Apr 11, 2014

யார் கண்டு கொள்கிறார்கள்?

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வது சரிதான். ஆனால் இப்படிச் சொல்வது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை ‘படிக்க வேண்டாம்’ என்று சொல்வது மாதிரியில்லையா என்று ஒருவர் கேட்டார். அப்படி இல்லை. படிக்க வேண்டாம் என்று யார் சொன்னது? படிக்கட்டும். ஆனால் வெறும் படிப்பில் மட்டுமே மண்டை காய்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை. பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் மதிப்பெண் வாங்குவதைத் தவிர மாணவர்கள் வேறு குறிக்கோள் வைத்துக் கொள்வதில்லை. பள்ளிகளும் அப்படியெல்லாம் மாணவர்களை யோசிக்கச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில்லை. அப்படியான கல்விமுறை நம்முடையது. அட்டை டூ அட்டை, பக்கத்துக்கு பக்கம், வரிக்கு வரி மண்டைக்குள் ஏற்றி வைத்திருக்க வேண்டும்.

படிப்பைத் தவிர வேறு எதையும் யோசிக்க வேண்டாம். விட்டுவிடலாம். தமிழ் ஆங்கிலப் பாடங்களையாவது விரும்பி படித்திருப்பார்களா? அதுவும் இல்லை. தேர்வு சமயத்தில் மட்டும் அந்தப் புத்தகங்களைத் திறந்தால் போதும். தப்பித்துவிடலாம். தமிழ், ஆங்கிலத்தில் துணைப்பாடம் என்றொரு பிரிவு உண்டு. நல்ல கதைகள் இருக்கும். அதையெல்லாம் யார் படித்தோம்? கதையைச் சுருக்கி ஜூஸ் எடுத்து கோனார் நோட்ஸில் கொடுத்திருப்பான். அதை உருட்டிக் கொண்டு போனால் போதும். இப்பொழுது துணைப்பாடமே இல்லையென்று நினைக்கிறேன்.

தமிழும் ஆங்கிலமும் தொலையட்டும். மற்ற பாடங்களையாவது முழுமையாக புரிந்து படிக்கிறார்களா? பன்னிரெண்டாம் வகுப்பில் செய்த இயற்பியல் ஆய்வுகளும், வேதிப்பொருட்களைக் கண்டறியும் ஆய்வகச் சோதனைகளையும் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது? மறந்திருப்போம். ஆய்வகம் என்பது சுலபமாக மதிப்பெண் வாங்குவதற்கான ஒரு இடம். நெட்டுரு போட்டு வந்தால் மதிப்பெண் வாங்கிவிடலாம். வாத்தியாருக்கு சோப்பு போட்டிருந்தால் இன்னமும் சுலபம். அவ்வளவுதான்.

இப்படி வெறும் மதிப்பெண்களை நோக்கி மாணவர்களை ஓட வைக்கும் அதே கான்செப்டைத்தான் கல்லூரியிலும் செய்கிறார்கள். கணிதத்தைக் கூட மனனம் செய்துவிடுகிறார்கள். அதைத்தான் மாற்ற வேண்டும். கல்லூரியிலும் மதிப்பெண்ணை நோக்கி கடிவாளம் போட்டுக் கொண்டு ஓடும் குதிரைகளாக மாணவர்களாக இருக்க வேண்டியதில்லை. கல்லூரியில் மாணவர்களின் சிறகு விரிய வேண்டும். எண்பது சதவீத மதிப்பெண் வாங்கிவிடுவேன் என்பது முக்கியமே இல்லை. பாடத்தின் அடிப்படைகள் தெரியவேண்டும். பாடத்தையும் தாண்டி வேறு சில பொதுவான விஷயங்களைப் பற்றி அறிந்திருக்க வெண்டும். பணவீக்க விகிதம் என்றால் என்ன என்று சொல்லுமளவிற்கேனும் பொருளாதாரம் தெரிந்திருக்க வேண்டும். ஹைதர் அலி அப்பாவா? திப்பு சுல்தான் அப்பாவா என்கிற அளவிற்காகவது வரலாறு தெரிய வேண்டும். மங்கள்யான் எந்த ஆற்றலைப்பயன்படுத்தி செவ்வாய்க்கிரகம் நோக்கிச் செல்கிறது என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். எத்தனை கல்லூரி மாணவர்களுக்கு இந்திய பாராளுமன்ற முறை பற்றி ஐந்து நிமிடம் பேசும் அளவிற்குத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்? அந்த அளவிற்கு வேண்டாம்- உங்கள் ஊர் எந்தத் தொகுதியில் வருகிறது என்று கேட்டுப்பாருங்கள். பலருக்கு சந்தேகம்தான். 

பொறியியல் படிக்கும் மாணவர்கள் இன்னமும் மோசம். எனக்கு எதற்கு வரலாறும், புவியியலும், குடிமையியலும் என்கிற ரீதியில்தான் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும். மற்ற பாடங்களில் வல்லுனராக இருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படையான சில விஷயங்களையாவது தெரிந்து வைத்திருப்பது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும். பாடங்களில் எழுபது-எழுபத்தைந்து சதவீத மதிப்பெண்கள் இருந்தாலும் கூட போதும். சபையில் நான்கு பேரிடம் ஒரு பொதுவான விஷயத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும அளவிற்கான அறிவாவது இருக்க வேண்டும். தப்பித்துவிடலாம்.

