Apr 4, 2014

நீ என்ன சாதி?

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையடித்துக் கொள்கிறோம். மிக அதிகமான வாக்காளர்கள் நேரடியாக பங்கேற்கும் தேர்தல் முறை இதுதான் என்று பாடங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் நடத்தப்படும் ஜனநாயக அரசு என்று பிபிசியில் செய்தி வாசிக்கிறார்கள். 

எல்லாம் சரிதான். 

கள்ள வாக்குகளைத் தடுத்துவிட்டார்கள். செல்லாத வாக்குகளை முற்றிலும் தவிர்த்துவிட்டார்கள். வாக்கு எண்ணிக்கையில் நடந்த குளறுபடிகள் குறைக்கப்பட்டுவிட்டன. இப்படி ஏகப்பட்ட விஷயங்களைத் தேர்தல் ஆணையம் செயல்படுத்திவிட்டது. 

ஆனால் இது போதுமா? 

கடந்த சில தேர்தல்களாக வாக்குகளை பண்டமாற்று பொருளாக மாற்றிவிட்ட கலாச்சாரத்தை இனி எப்படித் தடுக்கப் போகிறார்கள்? தேர்தலில் சாதி, மதம் உள்ளே புகுந்து நடத்திக் கொண்டிருக்கும் அழிச்சாட்டியங்களை எப்படி நிறுத்தப் போகிறார்கள்? உண்மையிலேயே தகுதியான வேட்பாளர்கள்தான் நமக்குக் கிடைக்கிறார்கள்? சரியான வேட்பாளர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் தொக்கி நிற்கின்றன. 

கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கின்றன?  மக்கள் எந்த அடிப்படையில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் போன்ற அடிப்படையான விஷயங்களை மேம்போக்காக ஆராய்ந்தாலே நமது தேர்தல் முறையின் அத்தனை பெருமைகளும் பல்லிளித்துவிடும். 

அகில இந்திய அளவில் வேண்டாம்- தமிழ்நாட்டில் உள்ள முப்பத்தொன்பது தொகுதிகளில் எந்தத் தொகுதியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வோம். பெரிய கட்சிகள் எந்த அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன? இரண்டே விஷயங்கள்தான்: ஒன்று பணம், மற்றொன்று சாதி. இந்த இரண்டையும் தவிர நம்மிடம் வேறு எந்தக் காரணத்தைச் சொன்னாலும் அது பொய்தான். 

அறுபது வருடங்களாக சாதியை ஒழிக்கப் போகிறோம் என்று நம்மிடம் சொல்லி வருபவர்கள்தான் சாதியின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பை பார்க்கிறார்கள். இப்படி சாதியின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது வெறும் தேர்தல் வெற்றியோடு நின்றுவிடுவதில்லை. தேர்தலுக்குப் பிறகும் இந்தப் பிரிவினை அப்படியேதான் இருக்கப் போகிறது. கவுண்டர்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் ஏன் செட்டியாருக்கும், படையாச்சிக்கும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை? வன்னியர்களின் தொகுதிகளில் ஏன் தேவர்களுக்கும் முதலியார்களுக்கும் இடமளிக்கப்படுவதில்லை- இங்கெல்லாம் ஏன் தலித்துக்களுக்கு ஸீட் தருவதில்லை என்று கேட்கவில்லை. இன்னொரு இடைநிலைச் சாதிக்காவது வாய்ப்புக் கொடுக்கலாம் அல்லவா? கொடுக்க மாட்டார்கள். ஒரு சாதி பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தொகுதியில் அதே சாதிக்காரன்தான் நிறுத்தப்பட வேண்டும்.

இங்கு வேட்பாளர்களின் அடிப்படைத் தகுதி என்பதே சாதிதான். வேட்பாளர் கட்சிக்காக என்ன செய்தார்? தொகுதிக்காக என்ன செய்தார்? சமூகத்திற்காக என்ன செய்தார்? என்ற எந்தக் கேள்வியும் அவசியம் இல்லை. கட்சிகளும் இதையெல்லாம் பார்ப்பதில்லை, வாக்காளர்களும் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. ‘நம்ம சாதிக்காரனா?’ என்று பார்ப்பார்கள். ‘பணம் கொடுப்பியா?’என்று கேட்பார்கள். அவ்வளவுதான். 

