Apr 30, 2014

வேலைக்கு போகிற பொம்பளையா?

முன்பெல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு ரெடி ஆகிவிட்டால் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். பத்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் போதும். அப்பொழுதுதான் சகபாடினிகள் அலுவலகம் வந்து சேர்வார்கள். அதனால் அவசரம் எதுவும் இல்லை. கிடைக்கும் ஒரு மணி நேரத்தில் நான்கைந்து பாடல்களை சன் மியூசிக்கில் பார்த்துவிடலாம். கேடிவியில் ஒரு படத்தின் கால் வாசியை பார்த்துவிடலாம். அவசர அவசரமாக தெலுங்குப் பாடல் ஒன்றின் அசைவுகளையும், யாராவது ஒரு ஹிந்தி நடிகையையும் சேனல் மாற்றும் சாக்கில் சில நிமிடங்களுக்கும் விழுங்கிவிட்டுக் கிளம்பினால் ஒரு திருப்தி- ஒரு நாளுக்கான எனர்ஜி.

சில மாதங்களாக அதற்கெல்லாம் சாத்தியமில்லாமல் இருந்தது. புது மேனேஜர்தான் காரணம். ‘புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுக்கிறான்’ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் இப்பொழுது கேள்விப்பட்டுக் கொள்ளுங்கள். இந்த மேனேஜர் கடுசுக்கு வெளுத்தார். வெளுக்கிறாள் என்று சொல்லாம்தான். ஆனால் மரியாதையாகவே சொல்லிவிடலாம். என்னைவிட ஒரு வருடம்தான் வயதில் சீனியர். பொறியியல் படிப்பும் இல்லை, எம்.சி.ஏவும் இல்லை. ஏதோ இளங்கலைப் படிப்புதான் படித்திருக்கிறார். ஆனால் மேனேஜர் ஆகிவிட்டார். இது ஒன்றும் சாதாரணக் காரியம் இல்லை. குறுக்கு வழியில் வந்திருப்பார் என்றெல்லாம் தப்புக்கணக்கு போட வேண்டியதில்லை. திறமைசாலிதான். எவ்வளவு சிக்கலான பிரச்சினை என்றாலும் அவ்வளவு நேர்த்தியாக கையாள்வார். அதைவிட முக்கியம் தனக்குக் கீழானவர்கள் எந்தச் சமயத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. தனியாக அழைத்துத் திட்டுவாரே தவிர கூட்டத்தில் ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. தனது பணிக்காலத்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தவறாமல் ஒரு பதவி உயர்வு வாங்கியிருக்கிறார். இன்னும் பத்து வருடங்களில் நிச்சயமாக வெகு உயரத்திற்கு போய்விடக் கூடும்.

வழக்கமாக தினமும் எட்டரை மணிக்கு அலுவலகம் வந்துவிடுவார். அரை மணி நேரம் தாமதமாக வருவதாக இருந்தால் ‘Sorry, I will be late today and will reach office at 9 AM' என்று மின்னஞ்சல் அனுப்பி வைத்துவிடுவார். ஒன்பது மணியே தாமதம் என்றால் வழக்கமாக பதினோரு மணிக்கு அலுவலகம் செல்லும் நானெல்லாம் மன்னிப்புக் கடிதம்தான் அனுப்ப வேண்டும் போலிருக்கிறது. 

பெண்கள் எட்டரை மணிக்கு அலுவலகம் வருவது ஒன்றும் அத்தனை சுலபமான இல்லை. விடிந்தும் விடியாமலும் எழுந்து, சோறாக்கி, தான் தயாராகி, குழந்தைகளைத் தயார்படுத்தி- என்னதான் வேலைக்காரர்கள் இருந்தாலும் சிரமமான காரியம்தான். இருபத்தி நான்கு மணிநேரமும் வீட்டிலேயே இருக்கும் பெண்களிடம் கேட்டால் கூட ‘நாய்க்கு வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லை’என்கிற கணக்காக துளி ஓய்வு இல்லை என்பார்கள். அது வாஸ்தவம்தான். பெண்களுக்கு மட்டும் எந்நேரமும் வேலை இருந்து கொண்டே இருக்கிறது. பெண்களின் மனநிலையே அப்படித்தான். இழுத்துப் போட்டுக் கொண்டு எதையாவது செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலையும் இல்லையென்றால் குறைந்தபட்சம் ஒட்டடை அடிக்கும் வேலையையாவது செய்கிறார்கள். அதுவே வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் பெரும்பாலான வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு அலுவலகத்திலும் கண்ட நாய்களின் பற்களில் விழ வேண்டும். ஒரு பதவி உயர்வு வந்தால் ‘அவ எப்படி வாங்கினான்னு தெரியாதா’ என்று சர்வசாதாரணமாக பேசிவிடுகிறார்கள். இது அரசுப் பணிகளில்தான் என்று இல்லை. எந்தத் துறையாக இருந்தாலும் அதுதான் நிலைமை. 

முந்தைய நிறுவனத்தில் என்னுடன் வேலை செய்த ரஞ்சிதா என்ற பெண் தமிழ் சினிமாவில் நடிக்கச் சென்றுவிட்டாள். அவள் ராஞ்சிக்காரப் பெண். டோனியின் பள்ளி ஜூனியரும் கூட. தமிழில் ஒரு படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தாள். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தாள். அதன் பிறகு என்ன ஆனாள் என்று தெரியவில்லை. அவள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக முயன்றுகொண்டிருந்த போது நானும் தமிழ்க்காரன் என்பதாலோ என்னவோ கொஞ்சம் அன்பாகப் பேசுவாள். அவள் பட்ட சிரமங்களில் இருபது சதவீதம்தான் எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் அதிலேயே ஒரு நாவல் எழுதலாம். 

இந்த சினிமா விவகாரம் முக்கியம் இல்லை. அவள் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டாள் என்ற போது அதுதான் பிரதானச் செய்தியாக அலுவலகத்தில் பரவியது. அவள் வாய்ப்பு வாங்கியது குறித்தும், இனி எப்படி அவள் வாழ்க்கை இருக்கப் போகிறது என்பது குறித்தும் ஆளாளுக்கு ஒரு கதை எழுதினார்கள். அத்தனையும் நாராசமான கதைகள். இந்தக் கதைகளை பேசியவர்கள் யாருக்குமே கையாலாகாது என்பதுதான் பிரச்சினை. சினிமாவில் நடிப்பதற்கு அல்லது மாடலிங்கில் வாய்ப்பு பெறுவதற்கு கையாலாகாது என்று சொல்லவில்லை. ரஞ்சிதாவிடம் நேருக்கு நேர் நின்று பேசுவதற்கு கூட கையாலாகாது. அந்தக் கையாலாகத்தனம்தான் ஏதேதோ பேசச் செய்தது.

ஒன்று, அப்படி கதை கட்டுவார்கள் அல்லது ஏதாவது ஒரு விதத்தில் அந்தப் பெண்ணிடமே அவளை மட்டம் தட்டுவார்கள். நாங்கள் குழந்தைகளாக இருந்த போது ஒரு மெத்தப் படித்த மேதாவி  எங்கள் அம்மாவிடம் வந்து ‘வேலைக்கு போகிற பெண்களின் குழந்தைகள் எல்லாம் உருப்படுவதேயில்லை’ என்று பேசினாராம். அப்பொழுது அம்மா அரசுப்பணியில் இருந்தார். அதன் பிறகு ஒவ்வொரு தடவையும் நான் ஏதாவது தவறு செய்யும் போதும் அல்லது மதிப்பெண் குறைவாக வாங்கும் போதும் அந்த மனிதரின் பெயரைச் சொல்லித்தான் திட்டுவார். ‘அவங்க எல்லாம் பேசுனது சரிதான்னு நிரூபிச்சுடுவ போலிருக்கே’ என்பதுதான் அந்தத் திட்டாக இருக்கும். அந்த ஆளின் பெயரை இப்பொழுது சொன்னாலும் கூட அம்மாவுக்கு பயங்கரக் கோபம் வந்துவிடும். சின்ன விவகாரம்தான். ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காத தழும்பாக அழுந்தக் கீறிவிடுகிறார்கள்.

இதையெல்லாம் எழுதுவதால் நான் ஒன்றும் யோக்கியசிகாமணி என்று அர்த்தம் இல்லை. ஏதோ ஒரு பிரச்சினையில் ‘தேவைன்னா நீ வேலையை ராஜினாமா செஞ்சுட்டு வீட்டை பார்த்துக்க’ என்று பல்லைக் காட்டிவிட்டேன். மனதுக்குள் இருப்பதுதானே வெளியில் வரும்? அப்பொழுது அவள் எதுவும் பேசவில்லை. இரண்டு நாட்கள் கழித்து ‘நீங்கள் எழுதறது படிக்கிறதை எல்லாம் நிறுத்திட்டு குடும்பத்தையும் கவனிச்சுங்கன்னு சொல்லட்டுமா?’ என்றாள். நாம் எதை லட்சியமாக நினைத்துச் செய்கிறோமோ அதை நிறுத்தச் சொல்வதுதான் மிகப் பெரிய அடியாக இருக்க முடியும். அதன் பிறகு அவளின் வேலையைப் பற்றி பேசுவதேயில்லை.

காலையில் நாம் எழுகிறோமோ இல்லையோ மனைவி நேரத்தில் எழுந்துவிட வேண்டும். மாலையில் நமக்கு அலுவலகத்தில் தாமதமாகலாம். ஆனால் மனைவி சரியான நேரத்தில் வீட்டுக்கு வந்து சமையல் செய்துவிட வேண்டும். வீடு சுத்தமாக இல்லையென்றால் அவள்தான் பொறுப்பு. இப்படி எத்தனையோ சில்லரைத்தனங்கள் அவ்வப்பொழுது இளித்துக் கொண்டு நிற்கின்றன. இதெல்லாம் காலங்காலமாக ரத்தத்திலேயே ஊறிக் கிடக்கிற குணங்கள். அமத்தாவுக்கு கிடைத்ததைவிட அம்மாவுக்கு ஒரு படி சுதந்திரம் கூடுதலாகக் கிடைத்திருக்கும். அம்மாவுக்குக் கிடைத்ததைவிட துளி கூடுதல் சுதந்திரத்தை என் மனைவி பெற்றிருக்கக் கூடும். இது கூட ஒரு நம்பிக்கைதான். கூடுதல் சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்பதை அவள்தான் சொல்ல வேண்டும்.

எதற்கு இந்த விவகாரம் என்றால்-

நேற்று மேனேஜர் ராஜினாமா செய்துவிட்டார். வேறு நிறுவனத்திற்கு செல்கிறார் என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால் அது காரணம் இல்லை. வீட்டிலேயேதான் இருக்கப் போகிறாராம். எல்லோரையும் அழைத்து பதினைந்து நிமிடங்கள் பேசினார். அவரது குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சினை. அந்தக் குழந்தைக்கு ஏதோ ஒரு விட்டமின் உருவாகுவதில் பிரச்சினை. பிறப்பிலிருந்தே சிறு சிறு பிரச்சினைகளை அது உருவாக்கியிருக்கிறது. இனி தன் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் கொடுப்பது போல விட்டமின் ஊசியை இனி வாழ்நாள் முழுமைக்கும் தனது குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது அவரையும் மீறி அழுதுவிட்டார். 

சரசரவென்று ஏறிய அவரது graph அப்படியே உறைந்து நிற்கப் போகிறது. இங்கு குடும்பத்திலும், பிள்ளைகளுக்கும் ஏதேனும் பிரச்சினையென்றால் பெண்கள்தான் தோள் கொடுக்க வேண்டியிருக்கிறது. அவள் எவ்வளவுதான் உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும் கீழே இறக்கிவிடுகிறார்கள். மேனேஜரும் விதிவிலக்கு இல்லை. தனது அத்தனை லட்சியங்களையும், திறமைகளையும் ஒரு மேசைக்குள் போட்டு பூட்டிவிட்டு சாவியைக் ஒப்படைத்துவிட்டு வெளியேறப் போகிறார். அவ்வளவுதான். 

‘எல்லாவிதமான வாய்ப்புக்களையும் யோசித்துப் பார்த்துவிட்டோம், இனி வேலையை விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றார். அவர் பேசுவதைக் கேட்பதற்கு சங்கடமாக இருந்தது. எங்களிடம் வேறு கேள்விகளும் இல்லை. அமைதியாக நின்று கொண்டிருந்தோம். ‘இதுவரையிலான உங்களின் அத்தனை ஒத்துழைப்புகளுக்கும் நன்றி’ என்று சொல்லிவிட்டு மீட்டிங் அறையை விட்டு வெளியேறினார். நாங்கள் சில வினாடிகள் ஆளாளுக்கு எங்கள் முகத்தை பார்த்துக் கொண்டோம். யாரும் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை. தேனீர் பருகுவதற்காக சாலையோரக் கடைக்கு நகர்ந்தோம். வெளியில் கோடை கொளுத்திக் கொண்டிருந்தது. 

Apr 28, 2014

உனது ஆசை தீர்ந்ததா?

புதிதாக ஒரு மனிதர் அறிமுகமாகிறார் என்று வைத்துக் கொள்வோம். சம்பிரதாயமான அறிமுக உரையாடலுக்குப் பிறகு அரசியல், நாட்டு நடப்பு, சினிமா, கிசுகிசு- இந்த ஏரியாக்களைத் தவிர்த்துவிட்டு பேசுவதற்கு நம்மிடம் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை. ஒரு பெரியவர்தான் கேட்டார். அவருக்கு அறுபத்தைந்து வயது இருக்கும். தெரிந்தவர்தான்- பக்கத்து ஊர்க்காரர். வாக்களித்துவிட்டு நான் பைக்கில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த போது எதிர்ப்பட்டார். வாக்களித்துவிட்டு வருபவரிடம் வேறு எதைக் கேட்பது? ‘யார் ஜெயிப்பாங்க?’ என்றேன். சிக்கிக் கொண்டேன். நான் கேட்ட கேள்விக்கு அவருடைய பதில்தான் மேலே அவர் கேட்ட கேள்வி. எடக்கு மடக்கான ஆள். 

அவரிடம் சிக்கிக் கொள்ள எனக்கு தலையெழுத்தா?

கருத்துக்கணிப்பு நடத்தும் ஆசையில்தான் கேட்டேன். எங்கள் ஊரில் இந்த முறை முரசு பெரும்பலத்தைக் காட்டிவிடும் என்று பேசிக் கொள்கிறார்கள். தினேஷ்குமார் என்பவர்தான் வேட்பாளர். முப்பத்தைந்து வயதுதான் இருக்கும். முரசு வெல்கிறதோ இல்லையோ கடும் வேலை செய்திருக்கிறார்கள். கோபிச்செட்டிபாளையம் எப்பொழுதுமே அதிமுகவின் கோட்டை. எனக்கு நினைவு தெரிந்து ஒரு முறை மட்டும்தான் திமுக வென்றது. அது 1996 ஆம் ஆண்டு. திரும்பத் திரும்ப வென்று கொண்டிருந்த அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையனை எதிர்த்து நின்ற ஜி.பி.வெங்கிடு வென்றார். அப்பொழுது வெங்கிடு டீக்கடை நடத்திக் கொண்டிருந்தார். டீக்கடைக்காரர்களுக்கும், பெட்டிக்கடைக்காரர்களுக்கும் கூட ஸீட் கிடைக்கக் கூடிய காலம் அது- தேர்தலில் வாய்ப்பு கேட்பதற்கு கட்சிக்காரன் என்ற தகுதி இருந்தால் போதும். இப்பொழுதுதான் காசு வைத்திருப்பவனுக்குத்தான் ஸீட்டை விற்கிறார்கள். 

வெங்கிடு வென்றவுடன் ‘வட்டிக்கடையை பெட்டிக்கடை வென்றது’ என்று தானியில்(auto) ஒலிபெருக்கியைக் கட்டிக் கொண்டு வீதிவீதியாகச் சென்றார்கள். வெகுகாலத்திற்கு பிறகு  எங்கள் ஊரில் திமுகவினர் ருசித்த வெற்றி அது. அந்த ஒரு முறைதான் திமுக வென்றது. பிறகு 2001 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவிற்கே தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள். அதன் பிறகு இன்றுவரைக்கும் அதிமுகதான் வென்று கொண்டிருக்கிறது. அப்பேற்பட்ட கோபியில் கூட முரசுக்கு நிறைய வாக்குகள் கிடைக்கும் என்பதால் திருப்பூர் இந்த முறை தேமுதிகவுக்குத்தான் என்று யாரோ சொன்னதை நம்பித்தான் அந்தப் பெரியவரிடம் வாய் கொடுத்துவிட்டேன்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும். ஐந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜி.பி.வெங்கிடு மீண்டும் டீக்கடைக்கே வந்துவிட்டார். இப்பொழுதும் எங்கள் ஊர் மார்க்கெட்டுக்கு அருகில் இருக்கும் அவரது டீக்கடையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அரசியல் அகராதிப்படி சொன்னால் பிழைக்கத் தெரியாத மனுஷன்.

அரசியல் போதும். பெரியவரின் கேள்விக்கே போய்விடலாம். 

அவர் கேட்ட கேள்வி சரிதான். யோசித்துப் பார்த்தால் பெரியவரின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஐடியில் வேலை செய்பவராக ‘ப்ராஜக்ட் எப்படிப் போகுது?’ ‘க்ளையண்ட் யாரு?’ என்று மூன்று நான்கு கேள்விகளைக் கேட்கலாம். விவசாயியாக இருந்தால் ‘ஊர்ல மழை பெஞ்சுதுங்களா?’ என்று கேட்கலாம். ஆனால் யாராக இருந்தாலும் மொத்தம் ஐந்து நிமிடங்கள்தான். அதற்கு மேல் இரண்டு பேர்களில் யாராவது ஒருவருக்கு போரடித்துவிடும். அவர் தென்னையின் வகைகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் நமக்கு மண்டை காயக் கூடும். ‘பின் நவீனத்துவம் என்ன சொல்லுதுன்னா...’என்று நாம் ஆரம்பித்தால் அவர் அலறக் கூடும். இப்படி எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் இருதரப்பும் ஆர்வத்துடன் பேசக்கூடிய சப்ஜெக்ட் கைவசம் எதுவும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். 