எத்தனை நேர்காணல்களில் பையனின் பாட அறிவைச் சோதிக்கிறார்கள்? பெரும்பாலான நேர்காணல்களில் பாட அறிவு பெரிய பொருட்டே இல்லை. தொண்ணூறு சதவீத மதிப்பெண் வைத்திருப்பது பற்றிய கவலையும் அவர்களுக்கு இல்லை. பையனிடம் நம்பிக்கை இருக்கிறதா? புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் உந்துதல் இருக்கிறதா? தனக்குத் தெரிந்ததை தெளிவாக வெளியில் சொல்லும் திறன் இருக்கிறதா? தெரியாததை தெரியவில்லை என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் தைரியம் இருக்கிறதா? என்பதையெல்லாம்தான் கவனிக்கிறார்கள். அதுதான் ஆளுமை- Personality.வெறும் படிப்பும், மதிப்பெண்ணும் இந்த personality buiding இல் பெரிய அளவில் உதவாது.

ஐஐடியில் படித்துவிட்டால் ஒருவரால் சிக்கலான நேர்காணலில் வெற்றியடைந்துவிட முடியும் என்று அர்த்தம் இல்லை. ஐஐடி என்பது ஒரு நுழைவுச்சீட்டு. ‘ஐஐடி மாணவனா?’ என்று எதிரில் இருப்பவர் புருவம் உயர்த்துவார். இப்படி நம்மைப் பற்றிய impression உருவாக்க வேண்டுமானால் உதவலாமே தவிர மற்றபடி, உள்ளுக்குள் இருப்பது அகப்பையில் வர வேண்டும். அதற்கு படிப்பைத் தாண்டியும் ஏகப்பட்ட விஷயங்களில் மாணவர்கள் தயாராக வேண்டும்.

டெக்னாலஜிக்கும், எஞ்சினியரிங்குக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியை யாராவது கேட்பார்கள். சுஜாதா, அப்துல்கலாம் எல்லாம் கல்லூரியில் படித்த காலத்தில் B.E தான். பேச்சிலர் ஆஃப் இஞ்சினியரிங். இப்பொழுதுதான் B.Tech வந்திருக்கிறது. டெக்னாலஜிஸ்ட். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காலங்காலமாக அடிப்படை மாறாமல் இருப்பதைப் படிப்பது எஞ்சினியரிங். மின்சாரம் எப்படி பாய்கிறது? மோட்டார் எப்படி சுழல்கிறது? கட்டிடங்களின் அடிப்படை என்ன என்பதெல்லாம் எப்பொழுதும் அப்படியேதான் இருக்கும். அதனால்தான் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என்பதெல்லாம் B.E. எஞ்சினியரிங்.

தகவல் தொழில்நுட்பத்துறை அப்படியா? நேற்று படித்தது இன்று மாறிவிடுகிறது. இன்று படித்துக் கொண்டிருப்பது நாளைக்கு இருக்காது. இப்படி மாறிக் கொண்டேயிருப்பதை பாடமாக எடுத்துப் படிப்பது டெக்னாலஜி. பி.டெக். இங்கு டெக்னாலஜி படிக்கும் மாணவனும், எஞ்சினியரிங் படிக்கும் மாணவனும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். எஞ்சினியரிங் படிப்பவன் அடிப்படை பொறியியலில் கரை காண வேண்டும். டெக்னாலஜி படிப்பவன் புதிய நுட்பங்களை மிக ஆர்வமாகத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் BE என்றும் B.Tech என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் யார் கண்டு கொள்கிறார்கள்? பாஸ் ஆனால் சரி; கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை வாங்கினால் சரி.

எலெக்ட்ரான், புரோட்டான் பற்றி கம்யூட்டர் சயின்ஸ் பையன் கவலைப்படுவதில்லை. மோட்டார் எப்படி இயங்குகிறது என்பது பற்றி கம்யூனிகேஷன் பையன் அலட்டிக் கொள்வதில்லை. அடிப்படையான தகவல் தொடர்பியலின் தத்துவம் பற்றி மெக்கானிக்கல் பையன் தெரிந்து கொள்வதில்லை. முதல் வருடத்தில் அடிப்படையான பாடங்கள் உண்டு. ஆனால் மேலே சொன்னது போலத்தான் - பாஸ் ஆனால் போதும்.

மாணவர்களை குற்றம் சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அப்படித்தான் நமது கல்வி முறை இருக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. தனது பாடப்புத்தகத்தில் இருப்பதை மேய்ந்தால் போதும். அதைக் கூட முழுமையாக படிக்க வேண்டியதில்லை. ப்ளூ ப்ரிண்ட் உண்டு. அந்தப் பகுதிகளை மட்டும் கடைசி நேரத்தில் மனனம் செய்துகொண்டால் பாஸாகிவிடலாம்.

படிக்கிற வயதில் தனது பாடத்தைவிட்டுவிட்டு மற்றவற்றையெல்லாம் தெரிந்து என்ன செய்யப் போகிறார்கள் என்று யாராவது கேட்கலாம். வாஸ்தவமான கேள்விதான். ஆனால் படிப்பைத் தவிர்த்து வேறு விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் ஒரு மாணவனின் தன்னம்பிக்கையைச் சோதித்துப் பாருங்கள். பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். ‘எனக்குத் தெரியும்’ என்கிற கெத்து. அந்த நம்பிக்கைதான் மாணவப்பருவத்தில் தேவை. அந்த நெருப்பு கனன்று கொண்டிருந்தால் போதும். வேலையே கிடைக்கவில்லை என்றாலும் அவன் பிழைத்துக் கொள்வான். அப்படியான மாணவர்கள்தான் உருவாக்கப்பட வேண்டும். அப்படி உருவாகும் சமூகம்தான் அறிவார்ந்த சமூகம். உருட்டிப் படித்து வெளியே வருபவர்கள் ப்ராய்லர் கோழி மாதிரிதான். கூண்டை விட்டு வெளியே வந்தால் குதிக்கக் கூடத் தெரியாது.