Apr 23, 2014

முடிவு ஆகிடுச்சா?

ஸ்திரமான ஆட்சி, வலிமையான அரசு என்றெல்லாம் ஆரம்பித்தால் கடைசியில் அது எங்கே போய் நிற்கும் என்று தெரியும். அதனால் அப்படி வேண்டாம். 

எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சியமைத்துக் கொள்ளட்டும். மோடி, அர்விந்த் கெஜ்ரிவால், மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா அல்லது ராகுல் காந்தி என்று யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகிக் கொள்ளட்டும். ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது போலவே ‘கலைஞர் சுட்டிக்காட்டும் நபரே பிரதமராக’ இருந்து கொள்ளட்டும். எப்படி இருந்தாலும் அமையவிருக்கிற அரசு முழுமையான பலத்துடன் 280க்கும் மேலான உறுப்பினர்களின் ஆதரவுடன், ப்ளாக்மெயில் செய்யப்படாத அரசாக இருந்தால் போதும். அவ்வளவுதான்.

ஒரு முடிவைக் கூட துணிந்து செயல்படுத்த முடியாத, தான் செய்ய விரும்புவதைச் செய்ய இயலாத ஆட்சி அமையுமானால் அது இன்னொரு இருட்டுக்காட்டுக்குள்தான் இந்த தேசத்தை இழுத்துச் செல்லும். 

மிகச்சாதாரணமான ஒரு ஒப்பீட்டைச் செய்து பார்க்கலாம். 2009 ஆம் ஆண்டு கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு வெளியே வந்த மாணவனையும் 2014 ஆம் ஆண்டு கல்லூரியை விட்டு வெளியே வரும் மாணவனையும் ஒப்பிட்டு பார்க்கலாம். வேலை வாய்ப்புகளில் யாருக்கு அதிக வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறீர்கள்? எல்லோருக்கும் தெரிந்த பதில்தான். நிச்சயமாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த மாணவனுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் இருந்தன. இந்த நான்கைந்து ஆண்டுகளில் எந்த நிறுவனமும் மூடப்படவில்லை என்றாலும் வாய்ப்புகள் குறைந்து போக மிக முக்கியமான காரணம் Saturation. தேங்கிப் போயிருக்கின்றன.

புதிதாக படிப்பை முடித்து வருபவர்கள் மட்டுமில்லை- பணி புரிந்து கொண்டிருப்பவர்களுக்கும் கூட வேறு நிறுவனத்திற்கு மாறுவது அத்தனை சுலபம் இல்லை. நாற்பது, ஐம்பது சதவீத சம்பள உயர்வு என்பதெல்லாம் கிட்டத்தட்ட மலையேறி போய்விட்டது. ‘இத்தனை வருட அனுபவம் என்றால் இவ்வளவுதான் சம்பளம்’ என்று நிறுவனங்கள் சொல்லிவிடுகின்றன. முடியாது என்று சொன்னால் அவர்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஜாப் மார்க்கெட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆள் கிடைப்பது ஒன்றும் சிரமம் இல்லை.

என்ன காரணம்? 

கடந்த சில வருடங்களாகவே எந்த நிறுவனமும் தனது பணியாட்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவில்லை. அப்படியே அதிகரித்திருந்தாலும் அது மிகக் குறைவான வேகத்திலேயே நடந்திருக்கிறது. 2000 ஆம் ஆண்டில் மூன்றாயிரம் பணியாளர்களுடன் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையானது 2007 ஆம் ஆண்டில் நாற்பதாயிரத்தை தொட்டிருந்தால் 2014 ஆம் ஆண்டில் அது ஐம்பதாயிரத்தைத்தான் தொட்டிருக்கிறது. கடைசி ஐந்தாண்டுகளில் வளர்ச்சி விகிதம் மிகக் குறைந்து போய்விட்டது என்பதுதான் உண்மை. எந்தத் துறையாக இருந்தாலும் இதுதான் நிலைமை. 

இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் இல்லை- இந்திய நிறுவனங்களுக்கும் பொருந்தும். இது கார்பொரேட் தொழில்களுக்கு மட்டும் இல்லை- சிறு மற்றும் மத்தியதர தொழிற்துறைகளுக்கும் இதுதான் நிலைமை. இந்தக் காலகட்டத்தில் உலகச் சந்தை தடுமாறியது என்றாலும் இந்தியாவில் உருவான தேக்க நிலைக்கு உலகப் பொருளாதாரத்தின் ஆட்டம் மட்டுமே காரணமில்லை. இந்த அரசுகளும் முக்கியமான காரணம். 

நெசவுத்தொழில் முடங்க மின் தட்டுபாடு காரணம் என்பது வெறும் அதிமுக, திமுகவின் தேர்தல் சண்டைதான். அது முக்கியமான காரணம் இல்லை. கடந்த சில வருடங்களில் பஞ்சு விலை தாறுமாறாக ஏறி இறங்கியது. பதுக்கல் கொடிகட்டிப்பறந்தது. நான்கு தறி, ஆறு தறி போட்டு பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்த ஏழை நெசவாளிகள் நொந்து போனார்கள். மத்திய அரசு நினைத்திருந்தால் ஒரு அளவிற்கேனும் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. பஞ்சு விலையை நிர்ணயிக்கும் மஹராஷ்டிரா முழுவதும் தேசியவாத காங்கிரஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. பதுக்கலில் ஈடுபட்டவர்களில் கணிசமானவவர்கள் அந்தக் கட்சிக்கு ஆதரவானவர்கள் என்கிறார்கள். அரசு வாயைத் திறக்க முடியவில்லை. ஆர்டர்கள் பங்களாதேஷூக்கும் இன்ன பிற நாடுகளுக்கும் பறந்தன. திருப்பூரை மண்போட்டு மூடி மேலே மலர்கொத்து வைத்தார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு துறையும் வலுவற்ற அரசு எந்திரத்தின் காரணமாக பெருத்த அடி வாங்கின. அந்த அடிக்கான நுண்ணிய காரணங்கள் நமக்கு முழுமையாகத் தெரிவதற்குள்ளேயே அரசு முடிந்துவிட்டது.

எந்த நிறுவனமும் இந்தியாவில்தான் விரிவடையவில்லையே தவிர கிழக்காசிய நாடுகளில் மெல்ல மெல்ல கால் பதித்துக் கொண்டிருக்கின்றன. அது ஐடி நிறுவனமாக இருந்தாலும் சரி, கல்வியியல் நிறுவனமாக இருந்தாலும் சரி, சுற்றுலா சார்ந்த நிறுவனமாக இருந்தாலும் சரி- இலங்கை, பிலிப்பைன்ஸ், மலேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தங்களுடைய விஸ்தரிப்பைச் செய்து அங்கு வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கின்றன. இதுதான் நிதர்சனம்.

இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிறுவனங்களால் விஸ்தரிப்பைச் செய்ய முடியவில்லை? 

பல நடைமுறைச் சிக்கல்கள்தான் காரணம். அனுமதி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மிக மிக தாமதாமகவே கிடைக்கிறது. அரசு சார்ந்த எந்த ப்ராஸஸூம் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கின்றன, அது போக அரசியல் தலையீடுகளும் அதிகம். சலித்துப் போன நிறுவனங்கள் இருப்பதை வைத்துக் கொண்டு ஒட்டலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டன. 

உலகப் பொருளாதாரச் சிக்கல்களின் காரணமாக புதிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வரத் தயங்குகின்றன என்பது முதல் காரணமாக இருந்தால், இங்கு இருக்கும் நிறுவனங்களும் பெரிய அளவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பது இன்னொரு காரணம். பிறகு எப்படி படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்கள் சிரமம் இல்லாமல் வேலை பெறுவார்கள்? 

