Jun 28, 2014

அறம் பாடியே ஆக வேண்டுமா?

இன்று ஊருக்குச் செல்ல வேண்டிய வேலையிருக்கிறது. இப்பொழுதெல்லாம் ஊருக்குச் செல்வதென்றால் சங்கடமாக இருக்கிறது. எங்கேயும் மழை இல்லை. நிலத்தடி நீரும் தாறுமாறாக இறங்கிவிட்டது. கர்நாடாகாவில் ஜூலை பத்தாம் தேதி வரைக்கும் பார்த்துவிட்டு அப்படியும் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை என்றால் போர்க்கால நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். என்ன செய்வார்கள்? வறட்சி நிவாரண நிதி வேண்டும் என்று மத்திய அரசிடம் தட்டு ஏந்துவார்கள். ‘எங்களுக்கே தண்ணீர் இல்லை’ என்று காவிரியின் குறுக்கே சம்மணமிட்டு அமர்வார்கள். மத்திய அரசிடமிருந்து வருகிற பணத்தில் மந்திரியிலிருந்து மணியகாரன் வரை பதவிக்குத் தகுந்தாற்போல நோட்டுகளை உருகிக் கொண்டு மிச்சமீதி சில்லரையை விவசாயி தட்டில் எறிவார்கள். மழையும் இல்லை பணமும் இல்லை. வடகர்நாடகாவிலும், வடகிழக்கு கர்நாடகாவிலும் விவசாயிதான் கருகிக் கொண்டிருப்பான்.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவமழை இந்த வருடம் மும்பையிலும் ஏமாற்றிவிட்டது. மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து வறட்சிக்கு எதிரான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறதாம். இவர்கள் வகுத்துவிட்டாலும்....

முதல் முப்பது நாட்களில் மோடிக்கு முட்டை மதிப்பெண்தான் கொடுக்க வேண்டும். கவர்னர் பதவியின் கழுத்தை வெட்டலாமா? ராஜ்யசபாவை கூண்டோடு கலைக்கலாமா என்பதையெல்லாம் யோசிக்காமல் கண்டபடிக்கு விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். விலை ஏற்றுவது தவறு இல்லை- ஆனால் அதன் பாதிப்பு யாருக்கு இருக்கும்? ஆறாவது சம்பளக் கமிஷன், ஏழாவது சம்பளக் கமிஷன் என்று அரசு அதிகாரிகள் பாக்கெட்களை நிரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். கார்போரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், தொழிலதிபர்களும் தப்பித்துக் கொள்வார்கள். மாட்டிக் கொள்பவர்களெல்லாம் விவசாயிகளும், சம்பள உயர்வே இல்லாத தனியார் நிறுவன ஊழியர்களும், தினக்கூலிகளும் இன்னபிற அன்றாடங்காய்ச்சிகளும்தான். என்னதான் கசப்பு மருந்து என்றாலும் மக்களுக்கும் தாங்கும் சக்தி ஓரளவுக்குத்தான். இல்லையா? போகிற போக்கைப் பார்த்தால் இந்த மனுஷனுக்கு ஆதரவாக பேசினோமே என்று வாயில் சாணத்தை அப்பிவிடுவாரோ என்று யோசனை துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. என்ன இருந்தாலும் நம்பிக்கைதானே வாழ்க்கை. 

ஏற்கனவே விவசாயிகளின் நிலைமை படு மோசமாகிக் கொண்டிருக்கிறது. இதில் மழை வேறு மண்ணை அள்ளி போட்டுவிட்டு போகிறது. இந்த தண்ணீர் பிரச்சினை இந்தியாவில் மட்டுமில்லை- வேறு பல நாடுகளிலும் இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் மாற்று வழியிலான விவசாயத்தை முயற்சிக்கிறார்கள். நாம் சொட்டு நீர் பாசனத்தையே கூட முழுமையாக அமல்படுத்தவில்லை. மற்ற முறைகளையெல்லாம் எங்கே அமல்படுத்தப் போகிறோம்?

இயற்கையும் குழி பறித்து, அரசாங்கமும் சாவடிக்கிறது- இப்படியே போனால் வேளாண்மை என்ன ஆகும் என்று யூகிக்க முடியவில்லை. விவசாய நிலத்தின் பரப்பு குறுகிக் கொண்டே வருகிறது. எந்த விவசாயும் தன் மகன் விவசாயம் செய்யட்டும் என்று சொல்வதில்லை. மிச்சமிருக்கும் விவசாய நிலங்களிலும் ஆயிரம் சிக்கல்கள். விலை ஏறாமல் என்ன செய்யும்?.  அவரைக்காய் கிலோ எண்பது ரூபாய் என்பது இப்போதைக்குத்தான் ஆச்சரியமான செய்தி. இன்னும் சில வருடங்களில் பல காய்கள் நமக்கு கிடைக்கப்போவதில்லை. எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத காய்கறிகள் என்று மிகப்பெரிய பட்டியலை நம் அடுத்த தலைமுறையிடம் சொல்வோம். நடக்கத்தான் போகிறது.

அமெரிக்காக்காரன் நிலத்துக்கு அடியில் மிகப்பெரிய சமுத்திரத்தை கண்டுபிடித்திருக்கிறானாம். பூமிக்கு மேலாக இருக்கும் நீரைக்காட்டிலும் மூன்றுமடங்கு தண்ணீர் இருக்கிறதாம். ஆனால் என்ன பிரச்சினை என்றால் கிட்டத்தட்ட ஏழுநூறு கிலோமீட்டருக்கு பூமிக்கு அடியில் தோண்ட வேண்டும். பூமியின் மையப்புள்ளியைத் தொடுவது மாதிரிதான். நூறு வருடங்களோ அல்லது இருநூறு வருடங்களோ-அதைக் கூட நம் ஆட்கள் தொட்டுவிடுவார்கள். ஆனால் இந்தப்பக்கம் இருந்து பூமியைக் குத்துகிறோம் என்று வையுங்கள். அந்தப்பக்கமாக இருந்து இன்னொருவன் குத்தினால் இரண்டு ஓட்டைகளும் சந்தித்துக் கொள்ளாதா என்று இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து குழம்பிக் கொண்டிருக்கிறேன். என் சிற்றறிவுக்கு அப்படித்தான் யோசிக்கத் தோன்றுகிறது.

தமிழக அரசின் மழை நீர் சேகரிப்புத்திட்டம், பசுமைப் போர்வைத் திட்டமெல்லாம் நீண்டகால நோக்கிலான திட்டங்கள்தான். ஆனால் அதை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில்தானே இருக்கிறது? மழைநீர் சேகரிப்புத்திட்டத்திற்கு பணத்தைக் கொடுத்தால் இரண்டு அல்லது மூன்று அடி குழியைத் தோண்டி கல்லையும் மண்ணையும் போட்டு மூடிவிடுகிறார்கள். முதலமைச்சரின் பிறந்தநாளுக்காக லட்சக்கணக்கான செடிகளை நட்டார்கள். அவையெல்லாம் தப்பித்திருந்தால் அருமையாக இருந்திருக்கும். எத்தனை சதவீதம் தப்பியிருக்கும் என நினைக்கிறீர்கள்? மிகச் சொற்பம். அரசாங்கம் திட்டம் கொண்டுவருவதைவிடவும் முழுமையாகச் செயல்படுத்துவதுதான் அவசியம். முழுமையாக இல்லாவிட்டாலும் அறுபது சதவீதமாவது செயல்படுத்தினால் பரவாயில்லை.

சரி இருக்கட்டும். 

நாஞ்சில்நாடன் சிற்றிலக்கியங்களுக்கு என்றே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். சிற்றிலக்கியங்களில் தொண்ணூற்றாறு வகை இருக்கிறதாம். எப்பவோ ஒன்பதாம் வகுப்பு இலக்கணத்தில் படித்தது. ஆனால் அப்பொழுதெல்லாம் படிக்கவே மொக்கையாக இருந்தது. நாஞ்சில்நாடனின் புத்தகம் ஆர்வத்தை உருவாக்கியிருந்தது. தொண்ணூற்றாறு வகைகளைத் தெரிந்து கொள்ளாவிட்டாலும் குறைந்தபட்சம் பத்து வகைகளையாவது தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தேடியதில் நந்திக்கலம்பகத்தின் ஒரு பிரதியைப் பிடித்துவிட்டேன். பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. தொண்ணூற்றாறில் வகைகளில் கலம்பகமும் ஒன்று. கலம்பகங்களில் நந்திக்கலம்பகம் உட்பட ஒன்றோ இரண்டோதான் இருக்கிறதாம். மற்ற கலம்பகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.  ஓவராக மொக்கை போடாமல் இன்னும் ஒரேயொரு பத்தியில் முடித்துவிடுகிறேன்.

நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னனுக்கு அறம்பாட எழுதப்பட்ட பாடல்கள்தான் இந்த நந்தி கலம்பகம். ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கும் முந்தின பாடல்கள் இவை. அறம்பாடுதல் என்றால் ஆளை முடித்துவிடுவது. இது நந்திவர்மனின் தம்பியால் பாடப்பட்டது, சொந்தக்காரன் ஒருவனால் பாடப்பட்டது என்று ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. ஆனால் மொத்தத்தில் அவன் கதையை முடிப்பதற்காக பாடப்பட்டது என்பது மட்டும் உறுதி. அந்தாதி டைப். ஒரு பாடலின் கடைசிச் சொல்லில் இருந்து அடுத்த பாடலின் முதல் சொல் தொடங்கும். அந்தம்(கடைசி) டூ ஆதி(முதல்)- அந்தாதி.

‘யோவ் மன்னா இது அறம்பாட பாடப்பட்ட பாடல்கள்..நீ காது கொடுக்காதே’ என்று சுற்றியிருந்தவர்கள் நந்திவர்மனிடம் சொன்னார்களாம். கேட்காத மன்னன் சுடுகாட்டில் அடுக்கி வைக்கபட்ட விறகுகளின் மீது அமர்ந்து- பாடலை பாடிக் கொண்டிருந்தவன் இந்த போஸில் நீ அமர்ந்தால்தான் பாடுவேன் என்று சொல்லியிருக்கிறான்- புலவனின் ஆசையை கெடுப்பானேன் என்று அதே போஸில் அமர்ந்து மிஸ்டர்.நந்தியார் பாடலைக் கேட்டிருக்கிறார். ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு விறகாக எரிந்து கடைசி பாடலின் போது கடைசி விறகும் தீப்பற்றி மன்னன் மொத்தமாக முடிந்து போனான். நந்திக் கலம்பகமும் அதோடு முடிந்தது. இந்தக் கதைகளில் எது உண்மை எது பொய் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஒன்று - இந்த பாடல்களை எழுதியவரின் எந்த விவரமும் இப்பொழுது இல்லை.

எதற்குச் சொல்கிறேன் தெரிகிறதா? ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களை எதிர்த்து அறம்பாடினால் இதுதான் கதி. இப்பொழுது மூன்று நான்கு பத்திகள் முன்னாடி போய் வாசியுங்கள். இவர்களை எல்லாம் எதிர்த்து அறம் பாடினால்தான் விடுவீர்களா? ஆங்...

Jun 26, 2014

ஹிந்தி படித்தே தீர வேண்டுமா?

நேற்று இன்று நாளை- மூன்று நாட்களையும் என் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கீழே தள்ளி கழுத்து மீது காலை வைத்து அறுக்கிறார்கள். ட்ரெயினிங். காலையில் பத்து மணிக்கு ஆரம்பித்து ஏழு மணிக்கு விடுகிறார். இதைக் கூட சமாளித்துவிடலாம். கோரமங்களா வந்து சேரும் போது ஏழரை ஆகிறது. உண்மையான ஏழரை. வாகன ஓட்டிகள் நெருக்கித் தள்ளுகிறார்கள். அது வீடுகள் நிறைந்திருக்கும் பகுதிதான். நடுவில் சாலைப் பகுப்பு கூட இருக்காது. நேற்று சிக்கிக் கொண்டேன். மகிழ்வுந்துகள் வரிசையாக நின்று கொண்டிருக்க பைக்காரர்கள் அவர்களை முந்திச் சென்று கொண்டிருந்தார்கள். முன்னேர் எப்படியோ அதே வழிதானே பின்னேரும் செல்லும்? முன்னால் சென்று கொண்டிருந்த பைக்காரர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். முதல் அரை கிலோமீட்டருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாற்பதுக்கும் மேலான கார்களைத் தாண்டிவிட்டேன். அதன்பிறகுதான் சனி ஹோண்டா சிட்டியில் வந்து கொண்டிருந்தது. கறுப்பு நிற வண்டி. பளிச்சென்று வைத்திருந்தான்.

எதிரில் வருபவன் மீது தவறு இருக்கிறது என்று தெரிந்தால் ஒரு கெத்து இருக்குமல்லவா? அந்த கெத்தில் வந்து கொண்டிருந்தான். எனக்கு இடது பக்கம் கார் நிற்கிறது. துளி சந்து இருந்தாலும் கூட உள்ளே நுழைத்துக் கொள்வேன்- அதற்கும் வழியில்லாமல் முன்னால் நிற்பவனை மோப்பம் பிடித்தபடியே நிற்கிறான் அந்தக் கார்க்காரன். எதிரில் வரும் இந்த சனிபகவானும் மேலேயே இடித்துவிடுவது போல வருகிறான். தவறு என் பக்கம்தான். ஆனால் அதற்காக இப்படி ஏறினால் என்ன செய்ய முடியும்? வேறு வழியில்லை. ஒதுங்க முடிகிற அளவுக்கு ஒதுங்கிக் கொள்ளலாம் இடது பக்கத்தில் இருக்கும் காரை ஒட்டியபடி ஓரங்கட்டிக் கொண்டேன். இதெல்லாம் மொத்தமாக நான்கைந்து நொடிகள்தான். முகத்தை பயந்தபடிதான் வைத்திருந்தேன். உண்மையிலேயே பயம்தான். தப்பு அவர்களுடையதாகவே இருந்தாலும் கண்டபடி திட்டுவார்கள். இப்பொழுது தவறு என்னுடையது. திட்டாமல் விடுவார்களா? அதுவும் கன்னடத்தில் திட்டினால் திருப்பி பதில் சொல்லக் கூட முடியாது. தமிழ்க்காரன் என்று தெரிந்தால் இன்னமும் இளக்காரமாகப் போய்விடும்.

கடந்த முறை சண்டையில் அப்படித்தான் பெரிய பல்பாக வாங்கினேன்- ஹெல்மெட்டைத் தலைக்கு அணியாமல் இடது கையில் பிடித்தபடி வண்டி ஓட்டி வந்த நல்ல மனிதனிடம். அவன் பாட்டுக்கு சென்றிருந்தால்தான் விவகாரம் இல்லையே. ஆனால் அந்த ஹெல்மெட்டைக் கொண்டு வந்து எனது கைப்பிடியில் சிக்க வைத்துவிட்டான். விழத் திரிந்தேன். அவனை முறைப்பதற்குள் ‘ஏனாயித்து குரு’ என்று கேட்டுவிட்டான். அடங்காமல் ‘பார்த்து வர மாட்டியா?’ என்று வாயைக் கொடுத்துவிட்டேன். அவனுக்கு அது கேட்டுவிட்டது. விடுவானா? தமிழன் சிக்கினால் குருவிக்குஞ்சு சிக்கின மாதிரிதான். தப்பித்து வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு புலம்பிக் கொண்டிருந்தேன்.

நேற்றும் அப்படியொரு சூழல்தான். பயந்த மாதிரி முகத்தை வைத்திருந்ததற்காகவாவது சனிபகவான் விட்டுத் தொலைத்திருக்கலாம். ம்ஹூம். இன்னமும் நெருக்கியபடி வந்தான். இனி ஆண்டவன் விட்ட வழி. வலது காலை foot rest இல் இருந்து தூக்கிக் கொண்டேன். அவனும் மேலே இருந்து பார்த்திருப்பான் போலிருக்கிறது- ஆண்டவனைத்தான் சொல்கிறேன். ‘டொக்’ என்று அடித்தது. அவன் வண்டி என்னுடைய பம்பரில் இடித்திருந்தது. அப்பாடா. அத்தனை படபடப்பிலும் கொஞ்சம் சிரித்துக் கொண்டேன். அடித்துவிடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை போலிருக்கிறது. மிக அருகில் ஓட்டி வந்து மிரட்டுவதுதான் அவனது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். கை மீறிவிட்டது. இடித்த வேகத்தில் சற்று தடுமாறினேன். ஆனால் இடதுகாலுக்கு மொத்த பலத்தையும் கொடுத்து ஊன்றி நின்று கொண்டேன். அவனும் பதறிவிட்டான். துளி நகர்த்தித்தான் வண்டியை நிறுத்தினான். அதற்குள் அடங்கப்பிடாரி foot rest ம் கோடு போட்டுவிட்டது. ஒரு தமிழ்ப்படம் வந்ததே- இரு கோடுகள், அதுதான். பம்பர் ஒரு கோடு, ஃபுட் ரெஸ்ட் ஒரு கோடு. சுத்தம். 

அத்தனை நெரிசலிலும் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டான். பின்னால் நிற்பவர்கள் தாறுமாறாக ஒலி எழுப்பினார்கள். அவனது அத்தனை கடுப்பும் நான் தான். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம்- கன்னடம்தான் பயத்தை அதிகமாக்கியிருந்தது. ஆனால் பயந்தது போல நடக்கவில்லை. ஹிந்தியில் பேசினான். எடுத்தவுடனேயே ஒரு வசை. அது ஒரு மட்டமான ஆபாசச் சொல் என்று தெரியும். ஆனால் இப்போது பேசுவது நல்லதில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு பம்ம வேண்டியதாக இருந்தது.

பெங்களூரில் இது போன்ற விவகாரங்களில் ஆட்டோக்காரர்கள் களமிறங்கிவிடுவார்கள். நேற்றும் அப்படித்தான். விஜய் படம் ஒட்டியிருந்த  ஆட்டோவிலிருந்து ஒருத்தர் இறங்கினார். கன்னடத்தில்தான் ஆரம்பித்தார். ‘என்னோட தப்புதாங்கண்ணா ஆனா வேணும்ன்னே கொண்டு வந்து இடிச்சுட்டானுங்கண்ணா’ என்றேன். அண்ணாவில் அவர் கொஞ்சம் அவர் உருகியிருக்கக் கூடும். அதுவும் விஜய் ஸ்லாங்கில் பேசியிருந்தேன். 

கார்க்காரன் ‘ஹிந்திமே போல்..ஹிந்திமே போல்...சாலா மதராஸி’ என்றான். 

