Apr 8, 2014

எப்படி சமாளிப்பார்கள்?

திரும்பிய பக்கம் எல்லாம் சம்மர் கேம்ப்தான். ஓவியம் சொல்லித் தருகிறோம்; களிமண் பொம்மை செய்யச் சொல்லித் தருகிறோம்; எலெக்ட்ரானிக்ஸ் சொல்லித் தருகிறோம் என்று தினமும் மூன்று விளம்பரச் சீட்டுக்களையாவது அனுப்பி தூது விடுகிறார்கள். செய்தித்தாள்களுக்குள்ளாக செருகி தூண்டில் வீசுகிறார்கள். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொள்கின்றன. காலை ஒன்பது மணிக்கு பள்ளிக்குச் செல்வது போலவே அழைத்துச் சென்று அமுக்கிவிடுகிறார்கள். இரண்டு மாதங்களும் முடிந்துவிடும்.

சென்ற தலைமுறையில் சம்மர் வந்தால் முடியை ஒட்ட வெட்டி ‘சம்மர் கட்டிங்’ என்ற பெயர் சூட்டி கயிற்றை அவிழ்த்துவிடுவார்கள். அவிழ்த்துவிட்ட கழுதைக்கு குட்டிச்சுவராவது குட்டி ஃபிகராவது- எது கிடைத்தாலும் கொண்டாட்டம்தான். சுவர் கிடைத்தால் கோலிகுண்டு விளையாடலாம். ஃபிகர் கிடைத்தால் கூட்டாஞ் சோறாக்கி, அஞ்சாங்கல் விளையாடி அம்மா அப்பா விளையாட்டை விளையாடலாம். அதைவிட்டுவிட்டு ரோபோ செய்கிறார்களாம். எலெக்ட்ரானிக்ஸ் கற்றுக் கொள்கிறார்களாம். 

இந்தத் தலைமுறை பாவம். 

வெயில் கொளுத்துகிறது. புழுதி பறக்கிறது. ஸ்ட்ரோக் வரும், சன் பர்ன் வரும், அலர்ஜி வரும், சாயந்திரம் ஆனால் ஒன்னுக்கு போற இடத்தில் எரிச்சல் வரும் என்றெல்லாம் அளந்து குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அமுக்கி வைத்துவிடுகிறார்கள். குழந்தைகளும் போகோ சேனல் பார்த்தோமோ, கார்ட்டூன் நெட்வொர்க் பார்த்தோமா அரும்பு மீசை வருவதற்குள் சோடாபுட்டி கண்ணாடி போட்டோமோ என்று சொங்கிப் போய்விடுகிறார்கள். வெயிலில் விளையாடுவதில்லை, தண்ணீரில் ஆடுவதில்லை, மண்ணைத் தொடுவதில்லை, ஊர் சுற்றுவதில்லை. அமுக்கு என்றால் அமுக்கு ஒரே அமுக்குதான். ‘எம்புள்ள வெளியேவே போகமாட்டான். சமர்த்து’ என்று சர்டிபிகேஷன் வேறு.

இவையெல்லாம் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் இல்லையா? அந்தந்த அனுபவங்களை அந்தந்த வயதில் பெற்றுவிட வேண்டுமா? உங்களையும் என்னையும் கேட்டால் சிறுவயதில் நீச்சலடிச்சோம், மாடு மீது சவாரி செய்தோம், மீன் பிடித்தோம், ஓணான் அடித்தோம், பஞ்சாயத்து போர்டில் கபடி விளையாடினோம், மரம் ஏறி குருவி பிடித்தோம், தட்டானின் வாலில் புல்லைச் செருகி ராக்கெட் விட்டோம் என்று பக்கம் பக்கமாக அளப்போம். இந்தத் தலைமுறை குழந்தைகள் இருபது வருடங்கள் கழித்து தங்களது குழந்தைப் பருவ அனுபவங்கள் என்று எதைச் சொல்வார்கள்?

போகோ சேனலும், ஆதித்யா சேனலும்தான் குழந்தைப்பருவ அனுபவங்களா? அம்மா அப்பாவின் பாதுகாவலோடு நீச்சல் குளத்துக்குச் சென்று அதே பாதுகாவலோடு வீடு திரும்புவதில் என்ன அனுபவம் கிடைத்துவிடும்? சம்மர் கேம்ப், ஹிந்தி க்ளாஸ் என்று வியர்வை வராமல் இரண்டு மணி நேரங்களை கரைத்து வருவதில் என்ன கொண்டாட்டம் இருக்கிறது? கோச்சின் முறைப்போடு கிரிக்கெட் பழகுவதும், ஸ்கேட்டிங் பழகுவதும்தான் உச்சபட்ச குழந்தை விளையாட்டுகளா? 

