May 14, 2014

மோடியைப் பார்த்து பயமா?

அரசியல் அரங்கில் படுவேகமாக மாறுதல்கள் நடக்கின்றன. மத்தியில் அமையவிருக்கும் மோடியின் அரசை நிபந்தனையுடன் ஆதரிக்கத் தயார் என்று ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பீஜூ ஜனதா தளமானது அறிவித்திருக்கிறது. ஞானோதயம். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரைக்கும் கூட இந்த நரேந்திர மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்று கர்ஜித்துக் கொண்டிருந்த நவீனுக்கு இப்பொழுது புத்தி மாறிவிட்டது. சரி. என்ன நிபந்தனையாக இருக்கும்? வேறு என்ன? நல்ல துறைகளாக எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்பார்கள். அவ்வளவுதான். 

ஒடிசாவில் இப்படியென்றால் அமரிக்க அதிபர் ஒபாமா ‘புதிய அரசுடன் நெருக்கமாக அமெரிக்கா செயல்படும்’ என்று நேற்று அறிவித்திருக்கிறார். அப்படியானால் இதுவரை மோடிக்கு விசா தராமல் இழுத்தடித்ததற்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்? அதற்கும் பதில் கைவசம் வைத்திருந்து சொல்லிவிட்டார்கள். ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில் மோடிக்கு A1 விசா கிடைத்துவிடும். 

ஒடிசாவிலும் அமெரிக்காவிலும் மட்டும் இல்லை- தமிழகத்திலும் இந்தக் கூத்து நடக்கிறது. அம்மையார் கோடநாட்டில் இருக்கும் வரை அமைதியாக இருந்த அதிமுக வட்டாரம், அம்மா மலை இறங்கியதும் ‘மோடியும் அம்மாவும் நல்ல நண்பர்கள். அவர்கள் அரசியல் ரீதியாக வேறாக இருப்பினும் மோடி பிரதமரானால் அவரோடு இணக்கமான உறவையே அம்மா விரும்புவார்’ என்று துண்டை விரித்திருக்கிறது. இந்த அறிவிப்பில் இருக்கும் தொனிதான் முக்கியம். இதுவே மோடிக்கு இருபது முப்பது ஸீட்டுக்கள் குறைகின்றன என்ற நிலைமை வந்து அம்மாவிடம் முப்பது ஸீட்டுக்கள் இருக்கும் என்கிற ரீதியில் கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்தால் இந்தக் குரலின் தொனியே மாறியிருக்கக் கூடும். ராஜ்நாத் சிங்கும், நிதின் கட்காரியும், அருண் ஜேட்லியும் தேவைப்பட்டால் மோடியும் கூட போயஸ் கார்டனின் வேதா நிலையத்தில் கவாத்து அடித்திருக்க வேண்டும்.

அப்படியானால் மோடிக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடுமா?

மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்று முழுமையாக நம்பமுடியவில்லை என்றாலும் இத்தகைய கணிப்புகளைச் செய்வதில் பிறரைவிடவும் அரசியல்வாதிகள் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்று நம்பலாம். இந்நேரம் கலைஞரும், ஜெயலலிதாவும், மோடியும் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை கிட்டத்தட்ட கணித்திருப்பார்கள். இந்தக் கணிப்பின் அடிப்படையிலேயே நவீன் பட்நாயக், ஜெயலலிதா ஆகியோர்களின் குரல்களையும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, எங்கப்பன்தான் பிரதமர் என்று துள்ளிக் கொண்டிருந்த அகிலேஷ் யாதவ் ஆகியோரின் அமைதியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை மே 16 அன்று இந்தக் கணிப்புகள் உண்மையாகி விடும்பட்சத்தில் இன்னமும் விக்கெட்கள் விழுவதைக் காணலாம். இப்பொழுதே சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் எட்டிக் குதிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் போலிருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இன்னும் யாரெல்லாம் கவிழ்வார்கள் என்று சொல்லமுடியாது. இந்த அரசியல்வாதிகளுக்கு எப்பொழுதும் பதவியும் அதிகாரமும் வேண்டும். எவனோ பிரதமராக இருந்துவிட்டுப் போகட்டும் எங்களுக்கு சில துறைகளை ஒதுக்கிவிடுங்கள் என்பதுதான் இவர்களின் அடிப்படையான கோரிக்கையாக இருக்கும். சரத்பவார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறைத் தேடினால் அவர்கள் பதவியில்லாமல் இருந்த காலத்தை விடவும் பதவியில் இருந்த காலம்தான் அதிகமாக இருக்கும்- மூச்சுவிடாமல் கூட இருந்துவிடுவார்கள் அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாது.