‘தெரிந்தால்தாண்டா போல்றது’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். 

காற்று என் பக்கம் வீசத் தொடங்கியது. ஆட்டோக்காரர் எனக்கு சாதகமாக பேசத் தொடங்கினார். அப்பொழுதுதான் கவனித்தேன். அந்தக் கார் உத்தரப்பிரதேச பதிவு எண். பாதி வெற்றி நம் பக்கம்தான். ஆனால் கார்க்காரன் விடுவதாகத் தெரியவில்லை. காவல்துறைக்குச் செல்ல வேண்டும் என்றான். கூட்டம் சேரச் சேர அவரே வந்துவிட்டார்- போக்குவரத்துத் துறை காவலர். எனக்கு தமிழில் பதில் சொல்கிறார். அவனுக்கு ஹிந்தியில் பதில் சொல்கிறார். ‘இந்த வெளியூர்க்காரனுக வந்துதான் நம்ம ஊரை நாசக்கேடு பண்ணுறானுக’ என்று ஆட்டோக்காரரிடம் கன்னடத்திலும் சொன்னார். பன்மொழி வித்தகர். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். பிரச்சினையை முடித்துக் கொடுத்தால் சரி. அவருக்கும் அவசரம்தான் ட்ராபிக் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சரி செய்தாக வேண்டும். அவர் முன்பாகவே கார்க்காரன் என்னைத் திட்டினான். ஆட்டோக்காரர் நம் ஆள் அல்லவா? ஒரு ஏறு ஏறினார். அடங்கிக் கொண்டான்.

ஆட்டோக்காரர்  அருகில் இருக்கும் தைரியத்தில் ‘என் தப்புதான் சார். ஆனா அவர்தான் வேணும்ன்னு இடிச்சாரு..ராங் சைடுக்கு ஃபைன் போடுங்க...இடிச்சதை இங்க யார்கிட்ட வேணும்ன்னாலும் கேளுங்க’ என்று போலீஸ்காரரிடம் சொன்னேன். அவர் கொஞ்சம் சமாதானம் ஆகிவிட்டார். அவனிடம் திரும்பி ‘வேற எதுவும் செய்ய முடியாது’ என்றார்.  அவன் இன்னமும் கடுப்பாகிவிட்டான். ‘கோர்ட்டுக்கு போகலாம்’ என்றான். பேசிக் கொண்டே காவலர் எனக்கு முந்நூறு ரூபாய் தண்டம் விதித்தார். அபயாகரமாக வண்டி ஓட்டிய பிரிவு அது. பர்ஸில் முந்நூற்றைம்பது ரூபாய்தான் இருந்தது. எடுத்துக் கொடுத்தேன். சிரித்துக் கொண்டு உள்ளே வைத்தார்.  ஆட்டோக்காரர் எனக்கு சிக்னல் கொடுத்தார்.

‘கிளம்பட்டுமா சார்?’ என்றேன். 

போலீஸ்காரர் ‘அவன் கோர்ட்டுக்கு போலாம்ன்னு சொல்லுறான்’ என்றார்.

‘நோட்டீஸ் அனுப்புங்க சார்...வந்துடுறேன்’ என்ற போது அவர் பெரியதாக மறுப்புச் சொல்லவில்லை. ஹிந்திக்காரன் தான் பொங்கினான். மீண்டும் திட்டினான். வண்டியை எடுத்துவிட்டேன். அவன் ஓடி வந்து பிடித்தால் பிடிக்கலாம். ஆனால் அவன் வரவில்லை. ‘வண்டியை ஓரமாக நிறுத்துங்க’ என்று அவனிடம் போலீஸ்காரர் சொல்லிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக ஹெல்மெட் அணிந்துகொண்டு அவனைப் பார்த்தேன். மீண்டும் அதே கெட்டவார்த்தையில் திட்டினான். அதைவிட ஆபாசமான வார்த்தை தெரியும் என்று சொன்னேன் அல்லவா? அதைச் சொல்லிவிட்டு நடுவிரலைக் காட்டிவிட்டு வந்தேன். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

Jun 24, 2014

பழைய ஈயம் பித்தளைக்கு...

ஒரு பள்ளியிலிருந்து அழைத்திருந்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஆரம்பப்பள்ளி. கிராமப்பள்ளிதான். ஐம்பதுக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். மொத்தமே இரண்டு ஆசிரியர்கள்தான். நல்ல ஆசிரியர்கள் போலிருக்கிறது- மாணவர்களுக்கு கணினி பயிற்சியளிப்பதற்கான எத்தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் கைவசம் கணினி இல்லை. ஏதாவது கணினிக்கு ஏற்பாடு செய்ய இயலுமா என்று கேட்டிருக்கிறார்கள்.

ஒன்று அல்லது இரண்டு கணினி - இயங்கக் கூடிய நிலையில் இருக்கும் பழைய கணினியாக இருந்தாலும் சரி பயன்படுத்திக் கொள்கிறோம் என்கிறார்கள். நல்ல காரியமாகத்தான் தெரிகிறது.

நம் தலைமுறையில் கணினியைப் பார்க்க கல்லூரி வரைக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்பொழுது தனியார் பள்ளிகளில் படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள். பாம்பட்டிக்காட்டில் இருக்கும் தனியார் பள்ளிகள் கூட Smart class ஐ அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சத்தியமங்கலத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தாண்டி ஒரு ஊர் இருக்கிறது. வீரப்பன் அந்த ஏரியாவில் சுற்றித் திரிந்திருக்க வாய்ப்பிருப்பிறது. அத்தனை அடர்ந்த வனப்பகுதி அது. அந்த ஊரில் ஒரு தனியார் பள்ளி இருக்கிறது. அங்கு படிக்கும் ஐந்தாவது வகுப்பு மாணவன் smart class பற்றி பேசுகிறான். ஆச்சரியமாக இருந்தது.

அதுவே நம்பியூரிலிருந்து புளியம்பட்டி செல்லும் வழியில் ஒரு பள்ளி இருக்கிறது. அரசாங்கப்பள்ளி. மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கம்யூட்டர் சயின்ஸ் க்ரூப் நடத்துகிறார்கள். பிரச்சினை என்னவென்றால் கணினி சொல்லித் தர ஆசிரியர் இல்லை. பத்தாம் வகுப்பு வரைக்கும் மாணவர்கள் கணினியை பார்த்திருக்கவே மாட்டார்கள்.  ப்ளஸ் ஒன் வகுப்பில் கம்யூட்டர் க்ரூப்பில் சேர்ந்த பிறகும் பெரியதாக முன்னேற்றம் இல்லை. கணினியை பார்க்கலாம். இயக்கவெல்லாம் தெரியாது. அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று விசாரிப்பதற்காக தலைமையாசிரியரிடம் தொடர்பு கொண்டேன் ‘ஒரு ஆசிரியருக்கு மாதாமாதம் சம்பளம் ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்றார். திகில் ஆகிவிட்டது. உண்மையில் பெரிய பட்ஜெட். மாதம் ஐயாயிரம் என்றாலும் கூட வருடத்திற்கு அறுபதாயிரம் தேவை. வலுவான பெற்றோர் ஆசிரியர் கழகம் இருந்தால் அவர்களே சமாளித்துவிடுவார்கள். ஆனால் அவர்களே மழை இல்லாமல் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் செய்ய சாத்தியமே இல்லை. இருந்தாலும் என்னளவில் இது சிரமமான காரியமாகத் தெரிந்ததால் அதன் பிறகு அதை யோசிக்கவே இல்லை.

இப்படித்தான் பெரும்பாலான அரசுப்பள்ளிகள் திணறிக் கொண்டிருக்கின்றன.

சில பள்ளிகளில் ஆசிரியர்கள் முனைப்பானவர்களாக இருந்தால் நல்ல விஷயங்களை முன்னெடுக்கிறார்கள். முதல் பத்தியில் சொன்ன ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பிற்குள்ளேயே மாணவர்களுக்கு கணினி சொல்லித்தர விரும்புகிறார்கள். அவர்கள் கேட்டு இரண்டு வாரத்திற்கு மேலாகிறது. எதற்கும் விசாரித்துக் கொள்ளலாம் என்று விசாரித்ததில் தாமதமாகிவிட்டது. அதே மாவட்டத்தில் இருக்கும் இன்னொரு பள்ளியாசிரியரிடம் மூலமாக விசாரித்துவிட்டேன். ‘அந்த ஸ்கூலில் டீச்சிங் ரொம்ப நல்லா இருக்கும்’ என்று சான்றிதழ் கொடுத்தார். சான்றிதழ் கொடுத்தவர் நம்பகமான ஆசிரியர். 

பணம் கேட்கவில்லை; வேறு உதவி எதுவும் கேட்கவில்லை. கணினி கேட்கிறார்கள்- அதுவும் பழைய கணினி. யாராவது புதிய கணினி வாங்கித் தருவதாக இருந்தாலும் இரட்டைச் சந்தோஷம். பள்ளி முகவரிக்கு நேரடியாகவே ஆர்டர் செய்துவிடலாம்.

சில நண்பர்களிடம் விசாரித்திருக்கிறேன். முயற்சி செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். எப்படியும் ஒன்றிரண்டை தேற்றிவிடலாம் என்று நினைக்கிறேன். அதிகமாக வந்தாலும் பிரச்சினையில்லை. வேறு நல்ல அரசு பள்ளிகளாக பார்த்துக் கொடுத்துவிடலாம். சில பள்ளிகள் பழைய கணினி வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. விசாரித்துதான் கொடுக்க வேண்டும். ஆனால் சேகரிப்பதை சேகரித்துவிடலாம்.

இந்தக் காரியத்தில் இணைந்து செயலாற்ற விரும்பும் நண்பர்கள் மின்னஞ்சலில் ஒரு தகவல் கொடுங்கள். பணமாக இருந்தால் அக்கவுண்ட் நெம்பரைக் கொடுத்துவிடலாம். ஆனால் இதை எப்படி இடம் மாற்றுவது? யோசிக்க வேண்டும். செளகரியப்படும் ஊர்களாக இருந்தால் நானே வந்து வாங்கிக் கொள்கிறேன். இல்லையென்றால் வேறு சாத்தியங்களை ஆராயலாம்.

நன்றி.

vaamanikandan@gmail.com

கோபப்படாதீங்கய்யா

நஸ்ருதீன் ஷா எழுதிக்கொள்வது.

நீங்கள் எழுதியிருந்தது நூற்றுக்கு நூறு உண்மை. அப்படியே உடன்படுகிறேன். ஆனால் இதை உங்களுக்கு அனுப்பியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் தொலைபேசியில் அழைத்துச் சொன்னமையாலும், படித்த பின் ஏற்பட்ட பிறழ்வின் அவசரத்தில் எதையும் உளறிவிடக்கூடாது என்பதற்காகவும் பதிலை ஒரு நாள் கழித்து எழுதுகிறேன். பலமுறை உங்கள் கருத்துக்களுக்கு முரண்பட்டாலும் அதனை அப்படியே விட்டுவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இம்முறை என் அகத்தை சீண்டிவிட்டமையால் விடமுடியவில்லை.

நான் கண்டுகொள்ளப்படவில்லை என்று எழுதியிருந்தேன். உண்மை. நான் இரண்டேகால் ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய முதல் தமிழ்ப்பதிவை வெளியிட்டபின் மூன்று நாட்களுக்குப்பின்னரே இரண்டாவது ஹிட் கிடைத்தது. இன்று என் பதிவுகளுக்கு குறைந்தது 30 ஹிட்டுகள் வருகின்றன. இதுகுறித்து நான் கவலைப்பட்டதே இல்லை. காரணம் எனக்கு எழுத்து மட்டுமே முக்கியமே ஒழிய அதன் மூலம் Recognition பெறுவது எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

ஆனால், நான் பெயரும் புகழும் கிடைக்கவில்லையென புலம்புவதாகவும் அதற்கு நீங்கள் அறிவுரை செய்வதாகவும் இருந்தது அந்தக் கட்டுரை. மிகவும் ஏமாற்றமடைந்திருக்கிறேன். புறந்தள்ளப்படுவது என்பது புதியவன் என்பதால் இவனெல்லாம் என்ன எழுதியிருப்பான் என்ற நினைப்பில் நெருங்கிய இலக்கியவாதிகள் கூட புறக்கணிப்பதையே எழுதியிருந்தேன். நான் எழுதுவதற்கும் ஜெமோ சாரு எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஏன் அவை உச்சமாக இருக்கின்றன என்பதை வாசிப்பின் மூலமும் என் எழுத்தின்பால் மற்றவர்களின் மதிப்பீட்டைக்கொண்டும் உணர முற்படுகிறேன்.

வாசிப்பே அறியாத என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என் மட்டிக்கதைகளையெல்லாம் நல்லா இருக்கு என்பார்கள். அதற்கு சிரித்து வைப்பேன். எங்கள் கம்பெனியில் உள்-வலைதளம் இருக்கிறது. வெளியாட்கள் யாரும் பார்க்கமுடியாது. இங்கு விமு போன்ற சில எழுத்தாளர்களும் உண்டு. சிலர் நன்றாக எழுதுவார்கள் சிலர் சுமாராக எழுதுவார்கள். அங்குதான் ராஜனை கண்டுபிடித்தேன். (இதையெல்லாம் உங்களிடம் சொல்லக் காரணம் என்னவெனில் இந்த தளத்தில் தான் நான் எழுதுவதை சோதிக்கிறேன்)

சிலர் ஆஹா அருமை என்பார்கள். வாசிப்பு குறித்த தகவல்கள் புத்தக அனுபவம் போன்றவற்றைப் படிக்கும் சிலர் நீங்கதான் எனக்கு புக் படிக்க கத்து தரணும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நான் கண்டுகொள்ளமாட்டேன். வெறுமனே சிரித்துவிட்டு வந்துவிடுவேன். ஆனால் எவரேனும் ‘சரியில்லை – கேவலம்’ என்று சொன்னால் அவர்களிடம் ‘எதன் அடிப்படையில் இது சரியில்லை என மேன்மேலும் விசாரித்து அதனை சரி செய்து கொள்வேன். இதுவரையிலும் அப்படித்தான் நடந்திருக்கிறது.

எனக்கு என் தரம் என்னவென்று தெரியும் அதனால்தான் நான் ‘அருமை’ போன்ற கருத்துக்களை ஏற்பதில்லை.

ஒரே ஊர்க்காரர். ஏற்கனவே பேசியிருக்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே உங்களுக்கு என் படைப்புகளை அனுப்பினேன். என்னுடைய கேள்விகட்கு எந்தவித பதிலும் தராமல் நீங்கள் இக்கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. இக்கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

என்னுடைய பயணம் ஒன்றே ஒன்றுதான் இன்னும் 30 வருடங்களுக்குள் ( நான் அவ்வளவுதான் வாழக்கூடும் என்ற கணிப்பில்) காலத்தில் நிற்கக்கூடிய ஒரு படைப்பையாவது படைக்கவேண்டும்.

அவ்வளவே.

நன்றி.

ஷா.
                                                                   **

உங்கள் பதில் சந்தோஷமளிக்கிறது. 

ஏற்கனவே எழுதியிருக்கிறேன்- எசகுபிசகான மற்றும் செய்தி வலைத்தளங்களைத் தவிர தமிழில் பிற எந்த வலைப்பதிவும் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் பேரைத் தாண்டி வாசகர்களை ஈர்க்குமா என்பது சந்தேகம்தான். ஏதாவது கலவரங்களைச் செய்தால் வேண்டுமானால் இந்த எண்ணிக்கையைத் தாண்டலாம்- அதுவும் கூட தற்காலிகம்தான். தொடர்ந்து வருவார்களா என்று சொல்ல முடியாது. இந்த நிசப்தம் தளத்திற்கு புதிதாக வருபவர்களில் தினமும் இரண்டு சதவீதமாவது ஆபாசத்தைத் தேடித்தான் வருகிறார்கள். கூகிளுக்கும் எனக்கும் எந்தப் பகையும் இல்லை- ஆனாலும் மிக வக்கிரமான தேடலை நிகழ்த்தினால் நிசப்தத்தைக் கண்ணில் காட்டிவிடுகிறது. 

எப்படியும் தமிழர்களில் ஒரு கோடி பேராவது இணையத்தில் புழங்கக்கூடும். இதில் ஐந்தாயிரம் என்பது எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த எண்ணிக்கையில் வாசகர்களை அடைவது பெரிய காரியம் இல்லை. தொடர்ந்து எழுதுகிறீர்களா? வித்தியாசமாக எழுதுகிறீர்களா? சுவாரசியமாக எழுதுகிறீர்களா என்பதெல்லாம்தான் முக்கியம். முயன்று பாருங்கள். ஆறு மாதத்தில் இந்த இலக்கை அடைந்துவிடலாம்.

இணையத்தில் எழுதி எழுதி எதைச் சாதிக்கப் போகிறாய் என்று யாராவது கேட்பார்கள். அவர்கள் கேட்கும் போது பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ‘எழுதி எழுதி’ என்று அடுத்தவர்களைச் சொல்ல வையுங்கள். அதற்காக இடைவிடாமல் எழுதுங்கள். அதைத்தான் consistency என்று சொல்லியிருந்தேன். இணையத்தில் கொஞ்சமாவது கவனத்தைக் கவர இதுதான் சூட்சமம். இடைவிடாமல் எழுதுவதற்கு நிறைய உள்ளுக்குள் வாங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். நான்கு நாட்கள் தொடர்ந்து எழுதினால் மண்டை காலியாகிவிட்டது போல இருக்கும். எதையாவது உள்ளிட்டு நிரப்ப வேண்டும். ஆரம்பகாலத்தில்தான் இது கஷ்டம். போகப் போக பழகிவிடும்- யாராவது பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு பதிவுக்கான வஸ்து கிடைத்துவிடும். சாலையில் யாரையாவது பார்க்கும் போது ஒரு கதை கிடைத்துவிடும். செய்தி கேட்கும் போது ஒரு சுவாரசியத்தைப் பிடித்துவிடலாம். எழுதுவது ஒரு பழக்கமாகிவிடும்.

இதெல்லாம் வெறும் இணையத்தளத்துக்குத்தான்.