இப்பொழுதெல்லாம் நம் குழந்தைகளின் படிப்பு, அறிவு வளர்ச்சி என்பதில் மட்டுமேதான் கவனம் செலுத்துகிறோம். நான்கு வயது பையனுக்கு முப்பது நாடுகளின் தலைநகரங்கள் தெரியும் என்பதுதான் பெருமையான விஷயமே தவிர, அவனுக்கு இந்த நாட்டின் பாரம்பரிய குழந்தைகள் விளையாட்டுகள் தெரியும் என்பதில் பெருமை இல்லை. எட்டு வயதில் கணிதத்தில் புலி என்று பெயர் வாங்குவதைத்தான் எதிர்பார்க்கிறோமே தவிர கபடி விளையாடுவது பற்றியும் முன்னோர்களின் தானியங்கள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 

அடுத்தவர்களைப் பார்த்து நாமும் சூடு போட்டுக் கொள்கிறோம். பக்கத்து வீட்டுப் பையனுக்கு ரோபோடிக்ஸ் தெரிந்தால் நம் பையனுக்கும் தெரிய வேண்டும். பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு பெயிண்டிங் தெரிந்தால் நம் பெண்ணுக்கும் தெரிய வேண்டும். பக்கத்து வீட்டுப் பையன் கிரிக்கெட் கோச்சிங் க்ளாஸ் சென்றால் அடுத்த வருடமே நம் பையனும் சச்சின் டெண்டுல்கர் ஆக வேண்டும். பேராசை. அத்தனையும் பேராசை. உடலுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காத பழக்கவழக்கங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் குழந்தைகளை பழக்கிவிட்டு ‘இப்பொவெல்லாம் முப்பது வயதிலேயே சுகர் வந்துடுது சார்’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

முன்பெல்லாம் விடுமுறைகளில் சித்தி வீடு, பெரியம்மா வீடு, தாத்தா வீடு, மாமா வீடு என்று எங்கேயாவது குழந்தைகள் சென்று வருவார்கள். வேறு ஊர், வேறு மண், வேறு நண்பர்கள், வேறு விளையாட்டுக்கள் என்று ஏகப்பட்டதை கற்றுக் கொண்டு வருவார்கள். உறவும் பலப்படும். குழந்தைகளின் சிறகுகளும் விரியும். அந்தப் பழக்கத்தையும் முழுமையாக கத்தரித்துவிட்டோம். ‘எதுக்கு அவங்களுக்குத் தொந்தரவு?’ என்றோ ‘நம்மால அந்த வாண்டுகளை சமாளிக்க முடியாது’என்றோ இரண்டு காரணங்களில் ஒன்றைச் சொல்லி துண்டித்துவிடுகிறார்கள். அவரவர் வீடு. அவரவர் டிவி. அவ்வளவுதான் குழந்தைகளின் உலகம்.

அக்கா மகளுக்கு பன்னிரெண்டு வயதுதான் ஆகிறது. ஹிந்தியில் கண்ட தேர்வுகளையெல்லாம் எழுதி ஒரே ஒரு தேர்வுதான் மிச்சம் வைத்திருக்கிறாள்.  பள்ளி விடுமுறை. பெங்களூர் செல்லலாம் என்றால் ‘ஹிந்தி க்ளாஸ் இருக்கு’ என்கிறாள். கடைசித் தேர்வுக்காக க்ளாஸூக்குச் செல்ல வேண்டுமாம். அப்படியாவது ஹிந்தி புரிகிறதா என்றால் அதுவும் இல்லை. டிவியில் ஓடும் ஹிந்தி செய்திகளை முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த அரைகுறை ஹிந்தியைத்தான் ஐந்தாறு வருடங்களாக பயின்று கொண்டிருக்கிறாள். பள்ளி முடிந்த பிறகான மாலை நேரங்களை இழந்து, காலாண்டு விடுமுறையை இழந்து, அரையாண்டு விடுமுறைய இழந்து, முழு ஆண்டு விடுமுறைகளையும் இழந்து வெறும் ஹிந்தி, ஹிந்தி, ஹிந்தி. இதை முடித்துவிட்டு கிதார் க்ளாஸூக்குப் போகிறாளாம். மிச்ச நேரம் முழுமையும் டிவிக்கு.

பதினைந்து வயது ஆகும் வரை ‘அதைச் செய், இதைச் செய்’ என்ற எந்தத் திணிப்பும் இல்லாமல் குழந்தைகளின் விடுமுறைகளை அவர்களுக்கானதாக கொடுத்துவிட வேண்டும். ஒரு கண்காணிப்பு இருக்கலாம். அது தவறில்லை. ஆனால் முழுமையாகத் தடுக்க வேண்டியதில்லை. சுதந்திரமான விடுமுறை தினங்கள்தான் குழந்தைகள் பூரணமாக வளர்வதற்கான வழி. அவர்கள் போக்கில் விட்டுவிட்டால் அவர்களுக்கே explore செய்யத் தெரியும். உலகத்தைக் கற்றுக் கொள்வார்கள். நண்பர்களைத் தேடிக் கொள்வார்கள். எப்படி சண்டையிட வேண்டும்,  எப்படி வெல்ல வேண்டும், தோற்றால் எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அத்தனை உளவியல் பயிற்சிகளையும் பெற்றுக் கொள்வார்கள்.

எத்தனை குழந்தைகளுக்கு வெயிலைத் தாங்கும் ஆற்றல் இருக்கிறது? எத்தனை குழந்தைகளின் கண்பார்வை துல்லியமாக இருக்கிறது? அரை பர்லாங் நடந்து போய்விட்டு வந்தால் கால் வலிக்கிறது என்கிறார்கள். படியேறி வந்தால் மூச்சிரைக்கிறது. இப்படியிருந்தால் எப்படி சமாளிப்பார்கள்- நாம் கெடுத்து வைத்திருக்கும் இந்த குரூர உலகத்தை? இந்தக் காலத்திலேயே திரும்பிய பக்கமெல்லாம் சேலம் சிவராஜ் சித்த வகையறா மருத்துவர்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள். அடுத்த முப்பது வருடங்களில் என்ன ஆகுமோ அய்யனாரப்பா.