இன்னும் சிலருக்கு வேறு சில தர்மசங்கடங்கள்- வழக்குகளை முடிக்கவும், புதிய வழக்குகள் விழாமல் தடுக்கவும், ஏற்கனவே சிக்கிக் கொண்டு தள்ளாடும் சிக்கல்களில் இருந்து விடுபடவும், சிபிஐ விசாரணைகளைத் தவிர்க்கவும் என இன்னும் ஏதேதோ காரணங்களுக்காக மத்திய அரசுக்கு நிபந்தனையுடனோ, நிபந்தனை இல்லாமலோ, வெளியில் இருந்தோ, உள்ளுக்குளிருந்தோ, ஆடையோடோ அல்லது அம்மணமாகவோ ஆதரவு தர வேண்டிய சூழல். இனி ‘நானும் அவரும் மூன்றாவது படிக்கும் போதிருந்தே பழக்கம்’ என்கிற ரீதியில் எல்லாம் அறிக்கைகள் வரும். நாம் உணர்ச்சி வசப்படத் தேவையில்லை. தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடலாம்.

இந்த உலகம் அப்படித்தான். புதியவன் ஒருவன் வென்றுவிடக் கூடாது என்பதற்காக முடிந்தவரையில் தம் கட்டுவார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அவனைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்பதும் இனி அவன்தான் ஜெயிக்கப் போகிறான் என்பதும் தெரிந்துவிட்டால் அப்படியே சரண்டர் ஆகிவிடுவார்கள்.

 2001 ஆம் ஆண்டில் எத்தனை பேருக்கு மோடியைத் தெரிந்திருக்கும்? அப்பொழுது மோடி ஒரு மாநிலத்தின் முதல்வராகக் கூட இல்லை. இடையில் பன்னிரெண்டு வருடங்கள்தான். சர சரவென்று ஏறி பிரதமர் நாற்காலிக்கு வெகு அருகில் நின்று கொண்டிருக்கிறார். மோடி என்ற தனிமனிதரின் மீதான வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் இது ஒன்றும் சாதாரணக் காரியம் இல்லை என்று ஏற்றுக் கொள்ள முடியும். 

ராகுல் காந்தி பிறந்த போதே இந்த தேசம் முழுமைக்கும் அவர் அறிமுகமாகிவிட்டார். ஜெயலலிதாவை, அவர் முதன்முறையாக முதல்வர் ஆன 1991 ஆம் ஆண்டிலிருந்தே இந்த நாட்டுக்குத் தெரியும். முலாயம் சிங் யாதவை இருபதாண்டுகளாகவேனும் தெரியும். அத்வானி, சுஷ்மா சுவராஜ் என்று ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மோடிக்கு அருகில் காத்திருக்கும் நாற்காலிதான் கனவு. ஆனால் அத்தனை பேராலும் அடைய முடியாத நாற்காலி அது. மன்மோகன் சிங்குக்கும், தேவகெளடாவுக்கும் அமைந்தது போன்ற அதிர்ஷ்டம் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சரியான திட்டமிடல், கடுமையான உழைப்பு, வெகு நேர்த்தியான பிரச்சாரம் என்ற ஏகப்பட்ட விஷயங்களை மோடி அண்ட் கோ எப்பொழுதோ தொடங்கிவிட்டது.

மோடிக்காக ஒரு பெரிய டீம் வேலை செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மிகத் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். மோடி செய்த சாதனைகளைப் பற்றி தென்னாட்டுச் செய்தித்தாள்களில் வரும்படி பார்த்துக் கொண்டார்கள். மோடி நல்ல நிர்வாகி என்று அஸ்ஸாம் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். ஆந்திராவின் கிராமத்தில் மோடி என்ற பெயரைக் கேள்விப்படும்படியான முஸ்தீபுகளில் ஈடுபட்டார்கள். இது பக்காவான Strategy. சிறந்த திட்டமிடலும் அதைச் செயல்படுத்துவதற்கான வலுவும் திறமையும் இருந்தால் நம்மை யாராலும் தடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். 

மோடி ஏதோ வித்தை செய்து கொண்டிருக்கிறார் என்று சோனியாவும், ராகுலும் விழித்துக் கொண்ட போது தலைக்கு மேலாக ஒரு ஜான் வெள்ளம் போய்க் கொண்டிருந்தது. யு.ஆர்.அனந்தமூர்த்தியும் அமார்த்தியாசென்னும் அவர்களோடு நம் ஊர் ஃபேஸ்புக் புரட்சியாளர்களும் மோடியைத் தடுத்துவிடுவது என்று ஸ்டேட்டஸ்கள் போடத் துவங்குகையில் மோடி ஹெலிக்காப்டரில் பறக்கத் துவங்கியிருந்தார். அந்தப் புழுதியில் இவர்கள் கண்களைத் துடைத்து முடிக்கும் போது தேர்தல் தொடங்கியிருந்தது. மோடி மீது இருக்கும் கறையை வைத்து அவரை வெகு சுலபமாக அமுக்கியிருக்க முடியும். ஆனால் இவர்கள் தயாராகத் துவங்குகையில் மோடியின் பெயர் வள்ளியாம்பாளையத்து நல்லசாமி வரைக்கும் பாப்புலர் ஆகிவிட்டது.

