Apr 14, 2014

நல்லா கேட்கிறாங்கய்யா டீடெயிலு

அலுவலகத்தில் ஒரு மீட்டிங் நடந்தது. முக்கியமான கூட்டம்தான். கடந்த வருடத்தில் ப்ராஜக்ட்டில் நிகழ்ந்த தவறுகளை ஆய்வு செய்து புள்ளிவிவரமாகக் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள். அதிலும், தவறுகளை வகை பிரிக்க வேண்டும். பெரிய பிரச்சினைகளை உண்டாக்கிய தவறுகள், சுமாரான பிரச்சினைகளை உண்டாக்கிய தவறுகள், பிரச்சினைகளை உண்டாக்காத தவறுகள் என severity வாரியாக பிரித்து அதன் சதவீதக் கணக்கை எடுத்து பெருந்தலைகளுக்குக் காட்ட வேண்டும். 

கணக்கு எடுப்பது கூட பிரச்சினை இல்லை. ஆனால் அதை எப்படி மேலதிகாரிகளுக்கு Presentation ஆகக் கொடுப்பது என்பதுதான் பெரிய சிக்கலாகத் தெரிந்தது. விஜயகாந்த் போல ‘போன வருஷம் எத்தனை தப்பு தெரியுமா? 17 தப்பு எங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டுச்சு, 12 தப்புகளின் கண்ணுல நாங்க பாட்டிலை விட்டு ஆட்டினோம்’ என்று அளக்கலாம்தான். ஆனால் எதிரில் இருப்பவர்களின் மனதில் எப்படி பதியும்? 

நாம் பேசிக் கொண்டிருக்கும் போது ஈர்ப்பாக இருந்தால் கவனிப்பார்கள். இல்லையென்றால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். பணியிடத்தில் பெருந்தலைகளிடம் ‘ஸீன்’ போடுவதற்கெனக் கிடைக்கும் இந்த மாதிரியான வாய்ப்புகளை பயன்படுத்தி நம்மை விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். எப்பவாவது அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது ‘ஓ அந்தப் பையனா?’ என்றால் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். ‘யார் அந்தப் பையன்?’ என்று கேட்டால் நமக்கு இன்னமும் விளம்பரம் போதவில்லை என்று அர்த்தம். 

முந்தைய தலைமுறைகளில் இத்தனை புள்ளிவிவரங்கள் இல்லை. ‘போன வருஷம் சித்திரையில மூணு மழை பெஞ்சுது’ என்பதுவோ அல்லது ‘பவுன் இத்தனை ரூபாய்க்கு வித்துச்சு’ என்பதுவோதான் அதிகபட்ச புள்ளிவிவரமாக இருக்கும். பெரிய ஞாபக சக்தி தேவையில்லை. பெரிய Presentation skills தேவையில்லை. இன்றைக்குத்தான் புள்ளிவிவரங்களால் மூச்சுத் திணறச் செய்கிறார்கள். 

ரிசர்வ் வங்கி ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்தால், திட்டக் கமிஷன் இன்னொரு விவரத்தைக் கொடுக்கிறது. இதோடு நின்றுவிடுவார்கள் என்றால் புள்ளியியல் துறை ஒரு கணக்கைக் கொடுக்கிறது. அதோடு விடுவார்களா? மாநில அரசு ஒரு புள்ளிவிவரம் கொடுக்கும். அது போக தனியார் அமைப்புகள் சில விவரங்களைக் கொடுக்கின்றன. கொன்றுவிடுகிறார்கள்.

எதை நம்புவது எதை விடுவது என்பது வேறு பக்கம். இந்தப் புள்ளிவிவரங்களை எப்படி புரிந்து கொள்வது என்பதற்கே பெரிய அப்பாடக்கராக இருக்க வேண்டியிருக்கிறது.  அதனால்தான் புள்ளியியல் படித்தவர்களுக்கு சம்பளம் கொட்டிக் கொடுக்கிறார்கள். M.Sc(Statistics) முடித்தவர்கள் யாராவது இருந்தால் காதும் காதும் வைத்த மாதிரி ‘தம்பிக்கு என்ன சம்பளம்?’ என்று கேட்டுப்பாருங்கள். ஈயொன்று நம் வாய்க்குள் புகுந்து வெளியே வரும். அப்படித் திறக்க வேண்டும்.

சராசரி வாழ்நாள், மக்களின் கல்வியறிவு, மழையளவு, சுகாதார வசதிகள், தனிநபர் வருமானம் என எதையெடுத்தாலும் புள்ளிவிவரத்தோடு சொல்கிறார்கள். சராசரி என்கிறார்கள், மீடியன் என்கிறார்கள் இன்னும் என்னனென்னவோ சொல்கிறார்கள். Index, Indicators என்று எந்த வார்த்தைகளைத் தேடினாலும் புள்ளிவிவரங்களில்தான் வந்து நிற்கிறோம். என்னதான் விவரங்கள் இருந்தாலும் நம்மால் எத்தனை கணக்குகளை மனதில் நிறுத்திக் கொள்ள முடிகிறது? எத்தனைதான் புள்ளிவிவரங்களை செய்தித்தாள்களின் மூலமாக படித்து வைத்திருந்தாலும் அடுத்தவர்களிடம் பேசும் போது நாக்கு நடனமாடுகிறது. 