இதை வைத்துக் கொண்டு எந்தக் காலத்திலும் சுஜாதாவாகவோ, சுந்தர ராமசாமியாகவோ ஆக முடியாது. அதற்குத் தனியான உழைப்பு தேவை. தமிழின் இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை போன்றவற்றில் நம்மை நிரூபிக்க வேண்டும். அதற்கு எழுத்து வசமாக வேண்டுமல்லவா? முன்பெல்லாம் பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். நிராகரிப்பார்கள். எங்கேயோ பிரச்சினை என்று திருத்துவார்கள். இன்னொரு முறை அனுப்புவார்கள். திருப்பி அனுப்புவார்கள். இப்படி தொடர்ந்து கொண்டிருக்கும் போது ஏதாவது சமயத்தில் எழுத்து கைவசமாகும். பிறகுதான் எழுத்தாளராவார்கள். இந்த எழுதுதல்- திரும்பப் பெறுதல்- திருத்துதல்- மீண்டும் எழுதுதல் என்பதை Tuning என்கிறோம். இந்த டியூனிங்கைச் செய்து கொள்ள இணையம் ஒரு வரப்பிரசாதம். ஆறு மாதம் தொடர்ந்து எழுதிப் பாருங்கள். எவ்வளவு பெரிய கட்டுரையையும் அரை மணி நேரத்தில் தட்டச்சு செய்துவிடலாம். பதிவிடும் போதே தெரிந்துவிடும்- இந்தக் கட்டுரை வரவேற்பைப் பெறுமா அல்லது மொக்கையாகிவிடுமா என்று.

இந்த சூத்திரங்களை எல்லாம் தெரிந்து கொண்டாலே இணையத்தில் மற்றவர்களை சற்று கவனிக்க வைத்துவிடலாம்.

உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ, தாழ்வுணர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவோ முந்தைய கட்டுரையை எழுதவில்லை. அதனால்தான் பெயர் கூட குறிப்பிடாமல் எழுதியிருந்தேன். அப்படியிருந்தும் உங்களை அந்தக் கட்டுரை உசுப்பேற்றியிருந்தால் மெத்த மகிழ்ச்சி. சவாலாகவே சொல்கிறேன் - ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேரை படிக்க வைத்துக் காட்டுங்கள் பார்க்கலாம். அப்படிச் செய்துவிட்டு ஒரு தகவலை அனுப்புங்கள். முதலில் மகிழ்ச்சி அடைபவன் நானாகத்தான் இருப்பேன்.

ஆனால் ஒன்று - ஜெமோ, சாரு எழுதுவதற்கும் நான் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்கள் பார்த்தீர்களா? இந்தக் கேள்விதான் அபத்தமாக இருக்கிறது. சாரு, ஜெமோவின் உழைப்பில் ஒன்றரை சதவீதத்தைக் கூட நீங்கள் எழுதுவதாகச் சொல்லும் இந்த இரண்டேகால் ஆண்டுகளில் செய்திருக்க மாட்டீர்கள் என்பதை புரிந்து கொண்டால் உங்களிடமிருந்து இத்தகைய மின்னஞ்சல்கள் வந்திருக்காது நஸ்ருத்தீன். நாம் பயணிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் இருக்கிறது. இப்பொழுதே எவரெஸ்டின் உச்சியில் கொடிபறக்க விட வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு.

ஜெயமோகன் ஒற்றை பத்தியில் இந்த இணைய உலகை ஸ்தம்பிக்கை வைக்கிறார். சாரு ஏதாவது சொன்னால் அது கிண்டலோ, பாராட்டோ ஏகப்பட்ட பேர் பதறுகிறார்கள். இதையெல்லாம் செய்வது அவ்வளவு சாத்தியமா என்ன? நமக்கென்று ஒரு credibility வேண்டும். நம்மையும் நான்கு பேர் பொருட்படுத்த வேண்டும். நீங்களும் நானும் controversy ஆன கருத்துக்களைச் சொல்லி கூட்டத்தை கவரலாம் என்றால் பல்லைக் காட்டியபடியே புறந்தள்ளிவிடுவார்கள்.

சுந்தர ராமசாமி போலவோ, ஜெயமோகன் போலவோ, சாரு நிவேதிதா போலவோ காலத்தில் நிற்கக் கூடிய ஒரு படைப்பை எங்கள் ஊர்க்காரன் எழுதினால் அதைவிட மகிழ்ச்சியைடைய வேறு என்ன இருக்கிறது? இந்த சவால்களை வெறும் கடிதத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் எழுத்தில் காட்டுங்கள். இந்த உரையாடலை நீட்டிக்காமல் நிறைய வாசியுங்கள். ஆயிரக்கணக்கான வாசகர்களை வசமாக்குங்கள். உங்கள் வலைப்பதிவிற்கான இணைப்பை இந்தப் பதிவில் தருகிறேன். ஆயிரம் பேராவது உங்கள் தளத்துக்கு வரக் கூடும் என நம்புகிறேன். தக்கவைத்துக் கொள்வது உங்கள் திறமையைப் பொறுத்தது. 

வாழ்த்துகள்.

Jun 23, 2014

நட்டு வைத்த கல் எங்கே இருக்கிறது?

ஓசூரில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது- நடுகற்களைப் பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கம். நடுகற்கள் என்றால் நட்டு வைக்கப்பட்ட கற்கள் என்ற அளவில்தான் எனது அறிவு இருந்தது. தெரிந்து கொள்வோம் என்று சென்றிருந்தேன். கல்யாண மண்டபத்தில்தான் நிகழ்வு. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் அறிஞர்கள். அந்தக்காலத்தில் வீர மரணம் அடைந்தவர்களின்- போர், ஊரைக்காக்க விலங்குகளோடு நடந்த சண்டை என்று எப்படி நிகழ்ந்த மரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம்- அப்படிப்பட்ட வீரர்களின் நினைவாக நடப்பட்ட கற்கள்தான் நடுகற்கள். அந்தக் காலத்தில் வீரர்களின் மனைவிகளும் வீரர்களுடன் சேர்ந்து இறந்து போனார்கள் அல்லவா? அவர்களுக்காக எழுப்பட்ட நினைவுச் சின்னங்கள் சதிகற்கள்.

நடுகற்கள், சதிகற்கள்- அவற்றின் தொடக்கம், ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எப்படி மாறியிருக்கின்றன போன்றவற்றையும் அந்த சிற்பங்களில் இருக்கும் iconographic அடிப்படை, நடுகற்களின் காலகட்டத்தை நிர்ணயிக்கும் முறை போன்றவற்றின் அடிப்படை அம்சங்களையாவது தெரிந்து கொண்டதாகத்தான் சொல்ல வேண்டும்.

கேரளாவிலிருந்து வந்திருந்த ஒரு பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் குஜராத்தில் ஹரப்பா நாகரீகத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பவர். அவ்வப்போது கேரளாவுக்கும் குஜராத்துக்குமிடையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த நாகரீகம் பற்றிய அத்தனை தகவல்களைக் கொட்டுகிறார். எட்டாம் வகுப்பு வரலாற்றில் படித்ததோடு சரி. இப்பொழுதுதான் ஞாபகபப்படுத்திக் கொள்கிறேன். தேவர கொண்டா ரெட்டி என்றொரு கர்நாடக ஆய்வாளரிடம் பேசினால் ஒற்றைச் சிற்பத்தை வைத்துக் கொண்டு ஓராயிரம் தகவல்களைச் சொல்கிறார். பெங்களூரில்தான் இருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரைப் பார்த்து வாயைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

இந்த நடுகற்களை கர்நாடகாவில் வீரக்கல் என்கிறார்கள். பெங்களூரில் இப்ளூர் என்ற இடத்தில் சாலையின் நடுவிலேயே இருக்கிறது. எனக்கு இத்தனை நாட்கள் இது நடுகல் என்று தெரியாது. நாய்கள் ஒன்றுக்கடிக்க தோதாக அந்தக்கால நன்மக்கள் நட்டு வைத்திருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த அசமஞ்சம் நான். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு- முப்பத்தி சொச்சம் வயதாகிவிட்டது.  

அமத்தா ஊரிலும் ஒரு நடுகல் இருக்கிறது. அதில் ஏதாவது எழுதியிருக்கிறதா என்று ஞாபகம் இல்லை. இவர்கள் பேசிய பிறகுதான் அது நடுகல் என்றே உறைக்கிறது. இந்த முறை பார்த்துவிட்டு வர வேண்டும்.


கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை போகும் வழியில் இருந்த Dolmen என்று எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தார்கள். முட்டுச்சந்தில் சிக்கிக் கொண்ட டால்மேஷன் நாயைப் போல முழித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த மாதிரி இடங்களில் வெட்கப்படவே கூடாது. கூச்சமே இல்லாமல் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டுவிட வேண்டும். அப்படி நான் கேட்கப் போக பதில் சொன்னவர் பூங்குன்றன். அழுக்கடைந்த வேட்டியும், ஒடிசலான தேகமுமாக அமர்ந்திருந்த அவரைக் கிட்டத்தட்ட தொல்லியலின் authority என்கிறார்கள். அவனவன் தன்னை அத்தாரிட்டியாக காட்டிக் கொள்ளவே என்னெனென்னவோ பினாத்திக் கொண்டிருக்கிறான். இவரை அத்தாரிட்டி என்கிறார்கள் ஆனாலும் இவ்வளவு எளிமையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான்.

இந்த கற்திட்டைகளை பெயர்த்தெடுத்தால் புதையல் கிடைக்கும் என்று யாரோ கிளப்பிவிட்டதை நம்பி வெடி வைத்துத் தகர்த்துவிட்டார்களாம். இப்பொழுது அந்த இடத்தில் எந்த அடையாளமும் இல்லையாம். சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் விநாயக முருகன் ‘ஏன் எல்லோரும் வரலாற்றை எழுத ஆசைப்படுகிறீர்கள்?’ என்று கேட்டிருந்தார். வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. குறைந்தபட்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வரலாறு பற்றிய அடிப்படையான விழிப்புணர்வுவாவது நம்மிடையே இருக்க வேண்டும்.

பாருங்கள்- இந்த கற்திட்டைகளுக்கு குறைந்தபட்சம் நான்காயிரம் வருட ஆயுள் இருந்திருக்கும். இத்தனை ஆயிரம் வருடங்கள் தம் கட்டி நின்றிருந்த அடையாளத்தை கடந்த முப்பது வருடங்களுக்குள்ளாக வெடித்துச் சிதறடித்துவிட்டோம். அவ்வளவுதான் நம் சொரணை. சில மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி அருகே ஒரு தமிழ் ஆசிரியரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். அவர் ஊருக்குச் செல்வதற்கு பதிலாக வழி மாறிச் சென்றுவிட்டோம். போய்ச் சேர்ந்த இடம் ஐகுந்தம். அதுவும் நல்லதாகப் போய்விட்டது. சாலையோரத்திலேயே ஏதோ கல்வெட்டு இருந்தது. இறங்கி விசாரித்தால் லுங்கி கட்டிய புண்ணியவான் அழைத்துச் சென்று சில குகை ஓவியங்களைக் காட்டினார். எந்தக் காலத்திலோ ஆடு மேய்க்கச் சென்றிருந்த குரும்பன் வரைந்து வைத்திருந்த ஓவியம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கும். வேறு எங்கேயாவது இன்னமும் இருக்கா? என்று கேட்டால் சில கிலோமீட்டர் தாண்டிச் சென்றால் நிறைய இருந்ததாம் ஆனால் கிரானைட் குவாரிகளுக்காக அந்த மலைகளைப் பெயர்த்தெடுத்துவிட்டதாகச் சொன்னார். அவ்வளவுதான். 

எனக்குத் தெரிந்து புது எழுத்து மனோன்மணி, சதானந்த கிருஷ்ணகுமார் போன்றவர்கள் இத்தகைய அடையாளங்களை இன்னமும் தேடிக் கண்டறிந்து கொண்டிருக்கிறார்கள். புது எழுத்து மனோன்மணிதான் இந்த இரண்டு நாள் கருத்தரங்கின் முதுகெலும்பு. உறுதுணையாக திரு.கே.ஏ.மனோகரன் இருந்திருக்கிறார். இவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர். அவரது தந்தை அப்பாவு பிள்ளை முப்பது ஆண்டுகள் ஓசுர் டவுன்பஞ்சாயத்தின் தலைவராக இருந்தவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஊரில் செல்வாக்கான மனிதர்கள். அவர்களது திருமண மண்டபத்தில்தான் நிகழ்வு நடைபெற்றது. இந்த மாதிரி கருத்தரங்குகளில் தக்காளி சாதமும் தயிர்சாதமும்தான் போடுவார்கள் என்று குதர்க்கமாக நினைத்திருந்தேன். ஓங்கி தலையில் அடித்து தலைவாழை இலையில் விருந்து படைத்தார்கள். அவர்களே பேருந்து ஏற்பாடு செய்து மாலையில் குடிசெட்லு என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பிற்கால நடுகற்கள் நிரம்பியிருந்த கோயில் அது. ஓசூரிலிருந்து இருபது கிலோமீட்டர்தான். யாராவது ஓசூர் வருவதாக இருந்தால் சொல்லுங்கள். இன்னொரு முறை ரவுண்ட் கட்டி வரலாம்.

கருத்தரங்கில் சனிக்கிழமை கலந்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமையும் கலந்து கொள்ளத்தான் நினைத்திருந்தேன். ஆனால் வீட்டில் கருத்தரங்கை ஆரம்பித்துவிட்டார்கள். ‘போனா சீக்கிரம் வரத் தெரியாதா’ என்று அப்பா கேட்டால் ‘வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க?’ என்று அம்மா கேட்கிறார். ‘எங்க கூட இருக்க முடியாதா?’ என்று வேணி கேட்க ‘நாளைக்கு பார்க் கூட்டிட்டு போங்கப்பா’ என்று மகி கேட்கிறான். இந்தக் கருத்தரங்கை மீறி இரண்டாம் நாள் செல்ல முடியவில்லை. ஆனால் முதல் நாளில் கற்றுக் கொண்டதை விரிவாக்கம் செய்யவே ஒரு வருடமாவது தேவைப்படும் என நினைக்கிறேன்.

சொல்ல மறந்துவிட்டேன். முதல் நாள் இரவில் திருபத்தூர் தூய நெஞ்சுக் கல்லூரியின் மாற்று நாடகக் குழுவினர் பறை இசையையும், செண்ட மேளமும் வாசித்துக் காட்டினார்கள். ஒரே குழுவினர்தான். பட்டையைக் கிளப்பினார்கள். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள். கி.பார்த்திப ராஜாவின் மாணவர்கள். குழுவில் பாலசுப்பிரமணியம் என்ற தமிழ் விரிவுரையாளரும் உண்டு. முதல் அரை மணி நேரம் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறிக் கொண்டது. பக்கத்தில் யாராவது இருந்தால் குத்திவிடுவேன் என்பதால் எழுந்து வந்து பின்புறமாக நின்று கொண்டேன். இசைக்கும் போது ‘ஹே...ஹே’ என்று அவர்கள் கத்தியது வீடு போகும் வரைக்கும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அத்தனை எனர்ஜி அவர்களிடம். இன்னொரு முறை கல்லூரியில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் பார்த்திபராஜாவிடம் மாணவனாகச் சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன்.

Jun 20, 2014

யார் கண்டுகொள்கிறார்கள்?

நேற்று ஒரு நண்பர் பேசினார். புலம்பினார் என்பது சரியாக இருக்கும். அவரை யாருமே கண்டுகொள்வதில்லையாம். எல்லோரும் புறந்தள்ளுகிறார்களாம். செம ஃபீலிங். 

பெரும்பாலானோருக்கு இப்படியொரு எண்ணம் இருக்கிறது.  என்னைக் கேட்டால் ‘நான்தான் கடின உழைப்பாளி’ என்று சொல்லிக் கொள்வேன். இன்னொருவரைக் கேட்டால் அவரும் தன்னைத்தான் கடின உழைப்பாளி என்று சொல்லிக் கொள்வார். இப்படித்தான் பலரும். பண விவகாரத்தில் மட்டும் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு ‘அவனை விட ஏழை அல்லது பணக்காரன்’ என்று comparison study செய்யும் நாம் உழைப்பில் மட்டும் ‘நாம்தான் அப்பாடக்கர்’ என்று நினைத்துக் கொள்வதன் சிக்கல் இது. நாம்தான் கடின உழைப்பாளி என்று மட்டும் நினைத்தால் பிரச்சினையில்லை நமது உழைப்பைவிடவும் மிஞ்சிய பாராட்டும் புகழும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அங்குதான் சிக்கல்.

தாறுமாறாக அவசரப்படுகிறோம். எப்பொழுதும் நம்மைப் பற்றி நான்கு பேர் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஒரு துறையில் கால் வைத்தவுடனேயே நமக்கு பரிவட்டம் சூட்டப்பட வேண்டும் என விரும்புகிறோம். இப்படி எத்தனை ஆசைகள்? 

ஒன்று மட்டு நிச்சயம்- இப்படி ஒரு நினைப்பும் புலம்பலும் இருக்கும் வரைக்கும் எந்தத் துறையிலும் வெல்ல முடியாது. இன்னும் எத்தனை காலத்திற்கு உழன்றாலும் புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். 

இந்த உலகம் ஒன்றும் அவ்வளவு குரூரமானது இல்லை. ஒருவனிடம் திறமையும், சரியான உழைப்பும் இருந்தால் நிச்சயம் கண்டு கொள்ளும். ஒருவேளை சற்று கால தாமதம் ஆகக் கூடும் அவ்வளவுதான்.  இன்றைக்கு யாரையெல்லாம் நாம் வெற்றியாளர்கள் என்று நினைக்கிறோமோ அவர்கள் குறைந்தபட்சம் பத்து வருடங்களாவது உழைத்திருப்பார்கள். அந்த பத்து வருடங்களில் எத்தனை தோல்விகள், அவமானங்கள், பாராட்டுக்களைச் சந்தித்திருப்பார்கள்? எதுவாக இருந்தாலும் கால்களுக்கு கொஞ்சம் வேகம் கொடுத்து உந்தித் தாண்டியிருப்பார்கள். அப்படித் தாண்டி வந்தவர்கள்தான் இன்றைக்கு சாதனையாளர்கள். அப்படிக் கிடைக்கும் வெற்றிதான் நிரந்தரம். வெற்றியாளர்களின் கடந்தகால வரலாற்றைப் பற்றி யோசிக்காமல் இன்றைக்கு அவர்கள் நிற்கும் இடத்தை உடனடியாக நாமும் அடைய வேண்டுமென்றால் எப்படி சாத்தியம்? அப்படி ஆசைப்படுவதன் விளைவுதான் அத்தனை குறுக்குவழி முயற்சிகளும், அத்தனை attention seeking அட்டகாசங்களும்.