நாம் இங்கு கலாய்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு மன்மோகன் சிங் தகுதியற்றவர் இல்லை என்பதுதான் உண்மை. ஆட்சியமைப்பதற்கு முன்பு அவர் நேர்மையானவராகத்தான் கருதப்பட்டார், தனது முந்தைய பதவிகளின் மூலமாக சிறந்த நிர்வாகி என்றும் அறிவாளி என்றும் பெயரெடுத்தவர்தான். ஆனால் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அவரது அத்தனை பற்களும் பிடுங்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு பொம்மையாக்கி வைக்கப்பட்டிருந்தார். எந்த முடிவுகளும் தாமதப்படுத்தப்பட்டன. 

பெருமுதலாளிகளைப் பொறுத்தவரை தங்களுக்கு ஒவ்வொரு வருடமும் லாபம் கொழிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தங்களது சாம்ராஜ்ஜியம் விஸ்தரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரதமரின் ஆட்சியில் அது சாத்தியமே இல்லை என்பதை கார்பொரேட் நிறுவனங்கள் உணர்ந்து கொள்ள அதிக காலம் தேவைப்படவில்லை. அதனால்தான் கடந்த மூன்றரை ஆண்டுகாலமாகவே அடுத்த ஆள் இவர்தான் என்று மோடியை தூக்கிப்பிடித்தார்கள். மோடிக்கு பின்னால் அம்பானிகளும், டாட்டாக்களும் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படை இதில் இருந்துதான் ஆரம்பமாகிறது.

கார்போரேட்களை ஒழிப்போம் என்று பேசுகிறவர்கள் நன்றாகத்தான் பேசுகிறார்கள். மிக சுவாரஸியமாகவும் பேசுகிறார்கள். ஆனால் கார்போரேட்களிடமிருந்து சாமானிய மனிதர்களை பிரித்துவிட முடியும் என்று நம்புகிறீர்களா? தாராளமயமாக்கலும், உலகமயமாக்கலும் அனுமதிக்கப்படாத 1990களுக்கு முன்பு வேண்டுமானால் கார்போரட்களையும் சாமானிய மக்களையும் பிரித்துப் பார்த்திருக்கலாம். பெருங்கதவுகள் திறக்கப்பட்டு எப்பொழுது பெருமுதலாளிகள் நம் இரத்தக் குழாய்களில் ஊசியைச் செலுத்தி உறிஞ்சத் துவங்கினார்களோ அப்பொழுதிலிருந்தே இந்த நாம் பெரு நிறுவனங்களை சார்ந்து வாழத் தொடங்கிவிட்டோம். நம்மிடம் சேரும் ஒவ்வொரு ரூபாயிலும் பெருமுதலாலிகளின் நிழல் விழுந்திருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பெரும் நிறுவனங்களின் கை பட்டிருக்கிறது. அதனால் கார்பொரேட்கள் விழத் துவங்கினால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த பாதிப்பு நமக்கும் இருக்கும். கசக்கிறது என்றாலும் இதுதான் உண்மை.

பெருநிறுவனங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. ஆனால் இதை எப்படி பிரிப்பது என்று புரியவில்லை. இனி கார்பொரேட்களைச் சாராமல் வாழ முடியும் என்று நம்பிக்கையில்லை. ஆனால் கார்ப்போரேட்களை யாராவது சற்று கட்டுப்படுத்தினால் தேவலாம். அது சாத்தியமா என்றும் தெரியவில்லை. We are trapped.

