Apr 28, 2014

உனது ஆசை தீர்ந்ததா?

புதிதாக ஒரு மனிதர் அறிமுகமாகிறார் என்று வைத்துக் கொள்வோம். சம்பிரதாயமான அறிமுக உரையாடலுக்குப் பிறகு அரசியல், நாட்டு நடப்பு, சினிமா, கிசுகிசு- இந்த ஏரியாக்களைத் தவிர்த்துவிட்டு பேசுவதற்கு நம்மிடம் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை. ஒரு பெரியவர்தான் கேட்டார். அவருக்கு அறுபத்தைந்து வயது இருக்கும். தெரிந்தவர்தான்- பக்கத்து ஊர்க்காரர். வாக்களித்துவிட்டு நான் பைக்கில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த போது எதிர்ப்பட்டார். வாக்களித்துவிட்டு வருபவரிடம் வேறு எதைக் கேட்பது? ‘யார் ஜெயிப்பாங்க?’ என்றேன். சிக்கிக் கொண்டேன். நான் கேட்ட கேள்விக்கு அவருடைய பதில்தான் மேலே அவர் கேட்ட கேள்வி. எடக்கு மடக்கான ஆள். 

அவரிடம் சிக்கிக் கொள்ள எனக்கு தலையெழுத்தா?

கருத்துக்கணிப்பு நடத்தும் ஆசையில்தான் கேட்டேன். எங்கள் ஊரில் இந்த முறை முரசு பெரும்பலத்தைக் காட்டிவிடும் என்று பேசிக் கொள்கிறார்கள். தினேஷ்குமார் என்பவர்தான் வேட்பாளர். முப்பத்தைந்து வயதுதான் இருக்கும். முரசு வெல்கிறதோ இல்லையோ கடும் வேலை செய்திருக்கிறார்கள். கோபிச்செட்டிபாளையம் எப்பொழுதுமே அதிமுகவின் கோட்டை. எனக்கு நினைவு தெரிந்து ஒரு முறை மட்டும்தான் திமுக வென்றது. அது 1996 ஆம் ஆண்டு. திரும்பத் திரும்ப வென்று கொண்டிருந்த அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையனை எதிர்த்து நின்ற ஜி.பி.வெங்கிடு வென்றார். அப்பொழுது வெங்கிடு டீக்கடை நடத்திக் கொண்டிருந்தார். டீக்கடைக்காரர்களுக்கும், பெட்டிக்கடைக்காரர்களுக்கும் கூட ஸீட் கிடைக்கக் கூடிய காலம் அது- தேர்தலில் வாய்ப்பு கேட்பதற்கு கட்சிக்காரன் என்ற தகுதி இருந்தால் போதும். இப்பொழுதுதான் காசு வைத்திருப்பவனுக்குத்தான் ஸீட்டை விற்கிறார்கள். 

வெங்கிடு வென்றவுடன் ‘வட்டிக்கடையை பெட்டிக்கடை வென்றது’ என்று தானியில்(auto) ஒலிபெருக்கியைக் கட்டிக் கொண்டு வீதிவீதியாகச் சென்றார்கள். வெகுகாலத்திற்கு பிறகு  எங்கள் ஊரில் திமுகவினர் ருசித்த வெற்றி அது. அந்த ஒரு முறைதான் திமுக வென்றது. பிறகு 2001 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவிற்கே தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள். அதன் பிறகு இன்றுவரைக்கும் அதிமுகதான் வென்று கொண்டிருக்கிறது. அப்பேற்பட்ட கோபியில் கூட முரசுக்கு நிறைய வாக்குகள் கிடைக்கும் என்பதால் திருப்பூர் இந்த முறை தேமுதிகவுக்குத்தான் என்று யாரோ சொன்னதை நம்பித்தான் அந்தப் பெரியவரிடம் வாய் கொடுத்துவிட்டேன்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும். ஐந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜி.பி.வெங்கிடு மீண்டும் டீக்கடைக்கே வந்துவிட்டார். இப்பொழுதும் எங்கள் ஊர் மார்க்கெட்டுக்கு அருகில் இருக்கும் அவரது டீக்கடையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அரசியல் அகராதிப்படி சொன்னால் பிழைக்கத் தெரியாத மனுஷன்.