அடுத்தவர்கள் கவனிக்க வேண்டும் என்பதும் கூட ஒரு வகையில் பணத்தைத் தேடுவதைப் போலத்தான். பத்து ரூபாய் வைத்திருப்பவன் நூறு ரூபாயை அடைய நினைக்கிறான். நூறு ரூபாய் வைத்திருப்பவன் ஆயிரத்தை குறி வைக்கிறான். ஆயிரம் வைத்திருப்பவன் லட்சத்தையும் லட்சாதிபதி கோடியையும் நோக்கி ஓடுகிறார்கள். அதே போலத்தான் ஆயிரம் பேருக்குத் அறிமுகமானவன் லட்சம் பேருக்கு அறிமுகமாக விரும்புகிறான் லட்சம் பேருக்கு அறிமுகமானவன் கோடி மக்களை அடைய விரும்புகிறான். 

புதிதாக ஆரம்பிப்பவர்கள் எடுத்தவுடனே கோடிக்கணக்கானவர்களை குறி வைப்பதில்தான் இத்தனை அக்கப்போர்களும். 

இங்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. திறமையாளர்களும் நிறைந்திருக்கிறார்கள். கேமரா வைத்திருப்பவனெல்லாம் ஃபோட்டாகிராபர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஃபேஸ்புக்கில் ஐம்பது லைக் வாங்குபவர்கள் பிரபலங்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள், ட்விட்டரில் எழுதுபவர்கள் அறிவாளிகள், ப்லாக் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள்- சொல்லிக் கொண்டே போகலாம். இப்படித்தான் நிலைமை இருக்கிறது. இதைத் தவறு என்று சொல்லவில்லை. எல்லோராலும் எதையாவது செய்துவிட முடிகிறது. எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் வெற்றியாளர்களா? consistency அவசியம். எதைச் செய்தாலும் ஒரு தொடர்ச்சி வேண்டும். மூன்று மாதம் இடைவெளி விட்டு வந்தால் பாதிப் பேர் மறந்துவிடுவார்கள். ஆறு மாதம் கழித்து வந்தால் அத்தனை பேரும் மறந்திருப்பார்கள். ஆரம்பத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். உலகம் அத்தனை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆத்மாநாமின் மொத்தத் தொகுப்பும் இருநூற்றைம்பது பக்கங்கள்தான், மகேந்திரனும், பாலு மகேந்திராவும் வருடம் நான்கு படங்களாக எடுத்துத் தள்ளவில்லை, பசுவய்யா மொத்தமாகவே 107 கவிதைகள்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அவர்கள் மட்டும் நிலைத்துவிட்டார்களே என்று கேட்கலாம்தான். அவர்களின் காலம் வேறு நம் காலம் வேறு. முன்பெல்லாம் டிவியில் முகம் காட்டினால் பிரபலம் ஆகிவிட முடியும். இன்றைக்கு சூப்பர் சிங்கரில் சாம்பியனே ஆனாலும் கூட ஏதாவது இசையமைப்பாளரின் வீட்டுக்கு முன்னால் வாய்ப்புக் கேட்டுத்தான் ஆக வேண்டும். முன்பெல்லாம் பாடகர்கள் என்றால் அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருப்பார்கள். இன்றைக்கு எத்தனை பாடகர்கள் இருக்கிறார்கள்? எத்தனை பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள்? அனைத்து இடங்களிலுமே ‘நீ இல்லைன்னா இன்னொருவன்’ என்பதுதான் சூழல். இதில் எழுத்து மட்டும் விதிவிலக்கா? நம்மை நிரூபிக்கவும், நமது அடையாளத்தை தொடர்ந்து புதுப்பிக்கவும் கடும் உழைப்பைக் கொட்டினால்தான் சாத்தியம்.

இங்கு எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்கிற தொண்ணூறு சதவீதம் பேரிடம் அதற்கான உழைப்பு இல்லை. ‘வெளிக்கி போவது போல எதையாவது எழுதிக் கொண்டேயிருக்க வேண்டுமா?’ என்று சரக்கடித்துவிட்டு நக்கலடிப்பவர்கள்தான் அதிகம். ஒரு கவிதைத் தொகுப்பையோ அல்லது ஒரு சிறுகதைத் தொகுப்பையோ எழுதிவிட்டு இலக்கிய வரலாற்றில் தனக்கான இடத்தை அழுந்தப் பதியுங்கள் என்று கோரினால் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான புத்தகங்கள் வந்து நிரம்புகின்றன. ஆயிரக்கணக்கான எழுத்தாளர் உருவாகிறார்கள். எத்தனை பேர் நிலைக்கிறார்கள்? இது எழுத்தில் மட்டும் இல்லை. வேறு எந்தத் துறையாக இருந்தாலும் இதுதான் நிலைமை. 

சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்- இருப்பதிலேயே மிக எளிதான காரியம் என்பது தமிழில் டப்பா கவிதைகளை எழுதுவதுதான். தமிழ்க்கவிதைகளுக்கென நேர்ந்துவிடப்பட்ட சொற்கள் மொத்தமாக முந்நூற்று சொச்சம் தேறும். அந்த முந்நூற்று சொச்சம் வார்த்தைகளை வைத்தே வளைத்து வளைத்து டப்பா கவிதைகளை எழுதிவிடலாம். பெரிய உழைப்பெல்லாம் தேவையில்லை- எழுதிவிடலாம். இதனால்தான் எந்தவிதமான அனுபவமும், ரசனையுமற்ற தட்டையான கவிதைகள் குவிக்கப்படுகின்றன. இத்தனை டப்பா கவிதைகள் பெருகிப் போனதாலேயே கவிதை என்றால் காத தூரம் ஓடும் வாசகர்கள் பெருகிவிட்டார்கள். அறுபது கவிதைகள் சேர்ந்தால் யாராவது தொகுப்பாக கொண்டு வந்துவிடுகிறார்கள். பிறகு கவிதைத் தொகுப்பே விற்பதில்லை என்றால் எப்படி விற்கும்? வெளியில் நானும் கவிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். யாரையாவது கண்டித்து அறிக்கைவிட்டால் கீழே கையொப்பமிடுவதற்கு வேண்டுமானால் அந்த அடையாளம் உதவலாம். அவ்வளவுதான்.

இது அறிவுரை எல்லாம் இல்லை. இதையெல்லாம் எழுதுவதால் நான் யோக்கியசிகாமணி என்றும் அர்த்தம் இல்லை. இதுதான் நிதர்சனம் என நினைக்கிறேன்.

கலை என்பது பயிற்சி. எழுத்தும் அதில் அடக்கம். தொடர்ந்து பயிற்சி செய்வோம். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் இடைவெளியில்லாமல் உழைப்போம். பிறகு திரும்பிப் பார்க்கும் போது யாரும் கண்டுகொள்ளவில்லையென்றால் வேண்டுமானால் புலம்பலாம். அதைவிடுத்து எழுத ஆரம்பித்து ஒன்றரை வருடங்களில் ‘எழுத்தில் ஒரு துயரம் என்பது வளர்ந்து வருபவர்கள்/புதியவர்கள்/வளர்ந்து வர நினைப்பவர்கள் யாவரும் புறந்தள்ளப்படுவதே’ என்றெல்லாம் புலம்புவது அவசியமில்லாதது. பிரையோஜனமில்லாதது. பீடாதிபதிகளால் கைதூக்கிவிட்டு முகத்தில் டார்ச் அடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் வென்றுவிடுவதில்லை. யாருமே கண்டுகொள்ளாமல் விடப்படுபவர்கள் தோற்றுவிடுவதில்லை. Let us do our work boss. Everything will fall in its place.

Jun 19, 2014

இந்த உலகம் எப்பொழுதுதான் நம்பியிருக்கிறது?

அலுவலகத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு Spa வில் காக்கிச்சட்டைகளின் நடமாட்டம் இருந்தது. ஒரு காக்கிச் சட்டையைப் பார்த்தாலே மூக்கு வியர்த்துக் கொள்ளும். மூன்று நான்கு பேர் இருந்தால்? அதுவும் இது போன்ற இடங்களில்? பரவசமாகிவிட்டேன். சிறு கூட்டத்தை விலக்கிவிட்டு அருகில் செல்லும் போது கிட்டத்தட்ட எல்லாமும் முடிந்திருந்தது. பூட்டி ஸீல் வைப்பதற்கான முஸ்தீபுகளில் இருந்தார்கள். வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை ‘ஓகி...ஓகி’ என்று துரத்திக் கொண்டிருந்தார்கள். 

வழக்கமான செய்திதான். 

விபச்சாரம் நடந்திருக்கிறது. வழக்கம் போல ரெய்டில் நான்கு பெண்களை மீட்டிருக்கிறார்கள். வழக்கம் போலவே தப்பித்து ஓடிவிட்ட ஒரு புரோக்கரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ‘மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரம்’ என்ற தலைப்பில் எழுதுவதற்கான சாதாரண விஷயம்தான் இது. ஆனால் புகார் வந்த முறைதான் வித்தியாசமானது. 

ஒரு இளைஞன் சில நாட்களுக்கு முன்பு பெண்கள் தேவை என இணையத்தில் தேடியிருக்கிறான். திருமணத்திற்கு இல்லை. தேடலில் இவர்களது மின்னஞ்சல்தான் சிக்கியிருக்கிறது. விசாரித்திருக்கிறான். கல்லூரி மாணவிகள், மாடல்கள், சாதாரண பெண்கள் என வெளியூர்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து ‘மசாஜ்’ செய்கிறார்கள். ஒரு பெண்ணை பதினைந்து நாட்கள்தான் வைத்திருப்பார்களாம். பிறகு கொச்சி, ஹைதராபாத், சென்னை போன்ற ஊர்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அதற்கு பதிலாக அங்கிருந்து வேறு சில பெண்களை அழைத்துக் கொள்வார்கள். பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்து வாடிக்கையாளர்கள் சலித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த சுழற்சியைச் செய்கிறார்களாம். Job ethics.

இவனுக்கும் மின்னஞ்சலில் நான்கைந்து பெண்களின் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவன் இரண்டு பெண்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் - ஆமாம் இரண்டு பெண்கள்தான். மொத்தம் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு. காரியமெல்லாம் முடிந்து வீட்டுக்குச் சென்றிருக்கிறான். அடுத்த சில நாட்களில் கடும் காய்ச்சல். பரிசோதனைகளில் உறுதிப்பட்டுவிட்டது. ஹெச்.ஐ.விதான். இருபத்தைந்தாயிரம் கொடுத்து வாழ்க்கையைத் தொலைத்துவிட்டான். Irreversible Mistake. ‘நான் தொலைந்தாலும் பரவாயில்லை...மற்றவர்களையாவது காப்பாற்றுங்கள்’ என்று கமிஷனருக்கு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறான். அவர் உத்தரவிட வந்து அமுக்கிவிட்டார்கள். 

மதியம் சாப்பாடு எடுத்துச் செல்லாத நாட்களில்தான் இது போன்ற காட்சிகள் கிடைக்கின்றன. டொம்ளூரில் நல்ல மெஸ் இருப்பதாகத் தெரியவில்லை. பஞ்சாபி மெஸ் ஒன்று இருக்கிறது. ஆனால் சுத்தபத்தம் என்று எதிர்ப்பார்க்க முடிவதில்லை. அதனால் முக்கால் மணி நேரமாவது சந்துகளுக்குள் சுற்றுவேன். வாரத்தில் ஒரு நாளாவது இப்படி வெளியில் சுற்றுவது வாடிக்கையாகிவிட்டது. அப்படிச் சுற்றும் போதுதான் இந்த காக்கிச் சட்டைகள் கண்ணில் சிக்கினார்கள்.

கோரமங்களா, இந்திராநகர், டொம்ளூர் போன்ற இடங்களில் வீதிக்கு வீதி மசாஜ் பார்லர்கள் இருக்கின்றன. உஸ்பெகிஸ்தான் பெண் கைது, கஜகஸ்தான் பெண் கைது என்றெல்லாம் செய்திகள் வந்திருக்கின்றன. அங்கிருந்து சுற்றுலா விசாவில் இங்கே வந்து சம்பாதித்துச் செல்கிறார்கள். இந்தியர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் வடகிழக்கு பெண்களும் ஆண்களும்தான் இந்த வேலையில் இருக்கிறார்கள். ஜீன்ஸ், டீசர்ட் என்று உடைகளில் டிப்-டாப்பாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்க வேண்டுமே- படு மோசம். ஈஜிபுரா சிக்னல் அருகில் நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன. கச்சடாவான ஏரியா அது. ஒண்டிக்குடித்தன வீடுகளில் குடும்பம் நடத்திவிட்டு இப்படி மசாஜ் பார்லர்களில் வாழ்வை இழந்து கொண்டிருக்கிறார்கள். நடுவண் அரசில் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்கென்று தனியான அமைச்சர் கூட இருக்கிறாராம்.

சரி விடுங்கள். 

இரண்டு வாரங்களுக்கு முன்பாகக் கூட மசாஜ் பார்லருக்குச் சென்றிருந்தேன். வெயிட்டீஸ். தறிகெட்டு ஓடும் கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் இழுத்துப் பிடியுங்கள். சொல்வதை முழுமையாகக் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது. காலையில் ஆறு மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இறக்கிவிட்டுவிட்டார்கள். அந்நேரத்தில் யார் வீட்டுக் கதவைத் தட்டுவது? ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக சற்று அதிகமாகத் தூங்குவார்கள். தூங்குமூஞ்சியோடு அவர்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று யார் வீட்டுக்கும் செல்லவில்லை. டிஸ்கவரி புக் பேலஸில்தான் வேலை. அவர் பத்து மணிக்குத்தான் கடையைத் திறப்பார். அதுவரை என்ன செய்வது? அசோக் பில்லரிலிருந்து எவ்வளவுதான் மெதுவாக நடந்தாலும் முக்கால் மணி நேரத்தில் கே.கே.நகரை அடைந்துவிட முடிகிறது. மணி ஏழு கூட ஆகியிருக்கவில்லை. இன்னும் மூன்று மணி நேரத்தையாவது ஓட்ட வேண்டும். 

முன்பெல்லாம் ஒருநாள் வேலை என்றால் தி.நகரில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து அறை எடுத்துக் கொள்வேன். குளித்துவிட்டு ஒரு மணி நேரம் தூங்கி எழுந்து செல்லலாம். கடந்த முறை தெரியாத்தனமாக கட்டிலுக்குக் கீழாக பார்த்துவிட்டேன். இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்தான். ஐந்நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு அறையில் வாஸ்து பார்க்கலாமா? பார்த்துவிட்டேன். ஏகப்பட்ட Transparent பலூன்கள் அங்கே கிடந்தன. இதையெல்லாம் சுத்தமே செய்யமாட்டார்கள் போலிருக்கிறது. இனிமேல் இந்தப்பக்கமே தலைவைக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். அப்படியே கீழே பார்க்காவிட்டாலும் இத்தகைய விடுதிகளில் படுக்கை கைவசமிருக்கிறதே என்று இஷ்டப்படியெல்லாம் தூங்கிவிட முடியாது. மல்லாக்கத்தான் படுத்துக் கொள்ள வேண்டும். தூக்கத்தில் குப்புற புரளும் போது மூக்கு தலையணையை முத்தமிட்டுவிட்டால் அவ்வளவுதான். மூன்று நாட்களுக்கு குமட்டிக் கொண்டு வரும். அவ்வளவு கப்பு.

இந்தப் பிரச்சினையெல்லாம் வேண்டாம் என்றால் ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும் போலிருக்கிறது. பெங்களூரிலிருந்து சென்னை வருவதற்கு டிக்கெட்டே இருநூறு ரூபாய்க்குள்தான் ஆகும். ஆனால் கோயம்பேட்டில் ஆட்டோ கேட்டால் ‘ஐந்நூறு கொடு சார்’ என்பார்கள். அப்படித்தான் இதுவும். ஒரு மணி நேரத் தூக்கத்துக்கு ஆயிரம் என்பது டூ மச். அதனால் இந்தக் கருமமே வேண்டாம் என்று இந்த முறை அறை எடுக்கவில்லை. 

ஆனாலும் குளிக்க வேண்டுமே?

அதற்குத்தான் மசாஜ் பார்லர்கள் வைத்திருக்கிறார்கள். முந்தின நாள்தான் ஷேவ் செய்திருந்தேன். ‘ஷேவ் செய்ய வேண்டும்’ என்று கடையைத் திறந்ததும் திறக்காததுமாக சென்றவுடன் அவர் வித்தியாசமாகத்தான் பார்த்தார். ஒரு ஷேவ் செய்துவிட்டு ‘குளிக்க பாத்ரூம் கிடைக்குமா?’ என்றால் அடிதான் விழும் என்பதால் அடுத்து என்ன செய்வது என்று மூளைக்குள் மீட்டர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. கடைக்கு மேலேயே மசாஜ் பார்லர். முக்கால் மணி நேர நீராவிக் குளியலுக்கு முந்நூறு ரூபாய்தான். நேரத்துக்கு நேரமும் விரயம். குளியலுக்கு குளியலும் ஆயிற்று. 

அறைக்குள் ஜட்டியோடு அமர வைத்து நீராவியைப் திறந்துவிட்டு போய்விட்டார்கள். நீளமான துண்டு ஒன்றைக் கொடுத்திருந்தார்கள். முழுமையாக போர்த்திக் கொண்டு படுத்துவிட்டேன். முக்கால் மணி நேரமோ ஒரு மணி நேரமோ கழித்து வந்து எழுப்பினார்கள். நல்ல தூக்கத்திலிருந்தேன். ‘இந்த சூட்டில் எப்படி சார் தூங்குனீங்க?’ என்றார். ‘கவர்மெண்ட் பஸ்ஸில் கடைசி சீட்டில் உக்காந்துட்டு பெங்களூரிலிந்து வந்து பாருங்க...அடுப்புல கொண்டு போய் படுக்க வெச்சாலும் தூக்கம் வரும்’ என்று சொல்ல வாய் வந்தது. நமது பலவீனம் அடுத்தவர்களுக்குத் தெரியக் கூடாதல்லவா? அடக்கிக் கொண்டேன்.  ‘அடுத்த தடவை வரும் போது கொஞ்சம் ரேட்டை குறைச்சுக்குங்க’ என்று வியாபார பேரத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறேன்.

காலை உணவை முடித்துக் கொண்டு புத்தகக் கடைக்குச் செல்லவும், வேடியப்பன் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது. 

‘இத்தனை நேரம் எங்க இருந்தீங்க?’ என்றார். 