ஆனால் சில மனிதர்களுக்கு இந்தத் திறமை கைவரப்பெற்றிருக்கிறது. அதுவும் தியானம், யோகாசனம் என்றிருப்பவர்களிடம் இந்தத் திறமை துளி அதிகமாகவே இருக்கும் போலிருக்கிறது. கொஞ்சம் பேசத் தெரிந்தவர்களாக இருந்தால், தாங்கள் கற்றுக் கொள்ளும் சூட்சமங்களை தினசரி வாழ்க்கையின் சம்பவங்களோடு அழகாக இணைத்துவிடுகிறார்கள். 

சின்ன மாமனார் அப்படிப்பட்டவர்தான். உறவு முறையில்தான் சின்ன மாமனார். ஆனால் வயதானவர் இல்லை. நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த எங்கள் திருமணத்தின் போது ரஜினி ஸ்டைல் செய்து கொண்டிருந்தார். மாமனார் என்றால் நரைத்த முடியோடுதான் இருப்பார்கள் என்ற எனது கற்பனைக்கு முதல் சம்மட்டி அடி அடித்தவர் இவர்தான். முடி நரைக்கவில்லை என்பதால் நீங்கள் மாமனார் இல்லையென்று சொல்ல முடியுமா? அமைதியாக ஏற்றுக் கொண்டேன். என்னைவிட சில வருடங்கள்தான் வயதில் மூத்திருப்பார். வானதி ஸ்ரீனிவாசனும் அவரும் வகுப்புத் தோழர்கள் என்பது இந்த இடத்தில் ஒரு உபரித் தகவல். சில்லிச் சிக்கன் எந்தக் கடையில் சுவையாக இருக்கும், மட்டன் ஃபிரை இந்த நேரத்தில் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்கள் அவரிடம் கொட்டிக் கிடந்தன. 

ஒரு சமயம் ‘நான்-வெஜ் சாப்பிடுவீங்களா?’ என்று யாரோ கேட்ட போது ‘கொஞ்சமா சாப்பிட மாட்டேன்’ என்று ஜெர்க் கொடுத்தார். 

அப்படி இருந்தவர் திடீரென்று யோகாசனம், தியானம் என ஆளே மாறிவிட்டார். வேதாத்ரி மகரிஷியின் வகுப்புகளுக்குச் செல்கிறார். அந்தப் பாடங்களில் தேர்வுகள் எழுதுகிறார். பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்கிறார். இதெல்லாம் ஓரிரண்டு ஆண்டுகளாகத்தான். புலால் உண்பதில்லை என்று ஆரம்பித்து தன்னைத்தானே நிறைய மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி மாறுகிறவர்கள் எல்லோரும் மனப்பூர்வமாக மாறுகிறார்கள் என்று சொல்ல முடியாது. வெளியே மட்டும் மாற்றிக் கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் அப்படியேதான் இருப்பார்கள். அதே வன்மம், அதே பகைமை, அதே பேராசை. இந்தச் சமூகமும் நம்மை மாறுவதற்கு விடுவதில்லை. அன்பேசிவம் படத்தில் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சொல்லிக்கொண்டே போட்டுத்தள்ளும் நாசர் மாதிரிதான் பலருக்கும் வாய்க்கிறது. ஆனால் சின்ன மாமனார் நிறையவே மாறியிருக்கிறார். உள்ளுக்குள் பக்குவமடைபவர்களிடம் ஒரு தேஜஸ் வரத் துவங்கிவிடும். அதை அவர்கள் அறிகிறார்களோ இல்லையோ- நுண்மையாக கவனிக்கக் கூடிய அடுத்தவர்களால் அறிய முடியும். 

சமீபத்தில் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘எண்ணம் போல வாழ்க்கை’ என்று ஆரம்பித்தார். சில பத்திகளுக்கு முன்பாக பேசினோம் அல்லவா? பொதுவான சப்ஜெக்ட். அதுதான். இப்படி யாராவது ஆரம்பித்தால் அல்லது வெறும் தியரிட்டிக்கலாக பேசினால் கொட்டாவிதான் வரும். அதுவும் பூரியை விழுங்கிவிட்டு கோடைக்காற்று வாங்கிக் கொண்டு அமர்ந்திருக்கும் இரவு நேரத்தில் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இவர் நேக்குத் தெரிந்தவர்- தன் சுய அனுபவத்துடன் இணைத்துவிட்டார். வாயைப் பிளந்து கொண்டு கேட்க ஆரம்பித்துவிட்டேன்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு விபரீத ஆசை வந்திருக்கிறது. வேறொன்றும் இல்லை- ஒரு விபத்தை நேரடியாக பார்க்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. நம்மில் பெரும்பாலானவர்கள் விபத்து நடந்து முடிந்து சில வினாடிகள் அல்லது நிமிடங்களுக்குப் பிறகு பார்த்திருப்போம். ஆனால் லைவ்வாக பார்த்தவர்கள்? மிகக் குறைவானவர்கள்தான் இருக்க முடியும் என நினைக்கிறேன். சி.மா அதைத்தான் விரும்பியிருக்கிறார். இது ஆழ்மனை ஆசைதானே? வெளியில் யாரிடமும் சொல்லவும் முடியாது. சொன்னால் என்ன நினைப்பார்கள்? அதனால் கமுக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் அந்த ஆசை திரும்பத் திரும்ப மனதுக்குள் வந்து போயிருக்கிறது. 

நல்ல ஆசைகள் சீக்கிரம் நிறைவேறாது. ஆனால் தீய விருப்பங்கள் சீக்கிரம் நிறைவேறிவிடும். 

அன்று அப்படித்தான் நிறைவேறியிருக்கிறது. ஏதோ ஒரு காரியத்திற்காக மனைவியை பைக்கில் வைத்துக் கொண்டு பயணித்திருக்கிறார். பாதி வழி தாண்டிய பிறகுதான் சில டாக்குமெண்ட்களை வீட்டிலேயே மறந்து போனது ஞாபகம் வந்திருக்கிறது. வீட்டிற்குச் சென்றுதான் எடுத்து வர வேண்டும். திரும்பிச் சென்று எடுத்து வரலாம் என்று வண்டியைத் திருப்பியிருக்கிறார்கள். ஒரு ஐந்து நிமிடத் தூரம்தான் சென்றிருக்கிறார்கள். ஒரு ஆஜானுபாகுவான இளைஞன் -இருபத்தைந்தைத் தாண்டியவன்- எங்கேயோ பார்த்தவாறு துள்ளலாக சாலையைத் தாண்டியிருக்கிறான். அவனுக்கு என்ன நினைவுகளோ? என்ன பிரச்சினைகளோ. அவன் சாலையை கவனிக்கவில்லை போலிருக்கிறது. ஒரு க்ஷணம்தான். அதே சாலையில் வேகமாக வந்த பேருந்து இடித்துத் தள்ளியிருக்கிறது. துளி சத்தம் இல்லை. துடிப்பு இல்லை. அடங்கிவிட்டான். அத்தனையும் இவரது கண் முன்பாகவே நடந்திருக்கிறது. இறந்து போனவனின் குடும்பம், வாழ்க்கை, ஆசைகள் என அத்தனையும் சில வினாடிகளுக்கு மனதில் வந்து போயிருக்கிறது. 

ஒரு மனிதன் முடிந்து போவது என்பது ஒரு சகாப்தம் முடிந்து போவது. இல்லையா? அவனது அத்தனை எண்ணங்களும், ஆசைகளும் காற்றில் கரைந்து போகின்றன. அந்தக் கணம் ஒரு முற்றுப் புள்ளி ஆகிவிடுகிறது.

சின்ன மாமனார் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றிருக்கிறார். இறந்து போனவனின் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. அது என்னனென்னவோ ஓவியங்களைத் அந்த கருநிற தார்ச்சாலையில் எழுதிக் கொண்டிருக்கிறது. இவர் ஓடிய ரத்தத்தின் கறையைப் பார்த்திருக்கிறார். ‘உனது ஆசை தீர்ந்ததா?’ என்று கேட்பது போலவே இருந்திருக்கிறது. இவருக்கு விரல்கள் சில்லிட்டுப் போயிருக்கின்றன.

‘ரொம்ப கஷ்டமா இருந்துச்சு’ என்று நிறுத்திக் கொண்டார். அவர்தான் நிறுத்திக் கொண்டார். ஆனால் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அந்த இளைஞனின் நினைவுகளைக் கடத்திவிட்டார். யாரோ முகம் தெரியாத மனிதன் தான். வெறும் பத்து நிமிட உரையாடல்தான். ஆனால் அவ்வளவு சீக்கிரம் அவனை மறந்துவிட முடியவில்லை. பேசுகிற மனிதரைப் பொறுத்தும், தொனியைப் பொறுத்தும் சம்பவத்தின் இறுக்கம் கூடி விடுகிறது. இந்தச் சம்பவமும் அப்படித்தான். அந்த இரவு இரவு முழுவதும் அம்மனிதனின் நினைவுகளும் அவனது ரத்தக் கறையுமே கனவுகளாக வந்து கொண்டிருந்தன. நேற்றிரவும் இந்தக் கனவேதான் வந்தது. அந்த ஆஜானுபாகுவான மனிதனின் குழந்தை கதறுவதாக அந்தக் கனவு தொடர்ந்தது. சிறு இடைவெளி கூட இல்லாத தொடர்ச்சியான கதறல் அது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத அழுகையாக இருந்தது. கனவில் நடந்த மற்ற விஷயங்கள் மறந்து போய்விட்டன. ஆனால் அந்தக் குழந்தையின் முகம் மிகத் தெளிவாக நினைவில் இருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் மூன்று வயதுக் குழந்தையின் முகத்தை அச்சு அசலாக அந்தக் கனவுக் குழந்தை பெற்றிருந்தது.

Apr 25, 2014

உங்களுக்கு ரூ.200 கிடைத்ததா?

பெங்களூரிலிருந்து ஊருக்கு வரும் போதெல்லாம் ஒரு ஆஞ்சநேயர் கோவிலைத் தாண்டித்தான் வர வேண்டும். ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில். அந்தக் கோவிலுக்கு முன்பாக இருக்கும் காலி இடத்தில்தான் வண்டியை நிறுத்தி எடுத்து வந்த உணவை உண்போம். பக்தி எல்லாம் எதுவும் இல்லை. அந்த கோவிலுக்கு அருகிலேயே நிறைய குரங்குகள் உண்டு. பையன்களுக்கு குரங்குகளை வேடிக்கை காட்டிக் கொண்டே ஊட்டிவிடலாம் என்பதுதான் முக்கியமான காரணம். 

இந்த இடத்தில் குரங்குகள் இருப்பதால்தான் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள் என்று சொன்னால் அம்மாவும் அப்பாவும் நம்புவதேயில்லை. ஆஞ்சநேயர் இருப்பதால்தான் குரங்குகள் வந்திருக்கின்றன என்பார்கள். மீறிப் பேசினால் திட்டுவார்கள். அதனால் அதற்கு மேல் எதுவும் பேசுவதில்லை. அதுவும் இல்லாமல் சாமிகளை நக்கலடிக்க நான் என்ன பெரியாரா? ஆனானப்பட்ட கருணாநிதியே வெளியே நக்கலடிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் சாய்பாபாவை கூட்டி வைத்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். தம்மாத்துண்டு பீஸான நான் நக்கலடிப்பதெல்லாம் நல்லதுக்கு இல்லை. அதுவும் நெடுஞ்சாலையில் இருக்கும் சாமியைக் கலாய்த்து அவர் கடுப்பாகி காற்றைப் பிடுங்கிவிட்டார் என்றால் அவ்வளவுதான். அந்தப் பாங்காட்டில் அமர்ந்து சக்கரத்தின் மவுத்தில் வாய் வைத்துத்தான் ஊத வேண்டும். 

கோவிலுக்கு வெளியே பல முறை நின்றிருந்தாலும் உள்ளே போனதில்லை. வண்டி நிறுத்தும் இடத்தில் இருந்து பார்த்தால் அனுமர் தெளிவாகத் தெரிவார். நின்ற இடத்தில் நின்று ஒரு சல்யூட் அடித்துக் கொள்வேன். ஆனால் அந்த வழியில் போகும் பெரும்பாலான பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் சற்று வேகத்தைக் குறைத்து ஆஞ்சநேயருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டுப் போவார்கள்.

இந்தப் பகுதிகளில் ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அதிகம் போலிருக்கிறது. அதே போலத்தான் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கும் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலும். ஒரு காலத்தில் இந்த ஆஞ்சநேயர் பயில்வான் சாமியாக இருந்திருக்கக் கூடும். ஒருகாலத்தில் என்ன ஒரு காலத்தில்- இப்பவும் பயில்வான்தான். இல்லையென்றால் சின்னம்மாவையே தன் கோவிலுக்கு வர வைக்க முடியுமா? நம் சின்னம்மாதான். சசிகலா. இரண்டொரு நாட்களுக்கு முன்பாக வந்துவிட்டு போயிருக்கிறார். ஒரு பையில் தேங்காயைப் போட்டு அதைக் கோவிலில் கட்டித் தொங்கவிட்டுப் போனால் வேண்டுதல் நிறைவேறிவிடுமாம். அவருக்கு என்ன வேண்டுதலோ- நம் பத்திரிக்கையாளர்கள்‘தனது தோழி நாற்பதுக்கும் நாற்பதும் வெல்ல சசிகலா வேண்டுதல்’ என்று செய்தி போட்டிருக்கிறார்கள்- அவர் வேண்டிக் கொண்டிருக்கும் போது இவர்கள் தங்களது காதுகளை வைத்துக் கேட்டது போலவே எழுதியிருந்தார்கள்.

ஆஞ்சநேயரை நம்புபவர்கள் எதற்காக ஊர் ஊருக்குக் 200 ரூபாயைக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. மேலிடத்திலிருந்து ஐந்நூறுதான் வந்திருக்கும் போலிருக்கிறது. ஒவ்வொரு ஐந்நூறிலும் மேல்மட்ட பொறுப்பாளருக்கு நூறு. அந்தப் பகுதி பொறுப்பாளருக்கு நூறு. பட்டுவாடா செய்பவருக்கு இன்னொரு நூறு. ஆக முந்நூறு போக மிச்சமிருக்கும் இருநூறு ரூபாய் மட்டும் வாக்காளருக்கு. எலும்புத் துண்டு போல வீசியிருக்கிறார்கள். மா.செக்களிலிருந்து வட்டப்பிரதிநிதி வரைக்கும் கரை வேட்டி கட்டிக் கொண்டு சுற்றுவதற்கு இப்பொழுதுதான் அர்த்தம் தெரிகிறது. செம பூஸ்ட்.

பிற கட்சிகளில் பெரிய பாக்கெட் படைத்த வேட்பாளர்கள் அள்ளி வீசியிருக்கிறார்கள். நீலகிரியில் அட்டகாசமான கவனிப்பு. மற்ற தொகுதிகளைப் பற்றித் தெரியவில்லை. நல்ல சாமியாக இருந்தால் பணம் கொடுத்தவனையெல்லாம் - அவன் எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும் மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும். பார்க்கலாம்.

எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு. ஆனால் அது துளித் துளியாக அவ்வப்போது சிதைந்துவிடுகிறது.

எங்கள் ஊரில் மாரியம்மன் திருவிழாவை வருடாவருடம் நடத்துகிறார்கள். மாரிக்கான அம்மன்- மழை அம்மன். வெட்டினால் பால் வரும் மரங்களான ஆலமரத்தையோ, பாலை மரத்தையோ எடுத்து வந்து அம்மனுக்கு முன்பாக நட்டு ஒரு வாரம் அந்தக் கம்பத்தைச் சுற்றி ஆடுவார்கள். அந்தக்காலத்திலிருந்தே கோடை வெயில் கொளுத்தும் சித்திரை மாதத்தில்தான் கம்பத்திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. வருடாவருடம் நானும் அக்னிக்கும்பம் எடுத்து ஊரைச் சுற்றிவருவேன். ஒவ்வொருவருடமும் மழை தவறாமல் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இந்தத் திருவிழாவை நடத்துகிறார்கள். அக்னிக்கும்பம் எடுப்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை. மதியம் பன்னிரெண்டு மணிவாக்கில் ஊரைச் சுற்ற ஆரம்பித்து மூன்று மணியளவில் ஊர்வலத்தை முடிப்பார்கள். கையில் இருக்கும் கும்பம் முகத்தைக் கருக்கிக் கொண்டிருக்க தார்ச்சாலையின் சூடு வெறும் பாதத்தை பொத்தலிடும். மூன்று மணிநேரங்கள். மழை வருகிறதோ இல்லையோ- எத்தனை சிரமமான காரியமாக இருந்தாலும் நம்மால் அதைச் செய்துவிட முடியும் என்கிற ஒரு நம்பிக்கையை இது கொடுத்துவிடும். அக்னிக்கும்பம், அக்னிக்குண்டம், அலகு குத்துதல் போன்ற சிரமங்கள் யாவுமே மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டும் சைக்காலஜிக்கல் அசைன்மெண்ட்ஸ்தானே?

இந்த வருடமும் கம்பம் நட்டுவிட்டார்கள். மழையைத்தான் காணவில்லை. கடந்த சில வருடங்களைப் பார்க்கும் போது மழை மீதிருந்த நம்பிக்கை சுத்தமாக பொய்த்துவிட்டது. மழை மீதான நம்பிக்கை மட்டும் இல்லை, மாரியம்மன் மீதான நம்பிக்கையும் சேர்த்து பொய்த்துவிட்டது. துளி மழை பெய்வதில்லை. காய்ந்து பிளந்து கிடக்கிறது பூமி. எதற்காக திருவிழாவை நடத்த வேண்டும்? எதற்காக இத்தனை சிரமப்பட வேண்டும்? இந்த வருடமும் கம்பம் நட்டிருக்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் நம்பிக்கை போய்விட்டது. வீட்டில் சொன்னால் திட்டுவார்கள். நாத்திகம் பேசுறியா? என்பார்கள். நாத்திகம் எதுவும் இல்லை. இதெல்லாம் நம்பிக்கைச் சிதைவு. 

