May 30, 2014

யாருக்குத்தான் பிரச்சினை இல்ல?

‘யாருக்குத்தான் பிரச்சினை இல்ல?’ இதுதான் செமினாருக்கு தலைப்பு. பத்துப் பேர் கலந்து கொண்டோம். மேலாண்மைப் புலி ஒருவர் வகுப்பு எடுத்தார். இது போன்ற வகுப்புகளுக்கு வாய்ப்பு வந்தால் தவற விடாமல் சென்றுவிடுகிறேன். எப்படியும் வெகு சில நல்ல விஷயங்களையாவது மண்டைக்குள் ஏற்றிவிடுவார்கள். ஆனால் ஒன்று - நமக்குத்தான் எல்லாம் தெரியுமே என்கிற மனநிலையில் சென்றால் மரண வேதனையாகத்தான் இருக்கும். ‘இதெல்லாம் நமக்குத் தெரியாதா?’ என்று கடுப்பாக இருக்கும். அதனால் மண்டையைக் காலி செய்துவிட்டுச் செல்வதுதான் உசிதம். புலியும் இப்படித்தான் அந்த வகுப்பை ஆரம்பித்தார். ‘இந்த நான்கு மணி நேரங்களுக்கு மட்டும் என்னை அப்பாடக்கர் என்று நம்பிக் கொள்ளுங்கள்’ என்றார்.

இந்த நம்பிக்கையை உருவாக்குவதுதான் பெரிய விஷயமே. திடீரென்று ‘என்னைப் பெரியவனாக நம்பிக் கொள்’ என்றால் நாய் கூட நம்பாது. கடிக்கத்தான் வரும். நிரூபிக்க வேண்டுமல்லவா? கேட்பவன் நம்ப வேண்டுமானால் ஏதேனும் ஒரு credibility இருக்க வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நமது ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும். அவருக்கு மொத்தமே நான்கு மணி நேரங்கள்தான். வகுப்புத் தொடங்குவதற்கு முன்பாக தன்னை பெரியவன் என்று நினைக்க வைத்துவிட வேண்டும். அதைச் செய்வதற்கு அவரிடம் ஒரு கதை இருந்தது. சொந்தக் கதை. அம்மா, அப்பா என்று யாரும் இல்லாத மனிதர் அவர். நினைவு தெரிந்த காலத்திலிருந்தே அநாதைவிடுதியில்தான் இருந்திருக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் அநாதைவிடுதி அது. படிப்பு நன்றாக வந்திருக்கிறது. விடுதியிலேயே படிக்க வைத்திருக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் மேலாண்மைப் படிப்பை முடித்துவிட்டு சில நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இப்பொழுது இங்கு வந்து பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். தனது படிப்பு மொத்தமும் ஸ்காலர்ஷிப்தான். ஐந்து நிமிடங்களுக்குள் தனது கதையைச் சொல்லி முடித்தார்.

‘நான் செய்தது பெரிய சாதனை இல்லை. கொஞ்சம் முயன்றால் இதையெல்லாம் யார் வேண்டுமானாலும் சாதித்துவிடலாம். ஆனால் எனக்கு மிகப் பெரிய பலவீனம் இருக்கிறது. என்னால் மீளவே முடியாத பலவீனம் அது. அந்தப் பிரச்சினையை இந்த வகுப்பு முடியும் போது சொல்கிறேன்’ என்றவர் ‘இப்பொழுதும் இந்த தலைப்பில் வகுப்பு எடுப்பதற்கு எனக்குத் தகுதியில்லை என்று யாராவது நினைத்தால் சொல்லுங்கள்’ என்ற போது யாரும் கையை உயர்த்தவில்லை. 

கதையைக் கேட்டவுடன் அவரை நம்பத் துவங்கினோம். ‘அதனால்தான் கேட்கிறேன். யாருக்கு பிரச்சினையில்லை?’ - தலைப்பை பிடித்துவிட்டார். அவர் கேட்பது சரிதான். எல்லோருக்கும்தான் பிரச்சினைகள் இருக்கின்றன. சாதாரண மனிதனிலிருந்து தேசத்தின் தலைவன் வரைக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது. தலைக்குத் தகுந்த பாரம். ஆனால் இந்த பாரத்துக்கும் மேலாக வாழ்க்கை இருக்கிறது. அதுதான் சூட்சமம்.

அடுத்த நான்கு மணி நேரமும் போனதே தெரியவில்லை. மொத்த சாராம்சமும் ஒன்றுதான் - பாஸிட்டிவிட்டி. எதையுமே பாஸிட்டிவாக பார்ப்பது. 

வரிசையில் சென்று கொண்டிருக்கும் எறும்பை கலைத்துவிட்டால் அடுத்த சில நிமிடங்களில் தனது வரிசையை அமைத்துவிடுகிறது. ஒரு நாய்க்குட்டியை கல்லால் அடித்துத் துரத்திவிட்டு பிறகு விசிலடித்தால் வாலை அசைத்துக் கொண்டே வருகிறது. மற்ற எந்த உயிரினமுமே அப்படித்தான். எவ்வளவு பெரிய சவால்கள் வந்தாலும் சாதாரணமாக தாண்டிக் குதித்துவிடுகின்றன. ஆனால் மனிதன் தான் அத்தனையையும் தனக்குள் புதைத்து வைத்துக் கொள்கிறான். எல்லாவற்றிலும் நெகட்டிவிட்டி.

திரும்பத் திரும்ப புலம்பும் மனிதர்களைப் பார்க்கிறோம். எதையெடுத்தாலும் அதில் இருக்கும் எதிர்மறையான விஷயங்களையே பேசுகிறார்கள். எழுத்திலேயே அடுத்தவனைக் கதறடிக்கிறார்கள். அழுகை, துக்கம் உள்ளிட்ட நெகட்டிவிட்டி சமாச்சாரங்களைத் தாண்டி வராதவர்களால் சூழப்பட்டிருக்கிறோம். நல்ல விஷயங்களைவிடவும் கெட்ட விஷயங்களையே நினைத்து குமுறிக் கொண்டிருப்பவர்கள் சுற்றிச் சுற்றி இருக்கிறார்கள்.

எதிர்மறையானவற்றைப் பற்றி பேசுவதையும் விவாதிப்பதையும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவநம்பிக்கைகளை விதைப்பவர்களைவிடவும் நம்பிக்கைகளை தூண்டுபவர்கள்தான் அவசியம். உலகின் இருளைக் காட்டுபவர்களைவிடவும் வெளிச்சத்தின் கீற்றுகளைக் காட்டுபவர்கள்தான் தேவை. அவர் பேசிக் கொண்டிருக்கும் போது எத்தனையோ இலக்கியவாதிகளின் முகங்கள் வந்து போயின. எத்தனையோ பத்திரிக்கையாளர்களின் பெயர்கள் நினைவுக்கு வந்து போயின. எத்தனையோ புலம்பல்வாதிகளின் கதறல்கள் ஞாபகத்திற்கு வந்தன. 

உயிர் போவதைத் தவிர வேறு பிற அத்தனையுமே சமாளித்துவிடக் கூடிய சவால்கள்தான் - இதை அவர் சொல்லிக் கொண்டிருந்த போது எனக்கு கெட்ட நேரம் வந்திருந்தது. ராஜீவ்காந்தி அழைத்தார். நண்பர். மதுரைக்காரர். வடகிழக்கு மாநிலத்தின் எல்லை முகாமில் இருப்பவர். அவருடன் பேசி வெகுநாட்கள் ஆகியிருந்தது. ‘எக்ஸ்க்யூஸ்மீ’ சொல்லிவிட்டு வெளியில் வந்தேன்.

‘என்ன ராஜீவ்? ரொம்ப நாளா சத்தத்தையே காணோம்?’ 

அவர் முன்பு காஷ்மீரில் இருந்திருக்கிறார். அதைப் பற்றி எப்பவோ அவர் சொல்லிக் கொண்டிருந்த போது ‘பக்கத்து நாட்டிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வரும் போது விஜயகாந்த் மாதிரி பொங்குவீங்களா?’ என்று கேட்டிருக்கிறேன். ‘பொண்டாட்டி புள்ளங்க அத்தனை பேர் முகமும் ஞாபகத்துக்கு வந்துட்டு போகும். அவங்களை போய் பார்க்கணும்ன்னா கண்ணை மூடிட்டு சுட்டுடா கைப்புள்ள’ என்று நினைத்துக் கொண்டே சுட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஜாலியான மனிதர்.

நேற்று வழக்கமான உற்சாகம் அத்தனையும் வற்றியிருந்தது. ‘அப்பா இறந்துட்டாரு சார்’. 

ராஜீவ் இப்பொழுது அஸ்ஸாமில் இருக்கிறார். அவரது தம்பி குஜராத்தில் இருக்கிறார். அவரும் ராணுவ வீரர்தான். அப்பாவும் அம்மாவும் மதுரையில். அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். இறந்துவிட்டார். காலையில் தகவல் வந்திருக்கிறது. கிளம்பிவிட்டார். ராஜீவ் பயங்கரமான குழப்பத்தில் இருந்தார். ராணுவ நண்பர்கள் குவஹாத்தி விமான நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குவஹாத்தியிலிருந்து பெங்களூருக்கோ, சென்னைக்கோ விமானம் பிடிக்க வேண்டும் என்றார். துக்கத்தில் இருப்பவர்களை எதிர்கொள்வதற்கு தைரியம் வேண்டும். எனக்கு அவ்வளவு தைரியம் இல்லை. சில ஆறுதல் வார்த்தைகளை பேசிவிட்டு வந்து வகுப்பில் அமர்ந்தேன். அதன் பிறகு கவனம் சிதறிக் கொண்டேயிருந்தது. 

மதியம் மூன்று மணிக்கு மீண்டும் ராஜீவை அழைத்தேன். அவருக்கு அதுவரையிலும் விமானம் கிடைத்திருக்கவில்லை. ஆறு மணிக்குத்தான் சென்னைக்கு விமானம். அதுவரையில் விமான நிலையத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும். தந்தையின் இழப்பை விடவும் இதுதான் கொடுமை. தனிமையில் இருக்கும் போது அவருக்கு தனது தந்தை குறித்தான அத்தனை நினைவுகளும் வந்து சென்றிருக்கும். அருகிலும் யாரும் இல்லை. ‘அநாதை மாதிரி உட்கார்ந்துட்டிருக்கேன்’ என்ற போது உடைந்து போனார். அவர் உடையக் கூடிய மனிதர் இல்லை.

செமினாரில் புலி பேசியதெல்லாம் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. பிற எந்தப் பிரச்சினையை சமாளித்தாலும் மரணத்தை சமாளிப்பது மிகப்பெரிய விஷயம். இல்லையா? மரணம் மட்டும்தான் irreversible. இப்பொழுதெல்லாம் எத்தனையோ மரணங்கள் சர்வசாதாரணம் ஆகிவிட்டன. ரயில் விபத்தில் நூறு பேர் செத்துட்டாங்களாம் என்றால் ‘ப்ச்’ என்பதோடு அந்த துக்கம் முடிந்தது. ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதைக் கேட்டால் ‘பாவம்’ என்பதோடு நமது இரக்கம் தீர்ந்துவிடுகிறது. உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பெண்களை மானபங்கம் செய்து மரத்தில் தொங்கவிட்டார்களாம் என்றால் ‘அவங்க செத்தா உங்களுக்கு என்ன? நீங்க பாதுகாப்பாத்தானே இருக்கீங்க’ என்று அகிலேஷ் யாதவ் கேட்கிறார். மலேசிய விமானம் என்ன ஆனது என்று இன்னமும் அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் தெரியாது என்று நம்புகிறீர்களா? 

மாலையில் செமினார் எடுத்த புலி கேண்டீனில் தனியாகச் சிக்கினார். ‘மரணத்தில் மட்டும் பாஸிட்டிவிட்டி வேலைக்கு ஆகாதுல்ல’ என்றேன். மரணத்தில்தான் பாஸிட்டிவிட்டி மிக அவசியம் என்றார். ராஜீவ் பற்றிச் சொன்னேன். மீண்டும் அவரிடம் பேசுங்கள் என்றார். என்ன பேசுவது?  ‘உங்கள் அப்பாவின் மரணம் உங்களைவிடவும் உங்கள் அம்மாவுக்குத்தான் பேரிழப்பு. நீங்களே உடைந்திருந்தால் அவரை யார் தேற்றுவது என்று கேளுங்கள்’ என்றார். அதுதான் பாஸிட்டிவிட்டி. எவ்வளவு பெரிய துக்கத்தையும் விட நாம் ஒரு இன்ச் மேலே சென்றுவிட வேண்டும்.

அவர் சொல்லிவிட்டார். என்னால் தெளிவாகப் பேச முடியுமா என்று தெரியவில்லை. ராஜீவை அழைத்தேன். வேறு ஏதோ பேசிவிட்டு ஒரு இடைவெளி கொடுத்தேன். அவர் எனக்கு பெரிய வேலை வைக்கவில்லை. ‘அம்மாவை தேத்தணும் சார். அவர் முகத்தை எப்படி பார்ப்பேன் என்று தெரியல. என்னை விடவும் அவங்களுக்குத்தான் துக்கம் அதிகம்’ என்றார். பாஸிட்டிவிட்டி பற்றி புரிந்து கொள்ள நான்கு மணி நேர செமினாரும் ஒரு மேலாண்மைப் புலியின் அறிவுரையும் எனக்கு தேவைப்பட்டிருக்கிறது. ராஜீவுக்கு அது நெஞ்சுக்குள்ளேயே இருந்திருக்கிறது. எனக்கு சற்று தெளிவாக இருந்தது. 

ராஜீவிடம் பேசியது பற்றி புலியிடம் சொன்னேன். சிரித்தார். ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை- ‘உங்கள் பலவீனத்தை கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை’ என்றேன். அந்தப் புலி ‘அதுதான் என் பலவீனம்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டது. அது என்ன பலவீனம் என்று உங்களுக்கு புரிந்ததா?

May 29, 2014

துணிந்தவன் ஜெயிக்கிறான்

NTTF(Nettur Technical Training Foundation) பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். 1960களில் இருந்து தொழிற்சார் கல்வியை கற்பித்துவரும் நிறுவனம். பதினோரு வருடங்களுக்கு முன்பாக ஓசூரில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தில் கஷ்டப்பட்டு வந்த எனது வாழ்வைப் புரட்டி போட்ட இடம் இது. 

டூல் எஞ்சினியரிங், புராடக்ட் டிசைன் என இரு பிரிவுகளில் 2 ஆண்டு முதுநிலை பாடமும், டூல் டிசைன்/குவாலிட்டி ஆகியவற்றில் 1 ஆண்டு முதுநிலை பட்டையப் படிப்பும் கற்பிக்கிறார்கள்.  தொழிற்சாலைகள் அருகிலேயே இருப்பதால் செயல்வழிக் கற்றலுக்கும் குறைவில்லாத இடம் அது. படித்த பாடத்தை அது பயன்படும் இடத்திலேயே பார்த்து கற்றுக் கொள்ளலாம். 

உங்களுக்கு விருப்பமிருக்கும் பட்சத்தில் உங்கள் வலைத்தளத்தில் இந்த படிப்பைப் பற்றி எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு மாணவனுக்கு உதவக் கூடும்.

சொல்ல மறந்துவிட்டேனே... கடந்த  கடந்த 18~20 வருடங்களாக இங்கு படிக்கும் 90% க்கும் அதிகமானவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் வேலை கிடைத்துவிடுகிறது.

-அசோக் குமார்.

திரு. அசோக் குமார் குறிப்பிட்டிருப்பது போல பொறியியல் அல்லது பட்டயப்படிப்பை முடித்துவிட்டு வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த நிறுவனம் உதவக் கூடும். சென்னையைப் பற்றித் தெரியவில்லை- பெங்களூரில் இது போன்ற சில நிறுவனங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்- இவை வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய நிறுவனங்கள். வெறும் புத்தகப் படிப்போடு நின்றுவிடாமல் தொழில் கற்றுக் கொள்ளலாம். 

எம்.டெக் படிக்கிறேன் என்று லட்சக்கணக்கில் ஏ.சி.சண்முகத்துக்கும், பச்சமுத்துவுக்கும், ஜேப்பியாருக்கும் அழுவதற்கு பதிலாக இது போன்ற உத்தரவாதமுள்ள படிப்புகளைப் பற்றி யோசிக்கலாம். இத்தகைய தொழிற்சார் பட்டயப் படிப்புகளை முடித்துவிட்டு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நான்கைந்து வருடங்களுக்கு பணி புரியலாம். ஒத்து வந்தால் பார்க்கலாம் இல்லையென்றாலும் கூட படித்த படிப்பு கை கொடுத்துவிடும். மிகச் சிறிய நிறுவனம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்தால் கூட மேலே வந்துவிடலாம். 

