May 8, 2014

பணம்

எங்கள் வீட்டில் அரை டிக்கெட்டுகளோடு சேர்த்து மொத்தம் எட்டு பேர். தம்பியும் நானும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம். அம்மா அப்பாவும் எங்களோடுதான் இருக்கிறார்கள். என் மனைவியின் தங்கையையே தம்பிக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டதால் தொந்தரவு இல்லை. முக்கியமாக அவர்களிடையே சண்டை எதுவும் வருவதில்லை. இந்தக் கூட்டுக்குடும்ப முறையினால் ஒரு சகாயம் இருக்கிறது. மற்றவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது- வீட்டில் எதைப் பற்றியும் கண்டு கொள்வதில்லை. அவ்வப்போது திட்டுவார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் அவர்களுக்கும் சலித்துப் போய்விட்டது போலிருக்கிறது. தெருவில் நிறுத்தி தண்ணீர் தெளித்துவிட்டார்கள். கண்டு கொள்வதேயில்லை.

சம்பளம் வந்தவுடன் பெட்ரோல் செலவுக்கான காசை மட்டும் வைத்துக் கொண்டு மிச்சப் பணத்தைத் தம்பியிடம் கொடுத்துவிடுகிறேன். அவ்வளவுதான் - மொத்தச் சுமையும் தோளைவிட்டு இறங்கியது மாதிரிதான். வீட்டுச் செலவுகளை அப்பா பார்த்துக் கொண்டால், வெளிச் செலவுகளை தம்பி பார்த்துக் கொள்கிறான். சனி, ஞாயிறு ஆனால் தோளில் பையை மாட்டிக் கொண்டு எந்த ஊருக்கு வண்டியேறினாலும் யாரும் கேட்பதில்லை. 

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்- உண்மையிலேயே சேமிப்பு பற்றியெல்லாம் எனக்கு அதிகமாகத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை, அதற்கான அவசியமும் வரவில்லை. திருமணத்திற்கு முன்பாக வருமான வரி விலக்குக்காக பஜாஜ் அலையன்ஸின் பரஸ்பர நிதியில் மூன்று வருடங்களுக்கு தலா பத்தாயிரம் கட்டினேன். இப்பொழுது கிட்டத்த பத்து வருடங்களைக் கடந்தாயிற்று. முதிர்வுத் தொகை எவ்வளவு இருக்கிறது என்று விசாரித்தால் இருபத்தி மூன்றாயிரம் என்கிறார்கள். அதோடு சரி. வேறு முதலீடும் செய்யவில்லை. 

இப்படியே பணம் பற்றிய கவனமில்லாமல் கடைசிவரைக்கும் விட்டேத்தியாக இருந்துவிட வேண்டும் என்பதுதான் ஆழ்மன ஆசையாக இருக்கிறது. பணம் பற்றிய கவனமின்மை என்பது மிகப்பெரிய சுதந்திரம். அதற்காக வறுமையில் உழல வேண்டும் என்று அர்த்தமில்லை. நமக்கான அத்தனை தேவைகளையும் வேறொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் போது மட்டும் கைக்கு பணம் வந்துவிட வேண்டும். அந்த மாதிரியான சுத்ந்திரம்.

எதற்கு இந்த சொந்தக்கதை?

பணம் சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து எழுதிய முந்தைய பதிவுக்கு பின்னூட்டங்களில் வந்திருந்த ஐடியாக்கள் தவிர சில மின்னஞ்சல்களும் வந்திருந்தன. நண்பர்களுக்கு நன்றி. இவை எனக்கு எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை. ஆனால் பிறருக்கு உதவக் கூடும். 

போண்டா மணி என்றொரு நண்பர் அடிக்கடி கடிதம் எழுதுவார். அவரது மின்னஞ்சல்-

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. கல்லூரி காலத்தில் இருந்தே பணம், சேமிப்பு, வட்டி விகிதம், பங்குச்சந்தை என அதிகம் பேசி கொண்டு திரிவேன். பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் என்னவோ அதிக ஆர்வம் இல்லை. எனினும் என் சார்பாக சில ஐடியாக்கள்.