சின்னம்மா ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்துவிட்டுச் சென்றார் என்ற செய்தியைப் படித்ததும் இன்னொரு செய்தி ஞாபகம் வந்தது. அது முதல் பத்தியில் சொன்ன தொப்பூர் ஆஞ்சநேயரைப் பற்றிய செய்திதான். இந்த ஆஞ்சநேயர் கோவிலைத் தாண்டி கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய வளைவு இருக்கிறது. அவ்வப்போது விபத்து நடக்கிறது. சென்ற மாதத்தில் கூட கேரளாவிலிருந்து அம்மா, அப்பா, இரண்டு மகன்கள் மற்றும் அப்பாவின் நண்பர் ஆகியோர் காரில் வந்திருக்கிறார்கள். நண்பர்தான் காரை ஓட்டி வந்திருக்கிறார். இந்த இடத்திற்கு வந்தவுடன் பள்ளத்தில் உருண்டுவிட்டது. அதிகாலை மூன்று மணிக்கு விபத்து நடந்திருக்கிறது. ஏழு மணிக்குத்தான் அந்த வழியாகச் சென்றவர்கள் கவனித்திருக்கிறார்கள். சின்னப்பையனும், நண்பரும் மட்டும் தப்பித்துவிட்டார்கள். மற்ற அனைவரும் சின்னாபின்னமாகி இறந்து போனார்கள். தப்பித்த சிறுவனுக்கு நான்கு வயது. குடும்பத்தை இழந்து அநாதையாகிவிட்டான். ஆஞ்சநேயர் நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். விபத்து நடந்த ஓரிரு நாளில் அந்த வழியாகச் சென்றோம். அந்த இடத்தில் வண்டியை நிறுத்தி சிதைந்த காரின் கண்ணாடிச்சில்லுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியின் பெரியவர் ஒருவர் வந்தார். ஆஞ்சநேயர் மீது சின்னம்மாவுக்கு இருக்கும் நம்பிக்கை தொப்பூர்க்காரர்களுக்கு இல்லை போலிருக்கிறது. பேய்தான் அக்கப்போர் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். அவரவருக்கு அவரவர் நம்பிக்கை. 

சரி இருக்கட்டும்.

நேற்று பெங்களூரிலிருந்து வரும் போது கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். கூட்டமே இல்லை. எல்லோரும் வாக்களிக்கச் சென்றிருப்பார்கள் போலிருக்கிறது. பூசாரி மட்டும் இருந்தார். கற்பூரம் காட்டினார். ‘சசிகலா வந்திருந்தாங்களா?’என்று கேட்ட போது ஒரு மார்க்கமாக பார்த்தார். அவர் அப்படிப் பார்க்காமல் இருந்திருந்தால் ‘அவர் கட்டிய தேங்காய் பை எது?’ என்று கேட்டிருப்பேன். ஆனால் அவர் முறைத்த பிறகு கேட்பதற்கு தைரியமில்லை. கட்டப்பட்டிருந்த தேங்காய்ப்பைகளுக்குள் பார்வையை ஓட்டினேன். இருந்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இப்பொழுது இன்னொரு முறை ஆஞ்சநேயரைக் கும்பிட்டுக் கொண்டேன். இந்த இரண்டாவது கும்பிடு ஆஞ்சநேயருக்கான வேண்டுதல். ‘என்னதான் இருநூறு கொடுத்திருந்தாலும் நாற்பதுக்கு நாற்பதெல்லாம் சாத்தியமில்லை ஆஞ்சநேயரப்பா. அவங்க வந்து வேண்டுதல் போட்டுட்டு போய்ட்டாங்க. டார்கெட் மிஸ் ஆச்சுன்னா கண்ணகி நிலைமைதான் உனக்கும். சூதானமா இருந்துக்க’ என்றேன். அநேகமாக ஆஞ்சநேயருக்கு வியர்த்திருக்க வேண்டும். வியாஸராயர் தொண்ணூற்றாறு ஆஞ்சநேயர் கோவில்கள் கட்ட விரும்பி தான் சென்ற இடங்களில் எல்லாம் கட்டியிருக்கிறார். அப்படி கட்டப்பட்டதுதான் இந்தக் கோவிலும். இந்த ஆஞ்சநேயர் காலங்காலமாக இங்கேயே இருந்து பழகிவிட்டார். இப்பொழுது நகரத்தின் நெரிசலுக்குள் தன்னை மூடி வைப்பது மாதிரி ஒரு கணம் நினைத்துப் பார்த்திருப்பார். வியர்த்திருக்கும்.

ஜெய் ஸ்ரீராம் அல்லது ஜெய ஸ்ரீராம்.

Apr 23, 2014

முடிவு ஆகிடுச்சா?

ஸ்திரமான ஆட்சி, வலிமையான அரசு என்றெல்லாம் ஆரம்பித்தால் கடைசியில் அது எங்கே போய் நிற்கும் என்று தெரியும். அதனால் அப்படி வேண்டாம். 

எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சியமைத்துக் கொள்ளட்டும். மோடி, அர்விந்த் கெஜ்ரிவால், மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா அல்லது ராகுல் காந்தி என்று யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகிக் கொள்ளட்டும். ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது போலவே ‘கலைஞர் சுட்டிக்காட்டும் நபரே பிரதமராக’ இருந்து கொள்ளட்டும். எப்படி இருந்தாலும் அமையவிருக்கிற அரசு முழுமையான பலத்துடன் 280க்கும் மேலான உறுப்பினர்களின் ஆதரவுடன், ப்ளாக்மெயில் செய்யப்படாத அரசாக இருந்தால் போதும். அவ்வளவுதான்.

ஒரு முடிவைக் கூட துணிந்து செயல்படுத்த முடியாத, தான் செய்ய விரும்புவதைச் செய்ய இயலாத ஆட்சி அமையுமானால் அது இன்னொரு இருட்டுக்காட்டுக்குள்தான் இந்த தேசத்தை இழுத்துச் செல்லும். 

மிகச்சாதாரணமான ஒரு ஒப்பீட்டைச் செய்து பார்க்கலாம். 2009 ஆம் ஆண்டு கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு வெளியே வந்த மாணவனையும் 2014 ஆம் ஆண்டு கல்லூரியை விட்டு வெளியே வரும் மாணவனையும் ஒப்பிட்டு பார்க்கலாம். வேலை வாய்ப்புகளில் யாருக்கு அதிக வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறீர்கள்? எல்லோருக்கும் தெரிந்த பதில்தான். நிச்சயமாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த மாணவனுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் இருந்தன. இந்த நான்கைந்து ஆண்டுகளில் எந்த நிறுவனமும் மூடப்படவில்லை என்றாலும் வாய்ப்புகள் குறைந்து போக மிக முக்கியமான காரணம் Saturation. தேங்கிப் போயிருக்கின்றன.

புதிதாக படிப்பை முடித்து வருபவர்கள் மட்டுமில்லை- பணி புரிந்து கொண்டிருப்பவர்களுக்கும் கூட வேறு நிறுவனத்திற்கு மாறுவது அத்தனை சுலபம் இல்லை. நாற்பது, ஐம்பது சதவீத சம்பள உயர்வு என்பதெல்லாம் கிட்டத்தட்ட மலையேறி போய்விட்டது. ‘இத்தனை வருட அனுபவம் என்றால் இவ்வளவுதான் சம்பளம்’ என்று நிறுவனங்கள் சொல்லிவிடுகின்றன. முடியாது என்று சொன்னால் அவர்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஜாப் மார்க்கெட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆள் கிடைப்பது ஒன்றும் சிரமம் இல்லை.

என்ன காரணம்? 

கடந்த சில வருடங்களாகவே எந்த நிறுவனமும் தனது பணியாட்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவில்லை. அப்படியே அதிகரித்திருந்தாலும் அது மிகக் குறைவான வேகத்திலேயே நடந்திருக்கிறது. 2000 ஆம் ஆண்டில் மூன்றாயிரம் பணியாளர்களுடன் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையானது 2007 ஆம் ஆண்டில் நாற்பதாயிரத்தை தொட்டிருந்தால் 2014 ஆம் ஆண்டில் அது ஐம்பதாயிரத்தைத்தான் தொட்டிருக்கிறது. கடைசி ஐந்தாண்டுகளில் வளர்ச்சி விகிதம் மிகக் குறைந்து போய்விட்டது என்பதுதான் உண்மை. எந்தத் துறையாக இருந்தாலும் இதுதான் நிலைமை. 

இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் இல்லை- இந்திய நிறுவனங்களுக்கும் பொருந்தும். இது கார்பொரேட் தொழில்களுக்கு மட்டும் இல்லை- சிறு மற்றும் மத்தியதர தொழிற்துறைகளுக்கும் இதுதான் நிலைமை. இந்தக் காலகட்டத்தில் உலகச் சந்தை தடுமாறியது என்றாலும் இந்தியாவில் உருவான தேக்க நிலைக்கு உலகப் பொருளாதாரத்தின் ஆட்டம் மட்டுமே காரணமில்லை. இந்த அரசுகளும் முக்கியமான காரணம். 

நெசவுத்தொழில் முடங்க மின் தட்டுபாடு காரணம் என்பது வெறும் அதிமுக, திமுகவின் தேர்தல் சண்டைதான். அது முக்கியமான காரணம் இல்லை. கடந்த சில வருடங்களில் பஞ்சு விலை தாறுமாறாக ஏறி இறங்கியது. பதுக்கல் கொடிகட்டிப்பறந்தது. நான்கு தறி, ஆறு தறி போட்டு பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்த ஏழை நெசவாளிகள் நொந்து போனார்கள். மத்திய அரசு நினைத்திருந்தால் ஒரு அளவிற்கேனும் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. பஞ்சு விலையை நிர்ணயிக்கும் மஹராஷ்டிரா முழுவதும் தேசியவாத காங்கிரஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. பதுக்கலில் ஈடுபட்டவர்களில் கணிசமானவவர்கள் அந்தக் கட்சிக்கு ஆதரவானவர்கள் என்கிறார்கள். அரசு வாயைத் திறக்க முடியவில்லை. ஆர்டர்கள் பங்களாதேஷூக்கும் இன்ன பிற நாடுகளுக்கும் பறந்தன. திருப்பூரை மண்போட்டு மூடி மேலே மலர்கொத்து வைத்தார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு துறையும் வலுவற்ற அரசு எந்திரத்தின் காரணமாக பெருத்த அடி வாங்கின. அந்த அடிக்கான நுண்ணிய காரணங்கள் நமக்கு முழுமையாகத் தெரிவதற்குள்ளேயே அரசு முடிந்துவிட்டது.

எந்த நிறுவனமும் இந்தியாவில்தான் விரிவடையவில்லையே தவிர கிழக்காசிய நாடுகளில் மெல்ல மெல்ல கால் பதித்துக் கொண்டிருக்கின்றன. அது ஐடி நிறுவனமாக இருந்தாலும் சரி, கல்வியியல் நிறுவனமாக இருந்தாலும் சரி, சுற்றுலா சார்ந்த நிறுவனமாக இருந்தாலும் சரி- இலங்கை, பிலிப்பைன்ஸ், மலேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தங்களுடைய விஸ்தரிப்பைச் செய்து அங்கு வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கின்றன. இதுதான் நிதர்சனம்.

இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிறுவனங்களால் விஸ்தரிப்பைச் செய்ய முடியவில்லை? 

பல நடைமுறைச் சிக்கல்கள்தான் காரணம். அனுமதி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மிக மிக தாமதாமகவே கிடைக்கிறது. அரசு சார்ந்த எந்த ப்ராஸஸூம் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கின்றன, அது போக அரசியல் தலையீடுகளும் அதிகம். சலித்துப் போன நிறுவனங்கள் இருப்பதை வைத்துக் கொண்டு ஒட்டலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டன. 

உலகப் பொருளாதாரச் சிக்கல்களின் காரணமாக புதிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வரத் தயங்குகின்றன என்பது முதல் காரணமாக இருந்தால், இங்கு இருக்கும் நிறுவனங்களும் பெரிய அளவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பது இன்னொரு காரணம். பிறகு எப்படி படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்கள் சிரமம் இல்லாமல் வேலை பெறுவார்கள்? 

நாம் இங்கு கலாய்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு மன்மோகன் சிங் தகுதியற்றவர் இல்லை என்பதுதான் உண்மை. ஆட்சியமைப்பதற்கு முன்பு அவர் நேர்மையானவராகத்தான் கருதப்பட்டார், தனது முந்தைய பதவிகளின் மூலமாக சிறந்த நிர்வாகி என்றும் அறிவாளி என்றும் பெயரெடுத்தவர்தான். ஆனால் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அவரது அத்தனை பற்களும் பிடுங்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு பொம்மையாக்கி வைக்கப்பட்டிருந்தார். எந்த முடிவுகளும் தாமதப்படுத்தப்பட்டன. 

பெருமுதலாளிகளைப் பொறுத்தவரை தங்களுக்கு ஒவ்வொரு வருடமும் லாபம் கொழிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தங்களது சாம்ராஜ்ஜியம் விஸ்தரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரதமரின் ஆட்சியில் அது சாத்தியமே இல்லை என்பதை கார்பொரேட் நிறுவனங்கள் உணர்ந்து கொள்ள அதிக காலம் தேவைப்படவில்லை. அதனால்தான் கடந்த மூன்றரை ஆண்டுகாலமாகவே அடுத்த ஆள் இவர்தான் என்று மோடியை தூக்கிப்பிடித்தார்கள். மோடிக்கு பின்னால் அம்பானிகளும், டாட்டாக்களும் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படை இதில் இருந்துதான் ஆரம்பமாகிறது.

கார்போரேட்களை ஒழிப்போம் என்று பேசுகிறவர்கள் நன்றாகத்தான் பேசுகிறார்கள். மிக சுவாரஸியமாகவும் பேசுகிறார்கள். ஆனால் கார்போரேட்களிடமிருந்து சாமானிய மனிதர்களை பிரித்துவிட முடியும் என்று நம்புகிறீர்களா? தாராளமயமாக்கலும், உலகமயமாக்கலும் அனுமதிக்கப்படாத 1990களுக்கு முன்பு வேண்டுமானால் கார்போரட்களையும் சாமானிய மக்களையும் பிரித்துப் பார்த்திருக்கலாம். பெருங்கதவுகள் திறக்கப்பட்டு எப்பொழுது பெருமுதலாளிகள் நம் இரத்தக் குழாய்களில் ஊசியைச் செலுத்தி உறிஞ்சத் துவங்கினார்களோ அப்பொழுதிலிருந்தே இந்த நாம் பெரு நிறுவனங்களை சார்ந்து வாழத் தொடங்கிவிட்டோம். நம்மிடம் சேரும் ஒவ்வொரு ரூபாயிலும் பெருமுதலாலிகளின் நிழல் விழுந்திருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பெரும் நிறுவனங்களின் கை பட்டிருக்கிறது. அதனால் கார்பொரேட்கள் விழத் துவங்கினால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த பாதிப்பு நமக்கும் இருக்கும். கசக்கிறது என்றாலும் இதுதான் உண்மை.

பெருநிறுவனங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. ஆனால் இதை எப்படி பிரிப்பது என்று புரியவில்லை. இனி கார்பொரேட்களைச் சாராமல் வாழ முடியும் என்று நம்பிக்கையில்லை. ஆனால் கார்ப்போரேட்களை யாராவது சற்று கட்டுப்படுத்தினால் தேவலாம். அது சாத்தியமா என்றும் தெரியவில்லை. We are trapped.

மன்மோகன் சிங்கின் அரசை ஒவ்வொரு துறையிலும் தோல்வியடைந்த அரசாகத்தானே கடந்த ஐந்தாண்டுகளாக இருந்த அரசைப் பார்க்கிறோம். வெளியுறவுக் கொள்கைகளில் நடைபெற்ற வழ, வழா விவகாரங்கள், ராணுவத்துறையில் நடைபெற்ற ஊழல்களும், சொதப்பல்களும், தாறுமாறாக எகிறிய பெட்ரோல், டீசல் விலை- இந்த விலையுயர்வு ஏதோவொரு விதத்தில் பிற அத்தனை பொருட்களின் விலையையும் உயர்த்திவிடும். ஊட்டியிலிருந்து சென்னைக்கு காய்கறிகளைக் கொண்டு வருவதற்கு லாரி வாடகையை ஏற்றிவிடுவார்கள். ஏற்றப்பட்ட லாரி வாடகையை ஈடுகட்ட காய்கறியின் விலை உயர்த்தப்படும். இப்படி அத்தனை பொருட்களின் விலையும் மறைமுகமாக உயர்ந்துவிடும். பணவீக்கவிகிதம் அதிகமாகும். நூறு ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருளுக்கு நூற்று பத்து ரூபாய் கொடுக்க வேண்டிய தேவை வரும். எனவேதான் டீசல், பெட்ரோலின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். உலகச் சந்தையில் விலை உயர்ந்தால் அரசு என்ன செய்யும் என்று கேட்காதீர்கள். பிற நாடுகளில் பெட்ரோலும் டீசலும் என்ன விலையில் விற்கின்றன என்று தேடிப்பார்க்கலாம். இந்தியா அளவிற்கு ஏற்ற இறக்கங்கள் வேறு நாடுகளில் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. மத்திய அரசு படு கேவலமாகத் தோல்வியுற்ற துறைகளில் இதுவும் ஒன்று.

இவையெல்லாம் ஒரு சில உதாரணங்கள். நிர்வாகத்திறமை வாய்ந்த அரசு அமையாவிடில் அதன் பாதிப்புகள் நம்மையும் அறியாமல் இப்படித்தான் நம் மீது விழும். 

முந்தைய கட்டுரைகளில் மோடியை ஆதரிக்க இருந்த ஒரே காரணம், இப்போதைய சூழலில் வேறு மாற்றுத் தலைவர் இல்லை என்பதும், ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் அமையும் நிலை வந்தால் காங்கிரஸூம் பிற பிராந்திய கட்சிகளும் இத்தகைய வலுவில்லாத பல்லிளிப்பு அரசையே மீண்டும் அமைப்பார்கள் என்பதாலும்தான். குஜராத் மக்கள் அவரை மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் ஒரு காரணம். இதைத் தாண்டி வேறு எந்தக் காரணமும் இல்லை. 

கலைஞர் சொல்வதைப் போல மத்தியில் கூட்டாட்சி அமைய வேண்டும் என்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் பிரதமர் வலிமையானவராகவும், முழு மெஜாரிட்டியுள்ளவராகவும் இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் முடிவுகளை சுயமாக எடுப்பவராகவும், ஒரு முடிவை எடுத்துவிட்டு அதை அமல்படுத்துவதற்காக ஒவ்வொரு அதிகார மையத்தின் அனுமதிக்காகவும் காத்திருக்காதவராகவும் இருக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமா? பெரும்பாலான பிராந்தியக்கட்சிகள் வெறும் சுயநலங்களால் அமைந்தவைதானே. மத்திய அரசில் இடம் பெறுவாரேயானால் ஜெயலலிதாவின் முதல் கோரிக்கை என்னவாக இருக்கும்? கலைஞரின் முதல் கோரிக்கை என்னவாக இருக்கும்? சரத்பவார் எதைக் கேட்பார்? மாயாவதி எதைக் கோருவார் என்பதெல்லாம் தினசரி செய்தித்தாள் வாசித்துவரும் எந்தவொரு சாமானியனும் அனுமானித்துவிடக் கூடியதுதான்.