கோயமுத்தூர், அம்பத்தூர் போன்ற இடங்களில் கவனித்துப் பார்த்திருக்கலாம்- சிறு சிறு தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் என்ன தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். பெரிய நிறுவனம் ஒன்றோடு ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அந்த நிறுவனத்திற்குத் தேவையான சிறியதாக ரப்பர் மூடி ஒன்றைச் செய்து தருவார்கள். அவ்வளவுதான். ஒவ்வொரு மாதமும் இத்தனை லட்சம் ரப்பர் மூடி என்று பேசி வைத்திருப்பார்கள். அவற்றைத் தயாரித்து அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். பார்ப்பதற்குத்தான் சிறிய பட்டறை. ஆனால் ஏழெட்டுப் பேருக்கு வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கும்.

இப்பொழுதெல்லாம் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கிட்டத்தட்ட அத்தனை வேலைகளையும் outsourcing செய்துவிடுகின்றன. ஒரு மோட்டார் தயாரிக்கும் நிறுவனம் தனக்குத் தேவையான அத்தனை உதிரிபாகங்களையும் தானே தயாரிப்பதில்லை. மேற்சொன்னபடி சிறு நிறுவனங்களிடமிருந்துதான் உதிரி பாகங்களைப் பெற்றுக் கொள்கின்றன. ஒரு சிறு நிறுவனம் மோட்டார் நிறுவனத்திற்குத் தேவயான ஆணிகளை உற்பத்தி செய்து தரும், இன்னொரு நிறுவனம் மோட்டாருக்குத் தேவையான ரப்பர் வால்வுகளை உற்பத்தி செய்து தரும், இன்னொரு நிறுவனம் Name plate அச்சடித்துத் தரும். பெரிய நிறுவனத்தின் வேலை என்பதே இதையெல்லாம் வாங்கி பொருத்தி(Assemble) தனது நிறுவனத்தின் Brand ஐ ஒட்டி விற்பனை செய்வதுதான். 

இது மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மட்டும் இல்லை- கார் தயாரிப்பிலிருந்து கம்யூட்டர் தயாரிப்பு வரைக்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் இதுதான் நடக்கிறது. பெரிய நிறுவனங்கள் தங்களின் Brand பெயரை வைத்து பணம் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒவ்வொரு பாகமும் வேறு யாராவது தயாரித்ததாகத்தான் இருக்கும். 

இந்தியாவில் உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கும் என்கிறார்கள். கனரகத் தொழிற்சாலைகளுக்கு நம்மவர்கள் ரத்தினக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே இங்கு இருக்கும் பல நிறுவனங்களே சரியான உதிரி பாகங்கள் கிடைக்காமல் திணறுகின்றன. இங்கு கிடைக்காத பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவையெல்லாம்தான் வாய்ப்புகள். சரியான வாய்ப்பைக் கண்டுபிடித்துவிட்டால் துணிந்து தொழிற்சாலை ஆரம்பித்துவிடலாம். மிகப்பெரிய முதலீடு தேவைப்படும்  என்றும் சொல்ல முடியாது. சுமாரான முதலீடு போதும். அதற்கும் சிறு தொழில் தொடங்க உதவுவதற்கான ஏகப்பட்ட கடன் வசதிகள் இருக்கின்றன. அரசாங்கமே கொடுக்கிறது. பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெரிய நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாகத்திற்கான ஆர்டர் பிடிக்குமளவுக்கு தொடர்புகள் இருந்தால் போதும். அப்படியான தொடர்புகள் ஏதுமில்லாதவர்கள் சில வருடங்களுக்கு வேறொரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தால் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். 

NTTF நுழைவுத் தேர்வு நடத்துகிறது. இது ஒன்றுதான் நிறுவனம் என்றில்லை. ஒரு உதாரணம்தான். வேறு நல்ல நிறுவனங்கள் இருந்தாலும் யோசித்துச் சேரலாம். NTTF உட்பட எந்த நிறுவனமாக இருந்தாலும் அதன் தற்போதைய தரம், படிப்புக்கு பிறகான வேலை வாய்ப்பு குறித்து விசாரித்துவிட்டுச் சேருங்கள்.

இவனுக்கு என்ன எழுதிவிட்டு போய்விடுவான் ‘தொழிற்சாலை ஆரம்பித்து, ஆர்டர் பிடித்து...என்னத்த ஆரம்பித்து..என்னத்த பிடித்து’ என்று நினைக்க வேண்டியதில்லை. எழுதுவதற்கு எளிதுதான். உள்ளே கால் வைத்தால்தான் அதில் இருக்கும் சிரமங்கள் தெரியும் என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால் துணிந்து இறங்கினால் இது நிச்சயமாக சாத்தியப்படும். நிறைய உதாரணங்களைக் காட்டமுடியும். 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- எப்பொழுதுமே துணிந்தவன்தான் ஜெயிக்கிறான்.

(கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்து அடிக்கடி எழுதுகிறான் என்று சலித்துக் கொள்ள வேண்டாம். இது சீஸன். யாராவது ஒருவருக்காவது உதவலாம் இல்லையா? அதுதான்)

May 28, 2014

மலேசியன் மசாஜ் பார்லர்

எங்கள் பழைய அலுவலகத்தில் Motor mouthக்காரர் ஒருவர் இருந்தார். யாராவது சிக்கிக் கொண்டால் காதுக்குள் தொண தொணவென்று பேசிக் கொண்டேயிருப்பார். கேட்பவனுக்கு ரத்தம் வந்துவிடும். சமீபத்தில்தான் நான் ஐ.டியில் சேர்ந்திருந்தேன். அவர் அப்பொழுதே கொட்டை போட்டிருந்தார்- பல வருடங்களாக ஐடியில் தின்ற பழங்களின் கொட்டை அது. ஆரம்பத்தில் அவரது வாய்க்குள் யாரோ மோட்டாரை வைத்திருக்கிறர்கள் என்று தெரியாது. ‘அமெரிக்கா போயிருக்கீங்களா சார்?’ என்று கேட்டுவிடுவேன். அவ்வளவுதான். இந்தியாவில் பெட்டி கட்ட ஆரம்பத்திததிலிருந்து அங்கு போய் strip tease பாரில் பேண்ட்டைக் கழட்டியது வரை அளப்பார். இதையெல்லாம் ஒரு தடவை கேட்கலாம். இரண்டு தடவை கேட்கலாம். கிட்டத்தட்ட ஐம்பது தடவையாவது சொல்லியிருப்பார். நானும் கேட்டிருக்கிறேன். சீனியராக வேறு இருக்கிறார். ‘போதும் விடுங்க’ என்றும் சொல்ல முடியாது.  தூங்கும் போது தாரைக் காய்ச்சி இந்த ஆள் வாயில் ஊற்றிவிடு கடவுளே என்று வேண்டிக் கொள்வேன்.

இப்படியான அந்த மனிதரோடுதான் மலேசியா சென்றேன். அதுதான் எனக்கு முதல் விமானப் பயணம். எங்களோடு ஒரு பெரிய டீமும் வந்தது. ஆனால் எனக்குத்தான் கெட்ட நேரம். ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் இரண்டு கால்களையும் தூக்கி என் மீது போட்டிருந்தன. விமானத்தில் மோட்டார்க்காரர்தான் என் பக்கத்து இருக்கை. ஏற்கனவே எனக்கு பயத்தில் இரண்டு மூன்று முறை காற்சட்டை துளித் துளியாக ஈரமாகிக் கொண்டிருந்தது. அதில் இந்த ஆள் வேறு, கண்ணை மூடி ‘மாரியாத்தா’ என்று கூப்பிட்டால் ‘பினாங்குல மசாஜ் செமயா இருக்கும் தெரியுமா?’ என்பார். பற்களைக் கடித்துக் கொண்டு ‘பைலட் ஃப்ளைட்டை கடலில் இறக்காம ஓட்டச் சொல்லு ஆத்தா’ என்றால் ‘அங்கத் தமிழ் படம் கூட வரும்’ என்பார்.

‘ஒரேயொரு தடவை சாமியை முழுசா கும்பிட்டுக்கிறேன் இருங்க’ என்று சொல்லிவிட்டு பம்மிக் கொண்டிருந்தேன்.

‘பயமா இருக்கா? யூ ஃபன்னி கய்’ என்றார். அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பின்னாடி இருந்தவர்களிடமெல்லாம் திரும்பி ‘இவன் பயந்துட்டான்....பயங்கரமா சாமி கும்பிடுறான்’ என்று நக்கல் வேறு. அவர்கள் நக்கல் அடித்தால் அடித்துவிட்டு போகட்டும். நமக்கு உசுரு முக்கியம் இல்லையா? சாமிகளிடம் முக்கிக் கொண்டிருந்தேன்.

விமானம் ஏறும் போது ‘Take offதான் முக்கியம்...கொஞ்சம் ஏமாந்தாலும் வெடிச்சுடும்’ என்றார். பறக்கும் போது ‘இது ரொம்ப முக்கியம்....கீழே விழுந்தால் கடல்தான்’ என்று கிலியூட்டினார். இறங்கும் போது ‘துளி நிலத்தில் பட்டாலும் போச்சு...சிதறிடும்’ என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டே இருந்தார். ‘என்ன மனுஷன் இவன்?’ என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் அந்த ஆளுக்கு அதில் ஒரு த்ரில். ஸாடிஸ்ட்.

ஒரு கால் மீது இன்னொரு காலை இறுகப்போட்டு போய்ச் சேர்ந்தேன். காற்சட்டை மொத்தமும் நனைந்துவிட்டால் அசிங்கமாகிவிடும் இல்லையா?

விதி அதோடு நிற்கவில்லை. 

பினாங்கில் என்னையும் அவரையும் ஒரே அறையில் அமுக்கிவிட்டார்கள். வழக்கமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு ஆளாளுக்குத் தனி அறை கொடுப்பார்கள். எங்கள் நிறுவனம் பிசினாரி. இரண்டு பேருக்கு ஒரு அறை என்று சொல்லிவிட்டார்கள். சிக்கிக் கொண்டேன். முதல் சில நாட்களுக்கு பிரச்சினை இல்லை.  அலுவலகம் முடிந்தவுடனேயே அறைக்கு வந்துவிடுவார். அதன் பிறகுதான் சேட்டைகளை ஆரம்பித்தார். மலேசியாவில் சில நண்பர்களைப் பிடித்துக் கொண்டார். கண்டபடிக்கு ஊர் சுற்றத் துவங்கியிருந்தார். நள்ளிரவு தாண்டித்தான் அறைக்கு வந்து சேர்வார். ஆனால் சுற்றிவிட்டு வந்து அமைதியாக இருக்க மாட்டார். உசுப்பேற்றுவதுதான் அவரது நோக்கமே. ‘மசாஜ் பார்லர் போனேன்...சைனீஸ் பொண்ணுங்க___________’. இந்த ______ல் நீங்கள் எதையெல்லாம் நிரப்ப விரும்புகிறீர்களோ நிரப்பிக் கொள்ளுங்கள். அத்தனை கதைகள். 

கூட இருப்பவன் நம்மை விட இளையவன், திருமணம் ஆகாதவன் என்றெல்லாம் எதையும் நினைக்க மாட்டார். என்னாலும் கேட்காமல் இருக்க முடியாது. ஆர்வத்தைக் காட்டாதது போல விசாரித்துக் கொள்வேன். அவர் உசுப்பேற்றியதில் கிட்டத்தட்ட பாதி ஃப்யூஸ் போய்விட்டது. இனி எப்படியும் சனிக்கிழமையன்று மசாஜ் பார்லருக்கு போய்விட வேண்டும் முடிவு செய்து கொண்டேன். மசாஜ் பார்லர் பற்றிய விவரங்களை இந்த ஆளிடம் விசாரிக்கக் கூடாது என்றும் ஒரு வைராக்கியம்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகாமையில் ஒரு மலாய்க்காரனின் மெஸ் இருந்தது. கொத்துபுரோட்டாவிலிருந்து அத்தனையும் கிடைக்கும். அங்கு வேலை செய்தவர்கள் எல்லோருமே நம்மவர்கள்தான். ராமநாதபுரம், புதுக்கோட்டைக்காரர்கள். அதில் குமார் என்றொரு பையன் இருந்தான். என்னுடைய வயதுதான். அவனிடம்தான் விசாரித்தேன்.

‘இங்க மசாஜ் பார்லர் எப்படியிருக்கும்’ என்றுதான் ஆரம்பித்தேன். அவன் வித்தியாசமாகச் சிரித்தான். நக்கலான சிரிப்பு. அந்தச் சிரிப்பினாலேயே இனி இவனிடம் அதிகம் கேட்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். 

‘சும்மா மசாஜ் மட்டும்தான்...ரிலாக்ஸ் பண்ணலாம்ன்னு’ என்றேன். அவன் என்னை நல்லவன் என்று நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது. அதன் பின்னர் சிரிக்கவில்லை.

‘சைனீஸ் மசாஜ் செண்டர் இருக்கிறது. ஆனால் நான் போனதில்லை’ என்றான்.

மோட்டார்க்காரர் சொன்ன அதே மசாஜ் செண்டராகத்தான் இருக்க வேண்டும். இடங்களைக் குறித்துக் கொண்டேன். அதன் பிறகு ஒவ்வொரு நாளுமே கற்பனைச் சிறகுகள் விரிந்தன. 

ஏகப்பட்ட கனவுகளோடு சனிக்கிழமை மதியம் சென்றிருந்தேன். கூட்டமே இல்லை. உள்ளே செல்வதற்கு நடுக்கமாக இருந்தது. உலக மகா தப்பு செய்கிறோமோ என்று பதறியபடியே இருந்தேன். ஆனால் இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. இனி என்ன தயக்கம்? உள்ளே நுழைந்தாகிவிட்டது. வரவேற்பறையில் ஒரு பெண் இருந்தாள். சைனீஸ். 

‘என்ன மசாஜ் வேண்டும்?’ கொஞ்சும் ஆங்கிலத்தில் கேட்டாள். ஒரு அட்டையில் விலை விவரங்கள் இருந்தது. இருப்பதிலேயே விலை குறைவான மசாஜ் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். 

‘ப்ரஷர் அதிகம் வேண்டுமா, குறைவாக வேண்டுமா?’ என்றாள். இதையெல்லாம் எதற்கு இவள் கேட்கிறாள் என்று யோசனை எழுந்தது. ஒருவேளை இவளேதான் செய்வாளோ என்று குறுகுறுப்பு வேறு. இவள் எவ்வளவு அழுத்தினாலும் தாங்கிக் கொள்ளலாம் என்று ‘அதிகம்’ என்று சொல்லிவிட்டேன். கிளி சிரித்தபடியே அறையைக் காட்டியது. நினைத்தது சரிதான் போலிருக்கிறது. அவளேதான் அறை வரைக்கும் வந்தாள். ஒரு வெள்ளைத் துணியைக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அடுத்த ஐந்து நிமிடங்கள் டென்ஷனாகவும் கிளுகிளுப்பாகவும் நகர்ந்து கொண்டிருந்தன. 

கதவு தட்டப்பட்டது. 

குப்புற படுத்தபடியே ‘யெஸ்’ என்றேன். அவளாகத்தான் இருக்கும் என்று திரும்பிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஒரு ஆண் வந்திருந்தான். என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகப் படுத்திருந்தேன். அடுத்த சில வினாடிகளில் அந்தப் பெண் உள்ளே வந்து ‘இவர்தான் மசாஜ் செய்வார். பார்வையற்றவர். காதும் கேட்காது, வாயும் பேச முடியாது’ என்றாள். 

‘ம்ம்ம்’

‘இவரிடம் எதுவும் பேச முயற்சிக்க வேண்டாம். அமைதியாகப் படுத்துக் கொள்ளுங்கள்’ என்று கடுப்பேற்றிவிட்டு போய்விட்டாள். அவரைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆனால் நான் இதை எதிர்பார்க்கவில்லை. இனி ஒன்றும் செய்வதற்கில்லை. குப்புற படுத்துக் கொண்டேன். அவரது விரல்களைத் தொட்டு ஏதோ சைகை செய்துவிட்டு கதவை மூடிவிட்டாள். 

அந்த மனிதர் மெதுவாக படுக்கைக்கு அருகில் வந்தார். அவரது கைக்கு எட்டுமிடத்தில்தான் எண்ணெய் இருந்தது. கண்களை மூடிக் கொண்டேன். எண்ணெயை எடுத்து என் மீது பூசிவிட்டு அமுக்கத் துவங்கினார் பாருங்கள். தட் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே மொமண்ட். ‘ப்ரஷர் அதிகம் கொடு’ என்றுதான் அவள் சைகை செய்துவிட்டுப் போயிருப்பாள் போலிருக்கிறது. மனிதர் விளையாடினார். அப்பொழுது நான் படு ஒல்லியாக இருப்பேன். ஒவ்வொரு அமுக்கிலும் எலும்புகள் நெட்டி முறித்தன. முறிந்த எலும்புகளை எல்லாம் கடைசியில் மூட்டை கட்டித்தான் கொடுப்பார்கள் என்று பற்களை கடித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆளிடம் சொல்லவும் முடியாது. கத்தினாலும் கேட்காது. விரலைப் பிடித்து ஏதாவது சொல்லலாம்தான். அதை அவர் வேறு மாதிரி புரிந்து கொண்டால் என்ன செய்வது? அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களும் என் உடலில் கொத்து புரோட்டா போட்டார். கண்கள் கலங்கிப் போயின. கழுத்து, இடுப்பு, கால்கள் என்று ஒரு இடம் பாக்கியில்லை. இனி வாழ்க்கையில் மசாஜே வேண்டாம். விட்டால் போதும் என்றிருந்தது. கிளம்பிய சூட்டில் காதில் புகை வரும் போல இருந்தது. 

