May 16, 2014

ஜெயிச்சுடாங்கய்யா

கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. 

ஆட்சியமைக்கத் தேவையான 272 எம்.பிக்களை பா.ஜ.க தனியாகவே பெற்றுவிடும். கூட்டணிக்கட்சிகளின் எண்ணிக்கையை எல்லாம் சேர்த்தால் 320+ இடங்கள். மிகப்பெரிய வெற்றி இது. 

அர்னாப் கோஸ்வாமி, பிரணாய் ராய், ராஜ்தீப் சர்தேசாய் போன்ற மீடியா சர்வாதிகாரிகள் கடந்த நான்கைந்து நாட்களாக மம்தாவைச் சேர்த்தால் சூப்பர் கூட்டணியாகுமா? ஜெயலலிதாவைச் சேர்த்தால் சூப்பர் கூட்டணியாகுமா என்று கதறிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கணக்குப்படி எம்.பிக்களின் எண்ணிக்கை முந்நூறைத் தாண்டினால் அது சூப்பர் கூட்டணி. ஆனால் யாருடைய தயவுமே இல்லாமல் கூட இது சூப்பர் கூட்டணிதான். 

பா.ஜ. கூட்டணி இருநூற்றி நாற்பது தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் முப்பது தொகுதிகளைக் கையில் வைத்துக் கொண்டு மோடியின் கண்களில் மம்தாவும், ஜெயலலிதாவும் விரலைவிட்டு வேடிக்கை காட்டுவார்கள் என்றும் சில நண்பர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நல்லவேளையாக மோடியும், ராஜ்நாத் சிங்கும் தப்பித்துவிட்டார்கள். பா.ஜ.கவே தனித்த பெரும்பான்மையைப் பெற்று விட்டதால் மம்தாவிடமும், ஜெ.விடமும் எத்தனை சீட்டுகள் இருந்தாலும் பிரயோஜனம் இல்லை. அமைச்சரவையில் கூட சேர்த்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

முப்பத்துச் சொச்சம் எம்பிக்கள் அதிமுக சார்பில் டெல்லிக்குச் செல்வது என்பது திமுகவுக்குத்தான் அலறும். 2ஜி போன்ற விவகாரங்கள் ஏதாவது வாதத்துக்கு வந்தால் விசாரணையைத் துரிதப்படுத்தச் சொல்லி திமுகவுக்கு எதிராக குரல் எழுப்புவார்கள். திமுக சார்பில் மறுத்துப் பேசக் கூட ஆள் இல்லை. மற்றபடி, இத்தனை எம்.பிக்களால் தமிழகத்துக்கு  வேறு ஏதாவது நல்லது நடக்கும் என்றெல்லாம் நம்பிக்கை இல்லை.

சரி. அது விதி.

ஆனால், பெரும்பாலான தமிழர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைத் தரக் கூடிய செய்தி ஒன்று இந்தத் தேர்தலில் இருக்கிறது. அது, காங்கிரஸ் மண்ணைக் கவ்விய செய்திதான். மண்டை மீது ஓங்கிக் கொட்டி மூலையில் அமர வைத்துவிட்டார்கள். மொத்தமாக ஐம்பது எம்பிக்கள் கூட தேற மாட்டார்கள் போலிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக சோனியாவும், ராகுலும் ஒருவிதமான மமதையிலேயே இருந்தார்கள். தான் எந்தக் காலத்திலும் இந்திய மக்களின் அடிநாதமான பிரச்சினைகளை புரிந்து கொள்ளப் போவதில்லை என்ற குரலிலேயே ராகுல் பேசிக் கொண்டிருந்தார். தங்கள் குடும்பத்தையும், கட்சியையும் எந்தவிதத்திலும் அசைக்க முடியாது என்ற தலைக்கனத்தினால் வந்த குரல் அது. தலைக்கனத்தோடும் திமிரோடும் திரியும் போதும் எதிரி எங்கிருந்து முளைப்பார்கள் என்று தெரியாது. இந்தத் தேர்தலில் முளைத்திருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து, காங்கிரஸ்வாலாக்களின் மொத்த மமதையையும் டீக்கடைக்காரர் சிதைத்திருக்கிறார்.

தோல்வியும், சிதைவும் காங்கிரஸுக்கு புதியது இல்லை. இதே போன்ற சிதைவை எமெர்ஜென்சிக்குப் பிறகு இந்திரா காந்தி சந்தித்திருக்கிறார். ஆனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்திரா ஆட்சியைப் பிடித்தார். அதே போன்ற பீனிக்ஸ் எழுச்சியை இன்னொரு முறை காங்கிரஸ் காட்டும் என்று நம்புகிறீர்களா? எனக்கு நம்பிக்கை இல்லை. இந்திராவுக்கும் ராகுலுக்கும் இடையிலான வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். ராகுலை இந்திராவோடு மட்டும் இல்லை- சோனியாவோடு கூட ஒப்பிட முடியாது. ராகுலை நம்பிக் கொண்டிருக்கும் வரையில் பா.ஜ.கவும், மோடியும் சொதப்பினால் தவிர காங்கிரஸ் கட்சியால் அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க முடியாது என நம்புகிறேன். மூலையிலேயே கிடக்கட்டும்.

இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து-
  • வழக்கம் போலவே, தேசிய ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை under estimate தான் செய்திருக்கின்றன. பெரும்பாலான கணிப்புகள் தவறுதான். Today's chanakya மட்டும் விதிவிலக்கு. கிட்டத்தட்ட நெருக்கமான கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் அந்தப் பத்திரிக்கையை இங்கு பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது என்பதால் நாம் கண்டு கொள்ளவில்லை அல்லது நம்பவில்லை. 
  • தமிழக மக்களின் முடிவை ஏன் எந்த ஊடகத்தாலும் சரியாகக் கணிக்க முடியவில்லை என்று தெரியவில்லை. நக்கீரன் போன்ற ஒருதலைப் பட்சமான பத்திரிக்கைகளை விட்டுவிடலாம். ஆனால் மற்றவர்களும் கூட தமிழர்களின் நாடியைப் பிடித்து பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. அந்ததந்த வாரத்திற்கான சர்குலேஷன் அதிகம் ஆனால் போதும் என்று கவர்ச்சியாக தலைப்பை மட்டும் வைக்கிறார்கள். ஆனால் செய்தியில் கோட்டவிட்டுவிடுகிறார்கள்.
  • தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி போன்று செயல்படும் தந்தி டிவியின் பாண்டே போன்றவர்கள் ‘வைகோவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது’ என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் வைகோ இரண்டாவது இடத்துக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
  • அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட்களின் இடம் காலி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமாக பதினைந்து இடங்களாவது வருவார்களா என்று தெரியவில்லை. ஆனால் இது ஆரோக்கியமான செய்தி இல்லை. முதலாளித்துவ ஆதரவு அரசுகள் குருட்டுவாக்கில் செயல்படும் போது அதன் வேகத்தை துளியாவது குறைப்பதற்கு கம்யூனிஸ்ட்கள் தேவை. இந்த பல குரல் தன்மைதான் ஜனநாயகத்தின் வலிமை. அந்தவிதத்தில், கம்யூனிஸ்டகள் காலி ஆகிறார்கள் என்பது ஒரு வருத்தமான தகவல்தான்.
  • அர்விந்த் கெஜ்ரிவால் போன்று குரலை உயர்த்தக் கூடிய தலைவர்கள் பாராளுமன்றத்திற்குள் இருப்பது அவசியம் என்று தோன்றியதுண்டு. ஆனால் அவர் வாரணாசியைத் தேர்ந்தெடுக்கும் போதே அதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிந்துவிட்டது. தோற்றுவிட்டார்.
  • கடந்த பதினைந்து ஆண்டுகளாக மத்தியில் ஆளும் அரசுகளை மிரட்டிக் கொண்டிருந்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளை வாக்காளர்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.
  • இங்கு சமூக ஊடகங்களின் வழியாகவும், தொலைக்காட்சிகளின் வழியாகவும் கேட்பவர்களின் காதுகளில் ரத்தம் வரும் அளவுக்கு மோடி எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்தவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும்- இவர்களின் கூச்சல்களுக்கும் ground reality க்கும் இடையில் ஏணி வைத்தாலும் எட்டாத வித்தியாசங்கள் இருக்கின்றன என்று. சமோசாக்காரர்களின் வெற்றுக் கூச்சல்களால் முந்நூறு வாக்குகள் மாறி விழுந்திருந்தால் கூட அது பெரிய விஷயம்தான். 

தேர்தல் முடிந்துவிட்டது. 

மக்கள் மோடியிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். தனக்கு நிகராக வேறு யாருமே இல்லை என்ற பிம்பத்தை தனது பேச்சினாலும், நடவடிக்கையினாலும் மோடி உருவாக்கியிருக்கிறார்.  ‘அறுபதாண்டுகளைக் காங்கிரஸிடம் கொடுத்தீர்கள். எனக்கு அறுபது மாதங்களைக் கொடுங்கள்’என்று மோடி கேட்டார். மக்கள் கொடுத்துவிட்டார்கள். முந்நூறு தாமரைகளை மலரச் செய்யுங்கள் என்றார். அதையும் நிறைவேற்றிவிட்டார்கள். யு.ஆர்.அனந்த மூர்த்தியும், அமர்த்தியா சென்னும் வேண்டிக் கொண்டதையெல்லாம் மீறி மோடிக்கு மக்கள் கம்பளம் விரித்திருக்கிறார்கள். மோடி இனி நடந்து வரப் போகிறார். பாலாறும் தேனாறும் ஓடாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு உதவும்படியான தொலைநோக்குத் திட்டங்களை தொடங்குவார் என்று நூற்றியிருபது கோடிகளில் ஒருவனாக நானும் மோடியை நம்புகிறேன். பார்க்கலாம். நம்பிக்கைதானே வாழ்க்கை.