ஊடகங்களும் வெட்கமேயில்லாமல் எழுதுகிறார்கள்- தர்மபுரி கலவரத்தின் காரணமாக அன்புமணிக்கு வன்னியர் வாக்குகள் முழுமையாக வந்து சேரும் என்று பேசுவது அங்கேயிருக்கும் தலித்துகளைத் தூண்டிவிடுவதுதானே? நீங்கள் தேர்தல் மூலமாக பழி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று வன்னியர்களை உசுப்பிவிடுவதுதானே? இப்படியே பல்லைக் கெஞ்சிக் கொண்டிருந்தால் எந்தக் காலத்தில் சாதியை ஒழிக்கப் போகிறோம்?‘பொள்ளாச்சியில் கவுண்டர் வாக்குகளின் காரணமாக ஈஸ்வரன் கடும் போட்டியைக் கொடுக்கிறார்’‘வேலூரில் முதலியார்கள் அதிகம் என்பதால் ஏ.சி.சண்முகத்திற்கு வாய்ப்பிருக்கிறது’ ‘ராமநாதபுரத்தில் இசுலாமியர்கள் வாக்குகள் இந்த முறை சிதறக் கூடும்’ என்று வரிக்கு வரி சாதியையும் மதத்தையும் இழுக்கிறார்கள்- இவை வெறும் உதாரணங்கள்தான். இப்படி ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றிவாய்ப்பையும் வெறும் சாதியின் அடிப்படையிலும், மதத்தை முன்வைத்துமே கணித்து எழுதுகிறார்கள். சாதியின் அடிப்படையில்தான் வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் களத்தில் நிலவும் உண்மை என்றாலும் ஊடகங்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டுமல்லவா? அரசியல்வாதிகளைவிடவும் ஊடகவியலாளர்கள் ஒரு படி மேல் என்று நம்புகிறோம். பிறகு ஏன் ஒரு சாதாரண புரிதல் கூட இல்லாமல் எழுதுகிறார்கள்.

ஒரு சாதியின் காரணமாக ஒரு வேட்பாளர் வெல்வார் என்று வெளிப்படையாக பேசச் செய்வது ஒரு கொடூரம். குரூரமும் கூட. சாதியின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் கட்சிகள் அந்தப் பாவத்தைச் செய்தால், அதை வெளிப்படையாக எழுதி ஊடகங்கள் அந்தப் பாவத்திற்கு மேலும் பாவம் சேர்க்கின்றன.

சாதியை அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வளைத்தால் மட்டும் போதாது அல்லவா? அதனால் ஒவ்வொரு கட்சிக்காரனுமே வாக்குக்காக காசு கொடுக்கிறார்கள். ஆயிரம் கொடுப்பவர்களும் உண்டு; ஐந்நூறு கொடுப்பவர்களும் உண்டு; முந்நூறு கொடுப்பவர்களும் உண்டு. நம்மவர்கள் யாரிடமும் வேண்டாம் என்று சொல்வதில்லை. பணத்தை யார் வேண்டாம் என்பார்கள்? எல்லோரிடமும் வாங்கிக் கொண்டு அதிகமாகக் கொடுப்பவர்களுக்கு வாக்களித்துவிடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் உணவு பரிமாறிய இலையில் இருக்கும் சோறு மீது சத்தியம் வாங்கிக் கொண்டு காசு கொடுத்த வேலையை செய்தார்கள். நேரில் பார்த்திருக்கிறேன். சத்தியம் செய்துவிட்டால் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான். குழந்தைகளின் மீது சத்தியம் வாங்குவது, கடவுளின் முன்பாக சத்தியம் வாங்கிக் கொண்டு பணம் கொடுப்பதெல்லாம் கூட தேர்தல் பரப்புரையின் ஒரு அங்கமாகிவிட்டது. 

சாதியின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போக்கு, பல கோடி ரூபாய்களைக் கொட்டி வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாச்சாரம் என்று நாறிக்கிடக்கும் இந்த லட்சணத்தில்தான் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று படம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

தேர்தல் மாற்றித் தேர்தல் இந்தப் பிரச்சினைகள் சிக்கலாகிக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு கட்டத்தில் வெளிவரவே முடியாத சிக்கலில் இந்தியத் தேர்தல் முறை மாட்டிக் கொள்ளப் போகிறது. 