அரசியல் போதும். பெரியவரின் கேள்விக்கே போய்விடலாம். 

அவர் கேட்ட கேள்வி சரிதான். யோசித்துப் பார்த்தால் பெரியவரின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஐடியில் வேலை செய்பவராக ‘ப்ராஜக்ட் எப்படிப் போகுது?’ ‘க்ளையண்ட் யாரு?’ என்று மூன்று நான்கு கேள்விகளைக் கேட்கலாம். விவசாயியாக இருந்தால் ‘ஊர்ல மழை பெஞ்சுதுங்களா?’ என்று கேட்கலாம். ஆனால் யாராக இருந்தாலும் மொத்தம் ஐந்து நிமிடங்கள்தான். அதற்கு மேல் இரண்டு பேர்களில் யாராவது ஒருவருக்கு போரடித்துவிடும். அவர் தென்னையின் வகைகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் நமக்கு மண்டை காயக் கூடும். ‘பின் நவீனத்துவம் என்ன சொல்லுதுன்னா...’என்று நாம் ஆரம்பித்தால் அவர் அலறக் கூடும். இப்படி எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் இருதரப்பும் ஆர்வத்துடன் பேசக்கூடிய சப்ஜெக்ட் கைவசம் எதுவும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். 

ஆனால் சில மனிதர்களுக்கு இந்தத் திறமை கைவரப்பெற்றிருக்கிறது. அதுவும் தியானம், யோகாசனம் என்றிருப்பவர்களிடம் இந்தத் திறமை துளி அதிகமாகவே இருக்கும் போலிருக்கிறது. கொஞ்சம் பேசத் தெரிந்தவர்களாக இருந்தால், தாங்கள் கற்றுக் கொள்ளும் சூட்சமங்களை தினசரி வாழ்க்கையின் சம்பவங்களோடு அழகாக இணைத்துவிடுகிறார்கள். 

சின்ன மாமனார் அப்படிப்பட்டவர்தான். உறவு முறையில்தான் சின்ன மாமனார். ஆனால் வயதானவர் இல்லை. நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த எங்கள் திருமணத்தின் போது ரஜினி ஸ்டைல் செய்து கொண்டிருந்தார். மாமனார் என்றால் நரைத்த முடியோடுதான் இருப்பார்கள் என்ற எனது கற்பனைக்கு முதல் சம்மட்டி அடி அடித்தவர் இவர்தான். முடி நரைக்கவில்லை என்பதால் நீங்கள் மாமனார் இல்லையென்று சொல்ல முடியுமா? அமைதியாக ஏற்றுக் கொண்டேன். என்னைவிட சில வருடங்கள்தான் வயதில் மூத்திருப்பார். வானதி ஸ்ரீனிவாசனும் அவரும் வகுப்புத் தோழர்கள் என்பது இந்த இடத்தில் ஒரு உபரித் தகவல். சில்லிச் சிக்கன் எந்தக் கடையில் சுவையாக இருக்கும், மட்டன் ஃபிரை இந்த நேரத்தில் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்கள் அவரிடம் கொட்டிக் கிடந்தன. 

ஒரு சமயம் ‘நான்-வெஜ் சாப்பிடுவீங்களா?’ என்று யாரோ கேட்ட போது ‘கொஞ்சமா சாப்பிட மாட்டேன்’ என்று ஜெர்க் கொடுத்தார். 