மோடியின் மீதான விமர்சனங்களை வைக்க இவர்களுக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தன. ஆனால் இவர்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு மதத்தைத் தூக்கிக் கொண்டார்கள். Polarization என்பதைத் இந்தத் தேர்தலில் மிகத் தெளிவாக பார்க்க முடிந்தது. அதைத்தான் இசுலாமியர்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகள் எதிர்பார்த்தன. மோடியைத் தடுக்க முடியவில்லை என்றாலும் சாமானிய இசுலாமியனுக்கு ஒரு நடுக்கத்தை உருவாக்கியதுதான் இவர்கள் கண்ட பலன்.

ஒன்று புரியவில்லை. இவர்கள் கிளப்பிய அளவுக்கு இசுலாமியர்கள் மீதான வன்முறை என்பது சாத்தியமா? சாலையில் செல்லும் இசுலாமியனைக் கூட வெட்டிச் சாய்பார்கள் என்கிற ரீதியில் பேசத் துவங்கியிருந்தார்கள். அது அத்தனை சுலபமான காரியமா என்ன? மத்திய அரசு ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கும் போது தமிழக அரசும், மேற்கு வங்க அரசும், கர்நாடக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா என்ன? கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமைதியாக இருப்பார்கள்? அவ்வளவு ஏன் மக்கள் வேடிக்கை பார்ப்பார்களா? பாகிஸ்தானின் மக்கட்தொகையைக் காட்டிலும் இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள். இவ்வளவு பெரிய சமுதாயத்தின் சுண்டுவிரலைக் கூட அசைக்க முடியாது என்று உறுதியாக நம்பலாம். மோடி தலைமையிலான அரசு அமைந்தால் மதக்கலவரம் வெடிக்கும் என்பதெல்லாம் வாக்கு அரசியலுக்கான வெட்டி பிரச்சாரமாக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தேர்தல் முடிந்துவிட்டது. இனி அந்தப் பிரச்சாரங்களை மறந்துவிடலாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

மைனாரிட்டிகளின் மீதாக நேரடித் தாக்குதல்களை நடத்தவில்லை என்றாலும் இந்துத்துவ அரசு பெரும்பலத்துடன் அமைந்தால் சில நோண்டு வேலைகளைச் செய்ய சாத்தியமிருக்கிறது. பாடத்திட்டங்களில் காவியைப் புகுத்துவது, கிறித்துவ மிஷனரிகளுக்கான பண வரவு நாட்டிற்குள் வருவதைக் கட்டுப்படுத்துவது, இசுலாமியர்கள் ஈடுபடக் கூடிய சில குறிப்பிட்ட தொழில்களை நசுக்க முயற்சிப்பது போன்ற வேலைகளை கமுக்கமாக செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதுவும் கூட ஊடகங்கள் பெருகியிருக்கும் இந்தக் காலத்தில் அவ்வளவு எளிதில்லை என்றே தோன்றுகிறது. மூச்சுவிட்டால் கூட மொத்த ஊடகமும் பற்றிக் கொள்ளும் காலத்தில் சில சமூகங்களை குறி வைத்துச் செய்யும் இது போன்ற எந்தக் காரியமும் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்துத் தந்துவிடும்.

என்னதான் எதிர்ப்பாளர்கள் இந்தியாவின் தேர்தல் ஜனநாயக முறை என்பது கேலிக் கூத்தானது என்று பாட்டுப் பாடினாலும் நூற்றியிருபது கோடி மக்கள் பங்குபெறும் இந்த தேர்தல் முறையைவிடச் சிறப்பான முறையைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. வரலாற்றில் முதன்முறையாக அறுபத்தாறு சதவீத மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். கள்ள வாக்குகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.  மிகச் சிறப்பாகத் தேர்தல் முடிந்திருக்கிறது. நல்ல முடிவாக வரும் என்று எதிர்பார்ப்போம். நல்ல அரசு அமையட்டும். நல்ல அரசு அமையும் என்ற நம்பிக்கையில்தானே ஆண்டாண்டுகாலமாக இத்தனை பேரும் காத்துக் கொண்டிருக்கிறோம்? ஒருவேளை அடுத்த அரசும் சொதப்பினால் என்ன செய்வோம்? இன்னும் ஒரு தலைவன் வருவான் என்று இருக்கும் அரசை கரித்துக் கொட்டியபடியே காத்திருக்கத் தொடங்குவோம்.