இந்த லட்சணத்தில்தான் தவறுகளின் எண்ணிக்கையையும் பெருந்தலைகளுக்குக் காட்டினேன்.  மொத்தமாக இருபது நிமிடங்கள் தேவைப்பட்டன. பெரிய திருப்தி இல்லை. வழமையாக பயன்படுத்தும் அதே பவர்பாய்ண்ட்தான். கடமைக்கு செய்து முடித்த போது வருத்தமாக இருந்தது. இனி இப்படியொரு வாய்ப்பு கிடைக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்படியான சந்தர்ப்பங்கள்தான் அனுபவங்களைக் கற்றுத் தருகின்றன. 

இந்த மாதிரி வேலைகளில் சில கில்லாடிகள் இருப்பார்கள். அவர்களுக்கு நுட்பம் தெரியும். எதை எங்கே தட்டினால் விழும் என்று தெரிந்து வைத்திருப்பார்கள். அப்படியொரு கில்லாடி மேலாளர் தன்னைச் சந்திக்கும் படி சொல்லியிருந்தார். பெரும்பாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் மேலாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அவனவன் கற்றுக் கொள்ளட்டும் என்று ஒதுங்கிச் செல்பவர்கள்தான் அதிகம். இவர் சற்று வித்தியாசமான மனிதர். 

பார்க்கச் சென்றிருந்தேன். தனது கணினியில் இருந்து சில வீடியோக்களைக் காட்டினார். சொன்னால் நம்ப முடியாது- தனது குழந்தை ஆறாவது மாதத்திலிருந்து எத்தனை புட்டி பால் குடித்தது என்பதன் புள்ளிவிவரத்திலிருந்து, மாதாந்திர காய்கறி செலவு- அதுவும் தக்காளிக்கு எவ்வளவு, மிளகாய்க்கு எவ்வளவு என்பது வரையிலான அத்தனை சில்லியான விவரங்களையும் வீடியோவாக மாற்றி வைத்திருந்தார். அதுவும் பார்ப்பதற்கு ஜாலியான வீடியோக்கள்.  இவ்வளவு மொக்கையான புள்ளிவிவரங்களையும் சவசவ என்று இழுக்காமல் இத்தனை சுவாரஸியமாக மாற்ற முடியுமா என்று அதிர்ச்சியாகிக் கிடந்தேன்.

‘எப்படியிருக்கிறது?’ என்றார்.

‘அட்டகாசம்’. ‘எப்படி செய்யறீங்க?’ என்றேன்.

‘சொல்கிறேன். ஹன்ஸ் ரோஸ்லிங்ன்னு யூடியூப்பில் தேடிப்பார்த்துட்டு வா’ என்றார். சனி, ஞாயிறுகளில் Hans Rosling ன் வீடியோக்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். வயதான மனிதர். தூள் கிளப்புகிறார். நேரம் கிடைக்கும் போது ஒன்றிரண்டு வீடியோக்களையாவது பார்த்துவிடுங்கள். Worth watching.

உலக மக்கட்தொகை நாற்பது ஐம்பது ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கிறது என்பதை அவருக்கு வெளிப்படுத்த வெறும் நான்கு நிமிடங்கள்தான் தேவைப்படுகிறது- அதுவும் நூற்றுக்கணக்கான நாடுகளின் விவரங்களை படுவேகமாகச் சொல்லிச் செல்கிறார். எவ்வளவு பெரிய விவரங்களாக இருந்தாலும் மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் முடித்துவிடுகிறார். ஆனால் இந்த விவரங்கள் நம் மண்டைக்குள்ளேயே நின்று கொள்ளும் என்பதுதான் அதன் ஆச்சரியம். அத்தனை சுவாரஸியம்.

ரோஸ்லிங் ஒரு காலத்தில் பெங்களூரில்தான் படித்திருக்கிறார். புள்ளியியலில் ஆர்வம் ஏற்பட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது. தரவிறக்கமும் செய்துவிட்டேன். இனிமேல்தான் பழக வேண்டும்.

மேலாளரிடம் நன்றி சொன்னேன். ‘நாமதான் தொடங்க வேண்டும் என்ற காரியம் இங்க ஒண்ணுமே இல்ல பாஸ். எல்லாக்காரியத்துக்கும் யாராச்சும் எங்கேயாச்சும் வழிகாட்டி வெச்சிருக்காங்க. நாம அவங்களை கண்டுபிடிச்சுட்டா போதும். கலக்கிடலாம்’ என்றார். சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் அந்த வார்த்தைகள் மண்டைக்குள் வண்டு குடைவது போலவே குறுகுறுக்கின்றன.