Jun 10, 2014

நீ அவராக முயற்சிக்கிறாயா?

இன்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நண்பர் என்று எப்படிச் சொல்வது? போலியாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி அது. யாரென்றே தெரியவில்லை. தனது மனதில் இருக்கும் அத்தனை வன்மங்களையும் கொட்டி மின்னஞ்சல் எழுதப்பட்டிருந்தது. வரிக்கு வரி அத்தனை ஆபாசம், அத்தனை வஞ்சகம். இத்தகைய மின்னஞ்சல்களை பெரும்பாலும் நிராகரித்துவிடுவேன். இன்று ராசிபலன் சரியில்லை. முழுமையாக் வாசித்துத் தொலைந்துவிட்டேன். நாள் முழுவதுக்குமான கசப்பினை அந்த மின்னஞ்சல் சுமந்து வந்திருந்தது.

இது போன்ற வசைகளை எதிர்கொள்வதற்குத்தான் புத்தனாகவும் காந்தியுமாக இருக்க வேண்டும். மறந்துவிட்டு அல்லது ஒதுக்கிவிட்டு போயிருக்கலாம். ஆனால் ஆசாபாசங்களுடன் கூடிய சாமானியர்களை அசைத்துப் பார்த்துவிடுகிறது.

எதனால் இப்படி பொங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. ‘நீ அவராக முயற்சிக்கிறாயா?’ என்றெல்லாம் கேட்டிருந்தார். அவர் என்ற இடத்தில் யாரைக் குறிப்பிட்டிருப்பார் என்று யூகித்துக் கொள்ளுங்கள். இந்தக் கேள்விகளை எதிர்கொள்வதெல்லாம் பிரச்சினையில்லை. சமாளித்துவிடலாம்தான்.

இங்கு யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். எழுத்தில் மட்டும் இல்லை- எந்தத் துறையிலுமேதான். எம்.ஜி.ஆர் இடத்தை ரஜினியும் ரஜினி இடத்தை விஜய்யும் என்னதான் தலைகீழாக நின்றாலும் பிடிக்க முடியாது. இந்திராவின் இடத்தை ராஜீவ் காந்தியோ, ராஜீவின் இடத்தை ராகுலும் என்னதான் கனவு கண்டாலும் தொட முடியாது. மூக்கால் தண்ணீர் குடித்தாலும் திருபாய் அம்பானியின் இடத்தை அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் அடைய முடியுமா என்ன? ஒருவேளை தாண்டிப் போகலாம். ஆனால் ஒருவர் உருவாக்கி வைத்த இடத்தை எந்தக் காலத்திலும் இன்னொரு மனிதனால் அடைய முடியாது. அதுதான் நிதர்சனம்.

அவரவர் திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்ப ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்கிறோம். அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதும், கோட்டைவிடுவதும் அவரவர் செயல்பாட்டைப் பொறுத்தது. எழுத்துத்துறையைப் பொறுத்தவரைக்கும் அடுத்தவர்களால் தூக்கிப் பிடிக்கவும் முடியாது; கீழே போட்டு தேய்க்கவும் முடியாது. இதைப் புரிந்து கொண்டால் பிரச்சினையே இல்லை. புரிந்து கொள்ளாததால்தான் இத்தனை வயிற்றெரிச்சலும், பொறாமையும், புறம் பேசுதலும், குழுவாதமும்.

சரி விடுங்கள்.

பெங்களூர் சாகித்ய அகாடெமிக்காரர்கள் இன்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவர்களிடம் நிறைய காசு இருக்கும் போலிருக்கிறது. அவ்வப்போது லட்சக்கணக்கில் செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இன்று தென்னக மொழிகளில் சிறுகதைகளின் போக்கு பற்றிய கருத்தரங்கு. இந்த முறை அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள். சாகித்ய அகாடமியில் இருந்து அழைப்பிதழ் வந்திருக்கிறது என்று வீட்டில் பந்தா காட்டிக் கொண்டேன். அழைப்பிதழைப் பார்த்தவுடனேயே கருத்தரங்குக்கு செல்வது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன். செவ்வாய்க்கிழமை- கட் அடித்துவிடலாம். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சிறுகதைகளை வாசித்து அந்தந்த மொழிகளில் சிறுகதைப் போக்கு பற்றிய கட்டுரைகளையும் வாசித்தார்கள். உருப்படியான நிகழ்வு. தமிழில் அழகிய பெரியவன் சிறுகதை வாசித்தார். 