அமைதியான தேர்தலை நடத்துவது மட்டும் தேர்தல் ஆணையத்தின் கடமை இல்லை. வெளிப்படையான தேர்தல் மட்டுமே இங்கு முக்கியமில்லை. தேர்தல் முறையின் பிண்ணனியில் நம் கண்களுக்கே தெரியாமல் படர்ந்து கொண்டிருக்கும் பார்த்தீனியத்தின் வேர்களில் கெரசின் ஊற்றுவதும் தேர்தல் ஆணையத்தின் கடமைதான். இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு தேர்தல் எப்படி நடக்க வேண்டும் என்ற vision உடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவர்களின் பணிதான்.

இதையெல்லாம் இங்கு அமர்ந்து கொண்டு எழுதிவிட்டு போய்விடலாம். நூறு கோடி மக்கள் வாழும் நாட்டில் இத்தனை தேர்தல்களை நடத்திப் பார்த்தால்தானே தெரியும் என்று சொல்லலாம்தான். ஆனால் அடிப்படையான இந்தச் சிக்கல்களை சரி செய்யாவிட்டால் இந்த ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் கேளிக்கூத்தாகிவிடும். நீண்டகால நோக்கில் இந்த பிரச்சினைகளை அணுகத் தெரிந்த ஒரு தேர்தல் ஆணையர் வந்தால் மட்டும் போதாத. தேசிய அளவில் இத்தகைய சீர்திருத்தங்களைப் பற்றி ஒரு விவாதம் உருவாக வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் seasonal ஆக தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி பேசாமல் தொடர்ச்சியான உரையாடல்களால் மட்டுமே துளி அசைத்துப் பார்க்கலாம். ஆனால் அதெல்லாம் இந்தியாவில் நடக்கும் என்று நம்பிக்கையில்லை. இப்படியே உருட்டிக் கொண்டிருப்போம். நமது வேட்பாளர்கள் இருபது கோடியைச் செலவு செய்து வென்றால் முதலீடு செய்த தொகையை மூன்றாவது மாதத்தில் வாரிவிடலாமா அல்லது ஆறு மாதங்கள் தேவைப்படுமா என்று கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதுதான் நடக்கும்.

14 எதிர் சப்தங்கள்:

kannan jagannathan said...

vm one small correction "கேளிக்கூத்தாகிவிடும்" alla "கேலிக்கூத்து "

‘தளிர்’ சுரேஷ் said...

சாதீய கட்சிகளும் பெருகிவிட்டதும் இந்த சாதி ஓட்டுக்கள் கிடைக்கும் என்பதால்தான்!

Bala @ Balakrishnan said...

அருமையான பதிவு. ஆட்சி அமைக்கும் போதும் அமைச்சரைவயில் கூட சாதி பார்த்துதான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது

இரா திலீபன் said...

மணி ஜி
//ஊடகங்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டுமல்லவா? அரசியல்வாதிகளைவிடவும் ஊடகவியலாளர்கள் ஒரு படி மேல் என்று நம்புகிறோம்.//

எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்..... புதிய தலைமுறை சேனலும் பத்திரிக்கையும் எஸ்‌ஆர்‌எம் கல்விக்குழும கல்விக்கட்டண கொள்ளைக்கெதிராக பச்ச முத்து பி‌ஜெ‌பி விஜயகாந்த் க்கு எதிராக பேசிவிடுமா......?
பேசாது....
சரி சன் டி‌வி பாலியல் சீண்டல் விவகாரத்தை பேசுமானா அதையும் பேசாது... ஏன்னா ப்ரொஃபஷனல் எதிக்ஸ்

தின மலர் தினமணி அப்பட்டமான பார்ப்பன பத்திரிக்கை..... விகடன் முற்போக்கு நாடகம் போடுது...... எத நம்ப சொல்றீங்க.....?

//நீண்டகால நோக்கில் இந்த பிரச்சினைகளை அணுகத் தெரிந்த ஒரு தேர்தல் ஆணையர் வந்தால் மட்டும் போதாத. //

அதானே கடைசியில் இந்த மாதிரி சீர்திருத்த வாதத்தில் வந்து நீக்கறீங்க...? இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ஜி....

Revolution is the only way to get real freedom.

Karikalan said...

மணிகண்டன்,

சாதியை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் தேர்தல்களை ஒழுங்கு செய்வது தேர்தல் ஆணையத்தின் வேலை என்றெல்லாம் (50 வருட தொலை நோக்குடன்) சொல்வது மேம்போக்கான பேச்சாகப் படுகிறது.