இத்தகைய பிராந்திய தலையீடுகள் இல்லாத தனக்கான சுதந்திரங்களைக் கொண்ட பிரதமரின் ஆட்சிதான் வலுவான அரசு, ஸ்திரமான அரசு என்பதெல்லாம். அதுதான் இந்த நாட்டிற்கான அவசரத் தேவை. மற்றபடி முதல்பத்தியில் சொன்னபடி அது யார் அமைத்தாலும் சரிதான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- இன்னொரு மோசமான அரசை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தாங்கும் வலிமை இந்த தேசத்திற்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியொரு மட்டமான அரசு அமைந்து அடுத்த ஐந்தாண்டுகளைச் சுரண்டுமானால் அதன் விளைவுகள் மிகக் குரூரமானதாக இருக்கும் என்பது மட்டும் நிஜம்.

Apr 21, 2014

யானையைக் காணவில்லை

ஒரு பெரிய யானை. அதுவும் கிழட்டு யானை. வெகு நாட்களாக உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் இருக்கிறது. அது ஒன்றும் வருமானம் கொழிக்கும் மி.க.சாலை இல்லை. பஞ்சப்பாட்டு பாடத் துவங்கி ‘இனி வேலைக்கு ஆகாது’ என்று முடிவு செய்துவிடுகிறார்கள். காட்சிசாலையில் இருந்த பிற விலங்குகளை எல்லாம் விற்றுவிடுகிறார்கள். இந்த யானை மட்டும் மிச்சம் ஆகிவிடுகிறது.  வாங்குவதற்கு ஆள் இல்லை. காலம் போன காலத்தில் யார் வாங்குவார்கள்? கிழட்டு யானையால் பயன் இல்லை என்று சீந்துவார் இல்லை. அதனால்  ஊருக்குள் பெரிய விவாதம் நடக்கிறது. நகரசபையில் உறுப்பினர்கள் சண்டையெல்லாம் போடுகிறார்கள். பிறகு நகரமே யானையை தத்தெடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படுகிறது. யானையை வைத்திருப்பது நகருக்கு பெருமையான விஷயம் என்றெல்லாம் காரணம் சொல்கிறார்கள். 

மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வரப்போகிறது. அந்த கட்டடத்தை கட்டப் போகிறவர் யானை தனது கடைசி காலத்தைக் கழிப்பதற்காக இடம் கொடுக்கிறார். அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய தடுப்புச்சுவரைக் கட்டுகிறார்கள். அந்த அரணுக்குள் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து யானையைக் கட்டி வைத்துவிடுகிறார்கள். இன்னும் நூறு வருடங்களுக்கு யானை தனது கால்களை உரைத்தாலும் அந்தச் சங்கிலி தேயாது. அவ்வளவு தடிமனான சங்கிலி அது. 

யானையின் கூடவே பாகனும் தங்கிக் கொள்கிறான். பாகனும் முதியவன் தான். பக்கத்தில் இருக்கும் பள்ளியில் மீதமாகும் மதிய உணவை யானைக்கு கொடுக்கிறார்கள். பள்ளிச்சிறார்கள் யானையை அடிக்கடி வந்து பார்க்கிறார்கள். அதைத்தவிர யானைக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. 

நாட்கள் நகர்கின்றன. 

யாருமே எதிர்பாராத வகையில் திடீரென்று யானை காணாமல் போய்விடுகிறது. யானை மட்டுமில்லாமல் பாகனையும் காணவில்லை. யானை காணாமல் போனது பற்றிய குழப்பம் உருவாகிறது. அது சங்கிலியை அறுத்துக் கொண்டு போயிருக்க வாய்ப்பில்லை. சங்கிலி அப்படியேதான் இருக்கிறது. பாகன் சங்கிலியை கழட்டிவிட்டிருக்கக் கூடும் என்று யாரோ சொல்கிறார்கள். அதற்கும் வாய்ப்பு இல்லை- ஏனென்றால் அந்த சங்கிலியின் பூட்டுக்கு இரண்டு சாவிகள். இரண்டில் ஒன்று கூட பாகனிடம் இல்லை. பூட்டும் உடைபடவில்லை. பிறகு எப்படி இது நிகழ்ந்தது? ஊரில் ஒரே குழப்பம். இந்தச் செய்தியை ஊடகங்களும் பிரதானப்படுத்துகின்றன. ‘தனது குழந்தையை வெளியில் விளையாட விடுவதற்குக் கூட பயமாக இருக்கிறது’ என்று ஒரு பெண்மணி புலம்புகிறாள். etc.etc.

இது ஹாருகி முரகாமியின் ‘யானை காணமலாகிறது’ என்ற கதையின் ஒரு பகுதி. கிட்டத்தட்ட நாற்பது பக்கக் கதை இது. மனசாட்சியே இல்லாமல் மூன்றரை பத்தியில் சொல்லிவிட்டேன். ஆனால் இதோடு கதை முடியவில்லை. 

அந்த யானை எப்படி காணாமல் போகிறது? 

இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பவன் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து முந்தின நாள் இரவு யானையை பார்த்திருக்கிறான். அப்பொழுதுதான் அந்த ஆச்சரியம் நடந்திருக்கிறது. யானை சுருங்கிக் கொண்டே வந்திருக்கிறது. சங்கிலியில் இருந்து தனது கால்களை விடுவித்துக் கொள்ளும் அளவிற்கு யானை சுருங்கி பிறகு காற்றில் கரைந்திருக்கும் என்கிறான். இதை அவனோடு அமர்ந்து சரக்கடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் சொல்கிறான். அவளும் நம்பிக் கொள்கிறாள். நிறைய கேள்விகளைக் கேட்கிறாள். அவனுக்கும் மப்பு. அவளுக்கும் மப்பு. அவன் என்ன சொன்னாலும் நம்புவாள். கதையை வாசிக்கும் நமக்குத்தான் குழப்பம். யானை சுருங்கிக் கொண்டே வந்து காற்றோடு கரைவது சாத்தியமா?

நாற்பது நாட்களுக்கு முன்பாகச் சொல்லியிருந்தால் நம்புவது கடினம்தான். ஆனால் இப்பொழுது யாருக்காவது இந்தக் கதையில் சந்தேகமிருந்தால் MH370 என்று கூகிளிடம் கேட்டுப்பார்க்கலாம். எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் இந்த யானைக் கதையை நம்பிக் கொள்வோம். 

என்ன ஆயிற்று அந்த விமானத்துக்கு?

யாராவது கடத்திச் சென்றார்களா? எங்கேயாவது ஒளித்து வைத்திருக்கிறார்களா? நடுவானில் வெடித்துச் சிதறியதா? கடலுக்குள் விழுந்ததா? ஒரு பதிலும் இல்லை. தேடுகிறார்கள் தேடுகிறார்கள்- தேடிக் கொண்டேயிருக்கிறார்கள். கப்பல்கள், விமானங்கள், ரோபோக்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ‘இந்த இடத்திலிருந்து சிக்னல் வருகிறது’ என்கிறார்கள். ‘அந்த இடத்தில் ஏதோ எண்ணெய் படலம் பரவுகிறது’ என்கிறார்கள். ‘கடலின் மீது என்னவோ மிதக்கிறது’ என்கிறார்கள். ஒரு துப்பும் இல்லை. ஊடகங்கள் இந்தச் செய்தியை மெதுவாக மறந்து கொண்டிருக்கின்றன.

இந்தத் தேடல் மிகப்பெரிய செலவு பிடிக்கும் காரியமாக மாறிக் கொண்டிருக்கிறது என்று சமீபத்தில் ஆஸ்திரேலியாவும், மலேசியாவும் புலம்பியிருக்கின்றன. இன்னும் சில தினங்களில் இந்தத் தேடலை கைவிட்டுவிடக் கூடும். அதன் பிறகு? விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பங்கள் மட்டும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு நாட்களுக்கு? ஆறு மாதங்கள்? ஒரு வருடம்? அவ்வளவுதான். 

அதே போலத்தான் -  சுபாஷ் சந்திரபோஸ் என்ன ஆனார்? நமது நேதாஜிதான். விமான விபத்தில் இறந்துவிட்டார் என்றார்கள். கொன்றுவிட்டார்கள் என்றார்கள். சிறையில் இருந்துதான் இறந்தார் என்றார்கள். இந்திய அரசியல் தலைவர்களே நேதாஜி வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார்கள் என்றார்கள். இப்படி ஆளாளுக்கு ஒரு தியரி எழுதி வைத்திருக்கிறார்கள்.

பதில் கண்டுபிடிக்கவே முடியாத இப்படியான ரகசியங்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. யாராவது வெகுசிலருக்கு மட்டும்தான் அந்த ரகசியங்களின் பின்னாலிருக்கும் உண்மை தெரியும். மலேசிய விமானம் குறித்து அந்த விமானத்திலிருந்த இருநூற்று சொச்சம் பேருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். அதுவும் கூட அத்தனை பேருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. 

நேதாஜியின் மரணம் பற்றி அவருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் அல்லது வெகுசிலருக்குத் தெரிந்திருக்கலாம். அதே போலத்தான் யானை பற்றியும். அந்தப் பாகனுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது அவனோடு சேர்த்து இன்னும் சிலருக்கு. 

இந்தப் புதிர்களின் விடைகள் எப்பொழுதும் பொதுவெளிக்கு வரப் போவதில்லை. தீர்க்க முடிந்த புதிர்கள் என்றால் வெகு சுவாரசியமாக தீர்ப்போம். அதுவே விடை கிடைக்கவில்லையென்றால் கொஞ்ச நேரம் மண்டை காய்வோம். பிறகு சலித்தபடியே தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த காரியத்திற்கு நகர்ந்துவிடுவோம். அவ்வளவுதான். அது சூடோக்கூவாக இருந்தாலும் சரி; குறுக்கெழுத்துப் போட்டியாக இருந்தாலும் சரி. 

மலேசிய விமானமும் அப்படித்தான். நேதாஜியின் மரணமும் அப்படித்தான். முரகாமியின் இந்தக் கதையில் வரும் யானையும் அப்படித்தான். 

இத்தகைய கதைகளை வாசித்து மண்டைக்குள் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டியதில்லை. பிறகொரு காலத்தில் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் போதும், கேள்விப்படும் போதும் இந்தக் கதை நமக்குள் விழித்துக் கொள்ளும். அப்படி விழிக்கும் தருணம்தான் வாசிப்பின் பேரின்பம்.

ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ‘Elephant Vanishes' என்று தேடி இந்தக் கதையை எடுத்துக் கொள்ளலாம். தமிழில் புத்தகம் வேண்டுமென்றால் திரு. சிபிச் செல்வனிடம்(08925554467) வாங்கிக் கொள்ளலாம். அவர்தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முரகாமியின் கதைகளை புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார். நான்கு கதைகள்தான். ஆனால் நூற்று நாற்பது பக்கங்கள். ஒவ்வொரு கதையும் முப்பது, நாற்பது பக்கங்கள். ஆனால் தைரியமாக வாங்கி வாசிக்கலாம்.

இந்தக் கதையைச் சொல்ல ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.

புத்தகக் கண்காட்சியின் போதே இந்தக் கதையை வாசித்து வைத்திருந்தேன். வாசித்த உடனே ஞாபகம் வந்ததுதான் சுபாஷ் சந்திரபோஸின் இறப்பு. பிறகு மலேசிய விமானம் காணாமலாகி இருபத்தைந்து நாட்கள் ஆனவுடன் இன்னொரு முறை வாசிக்கத் தோன்றியது. வாசித்தேன்.

இந்தக் கதையை ஓசூரில்  நாடகமாக்குகிறார்கள் என்று நண்பர் திருவேங்கடம் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதுவும் பள்ளி மாணவர்கள். இப்படியொரு சிக்கலான கதையை எப்படி நாடகமாக்குவார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. பிரளயன் தான் நாடகமாக்குவதாகத் தெரிந்தது. அவரால் முடியும். வித்தகர். பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

நேற்று மாலை ஓசூர் செல்வதற்காகக் கிளம்பி திருவேங்கடத்தை அழைத்து ‘எங்க இருக்கீங்க?’ என்றேன். 

‘சிட்டிக்குள்ள இருக்கேன்’என்றார்.

‘யானை காணமலாகிறது நாடகம் பார்க்கப் போறேன். வர்றீங்களா?’

‘அது நேத்தே முடிஞ்சுடுச்சே’ என்றார். கடுப்பாகிவிட்டது. அவர் சரியாகத்தான் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். நான் தான் ஸ்ருதியை பார்க்கிற நினைப்பில் முரகாமியை கோட்டைவிட்டு விட்டேன். சனிக்கிழமை மதியம் யாராவது ஸ்ருதிஹாசன் முக்கியமா? முரகாமி முக்கியமா என்று கேட்டிருந்தால்- ஸ்ருதிக்கு வாக்களித்திருப்பேன். இப்பொழுது யோசித்தால் முரகாமியின் நாடகத்தை பார்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது. 

Apr 20, 2014

ரேஸ் குர்ரம்

திருமணத்திற்கு முன்பு ‘என்னடா இது...தனியாவே சுத்திட்டு இருக்கோமே’ என்று அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஃபீலிங் திருமணத்திற்கு பிறகு அப்படியே தலைகீழாகிவிடுகிறது ‘ஒருநாள் கூட தனியாவே இருக்க முடியறதில்லையே’ என்று யோசிக்கத் தொடங்கிவிடுகிறது, மனம். வெயிட்டீஸ். அப்படி நான் நினைப்பதாகச் சொல்லி என்னை ரணகளமாக்கிக் கொள்ள தயாராக இல்லை. ஒரு நண்பர்தான் அப்படி சொன்னார் என்று எழுதினால் நீங்கள் நம்பிக் கொள்ள வேண்டும்.

நேற்று வீட்டில் யாரும் இல்லை. வருத்தம் என்றால் வருத்தம் அப்படியொரு வருத்தம் எனக்கு. முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டு அழுதேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரிவுத் துயரம். சரி, இந்த சோகத்தை எப்படி போக்கிக் கொள்வது? பெங்களூரில் வழியா இல்லை? படத்துக்குச் சென்றுவிட்டேன். நிறைய படங்களைப் பார்ப்பதென்றால் பிரச்சினையே இல்லை. எந்தப்படத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆடிக்கொரு தடவை போனால் எந்தப் படத்திற்கு போவது என்று குழப்பமாகிவிடுகிறது. டார்ச்சரான படங்களுக்கு சென்று மண்டை இடியோடு வீடு திரும்ப முடியாது.

தமிழ்ப்படங்களைவிடவும் எனக்கு தெலுங்குப்படங்கள் இஷ்டம். காட்சிக்கு காட்சி மசாலா தடவி வைத்திருப்பார்கள். சண்டையென்றால் அப்படியொரு சண்டை. வில்லனை தூக்கி வீசும் போது பூமியே அதிரும். கூடவே சேர்த்து நம் ஸீட்டும் அதிரும். பாடல்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. ஸ்ரீதேவி காலத்திலிருந்தே அப்படித்தான். அதை எதற்கு விலாவாரியாகச் சொல்லி வேண்டும்? எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தானே.

அப்படியொரு சிக்கன் மசாலா தடவிய படத்திற்குத்தான் டிக்கெட் எடுத்திருந்தேன். ரேஸ் குர்ரம். சிரஞ்சீவி வகையறாவின் படங்கள் என்றாலே ஓவர் ஹீரோயிஸமாகத்தான் இருக்கும். அது அவரது தம்பி பவன்கல்யாணாக இருந்தாலும் சரி, அவரது மருமகன் அல்லு அர்ஜுனாக இருந்தாலும் சரி. ஹைதராபாத்தில் இருந்த காலத்திலிருந்தே இந்த க்ரூப்பைக் கண்டால் அலர்ஜிதான். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் இருக்கிறார் என்பதால் என்னதான் அலர்ஜியானாலும் சொரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன். இருநூற்றைம்பது ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் இல்லை என்று புலம்பலாம்தான். ஆனால் ‘இந்தக் கஞ்சப்பயலுக்கு இதே வேலையாகப் போய்விட்டது’ என்று யாராவது நினைத்துக் கொள்ளக் கூடும். டிக்கெட் விலையை விடுங்கள். பாப்கார்ன்னும் பெப்ஸியும் சேர்த்த ‘கோம்போ’முந்நூற்று நாற்பது ரூபாய். அதையும் கூட தொலையட்டும் என்று விட்டுவிடலாம். தண்ணீர் பாட்டில்? எம்.ஆர்.பி இருபது ரூபாய்தான். அந்தத் தண்ணீர் பாட்டிலை நாற்பது ரூபாய்க்கு விற்கிறார்கள். நூறு மடங்கு இலாபம். 

இதையெல்லாம் ஏன் யாருமே கேட்பதில்லை? 

இரண்டு மாதங்களுக்கு முன்பாக சேலம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது திபுதிபுவென்று வந்த அதிகாரிகள் ஒரு கடைக்காரரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். யாரோ புகார் அளித்திருந்தார்களாம். கூல்டிரிங்க்ஸ் பாட்டிலுக்கு மூன்று ரூபாய் அதிகம் வைத்து விற்கிறார்கள் என்பதுதான் பிராது. அதற்குத்தான் அதிகாரிகள் படையெடுத்திருந்தார்கள். அவர் மட்டுமா விற்கிறார்? ஒவ்வொரு கடையிலுமே அப்படித்தான் விற்கிறார்கள். பேருந்து நிலையத்தில் மூன்று ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்றால் பிடிப்பார்கள். அதுவும் கூட பிடிப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. வந்து விசாரிப்பார்கள். ஏற்கனவே மாமூல் சரியாகச் சென்றிருந்தால் அந்த நன்றி விசுவாசத்தோடு திரும்பச் சென்றுவிடுவார்கள். அதுதான் வழமை.

நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. அப்பா வீடு திரும்பவில்லை. அந்தக்காலத்தில் ஃபோன் வசதியெல்லாம் இல்லை. என்ன ஆனது என்று தெரியாமல் அம்மா சற்று பயந்திருந்தார். எங்களுக்கும் பயம்தான். மூவரும் வீட்டிற்கு வெளியிலேயே அமர்ந்திருந்தோம். இரவு பத்து மணிக்கு மேல் அப்பா வந்தார்- அதுவும் நிறைய ரொட்டிப்பாக்கெட்டுகளுடன். எங்கள் வீதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பாக்கெட் தரலாம். அத்தனை ரொட்டி பாக்கெட்டுகள்.

