Mar 17, 2014

மலையை அசைக்கும் சுண்டெலி

அரவிந்த் கெஜ்ரிவாலின் சமீபத்திய நடவடிக்கைகளாலும், அவரால் உருவாக்கப்பட்ட தலைப்புச் செய்திகளினாலும் நரேந்திர மோடிக்கான மிகச் சரியான போட்டியாளராக இவர்தான் இருப்பார் என்கிற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக ராகுலையும், காங்கிரஸையும் ஒதுக்கிவிட்டு மோடியா அல்லது கெஜ்ரிவாலா என்று பேசத் துவங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் இந்த ஓரங்கட்டுதலை எதிர்பார்த்திருக்காது என்றாலும் மோடிக்கான counter attack நிச்சயமாக காங்கிரஸை மகிழ்ச்சியடைச் செய்திருக்கும்.

பிரதமர் பதவிக்கான போட்டிக்கு கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மோடி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். குஜராத் அரசின் சாதனைகள் தேசிய நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்களாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. ஊடகங்களில் மோடிதான் அடுத்த பிரதமர் என்பதான பேச்சு தொடர்ந்து இடம்பெறும்படி பார்த்துக் கொண்டார்கள். இணையத்தளங்களில் மோடிதான் நெம்பர்.1 ஆக இருந்தார். இப்படி சாமானிய மக்களுக்கே தெரியாமல் ‘மோடிதான் அடுத்தது’ என்ற எண்ணத்தை விதைத்திருந்தார்கள். 

என்னதான் இத்தகைய செயல்பாடுகளால் மோடியின் பெயர் பரவலாக்கப்பட்டிருந்தாலும், இதுவரையிலும் அவரது பாதையில் தடைக்கற்களை புரட்டிப்போடுவதற்கான எதிர்ப்பாளர் இல்லையென்றாலும் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை எண்ணான 272+ ஐ மோடி சுலபமாக அடைந்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. காங்கிரஸின் மீதான வெறுப்பு, மன்மோகன்சிங் ஆட்சியின் அவலங்கள், மாநிலக்கட்சிகளின் ஊழல்கள் மற்றும் காங்கிரஸின் உறுதியற்ற தலைமை ஆகியவற்றின் காரணமாக கிடைத்திருக்கக் கூடிய எதிர்ப்பு வாக்குகளின் மூலமாக 200+ என்ற எண்ணிக்கையை பா.ஜ.க தாண்டியிருக்கக் கூடும்.

ஆனால் இப்பொழுது அந்த எண்ணிக்கையிலும் கெஜ்ரிவால் ஒரு ஓட்டையை போட்டுவிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பா.ஜ.கவுக்கு சென்றிருந்தால் பா.ஜ 200+ அடைந்த்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பின் மீது போடுவதற்கு ஒரு பெரிய பாறாங்கல்லை குல்லாவுக்கு மேலாக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பா.ஜவோடு பங்கிட்டுக்கொள்ள பங்காளிகள் வந்துவிட்டார்கள். இதைத்தான் மோடி எதிர்ப்புக் கட்சிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. குறிப்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி, லாலு பிரசாத் யாதவ், திமுக அபிமானிகள் போன்றவர்கள். 

அரவிந்த் கெஜ்ரிவாலால் பிரதமர் ஆக முடியாது என்று இவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். இது கெஜ்ரிவாலுக்கும் தெரியும். ஆனாலும் அவரைக் கொண்டாடுவதற்கான காரணம், மோடியின் வளர்ச்சியைத் தடுக்க இவர்கள் யாராலும் முடியவில்லை என்பதுதான். ‘மோடிக்கு யாருமே தடையில்லை’ என்று உருவாக்கப்பட்டிருந்த ஒரு பிம்பத்தை நொறுக்குவதற்கு குண்டாந்தடியோடு ஒருவர் வருகிறார் என்றால் இவர்களுக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும். தடியைத் தூக்கிக் கொண்டு வருபவர் யானையாக இருந்தால் என்ன? சுண்டெலியாக இருந்தால் என்ன?