சாதி அடிப்படையில் தேர்தல் நடப்பதற்கு காரணம் - நம் சமுதாய நோக்கு இன்னும் குழுவளவில் தான் உள்ளது. ஒவ்வொரு குழுவும், தனக்கான அரசியல் அதிகாரத்தை சாதியின் மூலமாக (மூலமாக மட்டுமே) அடைய முடியும் என்ற நிலை உள்ளது.

இது மாற, ஜன நாயக விழுமியங்களை முன் வைத்து தேர்தலில் இறங்கி போட்டியிடும் கட்சிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும். உதாரணமாக, ஊழலற்ற ஆட்சி (integrity) , நீதித் துறைக்கு அளிக்கப்படும் சுதந்திரம் (judicial freedom/independence), தனி மனித உரிமை (individual rights), போன்ற விழுமியங்களை முன்வைத்துப் போராடும், ஜன நாயக மரபுகளை - அடுத்த ஐம்பது வருடங்களிலாவது - ஆதரிக்க வேண்டும்.

ஆனால், அப்படி எந்த முயற்சியாவது வந்தால், நம் பொதுப் புத்தி, 'மத்தியில் நிலையான/வலுவான ஆட்சி வராமல் போய் விடுமோ என்று கவலைப்ப்ட்டு, கவனமாக ஒரு நல்ல சாதி/மத அடையாளம் சார்ந்த கட்சிக்கு ஓட்டுப் போடச் சொன்னாலும் சொல்லும். என்ன செய்வது?

இக்பால் செல்வன் said...

இன்றைய நிலையில் சாதி பார்த்து வாக்களிப்பது கணிசமாய் குறைந்துள்ளது. ஆனால் காசு வாங்கியோ, வாக்குறுதி லவசங்களை நம்பியோ, மார்க்கெட்டிங் அதிகம் செய்து முகங்களை பரிச்சயப்படுத்திக் கொண்டு பிரபல்யமாக்கிக் கொண்டோ தேர்தலை சந்திப்பது நடக்கத்தான் செய்கின்றன. சில சமயங்களில் சாதி, மத வகையிலாய் சாதி சங்கங்கள் மற்றும் ஆலயங்கள் ஊடாக வாக்கு கோருவதும் நிகழ்கின்றன.. தன்னிச்சையாக சுயாதீனமாக வேட்பாளர்களின் பின்புலங்களை சீர் தூக்கி பார்த்து வாக்களிக்கும் அறிவு கொண்டோர் மிகச் சொற்பமே.. ஊடகங்களும் சீர்தூக்கி நோக்கும் பணியை அல்லாது காசுக்கு மாரடிக்கும் போக்கைக் கொண்டிருப்பதால் வேட்பாளரின் தராதரம் மக்களிடம் போய்ச் சேராதே போய்விடுகின்றன.

R.Puratchimani said...

நல்ல பதிவு ..
சாதி இருக்கும் வரை அதை வைத்தது பிரச்சனை உருவாகும். இதற்க்கு ஒரே தீர்வு சாதியை ஒழிப்பதுதான்.
இன்று சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும்பொழுது அதற்க்கு முதல் எதிர் கருத்து சாதியினால் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களிடம் இருந்துதான் வருகிறது.

நாச்சியப்பன் said...

ஜாதியை ஒழிப்பது என்பது நடவாத காரியம். ஆனால் ஜாதிப்பெருமை கொள்ளாமல் எல்லா ஜாதியையும் ஒன்றாக பார்க்க நம் அனைவராலும் முடியும். ஜாதி ஒரு மொழியைப் போல. மிகச்சிலர் மட்டுமே பேசி வரும் ஒரு மொழி பல கோடி மக்கள் பேசும் மற்றொரு மொழிக்கு எப்படி தாழ்ந்தது இல்லை என நாம் எல்லோரும் நம்புகிறோமோ அதைப் போல ஒரு ஜாதி மற்றொரு ஜாதியை விட மேலானது அல்ல எனவும் நாம் நம்ப வேண்டும். ஜாதிகள் உண்டு ஆனால் அது மேலென்றும் கீழென்றும் பார்ப்பது மடமை என நம் பள்ளிப் பாடங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து பதிவு செய்து வர வேண்டும். ஒரு நாள் நாம் அனைவரும் சமம் என்று உணருவோம்.