‘எப்படா முடிப்ப?’ என்று நெஞ்சுக்குள் கெஞ்சியபடியே படுத்திருந்தேன். அது எங்கே முடிகிறது? யுகம் யுகமாக இழுக்கிறது. ஒவ்வொரு நொடியும் வீணாக்காமல் அந்த சைனாக்காரன் பட்டையைக் கிளப்புகிறான். குடல் குஞ்சாமணியெல்லாம் வெளியில் வந்த பிறகுதான் நிறுத்துவான் போலிருந்தது. குப்புறப் போட்டு அமுக்குகிறான் மல்லாக்க திருப்பிப் போட்டு அமுக்குகிறான். ‘அய்யனாரப்பா அடுத்த அரை மணி நேரத்துக்கு உன் பலத்தை எல்லாம் எனக்கு கொடுத்துடு’ என்றால் எந்த அய்யனும் காது கொடுப்பதாகவே இல்லை. 

ஒரு வழியாக நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு அவள் வந்து அவனைத் தொட்டாள். நிறுத்திக் கொண்டான். அப்பாடா. விடுதலையடைந்தேன். அதுவும் தற்காலிக விடுதலைதான். அடுத்த ஒரு வாரத்திற்கு உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் தனித்தனியாக வலித்தது.

வெளியே வந்த போது ‘ஹவ் வாஸ் த சர்வீஸ் சார்?’ என்றாள். ‘ஆசம்’ என்றேன். வேறு என்ன சொல்வது? 

அது ஒரு வித்தியாசமான பார்லர். பார்வையற்றவர்கள்தான் பணியில் இருக்கிறார்கள். ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும்தான் மசாஜ் செய்வார்கள். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. அழுத்தம் குறைவாகக் கொடுக்கச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ‘முன்னப்பின்ன செத்திருந்தால் சுடுகாடு தெரியும்’ என்கிற கணக்காக ‘அதிகம்’ என்று சொல்லி மாட்டிக் கொண்டேன். அவர்களைக் குறை சொல்லி என்ன பலன்? எல்லாம் என் தப்பு.

அறைக்கு வந்த முதல் வேலையாக இந்த பார்லரைப் பற்றி மோட்டார்க்காரரிடம் சொல்லிவிட்டேன். ஆண்கள்தான் மசாஜ் செய்வார்கள் என்று சொல்லவில்லை- ஆனால் பார்வையற்றவர்கள் என்பதைச் சொல்லிவிட்டேன். அடுத்த நாளே அவரும் சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பிப் போனார். ‘ப்ரஷர் மேக்ஸிமம்ன்னு சொல்லுங்க’ என்றேன். கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றார். சாகட்டும். அவ்வளவுதான். அதன் பிறகு அவர் இன்றுவரை என்னிடம் முகம் கொடுத்தே பேசியதில்லை.

May 27, 2014

பத்தாவது பாஸ்ண்ணே

பத்தாம் வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை அள்ளிக் குவித்திருக்கிறார்கள். முதல் மதிப்பெண்ணை விடுங்கள். 450 என்பதே மிகச் சாதாரணமான விஷயமாக மாறியிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக கூட 460 என்பதுதான் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்ணாக இருந்தது. இப்பொழுது கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 490 ஐ தாண்டியிருக்கிறார்கள். பாடங்கள் எளிதாகிவிட்டன, மதிப்பெண்களை அள்ளி வழங்குகிறார்கள் என்று சிலர் குற்றச்சாட்டாக சொல்கிறார்கள். மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் அதனால் மதிப்பெண்களை குவிக்கிறார்கள், சமச்சீர் கல்வியினால் விளைந்த நன்மை இது என்று இன்னொரு பக்கம் பாஸிடிவ்வாகச் சொல்கிறார்கள். 

ஆனால் இதையெல்லாம் பேசுகிறவர்கள் நானூற்றைம்பது மதிப்பெண்களைத் தாண்டிய மாணவர்களை மட்டும்தான் பார்க்கிறார்கள். இந்தத் தேர்வில் முந்நூறு மதிப்பெண் பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? தோல்வியைடந்த பத்து சதவீத(கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர்) மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? எவ்வளவுதான் தேர்வுமுறைகளும் மதிப்பெண் பெறும் வழிமுறைகளும் எளிமையடைந்திருந்தாலும் ஏன் லட்சக்கணக்கானவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள்? மதிப்பெண்கள் அதிகரித்திருக்கின்றன. அதேசமயம் அனைவருக்குமான கல்வியின் தரம் குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

கிராமப்புற மாண்வர்கள் நன்மையடைய வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே நமது கல்வி முறையில் வடிகட்டும் முறை என்பதையே சுத்தமாக ஒழித்துவிட்டார்கள். முன்பெல்லாம் ஐந்தாம் வகுப்புத் தேர்வில் நிறைய பேர்களைத் தோல்வியடையச் செய்வார்கள். அடிப்படைக் கல்வியைக் கூட தெரிந்து கொள்ளாமல் நடுநிலைப்பள்ளிக்கு அந்த மாணவன் செல்லக் கூடாது என்பதுதான் நோக்கம். இதில் ஒரு பிரச்சினை இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ஐந்தாம் வகுப்பில் தோல்வியடைந்தால் சட்டிபானை கழுவ போட்டுவிடுவார்கள். மாணவனாக இருந்தால் இன்னொரு முறை படிப்பதற்கு சலுகை கிடைக்கும். அதே போல எட்டாம் வகுப்புத் தேர்வில் (ESLC) வடிகட்டினார்கள். எட்டாம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள் அவர்களாகவே பள்ளியைவிட்டு நின்றுவிடுவது வழக்கம். ஆனால் இப்பொழுது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவன் பத்தாம் வகுப்பு வரைக்கும் Free flow ஆக ஓடிவிடலாம். இலவச புத்தகம், இலவச பஸ் பாஸ், இலவச உணவு என்று சகலமும் கிடைத்துவிடுகிறது. ஆனால் மாணவர்களின் அறிவு வளர்ச்சியை எப்படி கணக்கிடுகிறார்கள்? அவனுக்கு அடிப்படையான கணித, அறிவியல் அறிவு இருக்கிறதா என்பதைக் கூட இவர்கள் கணிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். நம்பிக்கையில்லை என்றால் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரிடம் பேசிப்பார்க்கலாம். ‘அந்தப் பையன் வீக்குன்னு தெரியும். ஆனா ஃபெயில் பண்ணக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்கிறது...அப்படியே பத்தாம் வகுப்பு வந்துவிட்டான்’ என்பார். இப்படியே எந்த அறிவும் இல்லாமல் அவனை தேர்ச்சியடையச் செய்து என்ன செய்யப் போகிறோம்? ஒரு பக்கம் லட்சக்கணக்கானவர்கள் நானூறு மதிப்பெண்களைத் தாண்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒரு லட்சம் பேர் தோல்வியடைந்திருக்கிறார்கள். 

கிராமப்புற மாணவர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்ற  பெயரில் இந்த அரசாங்கங்கள் அவர்களைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. மாறாக, தனியார் பள்ளிகள் இதைத் தங்களுக்குச் சாதகமான அம்சமாக பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களிடம் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம், கணிதம், அறிவியல் தவிர விளையாட்டு, கராத்தே போன்றவற்றில் எல்லாம் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். படிக்க முடியாத மாணவர்களை ஒதுக்கிவிட்டு நல்லவர்களுக்கு மட்டும் பயிற்சி கொடுத்து தங்களது ரிசல்ட்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் வசதி இருக்கும் எந்த கிராமத்துப் பெற்றோரும் தங்களது பிள்ளைகள் தனியார் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதுதான் கண்ட பலன்.

மாணவர்களை பத்தாம் வகுப்பு வரைக்கும் தொடர்ச்சியாக பள்ளிக்கூடம் வர வைப்பது நல்ல விஷயம்தான். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற நிலையை அடைந்துவிடலாம். ஆனால் பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் இதே சூழலை நீட்டிப்பதுதான் சிக்கலே. பத்தாம் வகுப்பில் நானூறைத் தாண்டிவிட்டால் பயாலஜி, கம்யூட்டர் சயின்ஸில்தான் சேருகிறார்கள். அது பிரச்சினை இல்லை. ஆனால் பயாலஜி, கம்யூட்டர் சயின்ஸில் சேருபவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் பொறியியல் படிப்பில்தான் விழுகிறார்கள். இதுதான் பிரச்சினை. 

பதினோராம் வகுப்பில் சேரும் போது பயாலஜி, கம்யூட்டர் சயின்ஸ் தவிர பிற க்ரூப்புகளிலும் படிக்கலாம் என்ற மனநிலையை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உருவாக்கும் முக்கியமான பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. பிற துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான். ஆனால் அதற்கு கிள்ளிப் போடக் கூட அரசாங்கத்தில் ஆட்கள் இல்லை என்பதுதான் அவலம். பத்தாம் வகுப்பில் லட்சக்கணக்கில் நானூறைத் தாண்டினால் கண்களை மூடிக் கொண்டு குட்டையில் குதிக்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கும் தகுதியில்லாத பொறியியல் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தினாலே பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும். ஆய்வகங்கள் இல்லை, நல்ல நூலகங்கள் இல்லை என்ற நிலைமையைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். தகுதியான ஆசிரியர்கள் கூட இல்லை என்பதுதான் உண்மை. Differentiation க்கும் Integration க்கும் என்ன வித்தியாசம் என்றும் அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் கூட தெரியாத ஒருவரை பொறியியல் கல்லூரியில் சந்தித்தேன். கல்லூரியில் அவரை Assistant Professor என்கிறார்கள். எம்.இ முடித்திருக்கிறார். இது போன்ற கல்லூரிகளுக்கு நான்கு வருடம் பணம் கொடுக்க மாணவர்கள் கிடைத்தால் போதும். ப்ளஸ் டூவில் எத்தனை மதிப்பெண்கள் என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் சேர்த்துக் கொள்கிறார்கள். பிறகு இவர்கள்தான் பொறியாளர்கள் என்று வெளியில் வருகிறார்கள். யார் வேலை தருவார்கள்? Freshers க்கு யாருமே வேலை தருவதில்லை என்று புலம்பாமல் வேறு என்ன செய்வது?

பெருகிக் கிடக்கும் பொறியியல் கல்லூரிகளையும் பிற சுயநிதிக் கல்லூரிகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பிற படிப்புகளில் இருக்கும் சாத்தியங்களைப் பற்றி அறிவுறுத்த வேண்டும். புள்ளியியல், கணக்கியல் போன்ற பிற துறைகளில் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றிய புரிதலை பரவலாக்க வேண்டும். கல்வி என்பது வெறும் அட்டை டூ அட்டை மனனத்திற்கான செயல்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் தேர்வு முறைகளில் மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும். இவையெல்லாம்தான் Long term vision ஆக இருக்க முடியும். இதையெல்லாம் செய்யாமல் வெறும் தேர்வுமுறைகளை எளிமைப்படுத்துதலும், எல்லோரும் மதிப்பெண் வாங்குவதற்கான வழிகளை உருவாக்குவதும் எந்தவிதத்திலும் பயன்படாது.

காமராஜர் கல்வித் துறையில் செய்த நல்ல மாற்றங்களின் பலனை இருபது வருடங்களுக்குப் பிறகு அறுவடை செய்ய ஆரம்பித்தோம். அதுதான் vision என்பது. அதுவே கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி மற்றவர்களின் வாயை அடைத்துவிட்டு  குருட்டாம்போக்கில் ஆல்-பாஸ் என்கிற திட்டம் நம் ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடும். இதன் பாதகங்களை இன்னும் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அறுவடை செய்வோம்.

May 24, 2014

கொடுமை என்ன தெரியுமா?

தங்களுடைய ‘அடி விழுந்ததா?’ படிக்க நேர்ந்தது. பொறியியல் படிப்பு மட்டும் அல்ல அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் பல பாடப்பிரிவுகளும் எந்த வேலைவாய்ப்புக்கும் உதவாததாகவே உள்ளன. தனியார் கல்லூரிகளில் இருப்பது  போல பயோடெக்னாலஜி, மைக்ரோபயோலாஜி, ஜெனிடிக் இன்ஜினியரிங் போன்ற பல பிரிவுகள் அரசு கல்லூரிகளில் இல்லை. 

இன்னும் வேதனை என்னவென்றால் நான் இளங்கலை தாவரவியல் படித்தபோது (15 வருடங்கள் முன்பு) என்னென்ன தலைப்புகளும் புத்தகங்களும் பரிந்துரைக்கப்பட்டனவோ அவையே தான் இன்னும் சிலபஸில் உள்ளன. தாவரவியல், விலங்கியல் என்று ஆராய்ச்சி முனைவர் பட்டங்களை பெற்றாலும் நீங்கள் பயோடெக்னாலஜி, மைக்ரோபயோலாஜி, ஜெனெடிக் இன்ஜினியரிங் பிரிவுகளில் விரிவுரையாளர்களாக  அவ்வளவு எளிதில் தனியார் கல்லூரிகளில் பணி செய்ய இயலாது. அரசு கல்லூரிகளிலும் வேலை கிடைக்காது. இவர்களுக்கு பார்மா கம்பெனி போன்ற இடங்களிலும் வேலை இல்லை. ஏனென்றால் எந்தவிதமான டெக்னிகல் அறிவையும் இந்தப் பாடப் பிரிவுகள் போதிப்பது இல்லை. Because even the practicals are most outdated. 

இந்த நிலையில் இயற்பியல் வேதியல் பிரிவுகளுக்கு நல்ல வேலை இல்லை. அவை இன்ஜினியரிங் கல்லூரிகளால் ஓரளவுக்கு பிழைத்து விட்டன. இப்படிப்பட்ட உதவாத தலைப்புகளையும், பட்டபிரிவுகளையும் இன்னும் பல மாணவர்கள் படித்தபடி தான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் கிராமப் புறங்களை சார்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இதைப் படி, அதைப் படி என்று எடுத்துசொல்லும் வழிகாட்டிகள் இல்லாதவர்கள். ஒரே வழிதான் அவர்களுக்கு. இளங்கலையோ இல்லை முதுகலையோ முக்கி முனகி படித்தவுடன் ஒரு பி.எட் பட்டத்தையும் முடித்துவிட்டு தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்துக்கு காலம் முழுக்க உழைக்கலாம். இதிலும் ஒரு காமெடி என்னவென்றால் அரசு பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ்வழியில் படித்துவிட்டு அவனுக்கு ஆங்கிலம் வேறு வராது. இதில் எங்கே போய் ஆங்கிலத்தில் அனர்த்தும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் வேலை செய்ய முடியும்.

அரசு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இருக்கும் பேராசியர்களும் விரிவுரையாளர்களும் பெரும்பாலும் அல்லது முழுவதுமாக மாணவர்களுடன் தமிழில்தான் உரையாடுகிறார்கள். நான் தமிழுக்கு எதிரானவள் இல்லை. ஆனால் வேலைக்கான மொழி மிகவும் முக்கியமானது. நானும் எனது பள்ளிப்படிப்பை அரசுப்பள்ளிகளிதான் முடித்தேன். அதுவும் தமிழ் வழியில். இந்த மொழி எனக்கு பணியிடத்தில் உதவாது என பிறகுதான் உணர்ந்தேன். நீங்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புகளைப் பற்றியும் நிறைய எழுத வேண்டும்.  

நான் முனைவர் பட்டம் வாங்கிவிட்டு வெளிநாட்டில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தேன். மீண்டும் இந்த நாட்டிற்கு திரும்பி வந்த போதுதான் சிரமங்கள் ஆரம்பமாகின. ஒரு மரியாதையான சம்பளத்திற்கு அங்கும் இங்கும் அலைய வேண்டியதாக இருந்தது. தேவையான அளவுக்கு அபத்தங்களையும் டார்ச்சர்களையும் நேர்முகத் தேர்வுகளில் இருந்த தேர்வாளர்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டேன். சமீபத்தில் சென்னையில் பழம் பெருமை வாய்ந்த ஒரு கிறித்துவர்களின் கல்லூரியில் தாவரவியல் துறைக்கான தேர்வில் கலந்து கொண்டேன். ஒரு பேராசிரியருக்கான தேர்வு எப்படி இருந்தது தெரியுமா? முதல் சுற்றுத் தேர்வில் எழுத்துத் தேர்வை நடத்தினார்கள். அந்தத் தேர்வு ஐந்து இரு மதிப்பெண்கள் கேள்விகளையும், இரண்டு ஐந்து மதிப்பெண்கள் வினாக்களையும் உள்ளடக்கியிருந்தது. மொத்த மதிப்பெண்கள் 20. அதற்கடுத்தது நேர்முகத் தேர்வு. ஒரேயொரு காலியிடத்திற்கு கிட்டத்தட்ட 50 பேர் மிக சீரியஸாக எழுத்துத் தேர்வை எழுதினோம் (தேர்வின் தொடக்கத்தில் பாதிரியார் Prayer நடத்தினார்). அந்த மொத்தத் தேர்வின் அற்புதம் என்பது நேர்முகத் தேர்வுக்கு முன்பாக அவர்கள் செய்த அறிவிப்புதான்- ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதால் (அதே மதம். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்) மற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டியதில்லை என்றார்கள். இந்தத் தேர்வை நடத்துவதற்காக எங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.500 வசூலித்தார்கள்.

