ஆறேழு வருடங்களுக்கு முன்பு வரை வலைப்பதிவுகளில் நிறையப் பேர் உற்சாகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். அதுவே ஒன்பது அல்லது பத்து வருடங்களுக்கு முன்பாக என்றால் நிலைமையே வேறு- ஆளாளுக்கு அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேரும் நன்றாக எழுதிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டால் ‘ஆமாம்’ என்று சொல்லிவிட முடியாது. ஆனால் பெரும்பாலானவர்களிடம் ஒரு உற்சாகம் இருந்தது. தாம் எழுதுவதை தாமே பிரசுரம் செய்து கொள்ள முடிகிறது, உடனடியாக பல பேர் படிக்கிறார்கள், வெளிநாட்டில் இருந்து கூட நமது எழுத்தைப் பற்றி எழுதுகிறார்கள்- இன்னும் எத்தனையோ காரணங்கள். நாமே ராஜா; நாமே மந்திரி.
இந்த ட்ரெண்ட் ஏன் தொடரவில்லை என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அடுத்தவர்களின் தளத்திற்குச் சென்று கும்மியடிப்பது, உனக்கு நான் கமெண்ட் போடுகிறேன் பதிலுக்கு எனக்கு நீ கமெண்ட் போடு போன்ற ஐடியாலஜிகள் உள்ளே நுழைந்த பிறகு பெரும்பாலான வலைப்பதிவுகள் வெறும் வேடிக்கைக்கான தளங்களாக மாறத் துவங்கின. இப்படி dilute ஆனதைத் தவறு என்று சொல்லவில்லை. ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்- எல்லாக் காலத்திலும் எல்லாவிதமான எழுத்துக்களுக்கும் இடம் உண்டு- எல்லா எழுத்துக்களுக்கும் வாசகர்களும் உண்டு. அப்பொழுதும் கூட காத்திரமான விஷயங்களை எழுதிக் கொண்டிருந்தவர்கள் இருந்தார்கள்தான். ஆனால் அந்தச் சூழலும் கூட சீக்கிரம் மாறிவிட்டது. ஆர்குட், ட்விட்டர் வந்த பிறகு நம்மவர்கள் கவனத்தை அங்கே திருப்ப வலைப்பதிவுகளின் நல்ல காலம் மங்கத் துவங்கியது அதன் பிறகு வந்த ஃபேஸ்புக் வலைப்பதிவுகளை மொத்தமாக கீழே தள்ளி மேலே ஏறி அமர்ந்து கொண்டது.
இன்னமும் வலைப்பதிவுகள் இருக்கின்றனதான். ஆனால் பழைய உற்சாகம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
அப்துல் முத்தலீப்புடன் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தேன். முத்தலீப் நிறைய வாசிக்கிறார். மிக நன்றாகவும் எழுதுகிறார். வலைப்பதிவின் பெயர்தான் ஒரு மார்க்கமாக இருக்கிறது. முத்த-லிப்-லாக்ஸ். உதாரணத்துக்கு ஒரு கட்டுரையை வாசித்துப் பாருங்கள். இப்படியான ஆட்கள் தொடர்ந்து எழுதுவதில்லை என்பதுதான் பிரச்சினை. ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று. எழுதுவதற்கான மொழி மட்டும் அமைந்திருந்தால் அவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். ‘பன்றி குட்டி போடுவதைப் போலில்லாமல் சிங்கம் குட்டி போடுவது போல குறைவாகவே எழுதுவேன்’என்று யாராவது சொன்னால் சந்தோஷம்தான். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. பத்துக் குட்டிகள் போட்டாலும் தப்பில்லை- அதில் இரண்டு மூன்றாவது சிங்கக் குட்டிகளாகத் தெரிய வாய்ப்புகள் அதிகம்.
சென்ற தலைமுறையில் எதையாவது எழுதி முடித்துவிட்டு அதை பிரசுரிப்பதற்காக யாரோ ஒரு பத்திரிக்கை ஆசிரியரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். முன்னோடி எழுத்தாளரின் ஆசிர்வாத நிழல் இருந்தால் நம்மை கவனிப்பார்கள். இல்லையென்றால் கஷ்டம்தான். நாம் எழுதியதைத் தபாலில் அனுப்பி வைத்தால் அது பிரசுரமானாலும் ஆகலாம் ஆகாவிட்டாலும் இல்லை. எழுத்து, திறமை என்பதையெல்லாம் தாண்டி படைப்பு பிரசுரமாவதில் எத்தனையோ அரசியல்கள் இருந்தன. அத்தகைய சூழலில் வேண்டுமானால் ‘எழுதி எழுதி எதைச் சாதிக்கப் போகிறோம்’ என்று கேட்டால் அர்த்தம் இருக்கிறது. நமக்குத்தான் இத்தனை வாய்ப்புகள் இருக்கின்றனவே. இன்று நமக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை. ஆசிர்வாதமும் அவசியம் இல்லை. பிறகு எதற்காகத் தயங்க வேண்டும்? நிற்காமல் எழுதிக் கொண்டிருந்தால் போதும். எழுத்தின் குறைகள் தானாக களையும்.
