Apr 7, 2014

அவன் தன் நகங்களை கடித்துக் கொண்டிருந்தான்

அவன் தன் நகங்களை கடித்துக் கொண்டிருந்தான். 

மழையைப் பார்த்து பல்லாண்டுகள் உருண்டுவிட்டன. கடைசியாகப் பெய்தது கூட பெரிய மழை இல்லை. அருகம்புல் துளிர்க்கும் அளவுக்கு மண்ணை நனைத்துவிட்டுப் போன மழை அது. நனைத்த மழையில் துளிர்த்த துளி புல்லும் கருகி வெகுநாட்களாயிற்று.

இப்பொழுது வெயில் ஏறுகிறது. சூரியன் உச்சியை அடையாத காலை நேரத்திலேயே நிலம் சுண்டுகிறது. கொடும் வெக்கை. கடும் காந்தல். பூமியின் ஆதிச்சூடு இது. மரமும் செடியும் பிறந்திராத முன்னொரு காலத்தில் புவி நெருப்புக் கோளமாய்ச் சுழன்றதாம்- ஒரு கோடி தீ நாவுகளை உடல் முழுவதும் சுழற்றியபடி. அந்தச் சூடுதான் இது. பிறகு ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பெய்த பெருமழையில் அடக்கப்பட்ட வெம்மையின் நாவுகள் இதோ இப்பொழுது சிலிர்த்துக் கொள்கின்றன. அந்தத் தீ நாவுகள்தான் இப்பொழுது உயிர்ச்சுவை தேடிச் சுழல்கின்றன. அடங்கிக்கிடந்த கொடும் நாவுகள் குதியாட்டம் போடும் வெக்கையில் உயிர்பெறுகின்றன. நம் தொண்டைக் குழிகள் காய்கின்றன. உதடுகள் வெடிக்கின்றன. அதன் தீண்டலுக்காக- கருக்கிவிடும் கடைசித் தீண்டலுக்காக காத்திருக்கத் தொடங்குகிறோம்.

அவன் தன் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு நாளும் துளியாவது சூடு கூடுகிறது. நேற்றையைக் காட்டிலும் இன்று அதிகம். இன்றைக்காட்டிலும் நாளை கொடுமை. காரைக் குட்டை காய்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கடைசியாக இருந்த துளி நீரில் மீன் குஞ்சுகள் கருகுவதை நேரில் பார்த்தான். இந்த ஊரில் தனது கடைசி இரையைக் கொத்திக் கொண்டு ஒற்றைக் கொக்கு வலசை போனது. குருவிகளைக் காணவில்லை. குயில்கள் கூவுவதில்லை. ஓணான் கூட முட்டையிடாத சபித்த பூமி இது.

பருவம் தப்பிப் போனது. பாலைவனத்தில் பனி பொழிவதாகச் சொல்கிறார்கள். வெப்பப்பிரதேசத்தில் மழை விசிறிப் பொழிவதாக யாரோ ஒரு ஊரோடி சொல்லிவிட்டுப் போனான். இங்கு மாசியில் மழை பெய்யும் என்று வானம் பார்த்தார்கள். ஏமாற்றியது. பங்குனியில் பெய்தால் பசுவுக்காவது புல் மிஞ்சும் என்றார்கள். புல்லற்று போயிற்று. சித்திரையிலும் ஈரம் இல்லை. கால்கள் நிலத்தோடு பற்றிக் கொள்கின்றன. செஞ்சூட்டில் பாதங்கள் கொப்புளிக்கின்றன.

அவன் தன் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்தான்.

யாரும் ஊரைவிட்டு வெளியேறுவதில்லை. வெளியேறுவதற்கான தேவையும் இல்லை; உடலில் வலுவும் இல்லை. கையில் துளி காசும் இல்லை. மாடுகளுக்கு மேய்ச்சல் இல்லை. அவை காகிதங்களைத் தின்ன பழகியிருக்கின்றன. மழைக்காகிதங்களைத் தின்ற வெள்ளாடுகள் வயிறு உப்பிச் சாகின்றன. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வேறெதுவும் செய்வதற்கில்லை. கிளறுவதற்கு ஈர மண் கிடைக்காத துக்கத்தில் திரிந்த கடைசிக் கோழிகளை பிடித்துத் தின்ற பூனையொன்று பனைமரத்திற்கு கீழாக இறந்து கிடந்தது. மிஞ்சிய சில காகங்கள் இறந்த பூனையைக் கொத்தி அவையும் தங்களின் இறுதிக் கரைசலை இந்த ஊரின் காற்றில் உலவவிட்டன.