அவசரப்பட்டு ‘மசாஜ் பார்லர்’ என்று சொல்லிவிட்டேன். சற்று ப்ரெஷாக வேறு இருந்தேன் - அவ்வளவுதான் - அப்பொழுதிருந்து ஒரு மார்க்கமாக முறைக்க ஆரம்பித்தவர்தான், என்னதான் விளக்கம் சொன்னாலும் நம்ப வைக்க முடியவில்லை. அது சரி. அப்பாவிகளை இந்த உலகம் எப்பொழுதுதான் நம்பியிருக்கிறது?

Jun 18, 2014

நாம்தானே வரலாற்றின் குஞ்சுகள்?

ஒலிவியே ரிச் என்ற பிரெஞ்ச் நண்பர் இருக்கிறார். நண்பர் என்றால் ஒத்த வயதெல்லாம் இல்லை- அவரது மகளுக்கே இருபத்தைந்து வயது ஆகிவிட்டது. இன்னமும் ஆல்ப்ஸ் மலையேற்றத்துக்கும், வானிலிருந்து குதிக்கும் சாகசத்திற்கும் அவ்வப்போது மூட்டை கட்டிச் சென்றுவிடுவார். வந்து அளப்பார். மைக்கேல் ஷூமேக்கர் விழுந்து மண்டையை உடைத்துக் கொண்ட ஃப்ரெஞ்ச் ஆல்ப்ஸில் கூட கடைசியாக எட்டிக் குதித்ததாகச் சொன்னார். இப்பொழுது அவரது சாகசத்தைச் சொல்வது நோக்கம் இல்லை. அவருக்கு தனது குடும்ப வரலாறு துல்லியமாகத் தெரியும். அவரது ஊருக்குச் சென்ற போது தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். பதினாறாம் நூற்றாண்டு வீடு அது. முன்னோர்கள் கட்டியது. இன்னமும் அதிலேயேதான் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது சிறிய மாற்றங்களைச் செய்து கொள்கிறார்கள். ஆனால் சிதைக்காமல் வைத்திருக்கிறார்கள். தனது எள்ளுத்தாத்தாவின் எள்ளுத்தாத்தா வரைக்குமான தகவல்களை வைத்திருக்கிறார். 

அவரோடு பேசும் போதுதான் தெரிந்தது. 

‘எங்களிடம் செறிவான வரலாறு இருக்கிறது’ என்று வாய் நிறைய சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நம் குடும்பத்தைப் பற்றி என்ன விவரங்கள் நமக்குத் தெரியும்? எனக்கு அப்பாவின் தாத்தா பெயர் வரைக்கும்தான் தெரியும். அதுவும் பெயர் மட்டும்தான். மற்ற எந்த விவரமும் தெரியாது.  அம்மாவின் அப்பிச்சி நிறைய ஓலைச்சுவடிகள் எழுதி வைத்திருந்தாராம்- கத்தை கத்தையாக. அத்தனையையும் கோடங்கிகளுக்கு அள்ளிக் கொடுத்தார்களாம். மிச்சமிருந்த அத்தனை சுவடிகளையும் குப்பையாகக் கிடக்கிறது என்று எரித்துவிட்டார்களாம். பொக்கை வாய் தெரிய அமத்தா கை விரிக்கிறார். 

கோபிச்செட்டிபாளையத்தின் வரலாறை எழுதிவிடலாம் என்று முயற்சித்தேன். சில நண்பர்கள் உதவினார்கள். அந்த ஊருக்கு அதிகபட்சமாக இருநூற்றைம்பது ஆண்டுகால வரலாறுதான் இருக்கும். பக்கத்தில் இருக்கும் சத்தியமங்கலம் அப்படியில்லை- நெடுங்கால வரலாறு உடைய ஊர். கோபியின் வெறும் இருநூற்றைம்பது ஆண்டுகால வரலாற்றைத் துல்லியமாக எழுதுவதற்கான தரவுகள் கிடைக்கவில்லை. துல்லியம் கிடக்கட்டும். எங்கே தொடங்குவது என்று கூடத் தெரியவில்லை. கொஞ்சநஞ்சம் தெரிந்து வைத்திருந்த முன்னோர்களும் ஒவ்வொருவருவராகப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியே மனிதர்கள் இருந்தாலும் அவர்களுக்கு எத்தனை ஆண்டு கால வரலாறு தெரியும்? அதிகபட்சம் நூறு ஆண்டுகள் தெரியுமா? அவ்வளவுதான். அதற்கு முந்தைய வரலாறு? 

கட்டடங்களை அழித்துவிட்டோம். பெரும்பாலான ஊர்கள் தங்கள் அமைப்பை இழந்துவிட்டன. கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்த பழமை கூட இப்பொழுது இல்லை. தெருக்கள் மாறிவிட்டன. ஓட்டு வீடுகள் காணாமல் போய்விட்டன. சேந்தி கிணறுகளை மண்ணள்ளிப் போட்டு மூடிவிட்டார்கள். கோயில்களை மராமத்துப் பணிகள் என்ற பெயரில் கான்க்ரீட் கட்டடங்களாக மாற்றிவிட்டார்கள். ஒன்றிரண்டு கல்வெட்டுகள் மீது சுண்ணாம்போ அல்லது பெய்ண்ட்டோ அடித்து மறைத்துவிட்டார்கள். சதிகற்கள், நடுகற்கள் என்று எந்தத் தடயமும் இல்லாமல் சிதைத்துவிட்டோம். எங்கே போய் வரலாற்றை எழுதுவது?

ஊரின் வரலாறை விடுங்கள். ‘வடிவேலர் சதகம்’ என்றொரு புத்தகம் கிடைத்தது. எந்தப் புண்ணியவான் அச்சிட்டாரோ தெரியவில்லை. ஐம்பது பக்கங்களுடைய புத்தகம் அது. ஓலைச்சுவடியிலிருந்து புத்தகமாக மாற்றியிருக்கிறார்கள். யார் எழுதியது என்று பார்த்தால் - புலவர் காளியண்ண கவுண்டர். கரட்டடிபாளையம். வேறு எந்த விவரங்களும் இல்லை. பொருளாசை, பெண்ணாசை, பரத்தையர், கும்பம் போன்ற கொங்கைகள் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். மருந்து உண்ணுவதற்கு ஏற்ற நாள், பயிர் செய்வதற்கு ஏற்ற நாள் குறித்தெல்லாம் பாடி வைத்திருக்கிறார். அத்தனையும் ஐம்பது பக்கங்களுக்குள். நான் பிறந்த அதே ஊரில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு புலவர் வாழ்ந்திருக்கிறார். இப்படியொருவர் வாழ்ந்திருக்கிறார் என்பதற்காக சந்தோஷப்படுவதா அல்லது அவரைப் பற்றி வேறு எந்த விவரங்களும் பெற முடியவில்லை என்று துக்கப்படுவதா? அவரது வாரிசுகள் யாராக இருக்கும் என்று கூட கணிக்க முடியவில்லை. அவ்வளவுதான் நம் வரலாறு.

வடிவேலர் சதகமாவது புத்தகம். பெரியசாமித் தூரன் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்போம். பள்ளிக்காலத்தில் அவரது பாடல்களைக் படித்திருப்போம். சிறுகதைகள், நாடகங்கள், இசைக் கீர்த்தனைகள், தமிழ் களஞ்சியம் என்று அவரது செயல் மிகப்பெரியது. ஏதேதோ அரசியல் பின்னணிகளால் அவரது செயல்பாடுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. தூரன் அவர்கள் இரண்டாண்டுகள் கோபிச்செட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். 1931லிருந்து 33 வரை. அவர் பணியாற்றிய அதே பள்ளியில்தான் இருபதாண்டுகளுக்கு பிறகு அப்பா படித்திருக்கிறார். அறுபதாண்டுகள் கழித்து நான் படித்தேன். ம்ஹூம். அவரைப் பற்றி மிகச் சமீபத்தில்தான் தெரியும். அவரது சிறுகதைகளில் கரட்டடிபாளையம், புதுப்பாளையம், வேட்டைகாரன்புதூர் எல்லாம் களங்களாம். கரட்டடிபாளையத்தை வைத்து ஒற்றைக் கதை கிடைத்தாலும் உச்சபட்ச சந்தோஷமடைந்துவிடுவேன். மூக்கை ஒழுக்கிக் கொண்டு நாம் சுற்றிய ஊரின் வீதிகள் எழுபதாண்டுகளுக்கு முன்பாக எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஒரு கிளர்ச்சி இருக்கும் அல்லவா? அந்த கிளர்ச்சிக்காகத்தான் தேடிப் பார்க்கிறேன். அவரது எந்தப் புத்தகமும் அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை. நூலகப்பிரதியாவது எங்கேனும் கிடைக்குமா என்று தேடிப்பார்க்க வேண்டும்.

தூரனை விடுங்கள். அவரது வகுப்புத் தோழர் கே.எம்.ராமசாமிக்கவுண்டரின் வீடு இருக்கும் அதே வீதியில்தான் எங்கள் வீடு இருக்கிறது. வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராக முயன்று தோற்றுப் போயிருக்கிறார். அவர் எத்தனையோ புலவர்களை ஆதரித்த புரவலர் என்கிறார்கள். அவரைப் பற்றிய ஏதாவது தகவல் கிடைக்குமா என்று முயன்று பார்த்து சலித்ததுதான் மிச்சம். வாய்வழித் தகவல்களாக சிலவற்றை சேகரிக்க முடிந்தது. ஆனால் சரியான தரவுகளா என்று உறுதிப்படுத்திக் கொள்ள ஆதாரங்கள் ஏதுமில்லை. உறுதிப்படுத்த முடியாத தகவல்களை வைத்து வரலாறு எப்படி எழுத முடியும்? குருட்டுவாக்கில் எழுதி வைத்துவிட்டுப் போனால் அடுத்த தலைமுறை அதுதான் சரி என்று ஏற்றுக் கொள்வார்கள். 

உண்மையில் நம் தலைமுறையினரிடம் வரலாறு என்று சேகரிக்க எதுவுமேயில்லை.  நம்மிடம் இருப்பவையெல்லாம் முந்தைய தலைமுறையினர் சேர்த்துக் கொடுத்ததுதான். நாம் பெரும்பாலானவற்றை சிதைத்துவிட்டோம். மிச்சமிருப்பனவற்றை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறோம். கொஞ்சநஞ்ச தகவல்கள் கிடைத்தால் அவற்றையெல்லாம் நிராகரித்து விட்டு பிழைப்பை பார்த்தபடி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாய் கூசாமல் சொல்லிக் கொள்வோம்- ‘நாங்கள் வரலாற்றின் குஞ்சுகள் என்று’.

தகவலுக்காக: ஓசூரில் வருகிற 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடுகற்கள் பற்றிய தேசியக் கருத்தரங்கு K.A.P திருமண மண்டபத்தில் நடக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

Jun 17, 2014

பேயைப் பார்த்திருக்கிறீர்களா?

அமெரிக்காவில் இருந்து பெரியண்ணன் ஒருவர் வந்திருந்தார். நிறுவனத்தில் பெருந்தலை. பத்து நிமிடங்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று நேரம் கேட்டிருந்தேன். அவருக்கு ஒரு பி.ஏ. அந்தப் பெண்மணி ஏகப்பட்ட அல்டாப்புகளுக்குப் பிறகு நேரம் ஒதுக்கித் தந்திருந்தாள். அலுவலகம் முடிந்து அவர் கிளம்புவதற்கு முன்பாக பத்து நிமிடங்கள். அதுதான் எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த நேரம். அவரைப் பார்த்தே தீர வேண்டும் என்று அலுவல் ரீதியிலான எந்த அவசியமும் இல்லை. ஆனாலும் அவரைப் பார்க்க விரும்பியதற்கு காரணமிருக்கிறது. பக்கத்து ஊர்க்காரர். நான் அரைக்கால் ட்ரவுசர் போட்டுச் சுற்றிய காலத்திலேயே எங்கள் ஊர் கல்லூரியில் எம்.சி.ஏ முடித்திருக்கிறார். 

ஒரு காலத்தில் அந்தக் கல்லூரியில்  தமிழ்மன்றமும் மாணவர் பேரவையும் படு தெம்பாக இருந்தன. மாணவர் பேரவைக்கான தேர்தல் நடக்கும் போது சாலைகளில் பட்டையைக் கிளப்புவார்கள். ‘உட்டாலக்கடி கிரிகிரி..சைதாப்பேட்டை வடகறி’ என்று அவர்களோடு சேர்ந்து நாங்களும் ஓடுவோம். பிறகு படிப்படியாக தமிழ்நாட்டில் மாணவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட போது அந்தக் கல்லூரியும் ஒடுங்கிப் போனது. 

உட்டாலக்கடி கிரிகிரி தூள் கிளப்பிக் கொண்டிருந்த சமயத்தில் அந்தக் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்  ஒரு வீட்டை வாடகைக்கு  எடுத்து தங்கி இருந்தார்கள். பள்ளி முடித்து வந்தால் எப்போதும் அவர்களின் அறையில்தான் தவமாகக் கிடப்பேன். இரவில் தொலைக்காட்சி, டெக் எடுத்து வந்து படம் போடுவார்கள். ஆனால் எட்டரை மணிக்கு மேல் அங்கு இருக்கக் கூடாது- மீறினால் அப்பாவுக்கு பயங்கரக் கோபம் வந்துவிடும். அப்பொழுது அதற்கான காரணம் தெரியவில்லை. நாங்கள் கல்லூரியில் விடுதியில் பரவசமளிக்கும் படங்களைப் பார்த்து குதூகலித்தபோதுதான் அப்பாவின் பொறுப்புணர்ச்சி ஞாபகம் வந்தது. 

எங்கள் ஊரில் வாய்க்காலுக்குப் பக்கத்தில்தான் சுடுகாடும் இருக்கிறது. இதன் காரணமாகவோ என்னவோ இரவில் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. இப்போது நிறைய மாறிவிட்டது. நான் சொல்வது இருபது வருடங்களுக்கு முன்பாக. தேர்வு சமயங்களில் பக்கத்துவீட்டு மாணவர்களும் அவர்களோடு சேர்ந்து இன்னும் சில மாணவர்களும் வாய்க்கால் பக்கமாக நடை செல்வார்கள். ஓரிரு முறை அவர்களோடு போயிருக்கிறேன். அம்மா அப்பாவிடம் கெஞ்ச வேண்டும். பல நாள் கெஞ்சலுக்குப் பிறகு ஒரு நாள் ‘தொலைந்து போ’ என்று அனுமதிப்பார்கள். 

ஒரு நாள் ‘பேயைக் காட்டுகிறோம்..வர்றியா?’ என்றார்கள். பயங்கரக் குழப்பம். பேய் வந்துவிட்டால் இவர்கள் ஓடி வந்துவிடுவார்கள். கடைசியாக ஓடும் நம்மைத்தான் பேய் அடித்துத் தின்னும் என்று பயமாக இருந்தது. ‘பேய் வந்தால் திரும்பி மட்டும் பார்க்காத...ஒண்ணும் பண்ணாது’ என்றார்கள். திரும்பிப்பார்த்தால் ஓங்கி அறைந்துவிடுமாம். மூக்கில் ரத்தம் வந்து செத்துவிடுவோம்.

ரிஸ்க்தான். ஆனால் துணிந்துவிட்டேன்.

எலுமிச்சம்பழம், ஊதுபத்தி, விளக்கு, திரி மற்றும் கொஞ்சம் எண்ணெய் எடுத்துக் கொண்டார்கள். பேயை வர வைப்பதற்கான வஸ்துக்கள். திகிலாக இருந்தது. இரவு பதினொன்றரையைத் தாண்டியிருக்கும். நள்ளிரவு நேரத்தில்தானே பேய் வரும்? அதனால் அந்த நேரம். ‘அங்கு என்ன நடந்தாலும் வெளியில் சொல்லக் கூடாது’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்கள். நாட்டாமை, சின்னக்கவுண்டர் ஆகிய படங்களுக்கு ஷூட்டிங் நடந்த மண் அது. சத்தியத்தை மீறுவேனா? வாயைக் கட்டிக் கொண்டேன்.

சுடுகாட்டுக்குச் செல்வதற்கு ஒரு வளைவு உண்டு அந்த வளைக்குச் சென்று ஆளாளுக்கு ஒரு மரமாகப் பார்த்து பின்னால் ஒளிந்து கொண்டார்கள். மொத்தம் பன்னிரெண்டு பேர். சாலையின் இந்தப்பக்கம் ஆறு மரங்கள். அந்தப்பக்கமாக ஆறு. நான் ஒரு அரை டிக்கெட். ஹரி என்னை தன்னருகில் அழைத்துக் கொண்டார். ‘பயப்படாத’ என்று அவர்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அந்தப் பகுதி படு அமைதியாக இருந்தது. ஆந்தை மட்டும் எங்கேயோ தூரத்தில் இருந்து அடிக்கடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. பேய் வந்துவிடும் என்று நம்பத் துவங்கியிருந்தேன். 

பன்னிரெண்டு பேரில் ஒருவர் மட்டும் சாலையின் ஓரமாக விளக்கு ஒன்றை பற்ற வைத்தார். தூரத்தில் வருபவர்களுக்கும் கூட விளக்கு வெளிச்சம் தெரியும்படியான இடம் அது. அருகிலேயே சில ஊதுபத்திகளையும் பற்ற வைத்துவிட்டு, விளக்கு வெளிச்சத்தில் எலுமிச்சம்பழம் கண்ணுக்குத் தெரியும் படி அரிந்து அதன் மீது குங்குமத்தை பூசி வைத்துவிட்டு ஓடிப் போய்விட்டார். இதெல்லாம் பேயை வரவைப்பதற்கான வேலைதான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். 

அடுத்த சில நிமிடங்களுக்கு வெகு அமைதி. யாருமே பேசிக் கொள்ளவில்லை. தூரத்தில் விளக்குத் தெரிந்தது. ஏதோ ஒரு இரு சக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. அது அருகில் வரும் வரைக்கும் கூட யாருமே பேசவில்லை. அந்த வளைவை அடைந்தவுடன் ‘ஊஊஊஊ’ என்று குலவை போட்டார்கள் பாருங்கள். அவர்கள் கத்தப் போகிறார்கள் என்று எனக்கு அது வரைக்கும் தெரியாது. பயத்தில் சிறுநீர் கசிந்து ட்ரவுசர் நனைந்துவிட்டது. நானாவது பரவாயில்லை. அந்த பைக்கில் இருந்தவர்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் இரண்டு பேர். ஆக்சிலேட்டர் முறுக்கிய வேகம் இன்னமும் நினைவில் இருக்கிறது. அவர்கள் அங்கு எடுத்த வேகம் வீட்டுக்கு போய்த்தான் நின்றிருப்பார்கள். காய்ச்சல் வந்ததோ- ஹார்ட் அட்டாக் வந்ததோ தெரியவில்லை.

