May 9, 2014

காஜல் அகர்வாலுக்கு குடைக் காது.

காஜல் அகர்வாலுக்கு குடைக் காது. இப்படியெல்லாம் யாராவது பேசத் தொடங்கினால் எரிச்சல் வருமா வராதா? எனக்கு வரும். கல்யாணத்திற்கு முன்பிருந்தே அந்த அம்மிணிக்கு ரசிகனாக இருக்கிறேன். நான் மட்டுமில்லை இந்த நாடே அப்படித்தான் போலிருக்கிறது. ஃபேஸ்புக்கில் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் மோடியை லைக் செய்திருக்கிறார்கள். காஜலுக்கு ஒரு கோடி. அடுத்தவருடத்தில் மோடியின் தாடியை எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்று தனிச்செய்தி அனுப்பியிருக்கிறேன். பதிலைக் காணவில்லை.

காஜல் இருக்கட்டும். 

தெலுங்குப் பையன் ஒருவன்தான் காது விவகாரத்தை ஆரம்பித்தான். அனில் குரப்பாட்டி. அதுதான் அவன் பெயர். சரியான குசல மன்னன். ஆனால் பல விவகாரங்களில் அவன் கில்லாடி- என்னென்ன விவகாரங்கள் என்று கேட்டுவிட வேண்டாம்- கில்லாடி என்பதால் அவன் என்னதான் எரிச்சலூட்டினாலும் பகைத்துக் கொள்வதில்லை. காரியம் ஆக வேண்டுமென்றால் ஒருவன் என்னதான் அக்கப்போர் செய்தாலும் அவனிடம் குழைந்து போவதும், பிரையோஜனமில்லாதவனை தள்ளி வைப்பதும் மனிதப் பண்புதானே? அனிலிடம் குழைந்து விடுவேன். அனுஷ்காவுக்கு நாக சைதன்யாவுடன் காதலா அல்லது அவனது அப்பா நாகர்ஜூனுடன் காதலா என்பதிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தில் ரோஜா மயக்கம் போட்டு கீழே விழுந்தது வரைக்கும் சகலத்தையும் அவ்வப்போது அளப்பான். கேட்டு முடித்து யோசித்துப் பார்த்தால் பைசா பெறாத செய்தியாகத்தான் இருக்கும். ஆனால் வெகு சுவாரசியமாகச் சொல்வான். அதற்காகவே கேட்கலாம். 

அவனிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட முக்கியமான அம்சம் இருக்கிறது- தொட்டதையெல்லாம் சுவாரசியமாக்கிவிடுவான். அதையாவது கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவன் வெற்றியடைவதற்கு திறமை, அதிர்ஷ்டம், நேரங்காலம் என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட ‘சுவாரசியமாக்குதல்’தான் மிக அவசியம் என்று நினைக்கிறேன். எந்த ஒரு விஷயத்திலும் சுவாரசியத்தைச் சேர்க்க முடிந்தால் பிறரைத் திரும்பிப் பார்க்க வைத்துவிடலாம். இந்தக் காலத்தில் திரும்பிப் பார்க்க வைப்பதுதான் சவாலே. மற்றவையெல்லாம் இரண்டாம்பட்சம்தான். இங்கு யாரிடம் திறமையில்லை? எல்லோரிடமும்தான் இருக்கிறது. ‘வாய்ப்பு கிடைத்திருந்தால் அப்படி ஆகியிருப்பேன்’என்று சொல்வதற்கு ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கும். ஆனால் வெகு சிலரால் மட்டும்தான் ‘அப்படி’ ஆக முடிகிறது. இங்கு ஒவ்வொருவருமே ஏதோவொருவிதத்தில் தனித்துவமானவர்கள்தான். ஆனால் வெறும் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு மாரடிக்கிறோம். அதுதான் பிரச்சினை. 

இங்கு கவன ஈர்ப்பு மிக அவசியம். என்ன செய்வது? வீட்டை விட்டு வெளியே இறங்கினால் நாம் தட்ட விரும்பும் கதவை ஆயிரம் பேர்களாவது தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னுமொரு பத்தாயிரம் பேர்களாவது தட்டுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தட்டிக் கொண்டிருக்கும் ஆயிரம் பேர்களில் ஏழுநூறு பேராவது கதவு திறக்கவில்லை என சலித்து வேறு பாதைக்குச் சென்றுவிடுகிறார்கள். மிச்சமிருக்கும் முந்நூறு பேர்களிலும் தலையைத் தூக்கி காட்டுபவன் தான் உள்ளே போகிறான். அவன் தான் ஜெயிக்கிறான்.