மதிய உணவை முடித்துவிட்டு அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டேன். அரங்கில் இருபது பேர்கள் இருந்தார்கள். எல்லோரும் மூத்த குடிமக்கள். அவ்வப்போது இத்தகைய நிகழ்வுகளுக்குச் சென்று வந்தால்தான் உள்ளூருக்குள் என்ன நடக்கிறது என்று தெரியும். இனிமேல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் இலக்கியக் கூட்டம் நடத்தவிருக்கிறார்கள். இந்த மாதம் 22 ஆம் தேதி முதல் கூட்டம். தென்னகக் கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழவிருக்கிறது. தமிழில் இருந்து எந்தக் கவிஞரை அழைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் முதல் வரிசையில் கர்ச்சீப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். 

நிகழ்ச்சி முடிந்த பிறகு அழகிய பெரியவனோடு அதிகம் பேச முடியவில்லை. ஒண்ணேகால் நிமிடம் பேசிவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

என்னதான் நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அந்தக் கடிதம்தான் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தது. அடுத்தவர்களுக்கு உதவி வாங்கித் தருவதற்கு உனக்கு எவ்வளவு கமிஷன் என்று கேட்டிருந்தார். அந்தக் கேள்விதான் இப்பொழுது வரைக்கும் சங்கடமாக இருக்கிறது.

ஆண்டவன் புண்ணியத்தில் அடுத்தவர்களின் காசை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை இன்று வரைக்கும் இல்லை. பத்தாயிரம், இருபதாயிரத்துக்கெல்லாம் சுயத்தை இழக்கும் அற்பமாக நான் இல்லை. எளிய மனிதர்களுக்குச் செல்லும் இந்த உதவிகளில் ஒரு ரூபாய்க்கு உரிமை கோரினாலும் கூட அதன் பாவம் என் மகனுக்கும் தொடரும் என்பதை மனப்பூர்வமாக நம்புகிறேன். 

வெறும் எழுத்தோடு நின்றுவிடாமல் தகுதியானவர்களின் பாதையில் கிடக்கும் முட்களை பொறுக்கி வீசும் சாதாரண வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். அது பொறுக்கவில்லை இவர்களுக்கு. இவற்றையெல்லாம் மனசாட்சிக்குத் துளி பங்கமில்லாமல் செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அப்படியிருந்தும் அடிக்கிறார்கள். இந்தக் மாதிரியான கேள்வியெல்லாம் வரக் கூடாது என்பதற்காகத்தான் உதவி தேவைப்படுபவர்களின் கணக்குக்கு நேரடியாக பணத்தை அனுப்பி வைத்துவிடச் சொல்கிறேன். 

இவர்களைப் போன்றவர்களுக்கு இதையெல்லாம் எப்படி நிரூபிப்பது? வாய்ப்பே இல்லை. இது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயம்.  எளிமையான நம்பிக்கை இது. நம்புகிறவர்கள் உதவுகிறார்கள். நம்பாதவர்களிடம் என்ன பதிலைச் சொல்வது? கேள்வி கேட்டால் பதிலைச் சொல்லலாம். ஆனால் கைகளில் கூரிய ஊசியை வைத்துக் கொண்டு சுற்றினால்? வாய்ப்பு கிடைக்கும் போது கருவிழியில் செருகி எடுத்து ரத்தத்தை ருசி பார்க்கிறார்கள். இன்று என்னுடைய ரத்தத்தை ருசி பார்த்திருக்கிறார். அவ்வளவுதான்.