ஹரி என்னிடம் ‘பேயை பார்த்தியா?’ என்றார். ஈரத்தை மறைத்துக் கொண்டே சிரித்தேன். அடுத்து அரை மணி நேரத்துக்கு இதையேதான் செய்து கொண்டிருந்தார்கள். தனியாளாக பைக்கில் வந்தால் விட்டுவிட்டார்கள். இரண்டு பேர் வந்தால் ‘ஊஊஊஊ’தான். எவ்வளவுதான் தைரியசாலியாக இருந்தாலும் பயந்துவிட வேண்டும். அந்தச் சூழல் அப்படி. நள்ளிரவு, சுடுகாடு அருகிலேயே வாய்க்கால், விளக்கு, எலுமிச்சம் பழம்- போதாக்குறைக்கு ‘ஊஊஊஊ’. இவர்கள் மட்டுமில்லை- அப்படி நிறைய குரூப் அந்தச் சமயத்தில் அப்படி பயமூட்டிக் கொண்டிருந்தார்கள். சுடுகாட்டுப்பக்கத்தில் பேய் இருப்பதாக ஊருக்குள் வதந்தியையும் உருவாக்கியிருந்தார்கள். அடுத்த பல வருடங்களுக்கு இந்த வதந்தி இருந்தது. அதன்பிறகு அந்த வதந்தி எப்படி மறைந்தது என்று தெரியவில்லை. 

அந்தக் கல்லூரியில்தான் இந்தப் பெருந்தலையும் படித்திருக்கிறார். அவருக்கு இங்கு தனியறை ஒதுக்கியிருந்தார்கள். அறைக்கு வெளியிலேயே காத்திருந்தேன். ஒதுக்கப்பட்ட நேரத்தையெல்லாம் தாண்டி இரண்டு மணி நேரங்கள் ஓடியிருக்கும். அவரோடு பேசிக் கொண்டிருந்தவர்கள் வெளியில் வருவதற்கான அறிகுறியே இல்லை. கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்த போது வெளியே வந்தார். 

‘அவர் ஹோட்டலுக்கு போகிறார். நீங்கள் கார் ஏறும் வரைக்கும் பேசிக்கலாம்’ என்று பி.ஏ வந்து சொல்லிவிட்டுச் சென்றார். பெருந்தலை அருகில் வந்து சிரித்துக் கொண்டே ‘யெஸ்..டெல் மீ’ என்றார். தமிழில் பேசுவாரா என்று தெரியவில்லை. ‘ஐம் ஃபர்ம் கரட்டடிபாளையம்’ என்றேன்.  அடுத்த வரியிலேயே ‘அப்டீங்களா தம்பி...என்னை எப்படி புடிச்சீங்க?’ என்று கொங்குத்தமிழில் ஆரம்பித்துவிட்டார். ஹரியையும் அவருக்குத் தெரியுமாம். ஹரி இப்பொழுது சுமாரான வேலையில் பெங்களூரில்தான் இருக்கிறார். கார் டிரைவரை அரை மணி நேரம் தாமதமாக வரச் சொல்லிவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இந்தப் பேச்சில்தான் பேய்க்கதை ஞாபகத்துக்கு வந்தது. அவரும் அந்தச் சேட்டையைச் செய்திருக்கிறாராம். 

நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து பி.ஏவுக்கு வயிறு எரிந்திருக்கக் கூடும். ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்று சில நிமிடங்களில் தெரிந்து போனது. பெருந்தலையின் மனைவி ஆந்திராக்காரர். அதனால் ஆந்திராவில் இடம் வாங்கியிருக்கிறார். இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்று இயற்கை விவசாயம் செய்யப் போகிறாராம். நல்ல விஷயம்தான். எனக்குத்தான் பிரயோஜனமில்லை. இவரை வைத்து பிடித்த டீமுக்கு மாறிவிடலாம் என்று யோசனையை ஓட்டிக் கொண்டிருந்தேன். ‘மெயில் அனுப்புறேன். ஆந்திரா வந்தால் கண்டிப்பா தோட்டத்துக்கு வாங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இனி ஆந்திரா சென்றால் ராகிக் கூழ் உறுதியாகக் கிடைக்கும். டாட்.

Jun 16, 2014

சல்மானுக்கு என்ன ஆச்சு?

வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கறிக்கடை இருக்கிறது. ஒன்றில்லை- நிறைய கடைகள் இருக்கின்றன. ஆனால் ஏனோ இந்தக் கடையை பிடித்திருக்கிறது. கர்நாடக பாய் ஒருவர் நடத்துகிறார். என்னைவிடவும் வயது குறைவாகத்தான் இருக்கும். நன்றாகத் தமிழ் பேசுவார். அதனாலேயே பிடித்திருக்கிறது என நினைக்கிறேன் - மொழிப்பாசம் என்று நெஞ்சுருக்கி வேலையெல்லாம் இல்லை. தமிழில் பேசுவதால் ஒரு இயல்புத்தன்மை வந்துவிடுகிறது. ‘எலும்பு இல்லாம வாங்கிட்டு வாங்க’ ‘இந்த வாரம் நெஞ்சுக்கறியா பார்த்து வெட்டச் சொல்லுங்க’ ‘தொடைக்கறியா போடச் சொல்லுங்க..’ என்பதையெல்லாம் மொழி தெரியாத கறிக்கடைக்காரனுக்கு புரிய வைப்பதற்குள் கண்ணாமுழி திருகிவிடும். அதனால்தான் இந்தக் கடை. 

இந்தக் கடைக்குச் செல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. சல்மான்கான். நடிகர் இல்லை. ஒரு பொடியன். நான்காவது படிக்கிறான். இந்தக் கடையில் அவனுக்கு பார்ட் டைம் வேலை. பள்ளி முடித்துவிட்டு கடைக்கு வந்துவிடுகிறான். ஞாயிறன்று அறுபது ரூபாய் கூலி. மற்ற நாட்களில் நாற்பது ரூபாய். அது போக அவ்வப்போது விற்காத கோழிக்கறியை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடலாம். சல்மான்கானுக்கு ஹிந்தி, உருதுதான் தெரியும். கன்னடம் கூட முழுமையாகப் புரியாது. ஆனால் ஆங்கிலம் பேசுவான். பெங்களூர்வாசிகளுக்கு எந்த மொழி வருகிறதோ இல்லையோ- ஆங்கிலம் அதகளம்தான். பத்து வயது குழந்தைகள் என்றால் அவர்களிடம் பேசலாம். அதற்கு மேல் என்றால் பம்மிவிடுவேன். அதுவும் பத்தாவது பையன் பெண்கள் என்றால் தலையைக் குத்திக் கொண்டே நகர்ந்துவிடுவேன். அவர்களது ஆங்கிலம் அப்படி.

சல்மான்கான் ஆரம்பத்தில் பேசத் தயங்கினான். என் முக ராசி அப்படி. பழகியவர்களே கூட என்னிடம் பேச விரும்பமாட்டார்கள். தயங்குவார்கள். இரண்டு மூன்று முறை பேசிய பிறகு சல்மான் சகஜமாகிவிட்டான். 

சல்மானின் அப்பா ஆட்டோ டிரைவர். அவனுக்கு தங்கை ஒருத்தி இருக்கிறாள். மெஹபூப் நகர்தான் சொந்த ஊர். அப்பா ஆட்டோ ஓட்டுவதால் இங்கேயே வந்துவிட்டார்கள். கறிக்கடையில் இருந்து சற்று தூரத்தில் ஒரு லைன் வீடு இருக்கிறது. முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். அங்கு ஒரு வீட்டில்தான் சல்மான் குடும்பமும் தங்கியிருக்கிறார்கள். வாடகை வீடுதான். வாடகையை இவன் சம்பளம் சமாளித்துவிடும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கான சிறிய வீடு அது. 

ஞாயிற்றுக்கிழமைகளில் படு பிஸியாக இருப்பான். ‘சல்மான்’ என்று அழைத்தால் ‘சலாம் அலைக்கும் சாப்’ என்று சிரித்துக் கொண்டே நகர்ந்துவிடுவான். அவனை நிறுத்த வைத்து பேசவும் முடியாது. உரிமையாளர் கடுப்பாகிவிட வாய்ப்பு இருக்கிறது. கடைக்கு அவ்வப்போது ஒருவர் வந்து கோழிகளை அறுத்துவிட்டுப்போவார். ஹலால் செய்பவர். அவர் வரும் போதெல்லாம் கோழிகளை பிடித்துக் கொண்டு வந்து சல்மான் அவரிடம் தருவான். அறுக்கப்பட்ட கோழிகளையும் ஆடுகளையும் இன்னொருவர் சுத்தம் செய்து கொடுக்க அவற்றை கடையின் முன்புறத்தில் கொண்டு வந்து போடுவான். சுத்தம் செய்பவருக்கு அருகில் தண்ணீர் பிடித்து வைப்பான். இப்படி துறுதுறுவென்று நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பான். இவனுக்கு ‘காலே வலிக்காதா?’ என்று நினைத்துக் கொள்வேன். எல்லாவற்றையும் விட முக்கியம் நம்மைப் பார்க்கும் போதெல்லாம் அவன் சிரித்துக் கொண்டேயிருப்பான். பார்க்காத போதெல்லாம் அலறும் ஹிந்திப்பாடல்களுக்கு ஏற்றபடி வாயசைத்தபடியே நடந்து கொண்டிருப்பான்.

ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கறிக்கடைப் பக்கம் போனால் அவனுக்கு வேலை பெரிதாக இருக்காது. கடையை சுத்தம் செய்வது, ஊதுபத்தி பற்ற வைப்பது என்று இருப்பான்.  ‘சல்மான்’- இதை சற்று வித்தியாசமாக உச்சரிப்பேன். சிரிப்பான். 

‘படிக்கலையா?’ என்று ஒரு முறை கேட்டிருக்கிறேன். 

‘கொஞ்ச நாட்களுக்கு பள்ளிக்குச் செல்வேன்’ என்றவன் நிறுத்தி சத்தமில்லாமல் ‘இதே ஏரியாவில் இன்னொரு கடை ஆரம்பிக்கப் போகிறேன்’ என்று கண்ணடித்தான். பத்து வயது கூட ஆகாதவன் படிப்பை நிறுத்திவிடுவேன் என்று சொல்வது சங்கடம்தான். ஆனால் அவன் தொழில் கற்றுக் கொள்ளத்தான் இங்கு வந்து கொண்டிருக்கிறான் என்பது சந்தோஷமாகத்தான் இருந்தது. 

‘முதலாளிகிட்ட சொல்லட்டுமா?’ 

‘சொல்லிக்குங்க...ஊர்ல வேற கடையே இல்லையா?’ என்று சிரித்தான். அவனது ஆசை முதலாளிக்கும் தெரியுமாம். நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு கடை வைத்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம். இதையும் சல்மானேதான் சொன்னான்.

ஒரு முறை வெளிநாட்டுச் சாக்லேட் கிடைத்தது. ஒன்றோ இரண்டோதான். அவனிடம் கொடுத்த போது தங்கச்சிக்கு ஒன்றை பத்திரப்படுத்திக் கொண்டான். அவள் ஒன்றாம் வகுப்புக்குச் செல்கிறாள். அம்மா பார்த்துக் கொள்கிறாள் என்றான். 

சல்மான்கானை கடந்த இரண்டு மூன்று வாரங்களாகக் காணவில்லை. முதல் வாரம் பெரிதாகத் தெரியவில்லை. இரண்டாவது வாரம் என்னவோ பிரச்சினை என்று தெரிந்தது. ஆனால் ஓனரிடம் கேட்கவில்லை. நேற்று கேட்டுவிட்டேன். 

‘அதுவா...அவனோட அப்பா மடிவாலா மார்க்கெட்டுக்கு வெஜிடபுள்ஸ் ஆட்டோ ஓட்டுறார் சார்...அப்படி இப்படி கனெக்‌ஷன் ஆகி ஒரு பொண்ணைக் கூட்டிட்டு தனிக்குடித்தனம் போய்ட்டான்’ கறியை வெட்டிக் கொண்டே பேசினான். 

‘தொடைக்கறியா வெட்டுங்க’ என்று சொல்லிவிட்டு ‘சல்மான்கானுக்கு என்ன ஆச்சு?’என்றேன்.

‘அவங்க அம்மா அந்தாளாண்ட பேசிப்பார்த்துருக்கு...அந்த ஆள் சரியா பதில் சொல்லல...நாலஞ்சு நாளா செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகிக் கிடந்துச்சாம்....மனசு பொறுக்காம தூக்கு மாட்டிடுச்சு சார்’

திக்கென்றிருந்தது. சல்மான்கானே குழந்தை. அவனுடைய தங்கை அவனை விடக் குழந்தை. நினைத்துப் பார்க்கவே துக்கமாக இருந்தது.

‘எவ்வளவு கிலோ?’ - அவனது கேள்வி உறைக்கவில்லை.

‘சல்மான் இப்போ எங்கே இருக்கான்?’

‘நாங்க எல்லாம்தான் அவங்க சொந்தக்காரங்களை வரச் சொன்னோம். அந்தப் பொம்பளையோட அம்மா சல்மானோட தங்கச்சியைக் கூட்டிட்டு ஹசன் போயிடுச்சு’

‘எதுக்கு ஹசன் போனாங்க?’ என்றேன்.

கறியை வெட்டுவதை நிறுத்திவிட்டு பதில் சொன்னான். ‘சல்மானோட அம்மா ஹசன் தான். அவனோட அப்பாதான் மெஹபூப் நகர்’. ஹசன் கர்நாடாகவில்தான் இருக்கிறது. தேவகெளடாவின் தொகுதி.

‘அப்படின்னா சல்மான் எங்கே இருக்கான்?’ எனது கேள்விகள் அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருந்தன. ‘அவனோட சித்தப்பா வீட்ல மெஹபூப் நகருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க’

‘ஒரு கிலோ போடுங்க’- பணத்தைக் கொடுத்துவிட்டு லைன் வீடு இருக்கும் வழியில் நடந்தேன். 

சல்மானையும் தங்கையையும் பிரித்துவிட்டார்கள். அந்தக் குடும்பத்தின் கூடு கலைக்கப்பட்டுவிட்டது. சல்மான் இனிமேல் படிப்பானா என்று தெரியவில்லை. மெஹபூப் நகரின் பஞ்சர் கடையிலோ அல்லது வேறொரு கறிக்கடையிலோ வேலை செய்யக் கூடும். அவனது கறிக்கடை கனவு இனி எப்படி வேண்டுமானாலும் திசை மாறலாம். இனி எந்தக் காலத்தில் தனது தங்கையைப் பார்ப்பான்? அப்படியே பார்த்தாலும் தங்கைக்காக சாக்லேட்டை பிரித்து வைத்த பாசம் அப்படியே இருக்குமா? என்னென்னவோ யோசனைகள் ஓடின. லைன் வீடுகளைத் தாண்டிய போது சல்மானின் வீடு அடையாளம் தெரியவில்லை. யாரிடமும் விசாரிக்கவில்லை. அங்கு நிறையக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு முகமுமே சல்மானின் சாயலில்தான் இருந்தன. ஆனால் ஒன்று கூட சல்மானாக இல்லை. 

Jun 13, 2014

வேறு என்ன செய்துவிட முடியும்?

ஜெர்மனியில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் திரு.மணிகண்டனுக்குத் தேவையான உதவி கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது. அவர் ஏற்கனவே பெற்று வந்த உதவித் தொகை நின்று போனதால் வேறொரு வகையில் உதவித் தொகை பெறுவதற்கான முஸ்தீபுகளில் இருந்தார். அது வந்து சேர்வதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் போலிருக்கிறது. இடைப்பட்ட காலத்தை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் அவருக்கு முன்பாக இருந்த மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது.

உடன் தங்கியிருக்கும் சில நண்பர்கள் உணவுக்கான தேவையைப் பார்த்துக் கொண்டாலும் ஜெர்மனியில் தங்குவதற்கான செலவு, ஒவ்வொரு மாதத்திற்கும் காப்பீட்டு பிரிமீயம் மற்றும் மின்கட்டணம் மட்டுமே மாதம் அறுபதாயிரம் ரூபாயைத் தாண்டிவிடுகிறதாம். இதற்கான தொகைதான் சவாலாக இருந்திருக்கிறது. உண்மையைச் சொன்னால் மணிகண்டன் முதலில் பேசும் சந்தேகமாகத்தான் இருந்தது. ஒரு ரூபாய் கூட எனது பர்ஸிலிருந்து எடுத்துக் கொடுக்கவில்லை என்றாலும் தவறான ஆளாக இருந்துவிடக் கூடாது என்ற சந்தேகம்தான்.

அவர் தற்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தின் இணையதளம், அவர் முன்பாக படித்த IISC ஆகியவற்றின் தளங்களில் அவரது விவரங்களைச் சரிபார்த்துவிட்டுத்தான் அந்த வேண்டுகோளை முன் வைத்தேன். பிறகு தனது ஆராய்ச்சிக் கட்டுரைகள், காப்புரிமை பெறுவதற்காக பதிவு செய்யப்பட்டிருக்கும் தனது ஆராய்ச்சி முடிவுகள் என அனைத்தையும் அனுப்பி வைத்திருந்தார். இதைச் சந்தேகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- எனக்குத் தெரிந்து உதவி செய்பவர்கள் ஒவ்வொருவருமே மிகக் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். உதவுபவர்கள் யாருக்குமே எந்த தனிப்பட்ட எதிர்பார்ப்புமே இல்லை.

சிங்கப்பூரைச் சேர்ந்த மொய்தீன் ஒரு மாதச் செலவை- கிட்டத்தட்ட அறுபத்தைந்தாயிரம் ரூபாயை- அனுப்பி வைத்திருக்கிறார். மணிகண்டன் நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதத்துக்கு ‘உதவுவதற்கு வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி. நீங்கள் படித்து முடித்துவிட்டு வேறொரு தகுதியான மாணவருக்கு உதவுங்கள். அதுவே போதும்’ என்று பதில் எழுதுகிறார். ஒரு வினாடி கலங்கி விட்டேன்.