தொடர்ந்து எழுதுவதில் சில சங்கடங்களும் இருக்கின்றன. அந்தச் சங்கடங்களை கொஞ்சம் அடையாளம் கண்டுகொண்டால் போதும்.
முதல் சங்கடம், நிறைய எழுதத் துவங்கும் ஆரம்பகாலத்தில் வரக் கூடிய சங்கடம். இன்று நம் எழுத்தை வாசிக்கும் ஒருவருக்கு இரண்டு மூன்று மாதங்கள் கழித்து பிடிக்காமல் போய்விட வாய்ப்பிருக்கிறது. முன்பு அவர் நம் எழுத்தைப் பற்றி வெகுவாக பாராட்டியிருக்கக் கூடும். மின்னஞ்சல் அனுப்பியிருப்பார். தொலைபேசியில் பேசியிருப்பார். ஆனால் இப்பொழுது கேட்டால் ‘கொஞ்சம் பிஸி, டைம் இல்லைங்க’ என்று ஏதாவது சொல்லி விடுவார். அவர் ஏன் நம் எழுத்தை விட்டு விலகிப் போனார் என்று யோசிக்கத் துவங்கினால் அது நம்மைக் குழப்பிவிட்டுவிடும்.
வெளிப்படையாகப் பேசினால் எழுதுபவர்கள் விலகியவர்களைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எத்தனையோ காரணங்களால் அவர் நம் எழுத்தை வாசிப்பதை நிறுத்தியிருக்கலாம். ஆனால் புதிதாக வேறு இரண்டு பேர்கள் வாசிக்கத் துவங்கியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த ஒரு மாதம் கழித்து இந்த இரண்டு பேரில் ஒருவர் நம் எழுத்தை வாசிப்பதை நிறுத்தியிருப்பார். ஆனால் இன்னும் இரண்டு பேர்கள் புதிதாக வந்திருப்பார்கள். எழுத்து என்பது ஆற்று நீரின் போக்கு போலத்தான். சருகு, இலை, குப்பை, முத்து என்று எது விழுந்தாலும் இழுத்துக் கொண்டு செல்ல வேண்டியதுதான். கூடவே வருகிறவர்கள் வரட்டும். விலகுகிறவர்கள் விலகட்டும். எழுதுகிறவனுக்கு அது பற்றிய எந்த அலட்டலும் இருக்கக் கூடாது.
விலகிச் சென்றவர்கள் தவிர வெகு காலமாக கூடவே வருகிறார்கள் அல்லவா? அவர்கள் முக்கியமானவர்கள். அவர்களிடம் மட்டும் அவ்வப்போது நம் எழுத்தைப் பற்றிக் கேட்டுக் கொள்ளலாம். ‘சலிப்படையச் செய்யாமல் இருக்கிறது’ என்று அவர்கள் சொன்னால் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இப்படித் தொடர்ந்து வரும் வாசகர்களின் எண்ணிக்கை பெரிய எழுத்தாளர்களுக்கு ஆயிரக்கணக்கில் இருக்கும். ஆரம்பகட்ட எழுத்தாளர்களுக்கு ஐந்து பேரோ அல்லது பத்து பேரோ இருப்பார்கள்.
இரண்டாவது விஷயம் விமர்சனங்கள்.
நம் எழுத்து வழியாகவே நமக்கான இமேஜை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆனால் எழுத்துக்கும் இமேஜூக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. உதாரணமாக சாரு நிவேதிதாவின் எழுத்தை பார்த்தால் ‘ஸ்ட்ரிக்டான கணக்கு வாத்தியார்’ போல நினைத்துக் கொள்வோம். பேசிப் பார்த்தால் படு ஜோவியலான தமிழ் வாத்தியாராகத் தெரிவார். ஆனால் நம்மைப் பற்றி அடுத்தவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் இமேஜின் அடிபடையில்தான் பெரும்பாலான விமர்சனங்கள் வரும். உள்ளடக்கம் பற்றி, எழுத்து நடை பற்றிய விமர்சனங்களைத் தவிர்த்து நம் attitude பற்றியெல்லாம் கூட விமர்சிப்பர்கள். இதில் காயம் அடையாமல் இருப்பதும் ஒருவேளை காயம் அடைந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதும் அவசியம். இரண்டு மூன்று முறை அப்படி இருந்துவிட்டால் ‘இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்’ என்று ஓரமாக போய்விடுவார்கள். தப்பித்துவிடலாம்.
