Apr 1, 2014

பாய்மார்களுக்கு வீடு இல்லை

சமீபத்தில் திருக்குர் ஆன் விளக்கவுரை பெங்களூரில் நடந்தது. அல்சூர் தமிழ்ச்சங்கத்தில்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். டாக்டர் ஹபீப் முஹம்மதுதான் விளக்கிப் பேசினார். ஹபீப் முஹம்மது சிறந்த பேச்சாளர். அவரது மானுட வசந்தம் நிகழ்ச்சிகளை யூடியூப்பில் பார்க்கலாம். பாசாங்கில்லாமல் பேசுவார். இசுலாமியர்கள் செய்வது தவறு என்றால் அதைத் தவறு என்று ஒத்துக் கொள்வதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. அதை வெறித்தனமாக மறுத்து கொடிபிடிக்க மாட்டார். பெங்களூர் கூட்டத்திலும் அப்படித்தான் பேசினார். ஆனால் கூட்டத்திற்கு சற்று தயக்கத்துடன்தான் சென்றிருந்தேன். பெங்களூர் பாய்மார்கள் எப்படி இருப்பார்களோ என்ற பயம்தான். ஆனால் பெரும்பாலான இடங்களில் இருக்கும் பாய்மார்களைப் போலவேதான் இருந்தார்கள். 

நாம்தான் இந்த கூட்டத்திலேயே பெரிய அப்பாடக்கர் என்ற நினைப்பு வரும் போதெல்லாம் யாராவது சம்மட்டியால் நம் பின் மண்டையை பிளப்பதுதான் நல்லது. அப்படித்தான் பிளந்தார்கள். என்னைத் தவிர வேறு யாருமே மாற்று மதத்தினராக இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னோடு சேர்த்து குறைந்தது நாற்பது பேராவது கிறிஸ்தவர்களும், இந்துக்களும் இருந்தார்கள். இந்துக்கள் குங்குமம் சந்தனத்தோடு வந்து அமர்ந்திருந்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் அதிகமாகக் கேள்வி கேட்டவர்களும் அவர்கள்தான். எந்தச் சலசலப்பும் இல்லாமல் வெகு அமைதியாக நிகழ்ச்சி முடிந்தது. இசுலாம் பற்றி வேறொரு புரிதலை உருவாக்கிய நிகழ்வு இது. இப்படியான உரைகள் நடக்கும் போது தகவல் சொல்லி அனுப்புங்கள் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.

இது நடந்து ஓரிரண்டு வாரங்கள் இருக்கும். 

இந்த வாரத்தில் நண்பன் ஒருவனின் தங்கைக்கு வீடு தேட வேண்டியிருந்தது. இசுலாமிய நண்பன்தான். சாதிக். பால்ய கால நண்பன். தங்கைக்குத் திருமணம் முடிந்துதான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தான். இப்பொழுது வயது முப்பதைத் தாண்டிவிட்டதால் டென்ஷனாகியிருந்தான். சந்திக்கும் போதெல்லாம் நானும் உசுப்பேற்றிக் கொண்டிருந்தேன். நாற்பதைத் தாண்டியும் திருமணம் ஆகாத ஆட்களின் கதைகளையெல்லாம் நாசூக்காக அவனுக்குச் சொல்லும் போது காலில் சுடுநீரை ஊற்றியது போல பதறுவான். இப்படி அவனுக்கு பயம் காட்டுவதில் ஒரு சந்தோஷம் எனக்கு. குரூர சந்தோஷம். அவனும் சளைத்தவனில்லை. வேறு எதையாவது சொல்லி எனக்கு பயம் காட்டுவான். மனதுக்குள் எந்தக் கள்ளமும் இருக்காது. விளையாட்டுக்கான பயம் காட்டுதல் இது.

நல்லவேளையாக சமீபத்தில் அவனது தங்கைக்கு ஒரு மாப்பிள்ளை அமைந்துவிட்டது. மாப்பிள்ளை பெங்களூரில் வேலையில் இருக்கிறார். அதே குட்டை. இன்பர்மேஷன் டெக்னாலஜி. திருமணத்திற்கு பிறகு அவர்கள் தங்குவதற்கு வீடு தேடித் தர முடியுமா என்று கேட்டிருந்தான். இது என்ன பெரிய விஷயம்? இந்த ஊரின் பெரும்பாலான இடங்களில் இரு படுக்கையறைகள் கொண்ட வீட்டுக்கான வாடகை பன்னிரெண்டாயிரத்திற்கு மேலாக இருக்கிறது என்பதால் எங்கள் ஏரியாவிலேயே தேடிவிடலாம் என்று சொல்லியிருந்தேன். இங்கு ஒன்பதாயிரம்தான். இப்பொழுதுதான் நிறைய வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் வாடகை சற்று குறைவு. 

இந்த ஏரியாவில் இருக்கும் பெரும்பாலான உரிமையாளர்களும் தெரிந்தவர்கள்தான். அதிகபட்சம் நூறு உரிமையாளர்கள் இருப்பார்கள். அதில் வாடகைக்கு விடுவதற்கு தோதாக காலி வீடுகளை வைத்திருப்பவர்கள் நான்கைந்து பேர்கள்தான். சனி, ஞாயிறுகளில் தேடினால் பிடித்துவிடலாம். விசாரிப்பதற்காகச் சென்றிருந்தேன். இசுலாமியர்களுக்கு வீடு பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்கிறார்கள். 