எங்கள் பகுதியில் ஒரு ரொட்டி தயாரிக்கும் நிறுவனம் இருந்தது. வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை என்று சம்பந்தப்பட்ட அத்தனை துறைகளையும் சரியாக கவனித்துவிடுவார்கள் என்பதால் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. அப்படியிருந்தும் யாரோ மின்வாரியத்திற்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தினர் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கிறார்கள் என்பதுதான் புகார். புகார் வந்துவிட்டால் கண்ணைத் துடைத்துதானே ஆக வேண்டும்? சோதனைக்கு கிளம்பியிருக்கிறார்கள். அப்படி கிளம்பிய படையில் அப்பாவையும் வண்டிக்குள் திணித்துக் கொண்டார்கள். ஆனால் கிளம்புவதற்கு முன்பாகவே ‘சோதனைக்கு வருகிறோம்..ரெடி ஆகிக்குங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த ரெடி ஆகிக்குங்க என்பதற்கான அர்த்தம் நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். 

அங்கு கொக்கியும் இல்லை- வெங்காயமும் இல்லை. எப்படி இருக்கும்? ஆனால் சோதனைக்குச் சென்றவர்களுக்கு நல்ல கவனிப்பு. டீ, காராபூந்தி, சாப்பாடு என்று எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு ஆளாளுக்கு நிறைய ரொட்டி பாக்கெட்டுகளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அல்வாவின் வேறொரு வடிவம். மேலதிகாரிகளுக்கு தனியான கவனிப்பு நடந்ததாக அப்பா சொல்லியது ஞாபகம் இருக்கிறது. 

நம் ஊரில் சோதனை என்றால் இதுதான். பணம் கொடுக்காதவனாக இருந்தால் சிக்கல் வரக் கூடும். ஆனால் தீபாவளி, பொங்கல் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் சரியாக மொய் எழுதுபவர்களுக்கு எந்தச் சோதனை பற்றியும் கவலையில்லை. சேலத்தில் பேருந்து நிலையம் என்பதால்தான் அந்த அளவுக்குக் கூட சோதனை நடத்தினார்கள். அதுவே அரசுப்பேருந்துகள் நிற்கும் மோட்டலில் குளிர்பானம், தண்ணீர்க்குடுவை என்று எதுவாக இருந்தாலும் நான்கு ரூபாய் சேர்த்து விற்பார்கள். ஆனால் அதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ள மாட்டார்கள்.  ‘மினிஸ்டர் பினாமியோட மோட்டல்’ என்பார்கள். ஆனால் மோட்டலில் நாமாவது ஒரு கேள்வி கேட்கலாம். இந்த சினிமா தியேட்டரில் யாரைக் கேட்பது? ‘மேனேஜ்மெண்டில் கேட்டுக்குங்க’ என்பார்கள்.

‘ஏன்ய்யா இருபது ரூபாய் சேர்த்து விக்குறீங்க?’ என்று அம்பானிக்குத்தான் கடிதம் எழுத வேண்டும். 

இந்த முந்நூற்று நாற்பது ரூபாய் பாப்கார்னை வாங்க அவ்வளவு பெரிய க்யூ. எங்கள் ஏரியாவில் கட்டட வேலை செய்யும் ஒரு ஆணின் சம்பளம் முந்நூற்றைம்பது ரூபாய். மேஸ்திரியாக இருந்தால் கொஞ்சம் அதிகம்- ஐந்நூறு ரூபாய். ஆக, ஒரு ஆணின் முழுச் சம்பளத்தையும் பத்து நிமிட பாப்கார்னில் சர்வசாதாரணமாக எச்சிலில் ஊற வைத்துவிடுகிறோம். 

கண்காணிப்பும், கட்டுப்படுத்துதலும் இல்லாத கார்பொரேட் உலகம் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கும் போது என்ன நடக்கும் என்பதன் மினியேச்சரைஸ்டு உதாரணம்தான் சினிமா மால்கள். இன்னும் போகப் போக இன்னமும் பார்க்கத்தான் போகிறோம். அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் இந்த பெரு முதலாளிகள் துல்லியமாக பட்டுவாடா செய்துவிடுகிறார்கள். காந்தியைக் கையில் வாங்கிக் கொண்ட பிறகு கேள்வியை வாயில் கேட்பதற்கு எவனுக்கு யோக்கிதை இருக்கிறது?

MRP என்பதன் பொருளே அதுதான் அதிகபட்ச விலை என்பதுதானே? ஊறுகாய் பாட்டிலிருந்து லேப்டாப் வரை ஒவ்வொரு பொருளிலும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (MRP) ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி எனக்குத் தெரிந்து இந்தியாவில் மட்டும்தான் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. விதி இருந்தால் மட்டும் போதுமா? அண்ணாச்சி மளிகைக்கடையிலும், ரோட்டோர பெடிக்கடைகளிலும்தான் செயல்படுத்துகிறார்கள். பேருந்து நிலையங்களிலும், மோட்டலிலும் நாற்பது சதவீதம் அதிகம் வைத்து விற்றால், மால்களில் அவர்கள் விரும்பும் அளவிற்கு விலை வைத்துக் கொள்கிறார்கள்.

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்று எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டாகிவிட்டது. இனி திரும்ப பழைய நிலைமைக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. Rich get richer; Poor get poorer என்று அன்றே சொன்னார் சிவாஜி’ த பாஸ். அவ்வளவுதான். இதுதான் நடக்கும். இப்படித்தான் தொடரும். ஒன்றும் செய்வதற்கில்லை என்றாலும் துளியாவது மனசாட்சியோடு பெருமுதலாளிகள் இருக்கலாம். ம்ஹூம். நகை நட்டோடு உள்ளே வந்தவர்களையெல்லாம் வெறும் ஜட்டியோடு வெளியே அனுப்புவது அநியாயம் சார்.

பாருங்கள். ரேஸ் குர்ரம் பார்த்துவிட்டு படத்தைப் பற்றி எழுதாமல் எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். இது பாவச் செயல். 

படத்தில் அல்லு அர்ஜூன் தூள். ஸ்ருதி ஹாசன் தூள் டக்கர். சினிமாவைப்பற்றி எனக்கு அவ்வளவுதான் சொல்லத் தெரியும்.

Apr 18, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமிஸ்

நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்னனென்னவோ பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று வேறொரு நண்பரைப் பற்றி சொல்லிவிட்டு ‘அவர் பெரிய கம்யூனிஸ்ட்டுங்க’ என்றார். அவர் குறிப்பிட்ட நண்பரை எனக்கும் தெரியும். அவர் கம்யூனிஸ்ட் எல்லாம் இல்லை. ஆனால் அப்படித்தான் வெளியே சொல்லிக் கொள்வார். இவரும் அதையே சொன்னதால் எனக்கொரு ஜெர்க். இப்படியெல்லாம் ஜெர்க் கொடுப்பதற்கென்றே சிலர் பிறப்பெடுத்திருப்பார்கள். அதற்காக அவர்களை விட்டு விலகிவிடவும் கூடாது. இத்தகைய ஜெர்க்கர்கள்தான் நம் வாழ்க்கையை சுவாரஸியம் குறையாமல் வைத்துக் கொள்கிறார்கள். 

‘ஏங்க நீங்க வேற....அவர் இங்கதாங்க இருக்காரு...ஐ.டி கம்பெனிலதான வேலை செய்யறாரு’ என்றேன். ஆனால் அதற்கெல்லாம் மசியமாட்டார் போலிருந்தது. 

‘அதனால என்னங்க? எங்க வேலை செஞ்சா என்ன? அவர் கம்யூனிஸ்ட்தான்’ என்றார். 

கொத்திவிட்ட சுவரில் சிமெண்ட் கலவையை வீசினால் ‘சத்த்த்த்’ என்று அப்பும் பாருங்கள். அவ்வளவு உறுதியாக நம்புகிறார். இப்படியெல்லாம் யாராவது உறுதியாக நம்பினால் ஜகா வாங்கிவிடுவதுதான் எனது வழக்கம். இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம்- என்னதான் சண்டை போட்டாலும் அவர்களை மாற்ற முடியாது. இரண்டாவது காரணம், கோபம் உச்சிக்கேறி நம் காதை கடித்தாலும் கடித்து வைத்துவிடுவார்கள். கொள்கையைவிடவும் காது முக்கியம் என்கிற கட்சியைச் சார்ந்தவன் என்பதால் ஒதுங்கிக் கொள்வேன். 

ஆனால் மண்டைக்கு மேலாக இருக்கும் நான்கு முடிகளுக்குள் வியர்வை அரும்பியது போல குறுகுறுப்பு. இதெல்லாம் எப்படி சாத்தியம்? எங்கு வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம். ஆனால் தன்னை இடதுசாரி என்று சமூகத்திற்கு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற கணக்காக அல்லவா இருக்கிறது? தங்களை இடதுசாரிகள் என்கிறார்கள். பொதுவுடைமை ரத்தத்தில் ஊறி நரம்புகளில் மார்க்ஸியம் முறுக்கேறிக் கிடக்கிறது என்கிறார்கள். ஆனால் வேலை செய்வது மட்டும் பெருமுதலாளிகளிடம். சரி விடுங்கள். தி கிரேட் கம்யூனிஸ்ட்களான கலாநிதி மாறனிடமும், பச்சமுத்துவிடமும் ஒன்றாம் தேதியானால் சம்பளம் வாங்குபவர்களை கம்யூனிஸ்ட்கள் என்றுதானே சொல்ல முடியும்? மார்க்ஸிய கொள்கைகளை அச்சுபிசகாமல் கடைபிடிக்கும் தேசிய, மாநில கார்பொரேட் ஊடகங்களிலும் காலம் தள்ளுபவர்களை மார்க்ஸியவாதிகள் என்றுதானே ஏற்றுக் கொள்ள வேண்டும். கந்துவட்டிக்காரனிடம் வேலைக்கு இருப்பவர்கள், சினிமாவுக்கு அடல்ட்ஸ் ஒன்லி பாடல் எழுதுபவர்கள், தொப்புளை வர்ணித்து வசனம் எழுதுபவர்கள், டாட்டாவிடமும், பில்கேட்ஸிடமும் மாதக் கூலிக்கு வேலையில் இருப்பவர்களுக்கெல்லாம் சாலைக்கு வரும்போது ஒரு முகமூடி தேவைப்படுகிறது. அதனால் பொதுவுடமையாளன் என்ற முகமூடியை அணிந்து கொள்கிறார்கள். நமக்கெதுக்கு வம்பு?

வலது பக்கமும் சாரி இல்லாமல் இடது பக்கமும் சாரி இல்லாமல் உரிக்கப்பட்ட நடிகைகளை பக்கம் பக்கமாக தொங்கவிடும் பத்திரிக்கைக்காரர்கள் தங்களை இடதுசாரி சித்தாந்தவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். பத்து பதினைந்து பேர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு கார்பொரேட் மாடல்களில் பிஸினஸ் நடத்துபவர்கள்தான் இங்கு சமத்துவச் சிந்தனையாளர்கள். கிசுகிசு எழுதி நடிகர் நடிகைகளின் அந்தரங்கத்தை பொதுவெளிக்கு கொண்டு வருபவர்கள்தான் பொதுவுடைமைச் சிற்பிகள். இதையெல்லாம் சொன்னால் அடிக்க வருவார்கள்.

ஒன்பது டூ ஐந்து பிழைப்பு வேறு. மனதில் ஓடும் சிந்தனை வேறு- அவை இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது  என்று யாராவது சொல்லக் கூடும். சரிதான். நாய்ப்பிழைப்பாக இருந்தாலும் சிந்தனை அடிப்படையில் நான் இடதுசாரி என்று யாரேனும் வாதாடக் கூடும். இருக்கட்டும். ஆனால் இந்த வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்வது என்றுதான் புரியவில்லை. பெருமுதலாளிகள் காலால் இடும் வேலையை தலையால் செய்து முடிக்கும் என்னைப் போன்றவர்கள் தங்களை ‘இடதுசாரி’ என்று சொல்லிக் கொண்டால் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துத் தொலைத்துவிடுகிறேன். எனக்கு வாயிலும் சனி. நாக்கிலும் சனி.

எங்கள் ஊரில் சி.எஸ்.சுப்பிரமணியன் என்ற பெரியவர் இருந்தார். அந்தக்காலத்திலேயே அவரை அவரது தந்தையார் லண்டன் அனுப்பி வைத்தார். பையன் ஐ.சி.எஸ் தேர்வு எழுதட்டும் என்பது அவரது விருப்பம். அப்பொழுதெல்லாம் விமானம் இல்லை அல்லவா? கப்பல்தான். மாதக்கணக்கில் பயணம். அங்கே சென்றவர் தாய்நாட்டின் சுதந்திரம், கம்யூனிஸம் என்று திசை மாறிவிட்டார். படிப்பு அதோடு அவுட். இந்தியாவிற்கு திரும்பி வந்தும் சும்மா இருக்கவில்லை. வெள்ளைக்காரனோடு இல்லாத லடாய்களைச் செய்து பிறகு சிறையில் அடைப்பட்டு அதன் பிறகு தீவிரவாதியாக வெகுகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். பிழைக்கத் தெரியாத மனுஷன் என்று ஊரில் சொன்னார்கள்.

இந்தியா சுதந்திரம் அடையும் வரைக்கும் போராளி வாழ்க்கைதான். சுதந்திரத்திற்கு பிறகும் கம்யூனிஸ்ட் வாழ்க்கைதான். 

அந்தக்காலத்திலேயே கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். அவர் தனது கதைகளைச் சொல்லச் சொல்ல அழுகை வந்துவிடும். கொள்கை, லட்சியம், குப்பைமேடு என்று வெறும் வாயில் அபிஷேகம் செய்பவர்களை பார்த்து பார்த்து சலித்த நம் கண்கள் இத்தகைய கொள்கை நிறைந்த மனிதர்களைப் பார்க்கும் போது பனித்துவிடும். அவரது வீடு கோபிச்செட்டிபாளையத்தின் மையப்பகுதியில் இருந்தது. நல்ல விலை பெறும் என்பது முக்கியமான தகவல். சி.எஸ்.எஸ் கிட்டத்தட்ட நூறு வயது வரை இருந்தார். கடைசி நான்கைந்து ஆண்டுகள் அவர் சோற்றுக்கு லாட்டரி அடித்தது எனக்குத் தெரியும். கையில் காசு இல்லாமல் இல்லை. கடை வரைக்கும் நடந்து போகத் தெம்பிருக்கவில்லை. அவருக்கு வாரிசும் யாரும் இல்லை. பார்த்துக் கொள்ளவும் எவரும் இல்லை. சனி, ஞாயிறுகளில் ஊருக்குச் சென்றால் இட்லி வாங்கித் தருவேன். அவ்வளவுதான் என்னால் முடிந்த காரியம். அதற்கும் கூட காசு கொடுத்துவிடுவார். கடைசிவரைக்கும் சுயமாக வாழ்பவன் தான் கம்யூனிஸ்ட் என்று இட்லிக்கான பணத்தைக் கொடுப்பதற்கு காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அப்படி சொல்லிக் கொண்டிருந்ததாலோ என்னவோ அவரை கடைசி காலத்தில் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. கம்யூனிஸ்ட்களும் கண்டுகொள்ளவில்லை.

அவர் இறந்து போன பிறகு அவரது வீட்டைக் கட்சி எடுத்துக் கொண்டது. கட்சி எடுத்துக் கொண்டதா அல்லது கட்சியின் பெயரில் ஏதாவது கம்யூனிஸ்ட் எடுத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் அவ்வளவு அற்பமாக அவரது வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியதில்லை என்று நினைத்துக் கொள்வேன்.

தனது இளமையைத் தொலைத்தும், சுக துக்கங்களை இழந்தும், குடும்பத்தினரிடம் பகைமையைச் சம்பாதித்தும் கொள்கையை விடாமல் இருந்த அவரைப் போன்ற இடதுசாரி கொள்கையாளர்களைப் பார்த்துவிட்டு போலிகளைப் பார்ப்பதற்கு கூச்சமாக இருக்கிறது. நடப்பதற்குக் கூட வழியில்லாத காலத்திலும் அவர் சுயமாக நின்றார். ஆனால் உடல் முழுக்கத் தெம்பும், கை நிறைய பணமும் இருந்தாலும் பிழைப்புக்காகவும், ஆதாயத்திற்காகவும் அடுத்தவர்களின் காலடியில் கிடப்பவர்கள் எல்லாம் தங்களை இடதுசாரி சிந்தனையாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை. கொள்கைக்கும், வாழ்முறைக்கும் துளியாவது தொடர்பு இருக்க வேண்டாமா? 

இப்படி எழுதுவதை அறச்சீற்றம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அலர்ஜி. இது அரசியல் ரீதியான எதிர்ப்பும் இல்லை. சீஸனுக்கு சீஸன் தங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக போலியாக பொங்கும் இவர்களைப் பார்த்து ஒரு சிணுங்கல். அவ்வளவுதான்.

முதலாளிகளிடம் கையேந்தி நிற்பவர்களும், முதலாளிகளாக கோலோச்சுபவர்களும் வீட்டை விட்டு வெளியே வரும் போது போராளி வேடம் போட்டுக் கொள்வது அசிங்கம் இல்லையா? முகத்தை இறுக்கமாக வைத்துபடி போஸ் கொடுத்து ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டால் கொண்டால் இடதுசாரி ஆகிவிடலாமா? இடதுசாரி சிந்தனைகளை தவறு என்று சொல்லவில்லை. பிழைப்புக்காகவும் கூலிக்காகவும் மாரடித்தாலும் எனக்குள் இடதுசாரி சிந்தனைதான் ஓடிக் கொண்டிருக்கிறது என்று யாராவது சொல்லும்போது ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் சந்தோஷம் அடையலாம். பொதுவுடைமை சித்தாந்தத்திற்காக தனது வாழ்நாளில் துளி துரும்பையாவது கிள்ளிப் போடுவேன் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு சல்யூட். ஆனால் இங்கு அறிவுஜீவி என்று தன்னை காட்டிக் கொள்வதற்கும், முற்போக்குவாதி என்று வெளிப்படுத்திக் கொள்ளவும்தான் முக்கால்வாசிப்பேருக்கு சிவப்பு நிறம் தேவைப்படுகிறது.  

