Apr 10, 2014

எவன் சிக்குவான்?

ஒவ்வொரு வருடமும் தனது நூறாவது நாளில் எனக்குத் தேவையான உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்துவிடுகிறது. 2014ம் வருடத்தின் நூறாவது நாளான இன்றோடு முப்பத்தியிரண்டு வருடங்களை முழுமையாக விழுங்கிவிட்டேன். 

பிறந்தநாள், புதுவருடப்பிறப்பு போன்ற நாட்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே செண்டிமெண்ட்டாக பழக்கிவிட்டார்கள். வருடப்பிறப்பன்று எப்படியிருக்கிறோமோ அப்படியேதான் வருடம் முழுவதும் இருப்போம், பிறந்தநாளின் போது எப்படியிருக்கிறோமோ அப்படித்தான் வருடம் முழுவதும் இருப்போம்- வருத்தமாக இருந்தால் வருடம் முழுவதும் வருத்தம், சந்தோஷமாக இருந்தால் வருடம் முழுவதும் சந்தோஷம். இப்படி அம்மா சொல்லிச் சொல்லி இப்பொழுது அதை நம்பவும் முடிவதில்லை நம்பாலும் இருப்பதில்லை. நடுராத்திரியில் குளித்துவிட்டு சாமிகளிடம் வேண்டுதலைச் சொல்லிவிட்டு இன்று ஒரு நாளாவது பொய் சொல்லக் கூடாது, கேப்மாரித்தனம் செய்யக் கூடாது, பொறாமைப்படக்கூடாது என்றெல்லாம் சங்கல்பம் எடுத்துக் கொண்டு படுத்துத் தூங்கிவிடுகிறேன். என்னதான் சங்கல்பம் எடுத்தாலும் அதை ஒரு நாள் கூட பின்பற்ற முடிவதில்லை. அழுக்குப் பிடித்த மனம்.

இப்பொழுதெல்லாம் அடுத்தவர்கள் குசலம் பேசுவதையும் வசை பாடுவதையும் என் மனம் கண்டுகொள்ளக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறேன். முகத்துக்கு நேராகச் சிரித்துவிட்டு, நேரில் பார்க்கும் போது கை குலுக்கிவிட்டு திரும்பிய அடுத்த வினாடியே கத்தியை வைத்துக் குத்துகிறார்கள். அதுவும் புறங்கழுத்து பார்த்து. குத்துவதால் பெரிய துக்கம் இல்லை. ஆனாலும் சிறு இடறல்.

ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்து ‘அவர் உங்க நண்பரா? பேசிட்டு இருந்தேன்..உங்களை தாறுமாறா திட்டுறாருங்க’ என்றார்.  என்னிடம் கேட்டவர் அப்பாவியான மனிதர். ‘ஆமாங்க..நண்பர்தான்..பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருக்காரு..தெரியுமா’ என்றேன். இந்தக்காலத்தில் எதிரிகளைவிடவும் நண்பர்கள்தான் ஆபத்தானவர்கள்.

இப்படி ஆயிரம் பேசுவார்கள். பேசிக் கொண்டு போகட்டும். இப்படி நமது காதுகளுக்கும் கண்களுக்கும் வந்து சேரும் போதுதான் ஆயாசமாகிவிடுகிறது. 

ஒருவனை வசைபாட வேண்டும் என்று முடிவு செய்து ஒரு முறை அந்தத் தவறைச் செய்துவிட்டால் அது obsessive ஆகிவிடும். நம்முடன் வேலை செய்பவர்களையோ, நமது வேலைக்காரர்களையோ ஒரு சில முறை மனதுக்குள் கரித்துக் கொட்டுங்கள். பிறகு அந்த மனநிலை ‘செட்’ ஆகிவிடும். அவன் எதைச் செய்தாலும் நமக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். அந்த எரிச்சல் மனதின் ஒரு மூலைக்குள் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்ளும். அதன்பிறகு அவனை எப்பொழுதும் வசைபாடிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பிய பிறகு நன்றாக பூட்டியிருக்கிறதா என்று மூன்று நான்கு முறை இழுத்துப் பார்ப்பார்கள். சிலர் அவ்வப்பொழுது கையைக் கழுவிக் கொண்டேயிருப்பார்கள். ஃபோனில் அழைப்பு வருகிறதோ இல்லையோ- ஃபோனின் ஸ்கீரினைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். இதெல்லாம் obsessiveதான். இப்படித்தான், தனக்கு பிடிக்காதவனை நான்கு திட்டு திட்ட வேண்டும். 

