு காலத்தில் அந்தக் கல்லூரியில்  தமிழ்மன்றமும் மாணவர் பேரவையும் படு தெம்பாக இருந்தன. மாணவர் பேரவைக்கான தேர்தல் நடக்கும் போது சாலைகளில் பட்டையைக் கிளப்புவார்கள். ‘உட்டாலக்கடி கிரிகிரி..சைதாப்பேட்டை வடகறி’ என்று அவர்களோடு சேர்ந்து நாங்களும் ஓடுவோம். பிறகு படிப்படியாக தமிழ்நாட்டில் மாணவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட போது அந்தக் கல்லூரியும் ஒடுங்கிப் போனது. 

உட்டாலக்கடி கிரிகிரி தூள் கிளப்பிக் கொண்டிருந்த சமயத்தில் அந்தக் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்  ஒரு வீட்டை வாடகைக்கு  எடுத்து தங்கி இருந்தார்கள். பள்ளி முடித்து வந்தால் எப்போதும் அவர்களின் அறையில்தான் தவமாகக் கிடப்பேன். இரவில் தொலைக்காட்சி, டெக் எடுத்து வந்து படம் போடுவார்கள். ஆனால் எட்டரை மணிக்கு மேல் அங்கு இருக்கக் கூடாது- மீறினால் அப்பாவுக்கு பயங்கரக் கோபம் வந்துவிடும். அப்பொழுது அதற்கான காரணம் தெரியவில்லை. நாங்கள் கல்லூரியில் விடுதியில் பரவசமளிக்கும் படங்களைப் பார்த்து குதூகலித்தபோதுதான் அப்பாவின் பொறுப்புணர்ச்சி ஞாபகம் வந்தது. 

எங்கள் ஊரில் வாய்க்காலுக்குப் பக்கத்தில்தான் சுடுகாடும் இருக்கிறது. இதன் காரணமாகவோ என்னவோ இரவில் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. இப்போது நிறைய மாறிவிட்டது. நான் சொல்வது இருபது வருடங்களுக்கு முன்பாக. தேர்வு சமயங்களில் பக்கத்துவீட்டு மாணவர்களும் அவர்களோடு சேர்ந்து இன்னும் சில மாணவர்களும் வாய்க்கால் பக்கமாக நடை செல்வார்கள். ஓரிரு முறை அவர்களோடு போயிருக்கிறேன். அம்மா அப்பாவிடம் கெஞ்ச வேண்டும். பல நாள் கெஞ்சலுக்குப் பிறகு ஒரு நாள் ‘தொலைந்து போ’ என்று அனுமதிப்பார்கள். 

ஒரு நாள் ‘பேயைக் காட்டுகிறோம்..வர்றியா?’ என்றார்கள். பயங்கரக் குழப்பம். பேய் வந்துவிட்டால் இவர்கள் ஓடி வந்துவிடுவார்கள். கடைசியாக ஓடும் நம்மைத்தான் பேய் அடித்துத் தின்னும் என்று பயமாக இருந்தது. ‘பேய் வந்தால் திரும்பி மட்டும் பார்க்காத...ஒண்ணும் பண்ணாது’ என்றார்கள். திரும்பிப்பார்த்தால் ஓங்கி அறைந்துவிடுமாம். மூக்கில் ரத்தம் வந்து செத்துவிடுவோம்.

ரிஸ்க்தான். ஆனால் துணிந்துவிட்டேன்.

எலுமிச்சம்பழம், ஊதுபத்தி, விளக்கு, திரி மற்றும் கொஞ்சம் எண்ணெய் எடுத்துக் கொண்டார்கள். பேயை வர வைப்பதற்கான வஸ்துக்கள். திகிலாக இருந்தது. இரவு பதினொன்றரையைத் தாண்டியிருக்கும். நள்ளிரவு நேரத்தில்தானே பேய் வரும்? அதனால் அந்த நேரம். ‘அங்கு என்ன நடந்தாலும் வெளியில் சொல்லக் கூடாது’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்கள். நாட்டாமை, சின்னக்கவுண்டர் ஆகிய படங்களுக்கு ஷூட்டிங் நடந்த மண் அது. சத்தியத்தை மீறுவேனா? வாயைக் கட்டிக் கொண்டேன்.

சுடுகாட்டுக்குச் செல்வதற்கு ஒரு வளைவு உண்டு அந்த வளைக்குச் சென்று ஆளாளுக்கு ஒரு மரமாகப் பார்த்து பின்னால் ஒளிந்து கொண்டார்கள். மொத்தம் பன்னிரெண்டு பேர். சாலையின் இந்தப்பக்கம் ஆறு மரங்கள். அந்தப்பக்கமாக ஆறு. நான் ஒரு அரை டிக்கெட். ஹரி என்னை தன்னருகில் அழைத்துக் கொண்டார். ‘பயப்படாத’ என்று அவர்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அந்தப் பகுதி படு அமைதியாக இருந்தது. ஆந்தை மட்டும் எங்கேயோ தூரத்தில் இருந்து அடிக்கடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. பேய் வந்துவிடும் என்று நம்பத் துவங்கியிருந்தேன். 