திரையின் அடுத்த பக்கம்...அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இருக்கும் காலி இடத்திற்கான தேர்வுக்குச் சென்றால் கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து இருபது லட்சம் வரை லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுவும் கடும் போட்டியின் காரணமாக வலுவான சிபாரிசுகளோடு செல்ல வேண்டியிருக்கிறது. யாரைப் போன்றவர்களின் சிபாரிசு என்றால்......(பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை)

நட்புடன்,
லலிதா 
                                          ***

அன்புள்ள லலிதா,

உடனடியான நீண்ட கடிதத்துக்கு நன்றி. 

நீங்கள் சொல்வது மிக மிக முக்கியமான விஷயம். கலை மற்றும் அறிவியல் பாடங்களைப் பற்றி இன்னொரு கோணத்தைக் காட்டுகிறது. இதுதான் ground reality. மட்டமான கல்லூரிகளில் படிக்கும் பொறியியல் கல்வியின் அவலத்துக்கு எந்தவிதத்திலும் சளைக்காமல்தான் பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் படிப்புகளும் பல்லிளிக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். 

கலை அறிவியல் படிப்புகளை படிக்கலாம்தான்; கல்லூரிகளிலும் பேராசிரியர்களுக்கான தேவை இருக்கிறதுதான். ஆனால் நம்பியூரிலும் புளியம்பட்டியிலும் இருந்து வரும் ஒரு மாணவனால் அந்த வேலையை அவ்வளவு எளிதில் வாங்கி விட முடியுமா? இப்பொழுதெல்லாம் ஒரு வேலையை வாங்குவதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பெருந்தலைகளின் சிபாரிசுகளுக்காக காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. வானம் பார்த்த பூமியில் காய்ந்து கிடக்கும் விவசாயியின் மகனுக்கோ, புரோட்டக்கடை மாஸ்டரின் மகளுக்கோ இதெல்லாம் சாத்தியமே இல்லை. பிறகு எப்படி வேலை வாங்குவீர்கள் என்று கேட்காமல் கேட்டிருக்கிறீர்கள்.

இதைத் தவிர உங்கள் கடிதத்தில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது- பி.ஹெச்டி முடித்திருக்கிறீர்கள். படிப்புக்காக குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும். இல்லையா? இளங்கலைக்கு மூன்றாண்டுகள், முதுகலைக்கு இரண்டு, எம்.பில்லுக்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகள், முனைவர் பட்டத்திற்கு கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள். குறைந்தபட்சம் பத்தாண்டுகள் படித்துவிட்டு பெயருக்கு முன்னால் டாக்டரையும் சேர்த்துக் கொண்டு ஒரு வேலைக்காக ஐந்நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு ஐம்பது பேர்களுடன் போட்டியிட்டு கடைசியில் ‘ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது’ என்பதைத் தெரிந்து கொண்டு வெளியேறுகிறீர்கள். இங்கு படிப்பு அவ்வளவு கேவலப்படுத்தப்படுகிறது; அவ்வளவு உதாசீனப்படுத்தப்படுகிறது. கொடுமை.

என்னதான் பொறியியல் கல்வியை திட்டினாலும் பத்தாண்டுகளைத் தொலைக்க வேண்டியதில்லை. நான்காண்டுகளில் முடித்துவிடலாம். படிப்பை முடித்துவிட்டு ஐடியிலும் கார்பொரேட் நிறுவனங்களிலும் வேலை கிடைக்காவிட்டாலும் வள்ளியண்ணன் போல ஏதாவதொரு சிறு வேலையில் ஒட்டிக் கொள்ளலாம். காலம் ஓடும். அதுவே கலை அறிவியல் கல்லூரிகளில் அடிப்படையான ஆங்கில அறிவு கூட இல்லாமல் பொருளாதாரமும், வரலாறும் படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லையென்றால் ஒரு கிராமத்து மாணவன் என்ன செய்வான்? ட்யூஷன் எடுத்துக் கூட பிழைக்க முடியாது என்பதுதான் உண்மை.

என்ன செய்வது?

அதற்காக கலை அறிவியல் கல்வியை முற்றாக நிராகரிக்க வேண்டியதில்லை. மிகத் தெளிவான திட்டமிடலுடன் செயல்பட்டால் நிறைய சாத்தியங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று நம்புகிறேன்.

உங்களைப் போலவே பி.ஹெச்.டி முடித்துவிட்டு  நண்பன் ஒருவன் வெளிநாட்டில் இருக்கிறான். கிராமத்து மாணவன்தான். பெரிய வசதி இல்லை. பொறியியல் படிப்பிற்கான வாய்ப்புகள் இருந்தும் இயற்பியலில் சேர்ந்தான். படிப்படியாக அதிலேயே முனைவர் பட்டம் அதன் பிறகு இத்தாலியில் Post Doctoral Fellowship முடித்துவிட்டு இப்பொழுது ஜப்பானில் இருக்கிறான். கூடப் படித்தவர்கள் எல்லோரும் பொறியியலில் குதித்தார்கள். அவனது நோக்கம் தெளிவாக இருந்தது- ஆராய்ச்சிதான். 

இன்னொரு தோழன் இருக்கிறான். கணித வெறியன். பள்ளியிலிருந்தே கணிதத்தில் புலி. கணிதத்தில் புலியாக இருந்தால் பொறியியல்தான் சேர வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதி. ஆனால் அவன் தெளிவாக இருந்தான். நுழைவுத் தேர்வு, கட் ஆஃப் பற்றியெல்லாம் துளியும் அலட்டிக் கொள்ளவில்லை. பி.எஸ்.ஸி கணிதத்தில் சேர்ந்தான். பிறகு எம்.எஸ்.ஸி, எம்.பில் அதன் பிறகு பி.ஹெச்டியும் முடித்துவிட்டு அரசுக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறான்.

இவர்கள் இரண்டு பேருமே என்னோடு பள்ளியில் படித்தவர்கள். இரண்டு பேருமே கிராமத்து மாணவர்கள். தமிழ் வழியில் படித்தவர்கள். எதுவும் மோசமாகிவிடவில்லை. அறிவியல் பாடங்களை படித்துவிட்டு மிக நல்லபடியாக செட்டில் ஆகியிருக்கிறார்கள். இவர்களை exceptional cases என்று ஒதுக்கிவிட முடியாது. பள்ளியில் படிக்கும் போதே தங்களின் பாதையை முடிவு செய்து வைத்திருந்தார்கள். யார் எந்தத் திசையில் போனாலும் அதைப் பற்றிய கவலையில்லாமல் தங்கள் பாதையில் சென்றவர்கள். இப்பொழுதும் யாரிடமாவது படிப்பைப் பற்றி பேச வேண்டியிருந்தால் இவர்களைத்தான் கை காட்டுகிறேன். 

இவர்கள் மட்டும் இல்லை. உறவுக்காரப் பையன் ஒருவன் இருக்கிறான். ஏழாவது அல்லது எட்டாவது படிக்கும் போதே ஆட்சிப்பணிக்கான தேர்வுகளை எழுதுவதுதான் லட்சியம் என்று விதைத்துக் கொண்டவன். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரம் முடித்தான். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினான். முதல் முயற்சியிலேயே வேலை வாங்கிவிட்டான் - ஐ.ஏ.எஸ் இல்லை ஆனால் அரசுப்பணி. இன்னமும் காலம் இருக்கிறது. இந்த வருடம் ஐ.ஏ.எஸ் ஆகிவிடுவேன் என்கிறான். அத்தனை நம்பிக்கை.

இக்பால்சிங் தலிவால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கோபியில் துணை கலெக்டராக இருந்தார். அவரும் ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்தான். கல்லூரிப்படிப்பை முடித்த முதல் வருடத்திலேயே ஐ.ஏ.எஸ் முடித்தவர். அதுவும் டாப் ரேங்க்கில்.

எல்லோரும் படிக்கிறார்கள் என்பதாலேயே நாமும் பொறியியலும், மருத்துவமும்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. அதையெல்லாம் தாண்டி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. முயன்று பார்க்கலாம். ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்- ஒவ்வொரு மாணவனுக்கும் குறிக்கோள் மிக அவசியம். கல்லூரிப்பருவம் என்பது நெருப்பு கனலும் பருவம்.  சரியான குறிக்கோள் மட்டும் இருந்தால் யாராக இருந்தாலும் கில்லி அடிக்கலாம் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அதனடிப்படையில்தான் முந்தைய கட்டுரையை எழுதியிருந்தேன்.

நன்றி.

அடி விழுந்துச்சா?

வள்ளியண்னன் என்றொரு நண்பர் இருக்கிறார். நேரில் பார்த்தது இல்லை. பள்ளிப் படிப்பெல்லாம் தமிழ் வழிக்கல்வியில். பிறகு பொறியியல் முடித்தவருக்கு வெகுநாட்களுக்கு வேலை இல்லை. அலைந்து திரிந்ததில் கோயமுத்தூரில் ஒரு சிறிய நிறுவனம் கதவைத் திறந்து வைத்திருந்தது. சொற்ப சம்பளத்தில் ஒட்டிக் கொண்டார். அவ்வப்போது பேசிக் கொள்வோம். ‘இங்கிலீஷ் சுத்தமாவே வரமாட்டேங்குதுண்ணே....வேற வேலைக்கு போறது ரொம்பச் சிரமம்’ என்றார். வேறொரு நாளில் ‘சம்பளம் ரொம்ப குறைவு..வீட்டுக்கு கொடுக்க முடியறதில்ல..கஷ்டமா இருக்குண்ணே’ என்றார். 

தன்னம்பிக்கையில்லாமல் பேசுகிறாரோ என்று தோன்றும். அவர் நம்பிக்கையான மனிதர்தான். ஆனால் அவரது நிலைமை அப்படி மாற்றி வைத்திருந்தது.

படித்து முடித்துவிட்டு இரண்டு மூன்று வருடங்கள் இடைவெளி விழுந்துவிட்டால் அதன் பிறகு வேலை பிடிப்பது பெரிய சிரமம் ஆகிவிடுகிறது. வள்ளியண்ணனின் வேலை டெக்னிகலாக கற்றுக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் நிறைந்தது இல்லை. வந்தோமோ, போனோமோ என்கிற மாதிரியான வேலை.

ஆங்கிலமும் வருவதில்லை. தொழில்நுட்பத்திலும் கில்லாடி இல்லை. படித்து முடித்து இரண்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. என்ன செய்வது? சென்ற வருடத்தில் பேச்சுவாக்கில் ‘வங்கித் தேர்வுக்கு ஏதாவது தயார் செய்யலாம்ல?’ என்றேன். இதை வேறொருவரும் சொல்லியிருக்கிறார். வள்ளி அதையே பிடித்துக் கொண்டார். இந்த ஒரு வருட இடைவெளியில் பேசவே இல்லை. மிகச் சமீபத்தில் பேசினார். வங்கித் தேர்வில் வென்றுவிட்டாராம். கடுமையான தயாரிப்புக்குப் பிறகு அரசு வங்கியில் வேலை. படு உற்சாகமாக இருக்கிறார். கிராமம், தமிழ்வழிக்கல்வி, ஆங்கிலத்தின் அழிச்சாட்டியம் என்ற தடுப்பும் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை. இனி பொருளாதாரம் சார்ந்த எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடுவார் - நம்பிக்கையோடு பேசுகிறார்.

இதற்கு அவர் பொறியியல் படித்திருக்கவே வேண்டியதில்லை. ஏதாவது ஒரு இளங்கலை படித்திருந்தால் போதும். எவனோ ஒரு கல்வித்தந்தைக்கு கொண்டு போய் கொட்டியதுதான் மிச்சம். செலவு மட்டும் இல்லாமல் எத்தனை வருடங்கள் வீணாகப் போயின?

இன்று அவர் மீண்டும் அழைத்திருந்தார். தெரிந்த பையன் ஒருவன் எந்நூற்று சொச்சம் மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். 144 தான் கட் ஆஃப். என்ன செய்வது என்றார். ‘இஞ்சியனியரிங் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க’ என்றேன். அதுதான் எடுத்த உடனே மனதுக்குள் தோன்றியது. பொறியியலில் என்னதான் பாடம் படித்தாலும் கடைசியில் ஐடிக்குள்தான் விழுகிறார்கள் அல்லது ஐடிக்குள் வருவதற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள்.

வேறு துறைகளில் நிறைய வாய்ப்புகள் இல்லை என்பதுதான் உண்மை. படித்தது மெக்கானிக்கலாக இருந்தாலும், மின்னியலாக இருந்தாலும், சிவிலாக இருந்தாலும் ஐடியில்தான் விழுகிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது. இத்தனை பொறியாளர்களுக்கு இங்கு பிற துறைகளில் வேலைகள் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு யாரைப் பார்த்தாலும் பயோ டெக்னாலஜி என்றார்கள். என்ன ஆனது? வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு இருந்தவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். இங்கேயே காலம் ஓட்டலாம் என்று நினைத்தவர்களின் கண்ணாமுழிகள் திருகிப் போயின. படிப்பை முடித்துவிட்டு பத்தாயிரம் பன்னிரெண்டாயிரம் சம்பளத்திற்கு திணறினார்கள். கொடுப்பதைக் கொடு என்று பார்மசூட்டிகல் நிறுவனங்களில் சிக்கியவர்கள்தான் அதிகம்.

மைனிங் என்றொரு பாடம் இருக்கிறது, ஜியோ இன்பர்மேடிக்ஸ் என்றொரு சப்ஜெக்ட். இதையெல்லாம் படித்துவிட்டு அரசு வேலை கிடைத்தவர்கள் அல்லது கார்பொரேட் நிறுவனங்களில் வேலை வாங்கியவர்கள் பாக்கியசாலிகள். வேலை கிடைக்காமல் ஒடிசாவிலும், ஆந்திராவிலும் சுரங்கங்களுக்குச் சென்றவர்கள் ஐந்தாயிரத்துக்கும் குறைவான சம்பளம் வாங்கினார்கள். சம்பளத்தைவிடவும் கொடுமை அங்கு நிகழ்த்தப்படும் கொத்தடிமை முறை. பொறியியல் முடித்திருந்தாலும் கொத்தடிமைகள்தான்.

இன்னொரு உதாரணம் சொல்லலாம். ரோபோடிக்ஸ் சொல்லித் தருகிறோம், ஆட்டோமேஷன் சொல்லித் தருகிறோம் என்று மெக்கட்ரானிக்ஸ் பாடத்தைத் தொடங்கினார்கள். இந்தத் துறையில் வேலை வாங்குவது அத்தனை சுலபமா என்ன? எத்தனை ஆட்டோமேஷன் நிறுவனங்கள் இருக்கின்றன? இங்கு எத்தனை ரோபோடிக்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. அவ்வப்போது இப்படி ஏதாவது வித்தியாசமான பெயரில் பாடத்தை ஆரம்பிப்பார்கள். நம் மாணவர்களும் விட்டில் பூச்சி அரிக்கேன் விளக்கில் விழுவது போல விழுவார்கள்.

இந்தப் பாடங்களில் படிப்பவர்களுக்கு எல்லாம் வேலையே கிடைப்பதில்லை என்று சொல்லவில்லை. மாணவர்களின் எண்ணிக்கையைவிடவும் பணியிடங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். இருக்கும் வேலைவாய்ப்புகளைவிடவும் அதிகமான இடங்களை ஏகப்பட்ட கல்லூரிகளில் தொடங்கிவிட்டார்கள். அதுதான் பிரச்சினை. அத்தனை பேரும் அமெரிக்காவில் எம்.எஸ் படிக்க முடியுமா? இங்கேயே ஏதாவது ஒரு வேலையை வாங்கித்தானே ஆக வேண்டும்? கடைசியில் ஐடியில்தான் விழுகிறார்கள். அதுவும் கிடைக்காதவர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

ஐடியிலும் ஆட்களுக்கான தேவைகள் மிகக் குறைந்து வருகின்றன. ஐடியில் இருக்கும் நாற்பது வயதைத் தாண்டியவரிடம் பேசிப் பாருங்கள். இருக்கும் வேலை அப்படியே ஓடிக் கொண்டிருக்கும் வரையிலும் பிரச்சினையும் இல்லை என்பார். ஆனால் அவரை வேலையை விட்டு அனுப்பினால் அதோடு அவ்வளவுதான். மீண்டும் ஐடியில் வேலை வாங்குவது குதிரைக் கொம்பாகிவிடுகிறது. வேறு ஏதாவதுதான் யோசிக்க வேண்டும். அரைக்கிழவனாகிவிட்ட பிறகு எதை யோசிப்பது? யோசிக்க முடியாது என்றில்லை, எல்லோருக்கும் ப்ராக்டிகலாக சாத்தியம் இல்லை. 

