Apr 30, 2014

வேலைக்கு போகிற பொம்பளையா?

முன்பெல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு ரெடி ஆகிவிட்டால் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். பத்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் போதும். அப்பொழுதுதான் சகபாடினிகள் அலுவலகம் வந்து சேர்வார்கள். அதனால் அவசரம் எதுவும் இல்லை. கிடைக்கும் ஒரு மணி நேரத்தில் நான்கைந்து பாடல்களை சன் மியூசிக்கில் பார்த்துவிடலாம். கேடிவியில் ஒரு படத்தின் கால் வாசியை பார்த்துவிடலாம். அவசர அவசரமாக தெலுங்குப் பாடல் ஒன்றின் அசைவுகளையும், யாராவது ஒரு ஹிந்தி நடிகையையும் சேனல் மாற்றும் சாக்கில் சில நிமிடங்களுக்கும் விழுங்கிவிட்டுக் கிளம்பினால் ஒரு திருப்தி- ஒரு நாளுக்கான எனர்ஜி.

சில மாதங்களாக அதற்கெல்லாம் சாத்தியமில்லாமல் இருந்தது. புது மேனேஜர்தான் காரணம். ‘புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுக்கிறான்’ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் இப்பொழுது கேள்விப்பட்டுக் கொள்ளுங்கள். இந்த மேனேஜர் கடுசுக்கு வெளுத்தார். வெளுக்கிறாள் என்று சொல்லாம்தான். ஆனால் மரியாதையாகவே சொல்லிவிடலாம். என்னைவிட ஒரு வருடம்தான் வயதில் சீனியர். பொறியியல் படிப்பும் இல்லை, எம்.சி.ஏவும் இல்லை. ஏதோ இளங்கலைப் படிப்புதான் படித்திருக்கிறார். ஆனால் மேனேஜர் ஆகிவிட்டார். இது ஒன்றும் சாதாரணக் காரியம் இல்லை. குறுக்கு வழியில் வந்திருப்பார் என்றெல்லாம் தப்புக்கணக்கு போட வேண்டியதில்லை. திறமைசாலிதான். எவ்வளவு சிக்கலான பிரச்சினை என்றாலும் அவ்வளவு நேர்த்தியாக கையாள்வார். அதைவிட முக்கியம் தனக்குக் கீழானவர்கள் எந்தச் சமயத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. தனியாக அழைத்துத் திட்டுவாரே தவிர கூட்டத்தில் ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. தனது பணிக்காலத்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தவறாமல் ஒரு பதவி உயர்வு வாங்கியிருக்கிறார். இன்னும் பத்து வருடங்களில் நிச்சயமாக வெகு உயரத்திற்கு போய்விடக் கூடும்.

வழக்கமாக தினமும் எட்டரை மணிக்கு அலுவலகம் வந்துவிடுவார். அரை மணி நேரம் தாமதமாக வருவதாக இருந்தால் ‘Sorry, I will be late today and will reach office at 9 AM' என்று மின்னஞ்சல் அனுப்பி வைத்துவிடுவார். ஒன்பது மணியே தாமதம் என்றால் வழக்கமாக பதினோரு மணிக்கு அலுவலகம் செல்லும் நானெல்லாம் மன்னிப்புக் கடிதம்தான் அனுப்ப வேண்டும் போலிருக்கிறது. 

பெண்கள் எட்டரை மணிக்கு அலுவலகம் வருவது ஒன்றும் அத்தனை சுலபமான இல்லை. விடிந்தும் விடியாமலும் எழுந்து, சோறாக்கி, தான் தயாராகி, குழந்தைகளைத் தயார்படுத்தி- என்னதான் வேலைக்காரர்கள் இருந்தாலும் சிரமமான காரியம்தான். இருபத்தி நான்கு மணிநேரமும் வீட்டிலேயே இருக்கும் பெண்களிடம் கேட்டால் கூட ‘நாய்க்கு வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லை’என்கிற கணக்காக துளி ஓய்வு இல்லை என்பார்கள். அது வாஸ்தவம்தான். பெண்களுக்கு மட்டும் எந்நேரமும் வேலை இருந்து கொண்டே இருக்கிறது. பெண்களின் மனநிலையே அப்படித்தான். இழுத்துப் போட்டுக் கொண்டு எதையாவது செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலையும் இல்லையென்றால் குறைந்தபட்சம் ஒட்டடை அடிக்கும் வேலையையாவது செய்கிறார்கள். அதுவே வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் பெரும்பாலான வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு அலுவலகத்திலும் கண்ட நாய்களின் பற்களில் விழ வேண்டும். ஒரு பதவி உயர்வு வந்தால் ‘அவ எப்படி வாங்கினான்னு தெரியாதா’ என்று சர்வசாதாரணமாக பேசிவிடுகிறார்கள். இது அரசுப் பணிகளில்தான் என்று இல்லை. எந்தத் துறையாக இருந்தாலும் அதுதான் நிலைமை. 