பன்னிரெண்டு பேரில் ஒருவர் மட்டும் சாலையின் ஓரமாக விளக்கு ஒன்றை பற்ற வைத்தார். தூரத்தில் வருபவர்களுக்கும் கூட விளக்கு வெளிச்சம் தெரியும்படியான இடம் அது. அருகிலேயே சில ஊதுபத்திகளையும் பற்ற வைத்துவிட்டு, விளக்கு வெளிச்சத்தில் எலுமிச்சம்பழம் கண்ணுக்குத் தெரியும் படி அரிந்து அதன் மீது குங்குமத்தை பூசி வைத்துவிட்டு ஓடிப் போய்விட்டார். இதெல்லாம் பேயை வரவைப்பதற்கான வேலைதான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். 

அடுத்த சில நிமிடங்களுக்கு வெகு அமைதி. யாருமே பேசிக் கொள்ளவில்லை. தூரத்தில் விளக்குத் தெரிந்தது. ஏதோ ஒரு இரு சக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. அது அருகில் வரும் வரைக்கும் கூட யாருமே பேசவில்லை. அந்த வளைவை அடைந்தவுடன் ‘ஊஊஊஊ’ என்று குலவை போட்டார்கள் பாருங்கள். அவர்கள் கத்தப் போகிறார்கள் என்று எனக்கு அது வரைக்கும் தெரியாது. பயத்தில் சிறுநீர் கசிந்து ட்ரவுசர் நனைந்துவிட்டது. நானாவது பரவாயில்லை. அந்த பைக்கில் இருந்தவர்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் இரண்டு பேர். ஆக்சிலேட்டர் முறுக்கிய வேகம் இன்னமும் நினைவில் இருக்கிறது. அவர்கள் அங்கு எடுத்த வேகம் வீட்டுக்கு போய்த்தான் நின்றிருப்பார்கள். காய்ச்சல் வந்ததோ- ஹார்ட் அட்டாக் வந்ததோ தெரியவில்லை.

ஹரி என்னிடம் ‘பேயை பார்த்தியா?’ என்றார். ஈரத்தை மறைத்துக் கொண்டே சிரித்தேன். அடுத்து அரை மணி நேரத்துக்கு இதையேதான் செய்து கொண்டிருந்தார்கள். தனியாளாக பைக்கில் வந்தால் விட்டுவிட்டார்கள். இரண்டு பேர் வந்தால் ‘ஊஊஊஊ’தான். எவ்வளவுதான் தைரியசாலியாக இருந்தாலும் பயந்துவிட வேண்டும். அந்தச் சூழல் அப்படி. நள்ளிரவு, சுடுகாடு அருகிலேயே வாய்க்கால், விளக்கு, எலுமிச்சம் பழம்- போதாக்குறைக்கு ‘ஊஊஊஊ’. இவர்கள் மட்டுமில்லை- அப்படி நிறைய குரூப் அந்தச் சமயத்தில் அப்படி பயமூட்டிக் கொண்டிருந்தார்கள். சுடுகாட்டுப்பக்கத்தில் பேய் இருப்பதாக ஊருக்குள் வதந்தியையும் உருவாக்கியிருந்தார்கள். அடுத்த பல வருடங்களுக்கு இந்த வதந்தி இருந்தது. அதன்பிறகு அந்த வதந்தி எப்படி மறைந்தது என்று தெரியவில்லை. 

அந்தக் கல்லூரியில்தான் இந்தப் பெருந்தலையும் படித்திருக்கிறார். அவருக்கு இங்கு தனியறை ஒதுக்கியிருந்தார்கள். அறைக்கு வெளியிலேயே காத்திருந்தேன். ஒதுக்கப்பட்ட நேரத்தையெல்லாம் தாண்டி இரண்டு மணி நேரங்கள் ஓடியிருக்கும். அவரோடு பேசிக் கொண்டிருந்தவர்கள் வெளியில் வருவதற்கான அறிகுறியே இல்லை. கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்த போது வெளியே வந்தார். 