இரவுகளில் ஆந்தை கூட வருவதில்லை. நிலவிடம் துக்கங்களைச் சொல்கிறார்கள். மேகம் மறைக்காத வெண்ணிலா அமைதியாகக் கேட்டுக் கொள்கிறது. நிலக்கடலை பொய்த்துப் போனது. சோளத்தட்டும் வதங்கிப் போனது. வேம்பும் துளிர்க்காத கடும் கோடை இது. எலிக்கறி தேடித் திரிகிறார்கள்- அவை இந்த ஊரைவிட்டு விலகியதை அறியாமல். வயிறுகள் ஒட்டிப் போகின்றன. கற்றாழைக் கஞ்சிகளை நக்கித் தாகம் தீர்க்கிறார்கள். பசியும் தாகமும் ஓலங்களுக்கான உடல் வலுவைக் கூட உறிஞ்சிவிட்டன. முனகுகிறார்கள். மயக்கத்திலேயே பிதற்றுகிறார்கள். இந்த ஊரின் யுகம் முடியப் போகிறது.

அவன் தன் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்தான்.

கால்கள் துள்ளுகின்றன. வேகமாக. இன்னும் வேகமாக. கைகளை இறுக்கப் பற்றிக் கொள்கிறான். பிரிக்கவே முடியாத இறுக்கம். நிசப்தம். கண்கள் பிதுங்கியிருக்கின்றன. கடித்த நாக்கில் துளி ரத்தம் கசிந்திருக்கிறது. முடிந்துவிட்டது. காய்ந்த வேம்பின் ஒரு கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிறான். அவன் காலுக்குக் கீழே கிடக்கிறார்கள்- அவனது துண்டால் கழுத்து நெரிக்கப்பட்டு இந்தப் பாலையின் காற்றை ‘வேண்டாமப்பா வேண்டாம்மப்பா’ என்ற படியே கடைசியாக ஒரு முறை உள்ளே இழுத்துக் கொண்ட தாயற்ற மூன்று வயது மகனும் ஆறு வயது மகளும். 

13 எதிர் சப்தங்கள்:

Suresh.G said...

மழை பொழியட்டும் !

Jegadeesh said...

Manathai pisaigirathu...

Kongunattuvellalagounder said...

:(

துளசி கோபால் said...

ஐயோ:((((((((((((

Padmanaban said...

// மழைக்காகிதங்களை // அல்லது மலக்காகிதங்களா?

rvelkannan said...

//இந்தப் பாலையின் காற்றை ‘வேண்டாமப்பா வேண்டாம்மப்பா’ என்ற படியே கடைசியாக ஒரு முறை உள்ளே இழுத்துக் கொண்ட தாயற்ற மூன்று வயது மகனும் ஆறு வயது மகளும். // இதுவே இதுவே போதும் நம் தூக்கம் போவதற்கு.

Vaa.Manikandan said...

பாலித்தீன் கவர் பத்மநாபன். மலக்காகிதங்கள் இல்லை.

Unknown said...

Nejamave 30 varusathula ippadi ayirumo entru bayama irukkuthunna....

Namale iyarkkaiyai alichittom...

”தளிர் சுரேஷ்” said...

கடைசி பத்தி வரிகள் மனதை கலங்கடித்தன!

Kodees said...

இவ்வளவு வறுமை தமிழ்நாட்டில் இருக்கிறதா என்ன? பிழைப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்குங்க மணி, தற்கொலையை எந்த வடிவத்திலும் நான் பார்க்க விரும்பவில்லை, அதுவும் குழந்தைகளைக் கொல்வது குரூரம்.

kkk said...

கால்கள் துள்ளுகின்றன. வேகமாக. இன்னும் வேகமாக. கைகளை இறுக்கப் பற்றிக் கொள்கிறான். பிரிக்கவே முடியாத இறுக்கம். நிசப்தம். கண்கள் பிதுங்கியிருக்கின்றன. கடித்த நாக்கில் துளி ரத்தம் கசிந்திருக்கிறது. முடிந்துவிட்டது. காய்ந்த வேம்பின் ஒரு கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிறான். அவன் காலுக்குக் கீழே கிடக்கிறார்கள்- அவனது துண்டால் கழுத்து நெரிக்கப்பட்டு இந்தப் பாலையின் காற்றை ‘வேண்டாமப்பா வேண்டாம்மப்பா’ என்ற படியே கடைசியாக ஒரு முறை உள்ளே இழுத்துக் கொண்ட தாயற்ற மூன்று வயது மகனும் ஆறு வயது மகளும். .
Aiyoo .. Sir azhuthu vitten. Your narration is more( solid difference) effective in bringing the feel than the Karuthamma song Kadu Pottakkkadu.. by Vairamuthu, AR rahman, Bhrathiraja voice combination

Uma said...

கலங்கடிக்கும் கொடூரம்

அருணாவின் பக்கங்கள். said...

Pathetic plight of farmers...nicely penned