இன்றைய போலி இடதுசாரிகள் கார்ல் மார்க்ஸின் மூலதனத்தை வாசித்திருக்கிறார்களா அல்லது அவர்களுக்கு லெனினிஸம், ஸ்டாலினிஸம், மாவோயிஸம் பற்றிய அடிப்படையான புரிதல்கள் இருக்கிறதா என்பதெல்லாம் பிரச்சினையில்லை. அவையெல்லாம் இரண்டாம்பட்சம்தான். அவற்றையெல்லாம் விட முக்கியமாக, தமது வாழ்க்கை முறையையும், பிழைப்பு வாதத்தையும் தாண்டி இடதுசாரி சிந்தனைகளை தமது மனசாட்சிக்கு பங்கம் வராமல் பேசுவதற்கு எத்தனை பேருக்குத் தகுதியும் அருகதையும் இருக்கிறது என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்கக் கூட எனக்கு யோக்கிதை இல்லையென்று தெரியும். நான் இடதுசாரியும் இல்லை. இடதுசாரி சிந்தனைகளுக்கு எதிரானவனும் இல்லை. ஆனால் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளக் கூடத் தகுதியில்லாத போலி இடதுசாரி சிந்தனையாளர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். 

மாதச் சம்பளம் பத்தாயிரம் ரூபாயைத் தாண்டினால் நாம் பணிபுரிவது நிச்சயம் முதலாளித்துவ நிறுவனமாகத்தான் இருக்கும். ஒருவேளை சுயமாக பிஸினஸ் நடத்தி வருட வருமானம் இரண்டு லட்சத்தைத் தாண்டினால் நாம் முதலாளிகளாகத்தான் இருப்போம். நமது சூழல் அப்படி. சமத்துவம், பொதுவுடமை என்ற சித்தாந்தங்கள் இன்றைய போட்டி நிறைந்த வர்த்தக உலகில் சாத்தியம் என்று நான் நம்பவில்லை. முதலாளிகளிடம் வேலையில் இருப்பதையோ அல்லது முதலாளிகளாக இருப்பதையோ தவறு என்றும் சொல்லவில்லை. சுற்றிலும் இருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்க, நீங்கள் ஏன் குடும்பத்தையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு முழுநேர பொதுவுடைமைவாதியாக போராடவில்லை என்று கேட்பதும் என் நோக்கம் இல்லை. ஆனால் இடதுசாரி கொள்கைகளுக்கு சம்பந்தமேயில்லாதவர்களும், தாங்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் முற்றிலும் முரணான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் யோக்கிதையற்றவர்களும் சிவப்புக் கொடியை கையில் ஏந்திக் கொண்டு ‘என்னையும் பாரு; என் கொள்கையையும் பாரு’ என்று அம்மணமாகத் திரிவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது காம்ரேட். 

ப்ளீஸ், கம்யூனிஸத்தை விட்டுவிடுங்கள். 

Apr 17, 2014

பணம் கொடுப்பீங்களா?

சுகன்யாவை வெகு காலமாகத் தெரியும். என்னோடுதான் பணிபுரிந்தாள். ஐடி இல்லை. ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நிர்வாகவியல் பணியில் இருக்கிறாள். இப்பொழுதும் அவ்வப்போது பேசுவதுண்டு. அவர்களது குடும்பத்தில் அம்மா அப்பாவோடு சேர்த்து ஆறு பேர். டைமிங்காகச் சொன்னால்- ஆறு வாக்குகள். பெரிய வசதி இல்லை. எளிமையான குடும்பம். சுகன்யா மட்டும்தான் Source of income. தமிழ் குடும்பம்தான். ஆனால் காலங்காலமாக பெங்களூரிலேயே இருப்பவர்கள். இந்த பெங்களூர்த்தமிழர்களை கண்டுபிடிப்பது மிக எளிது. ‘அப்படியா?’ என்பதற்கு பதில் ‘ஆமாவா?’ என்றால் அவர்கள் இந்த வகையறா என்று முடிவு செய்துவிடலாம். சுகன்யாவும் இந்த வகையறாதான். 

சுகன்யா ஏசப்பரின் தீவிர பக்தை. இப்பொழுது ஏதோ ஒரு காரணத்திற்காக விரதம் இருக்கிறாள். காலையில் இருந்து எதுவும் உண்ணுவதில்லை. மாலையில் சர்ச்சுக்கு சென்றுவிட்டுதான் எதுவாக இருந்தாலும். ஒரு நாள் தாங்கும் இரு நாட்கள் தாங்கும். நாற்பத்தைந்து நாட்கள் என்றால்? வாயெல்லாம் பொங்கிவிட்டது. ஆனாலும் அப்படியே இழுத்துக் கொண்டிருக்கிறாள். சிலுவை இருந்தால் போதும்- கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிடுவாள். இப்போதைக்கு அவளைப் பற்றி இது போதும்.

நேற்று பேச்சுவாக்கில் ‘ஓட்டுப் போட போறியா?’ என்றாள்.

‘ஆமாம்..அடுத்தவாரம்தான்’ 

‘எவ்வளவு வாங்குன?’- இந்தக் கேள்வியை அவளிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

எதுவும் வாங்கவில்லை என்று சொன்னால் அவள் நம்புவதற்குத் தயாராக இல்லை. காசு வாங்காமல் அவ்வளவு தூரம் போக வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அவளது சந்தேகம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அவள் கேட்பதற்கு அர்த்தம் இருக்கிறது. பெங்களூரில் காசு விளையாடியிருக்கிறது. அத்தனை வாக்காளர்களுக்கும் பணம் கொடுக்கவில்லை. ஆனால் சில ஏரியாக்களைக் குறி வைத்து அள்ளி வீசியிருக்கிறார்கள். சுகன்யாவின் குடும்பத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

முதலில் நம்பவில்லை. டகால்ட்டி அடிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் உண்மைதானாம். காங்கிரஸ் கட்சியினர் ஒரு வாக்குக்கு தலா இரண்டாயிரம் கொடுத்திருக்கிறார்கள். பா.ஜ. தலா இரண்டாயிரம் ரூபாய். தேவகெளடாவின் ஆட்கள் கொஞ்சம் ஏழைகள் அல்லவா? பாதிதான். வாக்குக்கு தலா ஆயிரம் ரூபாய். கணக்குப் போட்டுப்பார்த்தால் இந்தக் குடும்பத்திற்கு மட்டும் முப்பதாயிரம் ரூபாய். 

அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் வீடு வீடாக பிரச்சாரத்திற்கு வரும் போதே கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். 

ஒரு சமயம் சுகன்யாவின் வீட்டிற்கு கார்ப்போரேஷன் தண்ணீர் வரவில்லையாம். அதுவும் வெகுநாட்களுக்கு. குடிப்பதற்கு, குளிப்பதற்கு, சமையலுக்கு என்று எதற்குமே தண்ணீர் இல்லை. அந்தச் சமயத்தில் காசு கொடுத்து தண்ணீர் வாங்குமளவிற்குக் வீட்டில் பெரிய வருமானம் இல்லை. சுகன்யா கொஞ்சம் முரட்டு ஆள். முரட்டு ஆள் என்றால் பார்வைக்கு முரடாகத் தெரியமாட்டாள். ஆனால் பேச்சுவாக்கில் யாரையும் சர்வசாதாரணமாக மிரட்டிவிடுவாள். கேள்விகளிலேயே கொக்கி போட்டுவிடும் கேரக்டர். தண்ணீர் பிரச்சினைக்கு புகார்கள் அளித்திருக்கிறார்கள். இங்கு புகார்களுக்கு பெரிய மதிப்பில்லை. யோசித்தவள், கவுன்சிலருக்கு ஃபோன் செய்திருக்கிறாள். சாதாரண புகார் அழைப்பாகத்தான் இருக்கும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அழைப்பில் ஆந்த்ராக்ஸ் வந்திருக்கிறது.

‘உங்ககிட்ட சொல்லிப்பார்த்துட்டோம். நீங்க கேட்கிறதா இல்லை. எங்களுக்கும் வேற வழியில்லை. பேப்பருக்கு லெட்டர் அனுப்பிட்டு ஆறு பேரும் தற்கொலை செஞ்சுக்கப் போறோம்’ என்று எடுத்தவுடனே சொல்லியிருக்கிறார். கவுன்சிலர் கொஞ்சம் அப்பாவி போலிருக்கிறது. நம்பிவிட்டார். உதடுகள் உலர்ந்து போக குழறியிருக்கிறார். அடுத்த இருபதாவது நிமிடத்தில் படைசூழ சுகன்யாவின் வீட்டுக்கு வந்துவிட்டார். அவரிடம் ஆறு பேரும் அழுதிருக்கிறார்கள். இவர்கள் அழுவதைப்பார்த்து விஷயம் விவகாரம் ஆகிவிடக் கூடும் என்று கவுன்சிலர் பயந்திருக்கிறார். அரசியல்வாதிகள் பெரும்பாலும் பயப்படமாட்டார்கள். எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட கொஞ்சம் பயப்பட வாய்ப்பிருக்கிறது. இந்தக் கவுன்சிலர்கள் இருக்கிறார்களே- ம்ஹூம். அசைக்க முடியாது. ஆனால் சுகன்யா அசைத்துவிட்டாள். அந்தத் தெருவிலேயே உடனடியாக போர்வெல் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொல்லிவிட்டு ‘ஏதாச்சும் எசகு பிசகா செஞ்சுடாதம்மா’ என்று கெஞ்சிவிட்டுச் சென்றிருக்கிறார். அடுத்த ஒரு வாரத்திலேயே தண்ணீருக்கு ஏற்பாடு செய்துவிட்டார். அவர் காங்கிரஸ் கவுன்சிலர். 

தண்ணீர் கிடைத்தவுடன் உணர்ச்சிவசப்பட்ட சுகன்யாவின் குடும்பம் கவுன்சிலர் வந்தபோது யேசுவின் படத்திற்கு முன்பாக நிறுத்தி ‘காலகாலத்திற்கும் கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்போம்’ என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள். கவனித்துக் கொள்ளுங்கள்- அவருக்கு வாக்களிப்பதாக சத்தியம் செய்யவில்லை- கை சின்னத்திற்கு. இங்குதான் ட்விஸ்ட்.

சென்ற தேர்தலில் அந்தக் கவுன்சிலர் பா.ஜ.கவுக்கு மாறிவிட்டார்.

இந்த முறை கவுன்சிலர் பா.ஜ.கவுக்கு ஆதரவு கேட்டு வந்திருக்கிறார். சுகன்யாதான் ஏசப்பனை நம்புபவள் ஆயிற்றே. ஏற்கனவே சத்தியம் வேறு செய்தாகிவிட்டது. சின்னத்தை மாற்ற முடியுமா? ஆனால் கவுன்சிலர் ‘இவங்க எப்பவுமே நம்ம ஆளுங்க’ என்று சொல்லிவிட்டு பன்னிரெண்டாயிரத்தை கொடுத்துவிட்டு போயிருக்கிறார். வாங்கிக் கொண்டார்கள். அடுத்ததாக காங்கிரஸ்காரர்கள் வந்திருக்கிறார்கள். சத்தியம் பற்றியெல்லாம் தெரியாத அவர்கள் தங்கள் பங்குக்கு பன்னிரெண்டாயிரம் கொடுத்திருக்கிறார்கள். வாங்கிக் கொண்டார்கள்.

எனக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. தேவகெளடாவின் ஆட்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஆறாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அதையும் வாங்கிக் கொண்டார்கள். ஆக மொத்தம் முப்பதாயிரம்.

அவர்கள் ஏரியாவில் பல குடும்பங்களில் இப்படித்தான். பா.ஜ.கவோ, காங்கிரஸோ, ஜனதாதளமோ- யாருக்கு வாக்களிப்பது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கிறார்கள் அல்லது பணத்தைப் பொறுத்தும் முடிவை மாற்றிக் கொள்கிறார்கள். இப்படி இன்னும் சில வருடங்களுக்கும் ஓடும். காங்கிரஸ்காரன் இருபது கோடி செலவு செய்தால் பா.ஜ.கக்காரனும் இருபது கோடி செய்கிறான். ஒருவன் தோற்பான் அல்லவா? அவன் புலம்புவான்- காசை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று. புலம்பட்டும். பணம் வாங்கினாலும் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அவநம்பிக்கை வேட்பாளர்களுக்கு ஒரு காலத்தில் வரக் கூடும். அதன் பிறகுதான் வாக்குக்காக பணம் கொடுப்பதைப் பற்றி யோசிப்பார்கள். நோட்டுக் கொடுத்தால் வோட்டு விழுந்து விடும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாவதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது. பார்க்கலாம்.

அலுவலகத்திற்கு செல்லும் வழியில் பெரிய குண்டாந்தடியை வைத்துக் கொண்டு ‘எலெக்‌ஷன் ட்யூட்டி’ என்ற பெயரில் போகிற வருகிற வண்டிகளை எல்லாம் நிறுத்தி பரிசோதனை செய்வதையும், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் பணத்தை பறிக்கிறார்கள் என்ற செய்திகளையும் பார்த்துவிட்டு இந்த வருடத் தேர்தலில் பணப்புழக்கம் இருக்காது என நினைத்துக் கொண்டிருந்தேன். அதெல்லாம் சும்மா. கைப்பற்றியது பெரும்பாலும் இளிச்சவாயர்களின் பணம். அரசியல்வாதிகளுக்குத் தெரிகிறது- எங்கே டிமிக்கி கொடுக்க வேண்டும், யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் அதை எப்படிக் கொடுக்க வேண்டும் என்று.

Apr 15, 2014

மாட்டை பார்த்தீர்களா?

தேவகெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு புற்கட்டு சுமந்து செல்லும் பெண்தான் சின்னம். இரண்டு மூன்று நாட்களாக எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்திற்காக வருகிறார்கள். வருகிறார்கள் என்று சொல்ல முடியாது- வருகிறான். ஒரு ஆணுக்கு பெண் வேடமிட்டு அவனை திறந்த ஜீப்பில், மெர்குரி விளக்கின் வெளிச்சத்தில் நிறுத்த வைத்து ஏதோ கன்னடப்பாடலை கதறவிட்டு வேகமாக வண்டியை ஓட்டிச் செல்கிறார்கள். அந்த ஆளுக்கு துளி கூட சிரிப்பு வருவதில்லை. எப்படி வரும்? காலையில் இருந்து இப்படியே காய்ந்து கொண்டிருப்பான் போலிருக்கிறது. அதுவும் வலது கையால் தலைமீது இருக்கும் கட்டை பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னொரு கையில் வண்டியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். நினைத்த இடத்தில் எல்லாம் வேகத்தடை போட்டு வைத்திருப்பார்கள். குதிக்கும் போது சில மேக்கப் ஐட்டங்கள் கீழே விழுந்துவிடாமல் வேறு பார்த்துக் கொள்ள வேண்டும்- தலை ‘விக்’கைத்தான் சொல்கிறேன் - வேறு எதுவும் இல்லை. சாலையில் போகிற வருகிறவனெல்லாம் உற்றுப் பார்ப்பான். பார்வையை விலக்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஏகப்பட்ட சிரமங்கள். ஆயிரமோ அல்லது ஐந்நூறோ கொடுப்பார்கள். அந்தச் சிரமத்திற்கு இரண்டாயிரம் கொடுத்தாலும் கூட குறைவுதான்.

இப்போதைக்கு ஒரு பால்காரரின் கதையையும் சொல்லிவிடுகிறேன். பால்காரருக்கும், புற்கட்டு ஆசாமிக்குமான தொடர்பை கடைசி பத்தியில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த ஏரியாவுக்கு வந்த புதிதில் அவரிடம்தான் பால் வாங்கிக் கொண்டிருந்தோம். நான்கைந்து மாடுகள் வைத்திருந்தார். நல்ல மனுஷன்தான். நிறைய நாட்கள் பாலில் தண்ணீரைக் கலக்கிவிடுவார். பொறுத்துக் கொள்வோம். அவ்வப்போது தண்ணீரில் பாலைக் கலக்கிவிடுவார். அதனால் பால்காரரை மாற்றிக் கொண்டோம். அது கட்டுரையின் சப்ஜெக்ட் இல்லை. அவருக்கு ஒரு பையன் உண்டு. வாட்டசாட்டமாக இருப்பான். ஒரு புல்லட் வாங்கிக் கொடுத்திருந்தார். மஞ்சள் சட்டையும், பச்சை பேண்ட்டுமாக ராஜ்குமாரின் உண்மையான வாரிசு என்று அவனைத்தான் அறிவிக்க வேண்டும். எட்டாங்கிளாஸிலேயே ஐந்தாறு வருடம் இருந்திருக்கிறான். ‘இந்த அங்கிள் இருக்கிற க்ளாஸுக்கு வர பயமா இருக்குது’ என்று கன்னடசிட்டுக்கள் சொன்னதால் ‘இனிமேல் பள்ளிக்கு வர வேண்டாம்’ என்று அனுப்பி வைத்துவிட்டார்கள். 

அதன்பிறகு கொஞ்ச நாட்கள் எருமை மாடு மேய்த்திருக்கிறான். இவனது சட்டைக் கலரைப் பார்த்து சில எருமை மாடுகள் பேஜாராகி ஓடிவிட்டதாகக் கூட புராணங்கள் உண்டு. விட்டால் பிழைப்புக்கு உலை வைத்துவிடுவான் என்றுதான் அவனை புல்லட் பாண்டியாக்கி வீட்டிலேயே தங்கவிடாமல் பார்த்துக் கொண்டாராம். சில வருடங்கள் இப்படியே சுற்றிக் கொண்டிருந்தவனின் மண்டைக்குள் தீடிரென்று பல்பு எரிய பத்தாம் வகுப்பு படிக்க விரும்பியிருக்கிறான். எந்த அப்பன்தான் பையன் படிப்பதை வேண்டாம் என்று சொல்லுவான்? பாலில் கொஞ்சம் கூடுதலாக ‘மிக்ஸ்’அடித்து டுட்டோரியலுக்கு பணம் கட்டியிருக்கிறார்கள்.

