May 13, 2014

ஒரு வேலை கிடைக்குமா?

ஒரு எம்.டெக் பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று ஓரிரண்டு நாட்களாக நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சாதாரண காரியமாகத் தெரியவில்லை. ‘இரண்டு வருட அனுபவம் இருந்தால் முயற்சி செய்யலாம்’  ‘Fresher என்றால் வேண்டாம்’- இதுதான் பெரும்பாலானவர்களிடமிருந்து வரும் பதில். அது என்ன படிப்பாக இருந்தாலும் சரி. குடும்பத்தில் அம்மா, அப்பாவுக்கு வருமானம் இருந்தால் ‘வேலை தேடுகிறேன்’என்று சொல்லிக் கொண்டு கொஞ்ச நாட்களுக்கு காலத்தை ஓட்டலாம். ஆனால் அவனை நம்பித்தான் குடும்பம் இருக்கிறது என்ற நிலைமையில் இருப்பவன் என்ன செய்வான்? அப்படியான பையன்தான் அவன். அரைச் சம்பளமோ, கால் சம்பளமோ- எங்கேயாவது ஒட்ட வைத்துவிட்டால் தப்பித்துக் கொள்வான். அதற்குத்தான் முயன்று கொண்டிருக்கிறேன்.

அதற்கே மென்று தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது.

யாராவது வேலை வேண்டும் என்று கேட்டால் ‘Resume கொடுப்பா விசாரிச்சு சொல்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்த வரை வேலை தேடுவதில் இருக்கும் வலி தெரியவில்லை. இதுவரைக்கும் ஊரிலிருந்து யாராவது வேலை தேடித் தரச் சொல்லிக் கேட்டால் அதிகபட்சமாக அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களும் நம்பிக்கையோடு சுயவிவரக் குறிப்பை அனுப்பி வைப்பார்கள். அதை நான்கைந்து பேருக்கும் நானும் அனுப்பி வைப்பேன். அவ்வளவுதான். ஆனால் அது பைசா பிரையோஜனப்படாது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. எத்தனை பேரை பொறுக்கி எடுக்கிறார்கள்? தனிப்பட்ட முறையில் இறங்கி வேலை செய்தால்தான் விண்ணப்பத்தை துளியாவது நகர்த்த முடியும் போலிருக்கிறது. இந்தச் செயலில் இறங்கும் போதுதான் வேலை தேடுவதன் கொடூரம் தெரிகிறது. வேலை வாங்குவது- அதுவும் ஒரு Fresher க்கு வேலை வாங்குவது அத்தனை சுலபம் இல்லை. 

ஒவ்வொரு வருடமும் படித்துவிட்டு வெளியே வரும் லட்சக்கணக்கானவர்கள் என்ன செய்கிறார்கள்? குறு விவசாயியின் மகன், சைக்கிள்கடைக்காரரின் மகள், டீக்கடைக்காரரின் பையன்கள் என்று  இவர்கள் எல்லோரும் எங்கே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்? கொஞ்சம் பேர் கேம்பஸ் இண்டர்வியூவிலும், இன்னும் கொஞ்சம் பேர் வேலை வாய்ப்பு முகாம்களிலும் தப்பித்துவிடுகிறார்கள். கார்பொரேட் நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருக்கும் அத்தை பையன், மாமா மகளை வைத்துக் கொண்டு சொற்பமான மாணவர்கள் வேலை வாங்குகிறார்கள். மிச்சம் மீதியெல்லாம்? சிரமம்தான்.