அரவிந்த் கெஜ்ரிவால் 272+ இடங்களில் முழுமையாக வென்று ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்றால் அவரை மனப்பூர்வமாக ஆதரிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அது நல்ல விஷயமும் கூட. ஆனால் அது நடக்காது என்பதுதான் நிதர்சனம். டெல்லியில் நடந்ததைப் போலவே- தொங்கு பாராளுமன்றத்தை- வெற்றிகரமாக உருவாக்கிவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் கெஜ்ரிவால் உருவாக்கிவிடுவார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜதான் தனிப்பெரும் கட்சியாக உருவாகியிருந்தது. ஆனால் அவர்களால் ஆட்சியமைக்க முடியவில்லை. அதே போன்றதொரு நிலைமை மத்தியிலும் வர வாய்ப்பிருக்கிறது. பா.ஜ. தனிப்பெரும் கட்சியாக வரக் கூடும். ஆனால் மெஜாரிட்டி இருக்காது. 200+ என்ற எண்ணிக்கை இருந்தால் ஆட்சியமைப்பதில் பா.ஜவுக்கு பெரிய சிரமம் இருக்காது. அதிமுக, சரத்பவாரின் தேசியவாதக் கட்சி போன்ற கட்சிகளை இணைத்து ஒட்டி ஆட்சியை அமைத்துவிட முடியும். ஆனால் கெஜ்ரிவால் மற்றும் அவரை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளினால் பா.ஜவின் இருபது முப்பது தொகுதிகளை காலி செய்யப்பட்டு பா.ஜ வென்ற மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 150-170 என்ற எண்ணிக்கையில் வந்து நின்றால்தான் பெரும் சிக்கல். 

பா.ஜவுக்கான அந்த அடியைத்தான் மோடி எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த எண்ணிக்கையை வைத்துக் கொண்டு பா.ஜவால் எதுவும் செய்ய இயலாது. பா.ஜ. ஒரு மதவாதகட்சி என்று ஒதுக்கிவிடுவார்கள். மோடியின் கனவில் ஒரு லாரி மண்ணைக் கொட்டிவிட்டு அடுத்த சாத்தியங்களுக்கான வாய்ப்பைத் தேடுவார்கள். மதச்சார்பற்ற சக்திகளின் கூட்டணி என்று உதிரிகள், இடதுசாரிகள், காங்கிரஸ் அனைத்தும் சேர்ந்து ஒரு ஆட்சியை உருவாக்குவார்கள். ‘ஓடுகிற வரைக்கும் ஓடட்டும்’ என்று காலத்தை நகர்த்துவார்கள். சரியான சமயம் கிடைக்கும் போது ஆட்சியைக் கலைத்துவிட்டு இன்னொரு தேர்தலைச் சந்திப்பார்கள். 

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு என தேர்தல் கமிஷன் கணக்குப் போட்டு வைத்திருக்கும் செலவு தொகை ரூ.3500 கோடி. இந்தத் தொகையில் பாதுகாப்புக்கான செலவு கணக்கில் வராது. அது போக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் செய்யும் செலவும் இந்தக் கணக்கில் இல்லை. அதையெல்லாம் சேர்த்தால் குறைந்தபட்சம் நாற்பதாயிரம் கோடிகளாவது ஆகக் கூடும். பணம் இரண்டாம் பட்சம். இவர்கள் எதிர்பார்க்கும் அஸ்திவாரமற்ற ஆட்சிதான் பெரிய சிக்கலைக் கொண்டு வரும்.

ஸ்திரமற்ற ஆட்சியமைந்தால் நாட்டின் பொருளாதாரம் அடி வாங்கும், புதிய முதலீடுகள் தாமதப்படுத்தப்படும், பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் இருக்கும் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் சாதாரண மனிதனை அவனுமறியாமல் மூச்சுத் திணறச் செய்யும். இடைக்கால ஆட்சியாளர்கள் ‘இன்னைக்கோ நாளைக்கோ, சுருட்டும் வரை சுருட்டு’ என்றிருப்பார்கள். இதெல்லாம் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் நாம் எதிர்பார்க்க ஆரம்பிக்க வேண்டிய தருணம் இது. அப்படித்தான் இன்றைய அரசியல் நிகழ்வுகள் இருக்கின்றன.

இதையெல்லாம் எழுதினால் மோடி ஆதரவாளன் என்று குத்துவார்கள். அப்படியில்லை- இன்றைய சூழலில் மோடி வரவில்லையென்றாலும் அதைப்பற்றிய விசனம் எதுவும் இல்லை- இவர்கள் குட்டையைக் குழப்பி அடுத்த சில ஆண்டுகளுக்கு தள்ளாடும் மத்திய அரசை அமைக்காமல் இருந்தால் போதும். ஒருவேளை  அப்படி நிலையற்ற அரசு அமைந்தால் அதன் விளைவையும் வலியையும் 2020 ஆம் ஆண்டில் உணரத் துவங்குவோம்.