நான்கு பேர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த பேச்சை சுவாரசியமாக்கத் தெரிந்தவன் மற்றவர்களின் கவனத்தை வென்றுவிடுகிறான். பத்து பேர் ஆடிக் கொண்டிருக்கும் க்ரூப் டான்ஸில் யாரோ ஒருவன்தான் நம் கவனத்தை அவனை நோக்கித் திருப்புகிறான். நூற்றுக்கணக்கான காம்பியர்களில் இமான் அண்ணாச்சிதான் ஜெயிக்கிறார். அவருக்கு மட்டும்தான் வட்டார வழக்கு பேசத் தெரியுமா என்ன? எத்தனையோ சின்னத்திரை நட்சத்திரங்களில் சிவகார்த்திகேயன் மட்டும்தான் ஸ்டார் ஆகிறார். நூற்றுக்கணக்கான செய்தி வாசிப்பாளர்களில் ஒன்றிரண்டு பேர்களைத்தான் கவனிக்கிறோம். எத்தனையோ பாடகர்களுக்குள் கானா பாலாதான் தனித்துத் தெரிகிறார். ஜெயிப்பவர்கள் ஏதோ ஒரு மந்திரம் வைத்திருக்கிறார்கள் அல்லவா? 

சுவாரசியம். 

இந்த மந்திரத்தை நம் ஒவ்வொரு வேலையிலும் காட்டிவிட முடியும். பேசுவது, பழகுவது என எல்லாவற்றிலும் சுவாரசியத்தைக் கூட்டினால் வெற்றியைத் துளித் துளியாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். கூட்டத்தில் என்றில்லை- நம் அன்றாட காரியங்கள் ஒவ்வொன்றிலும் சுவாரசியம் இருக்கும் வரைதான் சலிப்பு வருவதில்லை. சைட் அடிப்பதிலிருந்து, டிவி பார்ப்பது, விளையாடுவது, வாசிப்பது என்று எல்லாமும் ஏதோ ஒருவிதத்தில் சுவாரசியமூட்டும் செய்கைதானே? 

தவளை நாற்பதாண்டுகள் உயிர் வாழும், பெங்களூரில் ஒரு மனிதனுக்கு சராசரியாக 0.1 மரம்தான் இருக்கிறது என்று எதைப் புதிதாகத் தெரிந்து கொண்டாலும் துளி சுவாரஸியத்தை மனதுக்குள் சேர்த்துக் கொள்கிறோம். மாதக் கணக்கில் காய்ச்சிக் கொண்டிருந்த வெயிலில் சிறு மழை சுவாரசியத்தைக் கூட்டிவிட்டுப் போகிறது. நகரத்தின் ஆயிரக்கணக்கான முகங்களில் ஒரு குழந்தையின் முகம் நம்மை சிரிக்க வைத்துவிட்டுப் போகிறது. தினமும் கேட்கும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளில் ஏதோ ஒரு வார்த்தை மட்டும் நமக்கான சுவாரசியத்தைச் சுமந்து கொண்டிருக்கிறது. 

அனில், நாளை அமெரிக்கா செல்கிறான். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கிவிட்டான். கொல்ட்டிஸ் இதில் கெட்டிக்காரர்கள். இனி அங்கேயே செட்டில் ஆகிவிடுவான். இந்தக் கொண்டாட்டத்திற்காக மதியம் ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்றிருந்தான். பேச்சுவாக்கில் ‘நீ எதையும் சுவாரசியமாக்கிவிடுகிறாய்’ என்றேன். அப்படிச் சொன்னதற்குத்தான் காஜல் அகர்வாலின் குடைக்காது விவகாரத்தைத் தொடங்கினான். துளி போதையில் இருந்தான். போதையில் அவனுக்கு அநேகமாக அதுதான் ஞாபகம் வந்திருக்கக் கூடும்.

‘சுவாரசியமாக்குதல் ஈஸி பாஸ். கொஞ்சம் ப்ராக்டீஸ் செஞ்சா பழகிடலாம்’ 

‘ம்ம்’ கொட்டினேன்.

‘ஆனால் அதைவிட ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. நம்ம வீக்னெஸ் அடுத்தவனுக்குத் தெரியக் கூடாது’ ஒரு ஸிப் உறிஞ்சிக் கொண்டான்.

‘நம்முடைய வீக்னெஸை எதிராளி தெரிந்து கொண்டால் நாம் பாதி தோற்றுவிட்டோம் என்று அர்த்தம்’ என்றான். இதில் யோசிக்க நிறைய இருக்கிறது. எதிராளி என்று இல்லை- நம் வீக்னெஸ் தெரிந்துவிட்டால் நம் ஆட்களே கூட நம்மை மதிக்கமாட்டார்கள். ஆனால் இதற்கும் காஜலுக்கும் என்ன சம்பந்தம்?