படித்தவர்களுக்கு வேலை தேடுவதுதான் கஷ்டம் என்று இல்லை. பொதுவாக, வேலைத் தேடல் என்பதே கஷ்டம்தான். நண்பர் ஒருவர் பெங்களூர் வந்திருக்கிறார். பத்தாவதுதான் படித்திருக்கிறார். மிகச் சிறந்த திறமையாளர். இன்னும் சில வருடங்களில் தமிழில் மிக முக்கியமான ஆளாக இருப்பார் என்று தைரியமாக நம்பலாம். அவருக்கு பொல்லாத காலம். சில தனிப்பட்ட காரணங்களுக்காக பெங்களூரில் அஞ்ஞாத வாசம் செய்கிறார். ஆறுமாத காலத்தை ஓட்டுவதற்கு உதவும்படி ஒரு வேலை பிடிக்க முடியுமா என்றார். நிறைய இடங்களில் wanted போஸ்டரைப் பார்த்திருக்கிறேன். அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை என்றுதான் நினைத்தேன். இரண்டு மூன்று நிறுவனங்களில் விசாரித்தேன். மேனேஜர் பதவியா கேட்கப் போகிறேன்? அலுவலகப் பணியாள் என்கிற அளவில்தான். ஆனால் அதற்கே யாரும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. வேலை இல்லை என்று சொல்வதைக் கேட்பதற்குக் கூட சங்கடம் இருக்காது. ஆனால் அதைச் சொல்வதற்குள் மனிதர்கள் காட்டும் முகபாவனையும், மெளனமும், உடல் அசைவுகளும் இருக்கிறதே- அதை எதிர்கொள்வதுதான் உச்சபட்சக் கொடுமை.

யாரோ வேறொருவருக்காக வேலை கேட்டுப் போகும் போதே இதையெல்லாம் எதிர்கொள்ள இத்தனை சங்கடமாக இருக்கிறது. அவரவருக்காக வேலை கேட்டுப் போகும் போது இதையெல்லாம் சகித்துக் கொள்ள எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? பிச்சை கேட்பவர்களிடம் ஒரு ரூபாய் கொடுப்பதற்குள் நாம் செய்யும் சேஷ்டைகளுக்கு இவை எந்தவிதத்திலும் சளைத்தவை இல்லை.

அப்பாவுக்கு ஹபிபுல்லா என்று ஒரு நண்பர் உண்டு. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் கோபி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரி. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே ஹபிபுல்லா நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக அப்பா சொல்லியிருக்கிறார். நாங்கள் அவரை அபி சித்தப்பா என்று அழைப்போம். அதில் அவருக்கு சந்தோஷம். ‘எவ்வளவு வயசானாலும் என்னை சித்தப்பா’ என்கிறான் என்று சந்தோஷப்படுவார். அந்தச் சந்தோஷத்தில் நிறைய அர்த்தங்கள் உண்டு. நிறைய அர்த்தங்கள் மட்டும் இல்லை- வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. அவரது கஷ்டங்கள் எல்லாம் முப்பத்தைந்து வயது வரைக்கும்தான். அதன்பிறகு அவரும் அவரது தம்பியும் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவிவிட்டார்கள். இப்பொழுது மிகப் பெரிய தொழிலதிபர்கள். ஆனால் இன்னமும் எந்தவித பந்தாவும் இல்லாமல்தான் பழகுகிறார். அவருக்கு என் மீது நம்பிக்கை அதிகம். என்னிடம் பேசும் போதெல்லாம் ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வார். ‘நாலு பேருக்கு வேலை கொடுக்கிற நிலைமையில் நாம இருக்கணும்ப்பா. அதுல ஒரு திருப்தி இருக்கு’ என்பார். கல்லூரி முடிக்கும் வரை இதைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்கவில்லை. கல்லூரியை முடித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டேன். அதன் பிறகு ஒன்றிரண்டு வருடங்கள் சொல்லிப் பார்த்தார். பிறகு இவன் தேற மாட்டான் என்று விட்டுவிட்டார். அதோடு சரி. நானும் மறந்துவிட்டேன். 

