May 17, 2014

நாம் ஏன் ஹிந்தி கற்கக் கூடாது?

ஹைதராபாத்தில் பணியாற்றிய நிறுவனத்தில் யூனியன் கொஞ்சம் கெட்டி. அவ்வப்போது தொழிலாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். ‘இஞ்சினியரிங் முடித்துவிட்டேன்; சுக்கினியரிங் முடித்துவிட்டேன்’ என்று பொறியாளர்கள் யாரும் வாலாட்ட முடியாது. கூட்டி வைத்து கும்மி விடுவார்கள். அப்படியிருந்தும் எல்லோரும் அடங்கியிருக்க மாட்டார்கள் அல்லவா? ஒரு பையன் சேட்டையைக் காட்டி வாங்கிக் கட்டிக் கொண்டான். அவன் அப்பொழுதுதான் பி.ஈ முடித்திருந்தான். ஏதோ அரசியல் சார்பில்தான் வேலை வாங்கியிருந்தான். அவனது அப்பாவுக்கு சில அரசியல் தொடர்புள் இருந்தன. அதனாலோ என்னவோ நாக்கு சற்று நீளம். ஆறு மாதங்கள் பயிற்சி முடித்தவுடன் உற்பத்தி துறையில் (Production department)இல் அமுக்கிவிட்டார்கள். அந்தத் துறையில்தான் தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டியதாக இருக்கும். இவன் அடிவாங்கட்டும் என்றே அந்தத் துறையில் அமுக்கினார்களா என்று தெரியவில்லை. இவனும் போன இடத்தில் வாயை வைத்துக் கொண்டிருக்காமல் ‘அக்கட குச்சொது; இக்கட மாட்லாடொது’ என்று தொழிலாளர்களிடம் வம்பு செய்யத் தொடங்கியிருந்தான். பொறுத்துப் பொறுத்து பார்த்தவர்கள், ஒரு நாள் ராத்திரியோடு ராத்திரியாக அழைத்துச் சென்று பட்டையைக் கிளப்பிவிட்டார்கள். ‘இதோடு நிறுத்திக்க.... இல்லைன்னா குண்டூருக்கு குண்டுக்கட்டாக மூட்டைக் கட்டித்தான் தூக்கிப் போவார்கள்’ என்கிற ரீதியில் பேசி வாய் மீது இரண்டு போட்டிருக்கிறார்கள். வீங்கிய உதட்டோடு மூன்று நாட்கள் சுற்றிக் கொண்டிருந்தான். அடங்கிவிட்டான். பிறகு வேறு துறையை கேட்டு வாங்கி செட்டில் ஆகிவிட்டான்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இந்த உதடு வீங்கிய விவகாரம் பயத்தைக் காட்டிவிட்டது. தெலுங்கும் தெரியாது. ஹிந்தியும் தெரியாது. ஏதாவது விவகாரத்தில் நம்மையெல்லாம் மூலைக்கு இழுத்துச் சென்றால் கெஞ்சுவதற்குக் கூட வழியில்லாமல் கதற வேண்டுமே என்ற பயம்தான்.  முதல் வேலையாக தெலுங்கு பேசிப் பழகிக் கொண்டேன். அந்தந்த ஊரில்  அந்தந்த மொழி தெரிந்திருப்பது வரம் நம்மையும் அறியாமல் தைரியம் வந்துவிடும். கர்நாடக வந்த பிறகு கன்னடம் பேசிப் பழக வேண்டும் என்று நினைத்துக் கொண்டதுண்டு. ஆனால் அதை இன்னமும் செய்யவில்லை. ஆட்டோக்காரராக இருந்தாலும் சரி; மளிகைக்கடைக்காரராக இருந்தாலும் சரி- தமிழில் பேசினால் புரிந்து கொள்கிறார்கள். ஏதாவது ஒரு தேவை வந்தால்தான் அந்த மொழியைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற வேகம் வரும். இல்லையென்றால் அசமஞ்சம்தான்.

இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டும்தான் ஹிந்தி சுத்தமாகத் தெரிவதில்லை. மலையாளிகளுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஆனால் நம் அளவுக்கு மோசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல மலையாளிகளுக்கு ஹிந்தி தெரிகிறது. நான்கு ஹிந்திக்காரர்கள் இருக்கும் ஒரு டீமில் தமிழனாக இருப்பது பெரிய பிரச்சினை. இரண்டு மூன்று தமிழர்கள் இருந்தால் தப்பித்துவிடலாம். தனியொருவனாக சிக்கிக் கொண்டால் பிதுங்கப் பிதுங்க முழிக்க வேண்டும்.ஏதாவது பேசிக் கொள்ள வேண்டுமென்றால் ஹிந்தியில்தான் பேசிக் கொள்கிறார்கள். நம் இருப்பை கிட்டத்தட்ட புறக்கணித்துவிடுவார்கள். பல சமயங்களில் இது அயற்சியாகிவிடுகிறது. எனது பழைய டீமில் இரண்டு மூன்று முறை ‘ஆங்கிலத்தில் பேசுங்க’ என்று சொல்லியிருக்கிறேன். அதற்காகவே என் மீது சிலருக்கு எரிச்சல். அவ்வப்போது முகத்தைக் காட்டிவிடுவார்கள். இருந்தாலும் ஹிந்தியில்தான் பேசிக் கொள்வார்கள். முக்கியமான பிரச்சினையாக இருக்கும். நாம் அதைக் கோட்டை விட்டிருப்போம்.