விடிந்தும் விடியாமலும் பல் துலக்குகிறானோ, குளிக்கிறானோ தெரியாது. ஆனால் மஞ்சளும் பச்சையுமாக ஜிங்கு சாக் என்று ஓடிவிடுவானாம். பையனின் படிப்பு ஆர்வத்தை பார்த்து பால்காரருக்கு புல்லரித்திருக்கிறது. மனைவிதான் ‘நாள் முழுக்க புல்லுக்குள்ளேயே கிடந்தால் அரிக்காம என்ன பண்ணும்’ என்று அடக்கியிருக்கிறார். அது என்ன அரிப்போ? அதை விடுங்கள். நம் கதாநாயகன் ஓடினான் ஓடினான் ஒவ்வொரு நாளும் ஓடினான். சில மாதங்கள் கழித்து தனியாக ஓட போரடிக்கிறது என்று டுட்டோரியலுக்கு வந்த பைங்கிளி ஒன்றையும் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான். பால்காரர் ஒக்கலிகர். அந்தப் பெண் வேறு சாதி. விடுவாரா? வந்தால் வகுந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டார். அதோடு சரி. ஓடியவன் ஓடியவன் தான். திரும்பவேயில்லை. பால்காரர் மனைவிதான் குந்த வைத்து அமர்ந்து அழுதிருக்கிறார். ஆனால் அழும் போதெல்லாம் இடுப்பிலேயே உதைத்திருக்கிறார். ‘இந்த எழவெடுத்தவன் உதையை எவள் வாங்குவது’ என்று அவரும் அழுவதைக் குறைத்துக் கொண்டார்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்- பையன் போனது பற்றிக் கூட கவலைப்படாத பால்காரர் கடந்து இரண்டு நாட்களாகவே அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். காரணம் இருக்கிறது. அவரது மாடுகள் மூன்றைக் காணவில்லை. வழக்கமாக பகலில் மாடுகளை லே-அவுட்டில் மேய விட்டுவிடுவார்கள். காலி இடங்களில் எல்லாம் மேய்ந்து விட்டு மாலை வீடு திரும்பிவிடும். வழக்கமாக மதிய நேரத்தில் பால்காரர் ஒரு முறை மாடுகளை பார்த்துக் கொண்டு போவார். இரண்டு நாட்களுக்கு முன்பாக மதியம் மயக்கம் வருவது போல இருந்திருக்கிறது. அதனால் மதிய ‘ரவுண்ட்-அப்’பைக் கட் செய்துவிட்டார். அவரது நேரம் சரியில்லை. எவனோ ஒரு திருட்டுப்பயல் ஓட்டிக் கொண்டு போய்விட்டான். வழக்கமாக பொழுது சாயும் போது வீடு திரும்பும் மாடுகளைக் காணாமல் கணவனும் மனைவியுமாக அலைந்து திரிந்திருக்கிறார்கள். ஓரிடத்திலும் காணவில்லை. ஒவ்வொரு வீடாகக் கேட்டிருக்கிறார்கள். மோதிரமா? செயினா? வீடுகளில் தேடினால் கிடைப்பதற்கு.

சில சமயங்களில் மாடுகள் இப்படிக் காணாமல் போவதுண்டாம். ஆனால் அடுத்த நாள் காலையில் திரும்பி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தூங்கியிருக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் இவர்களது நம்பிக்கையில் சாணம் விழுந்திருக்கிறது. போன மாடுகள் திரும்பவேயில்லை. ஒரு கறவை மாடு அதன் கன்றுக்குட்டி அதுபோக இன்னொரு சினை மாடு. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் போகும் என்று அழுதார். அழுதார் என்பது வாக்கிய அமைப்பிற்காக இல்லை- உண்மையிலேயே தேம்பித் தேம்பி அழுதார். அறுபது வயதுடைய ஆறடி மனிதர் குலுங்கிக் குலுங்கி அழும் போது எத்தனை இறுக்கமான மனிதனாக இருந்தாலும் கரைந்துவிடுவோம். நான் கரைந்துவிட்டேன். நேற்று முழுவதும் ஒவ்வொரு வீதியாகவும், ஏரிக்கரைகளிலும் மீண்டும் சுற்றியிருக்கிறார். மாடுகள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மாலையில் மது அருந்தியிருக்கிறார். கடும் மன அழுத்தம் உருவாகியிருக்கும் போலிருக்கிறது. depression.

இவருக்கு இருந்த மன அழுத்தத்திற்கு யாரைப்பார்த்தாலும் கோபம் வரத்தான் செய்யும். இந்த நிலையில்தான் தேவகெளடாவின் ஆட்கள் புற்கட்டு, பாட்டுச் சத்தம் என்று வரவும், இவருக்கு இருந்த போதைக்கும் கடுப்புக்கும் ஏழாம் பொருத்தம் ஆகியிருக்கிறது. வண்டிக்கு குறுக்காக விழுந்துவிட்டார். வண்டி டிரைவர் கோபத்தில் கீழே இறங்கி பால்காரர் மீது ஒரு அடியும் வைத்துவிட்டான். நிலைமை ரசாபாசம் ஆகிவிட்டது. புற்கட்டைப் பார்த்தவுடன் தனக்கு மாட்டு நியாபகம் அதிகமாகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். கூட்டம் சேர்ந்துவிட்டது. ‘மாடு போனதைக் கூட பொறுத்துக்குவேன். அத்தனை ஆசையா வளர்த்த மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பாம இருந்தா போதுமே’ என்று அழுகையினூடாக அவர் சொன்ன போது ஒரு கணம் சிலிர்த்துவிட்டது. சுற்றிலுமிருந்தவர்கள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார்கள். வண்டிக்காரரும் தனது தவறை உணர்ந்திருக்க வேண்டும். கன்னடத்தில் ஏதோ சமாதானப்படுத்தினார். பால்காரர் எப்பொழுதும் தலையில் துண்டு கட்டியிருப்பார். எல்லோரும் ஆறுதல் சொல்லவும் அவரது துக்கம் வெடித்துவிட்டது. கதறினார். யாருமே கட்டுப்படுத்த முடியாத கதறல். கைத்தாங்கலாக இருவர் பிடித்து அவரை வீடு நோக்கி அழைத்துச் சென்றார்கள். பார்க்க பரிதாபமாக இருந்தது. கூட்டம் கலைந்த போது புற்கட்டுக்காரனைப் பார்த்தேன். அவன் விக்கை கழற்றி வைத்துவிட்டு ஓரமாக நின்று பீடி உறிஞ்சிக் கொண்டிருந்தான். கோடை மழை இன்னும் சில நிமிடங்களில் பெய்துவிடும் போலிருந்தது. தூரத்தில் பால்காரர் தலையில் அடித்தபடியே சென்று கொண்டிருந்தார்.

Apr 14, 2014

நல்லா கேட்கிறாங்கய்யா டீடெயிலு

அலுவலகத்தில் ஒரு மீட்டிங் நடந்தது. முக்கியமான கூட்டம்தான். கடந்த வருடத்தில் ப்ராஜக்ட்டில் நிகழ்ந்த தவறுகளை ஆய்வு செய்து புள்ளிவிவரமாகக் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள். அதிலும், தவறுகளை வகை பிரிக்க வேண்டும். பெரிய பிரச்சினைகளை உண்டாக்கிய தவறுகள், சுமாரான பிரச்சினைகளை உண்டாக்கிய தவறுகள், பிரச்சினைகளை உண்டாக்காத தவறுகள் என severity வாரியாக பிரித்து அதன் சதவீதக் கணக்கை எடுத்து பெருந்தலைகளுக்குக் காட்ட வேண்டும். 

கணக்கு எடுப்பது கூட பிரச்சினை இல்லை. ஆனால் அதை எப்படி மேலதிகாரிகளுக்கு Presentation ஆகக் கொடுப்பது என்பதுதான் பெரிய சிக்கலாகத் தெரிந்தது. விஜயகாந்த் போல ‘போன வருஷம் எத்தனை தப்பு தெரியுமா? 17 தப்பு எங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டுச்சு, 12 தப்புகளின் கண்ணுல நாங்க பாட்டிலை விட்டு ஆட்டினோம்’ என்று அளக்கலாம்தான். ஆனால் எதிரில் இருப்பவர்களின் மனதில் எப்படி பதியும்? 

நாம் பேசிக் கொண்டிருக்கும் போது ஈர்ப்பாக இருந்தால் கவனிப்பார்கள். இல்லையென்றால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். பணியிடத்தில் பெருந்தலைகளிடம் ‘ஸீன்’ போடுவதற்கெனக் கிடைக்கும் இந்த மாதிரியான வாய்ப்புகளை பயன்படுத்தி நம்மை விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். எப்பவாவது அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது ‘ஓ அந்தப் பையனா?’ என்றால் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். ‘யார் அந்தப் பையன்?’ என்று கேட்டால் நமக்கு இன்னமும் விளம்பரம் போதவில்லை என்று அர்த்தம். 

முந்தைய தலைமுறைகளில் இத்தனை புள்ளிவிவரங்கள் இல்லை. ‘போன வருஷம் சித்திரையில மூணு மழை பெஞ்சுது’ என்பதுவோ அல்லது ‘பவுன் இத்தனை ரூபாய்க்கு வித்துச்சு’ என்பதுவோதான் அதிகபட்ச புள்ளிவிவரமாக இருக்கும். பெரிய ஞாபக சக்தி தேவையில்லை. பெரிய Presentation skills தேவையில்லை. இன்றைக்குத்தான் புள்ளிவிவரங்களால் மூச்சுத் திணறச் செய்கிறார்கள். 

ரிசர்வ் வங்கி ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்தால், திட்டக் கமிஷன் இன்னொரு விவரத்தைக் கொடுக்கிறது. இதோடு நின்றுவிடுவார்கள் என்றால் புள்ளியியல் துறை ஒரு கணக்கைக் கொடுக்கிறது. அதோடு விடுவார்களா? மாநில அரசு ஒரு புள்ளிவிவரம் கொடுக்கும். அது போக தனியார் அமைப்புகள் சில விவரங்களைக் கொடுக்கின்றன. கொன்றுவிடுகிறார்கள்.

எதை நம்புவது எதை விடுவது என்பது வேறு பக்கம். இந்தப் புள்ளிவிவரங்களை எப்படி புரிந்து கொள்வது என்பதற்கே பெரிய அப்பாடக்கராக இருக்க வேண்டியிருக்கிறது.  அதனால்தான் புள்ளியியல் படித்தவர்களுக்கு சம்பளம் கொட்டிக் கொடுக்கிறார்கள். M.Sc(Statistics) முடித்தவர்கள் யாராவது இருந்தால் காதும் காதும் வைத்த மாதிரி ‘தம்பிக்கு என்ன சம்பளம்?’ என்று கேட்டுப்பாருங்கள். ஈயொன்று நம் வாய்க்குள் புகுந்து வெளியே வரும். அப்படித் திறக்க வேண்டும்.

சராசரி வாழ்நாள், மக்களின் கல்வியறிவு, மழையளவு, சுகாதார வசதிகள், தனிநபர் வருமானம் என எதையெடுத்தாலும் புள்ளிவிவரத்தோடு சொல்கிறார்கள். சராசரி என்கிறார்கள், மீடியன் என்கிறார்கள் இன்னும் என்னனென்னவோ சொல்கிறார்கள். Index, Indicators என்று எந்த வார்த்தைகளைத் தேடினாலும் புள்ளிவிவரங்களில்தான் வந்து நிற்கிறோம். என்னதான் விவரங்கள் இருந்தாலும் நம்மால் எத்தனை கணக்குகளை மனதில் நிறுத்திக் கொள்ள முடிகிறது? எத்தனைதான் புள்ளிவிவரங்களை செய்தித்தாள்களின் மூலமாக படித்து வைத்திருந்தாலும் அடுத்தவர்களிடம் பேசும் போது நாக்கு நடனமாடுகிறது. 

இந்த லட்சணத்தில்தான் தவறுகளின் எண்ணிக்கையையும் பெருந்தலைகளுக்குக் காட்டினேன்.  மொத்தமாக இருபது நிமிடங்கள் தேவைப்பட்டன. பெரிய திருப்தி இல்லை. வழமையாக பயன்படுத்தும் அதே பவர்பாய்ண்ட்தான். கடமைக்கு செய்து முடித்த போது வருத்தமாக இருந்தது. இனி இப்படியொரு வாய்ப்பு கிடைக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்படியான சந்தர்ப்பங்கள்தான் அனுபவங்களைக் கற்றுத் தருகின்றன. 

இந்த மாதிரி வேலைகளில் சில கில்லாடிகள் இருப்பார்கள். அவர்களுக்கு நுட்பம் தெரியும். எதை எங்கே தட்டினால் விழும் என்று தெரிந்து வைத்திருப்பார்கள். அப்படியொரு கில்லாடி மேலாளர் தன்னைச் சந்திக்கும் படி சொல்லியிருந்தார். பெரும்பாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் மேலாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அவனவன் கற்றுக் கொள்ளட்டும் என்று ஒதுங்கிச் செல்பவர்கள்தான் அதிகம். இவர் சற்று வித்தியாசமான மனிதர். 

பார்க்கச் சென்றிருந்தேன். தனது கணினியில் இருந்து சில வீடியோக்களைக் காட்டினார். சொன்னால் நம்ப முடியாது- தனது குழந்தை ஆறாவது மாதத்திலிருந்து எத்தனை புட்டி பால் குடித்தது என்பதன் புள்ளிவிவரத்திலிருந்து, மாதாந்திர காய்கறி செலவு- அதுவும் தக்காளிக்கு எவ்வளவு, மிளகாய்க்கு எவ்வளவு என்பது வரையிலான அத்தனை சில்லியான விவரங்களையும் வீடியோவாக மாற்றி வைத்திருந்தார். அதுவும் பார்ப்பதற்கு ஜாலியான வீடியோக்கள்.  இவ்வளவு மொக்கையான புள்ளிவிவரங்களையும் சவசவ என்று இழுக்காமல் இத்தனை சுவாரஸியமாக மாற்ற முடியுமா என்று அதிர்ச்சியாகிக் கிடந்தேன்.

‘எப்படியிருக்கிறது?’ என்றார்.

‘அட்டகாசம்’. ‘எப்படி செய்யறீங்க?’ என்றேன்.

‘சொல்கிறேன். ஹன்ஸ் ரோஸ்லிங்ன்னு யூடியூப்பில் தேடிப்பார்த்துட்டு வா’ என்றார். சனி, ஞாயிறுகளில் Hans Rosling ன் வீடியோக்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். வயதான மனிதர். தூள் கிளப்புகிறார். நேரம் கிடைக்கும் போது ஒன்றிரண்டு வீடியோக்களையாவது பார்த்துவிடுங்கள். Worth watching.

உலக மக்கட்தொகை நாற்பது ஐம்பது ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கிறது என்பதை அவருக்கு வெளிப்படுத்த வெறும் நான்கு நிமிடங்கள்தான் தேவைப்படுகிறது- அதுவும் நூற்றுக்கணக்கான நாடுகளின் விவரங்களை படுவேகமாகச் சொல்லிச் செல்கிறார். எவ்வளவு பெரிய விவரங்களாக இருந்தாலும் மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் முடித்துவிடுகிறார். ஆனால் இந்த விவரங்கள் நம் மண்டைக்குள்ளேயே நின்று கொள்ளும் என்பதுதான் அதன் ஆச்சரியம். அத்தனை சுவாரஸியம்.

ரோஸ்லிங் ஒரு காலத்தில் பெங்களூரில்தான் படித்திருக்கிறார். புள்ளியியலில் ஆர்வம் ஏற்பட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது. தரவிறக்கமும் செய்துவிட்டேன். இனிமேல்தான் பழக வேண்டும்.

மேலாளரிடம் நன்றி சொன்னேன். ‘நாமதான் தொடங்க வேண்டும் என்ற காரியம் இங்க ஒண்ணுமே இல்ல பாஸ். எல்லாக்காரியத்துக்கும் யாராச்சும் எங்கேயாச்சும் வழிகாட்டி வெச்சிருக்காங்க. நாம அவங்களை கண்டுபிடிச்சுட்டா போதும். கலக்கிடலாம்’ என்றார். சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் அந்த வார்த்தைகள் மண்டைக்குள் வண்டு குடைவது போலவே குறுகுறுக்கின்றன. 

Apr 13, 2014

மோடி

நரேந்திர மோடியின் பிம்பம் இன்று நேற்று உருவாக்கப்படவில்லை. நமக்கே தெரியாமல் நம்மைச் சுற்றிலும் பல ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். மோடியின் ஆட்சியில் குஜராத் வளர்ச்சியடைந்திருக்கிறது என்றார்கள், தொடர்ந்து மூன்று முறையாக குஜராத் மக்கள் மோடியை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள் என்று பேசினார்கள், மோடி ஒரு வலுவான அரசியல்தலைவர் என்று எழுதினார்கள். அந்த மாநிலத்தில் மின் தடை என்பதே இல்லையென்றும், மது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுவிட்டது என்றும் நிறையச் செய்திகள் நம்மை அடைந்து கொண்டிருந்தன. 

கவனித்துப் பார்த்தால் இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. மோடி ஒரு வலுவான தலைவர் என்று சொல்லப்பட்ட அதே காலத்தில் காங்கிரஸ் பிரதமரின் பலவீனங்கள் வெளிப்படுத்தப்பட்டன. குஜராத்தில் ஊழல் இல்லை என்று சொல்லப்பட்ட அதே சமயத்தில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்கள் expose செய்யப்பட்டன. ஆக, ஒரு இடத்தை காலி செய்த படியே அந்த இடத்திற்கு அடுத்த தகுதியான ஆள் இவர்தான் என்று சுட்டுவிரல்கள் மோடியை நோக்கி நீட்டப்பட்டன. இது போன்ற ‘மோடியிஸ’ எண்ணங்கள் சாமானிய மக்களிடம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.  ‘டீம் மோடியின்’ குறிக்கோளே சாமானிய மக்கள்தான். இந்த தேசத்திற்கு அடுத்த பிரதம வேட்பாளர் தான்தான் என்பது மோடிக்கும் அவரது குழுவுக்கும் வெகுகாலத்திற்கு முன்பே தெரிந்திருக்கிறது. தெளிவாக காய் நகர்த்திக் கொண்டிருந்தார்கள். மோடியின் மீது மக்களின் பார்வை விழத் துவங்கியது. இந்த எண்ணத்திற்குத்தான் தேர்தல் சமயத்தில் ‘மோடி அலை’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். 

சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும், பிரியங்காவுக்கும் இந்த ‘பிம்பம்- உருவாக்கம்’ தேவைப்படவில்லை. அவர்களுக்கு பின்னால்தான் ‘காந்தி’ ஒட்டியிருக்கிறார் அல்லவா? ஆனால் அந்தக் குடும்பத்தைத் தவிர இந்தியாவில் வேறு யார் தலையெடுக்க வேண்டுமானாலும் மிகக் கடுமையான பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. அந்த பிரயத்தனத்தை மிக நேர்த்தியாகவே மோடி அணியினர் செய்திருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ஊடகங்கள் இவ்வளவு ‘ரீச்’ அடைந்திருக்கவில்லை. இன்று நிலைமை மாறியிருக்கிறது. தேசத்தின் பெரும்பாலான கிராமங்களில் செய்திச் சேனல்கள் தெரிகின்றன. பெரும்பாலான மக்களுக்கு பத்திரிக்கைகள் கிடைக்கின்றன. பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் கிராமங்களில் தேசிய அரசியல் தலைவரின் பெயரைக் கேட்டால் காந்தி குடும்பத்தைத் தவிர வேறு எந்தப் பெயரையும் சொல்ல மாட்டார்கள். இன்றைக்கு அந்த நிலை இல்லை. கெஜ்ரிவாலின் பெயர் வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

கெஜ்ரிவாலின் நிலைமை வேறு. 2009 ஆம் ஆண்டுத் தேர்தலைப் போல காங்கிரஸ் கட்சிக்கு எதிரியாக எந்த பலமான தலைவரும் இல்லாத சூழல் இப்போது இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சியே கெஜ்ரிவாலை நசுக்கியிருக்கும். காங்கிரஸ் கடந்த சில ஆண்டுகளாக உறங்கிவிட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரை மோடி தனக்கு அச்சுறுத்தலாக வருவார் என்று அந்தக் கட்சி புரிந்து கொள்ளவேயில்லை. அவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். திடீரென்று மோடி பெரிய உருவமாக வளர்ந்து நின்றார். காங்கிரஸால் எந்தவிதத்திலும் எதிர்க்க முடியாத உருவம் அது. நிலைமை கை மீறிவிட்ட பிறகு காங்கிரஸின் இப்போதைய தேவையெல்லாம் மோடி என்ற மனிதனுக்கு ஆப்பு வைக்கக் கூடிய ஒரு தலை. அந்தத் தலையாக கெஜ்ரிவாலைப் பார்க்கிறது. அதனால் சற்று ஒதுங்கி கொஞ்ச தூரம் ஓடிக் கொள்ளட்டும் என்று கெஜ்ரிவாலுக்கு வழிவிடுகிறார்கள். அவ்வளவுதான்.

தன்னை அடுத்த பிரதம் வேட்பாளராக உருவாக்கிக் கொண்ட மோடியால் தான் ஒரு அப்பழுக்கற்ற தலைவர் என்ற இமேஜை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் இன்றைக்கு மோடிக்கு இருக்கும் பிரச்சினை. 2001 இல் நிகழ்ந்த குஜராத் நிலநடுக்கத்தையும் அதன் பிறகு அந்த மாநிலத்தின் மாற்றங்களையும் மறைக்கும்படியான பூதமாக 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் எழுந்து நின்றது. அதற்கு பின் குஜராத்தில் பேசப்பட்ட அத்தனை திட்டங்களும் இந்தக் கலவரத்தின் நிழலுக்குள் பதுங்கி கொள்ளும்படியாக ஊடகவியலாளர்களும் மோடி எதிர்ப்பாளர்களும் பார்த்துக் கொண்டார்கள்.

மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதிலும், வலிமையான தலைவர் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. கொற்கை நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் எழுத்தாளர் ஜோ.டி.க்ரூஸ் இவற்றைத்தான் முன் வைக்கிறார். சாமானிய மக்களின் வலிகளைப் புரிந்து கொள்ளும் தலைவனாக மோடி இருப்பார் என்கிறார். தமிழக எழுத்தாளர்களில் மோடியை வெளிப்படையாக ஆதரித்தவர்களில் ஜோ.டி.க்ரூஸ்தான் முக்கியமானவர். கர்நாடகாவில் அனந்தமூர்த்தியும், க்ரிஷ் கர்னாட்டும் மோடியை எதிர்ப்பதை இங்கே பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ஜோ.டி.க்ரூஸ் ஆதரிப்பதை வெகு சுலபமாக இருட்டடிப்பு செய்துவிட்டன.

என்னதான் மோடியின் சில பாஸிட்டிவ் தகுதிகள் பேசப்பட்டாலும் அவரது மீதான கறையைத் தாண்டி இந்த திறன்கள் அவரைப் பிரதமராக்குமா என்று தெரியவில்லை. தன்னை இந்த தேசத்தின் அடுத்த தலைவராக பிம்பப்படுத்திக் கொள்ள அவருக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டன. எப்பொழுதும் பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளத்தான் பல ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் அதை அடித்து நொறுக்க சில மாதங்கள் போதுமானது. இப்பொழுது மோடி எதிர்ப்பாளர்கள் அதைத்தான் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். 

குஜராத் கலவரங்களோடு சேர்த்து எந்த வாய்ப்பு கிடைத்தாலும் மோடியின் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவரது வேட்பு மனுவில் அவரது மனைவியின் பெயரை வெளிப்படுத்தியது வரை குதறுகிறார்கள். வாக்காளர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. சிறு சலனம் கூட வாக்காளர்களின் முடிவை மாற்றிவிடக் கூடும். எனது வகுப்புத் தோழன் MD முடித்த மருத்துவர். இதுவரை மோடியின் பக்கமாக சாய்ந்திருந்தான். இந்த வார ஆனந்த விகடன் கட்டுரையை படித்துவிட்டு ‘யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்கிறான். தேர்தல்கள் முழுமையாக முடிந்து முடிவுகளைத் தெரிந்து கொள்ள இன்னமும் ஒரு மாத காலம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 

இங்கு மோடிக்கு ஆதரவு என்றாலே மதவெறியனாகவும், பார்ப்பனியத்தைத் தூக்கிப்பிடிப்பவனாகவும் பார்ப்பது துரதிர்ஷ்டம். அறுபதாண்டு காலமாக இந்தியாவையும் தமிழகத்தையும் கூறு போட்டு விற்றவர்களை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள். இதுவரையிலான தங்களது அத்தனை கொள்கைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அரசியல் ஆதாயங்களுக்காக எந்தச் சங்கடமும் இல்லாமல் கட்சி மேடையேறுகிறார்கள். தங்களை முற்போக்கு அறிவாளி என்றும், நடுநிலை ஊடகவியலாளர்கள் என்றும் சொல்லிக் கொள்பவர்கள் தயக்கமே இல்லாமல் ஊழல்வாதிகளுக்கு சார்பாக பேசுகிறார்கள். ஆனால் மோடிக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று சொல்பவனின் அத்தனை விவகாரங்களையும் தெரு வரை இழுத்துவிடுகிறார்கள். 

இங்கு எல்லா அரசியல்வாதிகளுமே அயோக்கியர்கள்தான். வாக்கு கேட்டு வரும் அத்தனை பேருமே அசிங்கம் பிடித்தவர்கள்தான். மோடியும் அரசியல்வாதிதான். மோடியும் வாக்குக் கேட்டு வருபவர்தான். மோடி வென்றாலும் தோற்றாலும் எனக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்களைவிடவும், போலி மதசார்பற்ற தலைவர்களைவிடவும் ஐந்தாண்டுகள் இந்த நாட்டை நிர்வகிக்கும் திறமை நிறைந்தவர் என்ற ஒரே நம்பிக்கையின் காரணமாக இப்பொழுதும் நான் மோடிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறேன். மோடியை இவர்கள் தோற்கடித்தாலும் பரவாயில்லை. ஒரு ஸ்திரமான அரசுக்கு வழிவிட்டால் போதும் என விரும்புகிறேன். ஆனால் என்ன நடக்கும் என்று உறுதியாகக் கணிக்க முடியவில்லை.

Apr 12, 2014

ஒரு லோட்டா பூவை விற்க முடியாதா?

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வீட்டில் மல்லிகைச் செடிகள் இருக்கும். அதுவும் நிறையப் பூக்கிற மல்லிகைகள். சாயந்திர நேரத்தில் பூக்களைப் பறித்துச் சென்று ஆயா விற்று வருவார். எனக்கு நினைவு தெரிந்த போது ஒரு லோட்டா பூவை இருபத்தைந்து காசுக்கு விற்றார். லோட்டா இன்றைய டம்ளரைவிடவும் சற்று பெரியதாக இருக்கும். செட்டிமார்கள் வீடுகளில் அவரை பூக்கார ஆயா என்றால்தான் தெரியும். அந்தளவுக்கு பாப்புலர் ஆகியிருந்தார். ஆயா ஓய்ந்த பிறகு அதே வேலையை அரசுப் பணியில் சேரும் காலம் வரையிலும் அம்மாவும் செய்ய முயற்சித்தார். அம்மாவுக்கு பூக்கள் விற்பதில் சங்கடம். அதனால்  நான் பூக்களை விற்கிறேன் என்று தூக்கிக் கொண்டு போவேன். திருமணம், திருவிழா போன்ற விசேஷ தினங்களைத் தவிர பெரும்பாலான நாட்கள் திரும்பி எடுத்து வந்துவிடுவேன். வாங்கமாட்டார்கள். ஆனால் ஆயா மட்டும் ஒவ்வொரு நாளும் தான் எடுத்துச் சென்ற அத்தனை பூக்களையும் விற்றுவிடுவாராம். 

இது பூ வியாபாரத்தில் மட்டும் இல்லை. எல்லா இடங்களிலும் உண்டு. அண்ணாச்சி மளிகைக்கடை நடத்திய அதே இடத்தில் வேறொரு ஆள் கடை நடத்தட்டும். ‘அப்படியொன்னும் பெரிய வேவாரம் இல்ல’ என்று சொல்வதற்கு நிறைய சாத்தியங்கள் உண்டு. அலுவலகத்தில் ஒருவன் மட்டும் பதவி உயர்வு வாங்குகிறான். அவனை விடவும் நன்றாக வேலை செய்பவனைப் பார்த்து ‘இந்த வருடம் உனக்கு இல்லை’ என்று சொல்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. தரம், விலை என எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான இரண்டு ப்ராண்ட்களில் ஒன்று மட்டும் வெற்றியடைகிறது- மற்றொன்று தோல்வியடைகிறது.

ஏன்?

ஒரு நுட்பம் இருக்கிறது. அதை Influence என்கிறார்கள். செல்வாக்கு.

ஆயாவுக்கு செல்வாக்கும் அதிகம். சொல்வாக்கும் அதிகம். போகிற இடத்தில் காலை நீட்டி அமர்ந்து செட்டியார் அம்மாக்களிடம் ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் பேசினால் ஆயாவை அவர்களுக்குப் பிடித்துவிடுகிறது. பூ வாங்குவதற்கான தேவையே இல்லையென்றாலும் ஆயா கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக வாங்கிவிடுவார்கள். என் கதை அப்படியா? சாயந்திரம் வரைக்கும் ஊரை மேய்ந்துவிட்டு முட்டிக்காலில் சுண்ணாம்பையும் நெற்றியில் வியர்வையும் நிரப்பிக் கொண்டு ஓடினால் கடுப்பாகத்தான் செய்வார்கள். தேவை இருந்தால் மட்டும்தான் வாங்குவார்கள்.

ஆயா பழகி வைத்திருந்த செல்வாக்கு எனக்கு இருக்கவில்லை. இந்த Influence வேலைக்கு போகும் இடத்தில் மட்டும் இல்லை- எல்லா இடங்களிலும் அவசியம். சாலையில் கடைக்காரனிடம் பேரம் பேசுவதிலிருந்து, வீட்டில் நமக்கு பிடித்த சமையலைச் செய்யச் சொல்வது வரைக்கும் எல்லாவற்றிலும் நைச்சியமாக நடந்து காரியத்தை நிறைவேற்ற இதைப் பழகியாக வேண்டும். அத்தனை ஏன்? வீட்டில் டிவி ரிமோட்டை நம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளக் கூட இது தேவை. பத்து நிமிடம் ஸ்ரேயா வருகிறாள் அனுஷ்கா வருகிறாள் என்று சினிமா பாட்டைப் பார்த்தால் பொடியன் ரிமோட்டைப் பறித்து போகோ சேனலுக்கு மாற்றிவிடுகிறான்.

ராபர்ட் சியால்டினி என்றொரு மனிதர் இருக்கிறார். சமூக விஞ்ஞானி என்கிறார்கள். Social Scientist. இப்படியெல்லாம் நம் ஊரில் யாராவது சொல்லிக் கொண்டு திரிந்தால் அவருடைய அதிகபட்ச சாதனை ஏதாவது ஒரு சேனலில் அமர்ந்து விவாதம் என்ற பெயரில் கத்துவதோடு சரி. சமூக விஞ்ஞானிக்கும் அதுதான் நிலைமை, அரசியல் விஞ்ஞானிக்கும் அதுதான் நிலைமை, விளையாட்டு விஞ்ஞானிக்கும் அதுதான் நிலைமை. இப்படியே எழுதிக் கொண்டு போகலாம்தான். ஆனால் கடைசியில் எங்கே போய் முட்டிக் கொண்டு நிற்பேன் என்று தெரியும். அதனால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம்.

ஆனால் சியால்டினி டிவி சேனல் விஞ்ஞானி இல்லை. அவர் சொல்லிக் கொடுத்த Influence நுட்பங்களை உலகத்தில் கொண்டாடுகிறார்கள். விருப்பம் இருப்பவர்கள் கூகிளிடம் கேட்கலாம். ஆறு வழிமுறைகளில் அடுத்தவர்களை நம் வழிக்கு கொண்டு வருவது பற்றி சியால்டினி சொல்லித் தருகிறார். ‘இன்னைக்கு எனக்கு இதைச் செஞ்சு கொடுத்துடு...நாளைக்கு நான் உனக்கு இன்னொரு காரியத்தைச் செஞ்சு கொடுக்கிறேன்’ என்று பேசி காரியத்தை முடிப்பது கொடுத்து வாங்குதல்- Reciprocity. ஆயா, செட்டிமார்கள் வீட்டில் கால் நீட்டி அமர்ந்து கதைகள் பேசி எதிராளியின் மனதில் இடம் பிடித்து பிறகு காரியம் சாதித்துக் கொள்வது விரும்பப்படுதல்- Liking. 

Reciprocity, Liking, Social Proof என்று இப்படியே ஆறு வழிமுறைகளையும் எழுதிக் கொண்டு போனால் மேலாண்மை கட்டுரை ஆகிவிடும். நீங்களே படித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் ஒரு காலத்தில் உதவக் கூடும்.

இன்றைக்கு அலப்பறை செய்கிறார்களே- ‘மோடி அலை’. அது கூட influence தான். இந்த அலை திடீரென்று உருவாகிவிட்டதா என்ன? கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே ஊடகங்களின் வழியாக தன் பிம்பத்தை உருவாக்கிக் கொண்டார். குஜராத் பற்றிய விவரணைகள் தொடர்ந்து இடம்பெறும்படி பார்த்துக் கொண்டார்கள். இந்தியாவின் அடுத்த மாற்று மோடிதான் என்ற பேச்சை அடிமட்ட மக்களிடம் வரைக்கும் உருவாகும்படியான நடவடிக்கைகளை கோடிக்கணக்கான ரூபாய்களில் செய்தார்கள். Mass influencing.

இன்ப்ளூயன்ஸ் பற்றி பேசும் போது கொஞ்சம் கவனம் தேவை. இது சற்று அளவு மீறினால் Brainwashing ஆகிவிடும். 

ஒரு குட்டி உதாரணத்தோடு கட்டுரையை முடித்துவிடலாம்.

ஒரு குளிர்பான நிறுவனத்தினர் ஒரு ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். விற்பனையை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிதான். அவர்கள் தேர்ந்தெடுத்த களம் திரையரங்கு. திரைப்படங்களின் பிக்சர் சுருள் பார்த்திருப்பீர்கள். அந்த சுருள் வேகமாக சுற்றுவதனால் நமக்கு அசையும் படம் தெரிகிறது. அது மேட்டர் இல்லை. ஒவ்வொரு பிக்சருக்கும் இடையில் ஒரு வெற்றிடம் இருக்கும் அல்லவா? அதுதான் இங்கு மேட்டர். படம் ஓடும் வேகத்தில் அந்த வெற்றிடம் நம் கண்களுக்குத் தெரியாது.  அந்த வெற்றிடத்தைத்தான் தங்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.  வெற்றிடத்தில் தங்கள் நிறுவனத்தின் பாட்டில் படத்தையும், அந்நிறுவனத்தின் சின்னத்தையும் பொறித்து வைத்துவிட்டார்கள். அந்த பாட்டிலும் சின்னமும் படம் பார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரியாது. ஆனாலும் அன்றைய தினத்தில் குளிர்பானத்தின் விற்பனை அதிகரித்திருக்கிறது.

எப்படி?

கண்களுக்குத்தான் அந்த பாட்டில் தெரியவில்லை என்றாலும் பாட்டிலும், அந்தச் சின்னமும் பாட்டிலும் நம் ஆழ்மனதில் பாட்டில் பதிந்துவிடும். கண்களுக்கே தெரியாத பாட்டில் எப்படி மனதில் பதியும் என்றால் அதைப் பற்றி அலசும் ஒரு மனோவியல் ஆராய்ச்சி கட்டுரை இருக்கிறது. இன்னொரு நாள் அது குறித்துப் பேசலாம். அப்படி மனதில் பதிந்த பாட்டிலின் காரணமாகத்தான் விற்பனை அதிகரித்திருக்கிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஆனால் இந்த விளம்பர முறை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இப்படியும் விளம்பரம் செய்யலாம் என்று சொல்லப்பட்ட பரிந்துரை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இது விளம்பரம் இல்லை மூளைச்சலவை என்று சொல்லிவிட்டார்கள். ‘எங்கள் குளிர்பானத்தை வாங்குங்கள்’ என்று வாடிக்கையாளர்களிடம் சொல்வது விளம்பரம். ‘எங்கள் குளிர்பானத்தினால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்’ என்று சொல்லி வாடிக்கையாளர்களை நம்பவைத்து வாங்க வைப்பது செல்வாக்கு. Influence. ‘எங்கள் குளிர்பானத்தை மட்டுமே வாங்குங்கள்’ என்று வாடிக்கையாளரை அமுக்குவது மூளைச்சலவை.

முதல் இரண்டும் இருக்கலாம். மூன்றாவது ஐட்டம் அபாயம். 

இங்கு கடந்த இரண்டு மூன்று வருடங்களாக மோடி செய்தது என்ன என்று விளக்கி அடி வாங்க நான் தயார் இல்லை.