வெகுநாட்களுக்குப் பிறகு, அவர் சொல்லிக் கொண்டிருந்ததன் அர்த்தத்தை நண்பருக்கு வேலை கேட்டுச் சென்ற இடத்தில் இன்று உணர்ந்தேன். சம்பாதிக்கிறோமோ, இல்லையோ; கோடிகளில் புரள்கிறோமோ இல்லையோ- நம்மிடம் ஒரு தொழில் கைவசம் இருக்க வேண்டும். நான்கு பேருக்கு வேலை கொடுப்பது என்பது நான்கு குடும்பத்திற்கு சாப்பாடு போடுவது என்று அர்த்தம்- நான்கு குடும்பங்களைத் தாங்கிப் பிடிக்கிறோம் என்று ஒரு சந்தோஷம். இந்தப் பெருமை எத்தனை பேருக்கு சாத்தியம்? என்னைப் பொறுத்தவரையில் வேலை கொடுப்பவன் என்பவன் வரம் கொடுப்பவன்.

நம்மிடம் ஒரு வேலை இருக்கும் வரை நமக்கு அதன் மதிப்பே தெரிவதில்லை. கையில் நான்கு டீ-ஷர்ட்களைத் தூக்கிக் கொண்டு விற்பனை செய்ய முயன்று கொண்டிருக்கும் முதியவரின் மீது ஏளனப்பார்வையைச் செலுத்துகிறோம். ‘அக்வாகார்ட் வாங்கிக்குறீங்களா மேடம்?’ என்று கேட்டு வருபவர்களின் முகத்தைக் கூட பார்க்காமல் கதவைச் சாத்திவிடுகிறோம். ‘இந்த டிக்‌ஷனரியைப் பாருங்க சார்’ என்று வேகும் வெயிலில் டை கட்டிக் கொண்டு வரும் மனிதரிடம் ‘இது வொர்த் இல்லை’ என்று தயவு தாட்சண்யமே இல்லாமல் சொல்லிவிடுகிறோம். இந்த வேலையெல்லாம் நமக்கு மிகச் சாதாரணம். ஆனால் அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லையா? அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாயாக இருக்கும். ஆனால் ஐந்நூறு ரூபாய்க்காவது விற்பனை செய்துவிட்டுச் செல்லவார்களா என்று சொல்ல முடியாது. நாள் முழுவதும் அழுத்தத்திலேயே வாழ்கிறவர்கள் அவர்கள்.  நாள் முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு வந்து இறுக்கிக் கட்டப்பட்ட தங்களது ஷூவின் கயிறை அவிழ்க்கும் போது அவர்களது காலுக்கான அழுத்தம் மட்டும்தான் குறைகிறதே தவிர மண்டையில் ஏற்றப்பட்ட அழுத்தம் அப்படியேதான் இருக்கும். கொடுமை.

இருக்கும் வேலை வாய்ப்புகளை விடவும் பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கல்லூரியை விட்டு வெளியே வருபவர்கள் ஒரு வேலையைக் கண்டுபிடிப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. இந்த நிலைமை இப்படியே போய்க் கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இதில் சிறு உதவியை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காய்ந்து கிடக்கும் இந்த பெரும்பூமியில் ஒரு சிறு செடியை நட்டுவைத்து தண்ணீர் ஊற்றுவதைப் போல இது ஒரு சின்னஞ்சிறு செயல்தான். ஆனால் அதையாவது செய்ய வேண்டும். வருடத்திற்கு பத்து மாணவர்களுக்காவது வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும். பத்து முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது. அனுபவமிருப்பவன் எப்படியும் வேலை வாங்கிவிடுவான். ஆனால் புதிதாக படிப்பை முடித்து வெளியே வருபவர்களின் நிலைமைதான் கஷ்டம். அவர்களுக்கு உதவலாம். வெறும் Resume forward என்பதோடு நின்றுவிடாமல் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இந்த ஐந்து பத்துப் பேரையாவது கரை சேர்த்துவிட வேண்டும். எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் முயன்று பார்க்கலாம். இயன்றவர்கள் கை கொடுங்கள். இதை இந்த வருடத்தில் இருந்தே ஆரம்பித்துவிடலாம். உங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களில் Fresherக்கு ஏதாவது காலி இடம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். தகுதியான மாணவர்களை பிடித்துவிடலாம்.