ஐடியில் பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களின் தேவை மிக மிகக் குறைந்துவிட்டது. அதுவுமில்லாமல் அவர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை. இந்த ‘நாற்பது வயது’ என்கிற cap குறைந்து கொண்டே வரும். இன்னும் சில வருடங்களில் முப்பத்தைந்து வயதானவர் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தால் மற்றொரு வேலை வாங்கத் திணற வேண்டியிருக்கும். 

வயது மட்டும் பிரச்சினை இல்லை. படிப்பும்தான். பொறியியல் படித்தவர்களைவிடவும் பி.எஸ்.ஸி படித்தவர்களை பிடித்து போட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்தால் போதும். மிக மிக மெதுவாக பதவி உயர்வு கொடுக்கலாம் போதும் அல்லது கொடுக்காமலே இருந்தாலும் கூட பிரச்சினை இல்லை. ஏழெட்டு வருடங்கள் பிழிந்து எடுத்துக் கொண்டு அனுப்பிவிடலாம். பக்கா சுரண்டல்.

கவனித்துப் பார்த்தால் நாற்பது வயது தாண்டியவர்களை வெளியே அனுப்பிவிடுகிறார்கள். பி.எஸ்.ஸி போன்ற பாடங்களை படித்தவர்களை குறைவான சம்பளத்திற்கு உள்ளே எடுத்து கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்கள்தான் ஐடிக்குள் வாழ்க்கை. அந்த இருபது வருட வாழ்க்கையும் கூட ஐடியில் இருக்கும் அத்தனை பேருக்கும் சாத்தியம் ஆகாமல் போய்விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ‘ஓடும் வரை ஓடட்டும்’ என்ற எண்ணத்திற்கு இந்தத் தலைமுறை ஐடி வந்துவிட்டது. பிறகு எதற்கு இனி படிக்க ஆரம்பிப்பவர்களும் கூட ஐடியைக் குறி வைத்து பொறியியலிலேயே சேர வேண்டும்? நல்ல கட் ஆஃப் வாங்கியவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் படிக்கட்டும். அவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்.  நல்ல கல்லூரியில் படிப்பவர்கள் வேலை வாங்கிவிட முடியும். 

ஆனால் குறைவான கட் ஆஃப் வாங்கித் திணறுபவர்கள்தான் மிகத் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏதாவதொரு போனம்போக்கி கல்லூரியில் நான்கு வருடங்களை ஓட்டிவிட்டு வெளியே வந்தால் வள்ளியண்ணன் திணறியதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் திணற வேண்டும்.

மனதுக்குள் ஏதாவது ஒரு ஆசை இருந்திருக்கும் அல்லவா? ஆசிரியர் ஆவதோ, வங்கிப் பணிக்குச் செல்வதோ, ஆட்சிப்பணிக்குச் செல்வதோ- இப்படி ஏதாவது ஒரு ஆசை இருந்திருக்கும். அந்த ஆசையை அடைவதற்கான சாத்தியங்களைத் தேடிப்பார்க்கலாம். கல்லூரியில் எந்தப் பாடத்தைப் படித்தால் இத்தகைய தேர்வுகளில் எளிதில் வெற்றியடையலாம் என்பது குறித்து ஆலோசிக்கலாம். பொது நிர்வாகவியல் (public admin) போன்ற பாடங்களைப் படிப்பவர்கள் நம் ஊர்களில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிப்பவர்களில் ஏகப்பட்ட பேர் இந்தப் பாடத்தைத்தான் விருப்பப்பாடமாக வைத்திருக்கிறார்கள். கல்லூரியிலேயே இதைப் படித்துவிட்டால் தேர்வு எழுத மிகச் சுலபமாக இருக்கும் அல்லவா?

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்களுக்கு மிகப்பெரிய தேவை உருவாகி வருவதாகச் சொல்கிறார்கள். இங்கு எத்தனை பேர் வரலாறும், புள்ளியியலும், பொருளாதாரமும் படிக்கிறார்கள். அப்படியே படித்தாலும் எத்தனை சதவீதம் பேர் இதையெல்லாம் ஆழமாகவும் லட்சியத்துடனும் படிக்கிறார்கள்?

கடந்த இருபது அல்லது முப்பதாண்டுகளில் இயற்பியலிலும், வேதியியலிலும் ஆராய்ச்சிகள் செய்வதற்கான ஏகப்பட்ட சாத்தியங்களை உலகம் உருவாக்கியிருக்கிறது. எத்தனை ஆராய்ச்சியாளர்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? அதையெல்லாம் வெறுக்கத்தக்க பாடங்களாக ஒதுக்கி வைத்திருக்கிறோம் அல்லது பி.எஸ்.ஸி பிசிக்ஸ் முடித்துவிட்டு விப்ரோவில் சேர்கிறார்கள் இல்லையென்றால் எம்.சி.ஏ முடித்துவிட்டு குட்டையில் விழுகிறார்கள்.

சூழலியல், மீன்வளம், வனவியல் போன்ற பாடங்களைத் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களா என்று தெரியவில்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். நாம்தான் யோசிப்பதும் இல்லை; ரிஸ்க் எடுக்க தயாராகவும் இல்லை.

எப்பொழுதுமே ஒரு அடி விழும் வரைக்கும் நம் பாதை மாறவே மாறாது. அதுவரைக்கும் செம்மறி ஆட்டு மந்தைகளைப் போல பக்கத்துவீட்டுக்காரன் என்ன செய்கிறானோ அதையே செய்வோம். சொந்தக்காரன் எந்த வழியில் செல்கிறானோ அதே வழியில் செல்வோம். ஒரு அடி விழுந்தால்தான் நமக்கு யோசிக்கவே நேரம் கிடைக்கிறது. அடுத்தது எதைச் செய்வது என்று மண்டை காய்கிறோம். இந்த யோசனை மிக அவசியமானது. நமக்கான திசையை உருவாக்கிவிடும். அந்தத் திசை பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். ஒவ்வொரு அடியுமே அனுபவம்தான். பன்னிரெண்டாம் வகுப்பில் கட் ஆஃப் குறைந்துவிட்டது என்பதும் அப்படியான ஒரு வாய்ப்புதான்- அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்கான வாய்ப்பு. சற்று மண்டை காய்ந்தால் போதும் வாழ்கையில் விரும்பும் இடத்தை மிகச் சரியாக அடைந்துவிடலாம். All the best!

May 22, 2014

பணம் போதும்

எதிர்பார்த்தேன்- ஆனால் இவ்வளவு விரைவாக எதிர்பார்க்கவில்லை.

நேற்றிரவிலிரவிலிருந்து இன்று மாலை வரையிலும் கிட்டத்தட்ட அறுபது மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. அத்தனையும் நந்தினியின் படிப்புக்கான உதவி பற்றிய மின்னஞ்சல்கள்தான். நிறையப் பேர் ஏற்கனவே பணத்தை அனுப்பிவிட்டார்கள். துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ரூபாயைத் தாண்டியிருக்கும் என நினைக்கிறேன். அதைவிடவும் அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பணப்பரிமாற்றங்கள் குறித்தான விவரங்கள் தவிர ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் சில விவரங்களைக் கோரி வந்திருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பண உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள்.  ஒரு இளைஞர் குழு மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் படித்து முடித்த பிறகு வட்டியில்லாமல் திருப்பிக் கொடுத்தால் போதும் என்றார்கள். இன்னொரு இளைஞர் குழுவினர் வருடம் ஐம்பதாயிரம் தந்துவிடுவதாகச் சொன்னார்கள். அதை அவர்களுக்குத் திருப்பித் தர வேண்டியதில்லை. சிங்கப்பூர் வாழ் இசுலாமிய நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணின் மொத்தச் செலவையும் எந்தப் பிரதியுபகாரமும் எதிர்பாராமல் செய்வதாகச் சொன்னார். இன்னொரு அமெரிக்க நண்பர் மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் படித்து முடித்த பிறகு திருப்பித் தரச் சொல்லுங்கள் என்றார். இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். அத்தனை உதவிகள்.

இதில் முக்கால்வாசிக்கும் மேலானவர்கள் தங்களின் பெயர் வெளியில் தெரியக் கூடாது என்கிறார்கள். இவை போக திரு.எஸ்.கே.பி கருணா தனது கல்லூரியில் சேர்ந்தால் எந்தக் கட்டணமும் தர வேண்டியதில்லை என்றிருக்கிறார். இப்படி ஏகப்பட்ட நல்ல உள்ளங்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். 

அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றிகள். 

இப்போதைக்கு இந்தப் பணம் போதும். 

இன்று காலையில் திரு.சின்னானிடம் பேசினேன். அவருக்கு இது பயத்தை உண்டாக்கியிருக்கிறது. ‘ஏதாவது பிரச்சினை வந்துவிடாதுங்களா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு பயத்தை உண்டாக்கியதில் என் தவறும் இருக்கிறது. சிலர் அவரின் தொலைபேசி எண்ணைக் கேட்டிருந்தார்கள். கொடுத்துவிட்டேன். அவர்களில் சிலர் அழைத்துப் பேசினார்களா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை. பயந்துவிட்டார். மூன்று பெண்களை வைத்திருக்கும் வெளியுலகமே தெரியாத எளிய மனிதனின் பயம் அது. ‘ஒன்றும் பிரச்சினை வராது. நான் இருக்கிறேன். பயப்பட வேண்டாம்’ என்றாலும் அவருக்கு புரிந்து கொள்ளத் தெரியவில்லை. இன்னமும் தனது வங்கிக் கணக்கை அவர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. பார்க்கும் போது தனது கணக்கில் இவ்வளவு பணம் வந்திருப்பதைப் பார்த்தால் இன்னமும் நடுங்கிவிட வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் இப்போதைக்கு போதும் என்கிறேன். தயவு செய்து இனி பணம் அனுப்ப வேண்டாம். 

சின்னான் போன்ற எளிய மனிதர்களுக்கு உதவுவது பற்றி எனக்கு போதுமான அனுபவம் இல்லை. தேவையான பணத்தை வசூல் செய்து அவருக்கு மொத்தமாகக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இது போன்ற பணவிவகாரங்களில் கையை நனைப்பதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. 

முன்பு ரோபாடிக் பாலாஜிக்கு ஒரு லட்சமும், பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு எழுபதாயிரமும் நிசப்தம் வழியாகக் கிடைத்த போது ஒரு திட்டம் யோசித்து வைத்திருந்தேன். 

ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து தேவையான நிதி சேர்ந்ததும் அவ்வப்போது ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்யலாம் என்பதுதான் திட்டம். ஆனால் வாழை அமைப்பைச் சார்ந்த ரவீந்திரன் தான் தடுத்துவிட்டார். அவர் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது. ‘அப்பப்போ என்ன தோணுதோ அதைச் செய்யுங்கண்ணா....எதையுமே Institutionalize செஞ்சீங்கன்னா அது தேவையில்லாத சுமை ஆகிடும்’ என்றார். அவர் நல்லதுக்குத்தான் சொன்னார். 

ட்ரஸ்ட் என்று ஆரம்பித்தால் அதில் ஒரு ஒழுங்கு வர வேண்டும். ஒழுங்காக இருக்க வேண்டுமானால் அதற்கு அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதிக கவனத்தை அதற்குக் கொடுத்தால் க்ரியேட்டிவ் வேலைகளைச் செய்ய முடியாது என்பதுதான் அவர் சொன்னதன் சாராம்சம். அவர் அனுபவசாலி. வாழை அமைப்பின் தூண்களில் ஒருவர். அவருக்கு இது பற்றியெல்லாம் நன்றாகத் தெரியும். அவர் சொன்னது சரியானதாகப் பட்டது என்பதால் அப்போது இந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன்.

ஆனால், சின்னான் மாதிரியான மனிதர்களுக்கு உதவுவதற்கேனும் வேறு வழிமுறைகளை யோசிக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய எளிய மனிதர்களால் இந்த உலகை நேரடியாக எதிர்கொள்ள முடிவதில்லை. ‘இத்தனை பேர் எதற்காக எனக்கு உதவ வேண்டும்’ என்பதே அவரைப் பொறுத்தவரைக்கும் தீர்க்க முடியாத புதிர். யாராலும் பதில் சொல்லிப் புரிய வைக்க முடியாத புதிர் அது. அத்தகையவர்களுக்கு உதவவும் வேண்டும் அதே சமயத்தில் அவர்களை இந்த உலகத்தின் மிரட்சிக்கு ஆட்படுத்தாமல் தடுக்கவும் வேண்டும் என்பதால் வேறு ஏதேனும் உபாயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போதைக்கு எந்தத் திட்டமும் மனதில் இல்லை. 

மனதில் இருப்பது வெறும் நன்றியுணர்ச்சிதான். உங்கள் அத்தனை பேரின் நம்பிக்கைக்கும், உதவிக்கும் நன்றியைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. 

யாருக்குத் தெரியும்?

சில நாட்கள் வரையிலும் வயிற்றுப்புண் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது. 

வயிற்றுக்குள் யாரோ பானை ஒன்றை வைத்து சாராயம் காய்ச்சுவது போலவே இருக்கும். கியாஸ் அடுப்பாக இருந்தால் கூட சமாளித்துக் கொள்ளலாம். மூன்று கற்களைக் கூட்டி வைத்து விறகு அடுப்பை எரிப்பார்கள். தண்ணீரைக் குடித்தாலும் பலன் இல்லை; தயிரைக் குடித்தாலும் பலன் இல்லை. ஆறேழு நாட்களுக்கு சாவடித்துவிட்டு அதுவாகக் காணாமல் போய்விடும். 

வயிற்றுவலி தனியாக வராது. அவ்வப்போது வாயிலும் பொங்கல் வைத்துவிடும். அது வயிற்றுவலியைக் காட்டிலும் அக்கப்போர். வாயைத் திறந்தாலும் வலிக்கும். திறந்த வாயை மூடினாலும் வலிக்கும். அதைவிடக் கொடுமை ஒன்று இருக்கிறது- ராத்திரியில் தெரியாத்தனமாகக் புண்ணைக் கடித்துவிட்டால் அவ்வளவுதான். குப்புறப்படுத்தாலும் விடாது; வாயில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு மல்லாக்கப் படுத்தாலும் விடாது. நரகம். ஒரு கத்தி கிடைத்தால் வாயை மட்டும் தனியாக அறுத்து எறிந்துவிட வேண்டும் என்று தோன்றும்.

இந்தத் தொந்தரவு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதுதான் ஆரம்பித்தது. பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்வதற்காக என்னை ஒரு விடுதியில் அமுக்கியிருந்தார்கள். முதன்முதலான விடுதி வாழ்க்கை அது. அப்பொழுது அந்தியூரில் ஐடியல் பள்ளி பாப்புலராகியிருந்தது. அங்கு படித்தால் டாக்டராகிவிடலாம் என்று யாரோ கிளப்பிவிட்டதை நம்பி அம்மாவும் அப்பாவும் இழுத்துச் சென்று திணித்துவிட்டார்கள். அங்கு என்னைப் போன்ற இளம் ஆடுகளை வெள்ளாட்டுப்பட்டியில் அடைத்து வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர்களாவது நுழைவுத்தேர்வு பயிற்சிக்காகச் சேர்ந்திருந்தோம். ஒரு பெரிய ஹாலில் மைக் செட் கட்டித்தான் வகுப்பு நடத்துவார்கள்.

இந்த மாதிரி சமயங்களில் நம்முடன் இருப்பவன் அசால்ட்டாக இருந்தால் நமக்கு பயம் வராது. அவனோடு சேர்ந்து எப்படியும் படித்துவிடலாம் என்று தைரியம் இருக்கும். ஆனால் அவன் மூன்று மணிக்கு எழுவதும் இரவும் பன்னிரெண்டு மணிக்குத் தூங்குவதுமாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக வயிறு எரியத் தொடங்கும். அல்லவா? அதுவும் என்னுடன் இருந்த சுரேஷ் மூன்று மணிக்கு எழுந்து சத்தமில்லாமல் வேறு இடத்துக்கு ஓடிவிடுவான். அதுவும் எப்படி? தலையணையை பெட்ஷீட்டுக்கு கீழாக வைத்து அதை போர்த்திவிட்டு போய்விடுவான். எப்பவாவது தூக்கம் கலைந்து எழுந்தால் ‘அப்பாடா அவனும் படிக்காம தூங்கிட்டு இருக்கான்’ என்று நிம்மதியாக இருக்கும். ஆறு மணிக்கு வந்து ஒன்றுமே தெரியாதவன் போல படுத்துக் கொள்வான்.

இவனது இந்த தில்லாலங்கடி வேலை ஆரம்பத்தில் எனக்குத் தெரியவே இல்லை. தேர்வுகள் வைத்தால் அவன் முப்பதுக்கு இருபத்தெட்டு வாங்குவான். எனக்கு முப்பதைத் தொடுவதற்கு இருபத்தெட்டு மதிப்பெண்கள் தேவைப்படும். கருமம் பிடித்தவர்கள்- மதிப்பெண் குறைந்தால் கை நீட்டிவிடுவார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் பெண்கள் இல்லாத பாலைவனத்திலேயே உழாத்திவிட்டு இப்பொழுது சிட்டுகளோடு சேர்ந்து படிக்கலாம் என்றால் அந்தச் சிட்டுகளின் முன்பாக சுரேஷ் ஹீரோவாகிக் கொண்டிருப்பான். நான் வாத்தியார்களுக்கு போண்டாவாகிக் கொண்டிருப்பேன்.