இரண்டு தலைமுறைகளாக ஹிந்தி தெரியாமல் வளர்ந்துவிட்டோம். முன்பெல்லாம் இது நல்ல விஷயமாகத்தான் தோன்றியது. நம் மாநிலம் மட்டும் இரும்புக் கோட்டையாக இருக்கிறது என்ற ஒரு நினைப்பு அது. சரிதான். ஆனால் அரசியல் ரீதியாக மட்டும்தான் இது ஒரு இரும்புக் கோட்டை. பத்தாவது படித்த பையன் அவ்வளவு சீக்கிரம் வேறு மாநிலங்களில் வேலை வாங்க முடிவதில்லை. ஒரு செக்யூரிட்டி வேலையாக இருந்தாலும் கூட முதல் கேள்வியாக ‘என்ன மொழி தெரியும்’ என்பார்கள். நம் ஊரில் பத்தாவது படித்த பையனுக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழி தெரியும்? ஒரு டிரைவராகக் கூட சேர்த்துக் கொள்வதில்லை.

அரசியல்வாதிகளிடம் ‘நாம் ஏன் ஹிந்தி கற்கக் கூடாது?’ என்று பேசினால் அதன் நுண்மையான சிக்கல்களைப் பேசுவார்கள். ஏற்றுக் கொள்ளும்படிதான் இருக்கும். ஆனால் இது ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய சூழலுக்கு வேண்டுமானால் பொறுத்தமாக இருக்கும். நம் ஊர்; நம் மக்கள்; நம் தொழில் என்று முழு ஆயுளையும் ஒப்பேற்றிவிடலாம். இப்பொழுதுதான் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் கிட்டத்தட்ட அத்தனை அரண்களையும் உடைத்துவிட்டார்களே. திரும்பிய பக்கமெல்லாம் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மொழி அறியாத காரணத்திற்காக ஏன் வாய்ப்புகளை இழக்க வேண்டும்? என்னதான் யோசித்துப் பார்த்தாலும் ஹிந்தி உள்ளே நுழைந்தால் தமிழ் நசுங்கிப் போகும் என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சாகத்தான் தெரிகிறது. வடக்கத்திக்காரன் இங்கு கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் தாண்டி உள்ளே வர முடிவதில்லை என்கிற ரீதியில் இது திராவிட அரசியல்வாதிகளுக்கு பெரும்பலம். ஆனால் உண்மையில், சாமானிய மக்களின் அத்தனை சிறகுகளையும் இது பிடுங்கிப் போட்டுவிடுகிறது என்பதுதான் நிதர்சனம். 

ஹிந்தித் திணிப்பைத் தடுப்பது சரியான விஷயம்தான்- கட்டாயம் ஆக்க வேண்டியதில்லை. ஆனால் அந்த மொழியை பள்ளியில் படிக்கக் கூட வழியில்லாமல் தடுப்பது பெரும் பாவம். இதைத் தடுத்து எதைச் சாதிக்கப் போகிறோம்? கன்னடக் காரனுக்கும், தெலுங்குக்காரனுக்கும் ஹிந்தி தெரிகிறது என்பதால் அவர்கள் எதை இழந்துவிட்டார்கள்? கன்னடத்திற்குத்தான் தமிழை விடவும் ஞானப் பீட விருதுகள் அதிகம். தமிழை விடவும் அதிகமாக கன்னட மொழியில் நல்ல படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. தமிழர்களைவிடவும் கன்னடர்கள்தான் தாய்மொழி உணர்வோடு இருக்கிறார்கள். 

ஹிந்தி மொழி தெரியாமல் வெளிமாநிலங்களில் வேலைக்கு போவது முடியவில்லை என்பது மட்டும் பிரச்சினை இல்லை- தொழிற்துறையினருக்கும் சிரமம்தான். டெக்ஸ்டைல் துறையில் இருப்பவர்களை விசாரித்துப் பாருங்கள் - பஞ்சு மஹாராஷ்டிராவில் இருந்து வருகிறது. டெக்ஸ்டைல் எந்திரங்கள் லூதியானாவில் இருந்து வருகின்றன. மஹாராஷ்டிராக்காரனுக்கு மராத்தியும் தெரியும் ஹிந்தியும் தெரியும். லூதியானாக்காரனுக்கு பஞ்சாபியும் தெரியும், ஹிந்தியும் தெரியும். தமிழனுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். வரவு செலவாக இருந்தாலும், வேறு பேச்சுவார்த்தையாக இருந்தாலும் இடையில் மீடியேட்டரை வைத்துக் கொண்டு ஒப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள். நாமக்கல் லாரிக்காரர்களிடம் பேசினால் இன்னமும் கதைகளைச் சொல்வார்கள்.

ஹிந்தியைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அது ஒரு மொழி. ஒரு Tool. பயன்படுத்திக் கொண்டு மேலே வரப் பார்க்க வேண்டுமே தவிர, இதை சென்ஸிடிவ் பிரச்சினையாக மாற்றி தங்களது தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக காய் நகர்த்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி இன்னுமொரு தலைமுறையின் வாய்ப்புகளையும் இருட்டடிப்பு செய்வதையாவது நிறுத்திக் கொள்ளலாம் என்பதற்காகச் சொல்கிறேன். நம் பிள்ளைகளின் பாவம் நம்மைச் சும்மா விடாது.