1) வீட்டில் அதிகமாக பணம் சம்பாதிப்பவர்களுக்கு  டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். ஒரு கோடிக்கான இன்சூரன்ஸ் 9000/வருடம் கிடைக்கிறது. ஆன்லைனில் வாங்கினால் முகவருக்குத் தர வேண்டிய பணத்தை மிச்சம் பிடிக்கலாம்.

2) வருமான வரிக்காக போட்ட எந்த பத்தாயிரத்திற்கும் மேல் செலவாகும் காப்பீடுகளையும் உடனடியாக ரத்து(surrender/paid-up) செய்யவும். பிரையோஜனமற்றவை.

3) வீட்டுக் கடன் எடுத்த வங்கி SBI என்றால் (Max Gain)வீட்டு கடன் திட்டம் மூலமாக 10 சதவிகித வட்டியில் சேமிக்கலாம். இணையத்தில் தேடிப்பாருங்கள். மிகச் சிறந்த கடன் திட்டம் அது. நான் அந்த திட்டதில் தான் வீடு வாங்கி உள்ளேன்.

4) தங்கம் ஒரு தவறான முதலீடு. பெண் குழந்தை இருந்தால் மட்டும் கல்யாணத்திற்காக மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்க வேண்டும். தங்கம் வாங்கும் போதும் செய்கூலி, சேதாரம் என்று ஏமாறுகிறோம். விற்கும் போதும் செம்பு சேர்த்து இருக்காங்க, BIS Halmark முத்திரை இல்லை என்று ஏமாறுகிறோம். எந்த நகைக் கடையிலாவது வாங்கிய காசுக்கே ஒரு மாதம் கழித்து விற்று விட முடியுமா ?

5) விவரம் தெரியாவிட்டால் எக்காரணம் கொண்டும் பங்கு சந்தை , பரஸ்பர நிதி எனச் செல்ல வேண்டாம். தெரியாத விஷயத்தில் விலகி இருப்பதே நல்லது. நூறு பங்குகளில் இரண்டு பங்கு தான் நல்ல லாபம் தரும்.நூறு fund-ளில் இரண்டு fund தான் நல்ல லாபம் தரும்.

அப்படியானால் மிச்சம் உள்ள பணத்தை என்ன தான் செய்வது? 

6) தபால் அலுவலகத்தில் மாத வருமானத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒன்றரை லட்சத்திற்கு மாதம் ஆயிரம் கையில் கிடைக்கும். நீங்களும் மனைவியும் சேர்ந்து 9 லட்சம் ரூபாய் வரைக்கும் இதில் சேமிக்கலாம்.

7) முதலீடு செய்வதற்கு கையில் அதிகப் பணம் இருந்தால் வீட்டு மனையிடம் ஒன்றே நல்ல முதலீடு. உங்களுக்கு நன்றாக தெரிந்த நகரத்தில், உறவினர் யாரேனும் வசிக்கும் நகரத்தில் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் காலி வீட்டு மனையிடம் வாங்கலாம். சாலை வசதி, Corner plot ஆக இருந்தால் நலம். வீடு கட்டாமல் கண்காணித்து மட்டும் இருந்தால் போதுமானது. ஐந்து மடங்கு லாபம் வருவது போலத் தெரிந்தால் விற்று விடலாம்.

8) வீட்டில் இருந்து வெளியே செல்லும் பணம் ஒரு ரூபாயாக இருந்தாலும் குறித்து வைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் வாங்குகிற சம்பளத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது (வீட்டு விசேஷங்கள்[பண்டிகைகள் அல்ல] இருக்கும் மாதங்கள் மட்டும் விதி விலக்கு).

9) ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் எந்தப் பொருளை வாங்கினாலும் இணையதளங்களில் ஐந்து பரிந்துரைகளையாவது (review)படித்து தான் வாங்க வேண்டும்.

என் ஐடியாக்கள் சிறிதளவேனும் உதவினால் மிக்க மகிழ்ச்சி.

                                                      ******

நவீன் எழுதியிருக்கும் கடிதம்.

சமீபத்தில் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் சிலர் கேட்டதனால் சில ஆராய்ச்சிகள் செய்து தெரிந்து கொண்டது இது தான்.

சேமிப்பு என்றவுடனே ஒரு housing loan மூலமாக ஊருக்கு வெளிய ஆயிரம் சதுரடியில் வீடு வாங்கச் சொல்லித்தான் எல்லாரும் சொல்வார்கள். யாருமே டெர்ம் இன்சூரன்ஸ் / mediclaim / ஓய்வூதியத் திட்டங்கள் பற்றியெல்லாம் சொல்ல மாட்டார்கள். என்னதான் உருண்டு புரண்டு சேர்த்து வைத்தாலு குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவருக்கு ஏற்படும் விபத்து அல்லது மருத்துவச் செலவானது அனைத்து சேமிப்பையும் கரைத்து விடும். அதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் Mediclaim இருப்பது அவசியம். ஒரு வேலை உங்கள் அலுவலகத்தில் ஏற்கனவே Mediclaim எடுத்திருந்தால் அவர்கள் தரக் கூடிய தொகை எவ்வளவு, அது எந்தெந்த நோய்களுக்கு பயன்படும், எந்த மருத்துவமனைகளில் பயன்படுத்த முடியும் என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

Term Insurance: 

முதலில் தனி நபர் காப்பீடு எடுப்பது ரொம்ப முக்கியம். இது நாம் வாங்கி இருக்கும் கடனை விடவும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். என்டோன்மன்ட் , Moneyback என்பதெல்லாம் வேண்டாம். Term Insurance தான் சரி. இந்தத் திட்டத்தின்படி குறிப்பிட்ட காலத்திலே ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் காப்பீட்டுத்தொகை கிடைக்கும். இல்லையென்றால் எதுவும் கிடைக்காது. ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுப்பதற்கு வருடத்திற்கு ரூ.12000 கட்ட வேண்டி வரும். 

Money Back, எண்டோன்மெண்ட் ஆகியவற்றில் முதிர்வுக்காலம் முடிந்தவுடன் பணம் திரும்பக் கிடைக்கும். ஆனால் நாம் ஒவ்வொரு வருடமும் கட்ட வேண்டிய தொகை அதிகமானதாக இருக்கும்.

Recurring Deposit: 

இதில் கிடைக்கக் கூடிய வட்டி வேறு எந்தத் திட்டத்திலேயும் வருவதில்லை. அதனால் ஒவ்வொரு மாதமும் ஆயிரமோ, இரண்டாயிரமோ- உங்களால் முடியும் தொகையைச் சேர்த்து வையுங்கள்.

குழந்தைகள் படிப்பு:

ஒரு குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும் போது சேமிக்க ஆரம்பிக்கலாம், அவர்களுக்கு 18/20/22/24 வயசு ஆகும் போது பணம் திரும்ப கிடைக்கும். 

பரஸ்பர நிதி:

இதில் retirement funds, மாதாந்திர வருமானத் திட்டம் என்று தனித்தனியாகவே இருக்கின்றன. மாதம் 1000/2000 ரூபாய் சேமிக்கலாம். கூட்டு வட்டி கணக்கில் திரும்ப கிடைக்கும் பணம் திருப்தி தரக்கூடியதாக இருக்கும். இதற்கு வருமான வரிவிலக்கும் உண்டு. 

முக்கியமான குறிப்பு: நாம் எடுத்து வைத்திருக்கும் காப்பீடு / முதலீடுகள் / வங்கி கணக்குகள் (online banking username, passwords) உட்பட  அனைத்தையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம்.