அமெரிக்காவில் இருந்து அழகேசன் என்றொரு நல்ல மனிதர் ஒரு மாதச் செலவை அனுப்பி வைத்திருக்கிறார். அறுபத்தைந்தாயிரம் ரூபாய்தான். அவருக்கு நன்றி தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினால் ஒற்றை வரியில் பதில் அனுப்புகிறார்  ‘Just passting the torch’ என்று. அறுபத்தைந்தாயிரம் ரூபாயை கொடுத்துவிட்டேன் என்ற துளி மிதப்பு கூட இல்லை. இவர்களை எல்லாம் கடவுள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

பணம் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காகச் சொல்லவில்லை- அந்த மனம் இருக்கிறது பாருங்கள்- கடவுள் குடியிருக்கும் கோயில் அது.

கணவர் இல்லை, உறவினர் ஒருவரின் திருமணச் செலவுகள் இருக்கின்றன, குழந்தைகளுக்கான படிப்புச் செலவுகள் இருக்கின்றன, ஒற்றைச் சம்பாத்தியம், சிரமம்தான் - ஆனாலும் ஒவ்வொரு மாதமும் நூறு யூரோவாவது அனுப்புகிறேன் என்று அம்மையார் கேட்டிருந்தார்.  ‘இதுவரை எனக்கு வேலை இல்லை. இப்போதைக்கு இருநூறு டாலர் அனுப்பி வைக்கிறேன். வேலை கிடைத்தவுடன் இன்னமும் அனுப்புகிறேன்’ என்றொருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘இப்போதைக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன். அவ்வளவுதான் சாத்தியம்’ என்று கேட்டிருந்தார்கள். இதைப் போன்றே வேறு சிலரும் சொல்லியிருந்தார்கள்.

இவர்கள் அத்தனை பேருக்கும் ‘உங்களின் அன்பு மனமே போதும். தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன்’ என்று பதில் அனுப்பி வைத்தேன். உதவுகிற மனம் இருக்கிற அத்தனை பேருக்கும் ஏதாவது சிரமங்கள் இருக்கின்றன. அத்தனையையும் தாண்டி உதவுகிறார்கள். அதனால்தான் இவர்கள் எல்லோரும் கடவுள்கள்.

ஐரோப்பாவில் படிக்கும் மாணவர் சதீஷ். அவர் மாணவர்தான். சம்பாத்தியம் எதுவும் இல்லை. அவரும் ஒரு மாதச் செலவுக்கான தொகையை மணிகண்டனுக்கு அனுப்பி வைத்துவிட்டார். ‘ஒருவருஷம் கழிச்சு திருப்பி கொடுங்கண்ணா’ என்று கேட்டிருக்கிறார்.

அழகேசன், சதீஷ் மற்றும் மொய்தீன் ஆகியோர்கள் மட்டுமே மணிகண்டனின் மூன்று மாதச் செலவை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். இவர்களைத் தவிர வெங்கடரமணி நூற்றைம்பது யூரோவும், பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு மனிதர் முந்நூறு யூரோவும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது இரண்டும் பதினைந்து நாட்களுக்கான செலவை சமாளித்துவிடும். தவிர, எங்கள் ஊர்க்காரர் ஒருவர்- இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார் ஒரு முந்நூறு யூரோ தருவதாகவும், திரு.ரங்கநாதன் அடுத்த மாதச் சம்பளம் வந்தவுடன் ஒரு மாதச் செலவை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அனுப்பி வைத்துவிடுவார்கள்.

இவை அனைத்தையும் சேர்த்தால் ஐந்து மாதங்களுக்கான உதவி கிடைத்துவிட்டது போலத்தான். கிட்டத்தட்ட மூன்று லட்சம் இந்திய ரூபாய். ‘அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் தூக்கமில்லாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். இப்பொழுது நம்பிக்கை வந்துவிட்டது’ என்றார் மணிகண்டன். இந்த நம்பிக்கையை விதைப்பது மட்டும்தான் நம்மால் முடிந்த காரியம். இனி அவர் ஜெயித்துவிடுவார்.

அள்ளிக் கொடுக்கிறார்கள்.

கடவுளே, இந்த நம்பிக்கையை மட்டும் கடைசிவரைக்கும் காப்பாற்றிக் கொள்ளும்படியாகவே எனது செயல்கள் அமையட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வேறு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. வழக்கமாக எழுத்தில் எமோஷனலைக் காட்டிவிடக் கூடாது என்றுதான் முயற்சிப்பேன். இன்று அது துளி கூட சாத்தியமில்லாமல் போய்விட்டது. உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருக்கிறது. உடைந்துவிடக் கூடிய நெகிழ்ச்சி இது. இன்று காலையில் அரை நேரம் விடுப்பு சொல்லிவிட்டு இந்தத் தகவல்களைத் தொகுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு அற்புதமான மனம் படைத்த மனிதர்கள் வாழும் உலகில்தான் நாமும் வாழ்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுவதைவிடவும் என்னால் வேறு என்ன செய்துவிட முடியும்? 

Jun 12, 2014

உனக்கு வரலாறு தெரியுமா?

பெங்களூரிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் நான்கைந்து சமணர்களையாவது பார்க்க நேரிடுகிறது. முன்பு திகம்பரர்கள் என்கிற நிர்வாண நிலையை அடைந்தவர்களும் நடந்து செல்வார்களாம். திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட கலாச்சாரக்காவலர்கள் தாக்கத் துவங்கிய பிறகு அவர்களைப் பார்க்க முடிவதில்லை. இப்பொழுது வெண்ணிற உடையில் செருப்பில்லாமல் நடந்து செல்வபவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்தான் கண்ணில் படுகிறார்கள். அதன் பிறகு எங்கே செல்கிறார்கள் என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இன்னமும் சமணம் உயிர் பிடித்திருக்கிறது. தமிழகத்தில்தான் காலியாகிவிட்டது. 

வலுவுள்ளவன்தானே எப்பொழுதும் வரலாற்றை எழுதுகிறான்?

சமணர்கள் கெட்டவர்கள், அப்பரைக் கொடுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்துமே விருமாண்டி ஸ்டைல்தான்- சிவனை பரம்பொருளாக ஏற்றுக் கொண்ட சைவர்களால் எழுதப்பட்ட குறிப்புகள். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்று தெரியவில்லை. எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்பொருமுறை எழுதியிருந்த மின்னஞ்சலிலும் இதையேதான் சொல்லியிருந்தார்- சமணர்கள் வன்முறையாளர்கள் என்பதற்கு எந்தத் தரவும் இல்லை என்று. அவர் பொ.வேல்சாமியிடமும் பேசியிருக்கிறார். வேல்சாமி அவைதீகம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர் - சமணர்கள் வன்முறையாளர்கள் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை என்றுதான் வேல்சாமியும் சொன்னாராம். பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

சமணர்களை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே திருஞானசம்பந்தர் தமிழகத்தில் வேட்டையாடத் துவங்கிவிட்டார் என்று யாராவது சொன்னால் சில இந்துக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் மதுரையில் எந்நூறு சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை.  அப்படியே இருக்கட்டும்.

உண்மையோ பொய்யோ- சம்பந்தரின் வாழ்க்கை அதிசுவாரசியங்களால் நிறைந்தது. சம்பந்தரின் இயற்பெயர் வேறு என்னவோ. அவரது அப்பா சிவபாத இருதயர்- பிராமணர் - சீர்காழி கோவில் குளத்தில் குளிக்கச் செல்லும் போது சம்பந்தரையும் அழைத்துச் சென்றாராம். சம்பந்தரை குளக்கரையில் நிறுத்திவிட்டு அவர் நீருக்குள் மூழ்கி அகமருட மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்த போது சம்பந்தர் தனது அப்பாவைக் காணவில்லை என்று கதறியிருக்கிறார். அம்மந்திரத்தை எவ்வளவு நேரம் ஓதுவார்கள் என்று தெரியவில்லை. வெகுநேரம் கழித்து வெளியில் வந்த போது சம்பந்தரின் வாயோரத்தில் பால் இருந்திருக்கிறது. ‘எச்சி பால் குடிச்சயாடா படவா?’ என்று குச்சியைக் காட்டி மிரட்டினாராம். அசையாத சம்பந்தர் கடவுளை நோக்கி கை நீட்டியிருக்கிறார். அந்த ஈசனின் மனைவியே பால் கொடுத்தாள் என்று அவரது அப்பா நம்பிக் கொண்டார். இறைவியிடமே பால் குடித்து சம்பந்தம் உருவாக்கிக் கொண்டதால் அதன் பிறகு அவரது இயற்பெயர் மறைந்து ‘ஞான சம்பந்தம்’ என்றாகிவிட்டார். இதெல்லாம் நடந்த போது ஞான சம்பந்தருக்கு வயது ஜஸ்ட் மூன்றுதான்.

அதன் பிறகு தனது அப்பாவின் தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டு ஒவ்வொரு ஊராக தல யாத்திரை செல்லத் துவங்கினார். கூடவே நான்கைந்து பேர் வருவார்கள். ‘இத்துனூண்டு பையன் எவ்வளவு அருமையாக பாடுகிறான்’ என்று கூட்டம் சேரத் துவங்கியிருக்கிறது. சம்பந்தரின் புகழ் பரவத் தொடங்கியது.

இடையில், பையன் நன்றாக பாடுகிறானே என்று கடவுளே வந்து பொன்னால் செய்யப்பட்ட பொன் தாளம் கொடுத்தாராம், ஒரு வணிகர் தன் மகள் இறந்துவிட அவளது அஸ்தியை வீட்டில் வைத்திருந்தராம். சம்பந்தர் அந்த வீட்டுக்குச் சென்று பதிகம் பாடிய போது அந்தப் பெண் உயிர் பெற்று அஸ்திச் சட்டியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் என்று சம்பந்தரின் வரலாற்றுக்குள் ஏகப்பட்ட குட்டிக் கதைகள் உண்டு. இதையெல்லாம் நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்- நான் நம்பவில்லை.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகரால் தமிழுக்கு தேவாரம் கிடைத்தது; அற்புதமான திருவாசகம் கிடைத்தது என்பதெல்லாம் சரிதான். ஆனால் இடையிடையே புகுத்தப்பட்ட இந்தப் புனைவுகள் எல்லாம் டூ மச். சம்பந்தர் சட்டிக்குள் சாம்பலாக இருந்த பெண்ணை உயிர்ப்பித்தார் என்றால், சுந்தரர் அவிநாசியில் முதலை விழுங்கிவிட்ட ஒரு குழந்தையை தனது வழிபாட்டால் மீட்டுக் கொடுத்தாராம். மதத்தை பரப்புவதற்காக செய்யும் அற்புத சுவிஷேசங்களுக்கு எந்தவிதத்திலும் சளைக்காத புனைவுகள்தான் இவை. 

இந்த புனைவுகள் சம்பந்தர் காலத்திலேயே நல்ல பலன்களைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அவரது காலத்திலேயே (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) சைவம் தழைக்கத் தொடங்கிவிட்டது. ஊர் ஊராகச் சென்று மக்களை மாற்றினார் பிறகு பாண்டிய மன்னனையும் சைவத்திற்கு மாற்றினார். 

பாண்டியன் சைவத்திற்கு மாறிய கதைதான் இன்னமும் சுவாரசியம். அதுவரை பாண்டியன் சமணத்தை தழுவியவனாக இருந்திருக்கிறான். பாண்டியன் வேறு யாரும் இல்லை- த பாப்புலர் கூன் பாண்டியன் தான். அவனது அரசியும் அமைச்சரும் சைவப் பிரியர்கள். அரசி சம்பந்தருக்கு தூது அனுப்பியிருக்கிறாள். ‘இங்க சமணம் கெட்ட ஆட்டம் போடுது...நீங்க வந்தால்தான் கொட்டத்தை அடக்க முடியும்’ என்று. 

விடுவாரா சம்பந்தர்? வீறு கொண்டு கிளம்பினார். 

சம்பந்தர் மதுரையை அடைந்து ஒரு மடத்தில் தங்கியிருந்த போது சமணர்கள் அந்த மடத்திற்கு தீ வைத்துவிட்டார்கள். இந்த தீ வைப்பு சம்பவத்தில் பாண்டியனுக்கும் உடந்தை உண்டு. இது சம்பந்தருக்கு புரிந்துவிட்டது.  ‘எனக்கா தீயை வைக்குறீங்க இருங்க’ என்று ஒரு பாடலை பாடிவிட்டார். சாபம்தான். பாண்டியனின் உடல் முழுவதும் கோடைக் கொப்புளம் மாதிரி ஏதோ ஒரு வெப்ப நோய் வந்துவிட்டது. நோயில் திணறிக் கொண்டிருக்கும் பாண்டியனின் உடலை சமணரும், சம்பந்தரும் பங்கு பிரித்துக் கொண்டார்கள்.  ‘இந்தப் பார்ட் எனக்கு. அந்தப் பார்ட் உனக்கு’ என்று. 

ஞானசம்பந்தர்தான் தியாகராஜ பாகவதருக்கு முன்னோடி ஆயிற்றே. இந்த ஸீனில் ஒரு பாடல் வருகிறது. பாடலின் வீரியத்தால் சம்பந்தர் பிரித்துக் கொண்ட உடற்பகுதியில் இருந்த வெப்பு நோய் குணமடைந்துவிட்டது. ஆனால் சமணர்களின் பார்ட் அப்படியே இருந்திருக்கிறது. கூன் பாண்டியன் சம்பந்தர் பக்கமாக சாய்ந்துவிட்டான். ‘யப்பா சாமி நீயே சரி செய்துவிடு’ என்று சரணடைந்துவிட மிச்ச மீதி கொப்புளத்தையும் சம்பந்தர் நீக்கிவிட்டிருக்கிறார்.

அதன்பிறகுதான் கழுவிலேற்றும் படலம். 

‘சைவம் பற்றி நீ எழுது; சமணம் பற்றி நாங்கள் எழுதுகிறோம்’ அந்த ஏட்டை தீயில் வீசுவோம். எது எரியாமல் தப்பிக்கிறது என பார்க்கலாம் என்றார்களாம். என்ன நடந்திருக்கும் என்று யூகித்துவிடலாம். யெஸ். சமணர்கள் தோற்றுப் போனார்கள்.

‘சரி முதல் முறை நீ ஜெயிச்சுட்ட...இந்த முறை நெருப்புக்கு பதிலாக ஏடுகளை ஆற்று நீரில் விடலாம்..எது தப்பிக்கிறதோ அவர்கள் வென்றார்கள்’ என்றார்களாம். 

அரசிக்கு டென்ஷன் ஆகிவிட்டது. ‘இப்படியே போட்டிக்கு மேல போட்டி நடத்துனா எப்படி தம்பீகளா? இதுதான் கடைசிப் போட்டி. தோத்தாங்காளிக்கு பயங்கரமான தண்டனை’ என்று அறிவித்துவிட்டாள். ஆற்று நீர் போட்டியிலும் எதிர்பார்த்தபடியேதான் முடிவு அமைந்தது. சமணர்களின் ஏடு எங்கேயோ போய்விட்டது. சம்பந்தரின் ஏடு கரையேறிவிட்டது.

இதன் பிறகுதான் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்கள். 

குழந்தையாக இருந்த போது தனக்கு இறைவி பால் கொடுத்தது, அப்பா தோளில் அமர்ந்து திருத்தலங்களுக்குச் சென்றது என அனைத்தையும் துல்லியமாக பதிவு செய்த சம்பந்தர் இந்த நிகழ்வை மட்டும் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதை வைத்துத்தான் கழுவேற்றம் நடக்கவே இல்லை என்று சைவ ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். ஆனால் சம்பந்தர் வழியில் பின்னால் வந்த நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ஒட்டக்கூத்தர் எல்லாம் கழுவிலேற்றிய நிகழ்வு நடந்ததாகவே எழுதி வைத்திருக்கிறார்கள்.

கழுவில் ஏற்றியது பொய்யாகவே இருக்கட்டும் ஆனால் தமிழகத்தில் சமணர்களை ஒடுக்கத் துவங்கியது சம்பந்தரின் காலத்தில்தான்.

சம்பந்தர் இறந்ததும் கூட சுவாரசியமான புனைவுதான். சம்பந்தருக்கு திருமண பந்தத்தில் பெரிய ஈர்ப்பு இல்லை. ஆனால் பெரியவர்கள் நிர்பந்திக்கிறார்களே என்று சம்மதித்துவிட்டார். திருமண நாளும் வந்தது. மணப்பெண்ணை கையில் பிடித்துக் கொண்டே ‘எனக்கு கல்யாணம் வேண்டாம் எனக்கு கல்யாணம் என வேண்டாம்’ என பாடியிருக்கிறார். ஒரு ரொமாண்டிக் பாடல் வர வேண்டிய இடத்தில் தத்துவப்பாடல். கடவுளுக்கே பொறுக்கவில்லை போலிருக்கிறது- திடீரென்று கோவிலில் தீ எரிந்திருக்கிறது. அதே சமயம் மேலிருந்து ஒரு குரல் கேட்டிருக்கிறது. ‘ சம்பந்தரே! நீங்க, உங்க வீட்டுக்காரம்மா மற்றும் இங்க இருக்கிறவங்க அத்தனை பேரும் ஜோதியில் கலந்து என்னிடம் வாருங்கள்’ என்று அந்தக் குரல் உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் குரல் சாட்சாத் சிவபெருமானுடையதுதான். மொத்தமாக அத்தனை பேரும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார்கள். சம்பந்தர் இறக்கும் போது அவருக்கு வயது வெறும் பதினாறுதான். பதினாறு வயதிலேயே செம கலக்கு கலக்கிவிட்டார். எழுபது அல்லது எண்பது வருடங்கள் வாழ்ந்திருந்தால் மொத்த வரலாற்றையும் புரட்டிப் போட்டிருப்பார்.

சம்பந்தர் இறந்துவிட்டார். அடுத்து என்ன செய்வது? திருமணத்தின் போது தீ விபத்து நடந்து சம்பந்தர் இறந்துவிட்டார் என்று எழுதி வைத்தால் பின்னால் வரும் சந்ததியினர் எப்படி அவரை முருகனின் அவதாரம் என்று சொல்வார்கள்? பார்த்தார்கள்- பதினாறு வயதிலேயே சம்பந்தர் சிவ பெருமானின் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார் என்று எழுதி வைத்துவிட்டார்கள். சம்பந்தர் தனது பாடல்களை எல்லாம் தாண்டி அவதாரம் ஆகிவிட்டார். 

இதை நாம் சொன்னால் அடிக்க வருவார்கள்.

வல்லோன் வகுத்ததே வாய்க்கால் மட்டும் இல்லை வல்லோன் வகுத்ததுதான் வரலாறும்.

Jun 11, 2014

யார் பொறுப்பு?