‘எப்படிடா மார்க் வாங்குற’ என்றால் ‘இதெல்லாம் அப்பவே படிச்சதுடா..’என்று கதை விட்டுவிடுவான். கேப்மாரி.

அவன் தலையணையை மூடிவிட்டு போகிறான் என்பதை ஏழெட்டு நாட்களுக்குப் பிறகுதான் கண்டுபிடித்தேன். பொதுத் தேர்வுக்கும் நுழைவுத் தேர்வுக்கும் இடையில் இருபது நாட்களோ என்னவோதான் இருந்தன. ஆனால் இப்படியே அந்தத் தலையணையைப் பார்த்துப் பார்த்து ஏழெட்டு நாட்களைக் கோட்டைவிட்டுவிட்டேன். அதன்பிறகுதான் டென்ஷன் ஏறியது. ‘என்னையும் எழுப்புடா’ என்று சொன்னால் பயங்கரமாகத் தலையை ஆட்டுவான். ஆனால் ஒரு நாள் கூட எழுப்பியது இல்லை. 

மதிய நேரத்தில் விடுதியின் புளித்த மோரை குடித்தால் கலக்கலாகத் தூக்கம் வரும். மதியம் தூங்கிவிட்டு இரவில் படித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்வேன். இரவிலும் தூக்கம் வந்துவிடும். இரவில் நேரத்திலேயே தூங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து படித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொள்வேன். ஆனால் ஒரு நாளும் சூரியன் முதுகில் சூடேற்றுவதற்கு முன்னால் எழுந்ததேயில்லை. நாட்கள் ஓட ஓட நான் தேய்ந்து கொண்டிருந்தேன். சுரேஷ் இன்னபிறரும் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கடுப்புதான் வயிற்றுப் புண் வருவதற்கான முதல் டென்ஷன்.

அப்புறம் எப்படியோ படித்து, தேர்வில் காப்பியடித்து - அது வேறொரு ட்ராக்.

கல்லூரியில் படிக்கும் போதும் ஒவ்வொரு செமஸ்டர் தேர்வு சமயத்திலும் வயிறு வலிக்க ஆரம்பிக்கும். அதற்கும் இதே காரணம்தான். படிப்பதற்காக கொடுக்கப்படும் ‘ஸ்டடி லீவ்’மொத்தமும் வீணாகப் போய்விட தேர்வு நாட்களும் மதியம், இரவு, அதிகாலை என்று கரைந்துவிட பிரச்சினை தொடங்கிவிடும். இப்படி நேரத்தை வீணாக்குவது பெரும்பாலான மாணவர்களுக்கும் நடக்கும்தான் என்றாலும் எனக்கு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்திவிடும்.

அவ்வப்போது மருத்துவர்களிடம் சென்றால் விட்டமின் பி குறைபாட்டினால் வந்திருக்கிறது என்று சில வைட்டமின் மாத்திரைகளைத் தருவார்கள். மாத்திரைகளை எடுத்துக் கொள்ளத் துவங்கிய ஏழெட்டு நாட்களில் நாட்களில் புண் ஆறிவிடும். ஆனால் ஒன்று- மாத்திரைகளைத் விழுங்காவிட்டாலும் கூட ஏழெட்டு நாட்களில் புண் ஆறிவிடும் என்பது வெகுநாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. 

இப்படியே பத்து பதினைந்து வருடங்களாக இழுத்துக் கொண்டிருக்க சமீபத்தில்  மூன்று மாதத்திற்கு ஒரு முறை கடன்காரனைப் போல இந்த வயிற்றுவலி எட்டிப் பார்த்ததால் அம்மாவுக்கு பயம் வந்துவிட்டது. ஏதோ பெரிய விவகாரம் என்று நினைத்துவிட்டார். நல்ல மருத்துவரைப் பார்க்கச் சொல்லி அனர்த்தத் தொடங்கியிருந்தார். பெங்களூரிலேயே ஒரு மருத்துவரைப் பார்த்தேன். 

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கூட குடிக்காமல் வந்துவிடச் சொல்லியிருந்தார். எண்டோஸ்கோப்பி செய்து பார்க்க வேண்டுமாம். அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். அந்தக் கட்டிலில் படுக்க வைத்து வாய்க்குள் ஒரு திரவத்தை ஊற்றி உள்ளே டியூப் உள்ளே இறங்க இறங்கத் தான் தெரிந்தது- ஏதோ மலைப்பாம்பு ஒன்று வயிற்றுக்குள் வழி தேடுவது போலவே இருந்தது. குமட்டியபடியே ‘ஓய்...ஓய்’ என்றால் அருகில் இருந்த கம்பவுண்டர் ‘ஏய்...ஏய்’ என்று காலைப் பிடித்துக் கொண்டார். ‘வெளியில் வாடா உனக்கு இருக்கு’என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் அந்தக் குழாய் தடுத்துவிட்டது.

எல்லாம் முடித்துவிட்டு  ‘Stress தான் காரணம்; தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். இருக்கும் புண்களை ஆறச் செய்வதற்கு சில மாத்திரைகளையும் கொடுத்தார். 

இப்போதைக்கு மாற்று மருத்துவத்தை முயன்று பார்க்கலாம்- தேவைப்பட்டால் கொஞ்ச நாட்கள் கழித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். பெரும்பாலான நோய்களுக்கு மிக எளிமையான மருத்துவம் நம்மிடம் இருக்கிறது என்று நம்புகிறேன்.

எங்கள் அமத்தா நாட்டு வைத்தியம் பார்ப்பார். அனைத்து நோய்களுக்கும் பார்க்கத் தெரியாது. ஆனால் சில குறிப்பிட்ட நோய்களுக்கு வைத்தியம் செய்வார். ஆனால் ஒரு மூலிகையின் பெயரைக் கூட சொல்லித் தந்தது இல்லை. வைத்தியத்திற்கு யாராவது வந்தால் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு தனியாகச் சென்று தேவையான மூலிகைகளை புடவைக்குள் மறைத்தபடிதான் எடுத்துவருவார். அதை அம்மியில் வைத்துக் கொட்டி மருந்தாக எடுத்து வரும் போதுதான் நம் கண்களுக்கே தெரியும். மூலிகையின் பெயரைச் சொன்னாலும் கண்ணில் காட்டினாலும் வைத்தியம் பலிக்காது என்று யாரோ சொல்லி வைத்ததை அப்படியே நம்புகிறார். அவரது அப்பாவும் ஏதேதோ நாட்டு வைத்தியங்கள் செய்வாராம். அவரிடமிருந்து கற்றுக் கொண்ட மிகச் சில வைத்தியங்களை இவர் செய்து வந்தார். இப்பொழுது இவருக்குத் தெரிந்த ஓரிரண்டு வைத்தியங்களும் இவரோடு காணாமல் போய்விடும். 

இந்த வாய்ப்புண்ணும் வயிற்றுப் புண்ணும் எந்தக் காலத்திலும் என்னைவிட்டுப் போகாது என்று நினைத்திருந்தேன். ஆனால் மிக எளிமையான வைத்தியம் ஒன்று இருக்கிறது. நண்பர்தான் சொல்லித் தந்தார். ஒவ்வொரு நாளும் நள்ளிரவு தாண்டிய பிறகு இரண்டு அல்லது மூன்று மணிக்கு அலாரம் வைத்து எழுந்துவிட வேண்டும். ஒரு கை பொட்டுக்கடலையை நன்றாக மென்று விழுங்கிவிட்டு தண்ணீரைக் குடித்துவிட வேண்டும். அவ்வளவுதான். பதினைந்து அல்லது இருபது நாட்கள் விழுங்கினால் போதும் என்றார். அவருக்கும் அவரது அப்பாவுக்கும் இது பலன் அளித்ததாகச் சொன்னார். ஆனால் நான் பதினைந்து நாட்களோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து விழுங்கிக் கொண்டிருக்கிறேன். அது எப்படி சரியாகும்? அவர் சொன்ன காரணம் மருத்துவரீதியாக சரியானதா என்று தெரியவில்லை- ஆனால் லாஜிக்கலாக சரியாக இருந்தது. பொட்டுக்கடலைப் பொடி ஓங்கி சுவரில் அடித்தால் கூட அப்பிக் கொள்ளும். அதே போலத்தான் புண்ணின் மீது படலமாக அப்பிக் கொள்கிறது. அதன் மீது தண்ணீரைக் குடித்தால் படலம் மேலும் கெட்டியாகிவிடுகிறது.  இந்தப் படலம் அதிகாலையில் சுரக்கும் அமிலங்கள் புண்ணை பாதிக்காதவாறு தடுத்து ஆறச் செய்கிறது என்றார்.

இதைச் சொன்னால் ஆங்கில மருத்துவர்கள் சண்டைக்கு வரக் கூடும். ஆனால் எனக்கு பலன் அளித்திருக்கிறது. இது போன்ற எளிமையான மருத்துவங்களை முயன்று பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. இணையத்தில் கூட பல நோய்களுக்கு பாட்டி வைத்தியங்கள் கிடைக்கின்றன. நோயை முழுமையாகக் கண்டறியாமல் இவையெல்லாம் எந்த அளவுக்கு உதவக் கூடும் என்று தெரியவில்லை. ரிஸ்க்கும் அதிகம். ஆனால் உடலில் இருக்கும் நோய் நமக்கு பெரிய பாதிப்பை உருவாக்காது என்று தெரிந்துவிட்டால் ஒரு கை பார்த்துவிடலாம். இது போன்ற மாற்று வைத்தியங்கள் ஆயிரக்கணக்கில் இருந்திருக்கக் கூடும். பெரும்பாலானவற்றை இழந்துவிட்டோம். இன்னும் கூட நூற்றுக்கணக்கான கை வைத்தியங்கள் இருக்கக் கூடும். அவையெல்லாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்று யாருக்குத் தெரியும்?

May 21, 2014

இந்தப் பெண்ணுக்கு எப்படி சாத்தியம்?

சின்னானை வெகுகாலமாகத் தெரியும். சின்ராசு என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்தான்- சின்னான். சலவைத் தொழிலாளி. அக்கம்பக்கம் இருக்கும் வீடுகளில் துணி வெளுத்தால் கிடைக்கும் வருமானத்தில்தான் மொத்த ஜீவனமும் ஓடிக் கொண்டிருக்கிறது. 

வெளுக்கச் செல்லும் வீடுகளில் அள்ளியெல்லாம் கொடுக்க மாட்டார்கள். சில வீடுகளில ஆண்டுக்கு பத்தாயிரம் கொடுக்கிறார்கள். வேறு சில வீடுகளில் ஆண்டுக்கு வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான். மொத்தமாக ஆறு அல்லது ஏழு வீடுகளில் வெளுக்கிறார் போலிருக்கிறது. எப்படியிருந்தாலும் ஆண்டு வருமானம் ஐம்பதாயிரத்தைத் தாண்டாது.

இதுபோக தீபாவளி, பொங்கல் என்றால் அரிசி, பருப்பு, இனிப்பு என்று மனசுக்குத் தகுந்த மாதிரி கொடுப்பார்கள். அதோடு சேர்த்து ஐம்பது அல்லது நூறு ரூபாயை இனாமாகத் தருவார்கள். அவ்வளவுதான் வருமானம். இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு எஜமானன் வீட்டுத் துணிகள் அத்தனையையும் துவைத்து, காய வைத்து, வெள்ளைத்துணியாக இருந்தால் வெள்ளாவியில் போட்டு, இஸ்திரி செய்து, மடிப்புக் கலையாமல் கொடுக்க வேண்டும். 

நகரத்தில் இருக்கும் சலவைத் தொழிலாளிகள் போலத் துணிக்கு இத்தனை கொடுங்கள் என்றெல்லாம் சின்னான் கேட்பதில்லை. எத்தனை துணிகளைப் போட்டாலும் வெளுத்துக் கொடுத்துவிடுவார். அப்பிராணி. 

ஒரு காலத்தில் எங்கள் வீட்டுக்கு வந்து வெளுத்துக் கொண்டிருந்தார். அவரது ஊருக்கும் எங்கள் ஊருக்கும் கிட்டத்தட்ட முப்பது கிலோமீட்டர் தூரம் இருக்கும். சின்னானுக்கு உடல் வலுவும் குறைந்து கொண்டேயிருந்தது; பஸ் கட்டணமும் கட்டுபடியாவதில்லை என்று நின்றுவிட்டார். அவர் வந்து கொண்டிருந்த குறுகிய காலத்தில் நிறையக் கதைகள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அத்தனையும் சொந்தக் கதைகள் + சோகக் கதைகள்தான். 

அவருக்கு மூன்றும் பெண் பிள்ளைகள். அதுதான் அவரது பெரும் பிரச்சினை. அவரது பேச்சுக்கள் பெரும்பாலும் அதைச் சுற்றித்தான் இருக்கும். குடியிருக்க சொந்த வீடு இல்லை- இந்த நிலையில் மூன்று பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்கி, இன்னொருத்தனுக்கு எப்படி கட்டிக் கொடுக்கப் போகிறேன் என்று ஒரு தடவை பேசுவார். இன்னொரு முறை ‘இவர்கள் மூன்று பேரும் போன பிறகு எங்களைப் பார்த்துக் கொள்ளக் கூட யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கலங்குவார். பேசிக் கொண்டே துணியை கல் மீது தப்பும் போது தனது அத்தனை துக்கங்களையும் அந்தக் கல்லின் மீது இறக்கி வைக்கிறார் என்று நினைக்கத் தோன்றும். அத்தனை ஆக்ரோஷமாக இருக்கும்.

சின்னான் என்னதான் கதைகள் பேசினாலும் அந்தப் பெண்களின் படிப்பு பற்றியோ அவர்கள் வேலைக்குப் போவது பற்றியோ அவர் பேசியதாக ஞாபகமே இல்லை. அதற்கான கற்பனைகளைக் கூட அவர் செய்திருக்க மாட்டார். எதற்கு கற்பனை செய்யப் போகிறார்? அதெல்லாம் தனது சாதிக்கும், தொழிலுக்கும் சம்பந்தமேயில்லாதது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்தான் பேசியதில்லையே தவிர பெண்கள் படு சுட்டிகள். பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்

பத்தாவது வரை அரசுப்பள்ளியில்தான் படித்தார்கள். மதிப்பெண்களை குவித்துவிட்டார்கள். தனியார் பள்ளியொன்று ஃபீஸ் இல்லாமல் படிக்க வைப்பதாகச் சேர்த்துக் கொண்டார்கள். ப்ளஸ் டூவிலும் பட்டாசு வெடித்திருக்கிறார்கள். முதல் மகள் 1140, அடுத்த ஓரிரண்டு வருடத்தில் இரண்டாவது மகள் 1122, மூன்றாவது மகள்- நந்தினி- இந்தவருடம் 1140 மதிப்பெண்கள்.  ‘சின்னான் புள்ளைக படிப்புல செம கடுசு’ என்று ஊருக்குள் பேச வைத்துவிட்டார்கள். முதல் இரண்டு பெண்களும் பொறியியல்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருத்தி கம்யூட்டர் சயின்ஸ், இன்னொருத்தி ஐடி. சின்னானிடம் பேசிப் பார்க்க வேண்டுமே. தனது இரண்டு மகள்களுமே பொறியியல் படிக்கிறார்கள் என்பதில் அத்தனை சந்தோஷம். அத்தனை பெருமை.

முதல் இரண்டு மகள்களைவிடவும் மூன்றாவது பெண்ணுக்கு நல்ல கல்லூரி கிடைத்துவிடும். கட் ஆஃப் 199.25. கணிதத்தில் 200; இயற்பியலில் 198; வேதியியலில் 199. இன்று மாலையில்தான் பேசினேன். மதிப்பெண்களைக் கேட்டு வாயடைத்துவிட்டது. அப்பன் சலவைத் தொழிலாளி, சொற்ப வருமானம், குடியிருக்க வீடு இல்லை ஆனாலும் கலக்கியிருக்கிறாள். அவளது சூழலில் இத்தனை மதிப்பெண்களைக் குவிப்பதெல்லாம் மிகப் பெரிய சாதனை இல்லையா?

இதுவரை எல்லாமே சுகம்தான். இனிமேல்தான் சிக்கலே. முதல் பெண்ணுக்கு வங்கிக்கடன் கிடைத்துவிட்டது. தப்பித்துவிட்டார்கள். இரண்டாவது பெண்ணுக்கு வங்கியில் கடன் வாங்க முடியவில்லை. கை ஊன்றி கர்ணம் அடித்து முதல் வருட ஃபீஸைக் கட்டிவிட்டார். இந்த ஆண்டு இரண்டாவது வருடச் செலவும் வந்து சேர்ந்துவிட்டது. அதோடு சேர்த்து இப்பொழுது மூன்றாவது பெண்ணுக்கும் தயாராக வேண்டும். அத்தனை செலவையும் தனது ஆண்டு வருமானம் ஐம்பதாயிரத்தில் செய்தாக வேண்டும். கண்ணாமுழி திருகிக் கிடக்கிறார். 

