Apr 13, 2014

மோடி

நரேந்திர மோடியின் பிம்பம் இன்று நேற்று உருவாக்கப்படவில்லை. நமக்கே தெரியாமல் நம்மைச் சுற்றிலும் பல ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். மோடியின் ஆட்சியில் குஜராத் வளர்ச்சியடைந்திருக்கிறது என்றார்கள், தொடர்ந்து மூன்று முறையாக குஜராத் மக்கள் மோடியை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள் என்று பேசினார்கள், மோடி ஒரு வலுவான அரசியல்தலைவர் என்று எழுதினார்கள். அந்த மாநிலத்தில் மின் தடை என்பதே இல்லையென்றும், மது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுவிட்டது என்றும் நிறையச் செய்திகள் நம்மை அடைந்து கொண்டிருந்தன. 

கவனித்துப் பார்த்தால் இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. மோடி ஒரு வலுவான தலைவர் என்று சொல்லப்பட்ட அதே காலத்தில் காங்கிரஸ் பிரதமரின் பலவீனங்கள் வெளிப்படுத்தப்பட்டன. குஜராத்தில் ஊழல் இல்லை என்று சொல்லப்பட்ட அதே சமயத்தில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்கள் expose செய்யப்பட்டன. ஆக, ஒரு இடத்தை காலி செய்த படியே அந்த இடத்திற்கு அடுத்த தகுதியான ஆள் இவர்தான் என்று சுட்டுவிரல்கள் மோடியை நோக்கி நீட்டப்பட்டன. இது போன்ற ‘மோடியிஸ’ எண்ணங்கள் சாமானிய மக்களிடம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.  ‘டீம் மோடியின்’ குறிக்கோளே சாமானிய மக்கள்தான். இந்த தேசத்திற்கு அடுத்த பிரதம வேட்பாளர் தான்தான் என்பது மோடிக்கும் அவரது குழுவுக்கும் வெகுகாலத்திற்கு முன்பே தெரிந்திருக்கிறது. தெளிவாக காய் நகர்த்திக் கொண்டிருந்தார்கள். மோடியின் மீது மக்களின் பார்வை விழத் துவங்கியது. இந்த எண்ணத்திற்குத்தான் தேர்தல் சமயத்தில் ‘மோடி அலை’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். 

சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும், பிரியங்காவுக்கும் இந்த ‘பிம்பம்- உருவாக்கம்’ தேவைப்படவில்லை. அவர்களுக்கு பின்னால்தான் ‘காந்தி’ ஒட்டியிருக்கிறார் அல்லவா? ஆனால் அந்தக் குடும்பத்தைத் தவிர இந்தியாவில் வேறு யார் தலையெடுக்க வேண்டுமானாலும் மிகக் கடுமையான பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. அந்த பிரயத்தனத்தை மிக நேர்த்தியாகவே மோடி அணியினர் செய்திருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ஊடகங்கள் இவ்வளவு ‘ரீச்’ அடைந்திருக்கவில்லை. இன்று நிலைமை மாறியிருக்கிறது. தேசத்தின் பெரும்பாலான கிராமங்களில் செய்திச் சேனல்கள் தெரிகின்றன. பெரும்பாலான மக்களுக்கு பத்திரிக்கைகள் கிடைக்கின்றன. பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் கிராமங்களில் தேசிய அரசியல் தலைவரின் பெயரைக் கேட்டால் காந்தி குடும்பத்தைத் தவிர வேறு எந்தப் பெயரையும் சொல்ல மாட்டார்கள். இன்றைக்கு அந்த நிலை இல்லை. கெஜ்ரிவாலின் பெயர் வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

கெஜ்ரிவாலின் நிலைமை வேறு. 2009 ஆம் ஆண்டுத் தேர்தலைப் போல காங்கிரஸ் கட்சிக்கு எதிரியாக எந்த பலமான தலைவரும் இல்லாத சூழல் இப்போது இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சியே கெஜ்ரிவாலை நசுக்கியிருக்கும். காங்கிரஸ் கடந்த சில ஆண்டுகளாக உறங்கிவிட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரை மோடி தனக்கு அச்சுறுத்தலாக வருவார் என்று அந்தக் கட்சி புரிந்து கொள்ளவேயில்லை. அவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். திடீரென்று மோடி பெரிய உருவமாக வளர்ந்து நின்றார். காங்கிரஸால் எந்தவிதத்திலும் எதிர்க்க முடியாத உருவம் அது. நிலைமை கை மீறிவிட்ட பிறகு காங்கிரஸின் இப்போதைய தேவையெல்லாம் மோடி என்ற மனிதனுக்கு ஆப்பு வைக்கக் கூடிய ஒரு தலை. அந்தத் தலையாக கெஜ்ரிவாலைப் பார்க்கிறது. அதனால் சற்று ஒதுங்கி கொஞ்ச தூரம் ஓடிக் கொள்ளட்டும் என்று கெஜ்ரிவாலுக்கு வழிவிடுகிறார்கள். அவ்வளவுதான்.