‘அவர் ஹோட்டலுக்கு போகிறார். நீங்கள் கார் ஏறும் வரைக்கும் பேசிக்கலாம்’ என்று பி.ஏ வந்து சொல்லிவிட்டுச் சென்றார். பெருந்தலை அருகில் வந்து சிரித்துக் கொண்டே ‘யெஸ்..டெல் மீ’ என்றார். தமிழில் பேசுவாரா என்று தெரியவில்லை. ‘ஐம் ஃபர்ம் கரட்டடிபாளையம்’ என்றேன்.  அடுத்த வரியிலேயே ‘அப்டீங்களா தம்பி...என்னை எப்படி புடிச்சீங்க?’ என்று கொங்குத்தமிழில் ஆரம்பித்துவிட்டார். ஹரியையும் அவருக்குத் தெரியுமாம். ஹரி இப்பொழுது சுமாரான வேலையில் பெங்களூரில்தான் இருக்கிறார். கார் டிரைவரை அரை மணி நேரம் தாமதமாக வரச் சொல்லிவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இந்தப் பேச்சில்தான் பேய்க்கதை ஞாபகத்துக்கு வந்தது. அவரும் அந்தச் சேட்டையைச் செய்திருக்கிறாராம். 

நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து பி.ஏவுக்கு வயிறு எரிந்திருக்கக் கூடும். ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்று சில நிமிடங்களில் தெரிந்து போனது. பெருந்தலையின் மனைவி ஆந்திராக்காரர். அதனால் ஆந்திராவில் இடம் வாங்கியிருக்கிறார். இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்று இயற்கை விவசாயம் செய்யப் போகிறாராம். நல்ல விஷயம்தான். எனக்குத்தான் பிரயோஜனமில்லை. இவரை வைத்து பிடித்த டீமுக்கு மாறிவிடலாம் என்று யோசனையை ஓட்டிக் கொண்டிருந்தேன். ‘மெயில் அனுப்புறேன். ஆந்திரா வந்தால் கண்டிப்பா தோட்டத்துக்கு வாங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இனி ஆந்திரா சென்றால் ராகிக் கூழ் உறுதியாகக் கிடைக்கும். டாட்.

14 எதிர் சப்தங்கள்:

ராஜி said...

என் வீட்டுக்காரர் பேயை தினந்தோறும் பார்க்குறாராம் சகோ!

அருணா செல்வம் said...

மொத்தம் பனிரென்று பெரிய பேய்கள்.
ஒரு குட்டிப் பேய்....

”தளிர் சுரேஷ்” said...

நான் இன்னிக்கு ஒரு பேய்க்கதை எழுதி இருக்கேன்! நேரமிருந்தால் படிச்சு பாருங்க! நன்றி! http://thalirssb.blogspot.com/2014/06/short-story-17-6-14.html

Jaikumar said...

Enga Thoo-naikan-palayam mamavukku payathula kulir kaichal vanthathu unga nalathana? Avar kitta sonna aruvakathoda varuvaar...

Jaikumar said...

Avara eppadi pudeecheenga nu sollavae illa...

Unknown said...

Painna ippavum konjam payanthan... Kalula salangai... Ellam ippadithana sir...

கலாகுமரன் said...

கடேசில அந்த டாட் எனக்கு பிடிச்சிருக்கு (டாட்)

A Simple Man said...

சகோதரி உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு :-)

சேக்காளி said...

எக்கோவ்! நல்லாருப்ப நீ காலையில தெனமும் மேக்கப் போட்டுட்டு அப்புறமா மச்சானுக்கு காப்பி குடு.எந்த கோயிலுக்கு போயி தாயத்து கட்டுனா பேய் பிசாசு அண்டாதுன்னு கேட்டு தொந்தரவு பண்ணுதாரு. நானும் கடவுளுக்கே wanted போட்ட மந்திரவாதி பத்துன வெவரத்த சொல்லி அனுப்பியிருக்கேன்.

சேக்காளி said...

//இந்தப் பேச்சில்தான் பேய்க்கதை ஞாபகத்துக்கு வந்தது//
வந்துடுச்சில்ல. அப்புறமென்ன பேயோட்டறதுக்கான ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேசனை வெளியிட்டு நெறைய பேரு அண்ட்ராயர் ஈரமாகாமல் இருக்க உதவி செய்யுங்க.

சேக்காளி said...

ஒரு மந்திரவாதி இன்னொரு மந்திரவாதிய புடிக்கற தொழில் ரகசியத்த வெளில சொல்லக்கூடாது.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

பழைய நினைவுகளை பேசும்போதும் நினைக்கும் போது ஏதோ ஒரு பரவசம்- சந்தோசம்.

Jaikumar said...

Intha kelvi kettutu appuram than yosichen.... Ippa irukara social networking site rendu moonula, avar pera potta ellam kottitu pokuthu....

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நல்ல பதிவு பயத்துடனே படித்தேன் நீங்கள் ஒன்னுக்கு அடிக்கிற வரைக்கும்