‘நல்லா படிச்சுட்டா சாமி...படிப்பை நிறுத்துறதுக்கும் மனசு வரலை’ என்ற போது ஒரு கணம் கலங்கித்தான் போனார். 

‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இருக்காது சின்னா...எப்படியும் சமாளிச்சுடலாம்’ என்று சொல்லிய போது ‘இந்த வார்த்தையே போதுஞ்சாமி...அவ படிச்சுடுவா’ என்றார். அவருக்கு வேறு என்ன பதிலாகச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. கையில் லட்சக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு எந்தக் கல்லூரியில் சேர்ப்பது என்று ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. கையில் துளி காசு இல்லாமல் ஏகப்பட்ட மதிப்பெண்களை வைத்துக் கொண்டு சின்னானின் மகள்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். 

அதற்கு மேல் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அடுத்த வாரம் அழைப்பதாகச் சொல்லிவிட்டு கட் செய்துவிட்டேன். இடைப்பட்ட காலத்தில் ஏதாவது செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களால் உதவ முடியும் என்றால் சின்னானின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக மாற்றிவிடுங்கள். எனக்கு ஒரு தகவலை மட்டும் சொல்லிவிடுங்கள்.

வங்கிக் கணக்கு எண்: 05520100021446 (Bank of Baroda)
Account Holder: Anitha.C
Joint Holder: Chinrasu

(இப்போதைக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டதால் வங்கிக்கணக்கின் பிற விவரங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. நன்றி)

vaamanikandan@gmail.com

குழந்தையை என்ன செய்வது?

நேற்று இங்கு மழை. பேய் மழை இல்லையென்றாலும் பிசாசு மழை என்றுதான் சொல்ல வேண்டும். மாலை ஆறு மணிக்கு பெய்யத் தொடங்கி வெகு நேரம் துளிர்த்துக் கொண்டேயிருந்தது. மழை பெய்தால் போதும்- அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பிவிடுவேன். ஸ்ரேயா மாதிரியோ அல்லது த்ரிஷா மாதிரியோ மழைப் பிரியன் என்று அர்த்தம் இல்லை. வண்டி சுத்தமாகிவிடும். 

நேற்றிரவு ஏழே முக்கால் மணிக்கெல்லாம் ஈஜிபுரா சிக்னலைத் தாண்டிவிட்டேன். பெங்களூர்வாசிகளுக்குத் தெரிந்திருக்கக்கூடும்- அந்த சிக்னலின் இடதுபுறத்தில் ஒரு மண் பாதை செல்லும். குண்டும் குழியுமாகத்தான் இருக்கும். ஆனால் சிரமப்பட்டு அதில் கொஞ்ச தூரம் சென்றால் கோரமங்களாவை பிடித்துவிடலாம். நிறைய சிக்னல்களைத் தவிர்த்துவிடலாம். இந்த ஏரியாவில் நெருக்கிக் கட்டப்பட்ட ஏகப்பட்ட குட்டி வீடுகள் உண்டு. பியூட்டி பார்லர்களிலும், மசாஜ் சென்டர்களிலும் பணி புரியும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கேதான் அதிகமாகக் குடியிருக்கிறார்கள். பெங்களூரில் கோரமங்களாதான் மசாஜ் சென்டர்களுக்கு பிரசித்தம். 

நேற்று இந்த மண்சாலையில் சென்று கொண்டிருந்த போதுதான் பார்த்தேன். யாரோ இரண்டு பேர் கத்திக் கொண்டிருந்தார்கள். சண்டை போடுகிறார்கள் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் கீழே கிடந்த ஒரு பெண்மணியை அவர்கள் தூக்கி அமர வைக்க முயன்று கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் வண்டியை நிறுத்துவதற்கு தயக்கமாகத்தான் இருந்தது. அது விபத்தோ, சண்டையோ அல்லது கொலையோ- நமக்கு எதற்கு வம்பு என்ற யோசனைதான். அதுவும் இல்லாமல் அங்கே என்ன நடக்கிறது என்றும் தெளிவாகத் தெரியவில்லை. மழை நீர் கண்ணாடியில் பட்டு பார்வையை குழம்பச் செய்திருந்தது. 

என்னவாக இருந்தாலும் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து அருகே சென்ற போதுதான் தெரிந்தது. அது விபத்துதான். முடிந்து சில நிமிடங்கள் ஆகியிருக்கக் கூடும். ஒரு முஸ்லீம் பெண் கீழே கிடந்தாள். பர்தா அணிந்திருந்தாள். அதைவிடவும் பரிதாபம்- அவள் தூக்கி வந்திருந்த பிஞ்சுக் குழந்தை ஒன்றும் கீழே கிடந்தது. அந்தச் சாலையில் தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்திருக்கிறாள். மழை வேகமாக விசிறியடிக்கவும் நனையாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக சற்று பதறியிருப்பாள் போலிருக்கிறது. அதே நேரத்தில் வந்த ஆட்டோக்காரன் முன்னால் இருக்கும் குழியில் ஆட்டோவை விடாமல் தவிர்ப்பதற்காக வண்டியை வளைத்திருக்கிறான். ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த இவள் மீது ஆட்டோ மோத திருகி கீழே விழுந்திருக்கிறாள். திருகி விழும் போது அவளது பின் மண்டை அருகில் இருந்த மின்கம்பத்தின் விளிம்பில் பட்டிருக்கிறது. ஆட்டோக்காரன் நிற்காமல் சென்றுவிட்டான். அவனை நோக்கித்தான் அந்த இரண்டு பேரும் கத்தியிருக்கிறார்கள். நான் அருகில் செல்லும் போது சேற்றுக்குள் தூக்கி வீசப்பட்டிருந்த குழந்தை கதறிக் கொண்டிருந்தது. இருவரில் ஒருவர் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டார். முதல் சில நிமிடங்கள் மயக்கம் இல்லாமல்தான் இருந்தாள். ஆனால் தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே அவளுக்கு புரியவில்லை. வலி, இருள், மழை, சேறு, கீழே விழுந்துவிட்ட குழந்தை, சுற்றிலும் நிற்கும் முகம் தெரியாத ஆடவர்கள்- இந்தச் சூழல் அவளை பதறச் செய்திருந்தது.

அந்தப் பகுதியில் இசுலாமியர்களை பார்த்ததாக ஞாபகம் இல்லை. அந்த ஏரியாவைச் சார்ந்தவளா என்றும் தெரியவில்லை. அலைபேசி ஏதாவது இருக்கிறதா என்று ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தபோதே அவளது கண்கள் சொருகத் தொடங்கியிருந்தன. அவளுக்குத் தெரிந்தவர்களின் எண்கள் ஏதாவது தெரிந்தால் தகவல் சொல்லிவிடலாம். ஆனால் அவள் கிட்டத்தட்ட மயங்கியிருந்தாள். குழந்தையை வைத்திருந்தவர் அவளைவிடவும் அதிகமாக பதறியபடி இருந்தார். அந்தக் குழந்தையின் கதறல் அப்படி. கண்களை மூடிக் கொண்டு வீறிட்டது. எனக்கும் பயமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. ‘எப்படி அழுகையை நிறுத்துவது?’ என்று கேட்டபடியே ‘லுலுலாயி’ என்று ஏதேதோ சமாதானங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தை கேட்பதாக இல்லை. இன்னொருவர் அந்தப் பெண்ணின் தலையைத் தொட்டுப் பார்த்தார். பின் மண்டையில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. முதலில் அது ஈரமா அல்லது ரத்தமா என்று அவருக்குத்தெரியவில்லை. கைகளை சோடியம் விளக்கின் கீழாக வைத்துப் பார்த்தார். ரத்தம் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. உடனடியாக ஆம்புலன்ஸுக்கு சொல்லிவிட்டோம்.

ஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும் இந்தக் குழந்தையை என்ன செய்வது என்றும் தெரியவில்லை. குழம்பிக் கொண்டிருந்த போதே ஒரு வடகிழக்கு தம்பதியினர் வந்து சேர்ந்தனர். காதலர்களா அல்லது கணவன் மனைவியா என்று தெரியவில்லை. வந்தவுடன் குழந்தையை வாங்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். இன்னமும் ஆம்புலன்ஸ் வந்து சேரவில்லை. ஆனால் குழந்தையின் அழுகை சற்று மட்டுப்பட்டிருந்தது. அவன் தனது பாட்டிலில் இருந்த நீரை கீழே கிடக்கும் பெண்ணுக்கு கொடுக்க முயன்று கொண்டிருந்தான். அவளுக்கு துளி ஞாபகம் இருந்தது. ‘ஏதாவது செல்போன் இருக்கான்னு பாருங்க’ என்று யாரோ ஒருவர் ஹிந்தியில் சொன்னது அவளுக்கு அரைகுறையாக காதில் விழுந்திருக்கக் கூடும். இல்லையென்று கைகாட்டினாள். 

என்ன நினைத்தாளோ- அந்த வடகிழக்குப் பெண் திடீரென்று குழந்தையை என்னிடம் நீட்டிவிட்டாள். வாங்கிக் கொள்ளவும் தயக்கமாக இருந்தது முடியாது என்றும் சொல்ல முடியவில்லை. குழப்பமான மனநிலையில் கையை நீட்டுவதற்குள்ளாகவே என் கைகளின் மீது வைத்துவிட்டாள். குழந்தை ஈரமும் வெதுவெதுப்பாகவும் இருந்தது. ஒன்றரை வயது இருக்கக் கூடும். என்னிடம் வந்த பிறகு மீண்டும் அழத் துவங்கியது. விழுந்து கிடக்கும் பெண்ணின் மார்பு, இடுப்பு ஆகிய இடங்களில் தேடிப்பார்த்தாள். நகைக்கடையில் கொடுக்கும் ஒரு பர்ஸூம் அதில் சொற்பப் பணமும்தான் இருந்தது. இத்தனை நடந்து கொண்டிருக்கும் போது நாங்கள் நான்கைந்து பேர்கள்தான் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தோம். அவள் அடிபட்டுக் கிடப்பதைவிடவும் இந்தக் குழந்தையை என்ன செய்வது என்பதும் யாருக்குத் தகவல் தெரிவிப்பது என்பதும் டென்ஷனைக் கூட்டியபடியே இருந்தது. இந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடலாமா என்று கூட யோசனை ஓடியது. அடிபட்டுக் கிடக்கும் பெண்ணின் வயதை உடைய எனது அத்தனை சொந்தக்காரப் பெண்களும் ஒரு வினாடி ஞாபகத்துக்கு வந்து போனார்கள். இருபது நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நல்ல மனிதர். நிலைமையை புரிந்து கொண்டார். யாராவது ஒருவர் இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு கூட வர வேண்டும் என விரும்பினார். ஒரு வினாடி கூட யோசிக்காமல் ‘நான் வருகிறேன்’ என்று அந்த வடகிழக்குப் பெண் சொன்னாள். அந்த ஆணும் பெண்ணும் குழந்தையை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டார்கள். மற்றவர்கள் விலகிக் கொண்டார்கள். அவள் என்ன தைரியத்தில் கூட வருவதாகச் சொன்னாள் என்று புரியவில்லை. ஒருவேளை அந்தப் பெண் செத்துப் போய்விட்டால் குழந்தையை என்ன செய்வாள்? அந்தப் பெண்ணுக்கு ஞாபகமே வரவில்லை என்றால் என்ன செய்வாள்? யாரென்றே கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன செய்வாள்? காவல்துறையின் கேள்விகளை எப்படிச் சமாளிப்பாள்? இந்தக் கேள்விகள் எனக்குள்தான் ஓடிக் கொண்டிருந்தன. அவள் இதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படவில்லை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு பெண் அடிப்பட்டுக் கிடக்கிறாள். குழந்தை தனியாக அழுது கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

கீழே விழுந்து கிடக்கும் பெண்ணுக்காக இல்லையென்றாலும் அந்த தம்பதியினருக்காக கூடவே இருப்பதுதான் நல்லது எனத் தோன்றியது. பைக்கை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸைப் பின் தொடர்ந்தேன். மருத்துவமனையில் விசாரித்தார்கள். விபத்து பற்றிய விவரங்களைச் சொன்னவுடன் நம்பிக்கொண்டார்கள். சினிமாவில் கேட்பது போலவெல்லாம் தோண்டித் துருவவில்லை. அவர்களே காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு கான்ஸ்டபிள் வந்து சேர்ந்தார். சில தாள்களில் விவரங்களைக் குறித்துக் கொண்டார். கன்னடத்தில்தான் எழுதினார். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. ஸ்கேன் செய்து பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது. உள்ளே அடி எதுவும் இல்லை. ஆனால் காயம் பெரிது என்பதால் தையல் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். வேறு பெரிய பிரச்சினை இல்லை என்றார்கள்.

கடும் அழுகைக்குப் பிறகு குழந்தை தூங்கியிருந்தது. வடகிழக்குப் பெண் அந்தக் குழந்தைக்கு வாகாக சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

‘இவளது குடும்பத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறது சார்?’ என்று கான்ஸ்டபிள்டம் கேட்டேன். தமிழில் தான். அவரும் தமிழிலேயே பதில் சொன்னார். ‘அவளுக்கு ஞாபகம் வந்தவுடன்தான் முடியும்’ என்றார். அந்த வடகிழக்கு ஆள் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆங்கிலத்தில் அவரிடம் சொன்னேன். மனைவியிடம் என்னவோ முணுமுணுத்தார். பதிலுக்கு அவளும் என்னவோ சொன்னாள். ‘அதுவரைக்கும் நாங்க இங்க இருக்கிறோம்’ என்றார். கான்ஸ்டபிளுக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்திருக்கக் கூடும். சில கேள்விகளைக் கேட்டார். அவன் ஹிந்தியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் அவருடைய டிரைவிங் லைசன்ஸ், வேலை செய்யும் பியூட்டி பார்லரின் விசிட்டிங் கார்ட், ஃபோன் நெம்பர் ஆகியவற்றைக் கொடுத்தான். ட்ரைவிங் லைசென்ஸில் இருக்கும் படத்தை ட்யூப்லைட் வெளிச்சத்தில் உற்றுப்பார்த்துவிட்டு கான்ஸ்டபிள் அதையெல்லாம் எடுத்துக் கொண்டார். பிறகு தருவதாகச் சொன்னார்.

கான்ஸ்டபிள் நகர்ந்தவுடன் என்னிடம் ‘நீங்க கிளம்புங்க...நாங்க ரெண்டு பேரும்தான் இருக்கோம்ல’ என்றார்கள். சிரித்துக் கொண்டேன். 

‘சாப்பிட்டீங்களா?’ என்றதற்கு இல்லை என்றார்கள். லேப்டாப் பையை அங்கேயே வைத்துவிட்டு வெளியில் இருந்த ஃபாஸ்ட் புட் கடையில் இரண்டு ப்ரைடு ரைஸ் வாங்கி வந்தேன்.அந்தப் பெண் ‘தேங்க்ஸ்’ என்றாள். உண்மையில் அவளது காலைத் தொட்டு வணங்க வேண்டும் போலிருந்தது. ‘உங்களுக்குத் தேங்க்ஸ்...காலையில் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அவர்கள் மெலிதாகச் சிரித்தார்கள். குழந்தை இன்னமும் விழித்திருக்கவில்லை.

மழை சுத்தமாக நின்றிருந்தது. 

May 19, 2014

என்ன சம்பாத்யம்?

சில வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். இந்தியர்கள்தான். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். ஹர்ஷ் அகர்வால், சுஷாந்த் ரிஷோட்கர் போன்றவர்கள் உதாரணம். பொடிப்பையன்கள்தான். ஆனால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவர்தான் இந்தப் பெயர்களை எல்லாம் அறிமுகப்படுத்தினார். அப்பொழுது எனக்கு அவ்வளவாக விவரம் போதவில்லை. ஆங்கிலத்தில் எழுதுவதும் தமிழில் எழுதுவதைப் போலவேதான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஒருவேளை தமிழை விடவும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டிருந்தேன். 

அந்த நினைப்பிலேயே நானும் தமிழில் எழுதிக் கொண்டிருப்பதாக அவரிடம் உளறிவிட்டேன். அதுவரை ஒழுங்காகப் பேசிக் கொண்டிருந்தவர் ‘சிக்கிக் கொண்டான்’ என்கிற ரீதியில் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார். தினமும் எத்தனை பேர் வாசிக்கிறார்கள்? பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அதையெல்லாம் தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடலாம். கடைசியாகக் கேட்டார் பாருங்கள்- இதில் எவ்வளவு சம்பாதிக்கிறாய் என்று. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் சில்லிட்டுப் போனது. இதில் எங்கே சம்பாதிப்பது? 

தமிழில்தான் வழியில்லை. ஆனால் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் சம்பாதிக்கிறார்கள். 