அதற்காக விமர்சனங்களை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நிராகரிக்கவும் கூடாது. பொருட்படுத்தத் தக்க விமர்சனங்கள் என்றால் அதைப்பற்றி கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு விட்டுவிடலாம். அது மண்டைக்குள் ஏதோ ஒரு இடத்தில் ஒட்டிக் கொள்ளும். அடுத்தடுத்த கட்டுரைகளை எழுதும் போது subconscious-ல் இருக்கும் அந்த விமர்சனம் நம்மை மீண்டும் அந்தத் தவறை செய்ய அனுமதிக்காது. முதல் இரண்டு அல்லது மூன்று முறை விமர்சனத்திற்குள்ளான அந்தத் தவறைத் தவிர்க்கிறோம் என்பது நமக்குத் தெரியும். பிறகு அதுவே பழக்கமாகிவிடும். இப்படித்தான் சுய விமர்சனங்களின் வழியாகவும் பிறரது விமர்சனங்களின் வழியாகவும் நம் எழுத்து ட்யூன் ஆகிக் கொண்டிருக்கும்.
வாசிப்பவர்கள், விமர்சனங்கள் தவிர்த்து இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதுதான் முக்கியமான பிரச்சினையும் கூட. தொடர்ந்து எழுதுவதற்கான கச்சாப்பொருளுக்கு எங்கே போவது? ஆரம்பத்தில்தான் இது பெரிய சிரமம். ஆனால் உண்மையில் இது சிரமமே இல்லை. கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டிருந்தால் போதும். தினமும் ஏதாவது வந்து விழுந்து கொண்டேதான் இருக்கும். விழுந்த உடனே அதை எழுத்தாக்க வேண்டியதில்லை. இரண்டு மூன்று நாட்கள் ஊறப்போட்டு பிறகு யோசித்தால் ஒரு சுவாரசியமான வடிவத்தில் கிடைத்துவிடும். தினத்தந்தி செய்தியோ, அலுவலக டேபிளில் விவாதித்த விவகாரமோ, வாசித்த புத்தகமோ என்று எதிலிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
வெயிட்டீஸ். இதையெல்லாம் எழுதுவதால் என்னை நான் அப்பாடக்கராக நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. முத்தலீப்புடன் பேசிய சில விஷயங்களை கோர்வையாக எழுதி வைத்தால் யாராவது ஒருவருக்கேனும் பயன்படும் அல்லவா? அப்படியான சுய அனுபவக் குறிப்புதான் இது.
வலைப்பதிவு ஒரு நல்ல ஊடகம். கவனம் பெறுவதற்கும், நம் எழுத்தை கூர் தீட்டிக் கொள்வதற்குமான களம். எடுத்துக் கொள்கிற விஷயத்தில் சுவாரசியத்தைச் சேர்க்கத் தெரிந்தால் போதும். இங்கு நம் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருக்கலாம். சுவாரசியத்தைச் சேர்ப்பது என்பது பெரிய சூத்திரமெல்லாம் இல்லை. எழுத எழுத பழக்கத்தில் வந்துவிடும்.
இன்னொரு முக்கியமான குறிப்பு- எழுதுகிற விஷயத்தில் உண்மை இருக்க வேண்டும். ஆனால் துல்லியத் தன்மை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மை இல்லாத கட்டுரை பல்லிளித்துவிடும். பக்காவான துல்லியத்தன்மையோடு எழுதிய கட்டுரை வறட்சியானதாகிவிடும்.
12 எதிர் சப்தங்கள்:
உண்மை. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் பத்திரிக்கையில் பணி புரிந்தாலும் கருத்து மற்றும் எழுத்து சுதந்திரம் இருப்பதில்லை. பல பத்திரிக்கையாளர்கள் தங்களது ப்ளாக்குகளில் கூட சுதந்திரமாக தங்கள் கருத்துகளை எழுத முடிவதில்லை. தங்கள் கருத்து ஒன்றாக இருக்கும் வெளிப்பாடு வேறாக இருக்கும். இருந்தாக வேண்டும். சமீபத்தில்தான் நான் பத்திரிக்கை துறையில் இருந்து வெளிவந்தேன், மிக சமீபத்தில்தான் கொஞ்சம் எழுதவும் ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் பதிவு ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது.