அப்படி இருந்தவர் திடீரென்று யோகாசனம், தியானம் என ஆளே மாறிவிட்டார். வேதாத்ரி மகரிஷியின் வகுப்புகளுக்குச் செல்கிறார். அந்தப் பாடங்களில் தேர்வுகள் எழுதுகிறார். பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்கிறார். இதெல்லாம் ஓரிரண்டு ஆண்டுகளாகத்தான். புலால் உண்பதில்லை என்று ஆரம்பித்து தன்னைத்தானே நிறைய மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி மாறுகிறவர்கள் எல்லோரும் மனப்பூர்வமாக மாறுகிறார்கள் என்று சொல்ல முடியாது. வெளியே மட்டும் மாற்றிக் கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் அப்படியேதான் இருப்பார்கள். அதே வன்மம், அதே பகைமை, அதே பேராசை. இந்தச் சமூகமும் நம்மை மாறுவதற்கு விடுவதில்லை. அன்பேசிவம் படத்தில் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சொல்லிக்கொண்டே போட்டுத்தள்ளும் நாசர் மாதிரிதான் பலருக்கும் வாய்க்கிறது. ஆனால் சின்ன மாமனார் நிறையவே மாறியிருக்கிறார். உள்ளுக்குள் பக்குவமடைபவர்களிடம் ஒரு தேஜஸ் வரத் துவங்கிவிடும். அதை அவர்கள் அறிகிறார்களோ இல்லையோ- நுண்மையாக கவனிக்கக் கூடிய அடுத்தவர்களால் அறிய முடியும். 

சமீபத்தில் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘எண்ணம் போல வாழ்க்கை’ என்று ஆரம்பித்தார். சில பத்திகளுக்கு முன்பாக பேசினோம் அல்லவா? பொதுவான சப்ஜெக்ட். அதுதான். இப்படி யாராவது ஆரம்பித்தால் அல்லது வெறும் தியரிட்டிக்கலாக பேசினால் கொட்டாவிதான் வரும். அதுவும் பூரியை விழுங்கிவிட்டு கோடைக்காற்று வாங்கிக் கொண்டு அமர்ந்திருக்கும் இரவு நேரத்தில் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இவர் நேக்குத் தெரிந்தவர்- தன் சுய அனுபவத்துடன் இணைத்துவிட்டார். வாயைப் பிளந்து கொண்டு கேட்க ஆரம்பித்துவிட்டேன்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு விபரீத ஆசை வந்திருக்கிறது. வேறொன்றும் இல்லை- ஒரு விபத்தை நேரடியாக பார்க்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. நம்மில் பெரும்பாலானவர்கள் விபத்து நடந்து முடிந்து சில வினாடிகள் அல்லது நிமிடங்களுக்குப் பிறகு பார்த்திருப்போம். ஆனால் லைவ்வாக பார்த்தவர்கள்? மிகக் குறைவானவர்கள்தான் இருக்க முடியும் என நினைக்கிறேன். சி.மா அதைத்தான் விரும்பியிருக்கிறார். இது ஆழ்மனை ஆசைதானே? வெளியில் யாரிடமும் சொல்லவும் முடியாது. சொன்னால் என்ன நினைப்பார்கள்? அதனால் கமுக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் அந்த ஆசை திரும்பத் திரும்ப மனதுக்குள் வந்து போயிருக்கிறது. 

நல்ல ஆசைகள் சீக்கிரம் நிறைவேறாது. ஆனால் தீய விருப்பங்கள் சீக்கிரம் நிறைவேறிவிடும். 