இறந்து போன மாணவர்களின் பேஸ்புக் பக்கத்தை ஒவ்வொன்றாக நேற்றிரவு பார்த்துக் கொண்டிருந்தேன். யாரென்றே தெரியாத மாணவர்கள்தான்- ஆனால் மொத்தமாக இறந்து போயிருக்கிறார்கள். தெலுங்கானாவிலிருந்து ஹிமாச்சல் பிரதேசம் சென்றிருக்கிறார்கள். பியாஸ் நதியில் நின்று படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது இருபத்தி நான்கு மாணவர்களை நீர் அடித்துச் சென்றுவிட்டது. வெறும் ஒன்றரை நிமிடங்கள்தான். மொத்தக் காரியமும் முடிந்துவிட்டது. இன்னமும் உடல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை உடல்களும் கிடைக்கும் என்று சொல்லமுடியாதாம். நீரின் அந்த வேகத்தில் சிதறாமல் இருந்தாலே பெரிய விஷயம்தான். அத்தனை வேகம் அந்த நீருக்கு.

இந்தத் தெலுங்கானா மாணவர்கள் Industrial Visit சென்றிருக்கிறார்கள். மணாலியில் எந்த நிறுவனம் இருக்கிறது என்று பார்க்கச் சென்றார்களோ தெரியவில்லை. இப்பொழுதுதான் ஜூன் மாதம். கல்லூரி திறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அவசர அவசரமாக ஏற்பாடுகளைச் செய்து பயணப்பட்டிருக்கிறார்கள். அவசரமாக வாழ்க்கையையும் முடித்துக் கொண்டார்கள். 

தமிழகக் கல்லூரிகளிலும் இத்தகைய பயணங்கள் உண்டு. சம்பந்தமே இல்லாமல் IV என்று பெயர் வைத்திருக்கிறார்கள். போகிற ஊரில் ஒரேயொரு நிறுவனத்திற்குள் புகுந்து ஒன்றரை மணி நேரம் பார்த்துவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஊட்டி, காஷ்மீர், மணாலி போன்ற சினிமா படப்பிடிப்பு நடக்கும் ஊர்களாகச் செல்வார்கள். கூத்தடிப்பதற்கு பொறியியல் கல்லூரியின் அகராதியில் Industrial Visit என்று பெயர்.

கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது பெங்களூர், மங்களூர், மைசூர், ஊட்டி என்று பல ஊர்ச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்கு முந்தைய வருடம் ஹைதராபாத். வெகுதூரப் பயணம் என்பதால் எப்படியும் கையில் பணம் இருக்கும். இளரத்தம் வேறு. சுற்றிலும் நண்பர்கள். இந்தப் பயணத்தில்தான் முதன் முறையாக புகையை இழுத்துப் பார்த்தேன். குடித்தும் பார்த்தேன். குடித்துவிட்டு ‘எனக்கு போதையே ஏறவில்லை’ என்று பிதற்றிக் கொண்டிருந்தது இன்னமும் ஞாபகமிருக்கிறது. ‘எல்லோரும் இப்படித்தாண்டா சொல்வாங்க’ என்று மற்றவர்கள் கலாய்த்ததும் ஞாபகம் இருக்கிறது. அதன்பிறகு கால்கள் நடுங்குகின்றன. நிற்க முடியவில்லை. எங்கே விழுந்தேன் என்று தெரியவில்லை. இழுத்து வந்து அறையில் வீசியிருந்தார்கள். விடிந்து எழுந்தால் சட்டை முழுவதும் வாந்தி நாற்றம். தண்ணீரில் கழுவித்தான் படுக்க வைத்தார்களாம். ஆனால் எதுவும் ஞாபகத்தில் இல்லை.

இன்னொரு மாணவன் தங்கியிருந்த விடுதியின் வாஷ்பேசினில் புல்-அப் எடுத்திருக்கிறான். உடைந்து விழுந்ததில் கை கால்கள் எல்லாம் கீறல்கள். முகம் மொத்தமும் கிழிந்துவிட்டது. தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். ரத்தம் தேவைப்படுகிறது. அந்த ரத்த வகைக்காரர்கள் அத்தனை பேரும் முந்தின நாள் இரவில் குடித்திருந்தார்கள். ‘நிர்வாகத்திடம் சொல்லிவிடாதீர்கள்’ என்று கெஞ்சியபடி உடன் வந்திருந்த ஆசிரியர்கள் பதறிக் கொண்டிருந்தார்கள்.

எலெக்ட்ரிக்கல் படிக்கும் மாணவர்கள் மின்னியல் நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்கவும், கம்யூனிகேஷன் மாணவர்கள் தொடர்பியல் நிறுவனங்கள் எப்படி இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளவும் இத்தகைய பயணங்கள் பாடத் திட்டத்திலேயே இணைந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுதெல்லாம் கற்றல் பற்றியெல்லாம் யாரும் கவலைப் படுவதாக இல்லை. நல்ல ஊராகத் தேர்ந்தெடுத்து கல்லூரியில் அனுமதி கேட்கிறார்கள். கல்லூரி நிர்வாகமும் அனுமதி கொடுத்துவிடுகிறது. கும்மாளமடித்துவிட்டுத் திரும்புகிறார்கள். 

ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்திடம் அனுமதி கேட்டிருந்தோம். அவர்கள் கடைசி நேரம் வரைக்கும் தரவில்லை. நிறுவனத்திடமிருந்து அனுமதி வரவில்லையென்றால் கல்லூரி நிர்வாகமும் கல்விச்சுற்றுலாவுக்கு அனுமதி தராது என்று அறிவித்துவிட்டார்கள். வேறு வழியில்லை. நண்பன் ஒருவனின் மாமா ஹைதராபாத்தில் பணியிலிருந்தார். அவரை ஃபேக்ஸ் அனுப்பச் சொல்லிவிட்டோம். அவரும் அனுப்பிவிட்டார். அதையே நிறுவனத்தின் அனுமதியாகக் காட்டி கல்லூரியை ஏமாற்றிவிட்டோம். அவ்வளவுதான் IV.

கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுலா அவசியமில்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஆந்திராவிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசம் வரைக்கும் செல்ல வேண்டியதன் அவசியம் என்ன என்று யோசிக்கலாம் அல்லவா? சுற்றுலா நிறுவனத்திற்கு கொடுத்த பதினைந்தாயிரம் போக போக தனிப்பட்ட செலவுகள் ஒவ்வொருவருக்கும் ஐந்து அல்லது பத்தாயிரம் வரைக்கும் தேவைப்பட்டிருக்கும். இரண்டாம் ஆண்டு துவக்கத்திலேயே எதற்காக இவ்வளவு பெரிய சுற்றுலாவுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி தந்திருக்கிறது? எல்லாம் நல்லபடியாக நடந்துவிட்டால் நல்லது. இப்படி விபரீதங்கள் நிகழும் போது யாருக்கு பாதிப்பு? யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்? அப்படியே பொறுப்பேற்றாலும் இழப்பு பெற்றவர்களுக்கு மட்டும்தானே?

முன்னறிவிப்பின்றி அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டார்கள்; அணை அதிகாரிகள் அங்கே எந்த முன்னெச்சரிக்கைப் பலகையும் வைத்திருக்கவில்லை என்பதெல்லாம் இரண்டாம்பட்ச குற்றச்சாட்டுகள். எந்த அடிப்படையில் இந்தச் சுற்றுலாவுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுத்தது என்பதை முதலில் தெளிவு படுத்தச் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். கல்வித் துறையிலிருந்து காவல்துறை வரைக்கும் இப்பொழுதே சில பல கோடிகளை அள்ளி வீசியிருப்பார்கள். மிச்சமிருக்கும் உடல்களைக் கைப்பற்றுகிற வரைக்கும் ஊடகங்கள் இந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருப்பார்கள். அதன் பிறகு அவர்களும் மறந்துவிடுவார்கள். இருபத்து நான்கு மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும்தான் காலகாலத்துக்கும் அழுது கொண்டிருப்பார்கள்.

அந்த மாணவர்களை வெள்ளம் அடித்துச் செல்லும் வீடியோவும் இணையத்தில் காணக் கிடைக்கிறது. கொடூரமான வீடியோ அது. மாணவர்கள் பாறை மீது நின்று கொண்டிருக்கிறார்கள். நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கிறது. எந்தச் சிரமமும் இல்லாமல் பூக்களை அடித்துச் செல்வது போல நீர் இழுத்துச் செல்கிறது. தப்பித்துக் கரையேறியவர்கள் நண்பர்களைக் காப்பாற்ற நீரின் போக்கோடு வெகுதூரம் ஓடுகிறார்கள். களைத்துப் போய் ஓரிடத்தில் நிற்கிறார்கள். அத்தனையும் கை மீறிப் போயிருக்கிறது. வீடியோ முடிகிறது.

‘தப்பித்துவிட வேண்டும்’ என்பதைத் தவிர இழுத்துச் செல்லப்படுபவர்களின் மனது வேறு எதையாவது யோசித்திருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் தப்பித்தவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? சில வினாடிகளுக்கு முன்பாக கரையேறியதால் தப்பித்துவிட்டார்கள். அதற்காகச் சந்தோஷப்பட்டிருப்பார்களா அல்லது கண்களுக்கு முன்பாக இருபத்தி நான்கு பேரை நீர் இழுத்துச் செல்வதைப் பார்த்து கதறியிருப்பார்களா? 

மரணம் எப்பொழுதுமே உடனடியாக அழுகையைத் தந்துவிடுவதில்லை. மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஏதோவொரு குழப்பம் சூழ்ந்துவிடுகிறது. அவராகத்தான் இருக்குமா? எதனால் இறந்தார் போன்ற குழப்பங்கள்தான் முதலில் உருவாகின்றன. உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை ‘மரணமடைந்தவர் எழுந்துவிடமாட்டாரா?’ என்று அவ்வப்போது யோசிக்கிறோம். எதுவும் சாத்தியமில்லை என்றான பிறகுதான் இழப்பின் பாரம் அழுத்தத் துவங்குகிறது. 

ஆனால் நமக்கு நெருங்கிய உறவாக இல்லாதவரைக்கும் ஒவ்வொரு மரணச் செய்தியும் வெறும் செய்திதான் - அது எவ்வளவு கோரமான மரணமாக இருந்தாலும். நமக்கு சம்பந்தமில்லாதவரைக்கும் மரணத்தைக் காட்டும் ஒவ்வொரு வீடியோவும்- அது சுனாமியாக இருந்தாலும், விபத்தாக இருந்தாலும், வெள்ளமாக இருந்தாலும்- வெறும் வீடியோதான். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ‘த்ரில்’ தரக் கூடிய வீடியோ. அவ்வளவுதான். ஃபேஸ்புக்கை மூடிவிட்டு நள்ளிரவு வரைக்கும் சினிமா விமர்சனங்களை படித்துக் கொண்டிருந்தேன். இறுகிக் கிடக்கிறது இதயமும் மனமும்.

Jun 10, 2014

நீ அவராக முயற்சிக்கிறாயா?

இன்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நண்பர் என்று எப்படிச் சொல்வது? போலியாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி அது. யாரென்றே தெரியவில்லை. தனது மனதில் இருக்கும் அத்தனை வன்மங்களையும் கொட்டி மின்னஞ்சல் எழுதப்பட்டிருந்தது. வரிக்கு வரி அத்தனை ஆபாசம், அத்தனை வஞ்சகம். இத்தகைய மின்னஞ்சல்களை பெரும்பாலும் நிராகரித்துவிடுவேன். இன்று ராசிபலன் சரியில்லை. முழுமையாக் வாசித்துத் தொலைந்துவிட்டேன். நாள் முழுவதுக்குமான கசப்பினை அந்த மின்னஞ்சல் சுமந்து வந்திருந்தது.

இது போன்ற வசைகளை எதிர்கொள்வதற்குத்தான் புத்தனாகவும் காந்தியுமாக இருக்க வேண்டும். மறந்துவிட்டு அல்லது ஒதுக்கிவிட்டு போயிருக்கலாம். ஆனால் ஆசாபாசங்களுடன் கூடிய சாமானியர்களை அசைத்துப் பார்த்துவிடுகிறது.

எதனால் இப்படி பொங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. ‘நீ அவராக முயற்சிக்கிறாயா?’ என்றெல்லாம் கேட்டிருந்தார். அவர் என்ற இடத்தில் யாரைக் குறிப்பிட்டிருப்பார் என்று யூகித்துக் கொள்ளுங்கள். இந்தக் கேள்விகளை எதிர்கொள்வதெல்லாம் பிரச்சினையில்லை. சமாளித்துவிடலாம்தான்.

இங்கு யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். எழுத்தில் மட்டும் இல்லை- எந்தத் துறையிலுமேதான். எம்.ஜி.ஆர் இடத்தை ரஜினியும் ரஜினி இடத்தை விஜய்யும் என்னதான் தலைகீழாக நின்றாலும் பிடிக்க முடியாது. இந்திராவின் இடத்தை ராஜீவ் காந்தியோ, ராஜீவின் இடத்தை ராகுலும் என்னதான் கனவு கண்டாலும் தொட முடியாது. மூக்கால் தண்ணீர் குடித்தாலும் திருபாய் அம்பானியின் இடத்தை அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் அடைய முடியுமா என்ன? ஒருவேளை தாண்டிப் போகலாம். ஆனால் ஒருவர் உருவாக்கி வைத்த இடத்தை எந்தக் காலத்திலும் இன்னொரு மனிதனால் அடைய முடியாது. அதுதான் நிதர்சனம்.

அவரவர் திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்ப ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்கிறோம். அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதும், கோட்டைவிடுவதும் அவரவர் செயல்பாட்டைப் பொறுத்தது. எழுத்துத்துறையைப் பொறுத்தவரைக்கும் அடுத்தவர்களால் தூக்கிப் பிடிக்கவும் முடியாது; கீழே போட்டு தேய்க்கவும் முடியாது. இதைப் புரிந்து கொண்டால் பிரச்சினையே இல்லை. புரிந்து கொள்ளாததால்தான் இத்தனை வயிற்றெரிச்சலும், பொறாமையும், புறம் பேசுதலும், குழுவாதமும்.

சரி விடுங்கள்.

பெங்களூர் சாகித்ய அகாடெமிக்காரர்கள் இன்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவர்களிடம் நிறைய காசு இருக்கும் போலிருக்கிறது. அவ்வப்போது லட்சக்கணக்கில் செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இன்று தென்னக மொழிகளில் சிறுகதைகளின் போக்கு பற்றிய கருத்தரங்கு. இந்த முறை அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள். சாகித்ய அகாடமியில் இருந்து அழைப்பிதழ் வந்திருக்கிறது என்று வீட்டில் பந்தா காட்டிக் கொண்டேன். அழைப்பிதழைப் பார்த்தவுடனேயே கருத்தரங்குக்கு செல்வது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன். செவ்வாய்க்கிழமை- கட் அடித்துவிடலாம். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சிறுகதைகளை வாசித்து அந்தந்த மொழிகளில் சிறுகதைப் போக்கு பற்றிய கட்டுரைகளையும் வாசித்தார்கள். உருப்படியான நிகழ்வு. தமிழில் அழகிய பெரியவன் சிறுகதை வாசித்தார். 

மதிய உணவை முடித்துவிட்டு அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டேன். அரங்கில் இருபது பேர்கள் இருந்தார்கள். எல்லோரும் மூத்த குடிமக்கள். அவ்வப்போது இத்தகைய நிகழ்வுகளுக்குச் சென்று வந்தால்தான் உள்ளூருக்குள் என்ன நடக்கிறது என்று தெரியும். இனிமேல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் இலக்கியக் கூட்டம் நடத்தவிருக்கிறார்கள். இந்த மாதம் 22 ஆம் தேதி முதல் கூட்டம். தென்னகக் கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழவிருக்கிறது. தமிழில் இருந்து எந்தக் கவிஞரை அழைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் முதல் வரிசையில் கர்ச்சீப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். 

நிகழ்ச்சி முடிந்த பிறகு அழகிய பெரியவனோடு அதிகம் பேச முடியவில்லை. ஒண்ணேகால் நிமிடம் பேசிவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

என்னதான் நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அந்தக் கடிதம்தான் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தது. அடுத்தவர்களுக்கு உதவி வாங்கித் தருவதற்கு உனக்கு எவ்வளவு கமிஷன் என்று கேட்டிருந்தார். அந்தக் கேள்விதான் இப்பொழுது வரைக்கும் சங்கடமாக இருக்கிறது.

ஆண்டவன் புண்ணியத்தில் அடுத்தவர்களின் காசை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை இன்று வரைக்கும் இல்லை. பத்தாயிரம், இருபதாயிரத்துக்கெல்லாம் சுயத்தை இழக்கும் அற்பமாக நான் இல்லை. எளிய மனிதர்களுக்குச் செல்லும் இந்த உதவிகளில் ஒரு ரூபாய்க்கு உரிமை கோரினாலும் கூட அதன் பாவம் என் மகனுக்கும் தொடரும் என்பதை மனப்பூர்வமாக நம்புகிறேன். 

வெறும் எழுத்தோடு நின்றுவிடாமல் தகுதியானவர்களின் பாதையில் கிடக்கும் முட்களை பொறுக்கி வீசும் சாதாரண வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். அது பொறுக்கவில்லை இவர்களுக்கு. இவற்றையெல்லாம் மனசாட்சிக்குத் துளி பங்கமில்லாமல் செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அப்படியிருந்தும் அடிக்கிறார்கள். இந்தக் மாதிரியான கேள்வியெல்லாம் வரக் கூடாது என்பதற்காகத்தான் உதவி தேவைப்படுபவர்களின் கணக்குக்கு நேரடியாக பணத்தை அனுப்பி வைத்துவிடச் சொல்கிறேன். 

இவர்களைப் போன்றவர்களுக்கு இதையெல்லாம் எப்படி நிரூபிப்பது? வாய்ப்பே இல்லை. இது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயம்.  எளிமையான நம்பிக்கை இது. நம்புகிறவர்கள் உதவுகிறார்கள். நம்பாதவர்களிடம் என்ன பதிலைச் சொல்வது? கேள்வி கேட்டால் பதிலைச் சொல்லலாம். ஆனால் கைகளில் கூரிய ஊசியை வைத்துக் கொண்டு சுற்றினால்? வாய்ப்பு கிடைக்கும் போது கருவிழியில் செருகி எடுத்து ரத்தத்தை ருசி பார்க்கிறார்கள். இன்று என்னுடைய ரத்தத்தை ருசி பார்த்திருக்கிறார். அவ்வளவுதான்.