முந்தைய நிறுவனத்தில் என்னுடன் வேலை செய்த ரஞ்சிதா என்ற பெண் தமிழ் சினிமாவில் நடிக்கச் சென்றுவிட்டாள். அவள் ராஞ்சிக்காரப் பெண். டோனியின் பள்ளி ஜூனியரும் கூட. தமிழில் ஒரு படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தாள். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தாள். அதன் பிறகு என்ன ஆனாள் என்று தெரியவில்லை. அவள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக முயன்றுகொண்டிருந்த போது நானும் தமிழ்க்காரன் என்பதாலோ என்னவோ கொஞ்சம் அன்பாகப் பேசுவாள். அவள் பட்ட சிரமங்களில் இருபது சதவீதம்தான் எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் அதிலேயே ஒரு நாவல் எழுதலாம். 

இந்த சினிமா விவகாரம் முக்கியம் இல்லை. அவள் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டாள் என்ற போது அதுதான் பிரதானச் செய்தியாக அலுவலகத்தில் பரவியது. அவள் வாய்ப்பு வாங்கியது குறித்தும், இனி எப்படி அவள் வாழ்க்கை இருக்கப் போகிறது என்பது குறித்தும் ஆளாளுக்கு ஒரு கதை எழுதினார்கள். அத்தனையும் நாராசமான கதைகள். இந்தக் கதைகளை பேசியவர்கள் யாருக்குமே கையாலாகாது என்பதுதான் பிரச்சினை. சினிமாவில் நடிப்பதற்கு அல்லது மாடலிங்கில் வாய்ப்பு பெறுவதற்கு கையாலாகாது என்று சொல்லவில்லை. ரஞ்சிதாவிடம் நேருக்கு நேர் நின்று பேசுவதற்கு கூட கையாலாகாது. அந்தக் கையாலாகத்தனம்தான் ஏதேதோ பேசச் செய்தது.

ஒன்று, அப்படி கதை கட்டுவார்கள் அல்லது ஏதாவது ஒரு விதத்தில் அந்தப் பெண்ணிடமே அவளை மட்டம் தட்டுவார்கள். நாங்கள் குழந்தைகளாக இருந்த போது ஒரு மெத்தப் படித்த மேதாவி  எங்கள் அம்மாவிடம் வந்து ‘வேலைக்கு போகிற பெண்களின் குழந்தைகள் எல்லாம் உருப்படுவதேயில்லை’ என்று பேசினாராம். அப்பொழுது அம்மா அரசுப்பணியில் இருந்தார். அதன் பிறகு ஒவ்வொரு தடவையும் நான் ஏதாவது தவறு செய்யும் போதும் அல்லது மதிப்பெண் குறைவாக வாங்கும் போதும் அந்த மனிதரின் பெயரைச் சொல்லித்தான் திட்டுவார். ‘அவங்க எல்லாம் பேசுனது சரிதான்னு நிரூபிச்சுடுவ போலிருக்கே’ என்பதுதான் அந்தத் திட்டாக இருக்கும். அந்த ஆளின் பெயரை இப்பொழுது சொன்னாலும் கூட அம்மாவுக்கு பயங்கரக் கோபம் வந்துவிடும். சின்ன விவகாரம்தான். ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காத தழும்பாக அழுந்தக் கீறிவிடுகிறார்கள்.

இதையெல்லாம் எழுதுவதால் நான் ஒன்றும் யோக்கியசிகாமணி என்று அர்த்தம் இல்லை. ஏதோ ஒரு பிரச்சினையில் ‘தேவைன்னா நீ வேலையை ராஜினாமா செஞ்சுட்டு வீட்டை பார்த்துக்க’ என்று பல்லைக் காட்டிவிட்டேன். மனதுக்குள் இருப்பதுதானே வெளியில் வரும்? அப்பொழுது அவள் எதுவும் பேசவில்லை. இரண்டு நாட்கள் கழித்து ‘நீங்கள் எழுதறது படிக்கிறதை எல்லாம் நிறுத்திட்டு குடும்பத்தையும் கவனிச்சுங்கன்னு சொல்லட்டுமா?’ என்றாள். நாம் எதை லட்சியமாக நினைத்துச் செய்கிறோமோ அதை நிறுத்தச் சொல்வதுதான் மிகப் பெரிய அடியாக இருக்க முடியும். அதன் பிறகு அவளின் வேலையைப் பற்றி பேசுவதேயில்லை.