K Gopaalan said...

தெரிந்தோ தெரியாமலோ, தமிழகப் பகுத்தறிவுத் தந்தை செய்த தவறு இதுதான். கல்வி உயர உயர, பள்ளிக் கூடங்கள் பெருகப் பெருக சிறிது சிறிதாக சாதிகள் நீங்கிவிடும். மாறாக, ஒரு மத்தத்தையும் குறிப்பிட்ட சாதியினரையும் விமரிசித்தே பலர் பிழைக்கும் நிலை வந்துவிட்டது.

கோபாலன்

kailash said...

In my opinion its the media who writes that this candidate will win since he belongs to this caste and how dare a party can put a candidate who doesnt belong to this caste in this constituency etc etc . Nowadays people dont vote in unity and they dont believe any one 's word and put vote like thalayari sonna aalukku vote poduvom nu . If media stops these kind of caste politics no one will think of it . After a day when parties announced their candidates ( dmk and admk ) , many websites and news papers in TN put reported like this 5 mudialiyar , 6 devar , 7 nadar , 8 vanniayar ............has been nominated by dmk / admk , where as truth is both dmk and admk has put useless candidates who doesnt know whats MP's role ? In fact people talked like this who these guys are except few candidates all are new . Whose fault is this media or people ? Even if people who doesnt bother abt caste of candidates ( note : only they dont bother abt caste of candidate not about their caste ) media tries to provocate people . Mostly it doesnt happen in city constituencies and it happens in rural areas to a small extent . In fact caste politics is projected in rural constituencies alone that too by media . If caste politics is true chidambaram should have lost all the times in my native sivaganga and vijayakant wouldn't have won in virudachalam .

Indian said...

Replace the word jaathi with madham. The entire article would still make sense.

Abarajithan Gnaneswaran said...

மக்களோட மனப்பான்மை மாறலைன்னா எத்தனை ஆணையம் வந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் நம்ம பிரச்சனையே அரசாங்கத்துக்கும் நமக்கும் தொடர்பில்லைன்னு நாம நம்பிட்டிருக்கறதுதான். இது நம்ம காசு, இது நாம தேர்ந்தெடுத்த அரசு இப்படில்லாம் பிரக்ஞை இருந்தா, கோடி கோடியா சுருடடறதையும் இந்தக் கேவலங்களையும் பார்த்துட்டு சும்மா இருப்போமா? ஜனநாயகம்கறதே காமன் மேன் கைல பவரைக் கொடுக்கறதுதான். ஆனா, தன்னோட கைல பவர் இருக்குங்கறதையோ, அதை வச்சு என்ன செய்ய முடியும்கறதையோ காமன் மேன் உணராத வரைக்கும் இது எல்லாமே நடந்துட்டு இருக்கும். நாமளும் சுரணை இல்லாம கிரிக்கெட்டும் கோச்சடையானும் பார்த்துட்டு இருப்போம்.

நாம் நண்பர்கள் said...

விவாதங்களை யார் உருவாக்குவது ?அதற்கு தான் நமக்கு நேரம் இல்லையே .நாம் அதிகம் பணம் பண்ணியாக வேண்டும் ,நம் நுகர்வின் அளவை நாம் கூட்டி கொண்டே இருக்கிறோம் ? ஜனநாயகம் கெடுத்து வைத்தது நாம் தான் இப்போது சரி இல்லை என்று புலம்பி கொண்டு இருக்கிறோம் ?ஒரே வார்த்தையில் இந்த தேசம் சரி இல்லை என்று சொல்லி நகர்ந்து விடலாம் ஆனால் நாம் மறப்பது ஒன்றே ஓன்று தான் நாம் தான் தேசமே தேசம் சரி இல்லை என்றால் நாம் சரி இல்லை என்பதே

Life said...

சாதியையும் மதமும் சமுதாயத்தை செல்லரித்து கொண்டிருகின்றன
இது இரண்டும் இல்லாமல் அரசியல் பண்ண இங்கு எவர்க்கும் வழி இல்லை

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி

இன்று இருந்தால்

சாதிகள் பல உண்டு பாப்பா
அதில் எதிலும் சாய்ந்து கொள்ளாதே பாப்பா
என்று பாடி இருப்பார்.