‘காஜலுக்கு காது மடலின் மேற்புறம் சற்று விரிவடைந்து இருக்கும். முகத்தின் மொத்த லட்சணத்தையும் அதுதான் கெடுத்துக் கொண்டிருக்கும். ஆனால் இதையெல்லாம் அவரது பழைய நிழற்படங்களில்தான் பார்க்க முடியும். இப்பொழுது விவரமாகிவிட்டார். முடியை நேக்காக கீழே இழுத்து காதை மறைத்துக் கொள்கிறார். குறைந்தபட்சம் காதின் மேற்புறத்தையாவது மறைத்திருப்பார். கவனித்துப் பாருங்கள். அதை மறைச்ச பினனாடிதான் காஜலுக்கு அழகே அதிகமாகியிருக்கு’ என்றான்.  

புல்லரித்துவிட்டது. அவன் சொன்ன மேனேஜ்மெண்ட் கான்செப்டுக்காக இல்லை- எப்படி விளக்குகிறான் பாருங்கள். நானும்தான் காஜல் அகர்வாலின் ரசிகன் என்று நான்கைந்து வருடங்களாகச் சொல்லிக் கொண்டு திரிகிறேன். என்ன பிரயோஜனம்? 

கிளம்பும் போது அவனுக்கு போதை உச்சிக்கு ஏறியிருந்தது. ‘வீக்னெஸ்ஸை மறைங்க பாஸ்’ என்றான். அவன் சொன்னதில் ஏதாவது உள்குத்து இருக்குமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

11 எதிர் சப்தங்கள்:

Aravind said...

நல்ல சுவார்ஸ்யம் கொரயமா எழுதுரிங்கா
தினம் உங்க பக்கத்துக்கு வந்து பார்க்க வைக்கறீங்க நீக காஜல் அகர்வால விட விவரம் பாஸ்!

Shankari said...

ஒருவன் வெற்றியடைவதற்கு திறமை, அதிர்ஷ்டம், நேரங்காலம் என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட ‘சுவாரசியமாக்குதல்’தான் மிக அவசியம் என்று நினைக்கிறேன். ------------ agreed!

Anonymous said...

எந்த விதமான சேதாரத்திற்கும் நிர்வாகம் பொறுப்பல்ல... காது காது
http://l1.yimg.com/bt/api/res/1.2/Io8sESjmw6fOCWsJrZ3.ag--/YXBwaWQ9eW5ld3M7cT04NTt3PTQwMA--/http://l.yimg.com/os/publish-images/lifestyles/2013-11-03/7260dcca-b4e3-4d0e-8aaf-f4e61c428659_180861330.jpg

சதீஷ் said...

சுவாரசியத்தை பற்றி இதை விட சுவாரசியமாக எழுத முடியும் என எனக்குத் தோன்றவில்லை.
தினமும் ஒரு முறையாவது உங்களது பக்கத்தை பார்க்க வைத்து விடுகிறீர்கள். இதிலேதான் இருக்கிறது உங்களது எழுத்தின் சுவாரசியம்.

வல்லிசிம்ஹன் said...

வெகு சுவாரஸ்யமாகத்தான் எழுதுகிறீர்கள் .அவரும் நல்ல பாயிண்டைத்தான் சொல்லி இருக்கிறார். நன்றி.

R.Subramanian@R.S.Mani said...

If an old picture with 'UMBERLLA EAR" AND A LATEST PICTURE WITH CONCEALED THE TOP OF HER EAR IS PROVIDED THE ARTICLE SHOULD BE OF MUCH INTERESTING I HOPE' Here only you differ from Anil

Unknown said...

ada

sivakumarcoimbatore said...

mani sir...நல்ல சுவார்ஸ்யம் கொரயமா எழுதுரிங்கா

பிரதீப் said...

vidunga boss, namma ennaikki kajaloda kaathai pathom :-)

சேலம் தேவா said...

Hair Plantation-ஆ இருக்குமோ..?! ;)

Unknown said...

இந்தி நடிகை சர்மிளா டாகூருக்கும் (ஆராதனா புகழ்) இதே போல் பிரச்சனை. காது தோள்பட்டையைத் தாண்டிப் பின்னால் போயிருக்கும். இவர் வயதானல் எப்படிக் கண்ணாடி போடுவார் என்றே யோசிப்பேன். இப்ப கான்டாக்ட் லென்ஸ் போட்டிருப்பாரோ.

கோபாலன்