காலையில் நாம் எழுகிறோமோ இல்லையோ மனைவி நேரத்தில் எழுந்துவிட வேண்டும். மாலையில் நமக்கு அலுவலகத்தில் தாமதமாகலாம். ஆனால் மனைவி சரியான நேரத்தில் வீட்டுக்கு வந்து சமையல் செய்துவிட வேண்டும். வீடு சுத்தமாக இல்லையென்றால் அவள்தான் பொறுப்பு. இப்படி எத்தனையோ சில்லரைத்தனங்கள் அவ்வப்பொழுது இளித்துக் கொண்டு நிற்கின்றன. இதெல்லாம் காலங்காலமாக ரத்தத்திலேயே ஊறிக் கிடக்கிற குணங்கள். அமத்தாவுக்கு கிடைத்ததைவிட அம்மாவுக்கு ஒரு படி சுதந்திரம் கூடுதலாகக் கிடைத்திருக்கும். அம்மாவுக்குக் கிடைத்ததைவிட துளி கூடுதல் சுதந்திரத்தை என் மனைவி பெற்றிருக்கக் கூடும். இது கூட ஒரு நம்பிக்கைதான். கூடுதல் சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்பதை அவள்தான் சொல்ல வேண்டும்.

எதற்கு இந்த விவகாரம் என்றால்-

நேற்று மேனேஜர் ராஜினாமா செய்துவிட்டார். வேறு நிறுவனத்திற்கு செல்கிறார் என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால் அது காரணம் இல்லை. வீட்டிலேயேதான் இருக்கப் போகிறாராம். எல்லோரையும் அழைத்து பதினைந்து நிமிடங்கள் பேசினார். அவரது குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சினை. அந்தக் குழந்தைக்கு ஏதோ ஒரு விட்டமின் உருவாகுவதில் பிரச்சினை. பிறப்பிலிருந்தே சிறு சிறு பிரச்சினைகளை அது உருவாக்கியிருக்கிறது. இனி தன் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் கொடுப்பது போல விட்டமின் ஊசியை இனி வாழ்நாள் முழுமைக்கும் தனது குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது அவரையும் மீறி அழுதுவிட்டார். 

சரசரவென்று ஏறிய அவரது graph அப்படியே உறைந்து நிற்கப் போகிறது. இங்கு குடும்பத்திலும், பிள்ளைகளுக்கும் ஏதேனும் பிரச்சினையென்றால் பெண்கள்தான் தோள் கொடுக்க வேண்டியிருக்கிறது. அவள் எவ்வளவுதான் உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும் கீழே இறக்கிவிடுகிறார்கள். மேனேஜரும் விதிவிலக்கு இல்லை. தனது அத்தனை லட்சியங்களையும், திறமைகளையும் ஒரு மேசைக்குள் போட்டு பூட்டிவிட்டு சாவியைக் ஒப்படைத்துவிட்டு வெளியேறப் போகிறார். அவ்வளவுதான். 

‘எல்லாவிதமான வாய்ப்புக்களையும் யோசித்துப் பார்த்துவிட்டோம், இனி வேலையை விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றார். அவர் பேசுவதைக் கேட்பதற்கு சங்கடமாக இருந்தது. எங்களிடம் வேறு கேள்விகளும் இல்லை. அமைதியாக நின்று கொண்டிருந்தோம். ‘இதுவரையிலான உங்களின் அத்தனை ஒத்துழைப்புகளுக்கும் நன்றி’ என்று சொல்லிவிட்டு மீட்டிங் அறையை விட்டு வெளியேறினார். நாங்கள் சில வினாடிகள் ஆளாளுக்கு எங்கள் முகத்தை பார்த்துக் கொண்டோம். யாரும் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை. தேனீர் பருகுவதற்காக சாலையோரக் கடைக்கு நகர்ந்தோம். வெளியில் கோடை கொளுத்திக் கொண்டிருந்தது.