அன்று அப்படித்தான் நிறைவேறியிருக்கிறது. ஏதோ ஒரு காரியத்திற்காக மனைவியை பைக்கில் வைத்துக் கொண்டு பயணித்திருக்கிறார். பாதி வழி தாண்டிய பிறகுதான் சில டாக்குமெண்ட்களை வீட்டிலேயே மறந்து போனது ஞாபகம் வந்திருக்கிறது. வீட்டிற்குச் சென்றுதான் எடுத்து வர வேண்டும். திரும்பிச் சென்று எடுத்து வரலாம் என்று வண்டியைத் திருப்பியிருக்கிறார்கள். ஒரு ஐந்து நிமிடத் தூரம்தான் சென்றிருக்கிறார்கள். ஒரு ஆஜானுபாகுவான இளைஞன் -இருபத்தைந்தைத் தாண்டியவன்- எங்கேயோ பார்த்தவாறு துள்ளலாக சாலையைத் தாண்டியிருக்கிறான். அவனுக்கு என்ன நினைவுகளோ? என்ன பிரச்சினைகளோ. அவன் சாலையை கவனிக்கவில்லை போலிருக்கிறது. ஒரு க்ஷணம்தான். அதே சாலையில் வேகமாக வந்த பேருந்து இடித்துத் தள்ளியிருக்கிறது. துளி சத்தம் இல்லை. துடிப்பு இல்லை. அடங்கிவிட்டான். அத்தனையும் இவரது கண் முன்பாகவே நடந்திருக்கிறது. இறந்து போனவனின் குடும்பம், வாழ்க்கை, ஆசைகள் என அத்தனையும் சில வினாடிகளுக்கு மனதில் வந்து போயிருக்கிறது. 

ஒரு மனிதன் முடிந்து போவது என்பது ஒரு சகாப்தம் முடிந்து போவது. இல்லையா? அவனது அத்தனை எண்ணங்களும், ஆசைகளும் காற்றில் கரைந்து போகின்றன. அந்தக் கணம் ஒரு முற்றுப் புள்ளி ஆகிவிடுகிறது.

சின்ன மாமனார் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றிருக்கிறார். இறந்து போனவனின் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. அது என்னனென்னவோ ஓவியங்களைத் அந்த கருநிற தார்ச்சாலையில் எழுதிக் கொண்டிருக்கிறது. இவர் ஓடிய ரத்தத்தின் கறையைப் பார்த்திருக்கிறார். ‘உனது ஆசை தீர்ந்ததா?’ என்று கேட்பது போலவே இருந்திருக்கிறது. இவருக்கு விரல்கள் சில்லிட்டுப் போயிருக்கின்றன.

‘ரொம்ப கஷ்டமா இருந்துச்சு’ என்று நிறுத்திக் கொண்டார். அவர்தான் நிறுத்திக் கொண்டார். ஆனால் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அந்த இளைஞனின் நினைவுகளைக் கடத்திவிட்டார். யாரோ முகம் தெரியாத மனிதன் தான். வெறும் பத்து நிமிட உரையாடல்தான். ஆனால் அவ்வளவு சீக்கிரம் அவனை மறந்துவிட முடியவில்லை. பேசுகிற மனிதரைப் பொறுத்தும், தொனியைப் பொறுத்தும் சம்பவத்தின் இறுக்கம் கூடி விடுகிறது. இந்தச் சம்பவமும் அப்படித்தான். அந்த இரவு இரவு முழுவதும் அம்மனிதனின் நினைவுகளும் அவனது ரத்தக் கறையுமே கனவுகளாக வந்து கொண்டிருந்தன. நேற்றிரவும் இந்தக் கனவேதான் வந்தது. அந்த ஆஜானுபாகுவான மனிதனின் குழந்தை கதறுவதாக அந்தக் கனவு தொடர்ந்தது. சிறு இடைவெளி கூட இல்லாத தொடர்ச்சியான கதறல் அது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத அழுகையாக இருந்தது. கனவில் நடந்த மற்ற விஷயங்கள் மறந்து போய்விட்டன. ஆனால் அந்தக் குழந்தையின் முகம் மிகத் தெளிவாக நினைவில் இருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் மூன்று வயதுக் குழந்தையின் முகத்தை அச்சு அசலாக அந்தக் கனவுக் குழந்தை பெற்றிருந்தது.