Totally agree with your views. Frequency of my blogposts got a hit once I entered twitter. I even started thinking about transforming events into 140 character sentences.
But, for sure blogposts are like melodies. Tweets and fb posts are like fast songs. Our choice is between" life" and "instant hit".
Good post. :-)
ரொம்பச்சரி.
அதான் 'நினைத்தது கண்டது கேட்டது என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்' என்று நம்ம துளசிதளம் ஹெட்டரில் போட்டு வச்சுருக்கேன் கடந்த பத்துவருடங்களாக:-))
எழுதுவதோடு என் கடமை முடிஞ்சுருது. பின்னூட்டங்கள் பற்றிய கவலை இல்லை. வாசகர்கள் பார்க்கிறார்கள் வாசிக்கிறார்கள். யாருக்காவது எப்பவாவது பயன்படும். படட்டும் என்று இருக்கிறேன்.
good one... you write regularly... why dont you give us some tips on consistent writing?. from your experience?.. how you do it, when you do it and what are all the tools you use, what are all the difficulties you face and how you overcome them?...
That would really help us to write more :)
சிறந்த திறனாய்வுப் பார்வை
தங்கள் பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ஐயா!
கீழே இணைப்பும் தந்துள்ளேன்.
"நீங்கள் வலைப்பூக்களில் எழுதுபவரா?"
http://yppubs.blogspot.com/2014/05/blog-post.html
மிகச்சிறப்பான ஆலோசனைகள்! நன்றி!
//உண்மை இல்லாத கட்டுரை பல் இளித்து விடும்// உண்மை. உண்மை.
ஆம் மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் நல்ல கருத்துக்கள் இடம்பெறும் எந்த ஒரு கட்டுரையுமே வெற்றிப்பெற்றுவிடும். எக்காலத்திற்கும் அது பயன்படும். அருமையாக சொன்னீர்கள். இந்த தளத்தில் திறன் பேசி குறித்த தகவல்களை எளிய ஆங்கிலத்தில் தமிழர் ஒருவர் எழுதியிருக்கிறார். அனைவருக்கும் பயன்படும் என நினைக்கின்றேன்.
சுட்டி: நோக்கியா போனின் சிறப்பம்சங்கள்
விஷயமுள்ள கட்டுரைகளை எப்போதும் படிப்பார்கள். இது பயணக் குறிப்பாக இருக்கலாம். பார்க்காத கோணமாக இருக்கலாம். சிலர் எழுதுவது படிப்பதற்கு interestஆக இருக்கும். எழுதாளரின் கருத்தோடு ஒத்துப்போகவேண்டிய அவசியமில்லை. படித்தோம் என்று பின்னூட்டமிட்டால் எழுதுபவருக்கு உற்சாகமாக இருக்கும். மற்றபடி வெட்டிவீம்புக்காக வெறுப்புப் பின்னூட்டமிடுவது வெட்டிவேலை என்றுதான் தோன்றுகிறது. கட்டுரையாளர் அத்தகைய பின்னூட்டங்களைப் படிக்க/Response பண்ணத் தேவையில்லை.
உங்களது இந்த கட்டுரையின் மூலமாக எனக்கு கிடைத்த உத்வேகத்தை materialise செய்திருக்கிறேன். ஒரு blog உண்டாக்கி முதல் பதிவும் இட்டிருக்கிறேன். Now its your turn to give the feedback.
நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மை. தங்களதுப் பதிவை வாசித்ததும், நிரம்ப சக்தி கிடைத்ததுபோல் இருக்கிறது. அதேசமயம் இதுவரை நான் சரியாகத்தான் சிந்தித்து செயல்படுகிறேன் என்று தோன்றுகிறது.
பதிவிற்கு மிக்க நன்றி!!
கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டிருந்தால் போதும். தினமும் ஏதாவது வந்து விழுந்து கொண்டேதான் இருக்கும். விழுந்த உடனே அதை எழுத்தாக்க வேண்டியதில்லை. இரண்டு மூன்று நாட்கள் ஊறப்போட்டு பிறகு யோசித்தால் ஒரு சுவாரசியமான வடிவத்தில் கிடைத்துவிடும். //
உண்மையே! என்ன சுவாரஸ்யமாக எழுத இயலவில்லை பல சமயங்களில்...கண்டதையும், கேட்டதையும் அழகாக எழுத வேண்டுமே...அந்த நடை...ஓல சமயங்களில் பிசகி விடுகின்றது...
நல்ல ஆலோசனைகள்!
Post a Comment