நேற்றிரவு பதினொன்றரை மணிக்குக் கூட வசைகளைச் சுமந்து ஒரு கமெண்ட் வந்தது. ஆபாசமான வார்த்தையில் ஆரம்பித்து ‘தூக்கு மாட்டிக்குவ’ என்று முடித்திருந்தார். இந்தப் பிறந்தநாள் அநேக சுபலட்சணங்களுடன் வருவதாக நினைத்துக் கொண்டேன். காதில் விழும் அழுக்குகள், கண்ணில்படும் ஆபாசங்களையெல்லாம் தாண்டிச் செல்கிற மனம் வாய்த்தால் போதும். இயங்குவதற்கான பலம் தானாக வந்துவிடும். அதைத்தான் விரும்புகிறேன். இந்த வருடத்திற்கான கடவுள் கோரிக்கைகளில் அதுதான் இடம் பிடித்திருக்கிறது. 

தெரிந்து கொள்வதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்கும், வாழ்வதற்கும் எத்தனையோ இருக்கிறது. 

ஒரே ஸ்டைல், ஒரே பேட்டர்ன், ஒரே முறை என்றிருந்தால் போரடித்துவிடும். கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பற்பசை விளம்பரத்தில் பல் மருத்துவர் ஒருவர் அந்த பற்பசையை சிபாரிசு செய்வது போல காட்டினார்கள். பல்மருத்துவர் பற்பசையை விளம்பரத்தில் இடம்பெறுவது இந்தியாவைப் பொறுத்தவரையில் அதுதான் முதன்முறை. பல் மருத்துவரே சிபாரிசு செய்தாலும் விற்பனையில் பெரிய மாறுதல் இல்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை- இந்தியாவில் டெண்டிஸ்ட் என்ற மருத்துவரையே சமீபகாலமாகத்தான் கவனிக்க ஆரம்பித்திருக்கிறோம். முந்தின தலைமுறையில் தனது வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து ஓரிருமுறை பல் மருத்துவரிடம் சென்றரிருந்தாலே பெரிய காரியம்தான். அத்தகையதொரு சமூகத்தில் பல்மருத்துவர் சொன்னால் என்ன பெரிய ரியாக்‌ஷன் இருக்கும்? யாருமே திரும்பிப்பார்க்கவில்லை. விளம்பரக்காரர்கள் விடுவார்களா? அந்தப் பல்மருத்துவரின் மகளாக ஒரு சிறுமியை நடிக்க வைத்தார்கள். விளம்பரத்தை பார்ப்பவர்கள் அந்தச் சிறுமியை நம் வீட்டு சிறுமியாக பார்ப்பார்கள் என்பதுதான் காரணம். அது வெறும் விளம்பரம்தான். ஆனால் நம்மையுமறியாமல் ஆழ்மனதுக்குள் நம் வீட்டுச் சிறுமியாக ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட்டை உருவாக்குகிறார்கள். இந்த சிறுமி வந்தபிறகு விற்பனை அதிகரிக்கிறது. பிறகு ஆண் பல் மருத்துவரை மாற்றிவிட்டு பெண் பல் மருத்துவரை வைத்து விளம்பரத்தை ஒளிபரப்பியிருக்கிறார்கள். விற்பனை ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்கிறது.

வெறும் சாதாரண பற்பசை. முப்பது செகண்ட் விளம்பரம். அதற்கே என்னென்னவோ யோசிக்கிறார்கள். எப்படி எப்படியோ ஆராய்ச்சி செய்கிறார்கள். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஒரு அற்புதமான வாழ்க்கை வாய்த்திருக்கிறது. எழுபது அல்லது எண்பதாண்டு காலம் வாழப்போகிறோம். என்னவெல்லாம் செய்யலாம்? அதையெல்லாம் விட்டுவிட்டு எவன் சிக்குவான் சாணியடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் காலங்காலமாக ஒரே ஸ்டைலில். 

வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.