மன்மோகன் சிங்கின் அரசை ஒவ்வொரு துறையிலும் தோல்வியடைந்த அரசாகத்தானே கடந்த ஐந்தாண்டுகளாக இருந்த அரசைப் பார்க்கிறோம். வெளியுறவுக் கொள்கைகளில் நடைபெற்ற வழ, வழா விவகாரங்கள், ராணுவத்துறையில் நடைபெற்ற ஊழல்களும், சொதப்பல்களும், தாறுமாறாக எகிறிய பெட்ரோல், டீசல் விலை- இந்த விலையுயர்வு ஏதோவொரு விதத்தில் பிற அத்தனை பொருட்களின் விலையையும் உயர்த்திவிடும். ஊட்டியிலிருந்து சென்னைக்கு காய்கறிகளைக் கொண்டு வருவதற்கு லாரி வாடகையை ஏற்றிவிடுவார்கள். ஏற்றப்பட்ட லாரி வாடகையை ஈடுகட்ட காய்கறியின் விலை உயர்த்தப்படும். இப்படி அத்தனை பொருட்களின் விலையும் மறைமுகமாக உயர்ந்துவிடும். பணவீக்கவிகிதம் அதிகமாகும். நூறு ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருளுக்கு நூற்று பத்து ரூபாய் கொடுக்க வேண்டிய தேவை வரும். எனவேதான் டீசல், பெட்ரோலின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். உலகச் சந்தையில் விலை உயர்ந்தால் அரசு என்ன செய்யும் என்று கேட்காதீர்கள். பிற நாடுகளில் பெட்ரோலும் டீசலும் என்ன விலையில் விற்கின்றன என்று தேடிப்பார்க்கலாம். இந்தியா அளவிற்கு ஏற்ற இறக்கங்கள் வேறு நாடுகளில் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. மத்திய அரசு படு கேவலமாகத் தோல்வியுற்ற துறைகளில் இதுவும் ஒன்று.

இவையெல்லாம் ஒரு சில உதாரணங்கள். நிர்வாகத்திறமை வாய்ந்த அரசு அமையாவிடில் அதன் பாதிப்புகள் நம்மையும் அறியாமல் இப்படித்தான் நம் மீது விழும். 

முந்தைய கட்டுரைகளில் மோடியை ஆதரிக்க இருந்த ஒரே காரணம், இப்போதைய சூழலில் வேறு மாற்றுத் தலைவர் இல்லை என்பதும், ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் அமையும் நிலை வந்தால் காங்கிரஸூம் பிற பிராந்திய கட்சிகளும் இத்தகைய வலுவில்லாத பல்லிளிப்பு அரசையே மீண்டும் அமைப்பார்கள் என்பதாலும்தான். குஜராத் மக்கள் அவரை மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் ஒரு காரணம். இதைத் தாண்டி வேறு எந்தக் காரணமும் இல்லை. 

கலைஞர் சொல்வதைப் போல மத்தியில் கூட்டாட்சி அமைய வேண்டும் என்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் பிரதமர் வலிமையானவராகவும், முழு மெஜாரிட்டியுள்ளவராகவும் இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் முடிவுகளை சுயமாக எடுப்பவராகவும், ஒரு முடிவை எடுத்துவிட்டு அதை அமல்படுத்துவதற்காக ஒவ்வொரு அதிகார மையத்தின் அனுமதிக்காகவும் காத்திருக்காதவராகவும் இருக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமா? பெரும்பாலான பிராந்தியக்கட்சிகள் வெறும் சுயநலங்களால் அமைந்தவைதானே. மத்திய அரசில் இடம் பெறுவாரேயானால் ஜெயலலிதாவின் முதல் கோரிக்கை என்னவாக இருக்கும்? கலைஞரின் முதல் கோரிக்கை என்னவாக இருக்கும்? சரத்பவார் எதைக் கேட்பார்? மாயாவதி எதைக் கோருவார் என்பதெல்லாம் தினசரி செய்தித்தாள் வாசித்துவரும் எந்தவொரு சாமானியனும் அனுமானித்துவிடக் கூடியதுதான்.

இத்தகைய பிராந்திய தலையீடுகள் இல்லாத தனக்கான சுதந்திரங்களைக் கொண்ட பிரதமரின் ஆட்சிதான் வலுவான அரசு, ஸ்திரமான அரசு என்பதெல்லாம். அதுதான் இந்த நாட்டிற்கான அவசரத் தேவை. மற்றபடி முதல்பத்தியில் சொன்னபடி அது யார் அமைத்தாலும் சரிதான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- இன்னொரு மோசமான அரசை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தாங்கும் வலிமை இந்த தேசத்திற்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியொரு மட்டமான அரசு அமைந்து அடுத்த ஐந்தாண்டுகளைச் சுரண்டுமானால் அதன் விளைவுகள் மிகக் குரூரமானதாக இருக்கும் என்பது மட்டும் நிஜம்.