ஆங்கில வலைப்பதிவுகளை வாசிப்பவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் தமிழில் இணையத்தில் எழுதுபவர்களுக்கான வரவேற்பு எந்தவிதத்திலும் பொருட்படுத்தத்தக்கது இல்லை- negligible. இதை புகாராகச் சொல்லவில்லை. இதுதான் நிதர்சனம். ஹர்ஷ் அகர்வால், சுஷாந்த் ரிஷோட்கர் ஆகியோருக்கெல்லாம் இருபது அல்லது இருபத்தைந்து வயதுதான் ஆகிறது. ஹர்ஷ் அகர்வாலை கூகிள் ப்ளஸில் லட்சத்து நாற்பதாயிரம் பேர்கள் பின் தொடர்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவரது வலைப்பதிவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருக்கிறது. மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆரம்பகாலங்களில் ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரங்களை இணையத்தில் எழுதுவதற்காக செலவிட்டிருக்கிறாராம். இப்படி அவர் எழுதுவதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. விளம்பரங்களின் மூலமாகவே லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இணையத்தில் எழுதுவதையே தனது முழு நேர வேலையாகவே செய்யவிருப்பதாக ஒரு பழைய நேர்காணலில் சொல்லியிருந்தார். ஆரம்பித்துவிட்டாரா என்று தெரியவில்லை. பார்ட் டைமிலேயே படம் காட்டுகிறார்கள். முழு நேர வேலையாக இறங்கிக் கலக்கினால் என்னவெல்லாம் செய்வார்களோ.

தமிழில் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எதிர்காலத்திலும் நடக்குமா என்று தெரியவில்லை. இன்றைய சூழலில் ஒரு நாளைக்கு நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் பார்வையாளர்களைக் கூட தாண்ட வாய்ப்பில்லை. அதற்காகத் தமிழில் வாசிப்பதற்கு ஆள் இல்லை என்று அர்த்தம் இல்லை. தேர்தல் சமயத்தில் தினமலர் தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை பதினாறு லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. மற்ற நாட்களில் எட்டு லட்சம் பேர் வரைக்கும் பார்க்கிறார்களாம். எட்டு லட்சம் இல்லையென்றாலும் ஐந்து அல்லது ஆறு லட்சம் பேர் நிச்சயமாக வாசிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். 

தினமலர் போன்ற செய்தித் தளங்களையும் சினிமா இணையதளங்களையும் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படியிருந்தாலும் ஆறு லட்சம் எங்கே? வலைப்பதிவுகளை வாசிக்கும் வெறும் ஐந்தாயிரம் பேர் எங்கே? மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இது. தினமலரை வாசிக்கும் ஐந்து லட்சம் பேர்களில் ஐம்பதாயிரம் பேரையாவது இழுக்கும் அளவிற்கு இங்கு எழுதுவதில்லை என்றுதானே அர்த்தம்? ஆமாம். துக்கினியூண்டு கசந்தாலும் அதுதான் உண்மை. ஏதோ ஒருவிதத்தில் நிறையப் பேரை ஈர்க்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

முக்கியமான பிரச்சினை வெரைட்டி. ஒருவர் அரசியல் எழுதினால் அவர் அரசியல் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார். நையாண்டி என்றால் அவர் அதைத் தாண்டுவதில்லை. இணையத்தைப் பொறுத்தவரையில் நாம் எழுதுவதை ஒருவர் தொடர்ந்து வாசிக்க வேண்டுமனால் அதற்காக நாம் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. கட்டுரையின் முதல் மூன்று வரிகள் ஈர்க்கவில்லை என்றால் ப்ரவுசரை மூடிவிட்டு போய்விடுவார். அதன்பிறகு ஒன்றிரண்டு முறைகள் பார்ப்பார். ஒவ்வொரு முறையும் மொக்கையின் வீச்சு அதிகமாக இருந்தால் ‘உன் சங்காத்தமே வேண்டாம்’ என்று கிளம்பிவிடுவார். அவ்வளவுதான். அதன் பிறகு திரும்பிக் கூட பார்க்க மாட்டார்.

ஒரு நாளைக்கு சராசரியாக முப்பது பேர் வாசித்துக் கொண்டிருக்கும் தளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேராக மாற்றுவது வரைக்கும் பெரிய விஷயமாகவே தெரியாது. மிக எளிது. ஆனால் அதற்கு மேல் வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் சவாலே. மேட்டாங்காட்டில் ஏற முடியாத காளையின் நிலைமைதான். திணற வேண்டும்.

இந்த இடத்தில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். பலருக்கு வாசகர்களின் எண்ணிக்கை என்பது பொருட்டே இல்லை. உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் வெளியில் அப்படித்தான் சொல்லிக் கொள்வார்கள். நாமும் சரி என்று கேட்டுக் கொள்ள வேண்டும். முப்பது பேர் வாசித்தாலும் சரி; முந்நூறு பேர் வாசித்தாலும் சரி- எனக்கு இதெல்லாம் பிரச்சினையே இல்லை என்பார்கள். அவர்களை விட்டுவிடலாம்.

வலைப்பதிவை தமிழில் Professional ஆக- ஹர்ஷ் அகர்வால் மாதிரி- மாற்றுவதற்கான சாத்தியங்களைப் பற்றி பேசுகிறோம் அல்லவா? அவர்களுக்குதான் வாசகர்களின் எண்ணிக்கை, வெரைட்டி என்பதெல்லாம் முக்கியம். இந்த இரண்டாவது வகையறா ஆட்கள் ஒரு அடிப்படையான அம்சத்தை புரிந்து கொள்ளுதல் அவசியம். வலைப்பதிவுக்கும், பத்திரிக்கைகள் போன்ற Main stream ஊடகங்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. பத்திரிக்கைகளில் ஒருவர் அரசியல் கட்டுரைகள் எழுதினால் அதையே அவர் தொடர்ந்து கொண்டிருக்கலாம். பிரச்சினை இல்லை. அதுவே அவருக்கான ப்ராண்ட் ஆகிவிடும். ஆனால் இங்கு அது ஒத்து வராது- ஒத்துவராது என்றால் ஒரே சப்ஜெக்டை வைத்துக் கொண்டு பெரிய தாக்கத்தை உருவாக்குவது சுலபம் இல்லை. ஒரே விஷயத்தை எழுதிக் கொண்டிருந்தால் குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி வாசகர்களின் பரப்பை அதிகரிக்க முடியாது. 

அப்படியென்றால் எல்லா தட்டுகளிலும் வாய் வைத்துவிடலாமா? இலக்கியவாதிகள், எழுத்தாளர்களிடம் பேசினால் ‘எல்லா விஷயத்தையும் தொட வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது ஒன்றில் மட்டும் ஆழமாக எழுது’ என்பார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். ஆனால் இதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம் எதிர்காலத்திட்டம் என்ன? Main stream எழுத்தாளராக விரும்புகிறோமா அல்லது இணையத்திலேயே தொடர விரும்புகிறோமா? ஒரே ஒரு ஏரியாவில் ஆழ உழலாமா? அல்லது பரவலாக உழலாமா என்பதையெல்லாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். 

என்னதான் தமிழ் வலைப்பதிவுகளில் ஆட்டம் கட்டினாலும் ஆங்கில வலைப்பதிவர்களைப் போல சம்பாதிக்கலாம், லட்சக்கணக்கான வாசகர்களை அடையலாம் என்பதெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் சாத்தியமே இல்லை. ஆனால் அதற்கான முயற்சிகளை செய்து பார்க்கலாம். அவ்வளவுதான்.

தனிப்பட்ட முறையில் கேட்டால்- வலைப்பதிவு என்பது ஒரு பயிற்சிக்களம். எல்லாத் துறைகளிலும் கை வைத்துப் பார்த்துவிடலாம். நமக்கு சுத்தமாகவே ஒத்து வராது என்றால் மட்டும் அந்தத் துறையை ஒதுக்கி வைக்கலாம். மற்றபடி சும்மாவே ஆட வேண்டியதுதான். ஆடிக் கொண்டிருந்தால் அவ்வப்போது யாராவது சலங்கையை கட்டிவிடுவார்கள். சலங்கை இல்லாமலேயே ஆடுவோம். சலங்கையையும் கட்டிவிட்டால் கேட்கவா வேண்டும்? ததிம் தக்..தக்..தக்..ததிம் தக்...

அது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லை

சேர மன்னன் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் போர் வந்துவிட்டது. இது பழைய கதைதான்- இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய கதை. சங்ககாலச் சேரர்களில் இந்த இரும்பொறைதான் கடைசி அரசனாம். சேரனும் சோழனும் மோதிக் கொண்ட இந்தப் பெரும்போரில் இரும்பொறை தோற்றுவிட்டான். சோழனின் ஆட்கள் உற்சாகமடைந்துவிட்டார்கள். தோற்றுப் போனவனை சங்கிலி போட்டு இழுத்து வந்து சிறையில் அடைத்துவிட்டார்கள். 

உடலில் ஒரு காயம் கூட ஆகாமல் இப்படி சிறையில் அடைத்துவிட்டார்களே என்று சேரனுக்கு மனம்கொள்ளா வருத்தம். விழுப்புண் இருந்தால்தானே மன்னனுக்கு மரியாதை? இனி இவர்களிடம் கைதியாக இருப்பதைவிட செத்துப் போய்விடலாம் என்று பட்டினி கிடக்கத் துவங்கியிருக்கிறான். எத்தனை நாட்கள்தான் கிடக்க முடியும்? சோறும் இல்லை; தண்ணீரும் இல்லை. சில நாட்கள் கடந்த பிறகு சேரனுக்கு கடும் தாகம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்திருக்கிறான். முடியவில்லை. நா வறண்டு, உதடுகள் வெடித்துப் போய்விட்டன. கடைசியில் அவனையும் அறியாமல்‘தண்ணீர்’ என்று கேட்டுவிட்டான். காவலாளிகள் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தண்ணீரைக் கொண்டு வருவதற்குள் ‘இவர்களிடம் போய் கேட்டுவிட்டேனே’ என்று உரைத்துவிட்டது. கொண்டு வந்த தண்ணீரைக் குடிக்கவில்லை. அதோடு நிற்காமல் கடைசியாக ஒரு பாடலையும் எழுதி வைத்துப் போய்விட்டான். 

‘குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளில் தப்பார்’- புறநானூற்றுப் பாடல் இது. குழந்தை பிறந்து செத்துப் போனாலோ அல்லது பிறக்கும் போதே செத்துப் பிறந்தாலோ கூட கத்தியால் அறுத்துப் புதைக்கும் பரம்பரை நாங்கள். அப்படியான பரம்பரையில் பிறந்துவிட்டு ஒரு புண் கூட உடலில் இல்லாமல் சிறைபட்டிருக்கும் இந்த உடலைக் காப்பாற்றவா தண்ணீர் குடிக்க வேண்டும்? முடியாது, சாகிறேன் என்று எழுதி வைத்துவிட்டு மேலே போய்விட்டான். ரோஷக்காரப் பயல்.

எங்கள் ஊரில் கே.எம்.ஆர் என்றொரு பெரியவர் இருந்தார். கே.எம்.ராமசாமிக் கவுண்டர் என்பதன் சுருக்கப்பட்ட வடிவம். வெகுநாட்கள் தலைமையாசிரியராக இருந்தார். ஏதோ ஒரு கட்டத்தில் அரசியலுக்குள் மூக்கை நுழைத்துவிட்டார். எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார், எம்.எல்.சியாகவும் இருந்திருக்கிறார். ஊருக்குள் மிகுந்த மரியாதையோடு இருந்திருந்தவர் ஒரு தேர்தலில் தோற்றுப் போய்விட்டார். தோல்வியைத் தாங்க முடியாமல் தனது தோட்டத்து பங்களாவில் வெகுநாட்கள் தனித்துக் கிடந்தாராம். யாரெல்லாமோ சென்று அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்ததாகச் சொல்வார்கள். அப்படியிருந்து அவரை அவ்வளவு சீக்கிரம் சமாதானப்படுத்த முடியவில்லை என்பார்கள். குமுறி குமுறி அழுது கொண்டிருந்தாராம். இப்பொழுதும் அந்தப் பக்கம் சென்றால் கே.எம்.ஆர் ஞாபகத்துக்கு வந்துவிடுவார். அந்த மனிதன் தனது தோல்வியைச் சகித்துக் கொள்ள முடியாமல் குறுகிக் கிடந்த போது அவரது அத்தனை புலம்பல்களுக்கு அந்தச் சுவர்கள் காது கொடுத்து ஆறுதல் சொல்லியிருக்கும் அல்லவா? இப்பொழுதும் அந்தக் கட்டடம் இருக்கிறது. ஆனால் பாழடைந்து கிடக்கிறது. 

இரும்பொறையிலிருந்து கே.எம்.ஆர் வரைக்கும் தோற்றுப் போனால் ஒரே பிரச்சினைதான். மானப்பிரச்சினை. இப்பொழுதுதான் நிலைமை தலைகீழாகிவிட்டது. மானப்பிரச்சினை எல்லாம் இல்லை. வெறும் பணம் மற்றும் அதிகாரப் பிரச்சினைதான். ‘அய்யோ கோடிக்கணக்கில் செலவு செய்து வீணா போய்ட்டேனே’ என்று ஒரு பக்கம் அழுதால் ‘ஒருவேளை கட்சியை நம்மிடமிருந்து பறித்துக் கொள்வார்களோ’ என்று இன்னொரு பக்கம் அழுகிறார்கள். 

வென்றவன்தான் நாடகம் நடத்துகிறான் என்றால் தோற்றவர்களும் ஆளாளுக்கு நாடகம் நடத்துகிறார்கள். பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். பிறகு அவரது வீட்டிலேயே எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். கூடியவர்கள் சமோசாவை விழுங்கிவிட்டு அவரையே தங்களது தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். நிதிஷ் அப்படியென்றால் காங்கிரஸ் ஒரு படி மேலே போய்விட்டது. ஒட்டுமொத்த காரியக்கமிட்டியும் ராஜினாமா செய்யப் போகிறதாம். இப்படியே டெல்லி, பீஹார் என்று இழுத்துக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் நிற்கலாம்தான். எதற்கு வம்பு? ‘எலெக்‌ஷன் முடிந்தாலும் அரசியல் பேசுவதை நிறுத்தமாட்டான் போலிருக்கிறது’ என்று யாருடைய சாபத்திலாவது விழ வேண்டும். இரும்பொறையில் ஆரம்பித்து பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழத்தில் கொண்டு வந்து நிறுத்துவது டூ மச்சாகத்தான் தெரிகிறது. 

ஜம்ப் அடித்துவிடலாம்.

கவிதையின் கால்தடங்கள்  என்றொரு புத்தகத்தை வாங்கி வந்தேன். ஐம்பது கவிஞர்களின் நானூறு கவிதைகளை செல்வராஜ் ஜெகதீசன் தொகுத்திருக்கிறார். இந்தக் கவிஞர்களில் பெரும்பாலானோரின் கவிதைத் தொகுப்புகளும் கைவசம் இருக்கின்றன. அப்படியிருந்தும் இந்தப் புத்தகத்தை வாங்க வேறு காரணம் இருக்கிறது. அட்டையில் என் படத்தையும் போட்டிருக்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் ‘கெத்து’ காட்டலாம் அல்லவா? இந்த மாதிரி அவ்வப்போது எதையாவது செய்ய வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் வீட்டில் யாரும் என்னை நம்புவதே இல்லை.

அகநாழிகை பதிப்பகம் மற்றும் செல்வராஜை நிச்சயம் பாராட்ட வேண்டும். நவீன கவிதைகள் என்பதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தை- தர்பூசணியை குறுக்காக வெட்டி அதன் உட்புறத்தைப் பார்ப்பது போல- கவிதைகளை புரிந்து கொள்ள இந்தத் தொகுப்பு நிச்சயம் உதவக் கூடும். 

உண்மையில் கவிதை ஒன்றும் பெரிய புரியாத வஸ்து இல்லை. வாசிக்க ஆரம்பிக்கும் தொடக்க காலத்தில் வேண்டுமானால் முதல் நான்கைந்து கவிதைகளை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கலாம். ஆனால் அதன் பிறகு நல்ல கவிதைகள் புரியவில்லை என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. 

கவிதை எளிதுதான். ஆனால் நம்மவர்கள்தான் கிண்டலடிக்கிறேன் பேர்வழி என்று ‘கவிதை என்றாலே கடிதான்’ என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். அதனாலோ என்னவோ பெரும்பாலானவர்கள் கவிதையின் பக்கமே வருவதில்லை. மூக்கைப் பிடித்தபடி ஒதுங்கிக் கொள்கிறார்கள். 

ஓரிருமுறை வாசித்தால் கவிதை புரிந்துவிடும். பெரிய சிரமம் எதுவும் இல்லை. நம்பிக்கை இல்லாதவர்கள் ப்ரவுசரை மூடாமல் பின்வரும் இந்த ஒரு கவிதையை மட்டும் வாசிக்கலாம். புரியவில்லை என்றால் ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்- அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன். வந்து ஒரு காதை அறுத்துவிட்டு போய்விடுங்கள். புரியாமல் போய்விடாது என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை.

தற்கொலைக்கு தயாராகுபவன்

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில் 
என்னென்னவோ செய்கிறான்

அவன் கையில் 
குடும்பப் படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டு விரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

-இசை