‘எதுக்கு சார் ரிஸ்க்?’ ‘இல்ல சார்...முஸ்லீம்ஸ் பேடா’, ‘லேது பாபு...இக்கட ஒன்லி வெஜிட்டேரியன்’, ‘அச்சா நஹி ஹோத்தா’ என்று மாற்றி மாற்றி ஒரே பதிலைத்தான் சொன்னார்கள். 

“அந்தப் பொண்ணு எங்க ஊர்தாங்க..டாக்டர்...மாப்பிள்ளை சாஃப்ட்வேர்...அவங்க அண்ணனை நல்லாத் தெரியும்” என்று எதைச் சொன்னாலும் மறுக்கிறார்கள். பெங்களூரில் இசுலாமியர்களுக்கு வீடு கிடைப்பது சிரமம் என்று சொல்லவில்லை. ஆனால் எங்கள் ஏரியா போன்ற குறைவான வீடுகள் இருக்கும் பகுதிகளில் மிகச் சிரமம். இது ஒரு பொதுவான மனநிலை. இசுலாமியர்கள் வீடுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிறார்கள், அவர்கள் வீட்டில் எப்பொழுதும் நான்கைந்து பேர் இருந்து கொண்டே இருப்பார்கள் என்கிறார்கள், அடிக்கடி அசைவம் சமைப்பார்கள் என்கிறார்கள்- இதெல்லாம் நாசூக்கான மறுப்புகள்.

மிக மூர்க்கமான மறுப்புகளில் என்னென்ன காரணங்களைச் சொல்வார்கள் என்பதைத் தனியாக எழுத வேண்டியதில்லை. நீங்களே அனுமானித்துக் கொள்ளலாம்.

மாலை நேரத்தில் சாதிக்கின் மாப்பிள்ளையை அழைத்திருந்தேன். தூங்கிக் கொண்டிருந்தார். ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வீடு கிடைக்கவில்லை எனச் சொல்லலாம் என்றிருந்தேன். அதற்குள் அவராகவே பிடிஎம் லே-அவுட்டில் வீடு பார்த்து முன்பணம் கொடுத்துவிட்டதாக  சொன்னார். பதினாறாயிரம் வாடகை. ஒன்றரை லட்சம் முன்பணம். இரண்டு பேருக்கு பதினாறாயிரம் அதிகம்தான். ஆனால் வேறு வழியில்லை. ‘சரிங்க ரொம்ப சந்தோஷம்’ என்று சொல்லித் துண்டித்துக் கொண்டேன்.

மதம் பார்த்து வீடு கொடுப்பது, சாதி பார்த்து வீட்டுக்குள் உள்ளே விடுவது என்பதெல்லாம் காலங்காலமாக ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. எங்கள் வீட்டுக்கு யார் புதிதாக வந்தாலும் ‘நீங்க என்ன வகுப்பு’ என்று எங்கள் ஆயா கேட்டுவிடுவார். வகுப்பு என்று அவர் கேட்பது சாதியைத்தான். அவர் மட்டுமில்லை அவர் கும்பிடும் சாமியே அப்படித்தான் இருந்திருக்கிறார்- சாதி பார்த்துத்தான் வீட்டுக்குள் அனுமதித்திருக்கிறார்.

நந்தனாரைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். புலையர் சாதியைச் சார்ந்தவர்- பறையர். அந்தக் காலத்தில் ஆதனூர் என்ற ஊரில் இருந்த புலையர் குடியிருப்பில் வாழ்ந்து வந்தவர். அவருக்கு தில்லை நடராசனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் சாதி தடுத்திருக்கிறது. ‘நாளைக்கு போவேன், என் நடராசனைப் பார்க்க நாளைக்குப் போவேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். இப்படியே சொல்லிக் கொண்டிருந்ததால் அவருக்கு ‘நாளைப் போவார்’ என்ற பெயரும் உண்டு. சிதம்பரத்துக்குச் சென்றவர் கோவிலுக்குள் செல்லாமல் கோவிலையே சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த சிவபெருமான் அவரது கனவில் வந்து  ‘உன்னைய பார்த்தா பாவமா இருக்கு...சரி உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன்..ஆனா அது அவ்வளவு ஈஸி இல்லை’ என்று சொல்லி, 

‘இப்பிறவி போய் நீங்கி
எரியிடை நீ மூழ்கி
முப்புரிநூல் மார்பருடன்
முன் அணைவாய்’  என்றிருக்கிறார்.

புரிகிறதா? 

தீயில் மூழ்கி இந்தப் பிறவியை அழித்துக் கொண்டு மீண்டும் எழும் போது நெஞ்சில் பூணூலுடன் வெளியில் வருவாய்- அப்பொழுது என்னைப் பார்க்க உள்ளே வா என்று சொல்லியிருக்கிறார் நடராசர். சாமியே சொல்லிவிட்டது. விடுவார்களா? மூன்றாயிரம் அந்தணர்கள் சேர்ந்து கோவிலின் தென்புறத்தில் நெருப்புக்குழியை அமைத்து அதில் நந்தனார் உள்ளே இறங்க ஏற்பாடு  செய்தார்கள். நந்தனார் நெருப்பில் மூழ்கி எழுந்த போது பூணூலுடன் வெளியே வந்தாராம். அந்தணர் ஆகிவிட்டார் அல்லவா? பிற அந்தணர்களுடன் சேர்ந்து கருவறைக்குள் சென்றவர் சென்றவர்தான். திரும்பி வரவே இல்லை. 

எப்படி வருவார்?