தன்னை அடுத்த பிரதம் வேட்பாளராக உருவாக்கிக் கொண்ட மோடியால் தான் ஒரு அப்பழுக்கற்ற தலைவர் என்ற இமேஜை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் இன்றைக்கு மோடிக்கு இருக்கும் பிரச்சினை. 2001 இல் நிகழ்ந்த குஜராத் நிலநடுக்கத்தையும் அதன் பிறகு அந்த மாநிலத்தின் மாற்றங்களையும் மறைக்கும்படியான பூதமாக 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் எழுந்து நின்றது. அதற்கு பின் குஜராத்தில் பேசப்பட்ட அத்தனை திட்டங்களும் இந்தக் கலவரத்தின் நிழலுக்குள் பதுங்கி கொள்ளும்படியாக ஊடகவியலாளர்களும் மோடி எதிர்ப்பாளர்களும் பார்த்துக் கொண்டார்கள்.

மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதிலும், வலிமையான தலைவர் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. கொற்கை நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் எழுத்தாளர் ஜோ.டி.க்ரூஸ் இவற்றைத்தான் முன் வைக்கிறார். சாமானிய மக்களின் வலிகளைப் புரிந்து கொள்ளும் தலைவனாக மோடி இருப்பார் என்கிறார். தமிழக எழுத்தாளர்களில் மோடியை வெளிப்படையாக ஆதரித்தவர்களில் ஜோ.டி.க்ரூஸ்தான் முக்கியமானவர். கர்நாடகாவில் அனந்தமூர்த்தியும், க்ரிஷ் கர்னாட்டும் மோடியை எதிர்ப்பதை இங்கே பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ஜோ.டி.க்ரூஸ் ஆதரிப்பதை வெகு சுலபமாக இருட்டடிப்பு செய்துவிட்டன.

என்னதான் மோடியின் சில பாஸிட்டிவ் தகுதிகள் பேசப்பட்டாலும் அவரது மீதான கறையைத் தாண்டி இந்த திறன்கள் அவரைப் பிரதமராக்குமா என்று தெரியவில்லை. தன்னை இந்த தேசத்தின் அடுத்த தலைவராக பிம்பப்படுத்திக் கொள்ள அவருக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டன. எப்பொழுதும் பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளத்தான் பல ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் அதை அடித்து நொறுக்க சில மாதங்கள் போதுமானது. இப்பொழுது மோடி எதிர்ப்பாளர்கள் அதைத்தான் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். 

குஜராத் கலவரங்களோடு சேர்த்து எந்த வாய்ப்பு கிடைத்தாலும் மோடியின் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவரது வேட்பு மனுவில் அவரது மனைவியின் பெயரை வெளிப்படுத்தியது வரை குதறுகிறார்கள். வாக்காளர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. சிறு சலனம் கூட வாக்காளர்களின் முடிவை மாற்றிவிடக் கூடும். எனது வகுப்புத் தோழன் MD முடித்த மருத்துவர். இதுவரை மோடியின் பக்கமாக சாய்ந்திருந்தான். இந்த வார ஆனந்த விகடன் கட்டுரையை படித்துவிட்டு ‘யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்கிறான். தேர்தல்கள் முழுமையாக முடிந்து முடிவுகளைத் தெரிந்து கொள்ள இன்னமும் ஒரு மாத காலம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 

இங்கு மோடிக்கு ஆதரவு என்றாலே மதவெறியனாகவும், பார்ப்பனியத்தைத் தூக்கிப்பிடிப்பவனாகவும் பார்ப்பது துரதிர்ஷ்டம். அறுபதாண்டு காலமாக இந்தியாவையும் தமிழகத்தையும் கூறு போட்டு விற்றவர்களை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள். இதுவரையிலான தங்களது அத்தனை கொள்கைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அரசியல் ஆதாயங்களுக்காக எந்தச் சங்கடமும் இல்லாமல் கட்சி மேடையேறுகிறார்கள். தங்களை முற்போக்கு அறிவாளி என்றும், நடுநிலை ஊடகவியலாளர்கள் என்றும் சொல்லிக் கொள்பவர்கள் தயக்கமே இல்லாமல் ஊழல்வாதிகளுக்கு சார்பாக பேசுகிறார்கள். ஆனால் மோடிக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று சொல்பவனின் அத்தனை விவகாரங்களையும் தெரு வரை இழுத்துவிடுகிறார்கள். 

இங்கு எல்லா அரசியல்வாதிகளுமே அயோக்கியர்கள்தான். வாக்கு கேட்டு வரும் அத்தனை பேருமே அசிங்கம் பிடித்தவர்கள்தான். மோடியும் அரசியல்வாதிதான். மோடியும் வாக்குக் கேட்டு வருபவர்தான். மோடி வென்றாலும் தோற்றாலும் எனக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்களைவிடவும், போலி மதசார்பற்ற தலைவர்களைவிடவும் ஐந்தாண்டுகள் இந்த நாட்டை நிர்வகிக்கும் திறமை நிறைந்தவர் என்ற ஒரே நம்பிக்கையின் காரணமாக இப்பொழுதும் நான் மோடிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறேன். மோடியை இவர்கள் தோற்கடித்தாலும் பரவாயில்லை. ஒரு ஸ்திரமான அரசுக்கு வழிவிட்டால் போதும் என விரும்புகிறேன். ஆனால் என்ன நடக்கும் என்று உறுதியாகக் கணிக்க முடியவில்லை.